Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04

இதயம் தழுவும் உறவே – 04

மலர்களோடு பனித்துகள்கள் உறவாடும் அழகான அதிகாலை நேரம். தொடர்ந்து கவியரசனின் அறைக்கதவை தட்டியபடி இருந்தாள் வித்யா. அதில் முதலில் உறக்கம் கலைந்தது அவன் தான்.
கதவு தட்டலில் பதில் இல்லாது போக கைப்பேசியில் வித்யா அழைப்பு விடுத்தாள். ‘அஞ்சு மணி தானே ஆச்சு!’ என சலிப்பாக எண்ணியவன், கைப்பேசியின் அழைப்பை ஏற்க, மீனாட்சி பேசினார்.
“தம்பி யாரும் எழறதுக்கு முன்ன நீங்க ரெண்டு பேரும் குளிச்சுட்டு வந்துடனும்” என மகனை எழுப்பிய சங்கடத்தில் மூத்தவள் கூற, நேற்றிரவே யசோதாவிடம் கூறி அனுப்பியது தான். இரவு நடந்த களேபரத்தில் அவள் மறந்து விட்டிருந்தாள்.
அன்னையின் சங்கடம் புரிய, “சரிங்க மா” என்றவன் கூடவே, “சீக்கிரம் வந்துடறோம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான். அயர்ந்து உறங்கும் மனைவி மீது எல்லையற்ற நேசம் பெருகியது. அவள் முகத்தில் தவழும் முடியினை ஒதுக்கி, தலை வருடி, மெலிதாக இதழ் ஒற்றி சின்ன சிரிப்புடனும், மனம் நிறைய மகிழ்வுடனும் அவளை விட்டு விலகி எழுந்தான்.
தான் குளித்த பிறகு அவளை எழுப்பிக் கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் அவன் குளியலறைக்கு செல்ல, இத்தனை நேரமும் கேட்ட சிறுசிறு சப்தத்தில் மெல்ல துயில் களைந்தாள் யசோதா. எதையுமே அவள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக கணவனின் நெருக்கம். படித்தவன், தன் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பான், எதுவுமே நடக்கப்போவதில்லை என்று அத்தனை பயத்திலும் அவள் உருப்போட்டு வந்திருக்க,
அனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டான். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது இருக்கட்டும், அவன் தான் அவளது உணர்வுகளை, எண்ணங்களை, விருப்பங்களை தெரிந்து கொள்ள கூட இல்லையே! மனம் ஒருமாதிரி கலங்கி தவித்தது.
தன்னருகில் அவன் இல்லாததாலும், குளியலறை சப்தத்தாலும் அவன் குளிப்பது உறுதிபட, அமைதியாக எழுந்து தன்னை சீர்படுத்திக் கொண்டாள். அவன் வெளியேறிய பிறகு அவனை நிமிர்ந்து கூட பாராமல் மாற்றுடையோடு அவள் குளியலறையினுள் புக, அவளது செய்கை அவனுக்கு வெட்கமாகத்தான் தோன்றியது.
அவள் வருவதற்குள் அறையை சீர் செய்து விட்டு, தானும் தயாராகி அறையினில் இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருக்க, குளியலறையில் புடவையை மாற்றுவது சிரமம் என்பதால் ஒரு சுடிதார் அணிந்து வெளியே வந்திருந்தாள் யசோதா.
“புடவை கட்டலையா?” என கவியரசன் கேட்க, மறுப்பாய் தலையை மட்டும் அசைத்தாள். ‘என்னடா இந்த பட்டாசு ஒரே நாளுல சாந்த சொரூபிணி ஆகிடுவா போல!’ என மனதோடு எண்ணியவன் புன்னகைத்தபடி அவளை நோக்கி செல்ல, அதற்குள் மீண்டும் வித்யாவால் கதவு தட்டப்பட்டது.
அவன் தன்னை நோக்கி வந்ததில் கலவரமானவள், கதவு தட்டும் சப்தம் கேட்கவும், வேகமாக சென்று கதவை திறந்திருந்தாள். அவளது ஓட்டத்தில் அவனுக்கு புன்னகை தான் வந்தது. சிறு சிரிப்புடன் அவளை பின்தொடர்ந்தான்.
இருவரையும் கடவுளை நமஸ்கரிக்கும்படி மீனாட்சி கூற, யசோதாவும் விளக்கேற்றி தன் கணவனுடன் சேர்ந்து கடவுளை பிரார்த்தித்தாள். மனம் முழுவதும் அலைப்புறுதல். ஒருவித பதற்றமும். அது நேற்றைய நிகழ்வுகளினாலா இல்லை புது இடத்தில் ஒன்ற வேண்டியது குறித்தா என அவளே அறியாள்.
மீனாட்சி யசோதாவிடம் காஃபியைத் தந்து கவியரசனிடம் தரசொன்னார். இனி அவனுடைய பொறுப்பு உன்னுடையது என்ற அர்த்தம் பிறழ்ந்து வந்த செய்கை. உரிமையோடும், காதலோடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதை, கடமையாக கூட செய்ய அவளுக்கு மனமில்லை.
வெறுமனே தலையசைப்புடன் வாங்கி சென்று அவனிடம் தந்துவிட்டு வந்தவளிடம், “புடவை கட்ட தெரியாதா யசோ. நான் வேணும்ன்னா கட்டி விடவா? நேத்து கல்யாணத்துக்கு வராதவங்க இன்னைக்கு வீட்டுக்கு வந்து பார்ப்பாங்க” என்று சின்ன சிரிப்புடன் வித்யா கேட்க, ‘ஏன் புடவை கட்டவில்லை?’ என்னும் அவளுடைய அதிகாரமான உள்ளர்த்தம் அழகாய் பூசி மொழுக்கப்பட்டது. அவளின் குணம் இதுதான். மற்றவர் முன்பு வேண்டுமென்றே தவறினை அழுத்தி சுட்டிக்காட்டி பேசி விடுவாள். நாசூக்காக தோன்றினாலும், நீ இதைக்கூட செய்ய மாட்டாயா? எனும் படியாகத்தான் பெரும்பாலான நேரங்களில் அவளது பேச்சு இருக்கும்.
ஆனால், அங்கிருந்த மற்ற பெண்கள் இருவருக்குமே அவளது உள்ளர்த்தம் புரியவில்லை. மீனாட்சியும் யசோதா நேற்று மாலை அவளே தானே கட்டிக்கொண்டாள் என்று யோசனையோடு பார்க்க, என்ன சொல்வது என யோசித்த யசோதா, “அது மணி ஆறு தானேக்கா. அதான் அப்பறமா கட்டிக்கலாம்ன்னு… நானே கட்டிப்பேன் கா. இதோ இப்ப வந்துடறேன்” என தயக்கமாக கூறியபடி அறைக்குள் சென்று புடவை மாற்றி வந்தாள். என்னவோ புடவையில் மாறியபிறகு கணவனின் பார்வை அவளையே பின்தொடர்வது போல் ஒரு மாயை. அது அவளுக்குள் மெல்லிய சிலிர்ப்பையும், பதற்றத்தையும் தந்தது. அவளால் அவனை நிமிர்ந்தும் பார்க்க இயலவில்லை.
அதன்பிறகு, திருமணத்திற்கு வர முடியாதவர்கள் வந்து செல்ல என நேரம் கரைய… அந்த நேரங்கள் மட்டும் அவனோடு இருந்தவள் மீதி நேரங்களில் மீனாட்சியே கதியென சுற்றினாள். கவியரசன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் செய்கை சுவாரஸ்யத்தை தந்தது. ‘எத்தனை நேரம் என்னை தவிர்க்க முடியும்?’ என்று நேற்றுப்போல் இன்றும் எண்ணிக் கொண்டான்.
யசோதவிற்கு இரவு நெருங்க நெருங்க பதற்றம் ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது. வித்யா தன் மகன் ஆதித்யாவை உறங்க வைக்க வேண்டும் என்று, உணவு உண்டதுமே அறைக்கு சென்று விட்டாள். இவள் மீனாட்சியோடே ஒட்டிக்கொண்டு அலைந்தாள்.
“இதெல்லாம் நான் ஒதுக்கி வெச்சுக்கறேன் மா. நீ போய் படுத்துக்க” என்று மீனாட்சி கூற, அவள் போக மறுத்து வேலைகளுக்கு உதவியாய் இருந்தாள். எல்லா வேலைகளும் ஓரளவு முடிந்திருந்தது.
தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த கவியரசனுக்கும் சலிப்புத் தட்டவே, இன்னும் என்ன செய்கிறாள் என்பதை அறிய நீரைக் குடிக்கும் பாவனையில் சமயலறை நோக்கி வந்தான்.
அப்பொழுது பார்த்து, “அத்தை இன்னைக்கு நா… நான் உங்களோட தூங்கிக்கவா?” என தயங்கி தயங்கி மென்குரலில் யசோதா கேட்க, மீனாட்சிக்கு பக்கென்று இருந்தது. ‘என்ன கேட்கிறாள் இந்த பெண்?’ என்பதாக விதிர்த்து போனார்.
பின்னே, திருமணமான மறுநாள் புதுமணப்பெண் பேசும் பேச்சா இது? ஆனால், உண்மையில் யசோதாவும் யோசிக்கும் மனநிலையில் இல்லை. யோசித்திருந்தால் இப்படி வார்த்தைகளை விட்டிருக்க மாட்டாள். அவளது அதீத பதற்றம் மூளையை மழுங்கடித்து விட்டது. கெட்ட நேரமும் சேர்ந்ததோ என்னவோ? அவள் பேசியதை கவியரசன் கேட்டு விட்டான்.
இத்தனை நேரமாய் இருந்த மோனநிலை கவியரசனுக்கு நொடியில் அறுந்தது. தாயிடம் அவ்வாறு சொல்லியது குறித்து அவனுக்கு எல்லையற்ற கோபம் கிளர்ந்தது.
இருந்தும் தாயின் மனநிலையை கருத்தில் கொண்டு, “நான் வந்ததை பாத்துட்டு இப்படி அம்மாகிட்ட நீ பேசுனா, நான் ஏமாந்து போயிடுவேன்னு நினைச்சியா யசோ?” என சிறு புன்னகையோடு கூறியபடி மனைவியிடம் நெருங்கியவன்,
தாயை நோக்கி, “உங்க மருமக அமைதின்னு சொன்னீங்க. பாத்தீங்கள்ல என்னை எப்படி சீண்டி பாக்கிறான்னு?” என புன்னகை மாறா முகத்துடன் கவியரசன் கூற, மீனாட்சியின் குழப்பம் முழுவதும் தீரவில்லை என்றாலும், சற்றே தெளிந்தது.
“நீங்க போய் மாத்திரை சாப்பிட்டு தூங்குங்க மா. அவ எடுத்து வெச்சுப்பா” என தாயிடம் கூறியவன், “யசோ அம்மாக்கு இந்த விளையாட்டெல்லாம் புரியாது. அவங்ககிட்ட இப்படி எல்லாம் விளையாடாத! பயந்துக்க போறாங்க” என்றான் மனைவியிடம்.
அவன் என்னவோ புன்னகை மாறாமல் தான் பேசிக் கொண்டிருந்தான். அவளுக்கு தான் கலவரமானது. ‘என்ன வருமோ?’ என்னும் பயத்தில், பதற்றத்தில் இருந்தாள்.
ஏற்கனவே அவள் பேசியதும் உடனே மீனாட்சியின் முகத்தில் வந்த மாற்றத்தை கண்டு பயந்து தான் போயிருந்தாள். இப்பொழுது மகன் வந்து இத்தனை சமாதானம் செய்தும் தெளிவில்லாமல் இருப்பவரைப் பார்த்து,
“சாரி அத்தை. அவரை சீண்ட தான் அப்படி விளையாடுனேன். தப்பா எடுத்துக்காதீங்க” என்று தயக்கமாக கூறினாள். பெரியவளும் வாஞ்சையோடு அவளின் கன்னம் வருடி, “என்ன புள்ளைங்களோ? இப்படி எல்லாமுமா விளையாடறது?” என புன்னகைத்து விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்.
“எல்லாம் எடுத்து வெச்சுட்டு வா” பற்களுக்கிடையே வார்த்தைகள் கடிப்பட்டு வெளிவர, அவளுக்குள் நடுக்கம் வந்தது.
காலையிலிருந்து அவளை ரசித்த கணவனின் முகம், இப்பொழுது அவனிடம் இல்லை. பயப்பந்து உருள, அசைய மறந்து நின்று விட்டாள்.
எந்த அசைவுமின்றி எத்தனை நேரத்தை விரையமாக்கினாளோ, மீண்டும் படுக்கையறை வாசலில் மார்பின் குறுக்கே கரங்களை கட்டி நின்றபடி அவளை துளைத்தெடுக்கும் பார்வையால் அவன் வதைக்க, அவ்வளவு தான் வேகமாக அனைத்தையும் ஒதுக்கி வைத்து, விளக்கை அணைத்துவிட்டு… அதே வேகத்துடன் அறைக்கு வந்து விட்டாள். மனம் படபடக்க, உடல் வியர்க்க தொடங்கியது பூகம்பத்தை எதிர்பார்த்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 36ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 36

36 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அன்று மாலை வாசு ஆதர்ஷின் வீட்டிற்கு வந்துவிட அவர்கள் இருவரும் அறைக்கு சென்றனர். வாசு விசாரிக்க காலை நடந்தவற்றை அவனிடம் கூறினான் ஆதர்ஷ். இரு ரகு வரேன்னு சொல்லிருக்கான். அவனும் வந்தபிறகு என்ன பண்ணனும்னு

வார்த்தை தவறிவிட்டாய் – 12வார்த்தை தவறிவிட்டாய் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல. திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது