Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 08

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 08

இதயம் தழுவும் உறவே – 08

 

ஞாயிறு மாலை சாவதானமாக அமர்ந்திருந்த மருமகளை ஆச்சர்யமாக பார்த்தார் மீனாட்சி. “யசோதா எல்லாத்தையும் அதுக்குள்ள எழுதி முடிச்சுட்டியா?” என வியப்பாய் கேட்டபடி அவளருகே வந்தமர்ந்தார்.

‘அம்மா அவ எழுதி இருந்தா அடுத்த வாரம் கூட முடிச்சிருக்க மாட்டா. நான் எழுதி கொடுத்தேன்’ என தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த கவியரசன் மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டான். ஆனால் வெளியில் எதுவும் சொல்லவில்லை. மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள காதை தீட்டி வைத்து காத்திருந்தான்.

யசோதாவோ முகம் பூரித்து போய், “அவங்களே எல்லாத்தையும் எழுதி கொடுத்திட்டாரு அத்தை. என்னை படிக்க மட்டும் சொல்லி இருக்காங்க” என்று பதில் கூற, ஓரவிழியில் ரசித்துக் கொண்டிருந்த கவியரசனின் மனம் முழுதாக குடை சாய்ந்தது. மென்னகை தவழ மெலிதாக சிவந்திருந்த அவளது முகத்தை பார்வையால் வருடினான்.

மருமகளின் பூரிப்பில் மனம் நிறைந்த மீனாட்சி, “பரவாயில்லையே!” என ஆச்சர்யம் காட்ட, அதன்பிறகு மெல்லிய அரட்டை கச்சேரி ஆரம்பமானது. கவியரசனின் விழிகள் மட்டும் தொலைக்காட்சியில் பதிந்திருக்க, மனம் இவர்கள் பேச்சில் தான் கவனமாய் இருந்தது.

அவர்களின் பேச்சு சிறிது நேரத்தில் யசோதா பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் பற்றி வந்திருந்தது. வேலை நேரம் எப்படி இருக்கும்? கடினமாக இருந்ததா என்றெல்லாம் மீனாட்சி கேட்க, யசோதா மறுப்பாக தலையசைத்தாள்.

“வேலை நாள் முழுக்க இருக்கும் அத்தை. காலையில எட்டரை மணிக்கு போனா, ஆறு மணி வரைக்கும் வேலை இருக்கும். பில் போடற வேலை தான். ஆனா, மதிய நேரம், அப்பறம் கூட்டம் குறைவா இருக்கும்போது எல்லாம், மூட்டையில மொத்தமா வாங்குற அரிசி, பருப்பை எல்லாம் ஒரு கிலோ, அரை கிலோன்னு தனித்தனியா பிரிச்சு பேக் செஞ்சு, பில் ஒட்டி வெக்கணும். இந்த வரமிளகாய் பக்கம் மட்டும் போயிடவே கூடாது அத்தை” என வேடிக்கையாக தன் வேலையைப்பற்றி சொல்லி சிரித்தாள் யசோதா.

“ரொம்ப கஷ்டம் என்னடாம்மா?” என வாஞ்சையோடு மாமியார் கேட்க, “அச்சச்சோ அதெல்லாம் இல்லை அத்தை. வாங்கற சம்பளத்துக்கு வேலை செஞ்சு தானே ஆகணும். கஷ்டமெல்லாம் இருந்தது இல்லை. முதலாளியும் ரொம்ப நல்ல மாதிரி. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பார்ட் டைம் வேலைக்கு, காலேஜ் பசங்களை வேலைக்கு சேர்த்திருந்தாங்க. அவங்க வந்ததும் நாங்க கிளம்பிக்கலாம்” என்றாள் இளையவள்.

தன் முதலாளியின் மீது குறை கூறாமல் மனைவி பதில் சொன்ன விதத்தை மனதிற்குள் மெச்சிக்கொண்டான் கணவன்.

மீனாட்சியும், “ஓ, பரவாயில்லையே மா” என கூறினார்.

“அப்பறம் ரொம்ப டேஞ்சரஸான ஒரு ஆளை நாம கடைக்குள்ளேயே விடாம பாத்துக்கணும் அத்தை…” என பீடிகையோடு யசோதா நிறுத்த,

“அது யாரும்மா? எல்லாரையும் உள்ளே வர வெச்சு, பொருளை வாங்க வைக்கிறது தானே வியாபாரம். நீங்க யாரை உள்ளே வராம பாத்துக்கணும்?” என மீனாட்சி ஆச்சர்யமாக கேட்டார். கவியரசனும் அதே ஆச்சரியத்தோடு மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

யசோதா ஏதோ பெரிய விஷயத்தை சொல்லும் பீடிகையோடு, “எலி அத்தை… எலி… மளிகை கடைக்குள்ள எலி புகுந்தா எவ்வளவு அட்டகாசம் பண்ணும் தெரியுமா? அதை பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதுக்கு பயப்படாம எதிர்த்து நிற்கிறதுக்கு எவ்வளவு தைரியம் வேணும் தெரியுமா?” என்று வீராவேஷமாய் பேசிக்கொண்டு செல்ல, அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கவியரசன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டான்.

அவன் சிரித்த பின்னரே அவனின் கவனமும் இவர்கள் பேச்சில் தான் இருக்கிறது என்று புரிந்தது.

மீனாட்சியும் சிரித்துக் கொண்டே, “தம்பி என்ன ஒட்டு கேட்கிறியா?” என மகனிடம் கேட்க, யசோதாவிற்கு ‘ஐயோ இவரும் கவனிச்சுக்கிட்டா இருந்தாரு’ என சங்கடமாக போய்விட்டது.

“அம்மா பட்டாசு வெடிக்கிறதை யாரும் ஒட்டு கேக்க வேண்டியதில்லை. காதையே அடைச்சுக்கிட்டாலும் நல்லா கேட்கும்” என சொல்லிய கவியரசன் மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்க,

“அத்தை பாருங்க அத்தை என்னைப்போய் பட்டாசுன்னு சொல்லறாங்க” என சிணுங்கிக்கொண்டே மாமியாரிடம் புகார் வாசித்தாள் யசோதா.

“அம்மா பட்டாசை வெடிச்சுட்டே இருக்க சொல்லுங்க. இப்படி புஸ்ஸுன்னு போனா நல்லாவே இல்லை” என அவளின் சிணுங்களுக்கும் அவன் கேலி செய்ய, அவள் அவனை பார்த்த வண்ணம் தன் உதட்டை வலமும், இடமும் மாற்றி மாற்றி இருமுறை சுளித்தாள்.

இளநகையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “நீயே உன் பொண்டாட்டிகிட்ட சொல்லிக்கோ” என்று மீனாட்சி கூறி, தனக்கு தந்த பொறுப்பை தட்டிக் கழித்தார்.

அவனோ அசையாது அவளது விழிகளைப் பார்க்க, அதில் தன் விழிகளை கலக்க விட திராணியற்று, மௌனமாய் தலை குனிந்து கொண்டாள் யசோதா.

“உங்க மருமககிட்ட தானே, ரொம்பவும் வெட்கப்படறா. சரி விடுங்க தனியா சொல்லிக்கிறேன்” என கவியரசன் சொல்லி சிரிக்க, யசோதா தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். மீனாட்சி இவர்களின் விளையாட்டில் மெலிதாக சிரித்து வைத்தார்.

என்னதான் கவியரசன் வெளியில் கேலி செய்து சிரித்திருந்தாலும், தன் அன்னையின் பாரம் குறைக்க, படிப்பை பாதியில் நிறுத்தியதோடு அல்லாமல், கடைநிலை ஊழியர் வரையான வேலையை மனைவி செய்திருக்கிறாள் என்ற விஷயத்திலேயே நெகிழ்ந்து போயிருந்தான். அவளது மனதில் அவளது குடும்பத்திற்கு அவளால் உதவ முடியவில்லை என உறுத்திக் கொண்டிருக்கும் பாரமும் அவனுக்கு தெளிவாக புரியும்தான். ஆனால், அது அவசியமேயில்லை என்பதை அவளாக உணரட்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அந்த வாரம் தொடங்கியதிலிருந்தே, யசோதா தேர்விற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். கவியரசன் புரியாத பாடங்களை சொல்லித் தருவது அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

அந்த வாரத்தில் ஒரு விசேஷ வீட்டிற்கு அழைப்பு வந்திருந்தது. ஒரு நாள் முன்னதாகவே மீனாட்சி யசோதாவிடமும் நினைவு படுத்தினார்.

“யாரெல்லாம் போகணும் அத்தை?” என பொதுவாக யசோதா விசாரிக்க,

“பொதுவா இந்தமாதிரி தூரத்து சொந்தம்ன்னா வீட்டுல ஒருத்தர், ரெண்டு பேரு தான் போறது யசோதா. நம்ம வீட்டுல வித்யா மட்டும் போயிட்டு வருவா. இந்தமுறை நீயும், கவியரசனும் போயிட்டு வரீங்களா? ரெண்டு பேரும் எங்கேயும் வெளியவே போறது இல்லையே” என்றார் மீனாட்சி.

யசோதா பதில் கூறும் முன்பு, “வெளில போறதா? வீட்டுக்குள்ளேயே ஒருத்தர்கிட்ட ஒருத்தர் சுமூகமா பேசியே நான் பார்த்தது இல்லை. கல்யாணம் ஆன புதுசுல நாங்க எத்தனை படத்துக்கு போனோம்? எவ்வளவு தடவை வெளிய சுத்துனோம். இங்க ஒன்னத்தையும் காணோம்” என்று இளக்காரமாக கூறியபடி அவர்கள் இருவரின் அருகே வந்தாள் வித்யா.

இருவருமே வித்யாவை எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவளது பேச்சு மீனாட்சிக்கு பலத்த சங்கடம். யசோதா எதுவும் கூறிவிடும் முன்பு அவரே இடையிட்டு,

“மறந்தே போயிட்டேன் யசோதா. உனக்கு தான் படிக்க வேண்டியது இருக்கல்ல” என சின்னவளிடம் கூறியவர், வித்யாவை நோக்கி, “இப்போ தானே வித்யா கல்யாணம் முடிஞ்சிருக்கு. கல்யாணம் ஆன கையோட யசோதா படிக்க போயிட்டா. அவளே காலேஜுக்கு லேட்டா சேர்ந்ததால தினமும் படிக்கிறது, எழுதறதுன்னு அல்லாடறா. இதுல எங்க வெளில போவாங்க” என மூத்தவளிடம் இளையவளுக்கு பரிந்து பேசினார். இதுபோன்ற ஆதரவான பேச்சுக்களை எல்லாம் வித்யா துளியும் ரசிப்பதில்லை. ‘இப்பொழுது வந்தவள் என்னைவிட உசத்தி ஆகிவிட்டாளா?’ என்னும் ஆத்திரம் தான் எழும்.

அந்த ஆத்திரத்தை அடக்கி, “என்னவோ… இந்த வீட்டுல தான் எல்லாம் வித்தியாசமா நடக்குது” என வித்யா விட்டேறியாக கூற,

“நாளைக்கு விசேஷத்துக்கு நீயே போயிட்டு வரியா வித்யா?” என மீனாட்சி கேட்டு பேச்சை மாற்றினார்.

முகத்தில் கர்வம் மின்ன, “பிறகு இங்க போறதுக்கு யார் இருக்காங்க அத்தை. எல்லாத்துக்கும் ஒண்டியா நானே அல்லாடனும்ன்னு இருக்கு. மூத்த மருமகளா போயிட்டேன்” என்று உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த பாவனையில் வித்யா கூறினாள்.

‘இவங்க அப்படி என்ன செய்யறாங்க’ என யசோதா தான் மலைத்து போனாள்.

“ஏன் அத்தை, அக்கா கூட நீங்க போகலாம் தானே” என யசோதா சாதாரணமாக கேட்க, அதைக்கேட்ட வித்யாவிற்கு கோபம் எழுந்தது.

கோபத்தில் எதையும் யோசிக்காது, “அவங்க எப்படி விசேஷத்துக்கு எல்லாம் வருவாங்க” என ஆங்காரமாக வித்யா கேட்க, “ஏன்? என்னாச்சு?” என எதுவும் புரியாத பாவனையில் யசோதா கேட்டாள்.

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட மூத்தவள், “அவங்களையே கேளு” என்றதோடு அங்கிருந்து சென்று விட்டாள்.

வித்யா சென்றதும் மிகவும் குழப்பத்துடன், “ஏன் அத்தை அப்படி சொல்லறாங்க?” என மூத்தவளிடம் யசோதா கேட்டாள்.

“இல்லைம்மா, மாமா இல்லாம விசேஷங்களுக்கு எப்படி போக? விசேஷங்களுக்கு போயும் ஒதுங்கி தான் இருக்கணும். அதுக்கு போகாமயே இருக்கலாம்ன்னு தான்” மெல்லிய புன்னகையுடன் மீனாட்சி பதில் கூறினார்.

அவரது பேச்சில் அதிர்ந்தவள், “என்ன அத்தை இந்த காலத்துல போயி இப்படி சொல்லறீங்க. இதை எல்லாம் யாரும் பெருசா எடுத்துக்கறதில்லை அத்தை. அதோட நீங்க விசேஷ வீட்டுக்கு போயிட்டு வர போறீங்க. அதுல என்ன அபசகுணம்?” என்றவாறு மாமியாரின் எண்ணத்தை மாற்றும் பொருட்டு சின்னவள் கூற, பெரியவள் ஒப்புக்கொள்வதாகவே இல்லை.

“எல்லாரும் ஒரே விதமா நினைக்க மாட்டாங்க யசோதா” என மூத்தவள் கூற,

“யாரும் எதுவும் சொன்னா அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க அத்தை” வித்யா விதைத்ததோ என்னும் எண்ணத்தில் மேம்போக்காக சொல்ல நினைத்தாள்.

“சரி விடும்மா. இதை அப்பறம் பேசுவோம்” என்றதோடு மூத்தவள் முடித்துக்கொள்ள அதை எப்படி தொடர என சின்னவளுக்கு புரியவில்லை. ஆனால், எதுவோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 10காயத்திரியின் ‘தேன்மொழி’ – 10

பாகம் 10 படம் பார்க்க கிஷோரும் தேனுவும் சென்றனர் …..படத்தில் இடையிடையே அவனும் அவளும் இருவரையும் பார்க்கா வண்ணம்பார்த்துக்கொண்டிருந்தனர்(ஹீரோயின் அவங்க ஹீரோவ ரசிச்சாங்க அவர் பார்காதப்ப…  ஹீரோஅவங்க ஹீரோயினை ரசிச்சாங்க அவள் பார்க்காதப்ப)….வர்றப்ப சரியான மழை பிடிச்சிக்குச்சு இரண்டு பேரும் நல்லா

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36

உனக்கென நான் 36 சுகு தனக்குள் ஒளிந்திருந்த கணினி திறமையால் இனையத்தில் சலித்தெடுத்துகொண்டிருந்தான் அந்த மர்ம பெண்ணை. அன்பரசிக்கோ அந்த காரின் வழியே சைகை செய்த நியிபகமும் ஜெனியின் மரணமும் கண்ணில் வந்து சென்றது. அந்த கையில் இருந்தது ஓர் மோதிரம்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று