Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03

இதயம் தழுவும் உறவே – 03

கவியரசன் சில நொடிகள் யசோதாவின் விழிகளின் மௌனத்தில் லயித்தவன், “இடம், பொருள் மறந்து இப்படி கண்ணை கூட சிமிட்டாம பார்த்தா எப்படி?” என தனது புருவத்தை உயர்த்தி அவளை சீண்டும் விதமாக கேள்வியை எழுப்ப, அந்த சீண்டல் நன்றாகவே வேலை செய்தது.

தனது பார்வையை மாற்றி சற்று முறைத்து நின்றாள். கூடவே சற்று கோபமான குரலில், “பாருங்க, எனக்கு இப்ப கல்யாணம் செய்யும் எண்ணமே துளிகூட இல்லை. இந்த பேச்சு வார்த்தையை உடனே நிறுத்திடுங்க” என்று அழுத்தமாக, ஆணையிடும் தொனியில் யசோதா கூற,
“ஏன்?” என்றான் கவியரசன் கேள்வியாக. அவனது முகத்தில் இருந்த விளையாட்டுத்தனமும், புன்னகையும் அவளது குரலின் பேதத்தில் மறைந்திருந்தது.
“இல்லை. இது வேணாம். என் குடும்பம் கஷ்டப்படும் போது… நான் மட்டும் சொகுசா…” என அவன் முகம் பார்க்காது, எங்கோ பார்த்தபடி சொல்லும்போதே அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. கொஞ்சம் குற்றவுணர்வாய், கையறு நிலையில் இருப்பது போல பரிதவித்து போனாள்.
அவளின் நிலையை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், இந்த திருமணம் ஒருவகையில் இவள் குடும்பத்திற்கு உதவியாகத்தானே இருக்கும்? இனி இவள் பொறுப்பு அவனுடையதாகிவிடும். அவனாலும் இவள் குடும்பத்திற்கு அவர்களின் கௌரவம் பாதிக்காதா வண்ணம் சற்று உரிமையோடே உதவி புரிய முடியும் என்னும்பொழுது இவளுடைய வேதனையே அவசியமற்றது தானே? அதை அவளுக்கு உணர்த்தும் வகையில், “ம்ப்ச்… நீயாவா என்னை தேடி வந்து கட்டிக்கிற. உன் குடும்பத்தோட தேர்வு தானே நான்?” என்றான் அவளது வருத்தம் பிடிக்காமல்.
இப்பொழுது அவன் முகம் பார்த்தாள். அவன் விழிகளை படிக்க முயன்றாள். அவன் சொல்வது உண்மை தான், இது அவளது குடும்பத்தினரின் தேர்வு தான்! அதற்காக மூழ்குகிற கப்பலில் ஓடுகிற எலியைப் போன்ற செயலை அவளால் செய்ய இயலாதே!
அவள் எண்ணவோட்டத்தை சரியாக புரிந்து கொண்டானோ என்னவோ, “நீ ஏன் அவங்களை எல்லாம் பிரச்சனையில் விட்டுட்டு நீ மட்டும் தப்பிக்கிறதா நினைக்கிற. நீ இந்த பிரச்சனையில் இருந்து வெளிய வரதே அவங்களுக்கு ஒரு உதவி தானே! உங்க அம்மாவோட பாரமும் குறையும்” என்னவோ அவளை சமாதானம் செய்யும் எண்ணத்தோடு தான் பேசத் தொடங்கினான். ஆனால், ஏற்கனவே இந்த திருமணத்தை நிறுத்த முடியாத கோபத்தில், இயலாமையில் உழன்று கொண்டிருந்தவளுக்கு அது வேறு விதமாக பட்டுவிட்டது.
“என்ன சொல்லறீங்க நான் எங்க அம்மாவுக்கு பாரமா? அப்படி ஒருநாளும் இருந்துட கூடாதுன்னு தான் படிப்பை பாதியில நிறுத்திட்டு வேலையில சேர்ந்திருக்கேன்” என்றாள் கோபமாக. முகம் சிவந்திருந்தது. அதற்கு எதிராய் விழிகள் சற்று கலங்கி இருந்தது. ‘எப்படி இவன் இப்படி பேசலாம்?’ என்று சினம் கொண்டாள்.
“நான் அப்படி சொல்ல வரலை…” என அவன் விளக்கம் தர வர, ஒரு கையை அவன் முகத்திற்கு முன்பு நீட்டி தடுத்தவள், “எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை” என்றாள் அழுத்தமான குரலில். இதற்கு மேல் பேசாதே என்னும் உத்தரவு!
முகத்தினில் அடித்தாற் போன்ற அவளது செய்கையில், சீண்டப்பெற்றவனோ அவளை கோபமாக பார்க்க, அவள் அதை துளியும் கண்டு கொள்ளவில்லை. அத்தோடு, “இந்த கல்யாணம் வேண்டாம். அப்பறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என அவள் எச்சரிக்கை விடுக்க,
“உனக்கு வேண்டாம்ன்னா நீ தான் நிறுத்தணும். எனக்கு இந்த கல்யாணம் வேணும். ஆக, நான் நிறுத்தப் போறதில்லை. கல்யாணத்துக்கு தயாராகிக்க” என அவனும் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்தான். மறைமுகமாய் இந்த திருமணத்தில் எனக்கு முழு சம்மதம் என்பதையும் கூறிவிட்டிருந்தான்.
அவனுடைய தாயார் இந்த திருமண பேச்சு வார்த்தை தொடங்கிய பிறகு தான் சற்று நல்ல மனநிலையில் இருக்கிறார். அவனுக்கும் அவளை மிகவும் பிடித்திருந்தது. தன் நலம் பார்க்காமல், தன் குடும்பத்திற்காக பார்க்கும் பெண், அவளை பிடிக்காமல் போகுமா? அவளது குணத்தில் எப்பொழுதோ வீழ்ந்து விட்டான். அதனால்தான், அவளை சமாதானம் செய்ய வந்திருந்தான். அவள் காது கொடுத்து கேட்கும் நிலையில் இருந்தால் தானே! ஆகவே, அவனும் சற்று கோபமாய் பேச வேண்டியதாகி விட்டது.
கவியரசனின் மிரட்டும் தொனியில் துளியும் அசராமல், மேலும் வாக்குவாதம் செய்ய நிமிர்ந்தெழுந்தவளை… பேசவே விடாமல், “ஏற்கனவே நேரம் ஆகிடுச்சு. வீட்டுக்கு போ” என்று கட்டளை போல கூறியவன், அவள் கைகளில் அவன் வாங்கிய டெய்ரி மில்க் சாக்லேட்டை திணித்து விட்டு திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான்.
யசோதாவிற்கு அவனது செய்கை எரிச்சலை வாரி வழங்கியது. அவனுடனான வாக்குவாதத்தின் பயனாய் தலைவலிப்பதுபோல இருந்தது. இவன் மூலம் எப்படியாவது திருமணத்தை நிறுத்தி விடலாம் என இத்தனை நாட்களாய் யோசித்து வந்தவளுக்கு, இனி இந்த திருமணத்தை நிறுத்தவே முடியாது என்பது மனதில் ஒருவித வலியை தந்தது. ‘யாரும் என் உணர்வுகளை மதிப்பதில்லை’ என்று ஆதங்கப்பட்டாள்.
தானும் சற்று தன்மையாக பேசி இருக்கலாமோ? என்று எண்ணம் தோன்றிய பொழுதே, ‘நான் அப்படித்தானே பேச்சை தொடங்குனேன். என்னைப் போய் அம்மாக்கு பாரம்ன்னு சொல்லிட்டாரே! அதுக்கப்புறம் என்னால எப்படி தன்மையா பேச முடியும்?’ என்று எண்ணி சோர்ந்து போனாள்.
அதன்பிறகு, வந்த நாட்களில் திருமண வேலைகள் ஜரூராக நடந்தது. மணப்பெண்ணிற்கு தான் மனதோடு உறுத்தல். ஆனால், அதை கவனிப்பவரோ, கண்டுகொண்டவரோ யாரும் இல்லை.
வித்யா தான் தன் கணவன் மனோகரனிடம், “என்னங்க உங்க தம்பி போன் பேசி நான் பாக்கவே இல்லை. அந்த பொண்ணும் ஒன்னும் நம்மகிட்ட எல்லாம் ரொம்ப நல்லா பேசறது இல்லை” என்று குறைபடிக்க,
“உனக்கென்ன பிரச்சனை? அவன் பாத்துப்பான். நீ உன் வேலையை பாரு” என மனைவியை அதட்டி அனுப்பி வைத்தாலும், மனோகரனுக்கும் அந்த சந்தேகம் எழுந்தது. அதை தம்பியிடமும் கேட்க, “உங்க கண்ணுக்கு தெரியிற மாதிரி தான் பேசுவேனா?” என அவன் புன்னகை முகமாக திருப்பி ஒரு கேள்வியை கேட்டு வாயடைக்க வைத்து விட்டான்.
நாட்கள் விரைய, ஒரு சுபயோக சுபதினத்தில் கவியரசன், யசோதாவின் திருமணம் பெரியவர்களின் ஆசியோடு நடந்து முடிந்தது. சற்றே உம்மென்று இருந்தவளை, “கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு” என அவளின் அன்னை சுந்தரி தான் அதட்டினார். கவியரசன் அதில் எல்லாம் தலையிடவே இல்லை.
வித்யாவிற்கு தான், யசோதாவின் செய்கைகள் சரியாகவே படவில்லை. ‘இவள் ஏன் இப்படி பிடிப்பே இல்லாமல் இருக்கிறாள்?’ என்பதாக யோசித்தபடி அவளை நன்கு உன்னிப்பாக கவனிக்கலானாள்.
மீண்டும் கணவனிடம் அதைப்பற்றி கூறி நச்சரிக்க, “அந்த பொண்ணு அமைதியா, அடக்கமா இருக்குது வித்தி. அது பத்தி எல்லாம் உனக்கு தெரியாது விட்டுடு” என மனோகரன் கூறிவிட, அவனது குத்திக்காட்டலில் சினந்தவளோ, “உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது?” என சண்டைக்கு நின்றாள்.
“வேலை இருக்கு. இப்படி வெட்டியா பேசாம போய் வேலையை கவனி” என்று அவளது சினத்தை பொருட்படுத்தாமல் கூறியவன் நகர்ந்து விட்டான். வித்யா விடுவதாக இல்லை. தனது மாமியாரை தேடிப்பிடித்து கூற, “பிறந்த வீட்டை விட்டு வரப்போகுது. அந்த கவலை இருக்கத்தானே வித்யா செய்யும்” என்று மீனாட்சியும் கூறிவிட, அவளுக்கு தான் வம்பிற்கு காரணம் கிடைக்காமல் சப்பென்று போய்விட்டது.
‘எப்படியோ இந்த பொண்ணு ரொம்ப அப்பாவியா இருக்கும் போல. அதுவும் நமக்கு வசதி தான். மாமியாரும் புள்ளபூச்சி ஓரகத்தியும் புள்ளபூச்சி’ என யசோவைப் பற்றி சரியாக புரிந்திடாத வித்யா மனதிற்குள் ஆறுதல் அடைந்தாள்.
திருமண சடங்குகளில் மீனாட்சி சற்று ஒதுங்கி தான் இருந்தார். தன்னுடைய தாயார் சுந்தரியும் அவ்வாறு தான் ஒதுங்கி இருக்கிறாள் என்பதால், யசோதாவிற்கு அதிகம் வேறுபாடாக தெரியவில்லை. ஆனால், மீனாட்சியின் உடையும், அணிகலன்களும்… மகனின் திருமணத்திற்கு தகுந்தாற் போல இல்லை. ஏதோ கோவில், குளம் செல்பவரைப் போன்று அத்தனை எளிமையாக இருந்தது. அதிலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க அது தெளிவாகவே தெரிந்தது. யசோதாவின் யோசனை சற்று நேரம் மீனாட்சியை வலம் வந்தது காரணமே இல்லாமல்.
ஒருவேளை, அருகில் இருப்பவனில் கவனம் பதித்து விடக்கூடாது என்பதற்காக சுற்றிலும் கவனம் பதிக்கிறாளோ என்னவோ தெரியவில்லை. அவளுடைய செய்கைகள் எல்லாம் கவியரசனுக்கு சிரிப்பாய் இருந்தது. ‘அப்படி எத்தனை நேரம் என்னை இவளால் தவிர்க்க முடியுமாம்?’ என மனதோடு எண்ணியவன், தற்காலிக அமைதி காத்தான்.
அனைத்து சடங்குகளும் முடிந்து வீட்டிற்கு அழைத்து சென்று மணமக்களுக்கு பால், பழம் தரும் பொழுது அவனது சந்தேகத்தை அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட, அவனுடைய எதிர்பாரா கேள்வியால் அவளுக்கு பதற்றம் வந்துவிட்டது. இத்தனை நேரமும் எதுவும் பேசாமல், கண்டுகொள்ளாமல் இருந்தவன் இப்பொழுது திடீரென பேசவும், “என்ன?” என்றாள் புரியாத பாவனையில்.
“ஒண்ணுமில்லை. சும்மா அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பாக்காம, கொஞ்சம் என்னையும் பாரு, என்னையும் கவனி” என சுவாதீனமாக கவியரசன் கூற,
ஒன்றுமே பேசவில்லை அவள். அவன் பேசியவிதம், தொனி அப்படி! எதுவும் பேசாமல் தலை குனிந்து அவள் அமர்ந்து கொள்ள, அதற்கும், “இப்போ எதுக்கு வெக்கப்படற?” என கவியரசன் சீண்டிவிட்டான்.
“கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?” என காரணமே இல்லாமல் கோபத்தை துணைக்கழைத்து அவனின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். அதற்கும் அவனுக்கு புன்னகை தான் வந்தது.
சற்று தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு கவியரசனின் புன்னகையும், யசோதாவின் தலை கவிழ்ந்து இருக்கும் தோற்றமும் அத்தனை நிறைவாக இருந்தது. திருமண சடங்கில் யசோதா சற்று ஒட்டவில்லையோ என்றிருந்த சந்தேகமும் மணமக்களின் இந்த நிலையை பார்த்தபிறகு மறைந்து போனது.
அவர்கள் இருவரையும் ஓய்வெடுக்க சொல்ல, கவியரசன் தனது அறையிலும், யசோதா மீனாட்சியின் அறையிலும் ஓய்வெடுத்தனர். இரவு தாமதமாக உறங்கியது, காலையில் நேரமே எழுந்தது என்று அதீத அலைச்சலில் இருந்ததால் இருவருமே நன்கு உறங்கி எழுந்தனர்.
சுற்றம் மறந்த உறக்கத்தில் லயித்திருந்த யசோதாவை மீனாட்சி தான் எழுப்ப வேண்டியதாய் இருந்தது. ‘அசந்து தூங்கி விட்டோமோ!’ என சங்கடப்பட்டவளிடம், மீனாட்சி கனிவாக தான் நடந்து கொண்டார். அதுவே அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.
“போய் குளிச்சுட்டு இந்த புடவையை கட்டிக்கம்மா, நான் வந்துடறேன்” என்றபடி மீனாட்சி நகர்ந்துவிட்டார். உணவு உண்டு முடித்ததும், வித்யா வந்து அவளை அலங்காரம் செய்ய, மீனாட்சி அப்பொழுதும் ஒதுங்கி தான் நின்றார். அவளுக்கு நடப்பது விளங்கத்தான் செய்தது.
யாரிடமும் சிறிதும் முகம் சுளிக்கவில்லை. அவர்கள் விருப்பம்போல் தான் நடந்தாள். கோபம் எல்லாம் இப்பொழுது கவியரசனிடம் மட்டும் தான், அவன் நினைத்திருந்தால், திருமணத்தை நிறுத்தியிருக்கலாம் என்பதாக.
ஆனால், எங்கே அவன்தான் அன்று வந்து பேசிவிட்டு சென்றபிறகு, மறுபடியும் எதுவும் பேசவே முயற்சிக்கவில்லையே! நிச்சயத்தன்று கூட நாசூக்காய் தவிர்த்து விட்டானே! எங்கே மீண்டும் திருமணம் வேண்டாம் என சொல்லிவிடுவேனோ என்று எத்தனை ஒதுக்கம்? என அவனின் செய்கையின் காரணங்களை வெகுசரியாக கணித்து அதற்கும் கோபப்பட்டாள்.
அவளை தயார் செய்ததும் கடவுளை நமஸ்கரிக்க சொல்லிவிட்டு, ஒதுங்கி நின்ற மாமியாரிடமும் இவளாகவே சென்று ஆசி வாங்கினாள். இதை சற்றும் எதிர்பார்க்காதவர், “நல்லா இருடாம்மா. காலையிலேயே ஆசிர்வாதம் வாங்கிட்டியே!” என சங்கடமாக கூற, மென்மையாக புன்னகைத்தாள்.
உண்மையில் அவளால் எதுவும் பேச முடியவில்லை. என்னதான் கோபமாக இருந்தாலும், அவளுக்கு சற்று பயமாகவும், பதற்றமாகவும் இருந்தது. இந்த நாளை, இந்த சடங்கை எதிர்கொள்ள! வெளிப்பூச்சிற்கு எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
மிதமான அலங்காரத்துடன், அறையினுள் நுழைந்தவளை மெல்லிய புன்னகையுடன் வரவேற்றான் கவியரசன். அதை கவனிக்க அவள் நிமிர்ந்தால் தானே? சில நொடிகள் மௌனத்தில் கரைய, அவளும் நிமிர்வதாய் இல்லை.
கவியரசன் தான் மெல்ல பேச்சு கொடுத்தான். அவள் எந்த பதிலும் கூறவில்லை. உண்மையில் அவளுக்கு பயத்தில் பேச்சு வரவில்லை. அப்படியும், அவ்வப்பொழுது அவன் கேள்விகளுக்கு தலையுருட்டலில் பதில் கூற முயன்றாள்.
சிறிது நேரம் சென்று, “என்னால் நாள் முழுவதும் சண்டை போட்டுட்டே இருக்க முடியாது” என தீவிரமான முகபாவத்தோடு கவியரசன் சொல்ல,
அத்தனை நேரமும் தவிப்போடும், பதற்றத்தோடும் இருந்தவள் அவனது வார்த்தைகளில் நான் எங்கே சண்டை போட்டேன் என்னும் கோபம் எழ, “என்னை பார்த்தா உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி தெரியுதா? நான் எப்போ சண்டை போட்டுட்டே இருப்பேன்னு சொன்னேன்…” என அவனிடம் காய, அவன் முகத்தில் தெரிந்த விஷம சிரிப்பில் அவளது பேச்சு உறைந்தது.
அதற்கு மேல் அவளது பேச்சு தொடர அவன் அனுமதிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 07சாவியின் ‘ஊரார்’ – 07

7 கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் கமலா. “கபாலி என்ன எழுதியிருக்கான்? நல்ல சமாசாரம் தானே?” செருப்பு கடித்த இடத்தில் எண்ணெயைத் தடவிக் கொண்டே கேட்டார் சாமியார். “ஆமாங்க, அடுத்த வெள்ளிக் கிழமை வராராம். உடனே புறப்படணுமாம்.” “உனக்கு நல்ல காலம் பொறந்துட்டுதுன்னு

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07

இதயம் தழுவும் உறவே – 07   திருமண ஆரவாரங்கள் முடிந்த கையோடு யசோதாவை கவியரசன் கல்லூரியில் சேர்த்திருந்தான். “என்ன தம்பி கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆச்சு. அதுக்குள்ள புள்ளைய படிக்க அனுப்பற” என மீனாட்சி தான் குறைபட்டார்.

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17

17 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   பிரியா தனிமையில் அக்சராவுடன் பேசும்போது “யாரோ கண்னுக்கு தெரியாதவங்களுக்காக இவளோ யோசிக்கறன்னா உன்ன குடும்பத்துக்காக, கட்டிக்கரபோறவங்களுக்காக எவ்ளோ யோசிப்ப?” அக்ஸா சிரிக்க பிரியா தொடர்ந்து “அக்ஸா நீ அடுத்து என்னதான் டி பண்ணப்போறே?”