Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25

அத்தியாயம் 25

தன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி எவ்வளவோ முயன்று பார்த்தும் காமாட்சியம்மாளிடமிருந்து சாதகமான மறுமொழியையோ சுமுகமான வார்த்தைகளையோ பதிலாகப் பெற முடியவில்லை. ஒரே முரண்டாக இருந்தாள் காமாட்சியம்மாள். உடல்நிலை சரியாயிருக்கிற காலங்களில் சூரியோதயத்திற்கு முன்பே ஆற்றங்கரைக்குப் போய்விட்டுத் திரும்புவதைத் தவிர வெளியில் எங்கும் நடமாடாத காமாட்சியம்மாளுக்கு எல்லா விவரமும் முன்கூட்டியே எப்படித் தெரிகிறதென்பது பெரிய புதிராயிருந்தது. பார்வதியை விசாரித்ததில் அந்தப் புதிர் விடுபட்டது. பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டி திரிலோக சஞ்சாரி போல் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் எங்கே யார் வீட்டில் என்ன நடக்கிறதென்று ஊர் வம்புகளைத் தெரிந்து கொண்டு வந்து அம்மாவுக்குச் சகலத்தையும் அவ்வப்போது காதில் போட்டுக் கொண்டிருப்பதாகப் பார்வதி வசந்தியிடம் தெரிவித்தாள்.

“புருஷா ஆயிரம் தப்புப் பண்ணலாம். பொம்மனாட்டி மட்டும் முரண்டு பண்ணி மூஞ்சியைத் தூக்கிண்டு நின்னாள்னா அப்புறம் தனியா அவா எதைச் சாதிச்சுட முடியும்?” – என்பதுதான் பக்கத்து வீட்டுப் பாட்டி அடிக்கடி காமாட்சியம்மாளிடம் சொல்லும் வாக்கியம் என்பதைக் கூடப் பார்வதியே தெரிவித்தாள்.

முரண்டும், அறியாமையும், அசூயையும், கொண்டது விடாக் குணமுள்ள சில பாட்டிகள் தான் கிராமங்களின் அரசியல்வாதிகளாக இருப்பார்களோ என்று எண்ணினாள் வசந்தி. நிச்சயமான கல்யாணங்களைக் கலைப்பது, நெருங்கிப் பழகுகிறவர்களிடையே மனஸ்தாபங்களை உண்டாக்குவது, மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொள்வது, வதந்திகளைப் பரப்புவது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது இவையெல்லாம் ஒவ்வோர் கிராமத்திலும் சில பாட்டிகளின் செயல்களாக இருந்தன. இந்த மாதிரிக் கெட்ட குணமுள்ள பாட்டிகளின் செயல்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நல்ல சுபாவமுள்ள சில பாட்டிகள் கூட ஒதுங்கி இருந்து விடுவது வழக்கமாயிருந்தது. காமாட்சியம்மாளிடம் தான் பேசிப் பார்த்ததைப் பற்றி சர்மாவிடமும், தன் தந்தையிடமும் விவரங்களைத் தெரிவித்து விட்டாள் வசந்தி. தான் காமாட்சியம்மாளிடம் பேசியதைப் பற்றிக் கமலியிடமோ, ரவியிடமோ, வசந்தி எதையும் விவரிக்கவில்லை. வீணாக அவர்களைக் கலவரப்படுத்த வேண்டாமென்று தான் அதை விட்டிருந்தாள்.

வேணுமாமாவைப் பொறுத்தவரை வசந்தி காமாட்சியம்மாளைப் பார்த்து விட்டு வந்து கூறிய எதுவும் அவரது உற்சாகத்தைப் பாதிக்கவில்லை. கலியாண ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அவர். அந்த வட்டாரத்திலேயே செல்வாக்குள்ள நாதஸ்வர வித்துவான் ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இரட்டை நாதஸ்வரத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. மற்ற ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. கலியாணம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

இவற்றால் சீமாவையரின் ஆத்திரமும் வயிற்றெரிச்சலும் அதிகமாயிருந்தன. எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்க்கிறாற்போல் நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்துவிட்டது; சீமாவையர் அதில் வகையாக மாட்டிக் கொண்டு அகப்பட்டிருந்தார்.

சங்கரமங்கலம் புனித அந்தோணியார் ஆரம்பப்பள்ளியின் ஆசிரியை மலர்கொடி பள்ளிக்கூடம் முடிந்து சீமாவையரின் மாந்தோப்பு வழியாக வீடு திரும்பும் போது முன்பு பல முறை அவளை வழி மறித்து வம்பு பண்ணியது போல் வம்பு பண்ணிக் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் அவர். தோப்பில் அவருக்குத் துணையாக அவர் அடியாட்கள் இரண்டு பேரும் இருக்கவே சீமாவையருக்குத் துணிச்சல் அதிகமாகிவிட்டது. அகமத் அலி பாயின் கடத்தல் சரக்குகளோடு சேர்ந்து இங்கே வந்து, அவருக்குப் பிரியமாகக் கொண்டு வந்து தரப்பட்டிருந்த ‘சீமைச் சரக்கு’ வேறு உள்ளே போயிருந்தது. சீமாவையரின் தோப்பில் இறைவைக் கிணற்றை ஒட்டிப் பம்ப் செட் மோட்டாருக்காக ஒரு சிறிய சிமெண்டுக் கட்டிடம் உண்டு. அவர் குடிப்பதற்காகவும் மற்ற லீலாவிநோதங்களுக்காகவும் இந்தக் கட்டிடம் பயன்பட்டு வந்தது. அவர் வீடு அக்கிரகாரத்துக்குள் நடுவாக இருந்ததனால் அங்கே ஒரு நாளும் இந்த விவகாரங்களை அவர் வைத்துக் கொள்வதில்லை. தோப்பு ஊரிலிருந்து ஒதுங்கி இருந்ததனால் இதற்கெல்லாம் வசதியாயிருந்தது. நீண்ட நாள் நழுவி நழுவிப் போய்க் கொண்டிருந்த மலர்க்கொடியை அன்று எப்படியும் வசப்படுத்தியே தீருவது என்று சீமாவையர் கையைப் பிடித்து இழுத்தவுடன் அவள் கூப்பாடு போட்டிருக்கிறாள். பின்னாலேயே அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இறைமுடிமணியின் இயக்கத்து ஆட்கள் ஓடிவந்து சீமாவையரைக் கையும் களவுமாகப் பிடித்துத் தோப்பிலிருந்த தென்னை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டார்கள். இறைமுடிமணிக்குத் தகவல் அனுப்பி அவர் போலீஸுக்குச் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். சீமாவையரின் அடியாட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்த பகுத்தறிவுப் படிப்பக இளைஞர்களை எதிர்க்க முடியாமல் உடனே போய் அகமத் அலி பாய்க்குத் தகவல் தெரிவித்தார்கள். பணம் விளையாடியது. போலீஸ், எதிர்பார்த்தபடி உடனே தோப்புக்கு வரவில்லை. ஆனால் சீமாவையரைத் தப்பச் செய்வதற்காக அகமத் அலிபாய் ஒரு கூலிப் பட்டாளத்தை அனுப்பியிருந்தார். இருட்டியதும் தோப்பில் புகுந்த அந்தக் கூலிப் பட்டாளம் முதல் வேலையாகச் சீமாவையரைத் தென்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டுத் தப்பச் செய்து விட்டது. அப்புறம் நடந்த கலகத்தில் பகுத்தறிவுப் படிப்பக ஆட்களில் சிலருக்கும், அவர்களைத் தேடி அங்கு வந்திருந்த இறைமுடிமணிக்கும் அரிவாள் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. போலீஸ் வருவதற்குள் கூலிப் பட்டாளம் தப்பி ஓடிவிட்டது. அங்கே வந்து சேரப் போலீஸார் வேண்டுமென்றே அதிக நேரமாக்கினாற் போலப் பட்டது.

அவசர அவசரமாகத் தப்பி ஓடிய சீமாவையர் தான் எந்த நேரத்தில் மாந்தோப்பில் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததாக அவர்கள் போலீசில் புகார் செய்திருந்தார்களோ அதே நேரத்தில் சிவன் கோவிலில் குடும்பத்தோடு சென்று அர்ச்சனை செய்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் சாட்சிகளும், ஓர் அலிபியும் ஜோடனை செய்தார்.

போலீஸார் சீமாவையரின் தோப்பில் அத்துமீறிப் புகுந்து கலகம் விளைவிக்க முயன்றதாகப் பகுத்தறிவுப் படிப்பக ஆட்கள் மீதும் இறைமுடிமணி மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.

இறைமுடிமணிக்கு இடது தோள்பட்டையில் சரியான அரிவாள் வெட்டு. சங்கரமங்கலம் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அவரைச் சேர்த்திருந்தார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்க அதிக நேரமாகி விட்டதால் நிறைய இரத்தம் வீணாகி இருந்தது. தகவல் தெரிந்து சர்மா, ரவி, கமலி எல்லோரும் பதறிப் போய் ஆஸ்பத்திரிக்கு விரைந்திருந்தார்கள். ஏற்கனவே இறைமுடிமணியின் மருமகன் குருசாமியும், மனைவி மக்களும், குடும்ப நண்பர்களும், இயக்க நண்பர்களுமாக ஆஸ்பத்திரியில் கவலையோடு குழுமியிருந்தனர். இறைமுடிமணிக்கு நிறைய இரத்த இழப்பு ஏற்பட்டதனால் புது இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது. அவரது இயக்கத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு இரத்தம் கொடுக்க முன் வந்தனர். ஆனால் சோதனை செய்து பார்த்ததில் ஒருவரது இரத்தமும் அவரது குரூப் இரத்தமாக இல்லை.

டாக்டர் சர்மாவைப் பார்த்தார். அவரைக் கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கினார்.

“என் இரத்தம் சேர்றதான்னு பாருங்கோ. ஒண்ணும் எனக்கு ஆட்சேபணை இல்லை” – என்று மகிழ்ச்சியோடு டாக்டரைப் பின் தொடர்ந்தார் சர்மா.

என்ன ஆச்சரியம்! சர்மாவின் இரத்தம் கச்சிதமாகச் சேர்ந்தது. சர்மா இறைமுடிமணிக்காக இரத்தம் கொடுத்தார். மறுநாள் காலை இறைமுடிமணி நல்ல பிரக்ஞையோடு பேச முடிந்த நிலையில் இருந்தபோது தன்னைப் பார்ப்பதற்காக ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த சர்மாவிடம், “எங்கள் ஆளுங்கள்ளாம் நான் பொழைச்சு எந்திரிச்சப்புறம் ஒரு வேளை ஆஸ்திகனா மாறிடுவேனோன்னு கூடப் பயப்படறாங்கப்பா! நீயில்ல எனக்கு இரத்தம் குடுத்தியாம்?” – என்று வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே சர்மாவைக் கேட்டார். அப்போது அருகே இருந்த படிப்பக ஆள் ஒருவர், “ஒரு ஐயரு ரத்தவெறி பிடிச்சுப் போய் அதைச் சிந்த வைச்சாரு. இன்னொருத்தரு அதைக் குடுத்துச் சரிப்படுத்தினாரு” – என்று சொன்னார். இறைமுடிமணி அந்த ஆளை உறுத்துப் பார்த்தார். “இந்தா நீ கொஞ்சம் வெளியில இரு சொல்றேன். நானே பெறவு கூப்பிடுறேன்” – என்று சொல்லி அந்த ஆளைப் போகச் சொன்னார் இறைமுடிமணி. உடனே சர்மா “அவரை ஏன் கோபிச்சுக்கறே தேசிகாமணி! அவரு உள்ளதைத்தானே சொல்கிறார்?” – என்றார். ஆனால் அந்த ஆள் இறைமுடிமணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடனே வெளியேறி விட்டார். அவர் வெளியேறியதும் இறைமுடிமணி சர்மாவிடம் கூறினார்:

“செய்யிற அக்கிரமத்தையும் செஞ்சுப்போட்டு நானும் என் ஆளுங்களும் அவரு தோப்பிலே அத்து மீறி நுழைஞ்சி கலகம் பண்ணிச் சொத்துக்குச் சேதம் விளைவிச்சிருக்கோம்னு போலீஸிலே புகார் பண்ணியிருக்காரு சீமாவையரு. அந்த நேரத்திலே அவரு சிவன் கோவில்ல குடும்பத்தோட அர்ச்சனையில்லே பண்ணிக்கிட்டிருந்தாராம்? தனக்கு ஆபத்துன்னாச் சாமியைக் கூடப் பொய்சாட்சிக்கு இழுக்கிறானுவ” –

“யாரைச் சாட்சிக்கு இழுத்தா என்ன? அக்கிரமம் பண்றவா அழிஞ்சுதான் போயிடுவா…”

“அழிஞ்சு போகலியே விசுவேசுவரன்! நேர்மாறா அக்கிரமத்தை எதிர்க்கப் போன நாங்களில்லே கையும் காலும் வெட்டுப்பட்டு இப்படி ஆஸ்பத்திரியிலே வந்து அழிஞ்சு கிடக்கிறோம். நாலு காசு வசதியுள்ளவன் இங்கே நியாயம், சட்டம், போலீசு எல்லாத்தையும் கூட வெலைக்கி வாங்கிடறானே?”

“வாஸ்தவம், தெய்வத்தை நம்பறவாளைவிடப் பணத்தையும், வசதிகளையும் நம்பித் தொழறவா தேசத்திலே அதிகமாயிட்டா. யோக்கியமாயிருக்கணும், உழைச்சுச் சம்பாதிக்கணும்கிற நம்பிக்கையே போயிடுத்து. நல்லவனாயிருக்கணும்கிற நம்பிக்கையை விட நல்லவனைப் போல இருந்துட்டாப் போறும்னு திருப்திப் படறதே அதிகமாயாச்சு-”

“வேதத்தைச் சொல்லுற வாய் பொய்யையும் சொல்லுது. சீமாவையர் கடவுளை நம்பறதைவிட அதிகமாக அகமத் அலி பாயோடு பணத்தைத்தான் நம்புறாரு.”

“என்னைப் பொறுத்தவரை எவன் யோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தாமே உழைச்சு வாழறானோ, எவன்கிட்டச் சூதும், வாதும் வஞ்சனையும் இல்லியோ அவனெல்லாம் ஆஸ்தீகன் தான். எவன் அயோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தி, உழைக்காமச் சுரண்டி வாழறானோ எவன்கிட்டச் சூதும் வாதும் வஞ்சனையும் நிரம்பியிருக்கோ அவனெல்லாம் தான் நிஜமான நாஸ்தீகன்!”

“நீ சொல்றே… ஆனால் உலகத்துனோட கண்ணிலே சீமாவையருதான் ஆஸ்தீகர், நான் நாஸ்தீகன். முரடன்! ஊரோட ஒத்துப் போகாதவன்…”

“அப்படி யார் யார் நெனைக்கறாளோ தெரியாது. ஆனா நான் அப்படி உன்னைப் பத்தி நெனைக்கலே தேசிகாமணி!”

“நீ நெனைக்க மாட்டப்பா… அதைக் கூடப் புரிஞ்சுக்கத் தெரியாதவனா நான்?”

இந்த உரையாடலின் போது இருவருமே மனம் நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். இறைமுடிமணி பத்து நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. அப்படி அவர் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்த நாட்களில் சர்மா நாள் தவறாமல் ஆறுதலாக அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் சர்மா ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டுத் திரும்பியபோது வழியில் சந்தித்த சாஸ்திரி ஒருவர் சர்மாவிடம் பேச்சுக் கொடுத்தார் – அந்தச் சாஸ்திரி சீமாவையருக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் சர்மாவாக வலுவில் பேசப் போகவில்லை. பாதையில் எதிர்ப்பட்டு அவராகத் தம்மை நிறுத்தி க்ஷேமலாபம் விசாரிக்கவே சர்மாவும் பதில் பேசினார்.

“எங்கே போயிட்டு வரேள் சர்மா?”

“எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட சிநேகிதன் ஒருத்தன் ஒரு கலவரத்திலே வெட்டுக் காயப்பட்டு ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருக்கான் – அவனைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்.”

“யாரு? அந்தச் ‘சூனா மானா’க்காரன் தானே, ‘சாமியில்லே தெய்வமில்லே’ன்னு சதா நாஸ்தீகப் பிரசாரம் பண்ணிண்டிருக்கானோ இல்லியோ, அதான் தெய்வமாப் பார்த்து இந்த்த் தண்டனையை அவனுக்குக் குடுத்திருக்கு.”

இதைக் கேட்டுச் சர்மாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. கடவுளின் செயல்களுக்கு இப்படிக் கொச்சையாக அர்த்தம் கற்பிக்கிற ஆஸ்திகனைவிட மோசமான நாஸ்திகன் வேறொருவன் இருக்க முடியாது என்று பட்டது அவருக்கு. தெய்வ சிந்தனைகளில் மிகவும் மோசமான தெய்வ நிந்தனை, ‘கடவுள் தம்மை எதிர்த்துப் பேசுகிறவன் வீட்டில் கொலை விழச் செய்வார், தம்மைத் துஷ்பிரசாரம் செய்கிறவனை உடனே கையைக் காலை வாங்கிப் பழி தீர்த்துக் கொள்வார்’ என்று மூட பக்தியால் பாமரத்தனமாக விளக்கம் கொடுப்பதுதான். இந்த மூடத்தனமான விளக்கம் சரியாயிருந்தால் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அல்லது வெற்றி மமதையில் நிதானமிழந்த ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியைப் போலக் கடவுளும் பழி வாங்கவும், பகை தீர்க்கவும், எங்கே எங்கே என்று தேடித் தவித்துக் கொண்டு திரிவது போலாகிவிடும். இவ்வளவு வேதங்கள் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும் அதே சாஸ்திரி அத்தனை மௌட்டீகம் நிறைந்த ஒரு விளக்கத்தைக் கொடுத்தது கண்டு சர்மா அப்போது அருவருப்பு அடைந்திருந்தார். அவரை விட – அவற்றை எதிர்ப்பதற்காகவே சாஸ்திரம் சம்பிரதாயங்களைப் படித்துக் கொண்ட இறைமுடிமணி இன்னும் தெளிவாகவும் பிரக்ஞையுடனும் நன்றாகவும் படித்திருப்பதாகச் சர்மாவுக்குத் தோன்றியது.

சர்மா தன் மனத்தினுள் இருந்த எரிச்சலை அமைதிப் படுத்திக் கொண்டு “சாஸ்திரிகளே! நீர் சொல்றபடி வச்சுண்டுட்டாத் தனக்கு கெடுதல் பண்றவாளையும், தன்னை எதிர்க்கிறவாளையும் எப்படா தேடிப் பிடிச்சுக் கையைக் காலை வெட்டித் தண்டிக்கலாம்னு ஒருவிதமான சுயநலத்தோடு தெய்வம் தயாராக் காத்துண்டிருக்கற மாதிரின்னா ஆறது?” என்றார்.

“இல்லியோ பின்னே? தெய்வம் எப்பிடிப் பொறுத்துக்கும்னேன்?”

இதைக் கேட்டுச் சாஸ்திரிகளின் மௌட்டீகத்துக்காக மட்டுமின்றி மந்த புத்திக்காகவும் சேர்த்து இரக்கப்பட்டுக் கொண்டே மேலும் அவரையே கேட்டார் சர்மா:-

“பொறுமையே பூஷணம்னும் சகிப்புத் தன்மையே சத்தியம்னும் மனுஷாளுக்கெல்லாம் முன்மாதிரியாக் கத்துக்குடுக்க வேண்டிய தெய்வம், நீர் சொல்ற மாதிரி அத்தனை பொறுமையில்லாததாயும், அவசரக் குடுக்கையாகவும் சுயநலமாகவும் இராது சாஸ்திரிகளே-”

“நீங்க என்ன சொல்றேள் சர்மா? ‘அவனோட’ பழகிப் பழகி வரவர நீங்களே இப்பல்லாம் ‘அவன்’ மாதிரிப் பேச ஆரம்பிச்சுட்டேள்…”

“அதில்லே! சமயா சமயங்கள்ளே ஆஸ்தீகாளும் தங்களை அறியாமத் தெய்வத்தை அவமதிச்சுப் பேசிடறதுண்டு. அதுவும் கூடத் தெய்வ நிந்தனைதான். நீங்க சொன்னதையும் அதிலே தான் சேர்த்துக்கலாம். நம்ம துவேஷத்தை, நம்ம மௌட்டீகத்தை, நம்ம அஞ்ஞானத்தை நம்மோட பழி வாங்கற மனப்பான்மையை இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம்பொருள் மேலே ஏத்தி வச்சு அது பழி வாங்கிடும், கண்ணை அவிச்சுப்பிடும், காலை ஒடிச்சிப்பிடும்னெல்லாம் சொல்றது எத்தனை அபத்தம்? ‘வேண்டுதல் வேண்டாமை’ இல்லாதவன்னு பகவானைப் பத்தி ஆயிரம் சாஸ்திரங்கள்ளே நீர் திரும்பத் திரும்பப் படிச்சு என்ன பிரயோஜனம் சாஸ்திரிகளே?”

எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும் சர்மா குரலில் கடுமை தொனித்து விட்டது. சாஸ்திரிகள் சர்மாவுக்குப் பதில் சொல்லாமல் கோபத்தோடு நேரே சீமாவையர் வீட்டுத் திண்ணைக்கு விரைந்தார். அங்கே அவர் எதிர்பார்த்தது போல் வம்பர் சபை கூடியிருந்தது. இவர் போவதற்கு முன்பேயே ‘சர்மா எதிர்ப்புத்’தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. சீமாவையர் அத்தனை பேருக்கும் தாராளமாக வெற்றிலை சீவல் வழங்கிச் சர்மா எதிர்ப்பை உற்சாகப்படுத்தி விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சாஸ்திரி வந்து சொன்னதைத் தொடர்ந்து கூடியிருந்தவர்களிடம் சீமாவையரே சர்மாவைப்பற்றி மேலும் குறை கூறித் தூபம் போட்டுவிட வசதியாயிருந்தது.

“என்னோட மாந்தோப்பிலே பம்ப்செட் மோட்டாரைக் கொள்ளையடிக்கணும்னு திட்டம் போட்டு ஆள் கட்டோட நுழைஞ்சவன் அந்த இறைமுடிமணி. நல்லவேளையா என் குத்தகைக்காரனோட ஆள்கள் சமயத்தில் வந்து என் ஆஸ்தியைக் காப்பாத்தியிருக்காங்க. அப்படிப்பட்ட கிராதகனுக்கு பரிஞ்சுண்டு போய் நிற்கிறார் சர்மா. அவருக்கு வரவரப் புத்தியே பேதலிச்சுப் போச்சு. ஒரே அடி மேலே அடியா வரது. புள்ளை என்னடான்னாப் பிரெஞ்சுக்காரியை இழுத்துண்டு வந்து நிற்கிறான். கடைசியிலே இவரே அவாளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதாயிடுத்து. சாஸ்த்ரோக்தமா நாலு நாள் கல்யாணமாம், சாஸ்திரம் ஒரு கேடு இவருக்கு! பண்ற கந்தரகோளம்லாம் பண்ணிட்டுச் சாஸ்திரமாம் சாஸ்திரம்!”

“அது மட்டுமில்லே சீமாவையர்வாள்! ஆஸ்பத்திரியிலே சாகக் கிடந்த அந்தக் கறுப்புச் சட்டைக்காரனுக்கு ஓடிப்போய் ரத்தம் குடுத்துக் காப்பாத்தியிருக்கார் இவர்…”

“இவருக்குத் தாத்தா வந்தாலும் அவனைக் காப்பாத்த முடியாது சுவாமீ! அவன் அகமத் அலி பாயைப் போய் விரோதம் பண்ணிண்டிருக்கான். பாய் கோடீசுவரன். அவரோட போட்டி போட இந்த வெறகுக் கடைக்காரனாலா ஆகும்?”

“ஆனா அவன் அக்ரகாரத்திலே வச்சிருக்கற பலசரக்குக் கடையிலே வியாபாரம் ரொம்ப நன்னா ஆறதுங்கறாளே ஓய்! விலை எல்லாம் ரொம்ப நியாயமாயிருக்குங்கறா, சரக்கும் கலப்படமில்லாமே சுத்தமாகவும் நன்னாவும் இருக்காமே… எல்லாரும் பேசிக்கிறாளே…”

“சும்மா ஒரு ஸ்டண்ட்! அதெல்லாம் கொஞ்ச நாள் ஜனங்களைக் கவரணும்கறதுக்காகக் குடுப்பன். போகப் போகத்தான் சுயரூபம் தெரியும்.” – என்று அதை மறுத்தார் சீமாவையர். இறைமுடிமணியைப் பற்றியோ சர்மாவைப் பற்றியோ யாருக்கும் ஒரு சிறிய நல்லபிப்பிராயம் கூட ஏற்பட்டு விடாமல் கவனித்துக் கொள்வதில் சீமாவையருக்கு அளவு கடந்த அக்கறை இருந்ததென்னவோ உண்மை! ‘இறைமுடிமணி’யின் கடை, வியாபாரம் எல்லாம் பற்றி ஊர் முழுவதும், மரியாதையும் நல்லெண்ணமும் பெருகுவதையே அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. சர்மாவையும், இறைமுடிமணியையும் கோர்ட்டு, கேஸ் என்று இழுத்தடிப்பதற்கான செலவுகளை இரகசியமாக அகமத் அலிபாய் ஏற்றுக் கொண்டிருந்தார். அகமத் அலிபாயின் கோபத்துக்குக் காரணம் சர்மாவை வீடுதேடி போய்க் கையில் முன்பணத்தோடு கெஞ்சிப் பார்த்தும் கேட்காமல் அவர் அந்த இடத்தை இறைமுடிமணிக்கு விட்டிருந்தார் என்பதுதான். அதே காரணத்தாலும், தொழிற் போட்டியாலும் தனக்குக் கிடைக்காத இடம் அவருக்குக் கிடைத்து விட்டதே என்ற எண்ணத்தினாலும் இறைமுடிமணியின் மேலும் அவருக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தது. சர்மாவையும் இறைமுடிமணியையும் அலைக்கழித்துக் கஷ்டப்படுத்துவதற்காகச் சீமாவையருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கத் தயாராயிருந்தார் அகமத் அலிபாய்.

3 thoughts on “தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21

அத்தியாயம் 21 ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26

அத்தியாயம் 26 கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 3தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 3

அத்தியாயம் 3   வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-   “ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும்