Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 8

 

அத்தியாயம் 8

 

    • வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில் தயங்கிய வசந்தி, அருகே நெருங்கிச் சென்று பார்த்ததும் அவள் விழித்திருப்பதைக் கண்டாள்.

 

    • “நீ அம்மானைக் காய் கேட்டேன்னு பாரு வந்து வாங்கிண்டு போனாளே…? இன்னும் என்னமாவது வேணுமா…?” என்று மாமியே வசந்தி வருவதைக் கண்டு எழுந்திருந்து உட்கார்ந்து விட்டாள்.

 

    • பாதி அயர்ந்த அந்தத் தோற்றத்திலும் கூடக் காமாட்சியம்மாள் ஏதோ கோவில் கர்ப்பக்கிருகத்திலிருந்து ஓர் அம்மன் விக்ரகம் உயிருடனும் உருவுடனும் புறப்பட்டு வந்து அமர்ந்திருப்பது போல் இலட்சணமாயிருந்தாள். “இந்த வீட்டின் கிருகலட்சுமி நான் இதன் அன்னபூரணி நான்” என்ற கம்பீரமான செருக்குடன் அழகும், தவ ஒளியும் குன்றாத ஒரு ரிஷிபத்தினிபோல் அப்போது அங்கு அமர்ந்திருந்தாள் காமாட்சியம்மாள்!

 

    • மாமி நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுவாளோ என்ற பயத்தோடும் தயக்கத்தோடும் வசந்தி வந்திருந்தாள்.

 

    • “நம்ம பூர்வீகக் கலைகள், பாட்டுக்கள், விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், எல்லாத்திலியும் கமலிக்குக் கொள்ளை ஆசை… நீங்க கொஞ்சம் சிரமத்தைப் பாராமே வந்து அவளுக்கு அம்மானை ஆடிக் காமிக்கணும் மாமீ! நானே ‘டிரை’ பண்ணினேன்… எனக்கு நன்னா ஆட வரலை… பழக்கம் விட்டுப் போச்சு…”

 

    • “மொட்டைக் கழுத்தும் மூளித் தோளுமாக் கையில்லாமே ஒரு ரவிக்கையைப் போட்டுண்டிருக்காளேடீ?”

 

    • “நீங்க அதைத் தப்புன்னு நெனைக்கிறதாத் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே கழட்டிட்டு வேறே போட்டுண்டுடுவா… கமலிக்கு உங்ககிட்ட அத்தனை மரியாதை… அத்தனை பயபக்தி…”

 

    • “மரியாதையும், பயமும், பக்தியும் வெச்சுக்க நான் யாருடீ அவளுக்கு? இங்கே வந்து தங்கியிருக்கிறதாலே சொல்ல வேண்டியிருக்கு. மடத்து முத்திராதிகாரி வீட்டிலே உடம்பிலே துணியே இல்லாமே ஒரு வெள்ளைக்காரி வந்து தங்கியிருக்காளாம்னு ஊர்லே நாலு பேர் எங்களைப் பற்றிப் பேசாமப் பார்த்துக்கணுமோல்லியோ!”

 

    • “நான் அவகிட்டப் பக்குவமாச் சொல்லி வைக்கிறேன் மாமீ! இப்போ நீங்க கொஞ்சம் தயவு பண்ணி மாடிக்கு வரேளா…? அம்மானை…”

 

    • வசந்தி தன் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளேயே காமாட்சியம்மாளிடமிருந்து வெட்டினாற்போல் பதில் வந்தது.

 

    • “நான் மாடிக்கெல்லாம் வரலையடீம்மா! அவளுக்கு ஆத்திரம்னா அவளை இங்கே கூட்டிண்டு வா!… ஆடிக் காமிக்கிறேன்…”

 

    • “இதோ இப்பவே கூட்டிண்டு வரேன் மாமீ” என்று கூறிவிட்டு மறுபடியும் மாடிக்கு விரைந்தாள் வசந்தி. மாமி அதற்குச் சம்மதித்ததே ஒரு தேவதை வரம் கொடுத்தது போலிருந்தது.

 

    • காலையில் கமலியும், ரவியும் இரயில் நிலையத்திலிருந்து வந்தபோது காமாட்சியம்மாள் எவ்வளவு இறுக்கமாக இருந்தாளோ அவ்வளவு இறுக்கம் இப்போது இல்லையென்று தெரிந்தது. கமலி தங்களைக் கூப்பிட்டு அளித்த கைக்கடிகாரங்களைக் குமாரும் பார்வதியும் அம்மாவிடம் போய்க் காண்பித்துச் சொல்லியதாகவும், அம்மா அவை மிகவும் நன்றாயிருப்பதாகப் பாராட்டியதாகவும், பார்வதியே வசந்தியிடம் சொல்லியிருந்தாள். இப்படிச் செயல்களால் காமாட்சியம்மாளுக்கும் – கமலிக்கும் இடையில் சகஜமாகப் பழகும் ஒரு நிலையை உருவாக்க வேண்டுமென்றுதான் வசந்தி முயன்றாள். காமாட்சியம்மாளைப் பற்றிப் பெருமையாக நாலு வார்த்தை கமலியிடமும் கமலியைப் பற்றிப் பெருமையாக நாலு வார்த்தை காமாட்சியம்மாளிடமும் சொல்லுவதன் மூலம் இரு பக்கங்களிலும் மனங்களை இலகுவாக்க முயன்று கொண்டிருந்தாள் வசந்தி.

 

    • மாடிக்குப் போனதும் வசந்தி முதல் வேலையாகக் கமலி அணிந்திருந்த கையில்லாத ‘ரவி’க்கைக் கழற்றி வேறு கையுள்ளதை அணிந்து கொள்ளச் செய்தாள்.

 

    • “கமலீ! நாம் கீழேயே போயிடலாம்! மாமி நம்மை அங்கே வரசொல்றா…. ஷீ… இஸ் ஏ ஸ்டாஞ்ச் டிரடிஷனலிஸ்ட்….”

 

    • “பீயிங் டிரடிஷனலிஸ்ட் இஸ் நாட் அட் ஆல் எ கிரைம்… வசந்தீ! போகலாம் வா” என்று காமிராவையும் பைண்டு பண்ணின புத்தகம் போலக் கையடக்கமாக இருந்த ரேடியோ கம் காஸெட் ரெக்கார்டரையும் எடுத்துக் கொண்டு கீழே புறப்பட்டாள் கமலி.

 

    • இந்தியத் தன்மை, இந்தியப் பழக்க வழக்கங்கள், ஆசார அநுஷ்டானங்கள் எதைப் பற்றியும் சிறிது கூச்சப் பட்டாற் போலவும் மன்னிப்பு கேட்பது போன்றும் எப்போது தான் பேசினாலும் அதை விரும்பாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் கமலியிடமிருந்து ஒரு பதில் வருவதை வசந்தி கவனித்திருந்தாள். இந்தியத் தன்மை, பழக்க வழக்கங்களுக்கு ஏற்பத் தன்னை இசைவாக மாற்றிக் கொண்டு விட்டுக் கொடுக்க அவள் தயாராயிருந்தாளே ஒழியத் தனக்காக அவையெல்லாம் விட்டுக் கொடுத்து விலக வேண்டும் என்று அவள் ஒரு போதும் எண்ணியதாகவோ எதிர்பார்ப்பதாகவோ தெரியவில்லை. பிறருடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் மதிக்கின்ற கமலியின் இந்த இயல்பை வசந்தி வியந்தாள். அசல் கல்வியறிவின் கனிவு மனத்தில் வந்திருந்தால் ஒழிய இப்படிப் பக்குவம் ஏற்பட்டிருக்க முடியாது என்பதை அவள் உணர்ந்தாள். பிறருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், நாகரிகம், கலாச்சாரம் முதலியவற்றைச் சகித்துக் கொள்ளவும் ஏற்கவும் உயர்ந்த பட்சமாக மனம் பக்குவப்பட்டாலொழிய முடியாது. கலிசுரல் – ஈகோ அதாவது கலாசார ஆணவம் – காரணமாகவே உலகெங்கும் இனங்களுக்கிடையே, பிரதேசங்களுக்கிடையே மொழிகளுக்கிடையே, நாடுகளுக்கிடையே மனிதர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நிலைகளையும் நினைத்துப் பிறருடைய கலாசாரத்தை அதிக பட்சமாக மதிப்பது தான் அதை வெல்லும் மிகச் சிறந்த வழி என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கமலியின் மென்மை – இங்கிதம் – இயைபு – யாவும் வசந்தியைச் சிந்திக்க வைத்தன. மெய்யான கல்வி அல்லது மனப்பக்குவம், ஓர் அழகிய பெண்ணை இரட்டை மடங்கு மேலும் அழகியாக்கி விடுவதை உணர்ந்தாள் வசந்தி.

 

    • அம்மானைக் காய்களையும் எடுத்துக் கொண்டு கமலியும், வசந்தியும் கீழே வந்த போது நேரம் நடு பகலுக்கு மேல் ஆகியிருந்தது. அம்மாவின் பாட்டு அம்மானை விளையாட்டு எதுவும் புதுமை இல்லையென்றாலும், கமலி காமிராவையும் ரெக்கார்டையும் எடுத்து வந்திருப்பதைக் கண்டு அவற்றினால் ஆவல் தூண்டப் பெற்றவர்களாகப் பார்வதியும் குமாரும் கூட வந்து வேடிக்கை பார்க்க நிற்பவர்களைப் போல் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.

 

    • காமாட்சியம்மாள் சிறிதும் பதறவோ பயப்படவோ இல்லை. அலட்சியமாக அமர்ந்து அம்மானைக் காய்களை ஆடினாள். முதலில் மூன்று காய்களை ஆடிக் காட்டிய பின் விரைவு குன்றாமல், ஐந்து காய்களையும் ஆடினாள். இனிமையான ஒரு சிறிதும் பிசிறு தட்டாமல் கணீரென்ற குரலில், தான் பிறந்த ஊரில் சிறுவயதில் பாடிப் பழகிய ஓர் அழகிய பாட்டையும் அம்மானைக்கு இசைவாகப் பாடினாள் மாமி.

 

      • ‘இள நகை யரும்பு மிதழ்க்கடை

 

      •         எழிலுறு தவள நகைப்படை

 

      • வளமது கொண்டு சிவன்தன

 

      •         துளமதில் உறுதி தகர்த்திடு

 

      • களபகுங்கும கலச கொங்கயையிற்

 

      •         கலாம் விளைவிப்பவட் கம்மானை

 

      • துளவ நாயகன் சோ தரிக் கம்மானை

 

      •         மகர தோரண வீதியெங்கணும்

 

      • பளபளக்கு மொகுவிலாச நற்

 

      •         பவளவல்லி திருவிளக்கு மம்மானை!

 

    அநாயாசமாக இந்தப்பாட்டை பாடும்போது மாமி தன் எதிரே சிலர் கேட்கிறார்கள் அல்லது கவனிக்கிறார்கள் என்பதற்காகப் பாடியது போல் தெரியவில்லை. பித்தளைப் பந்துகளில் ஒன்றுகூடக் கீழே விழுந்து விடாமல் விரைந்து மாற்றி மாற்றிப் பிடிக்கும் சிரமமான செயலில் இருந்து வழுக்கி விடவோ தவறிவிடவோ செய்யாமல், தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வதற்காகத் தன்னுள் இலயித்துப் பாடிய மாதிரியே இருந்தது. பாடலை ரெக்கார்டரிலும் பாடிய மாமியின் தோற்றத்தைக் காமிராவிலும் பிடித்துப் பதிவு செய்து கொண்டாள் கமலி. உள்ளே அதிக வெளிச்சமில்லாத அந்தக் கர்நாடகமான பழைய கிராமாந்தரத்து வீட்டின் சமையல் கட்டு முகப்பில் புகைப்படம் எடுக்க ஃபிளாஷ் தேவைப்பட்டது. கழங்காடல், பல்லாங்குழி, சோழி விளையாட்டு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவற்றுக்குரிய கிராமீயப் பாடல்களுடன் ஆடிக் காட்டினாள் காமாட்சியம்மாள். சில பாடல்களில் அந்தப் பிரதேசத்துக் கொச்சை மொழி நிரம்பி வழிந்தது.

 

    • “இந்த விளையாட்டுக்களோட சேர்த்துப் பாடறதுக்குன்னே நிறையப் பாடல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கு. கமலீ! அம்மானை ஆடற்ப்போ மாமி பாடிய பாட்டு பக்கத்திலே இருக்கிற பிரம்மபுரம் சிவன் கோவில் அம்மன் ‘பவளநாயகி’ மேலே யாரோ பாடினது. இந்த விளையாட்டோட இப்படிப் பாட்டெல்லாம் சேர்ந்த காரணம் தான் எனக்குப் புரியலே! சில பாட்டு கொச்சையாகவும், தப்பாகவும் கூட இருக்கு!”

 

    • “அசாதாரணமான திறமையைக் காட்டி முழு கான்ஸெண்ட்ரேஷனோட செய்யற விளையாட்டுக்கு ‘ஸெல்ஃப் சப்போர்டிங்’ ஆகவும் உற்சாகமாகவும் சோர்வு தெரியாமல் இருக்கிறதற்காகவும் தான் இப்படிப் பட்ட பாடல்கள் எல்லாம் உண்டாகியிருக்கணும். காட்டு வழியிலே தனியா நடந்து போகிறவன் தனக்கு ஒரு துணையும் தைரியமும் உல்லாசமும் உண்டாக்கிக் கொள்ளத் தானே சீட்டியடித்துப் பாடி அந்தப் பாட்டையே – தனக்கு வழித் துணையாக்கிக் கொள்கிற மாதிரிதான் இதுவும். ‘ஃபோக்லோர்’ ஆராய்ச்சியிலே இதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் வசந்தீ! நாட்டுப் பாடல்கள், கிராமியப் பாடல்களில் வாய்மொழி அடையாளம்கிற ‘ஓரல் டிரடிக்ஷன்’ தான் ரொம்ப ரொம்ப முக்கியம். கொச்சைகளையும் தப்புகளையும் அவற்றிலிருந்து நீக்கி விட்டால் அப்புறம் அவை அசல் கிராமீயப் பாடல்களாக இருக்கவே முடியாது!’

 

    • “இங்கே சில பேர் இந்த மாதிரிப் பாடல்களைக் கூட இலக்கண சுத்தமாகத் திருத்தி விடுவதை ஒரு வழக்கமாக்கியிருக்காங்க…”

 

    • “சுமாரான விஷயங்களைப் பிரமாதப்படுத்திச் சீர்திருத்தம் செய்யப் புறப்படுவதும், பிரமாதமான விஷயங்களைக் கவனிக்காமலே பாழடைய விட்டு விடுவதும் அரசியல் வாதிகளால் புதிதாக உங்கள் தேசத்துக்கு வழங்கப்படும் ‘நியு ஸப்கல்சர்’ ஆகி வருகிறது.”

 

    • இந்த வார்த்தைகளைக் கேட்ட போது மிகப்பெரிய விஷயத்தை – முந்நூறு நானூறு பக்கங்களில் விமர்சித்து எழுத வேண்டிய ஒன்றைச் சுலபமாக ஒரே ஒரு வாக்கியத்தில் கமலி கச்சிதமாகச் சொல்லி முடித்து விட்டாற் போல் உணர்ந்தாள் வசந்தி. சுதந்திரத்துக்குப் பின் வந்திருக்கும் இந்தியாவை இந்த ஒரு வாக்கியம் அத்தனை பொருத்தமாக விமர்சித்தது. பித்தளை அம்மாவைப் பந்துக்கள் கழற்சிக்காய்கள், சோழிகள், பல்லாங்குழி, விளையாடப் பயன்படும் முருங்கை முத்துகள், மரத்தில் அழகாகச் செதுக்கப் பெற்ற பல்லாங்குழி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்து விவரம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள் கமலி.

 

    • அந்த வெள்ளை யுவதி தமிழ் பேசியது காமாட்சியம்மாளுக்குப் பெரிதும் ஆச்சரியமளித்தது. வாழ்நாளில் தன் குரலைத் தானே திரும்பிக் கேட்கும் வாய்ப்பு காமாட்சியம்மாளுக்கு இதுவரை வாய்த்ததே இல்லை. காமாட்சியம்மாளைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கருதின வசந்தி கமலியிடம் ரிக்கார்டரை இயக்கி மாமியின் பதிவுசெய்த பாடலை அவளே திரும்பக் கேட்கும் விதத்தில் ஒலிக்கச் செய்யும்படி வேண்டினாள்.

 

    • “கவனமாக…ரெக்கார்டரிலே தோல் உறை மேலே போட்டிருக்கு…மாமி கிட்டக் கொண்டு போயிடாதே… தோல் மேலே பட்டுட்டா மாமி மறுபடியும் ஸ்நானம் பண்ணப் போயிடுவா…” என்று வசந்தி கமலியின் காதருகே மெல்லிய குரலில் எச்சரிக்கவும் செய்தாள்.

 

    • தான் சற்று முன் பாடியதெல்லாம் காஸெட் ரெக்கார்டரிலிருந்து திரும்ப ஒலிக்கவே மாமி சிறிது நாணினாற்போல் உட்கார்ந்து தன் குரலையே கேட்டுக் கொண்டிருந்தாள். பெரு மதிப்புக்குரிய ஒரு குருவுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவி போல் பவ்யமாக விலகியிருந்து, மரியாதையோடு மாமியின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள் கமலி. ‘பருகுவது போன்ற ஆர்வம்’ என்பார்களே அந்த ஆர்வம் கமலியின் பார்வையில் அப்போது தெரிந்தது.

 

    • தெரு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அதை அடுத்து வேணுமாமாவின் குரலும் திண்ணையிலேயே ‘சிரம பரிகாரம்’ பண்ணிக் கொண்டிருந்த விசுவேசுவர சர்மா அவரை வரவேற்கும் குரலும் உள்ளே தெளிவாகக் கேட்டன.

 

    • “அப்பா பக்கத்து கிராமத்திலே ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தார், இப்பத்தான் திரும்ப முடிஞ்சது போலிருக்கு” என்று கூறியபடியே வாயிற் பக்கமாக எழுந்து போனாள் வசந்தி.

 

    • “என்ன வசந்தீ? எக்ஸ்டேர்னல் அஃபயர்ஸ், இண்டேர்னல் அஃபயர்ஸ் எல்லாம் எப்படி இருக்கு? ரிலேஷன்ஸ் ‘இம்ப்ரூவ்’ ஆறதா இல்லியா?”

 

    • அப்பா தன்னிடம் என்ன கேட்கிறார் என்று வசந்தி உடனே புரிந்து கொண்டு விட்டாள்.

 

    • “‘கல்சுரல் எக்ஸ்சேஞ்ஜ் புரோகிராம்’ மட்டும் சரியா நடந்துண்டிருக்குப்பா! மாமி அம்மானைப் பாட்டுப் பாடி கமலி அதை ‘ரெக்கார்டு’ பண்ணி மாமிக்கே திருப்பிப் போட்டுக் காமிச்சிண்டிருக்கா. வெளி தேசத்திலிருந்து வந்தவள் இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்கிறாளேங்கிற வரை மாமிக்கும் பிரியமாகத் தான் இருக்கு – ஆனா…”

 

    • “ஆனா…என்ன…?”

 

    • “ரவிக்கும் கமலிக்கும் இருக்கிற நெருக்கத்தை பத்திச் சொன்னா அதை மாமியலே ஜீரணிச்சுக்க முடியுமான்னுதான் தெரியலே…”

 

    • “உறவுகளுக்கு முதல் படியா இரண்டு தரப்பிலேயும் நம்பிக்கையை வளர்க்கணும். அது தான் ‘டிப்ளமஸி’ வசந்தி!” என்று புன்முறுவலோடு சொன்னார் வேணு மாமா.

 

    • “ரொம்ப அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் நேருக்கு நேராகச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்துடாதே அம்மா! காமு அவ ஏற்கனவே நெனச்சுண்டிருக்கிற படியே கொஞ்ச நாளைக்கு நெனைச்சுண்டிருக்கட்டும். உடனடியா ஆத்திலே ஒரு கலகம் வேண்டாம். விஷயத்தை அவளே மெல்ல மெல்லப் புரிஞ்சுக்க விடு! புரியறதுலே எத்தனைக்கெத்தனைத் தாமசமாறதோ அத்தனைக்கத்தனை நாம் கொஞ்ச நாள் நிம்மதியாயிருக்கலாம்” என்றார் சர்மா.

 

    • வேணு மாமாவும் வசந்தியும் எத்தனை சுபாவமாக ரவி கமலி உறவு பற்றிய உரையாடலைப் பரிமாறிக் கொண்டார்களோ அத்தனை சகஜமாகவோ சுபாவமாகவோ சர்மாவால் அதைப் பற்றிப் பேசவோ நினைக்கவோ முடியவில்லை. உண்மையில் அதைப் பற்றிக் கவலையும், பயமும் எண்ணற்ற தயக்கங்களும் அவருக்கு இருந்தன.

 

    • அன்று இரவு ரவியையும், கமலியையும் தம் வீட்டில் டின்னருக்கு அழைத்தார் வேணு மாமா.

 

    • “நீரும் வரலாமே…? வந்தால் என்ன?” என்று வேணு மாமா சர்மாவை அழைத்தபோது அவர் வருவார் என்பதை நம்பி அழைப்பதாகத் தோன்றவில்லை. வரமாட்டார் என்ற முடிவுடன் ஒப்புக்கு அழைத்ததாகவே தோன்றியது.

 

    • “உமக்கென்ன? எஸ்டேட் ஒனர். உங்க சிநேகிதாள் எல்லாரையும் கூப்பிடுவேள். ‘காஸ்மாபாலிடனா’ இருக்கும். நான் வைதீகன். எனக்கு ஒத்துக்காது! என்னை விட்டுடுங்கோ… ரவியையும் கமலியையும் நீங்க கூப்பிடறது தான் முறை. அவாதானே இப்போ ஊர்லேருந்து வந்திருக்கா… வேணும்னா எங்காத்துப் பிரதிநிதிகளாகப் பாருவையும் குமாரையும் அவா கூட அனுப்பி வைக்கிறேன்” என்று பதில் வந்தது சர்மாவிடமிருந்து.

 

    • ரவி மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவன் எழுந்திருந்ததும் சொல்லி அழைத்து விட்டுப் போகலாம் என்று ரவிக்காகக் காத்திருந்தார் வேணுமாமா.

 

    • அப்போது தெருவில் மிராசுதார்களுக்கே உரிய மிடுக்கு நடையும் வலது கையில் வெள்ளிப் பூண் பிடித்த வாக்கிங் ஸ்டிக்கும் வாயில் புகையிலைச் சாறுமாக நாலு விவசாயிகள் பயபக்தியோடு கைகட்டி வாய் புதைத்துப் பின் தொடர நடந்து வந்து கொண்டிருந்தார் ஒரு கட்டுக் குடுமிக்கார மனிதர். சரிகைக்கரை வேஷ்டி, மார்பு மறைய போர்த்தியிருந்த மேல் துண்டிலும் சரிகைக்கரை மின்னியது. நெற்றியில் சந்தனப் பொட்டுப் பளபளத்தது.

 

    • “என்ன ஓய் சர்மா. உம்ம பிள்ளை ஊர்லேருந்து வண்டிருக்கானாமே?”

 

    • புகையிலைச் சாற்றைக் கடைவாயில் ஒதுக்கியதில் பேச்சு வார்த்தை குழறியது.

 

    • “ஆமாம்! வாங்கோ சீமாவையர்வாள்!” என்று எழுந்து நின்று வரவேற்றார் சர்மா. ஆனால் வேணுமாமா எழுந்திருக்கவோ, வரவேற்கவோ, முகமன் வார்த்தைகள் கூறவோ செய்யாமல் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகம் வெறுப்பை உமிழ்ந்தது. சர்மா அந்த மனிதரை வரவேற்று எழுந்து மரியாதை செய்ததே வேணுமாமாவுக்கு அப்போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

 

    • “இல்லே… அவசரமாப் போயிண்டிருக்கேன். அப்படமா வந்து பார்க்கறேன்…” என்று வேணு மாமா சர்மாவோடு அமர்ந்திருப்பதைப் பார்த்தே ஒதுங்கினாற் போலத் தம்மைக் கத்தரித்துக் கொண்டு விலகிப் போய் விட்டார் சீமாவையர்.

 

    • “அயோக்கியன்! எந்த வயல் வரப்புச் சண்டைக்கு யாரைத் தூண்டிவிடப் போயிண்டிருக்கானோ?” என்று சர்மாவின் காதில் கேட்கும்படியாகவே முணுமுணுத்தார் வேணுமாமா. சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.

 

    • தூக்கத்திலிருந்து ரவி எழுந்ததும் அவனையும் கமலியையும் இரவு டின்னருக்கு அழைத்துவிட்டு அது சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க வேணுமாமாவோடு வசந்தியும் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

 

    • *****

 

    • இரவு விருந்துக்குப் பத்து இருபது முக்கியமாகவர்கள் வந்திருந்தார்கள். ‘கமலி’தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருந்தாள். பெரும்பாலோர் எஸ்டேட் உரிமையாளர்கள்.

 

    • கமலிக்கு எதிரே டேபிளில் வந்தமர்ந்திருந்த வேணுமாமாவின் நண்பர் சாரங்கபாணி நாயுடுவை அவளுக்கு ரவி அறிமுகப்படுத்தி வைத்தவுடன் அவர் பட்டையாக நெற்றியில் அணிந்திருந்த நாமத்தைப் பார்த்து, இவர் வைஷ்ணவராக இருக்கக் கூடும் என்று கருதிக்கொண்டு ‘அஷ்டாட்சர மந்திரம்’ பற்றியும் இராமாநுஜர் பற்றியும் அவரிடம் ஏதோ கேட்டாள் கமலி.

 

    • நாயுடுவுக்கு அவளுக்குப் புரியும்படி அதை விளக்கிச் சொல்ல வராததால் பேச்சை மாற்றிப் பாரிஸிலுள்ள ‘நைட் கிளப்’களைப் பற்றி அவளிடம் விசாரித்தார் அவர்.

 

    அஷ்டாட்சர மந்திரம் பற்றி அறிய ஆவல் காட்டும் பிரெஞ்சு யுவதியிடம் நைட் கிளப் பற்றி விசாரிக்கும் தென்னிந்திய நடுத்தரவயது வைஷ்ணவரைப் பார்த்து அந்த முரண்பாட்டைப் புன்னகை பூத்த முகத்தோடு தனக்கு உள்ளேயே இரசித்துக் கொண்டிருந்தான் ரவி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 1தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 1

துளசி மாடம் முன்னுரை 1978 ஜூன் மாதம் முதல் 1979 ஜனவரி மாதம் வரை ‘கல்கி’ வார இதழில் வெளியான இந்நாவல் இப்போது புத்தக வடிவில் வெளி வருகிறது. தொடராக வெளிவரும் போதும், நிறைந்த போதும், ஏராளமான அன்பர்களின் நுணுக்கமான கவனிப்பையும்,

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21

அத்தியாயம் 21 ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 18தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 18

அத்தியாயம் 18 வைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளூற வருந்தியிருக்கலாம்! ஆனால் அது தண்ணீரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப்