Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09

இதயம் தழுவும் உறவே – 09

 

யசோதாவிற்கு இன்டெர்னல் தேர்வுகள் தொடங்கி இருந்ததால் மதியமே வீடு திரும்ப தொடங்கினாள். கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தபொழுது வித்யாவின் பெற்றோர் வந்திருந்தனர். மரியாதை நிமித்தம் அவளும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.

அதன்பிறகு ஆதித்யாவை பள்ளியிலிருந்து அழைத்து வர, வித்யாவின் அப்பா சென்றுவிட, பெண்கள் மட்டுமே தனித்து விடப்பட்டனர். வித்யாவின் குத்தல் பேச்சுக்கள், ஜாடைமாடையாய் பேசும் பேச்சுக்கள் எல்லாம் யசோதாவிற்கு இத்தனை நாட்களில் நல்ல பழக்கம்தான் என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் யசோதா அளவில் மட்டுமே!

ஆனால், இன்றோ வித்யா தன் அன்னையுடன் சேர்ந்து கொண்டு தங்கள் மாமியாரையே ஜாடை பேச யசோதா அதிர்ந்து போனாள். அவளுக்கு தான் அறிவில்லை. அவள் அன்னைக்குமா இல்லை என்று கோபம் கிளர்ந்தது.

பேச்சின் சாராம்சம் இதுதான். வயதான பெண்களின் உடை அலங்காரம் பற்றி, தலை பின்னலைப் பற்றி. இதெல்லாம் ஒரு பேச்சு வருமா என்பது போல முகம் கூட சுளித்தாள்.

ஆனால், அவர்களோ அதுதான் பெரிய விஷயம் என்பது போல அத்தனை ஆவேசமாய் பேசிக்கொண்டிருந்தனர். “அவ மருமகனே எடுத்தாச்சு. இன்னும் தலை பின்னி பூ வெச்சு…” என பெரியவள் நீட்டி முழக்க, “பேரன் பேத்தி எடுத்தவங்களே அப்படி தான்மா இருக்காங்க” என்றாள் வித்யா குத்தலாக. அவள் ஜாடை பேசுவது மீனாட்சியைத்தான் என்று அனைவருக்கும் தெளிவாக புரிந்தது. கேட்டுக்கொண்டிருந்த மீனாட்சியின் முகம் வாடி போனது.

‘இப்படி பேசிப்பேசி தான் மாமியாரை ஒவ்வொரு விஷயத்திலும் ஒடுக்கி வைத்திருக்கிறார்கள் போல. வெளியில் விசேஷங்களுக்கு செல்வதற்கு கூட எத்தனை தயக்கம் காட்டுகிறார்கள்? எல்லாம் இவர்கள் பேச்சு தாங்காமல் தான் போலும். அன்று தலை பின்னலிட்டு, நல்ல நிறமுள்ள புடவையை மாற்றிக் கொள்ள கூட எத்தனை தயங்கினார்கள்? எவ்வளவு தூரம் பேசி அவர் மனதை கரைய வைக்க வேண்டியதிருந்தது’ என மனதில் எண்ணி சினந்தாள் யசோதா.

‘மாமியார் என்கிற மமதையில் ஒரு நாளும் கடிந்து பேசிடாத பெண்மணியை எத்தனை தூரம் கீழாக பேசுகிறார்கள்? யார் தந்த தைரியம் இது?’ என யசோதா கோபத்தின் எல்லையை தாண்டிக் கொண்டிருந்த வேளையில்,

“என்னமோ போ வித்யா. ஒரு பொண்ணு தன்னை அலங்காரம் செஞ்சிக்கிறதே, அவ புருஷன் கண்ணுக்கு அழகா தெரியத்தான். புருஷன் இல்லாதவங்க எல்லாம் எதுக்கு அலங்காரம் செய்யறங்களோ” என வித்யாவின் அன்னை பேச, மீனாட்சி கலங்கி போனார்.

அவர்கள் இருவரின் பேச்சு சற்று அதிகரிக்கவும், யசோதாவோ இதற்கு மேலும் அமைதி காக்க முடியாமல், “ஏன்மா உங்க தலை முடி அழகா இருக்கே!” என வித்யாவின் அன்னையிடம் பேச்சை தொடங்கினாள்.

ஏற்கனவே வித்யா யசோதாவைப்பற்றி கூறியிருந்ததால், சற்று சுதாரிப்பாகவே, “ம்ம்ம்…” என்றதோடு முடித்துக்கொண்டு மகளுடன் பேச்சை தொடங்கப் பார்த்தார் அவர்.

யசோதாவோ அதற்கு விடாமல், “ஆனா, பாருங்க இவ்வளவு அழகா இருந்து, நீங்க வேற அதுக்கு பாத்து பாத்து டை அடிச்சு, என்ன பிரயோஜனம்? எல்லா முடியையும் தூக்கி கொண்டை போட வேண்டியதா இருக்கு” என அவள் உச்சு கொட்டி பெருமூச்சு விட,

‘உனக்கென்ன பிரச்சனை?’ என்பதுபோல பார்த்தார் அவர்.

யசோதாவோ அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாது, “நான் கூட உங்களுக்கு முடி நீளமாவும் இல்லை, பிண்ணி போடற அளவு அடர்த்தியும் இல்லைன்னு தான் கொண்டை போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். நீங்க இவ்வளவு நேரம் பேசுனதுல தான் இதுக்கு பின்னாடி இருந்த ராக்கெட் சைன்ஸ்ஸே எனக்கு புரிஞ்சது” என சாதுவாக அவர்களை கேலி பேசினாள்.

“என்ன பேசற? பேரன் வந்தாச்சு. நான் தலை பின்னல் போட்டா நல்லாவா இருக்கும்?” என மீனாட்சியை இளக்காரமாக பார்த்தபடி, சின்னவளிடம் வித்யாவின் அன்னை எகிறிக்கொண்டு வந்தார்.

“ஹாஹா பேரன் பிறக்காம இருந்தா மட்டும் அந்த நாலு முடிக்கு பின்னல் போட்டா நல்லாவா இருக்கும்? இல்லை உங்களால போடத்தான் முடியுமா?” என மீண்டும் படுநக்கலாக யசோதா கேட்க அந்த அம்மாவின் முகம் இருண்டது

வித்யா இவளது பேச்சில் அதிர்ந்து கோபமாக பார்க்கவும், அதை துளியும் கண்டுகொள்ளாத யசோதா மீனாட்சியை நெருங்கி, “எங்க அத்தைக்கு எவ்வளவு முடி பாத்தீங்கள்ல. இதை போய் கொண்டை போடுன்னு சொல்லறீங்க. இத்தனை முடியையும் கொண்டையில் அடக்கிட்டே சுத்த முடியுமா?

அப்பறம் அலங்காரம் எல்லாம் கணவனுக்காகன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்க பாத்தீங்களா? உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது.

முதல்ல அலங்காரத்துக்கும், தன்னை தயார் படுத்திக்கிறதுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிஞ்சுக்கங்க. நாம தோற்றத்திற்கு தர அக்கறை எப்பவும் மத்தவங்களோட ரசனை பார்வையை எதிர்பார்த்து இல்லை. மத்தவங்ககிட்ட ஒரு மரியாதையை உருவாக்க. இன்னார்ன்னா ஒரு கௌரவம், மரியாதை தோணனும். அதுக்கு அவங்க தோற்றமும் நல்லவிதமா இருக்கணும்.

வெளுத்து போன புடவையும், நகைங்க போட்டிருக்கங்களா இல்லையாங்கிற தோற்றமும்… என்ன கோவில், குளத்துக்கா எங்க அத்தை போறாங்க?” என அவர்கள் பேச்சில் இருக்கும் அபத்தத்தை பட்டியலிட்டு கூறி பொறிந்து தள்ளினாள். அத்தை நல்ல நிறத்தில் புடவை கட்டுவதையும், சிறிது நகைகள் போடுவதையுமா அலங்காரம் என்று சொல்லுவார்கள் என்னும் கோபம் அவளுக்கு. வித்யா ஆங்காரமாக ஏதோ பேச வர அதற்கு இவள் விட்டால் தானே!

யசோதாவே மேலும் தொடர்ந்து, “ஒருத்தங்க வீட்ல உட்கார்ந்துட்டு, அவங்க கையாலேயே சாப்பிட்டு, அவங்களையே ஜாடை பேசற உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லை. உங்களை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?” என்றாள் கோபக்குரலில்.

இன்னமும் ஆத்திரம் அடங்க மறுக்கவே, “என்ன வேணாலும் செய்யலாம். ஏன் இப்பவே மனோ அத்தானுக்கு அழைச்சு சொல்லலாம்…” என்றவள் இழுத்து நிறுத்த அவர்கள் இருவரின் முகமும் வெளிறியது.

அதை பூரண திருப்தியோடு பார்த்தவள், “இவ்வளவு நாளா அத்தையை ‘இந்த வயசுக்கப்பறம்’, ‘புருஷன் இல்லாத காலத்துல’, ‘பேரன் எடுத்த அப்பறம்’ன்னு சொல்லி சொல்லி நிறைய காயப்படுத்தி, தாழ்வுமனப்பான்மையை வரவெச்சு ஓரமா ஒதுங்கி இருக்க வெச்சுட்டீங்க. இனிமே அதுக்கான முயற்சி எடுத்தா நான் கண்டிப்பா மனோ அத்தான் கிட்ட பேச வேண்டி வரும்” என்று எச்சரிக்கையாக கூறினாள்.

கூடவே, “நீங்களும் பொம்பளைங்க தானே, இத்தனை வயசானவங்களுக்கு கணவன் இல்லாத நேரத்துல ஆதரவு தராட்டியும் அவங்க மனசு நோகாம இருக்கலாம் தானே? நமக்கும் எப்ப வேணா இந்த நிலைமை வரலாம்ன்னு எண்ணம் துளி கூடவா இல்லை. என்ன பிறவிங்களோ?” என்று முகம் சுளித்தாள்.

தனக்கிருந்த மொத்த கோபத்தையும் அவர்களை இடையில் பேசக்கூட விடாமல் படபட பட்டாசாய் பொரிந்து தள்ளியிருந்தாள். அவளது பேச்சில் மற்ற இருவரும் பயங்கரமாக கோபம் கொண்டனர். ஆனால், மனோகரன் பெயரை சொல்லி அடக்கி வைத்ததால் வேறு வழியில்லாமல் அமைதி காத்தனர்.

யசோதாவே தொடர்ந்து, “வித்திக்கா இனிமே இப்படி கண்டபடி பேசறதுன்னா உங்களுக்குன்னு ஒரு ரூம் இருக்கே, அங்க போய் உங்க மனசுல இருக்கிற குப்பைகளை எல்லாம் கொட்டுங்க. இங்க இருக்காதீங்க” என அதிகாரமாய் பேச, அவள் மேல் கோபத்தை காட்ட முடியாத ஆத்திரத்தில் வித்யா மீனாட்சியிடம் காய்ந்தாள்.

“என்ன அத்தை அவதான் நாட்டாமை பண்ணறான்னா நீங்களும் வேடிக்கை பாக்கறீங்க” என வித்யா மீனாட்சியிடம் எகிறினாள்.

“இதெல்லாம் அத்தை கேட்க வேண்டியது. ஆனா என்ன பண்ண? நீங்க கண்டபடி பேசும்போதே அமைதியா இருந்தவங்க, இப்ப நான் பேசும்போது மட்டும் என்ன சொல்லிடப் போறாங்க. யாரும் வரதுக்குள்ள உங்க ரூம்க்கு போயிடுங்க. இல்லை நான் எதுவும் பேசிடப்போறேன்?” என எரிச்சலாக எச்சரிக்கை விடுத்தாள் யசோதா.

அனைவரும் வீடு திரும்பும் நேரம் என்பதால், அவர்களும் பொருமிக்கொண்டே வித்யாவின் அறைக்குள் சென்றனர். அறையில் இருந்த இருவரும் யசோதாவை இயன்ற மட்டும் கரித்துக் கொட்டினர்.

இங்கு மீனாட்சிக்கோ, அத்தனை நிறைவு. தன்னக்கொரு மகள் இல்லையே என்ற குறை தீர்ந்தது போல உணர்ந்தார். யசோதாவோ, அத்தையின் மனதை மேலும் சீராக்க சிறிது நேரம் அங்கேயே இருந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

‘இவர்கள் பேச்சை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. வேண்டுமானால் அடுத்து வரும் விசேஷத்திற்கு நாம் செல்லலாம். அங்கே உங்களைப் போல இருக்கும் மற்றவர்களெல்லாம் எப்படி வருகிறார்கள் என்று பாருங்கள்’ என அவரது மனதில் பதிந்து விஷயத்தை மாற்றும் விதமாக பேசி சமாதானம் செய்தாள். அவர் மனது முற்றிலும் தெளியாவிடிலும் சற்று ஆறுதலாக உணர்ந்தது.

இன்டெர்னல் தேர்வுகள் முடிந்ததும், சற்றே இலகுவாக உணர்ந்தாள் யசோதா. எழுதுவதற்கும், படிப்பதற்கும் எதுவும் இல்லை. அம்மா வீட்டிற்கு சென்று வெகு நாட்கள் ஆகியிருந்தது. சென்று வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். ஆனால், கணவனிடம் ‘அழைத்து போ’ என்று போய் நிற்க விருப்பம் இல்லை. இதுவரை உடைத்திடாத மெல்லிய வீம்பு அவளிடம்.

கவியரசனும் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே அதைப்பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவளாக பேச்செடுப்பாள் அவள் வீட்டிற்கு அழைத்து செல்வோம் என எண்ணி காத்திருக்க, அவள் கேட்கவேயில்லை. இதற்கு கூட தன்னிடம் வாய்திறந்து கேட்க மறுக்கிறாள் என எண்ணும் பொழுது அவனுக்கு கோபம் தான் வந்தது.

ஏற்கனவே அவளை கல்லூரியில் சேர்த்ததிலிருந்து, செலவுக்கு பணம் தருவது, எழுதி தரட்டுமா என கேட்டு செய்தது, அவளுக்கு பாடங்கள் புரியவில்லை என தெரிந்து கொண்டு தானாகவே முன்வந்து சொல்லித்தந்தது, அவள் அன்னையிடம் கதையடிக்கும் போதும் நானும் உன் பேச்சை கவனிக்கறேன் என உணர்த்துவது வரை எல்லாம் அவனாகத்தான் செய்திருந்தான். அவளாக இதுவரை இது தேவை, இதற்கு உதவுங்கள் என்று வந்து நின்றதில்லை.

ஏன் பாடம் சொல்லித்தரும்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் தவிர, அவனாக ஏதாவது பேச்செடுத்தால் மட்டுமே அவள் பேசுவது. இல்லையேல் அன்னையிடம் உட்கார்ந்து கதையடிப்பவள், அவனிடம் அளந்து தான் பேசுவாள்.

யசோதாவின் இந்த செய்கை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவளாக கேட்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என வீம்போடு இருந்தான். ஞாயிறு எலெக்ஷன் டூயூட்டி போடுவார்கள் அதற்கு முன்பு கேட்டால் பார்க்கலாம் என அவன் இருக்க, அவள் கேட்கவேயில்லை.

ஞாயிற்று கிழமை யசோதா விழிக்கும்போது கவியரசன் அருகில் இல்லை. அவன் நேரமே சென்றிருந்தான். ஏழு மணிக்கெல்லாம் எலெக்ஷன் பூத் திறந்து விட வேண்டும் என்பதால் இவன் வேறு தாலுக்காவில் இருக்கும் தேர்தல் மையத்திற்கு செல்ல வேண்டியதிருந்ததால் வீட்டிலிருந்து ஐந்து மணிக்கே கிளம்பியிருந்தான். அவன் சென்ற விஷயமோ, எதற்காக சென்றிருக்கிறான் என்பதோ இவளுக்கு தெரியாது.

‘என்ன சண்டே அதுவுமா நேரமா எழுந்துட்டாங்க!’ அவனை காணாததில் ஆச்சர்யம் அடைந்தபடியே குளிக்க சென்றாள். குளித்து முடித்து அத்தைக்கு உதவ சென்றவளின் விழிகள் கணவனைத் தேடி வீட்டை அலசியது. அவன் சிக்கவேயில்லை.

காலை உணவு உண்ணும் வேளையிலும் கணவன் இல்லாதிருக்க அவளுக்கு என்னவோ போல் இருந்தது. அனைவரும் அவனை எதிர்பார்க்காமல் தத்தம் உணவில் கவனமாய் இருப்பதிலேயே அவன் இங்கு இல்லை என்று அனைவருக்கும் தெரியும் என புரிய, அவளுக்கு சுருக்கென்று இருந்தது.

‘எங்கு சென்றிருப்பார்? ஏன் என்னிடம் சொல்லவில்லை?’ மனம் அடித்துக்கொள்ள, யாரிடமும் கேட்க கூட முடியாமல் தவித்துப் போனாள். இப்பொழுதெல்லாம் இந்த விஷயத்தில் வெகு கவனமாக செயல்பட தொடங்கியிருந்தாள். அதிலும் கல்லூரியில் சேர்ந்த அன்று மாமியாரிடம் செலவுக்கு பணம் கேட்டது குறித்து சண்டை வந்த பிறகு, ஒவ்வொரு விஷயத்திலும் அத்தனை கவனம். எது கேட்பதாயினும், அதை கவியரசனின் மனைவியாய் தான் கேட்டாள். இப்பொழுது அவன் மனைவியாய் அவன் எங்கே என மற்றவர்களிடம் கேட்க முடியாதே!

அதன் பிறகு அன்று தேர்தல் தினம் என்பதால் அத்தையுடன் சென்று வாக்கு போட்டு விட்டு வீட்டிற்கு வந்தாள். அப்பொழுதும் அவன் வீட்டில் இல்லை, எங்கு சென்றான் என்றும் தெரியவில்லை. அவனை வெகுவாக தேடி ஓய்ந்து போனாள். மதிய உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க மறுத்தது.

சிரமப்பட்டு கொஞ்சமே கொஞ்சம் உணவை வயிற்றுக்குள் தள்ளி, அறைக்கு வந்து வீம்பை எல்லாம் ஓரமாய் வைத்து, கவியரசனின் கைப்பேசிக்கு அழைத்தால் அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது. வெகுவாக கலங்கி போனாள்.

கணவனின் நிராகரிப்பு… அது தரும் வலி… மிகமிக கொடுமையாக இருந்தது. திருமணமான ஒன்றரை மாதங்களும் இவள் முற்றிலுமாக ஒதுங்கி இருந்தது மிகப்பெரிய தவறாக அவளை பூதாகரமாக மிரட்டியது. கண்கள் கலங்க, அவ்வப்பொழுது கணவனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த வண்ணம் அவனின் வருகைக்காக காத்திருக்கலானாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஓகே என் கள்வனின் மனதில் – 16ஓகே என் கள்வனின் மனதில் – 16

ஹாய் பிரெண்ட்ஸ், போன அப்டேட்டுக்கு கமண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு. ஓகே என் கள்வனின் மடியில் – 16 அன்புடன், தமிழ் மதுரா   Download Premium WordPress Themes FreeDownload WordPress

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு

ராணி மங்கம்மாள் – 23ராணி மங்கம்மாள் – 23

23. சேதுபதியின் மூலபலம்  மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம்