Tamil Madhura குழந்தைகள் கதைகள் இலந்தை மரமே சாட்சி – குழந்தைகள் கதை

இலந்தை மரமே சாட்சி – குழந்தைகள் கதை

குழந்தைகளே நீங்கள் இலந்தை மரம் என்ற வகை மரத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா. இல்லை இலந்தை பழம், இலந்தைவடை ஆகியவற்றை வாங்கி உண்டிருக்கிறீர்களா. உங்களுக்குத் தெரியும் என்றால் அதனைப் பற்றி எழுதி tamilin.kathaigal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்.

சரி  அந்த இலந்தை மரத்தை சாட்சியாக வைத்து முன்னேற்றம் அடைந்த ஒரு குடும்பத்தைப் பற்றி இன்று சிறு கதையாகப் பார்ப்போமா…

சின்னாளம்பட்டி என்ற ஊரில் பரமசிவன் என்ற ஒருவன், தனது பெற்றோர், தன் தம்பி சந்தானம் மற்றும் மனைவி காமாட்சி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் குடும்பமே கடினமான உழைப்பாளிகள். ஆண்கள் அனைவரும் காலையிலிருந்து மாலைவரை உழைத்து உணவுப் பொருட்களை வாங்கி வந்து வீட்டில் தருவார்கள். காமாட்சியும் பரமசிவனின் தாயும் சேர்ந்து உணவு தயாரிப்பார்கள். குளித்துவிட்டு வரும் ஆண்கள் மூவரும் அன்றாட நினைவுகளையும் ஊர் கதைகளையும் பேசியபடி உணவு உண்ணுவார்கள்.

கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் பேச்சில் பெண்களை கலந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே சேமிப்பு, முதலீடு போன்ற எந்த ஒரு தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க மாட்டார்கள். அடுப்படியில் சமைக்கும் இவர்களுக்கு என்ன தெரியும் என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள். பரமசிவனின் தாய்க்கு இது பழகிவிட்டிருந்தாலும் காமாட்சிக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

“என்னை வெளியே அனுப்பாமல் ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்கு ஒன்றும் தெரியாது என்பது காலை ஒடித்துவிட்டு ஒட்டப்பந்தயத்தில் கலந்துகொள் என்று சொல்வது போல இருக்கிறது அத்தை” என்று குறை பட்டுக் கொள்வாள்.

“காமாட்சி காலம் வரும். ஒரு நாள் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்” என்பாள்.

“காலம் தானாக வராவிட்டாலும் ஒரு நாள் அவர்களிடம் இதைப் பற்றி சொல்லத்தான் போகிறேன்” என்பாள் காமாட்சி.

சமையல் வேலை நேரம் போக மாமியார் மருமகள் இருவரும் சேர்ந்து வீட்டின் பின்பு தரிசாக கிடந்த நிலத்தை செம்மைப்படுத்தி செடிகளை வளர்த்து வந்தார்கள். இலந்தை மரங்களும் அவற்றில் அடக்கம். புளிப்பும் இனிப்பும் நிறைந்த அந்த மரத்தின் பழங்களை அளவோடு தாங்களும் உண்டு மற்றவர்களுக்கும் தருவார்கள். மிகுந்த பழங்களை உலர்த்தி நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவார்கள்.

மூன்று ஆண்களுக்கும் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற கெட்டபழக்கம் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் சிக்கனமாக செலவு செய்து பணத்தை சேர்த்து வைத்தார்கள். கணிசமான அளவு பணம் சேர்ந்ததும் இதனை என்ன செய்வது என்று யோசித்து தங்கக் காசுகளை வாங்கி வந்தார்கள்.

“இதனை பத்திரமாக ஓரிடத்தில் புதைத்து விடலாம். பின் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்” என்று மூவரும் முடிவு செய்தார்கள். அவர்கள் அடையாளத்திற்காகத் தேர்ந்தெடுத்தது இலந்தை மரத்தை. அதன் கீழே புதைத்து வைத்து விடலாம் என்று தீர்மானித்தனர். பெண்களிடம் கூட கலந்தாலோசிக்காமல் அன்று இரவே புதைத்தும் வைத்தனர்.

மறுநாள் வேலைக்கு சென்று திரும்பியவர்கள் இலந்தை மரத்தின் கீழே புதிய மண்ணைக் கண்டு சந்தேகப்பட்டு தோண்டியபோது யாரோ அவர்கள் புதைத்த தங்கக் காசுகளைத் திருடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உழைப்பு கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறினர்.

சத்தம் கேட்டு ஓடி வந்தாள் காமாட்சி. நடந்ததை கேட்டறிந்தாள். “நீங்கள் புதைத்தபோது யாராவது பார்த்தார்களா”

“இல்லை நீங்களும் தூங்கி விட்டீர்கள், வேறு வெளியாள் யாரும் இல்லை என்று உறுதி செய்த பின்பே புதைத்தோம்”

“புதைத்த இடத்தை எங்களுக்கு காண்பியுங்கள்” என்ற காமாட்சி மாமியாருடன் அங்கு சென்றாள்.

“இலந்தை மரத்தினடியில் புதைத்தோம். யார் திருடினார்கள் என்பதற்கு இந்த மரம்தான் சாட்சி” என்றான் பரமசிவம் வெறுப்புடன்.

“அத்தை இன்று வேறு யாராவது வீட்டிற்கு வந்தார்களா”

“யாரும் இல்லையே” சற்று நேரம் யோசித்தவர் “மாலை நீ பள்ளியில் குழந்தைகளை அழைத்து செல்ல சென்றிருந்தபொழுது இலந்தை பழம் பறிக்க சிலர் வந்தார்கள். அவர்களில் யாரை திருடி என்று சொல்வாய்”

“இலந்தை பழம் பறிக்க வந்தவர்களுக்கு பணம் பற்றி தெரிந்திருக்காது. இலந்தை மரத்தின் வேரினை யாரோ வெட்ட முயற்சிதிருக்கிறார்கள். அவ்வாறு முயற்சித்தபோது பணம் பற்றி தெரியவந்திருக்கும். மாமா நீங்கள் பக்கத்து தெருவில் குடியிருக்கும்  நாட்டு வைத்தியரிடம் யாருக்காவது இலந்தை வேரினை வைத்தியமாகப் பரிந்துரைத்தாரா என்று கேட்டு வாருங்கள்” என்றாள்.

சில நிமிடங்களில் வந்த பெரியவரும் மூன்றாவது தெருவிலிருக்கும் தங்கம்மாளின் வீட்டினருக்கு இலந்தை வேர் வைத்தியத்தை சொன்னதாக உறுதி செய்தார்.

“அப்போ தங்கம்மாதான் திருடியா”

“இதில் என்ன சந்தேகம்.  வேர் வேண்டும் என்று கேட்டால் தரமாட்டோம் என்று பழம் வேண்டும் என்று நானில்லாத சமயம் அத்தையிடம் புளுகியிருக்கிறாள். நம்பி வீட்டினுள் விட்டதும் வேரினை எடுக்க மண்ணைத் தோண்டியவள் பொன்னைக் கண்டதும் எடுத்துக் கொண்டாள். இரவு நேரமாகிவிட்டதால் வீட்டில்தான் எங்காவது மறைத்து வைத்திருப்பாள். உடனே சென்று எடுத்துவாருங்கள். நாளை காலை வரை தள்ளிப்போட்டால் தங்கத்துடன் தங்கம்மாளும் காணாமல் போயிருப்பாள்” என்றாள் காமாட்சி.

அவள் கூறியபடியே பரமசிவனும் சந்தானமும் தங்கம்மாளின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சொந்தமான பொற்காசுகளைக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வந்தனர். மூன்று ஆண்களும் இக்கட்டான சூழ்நிலையில் பதற்றமடையாமல் நிதானமாக யோசித்து தீர்வினைக் கண்டுபிடித்த காமாட்சியை பாராட்டினர்.

“எங்களுக்கு பாராட்டு மட்டும் பத்தாது. இனியாவது எங்களுக்கு உரிய இடத்தை கொடுத்து எங்களையும் நிதி விஷயங்களில் கலந்தாலோசனை செய்யுங்கள்” என்றாள்.

“சரி காமாட்சி, இப்போது சொல் இலந்தை மரத்தை சாட்சியாக வைத்து மீண்டும் இந்தக் காசுகளைப் புதைக்கலாமா?” என்று அனுமதி கேட்டான்.

“காசை மண்ணில் புதைப்பதற்கு பதில் முதலீடு செய்து சிறு தொழில் ஒன்றினைத் தொடங்கலாம் நாம் அனைவரும் உழைக்கலாம். ஒரு இலந்தை விதை மரமாக வளர்ந்து ஆயிரக்கணக்கான கனிகளைத் தருவது போல, இந்த சிறு பணம் பெருகி நம் வாழ்வு சிறக்க உதவும்” என்றாள்.

“ஆமாம் காமாட்சி சொல்வதுதான் சரி. உங்களுக்கு எங்கள் மேல் நம்பிக்கை வரவில்லை  என்றால் இதில் சில காசுகளைக் கடனாகத் தாருங்கள். நாங்கள் இருவரும் அரசாங்க உதவி பெற்று சுயதொழில் தொடங்குகிறோம்” என்றார் அன்னையும்.

“உங்கள் புத்திசாலித்தனத்தை நாங்கள் எப்படி நம்பாமல் இருப்போம். அதற்கு இந்த இலந்தை மரமே சாட்சி ஆயிற்றே. உங்கள் எண்ணப்படியே தொழில் தொடங்கலாம்” என்று ஆண்கள் மூவரும் ஆமோதித்தனர்.

இந்தக் கதையிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

விவசாயியும் தரித்திரக்கடவுளும்விவசாயியும் தரித்திரக்கடவுளும்

தன்னுடைய வறுமையை விரட்ட இந்த விவசாயி செய்த ஐடியாவைப் பாருங்கள் குழந்தைகளே. இதைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெய்வமே முடியாது என்று சொன்னாலும் நம்ம முயற்சி செய்தால் அதற்கு பலன் இல்லாம போகாதுன்னு சொல்லிருக்கார். இனிமே எனக்கு கணக்கே வராது சைன்ஸ்

சூரப்புலி – 4சூரப்புலி – 4

மரக்கூட்டத்தைவிட்டு ஆண் இரலை முன்னால் வந்தது. பெண் இரலை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பின்னால் அடியெடுத்து வைத்தது. அது மரங்களைத் தாண்டிக் குட்டையிலிருக்கும் வெட்ட வெளிக்கு வந்துவிடவில்லை. திடீரென்று ஒரு மலைப்பாம்பு மரத்தின் கிளைகளிலிருந்து அதன் மேல் தாவி, மின்னல்