Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 18

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 18

அத்தியாயம் 18

வைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளூற வருந்தியிருக்கலாம்! ஆனால் அது தண்ணீரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை.

கறக்கிற நிலையிலுள்ள வேறு பசு ஒன்றை அனுப்பி வைக்கும்படி பூமிநாதபுரத்திலுள்ள தெரிந்த மனிதர் ஒருவருக்கு உடனே தகவல் மட்டும் சொல்லி அனுப்பினார்.

அம்மா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டாள். ஊர் வம்பு அவள் காதிலும் விழுந்தது.

“மடத்து மனையைத் தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்கு வாடகை பேசிவிட்டார். இங்கே வீட்டிலேயும் தீட்டுக் கலக்க விட்டார். தெய்வத்துக்கே பொறுக்கலைன்னு ஊர்லே பேசிக்கறாடீ காமு என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லிய பின் பார்வதியை விசாரித்துக் கமலி தான் ஊரில் இல்லாத போது கோபூஜை, துளசி பூஜை எல்லாம் செய்த விவரம் உட்பட அனைத்தும் காமாட்சியம்மாள் தெரிந்து கொண்டு விட்டாள்.

“இவளை யாரு இதெல்லாம் பண்ணச் சொன்னா இப்போ? பல் தேய்க்காமே பெட்காப்பி சாப்பிடற தேசத்திலிருந்து வந்தவள். ஆசார அனுஷ்டானம் தெரியாமே இதெல்லாம் இவள் ஏன் பண்ணணும்? அதனாலே தான் ஆத்துலே இப்படி அசம்பாவிதமெல்லாம் நடக்கிறது. வரவர இந்தாத்துலே கேள்வி முறையே இல்லாமே யார் எதை வேணும்னாப் பண்ணலாம்னு ஆயிடுத்து. தலைமுறை தலைமுறையா இந்தாத்துப் புருஷாளுக்குச் சமமாப் பெண்டுகளும் வைதீகமா இருந்து கோபூஜை, துளசிபூஜை எல்லாம் பண்ணிண்டு வாரோம். வீடு சிரேயஸ்ஸா இருக்குன்னா அந்தப் பூஜா பலனாலேதான் அப்பிடி இருக்கு. இதெல்லாம் பண்ண வெள்ளைக்காரி இவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? வரட்டும்… இதை நான் வெறுமனே விட்டுடப் போறதில்லே. இந்தப் பிராமணன்கிட்டேயே நேருக்கு நேர் கேட்டுடப் போறேன். அவ யாரா இருந்தா நேக்கு என்ன? நேக்கொண்ணும் பயமில்லே…” என்று பார்வதியிடம் இரைந்து கூப்பாடு போட்டாள் காமாட்சி அம்மாள்.

“கமலி காலங்கார்த்தாலே ஸ்நானம் பண்ணிட்டுப் பக்தி சிரத்தையோட மடிசார் வச்சு நீ புடவை கட்டிப்பியே அது மாதிரி கட்டிண்டு அக்கறையோடு தான் எல்லாம் பண்ணினாம்மா” என்று அம்மா மனசு புரியாமல் கமலிக்காகப் பரிந்து கொண்டு பேசினாள் பார்வதி.

“வாயை மூடுடி! போதும். உன் சர்டிபிகேட்டை இங்கே யாரும் கேழ்க்கலே!…” என்று பெண்ணிடம் கோபமாகச் சீறி எரிந்து விழுந்தாள் காமாட்சி அம்மாள்.

அம்மாவின் கோபத்தையோ ஆத்திரத்தையோ பார்வதியாலேயே ஏற்க முடியவில்லை. அம்மா கமலியின் மேல் ஒரு காரணமும் இல்லாமல் அநாவசியமாகக் கோபப்படுகிறாள் என்றே பார்வதிக்குத் தோன்றியது.

பத்து பதினைந்து நாட்களிலேயே வாடியிருந்த பகுதி தவிர மறுபகுதியில் துளசி பொல்லென்று புதுத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கிவிட்டது. பூமிநாதபுரத்திலிருந்து வந்த புதுப் பசுவும் வீட்டில் ஏற்கனவே எஞ்சியிருந்த கன்றுகளுமாகக் கூரையோ கீற்றோ இல்லாமல் ஆஸ்பெஸ்டாஸில் போடப்பட்டிருந்த புது மாட்டுக் கொட்டத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் ஊர் வம்பிலும் அரட்டைகளிலும் திண்ணைப் பேச்சிலும் இன்னும் கமலியின் தலைதான் உருண்டது. அவள் தான் வம்புக்கு இலக்காக இருந்தாள்.

“பரம வைதீகரான விசுவேசுவர சர்மா வீட்டிலே துளசிச் செடி பட்டுப் போனதற்கும் பசுமாடு எரிந்து போனதற்கும் கமலிதான் காரணம்” – என்று வெளியே இருப்பவர்கள் கண்மூடித்தனமாகப் பேசியது போதாதென்று வீட்டுக்குள்ளேயே காமாட்சியம்மாள் வெளிப்படையாகவும், சில சமயங்களில் ஜாடைமாடையாகவும் இப்படிப் பேசத் தொடங்கியிருந்தாள். சர்மாவிடம் அவள் சண்டை பிடித்துப் பார்த்தாள். அவர் அதற்கு அசையவில்லை. கமலியின் பவ்யம், பணிவு, மரியாதை, காரண காரியம் கேட்காமலே இந்து மதத்திலும், இந்தியக் கலாச்சாரத்திலும் உடனே விரைந்து கரையத் துடிக்கும் அவள் மனநிலை – எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தன. தங்களுக்கு ஒத்து வராததை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட்டு எஞ்சியவற்றுக்கும் தட்டிக் கழிக்கும் நோக்குடன் காரண காரியம் கேட்டுக் கொண்டு தயங்கி நிற்கிற கலாசாரத்தை இழக்கத் தயாரான இந்தியர்களிடையே விஞ்ஞானத்திலும் ஞானத்திலும் மிக வளர்ந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் ஓர் இளம் பெண் நடந்து கொள்ளும் அடக்கமும் நளினமும் அவரை அவள் மேல் மரியாதை கொள்ளச் செய்திருந்தன.

கமலி மடிசார் வைத்துக் கொண்டு துளசி பூஜை, கோபூஜை செய்ததையும் தரையில் உட்கார்ந்து இலை போட்டுச் சாப்பிடப் பழகிக் கொண்டதையும் துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரம் சொல்வதையும், காமுவைப் போலவோ ஊராரைப் போலவோ, வேடிக்கையாகவோ வம்பு பேசும் விஷயமாகவோ சர்மா கவனிக்கவில்லை. அதிலுள்ள அந்தரங்க சுத்தியை மதிக்கத் தெரியாதவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை நாகரிக மற்றவர்களாக எண்ண ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.

தினசரி காலையில் கமலி யோகாசனங்கள் செய்கிறாள் என்பது அவருக்கே தெரியும். டென்னிஸ் விளையாடும் போது பெண்கள் அணிவது போன்ற ஒரு வகை உடையில்… அரை டிராயர், பனியனோடு அவள், பத்மாசனமோ, சிரசாசனமோ போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பாருவைத் தேடி மாடிப்படியேறிய காமாட்சியம்மாள் அதைப் பார்த்து விட்டாள். உடனே எதோ பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்டதைப் போல் பதற்றத்தோடு கீழே இறங்கிய காமாட்சியம்மாள் கொல்லையில் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்கொய்து கொண்டிருந்த சர்மாவிடம் போய், “இதோ பாருங்கோ! இதெல்லாம் உங்களுக்கே நன்னா இருக்கா? சின்ன வயசுப் பொம்மனாட்டி மாடியிலே நட்ட நடுக்கூடத்திலே அரை நிஜாரைப் போட்டுண்டு தொடை தெரியறாப்பல மார்ச் சட்டையோட தலைகீழா நின்னுண்டிருக்காளே?” என்று இரைந்தாள். சர்மா புன்முறுவல் பூத்தபடி, “கமலி யோகாசனம் போடறா. உனக்குப் பிடிக்கலேன்னா அதையெல்லாம் நீ ஏன் போய்ப் பார்க்கணும்?”… என்று பதிலுக்குக் கேட்டார்.

சங்கரமங்கலத்தில் “தாசிமார் தெரு” என்றொரு பழைய பகுதி இருந்தது. அந்தத் தெருவில் அந்த நாளில் சிவராஜ நட்டுவனார் என்றொரு பிரபலமான நடன ஆசிரியர் இருந்தார். கமலி பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் கற்க ஆவல் காட்டியதன் காரணமாக அந்தத் தெருவைச் சேர்ந்த ஒரு பழைய பாகவதரையும், சிவராஜ நட்டுவனாரையும் ஏற்பாடு செய்திருந்தான் ரவி. வாரத்தின் முதல் மூன்று நாட்கள் சங்கீதத்தையும் மற்ற மூன்று நாள் நாட்டியத்தையும் மீதமுள்ள ஒரு நாளில் சர்மாவிடம் சமஸ்கிருத மொழி நுணுக்கங்களையும் கற்று வந்தாள் கமலி. முதலில் பாகவதரும், நட்டுவனாரும் சர்மாவின் வீட்டு மாடியிலேயே கமலிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

“அவளுக்கு ஆத்திரம்னா அங்கே தேடிப் போய்க் கத்துக்கட்டும். நாட்டியம், சங்கீதம்னு வழக்கமில்லாத வழக்கமாக் கண்ட மனுஷாளை இந்தாத்துக்கு உள்ளே விட ஆரம்பிச்சா அப்புறம் ஊர் சிரியாச் சிரிக்கும்” – என்று காமாட்சியம்மாள் சண்டைக்கு வரவே நட்டுவனாரும், பாகவதரும் வீட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குக் கமலி போவதென்று ஏற்பாடாயிற்று.

சர்மாவும், ரவியும் ஒருநாள் மாலை பேசிக்கொண்டே ஆற்றங்கரைக்குப் போகும்போது தற்செயலாக ஒரு விஷயம் சர்மாவிடமிருந்து ரவிக்குத் தெரியவந்தது. சர்மாவே முன் வந்து அதை அவனிடம் தெரிவித்தார்.

“இந்த ஊர் ரொம்பப் பொல்லாதது ரவி! திடீர்னு ஸ்ரீ மடத்திலேருந்து தந்தி குடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாளே, எதுக்குன்னு உனக்குத் தெரியுமா? நீயா இதுவரை என்கிட்டக் கேழ்க்கலைன்னாலும் நானா இப்போ சொல்றேன். நீயும் கமலியும் இங்கே வந்து தங்கியிருக்கிறதைப் பத்தியும் தேசிகாமணிக்கு மடத்துமனையை வாடகைக்கு விட்டிருக்கிறதைப் பத்தியும் மொட்டைக் கடிதாசும் தந்தியுமா எழுதிப் போட்டு என்னை உடனே ஸ்ரீமடம் பொறுப்பிலேருந்து வெளியேத்தணும்னு புகார் பண்ணியிருக்கா. நான் வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சுண்டு அவளுக்கு முட்டை மாமிசம்லாம் சமைச்சுப் போடறேனாம். நாஸ்திகனை மடத்துமனையிலே வாடகைக்கு வச்சு அக்கிரஹாரத்து மனுஷாளுக்குத் தர்ம சங்கடங்களை உண்டு பண்ணியிருக்கிறேனாம். எல்லாம் அந்தச் சீமாவையர் வேலை. ஸ்ரீ மடத்து நிலங்களையும் மனையையும் அவர் சொன்ன படி அவர் சொன்ன மனுசாளுக்கு விடலேங்கிற எரிச்சல்லே இத்தனையையும் அவர் பண்ணியிருக்கார். நல்ல வேளையா ஸ்ரீ மடம் ஹெட்டாபீஸ் மானேஜர் இதையொண்ணும் நம்பலை. ஆசார்யாளுக்கும் என்மேலே இருக்கிற அன்பும், அபிமானமும் கொஞ்சம்கூடக் குறையலே. நான் ஆசார்யாளைப் பார்க்கப் போயிருந்தப்போ யாரோ அர்ஜெண்டீனவிலேருந்து ஒரு லேடி நம்ம கமலி மாதிரின்னு வச்சுக்கோயேன்… ருக்வேதத்தைப் பத்திப் பெரியவா கிட்டப் பேசிண்டிருந்தா.

‘மனசாட்சிக்குத் துரோகம் பண்ணாமே நியாயமாகவும் அந்தரங்க சுத்தியோடவும் ஸ்ரீ மடத்துக் காரியங்களை அவ்விடத்து ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டுப் பண்ணிண்டிருக்கேன். என்மேலே துளி சந்தேகமிருந்தாலும் உடனே நான் இதை விட்டுடறதுக்கும் தயாராயிருக்கேன். ஸ்ரீ மடம் சம்பந்தப்பட்ட கைங்கரியமாச்சேன்னுதான் இதுக்கு நான் தலைக்குடுத்துண்டு இருக்கேனே தவிர லாபம் பார்த்தோ பிரயாசைக்குப் பலன் எதிர்பார்த்தோ இதை நான் ஒத்துக்கல்லே’ – என்று தீர்மானமா நான் எடுத்துச் சொன்னப்புறம் தான் நிர்வாகஸ்தருக்கும் ஆசார்யாளுக்கும் நிஜம் புரிந்தது.

‘உம்மமேலே பூர்ண நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கு. நீரே தொடர்ந்து ஸ்ரீமடத்துக் காரியங்களைக் கவனிக்கணும்கிறது தான் இவ்விடத்து ஆக்ஞை. ஏதோ இத்தனை பேர் எழுதியிருக்காளேன்னு கூப்பிட்டு விசாரிச்சதைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்’னா. அப்புறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. காமுவோட ஆசார்யாளைத் தரிசிக்க போனபோது நான் இந்த விஷயமெல்லாம் பேசலை. மறுபடி தனியாப் போய்ப் பேசினேனாக்கும். அதுனாலே உங்கம்மாவுக்குக் கூட இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சா வேற வெனையே வேண்டாம். ஏற்கனவே கமலியைக் கரிச்சுக் கொட்டறவளுக்கு இன்னும் வேகம் வந்துடும்….”

இதைக் கேட்ட பின்புதான் ரவிக்கு ஓர் உண்மை புரிந்தது. தான் கமலியோடு வந்து தங்கியிருப்பதால் வீட்டுக்கும் அப்பாவுக்கும் புதிதாகத் தோன்றியிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக அவன் உணர முடிந்தது.

“ஏன் தான் இப்படி வீண் வம்பளப்பிலே சந்தோஷப்படறாளோ? நம்ம மாதிரி மனுஷாளை விடத் தீவிரமான வெஜிடேரியன்ஸ் இப்போ ஐரோப்பிய சமூகத்திலேதான் புதுசா நெறைய உண்டாயிண்டிருக்கா. ‘வெஜிடேரியனிஸம்’ ஒரு பெரிய ‘கல்ட்’ ஆக அங்கே வளர்ந்துண்டிருக்கு. எங்க பழக்கத்துக்கப்புறம் கமலி ஏறக்குறையத் தீவிர வெஜிடேரியனாகவே மாறியாச்சு. வெஜிடேரியன் உணவு வகைகளுக்கு ‘ஹெல்த் ஃபுட்ஸ்’னு பேர் குடுத்துக் கொண்டாடறவா உலகமெல்லாம் தோணிண்டிருக்கற காலம்ப்பா இது! நாகரிக வளர்ச்சியிலே எங்கெல்லாமோ ஒரு சுற்றுச் சுற்றி விட்டு ‘வெஜிடேரியனிஸம்’ கிற குழப்பமில்லாத எல்லைக்கு வந்து மறுபடி நிற்க மனிதர்கள் ஆசைப்படற காலத்திலே ஏன் தான் இந்த மாதிரி வம்பு பேசிச் சந்தோஷப்படறாளோ?” என்றான் ரவி.

“தப்பா நினைச்சுக்காதே. விஷயங்கள் உனக்குத் தெரிஞ்சிருக்கட்டும்னுதான் சொன்னேன். இதெல்லாம் பார்த்து நான் அசந்துடலே ரவி! ரொம்பத் தெளிவாயிருக்கேன். கமலியை உன்னைவிட நான் நன்னாப் புரிஞ்சிண்டிருக்கேன். முந்தாநாள் எங்கிட்ட ஸான்ஸ்கிரிட் படிக்கறப்போ, ‘வாகர்த்தாவிவ’ங்கிற ரகுவம்ச ஸ்லோகத்தையும் ‘ஜோதி ஸ்வரூபமாகிய சூரியனுக்குச் சிறிய தீபத்தினால் ஆரத்தி காட்டுகிற மாதிரியும், சந்திர காந்தக்கல்லானது மிகப்பெரிய சந்திரனுக்கே அர்க்கிய தீர்த்தம் விடுகிற மாதிரியும், சமுத்திரத்திற்கு அதன் நீரிலேயே ஒரு பகுதியை எடுத்து நீராட்டித் திருப்திப் படுத்துகிற மாதிரியும், நீ அளித்த சொற்களாலேயே உன்னை வழிபடுகிறேன்’- என்று சௌந்தரிய லஹரியின் நிறைவில் ஆதிசங்கரர் கூறும் கருத்தையும் நவீன மொழியியல் ஆராய்ச்சியோடு சம்பந்தப்படுத்திக் கமலி விளக்கினாள். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். நான் அவளுக்குச் சொல்லிக் குடுத்துண்டிருக்கேனா, அல்லது அவள் எனக்குச் சொல்லிக் குடுத்திண்டிருக்காளான்னேசந்தேகமாயிடுத்துடா ரவி.

“உலக மொழிகள் அனைத்தும் ஓர் அடிப்படையிலானவை என்பதை விளக்கற சமயத்திலே – ‘சொல்லும் பொருளும் போல (அர்த்தநாரீசுவரனாக) இணைத்திருக்கிற உலகின் தாயும் தந்தையுமான பார்வதி, பரமேசுவரர்களாகிய உங்களைச் சொல்லினாலும் பொருளாலும் பயனை அடைவதற்காக நான் வணங்குகிறேன்’ – என்கிற ரகுவம்ச ஸ்லோகத்தைச் சொல்லிக் குடுத்தேன் நான். அப்புறம் அவளா அதைப் போல வர ஒவ்வொரு ஸ்லோகத்தையும் இணைச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாப்பா. ‘கம்பேரிட்டிவ் ஸ்ட்டீ’ என்பது வளர்ந்த நாடுகளில் தவிர்க்க முடியாத ஒரு அறிவுச் சாதனம் ஆகிவிட்டது.”

“ரொம்ப ஆழமான சிந்தனைடா அவளுக்கு!”

இதைக் கேட்டு ரவிக்குப் பெருமையாயிருந்தது.

அந்த வார இறுதியில் அப்பாவின் அனுமதியோடு பக்கத்துக் கிராமத்தில் உறவினர் வகையில் நடைபெற்ற வைதிகமுறையிலான நான்கு நாள் கல்யாணம் ஒன்றிற்குக் கமலியையும் அழைத்துக் கொண்டு போனான் ரவி. ஹோமம், ஔபாசனம், காசி யாத்திரை, நலுங்கு, ஊஞ்சல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், சப்தபதி என்று ஒவ்வொரு சடங்காக பிலிம் சுருளில் அடக்கி எடுத்துக் கொள்வதில் கமலி ஆவல் காட்டினாள். சடங்குகளின் பொருளையும், உட்பொருளையும் ரவி அவளுக்கு விளக்கினான். நலுங்கு ஊஞ்சல் ஆகியவற்றைக் கமலி மிகவும் இரசித்தாள். பழைய தலைமுறைப் பெண்கள் அருகிலிருந்து பாடிய நலுங்குப் பாட்டுக்களையும், ஊஞ்சற் பாட்டுக்களையும் கூட ரெக்கார்டரில் பதிவு செய்து கொண்டாள். ‘டிரெடிஷனல் இண்டியன் மேரேஜ்’ மிகவும் சுவாரஸ்யமாகவும் கலர் ஃபுல்லாகவும் மணமக்கள் இருவரின் ஆவல்களையும் மிகுவிப்பதாகவும் இருப்பதாய்க் கமலி கூறினாள்.

நலுங்கில் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவர் தலையில் மற்றொருவர் அப்பளம் உடைத்ததைச் சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து இரசித்தாள் கமலி. அந்தத் திருமணம் நிறைந்தபின் ஐந்தாம் நாள் ஊர் திரும்பிய போது ரவியிடம் விநோதமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தாள் கமலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 12தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 12

  அத்தியாயம் 12   சர்மா இறைமுடிமணியை நோக்கிக் கூறினார்: “பேராசை, சூதுவாது, மத்தவங்களை ஏமாத்திச் சம்பாதிக்கிறது இதெல்லாம் முன்னே டவுன் சைடிலே தான் யதேஷ்டமா இருந்தது! இப்போ நம்பளுது மாதிரிச் சின்னச் சின்ன கிராமங்கள்ளேயும் அதெல்லாம் வந்தாச்சு. ஏமாத்திச் சம்பாதிக்கிறது

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 17தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 17

அத்தியாயம் 17 கமலி தன் மனத்தின் உருக்கம் தெரியும் குரலில் வசந்தியிடம் சொன்னாள் – “உங்களுடைய பழைய கோவில்கள் கலைச் சுரங்கங்களாக இருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டு மக்கள் இப்போது சினிமாத் தியேட்டர்கள் என்னும் புதிய ‘கோவில்களின்’ வாசலில் போய் பயபக்தியோடு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21

அத்தியாயம் 21 ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து