Tamil Madhura சிறுகதைகள் வல்லிக்கண்ணன் கதைகள் – புது விழிப்பு

வல்லிக்கண்ணன் கதைகள் – புது விழிப்பு

அவன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான்.

அவன் பெயர் – என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். “எதிர்காலம் என்னுடையது!” என்று உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், நம்பிக்கையோடும் ஒலி எழுப்பும் இதயத்துடன் வாழ்க்கைப்பாதையில் தலைநிமிர்ந்து முன்னேற வேண்டிய இளைஞன். எதிர்வரும் எல்லாவித அனுபவங்களையும் முகமலர்ச்சியோடு ஏறறு அனுபவித்து, அறிவு விசாலம் பெற்று எப்படி எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாலிபன்.

ஆனால், இன்று அவன் முன்னே கொக்கி வளைந்து நிற்பது ஒரே பிரச்னை – எப்படி வாழ்வது?

அவன் உள்ளத்தில் சதா ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கேள்வி – “என்ன பண்ணுவது?”

அவனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையோடு அவனை படிக்க வைத்தார்கள். பையன் படித்து, பட்டம் பெற்று, நல்லதொரு உத்தியோகத்தில் அமர்ந்து விடுவான்; கைநிறைய சம்பளம் பெறுவான்; விடிவு காலம் பிறக்கும் அவனுக்கு, நமக்கு, நம் குடும்பம் முழுமைக்குமேதான். இவ்விதம் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அவன் தாய் உள்ளூர ஆசைப்பட்டாள்; மகன் பெரிய படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போவான். நிறைய ரொக்கமும் பெரும்தொகை மதிப்பு உடைய நகைகளும் கொடுத்து. பெண்ணையும் கொடுத்து மணம் முடித்து வைக்கும் பெரிய இடத்து சம்பந்தம் தானாகவே தேடிவரும்.

அவனுக்கும் ஆசைகளும் கனவுகளும் மிகுதியாக இருந்திருக்கும் தான். பொழுது போகாத நேரங்களிலும், சுகமான சோம்பல் வேளைகளிலும், அவன் கட்டிய எண்ணக் கோட்டைகளுக்கும் பறக்க விட்ட கற்பனைக் காற்றாடிகளுக்கும் ஒரு கணக்கு இருக்க முடியாது தான்.

அவன் படித்து, பாஸ் பண்ணி, பட்டம் பெற்றதில் குறை ஒன்றும் இல்லை. அதன் பிறகு, படித்து முடித்த எல்லா வாலிபர்களும் செய்கிற – செய்யக் கூடிய – காரியங்களை செய்வதில் மும்முரமாக முனைந்தான். வேலை வேட்டைக்கு உரிய முயற்சிகளில் தான்.

“எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்”சில் பெயரை பதிவுசெய்வது முதல், தினசரிப் பத்திரிகையில் “வேலை காலி”ப் பகுதியில் உள்ள வரி விளம்பரங்களை படித்து, தகுதியானது எனத் தோன்றியனவற்றுக்கு மனுக்கள் எழுதி அனுப்புவது, எவர் எவரையோ போய் பார்த்து அங்கும் இங்கும் சிபாரிசு செய்யச் சொல்லி அலைவது ஈறாக, சகல முயற்சிகளையும் மேற் கொண்டான். உத்தியோகத்துக்கான பற்பல பரீட்சைகளையும் எழுதினான். அவன் உள்ளம் சதா உச்சரித்துக் கொண்டிருந்த ஒரே மந்திரம் – “எனக்கு ஒரு வேலை வேண்டும்”.

அவன் ஒரே ஒரு வேலைக்குத் தான் லாயக்கு – கிளார்க் வேலைக்கு. அரசு அலுவலகமோ, தனியார் கம்பெனியோ, பாங்கோ, வியாபார அமைப்புகளோ, எதுவா இருந்தாலும் சரி. படித்து பட்டம் பெற்றவனுக்கு வாழ்வு அளிக்கக் கூடிய கிளார்க் பதவியைத் தந்து உய்விக்க வேண்டும். படித்து பாஸ் பண்ணியவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.

அவர்களை பெற்றவர்களும் மற்றவர்களும் விரும்புவதும் இதையே தான். “எவனுக்காவது சம்திங் கொடுக்கணுமின்னாலும் கொடுத்துப் போடலாம். அதுக்கு வழி இருக்கா பாரு?” – பெரியவர்கள் தூண்டுகிறார்கள். பையன்கள் வழி தேடுகிறார்கள். சிலருக்கு “சான்ஸ் அடிக்கிறது? பலருக்கு ஏமாற்றம், தோல்வி, விரக்தி!

அவன் நிலையும் அதே தான்.

அவன் எவ்வளவோ முயன்றான். எத்தனை எத்தனை அப்ளிகேஷன்கள் எழுதினான் எத்தனை பெரிய மனிதர்களை பார்த்தான் அநேக நிறுவனங்கள் நடத்துகிற இன்டர்வ்யூ என்கிற கண் துடைப்பு நாடகங்கள் எத்தனையில் பங்கு கொண்டான். எல்லாம், அவன் உள்ளக் கோயிலில் கொலு இருந்த நம்பிக்கை யைக் கீழே இழுத்துத் தள்ளி மிதித்துச் சமட்டிய படையெடுப்புகள் ஆயின. அந்த இடத்தை இருண்ட மடமாக மாற்றி, அங்கே விரக்தி, வேதனை, சோர்வு, உற்சாக வறட்சி முதலிய குட்டிச்சாத்தான்களை ஆடவைத்த போக்குகள். அவை.

அவனைச் சுற்றி ஆசைக் கொலுக்கள் அமைந்த பெற்றோர் காலநிலை மறந்து – சமுதாய நிலையை எண்ணாது – நாட்டின் நிலைமையைக் கருதாது – ஆத்திர நிலையை அடைந்தார்கள். வேலை எதுவும் பாராமல் இப்படி வெட்டிப் பொழுதுபோக்கும் “தெண்டச்சோறு” ஆக இருந்தால் என்ன அர்த்தம்? வேலைக்கு தீவிர முயற்சிகள் செய்யாமல் வீட்டிலே உட்கார்ந்து எத்தனை காலத்துக்கு சாப்பிட முடியும்? இவ்வாறான கேள்விக்கணைகள் அவர்களிடமிருந்து புறப்பட்டு அவனைத்தாக்கி தொல்லை கொடுத்தன.

அவனுக்குத் தெரிந்தது – அவன் இதுவரை செய்து வந்த வேலை – படிப்பது தான். இன்னும் அதை அவன் செய்யத் தயார் தான். “மேல் படிப்பு”க்கும் குறைவில்லை. படித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் படிப்புச் செலவுக்குத் தேவைப்படும் பணத்துக்குத் தான் பஞ்சம்.

“இன்னும் மேல்படிப்பு வேறே வாழுதாக்கும்! படிச்ச படிப்புக்கு சம்பாத்தியம் பண்ணிச் சாப்பிடத் துபட இல்லே. இன்னும் படிக்கணுமாமில்லே!” என்று தந்தை எக்காளமாகவும் எரிச்சலோடும் சொல் வீசினார்.

அவன் மனம் மேலும் ஒடிந்தது. உளைச்சல் மிகுந்து பல வீனமாகி விட்ட ஒரு நேரத்தில் அவன் அந்த முடிவுக்கு வந்தான். சாக வேண்டியது தான்.

இப்படி உயிர் வைத்துக் கொண்டு, இடிபட்டு, விமோசனத்துக்கு வகை தெரியாமல் திரிவதைவிட, செத்து ஒழிவதே மேல். எனது பிரச்னைகளுக்கும், மற்றவர்கள் சிரமங்கள் இழப்பு களுக்கும் அது சுலபமாக முடிவுகட்டி விடும்.

இந்த எண்ணத்தை வைத்து “தாயம் ஆடியது” மனம். அதுவே நல்லது என்று சித்திரித்துக் காட்டியது. அந்நினைப்பே பூதவடி வெடுத்து அவன் உள்ளத்தில் நிறைந்து நின்று அவனை ஆட்டிப் படைத்தது.

இருந்தாலும், எந்த விதத்தில் உயிரைப் போக்கடித்துக் கொள்வது என்று தீர்மானிக்க இயலாதவனாய் அவன் தத்தளித்தான். நாளிதழ்களில் தவறாது வந்து கொண்டிருந்த தற்கொலைச் செய்திகளை ஊன்றிப் படித்தான். ஊர்தோறும் தற்கொலைச் சாவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏதேதோ காரணங்களுக்காக யார்யாரோ, எப்படி எப்படியோ தங்களைத் தாங்களே சாகடிப்பது, வாழ முடியாதவர்கள் தங்கள் பிரச்னையை வேறு வழிகளில் தீர்த்துக் கொள்ள வகையற்று, இறுதியான ஒரே முடிவை கையாளத் துணிகிறார்கள் என்பதை உணர்த்தியது.

அவன் அதையே எண்ணியவனாய் நெடுக அலைந்தான். பிரமை பிடித்தவன் மாதிரி அங்கங்கே நின்றான். அப்போதெல் லாம் வீதிகளில் போகிற வருகிற பலதரப்பட்டவர்-களையும் பார்த்து, இவர்கள் எல்லாம் எங்கே என்ன வேலை பார்க்கிறார்களோ? எவ்வளவு சம்பளம் பெறுவார்களோ? எப்படி வாழ்க்கை நடத்துகிறார்களோ என்ற ரீதியில் அவன் மனம் கேள்விகளை அடுக்கும். வாழ்க்கையை, அதன் விரிந்து பரந்த பல்வேறு சிக்கல்களை, புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவனாய் அவன் குழம்புவான்.

அவ்வாறு ஒரு முச்சந்தியின் நடைபாதை ஒரத்தில் அவன் நின்று கொண்டிருந்த போது தான், “என்னடே இங்கே நிற். கிறே?” என்று உரிமையோடு அழைக்கும் குரலும், அன்போடு முதுகில் தட்டிய கையும் அவனை திடுக்கிட்டு திரும்பச் செய்தன.

விநாயகம்பிள்ளை அண்ணாச்சியின் சிரித்த முகம் அவனை விசாரித்தது: “இப்ப என்னடே செய்றே? படிப்பு முடிஞ்சிட்டு துன்னு கேள்விப்பட்டேன். என்ன வேலை பார்க்கிறே?”

“வேலை தேடும் வேலை தான். வேறே என்னத்தைப் பார்க்கிறது! வேலை என்ன சுலபமாக் கிடைச்சிருதா?” உள்ளத்தின் கசப்பு அவன் குரலில் கசிந்தது.

“அது எப்படிடேய் கிடைக்கும்?” என்றார் வி.பி. அண்ணாச்சி, “ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேரு எஸ்.எஸ். எல்.சி. ப்ளஸ்டூன்னு பரீட்சை எழுதிபாஸ் பண்ணுறாங்க. காலேஜ் படிப்பு, உத்தியோகப் படிப்புன்னு படிச்சு பாஸ் பண்றவங்க வேறே. இவங்க எலாருமே கிளார்க் குளாகவும் ஆபீசர்களாகவும் டாக்டர்களாகவும் என்ஜினியர்களா கவும் வந்து நல்லா சம்பாதிக்கணுமின்னு தான் ஆசைப்படுறாங்க. நல்ல ஆசை தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் லட்சம் லட்சமாகத் தயாராகி வருகிற மொத்தப் பேருக்கும் நாட்டிலே வேலை எப்படி கிடைக்கும்? வேலை வாய்ப்புகள் எங்கே இருக்குதாம்? அதையும் யோசிக்கணுமில்லே?” என்று சொல்லி, சிரிப்பு என்று பெரும் கனைப்பு கனைத்தார்.

அவனுக்கு எரிச்சல் வந்தது. “அதுக்காக படிக்கவே படாதுங்கிறீங்களா?” என்று கேட்டான்.

“அப்படி யார் தான் சொல்லுவா? படிக்கட்டும், நல்லா படிக்கட்டும். எல்லாரும் படிக்கட்டும். ஆனா தம்பியாபிள்ளே, அறிவு விசாலம் ஆகணும், ஞானம் பெருகணுமின்னு சொல்லியா படிக்கிறாங்க? இந்தக் காலத்திலேயும் அந்த எண்ணத்தோடு படிக்கப் போறவங்க கொஞ்சம் பேரு இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் ரொம்பக் கொஞ்சம் தான். படிச்சா வேலை கிடைக்கும். மேல் படிப்பு படிக்கப் படிக்க உயர்ந்த உத்தியோகம், கை நிறையச் சம்பளம், வசதியான வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்கிற ஆசையிலேதான் ரொம்பப் பேரு படிக்கிறாங்க, படிச்சு முடிச்சா, வேலை கிடைக்காத திண்டாட்டம். வேலை கிடைச்சாலும், சம்பளம் பத்தலியேங்கிற குறை. எவ்வளவு பணம் கிடைச்சாலும், பற்றாக்குறைதான். எப்பவும் திண் டாட்டம் தான். நம்ம படிப்பு வாழ்றதுக்கு கற்றுக்கொடுக்கவும் இல்லே: நல் வாழ்வுக்கு வகை செய்வதாயுமில்லே. நம்ம வாழ்க்கை முறை, படிப்பு நிலை, பொருளாதார நிலைமை எல்லாம் ஏதோ ஒரு போலியான வட்டத்திலேயே சுழல்கின்றன.”

“லெக்சரடிப்பது அவர் சுபாவம். அதனால் அவன் பதில் எதுவும் சொல்லாது நின்றான்.

“இப்படி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாட்கூலியாக மிகக் குறைந்த சம்பளம் பெறுகிற உழைப்பாளிக, மற்றும் மாதச சம்பளம் என்று ஒருசில நூறுகளே பெற்றுக் கொண்டு வேலை பார்க்கிறவங்க. இவங்க எண்ணிக்கையும் நிறைய இருக்கு. அதை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கும் பத்தாம, டிரஸ், வீட்டு வாடகை மருந்துச் செலவு என்று எதுக்கும் பணம் போதாமல் திண்டாடுற குடும்பங்களும் நிறையத்தான் இருக்கு. இந்த பயங்கர வறுமை நிலை ஒரு பக்கம். எதைப் பற்றியும் கவலைப் படாமல் நோட்டு நோட்டாக எடுத்து, அலட்சியமாகச் செலவு பண்ற வங்களும் இருக்கத்தான் செய்கிறாங்க, இந்த வாழ்க்கை முறையும், சமூக அமைப்பும் எதுவுமே சரியாக இல்லைடே. எல்லாம் மாறியாகணும். அடியோடு மாற்றப்படனும்.”

பொரிந்து தள்ளிவிட்டுத் தன் வழியே போனார் வி.பி. அண்ணாச்சி.

“இவர் ஒரு ரசமான பேர்வழி தான்” என்று அவன் எண்ணினான் முதலில், பிறகு, அவர் பேச்சில் இருந்த உண்மை கள் அவன் உள்ளத்தில் சலனங்கள் எழுப்பலாயின.

வேலை இல்லாது கஷ்டப்படுகிறவர்கள்; வேலை என்று ஏதேதோ செய்து சம்பளம் என்று ஒரு சிறு தொகை பெற்றும் சரியாக வாழ முடியாமல் அவதிப்படுகிறார்கள் கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும் முழு வயிற்றுச் சாப்பாட்டுக்கு வகை செய்ய முடியாமல் அரைப் பட்டினி நிலையில் நாளோட்டுகிறவர்கள் போன்றோரைப் பற்றி அவன் எண்ணத் தொடங்கினான். வாழ முயல்கிறவர்களையும், வாழ முடியாதவர்களையும் புதிய நோக்குடன் கவனிக்கலானான்.

இப்படி, பெரும்பாலோருக்கு வாழ்க்கையே பெரும் போராட்டமாகவும், அவர்களது விருப்பத்துக்கு விரோதமாக அவர்களது மீது சுமத்தப்பட்ட கணத்த சிலுவையாகவும் இருக்கிற போது, தான் எதிர்த்து நின்று போராடிச் சமாளிக்க அஞ்சியும், சுமந்தாக வேண்டிய கட்டாயப் பளுவை சுமக்கத் தெம்பு இல்லாமலும், தோல்வியுற்றுத் தளர்ந்து தன்னையே அழித்துக் கொள்ள எண்ணுவது நியாயம் அல்ல என்று அவனது சிந்தனை அறிவுறுத்தியது.

அவன் தன் பாதையில் எதிர்ப்படுகிற தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிறரையும் அவரவர் வாழ்க்கை பற்றியும் பிரச்னைகள் குறித்தும் அனுதாபத்தோடு விசாரித்தான். அவர்கள் சிறிதளவு விரக்தியோடு அலுப்புடனும் பேசிய போதிலும் வாழ்க்கையில் பற்றுதலும் வருங்காலத்தில் நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பதை அவன் உணர முடிந்தது.

உடல்குறை உள்ளவர்கள் கூட ஏதேனும் ஒரு சிறுதொழில் தையல், வாட்ச் ரிப்பேர், குடைரிப்பேர் போன்ற எதையாவது செய்து பிழைப்பு நடத்த முயல்வதை அவன் கண்டறிந்த போது அவனுக்கு உள்ளத்தில் புதியஒளி தோன்றியது.

“நாமும் இப்படி பலருக்கும் பயன்படக் கூடிய ஏதாவது கைத்தொழிலைச் செய்து காலம் கழிக்கலாமே. ஒய்வு நேரத்தில் அறிவு வளர்ச்சிக்கு உதவும் படிப்பையும் எழுத்தையும் மேற்கொள்ள முடியுமே!” என்று அவன் எண்ணினான்.

இந்த நினைப்பு அவனுக்கு உற்சாகமும் புது ஊக்கமும் தந்தது. அனுபவம் மிக்க ஒருவர் தையல்காரராக இருந்தார். தெரிந்த ஒருவர் வாட்ச் ரிப்பேர் தொழில் நடத்திக் கொண்டு சந்தோஷமாக இருந்தார். ஒருவர் ஸ்டவ்களை நல்லாக்குபவராகவும், இன்னொருவர் ரேடியோ பழுது பார்க்கிறவராகவும் தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தினர்.

இவர்களில் ஒருவரிடம் சிறிது காலத்துக்குப் பயிற்சி பெறுவது, தேர்ச்சி பெற்ற பிறகு சொந்தத்தில் தொழில் நடத்தலாம். உழைப்பு உயர்வளிக்கும். எந்த உழைப்பும் கேவலமானது அல்ல என்ற விழிப்பு உணர்வு பெற்றான் அவன். வாழ்க்கை நம்முடையது; அதை வாழ்ந்தே தீருவோம் என்ற உறுதியுடன் புதிய பாதையில் அடி எடுத்து வைத்தான் அவன்.
(“சதங்கை” சிறப்புமலர் -1995)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான்   அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு

ராகுலன் : திரிவேணிராகுலன் : திரிவேணி

ராகுலன்  –  திரிவேணி (கன்னடக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள்.

ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.

வணக்கம் வாசக நெஞ்சங்களே! ஜெனிபர் அனு அவர்கள், “காதல் குறியீடு” எனும் சிறுகதை ஒன்றுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜெனிபர் அனுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. காதல் குறியீடு “சார்! நான் ஒண்ணு சொன்னா தப்பா