Tamil Madhura சிறுகதைகள் வல்லிக்கண்ணன் கதைகள் – உள்ளூர் ஹீரோ

வல்லிக்கண்ணன் கதைகள் – உள்ளூர் ஹீரோ

சிவபுரம் சின்னப்பண்ணையார் சிங்காரம் நடித்த சினிமா வெளியாகிவிட்டது என்ற செய்தி சிவபுரம் வாசிகளுக்கு பரபரப்பு அளித்தது. அந்தப்படம் நம்ம ஊருக்கு எப்போ வரும்? இதுதான் அனைவரது கவலையும் ஆயிற்று.

அந்த நல்ல நாளும் விரைவிலேயே வந்தது.

“நம்மூர் சின்னப்பண்ணையார் நடித்த அற்புதமான படம்” என்று அச்சடித்த விளம்பரத் தாள்கள் சுவர்களை அழகு செய்தன. தட்டிகளில் மினுங்கின. பஸ்களில் பளிச்சிட்டன.

அவை குறிப்பிட்டிருந்த தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் சிவபுரம்காரர்கள்.

அவர்களுக்குப் பெருமையாவது பெருமை! அளக்க முடியுமா அதை?

“நம்ம பண்ணையார் நடிச்சபடம் வருது”.

“சின்னப் பண்ணை சக்கைப்போடு போட்டிருப்பாரு. பாத்திடவேண்டியது தான்.”

“பின்னே நாடக மேடையிலே ஜமாய்த்து ஒகோன்னு பேர் வாங்கியவராச்சே! சினிமாவிலே கேட்கணுமா?”

இந்த விதமான பேச்சு தெருக்களிலும் டீக் கடைகளிலும், பஸ் நிலையத்திலும், எங்கும் எப்போதும் அடிபட்டுக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு சிவபுரம் வட்டாரத்தில் தனது கீர்த்திக் கொடியை நிலை நாட்டியிருந்தார் சின்னப்பண்ணையார் சிங்காரம்.

சினிமாவில் நடித்து தனது புகழ்க்கொடியை மேலும் பறக்கவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ரொம்பகாலமாக இருந்தது. அதற்காகவே அவர் தன்னை தயார்படுத்தி வந்தார்.

சிங்காரத்துக்கு படிக்கிற காலத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட ஆண்டு விழாவின்போது ஸ்கூல் டிராமாவில் அவர் முக்கிய வேடம் தாங்கி நடிப்பது வழக்கம். அப்பவே அருமையாக நடிப்பார் என்று சக மாணவர்களும் மற்றும் பலரும் சொல்வது உண்டு.

படிப்பை முடித்துக் கொண்டு சிங்காரம் சின்னப் பண்ணையாராய் வீட்டோடு தங்கிவிட்டபோதும், நடிப்புக் கலையில் அவருக்கு இருந்த மோகம் தணியவில்லை. “சிவபுரம் ரிக்ரியேஷன் கிளப்” என்று ஒன்றை ஆரம்பித்தார். சீட்டுக்கச்சேரி முக்கிய பொழுதுபோக்கு என்றாலும், அவ்வப்போது பிக்னிக் போவது, எப்பவாவது வேட்டைக்கு என்று சொல்லி காடுகள் மலைகள் பக்கம் திரிவது, டென்னிஸ் விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் அவரும் அவருடைய நண்பர்களும் ஈடுபட்டார்கள். அனைத்தினும் மேலாக, வருடத்துக்கு இரண்டு மூன்று நாடகங்கள் நடித்து மகிழ்வார்கள்.

எல்லாவற்றுக்கும் மூல காரணம் சின்னப்பண்ணை சிங்காரம் தான். அவர் கதாநாயகனாகத் தோன்றி அட்டகாசமாக நடிப்பார். எந்த வேடம் போடவும் தயங்க மாட்டார். ஆனால், பகட்டாக விளங்க ஆசைப்படுவார். ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்குமா இராதா என்ற கவலை அவருக்குக் கிடையாது.

“மார்க்கண்டேயர்” நாடகத்தில் சிங்காரம் “முன் குறத்தி”யா கவும் “பின் எமன்” ஆகவும் நடிப்பது உண்டு. அதாவது, முதலில் குறத்தி வேடம்; பின்பகுதியில் அவரே எமனாக வருவார். குறத்தியாக வரும்போது, அவர் விலை உயர்ந்த சில்க் புடவை, கையில் அருமையான ரிஸ்ட் வாட்ச், கால்களில் ஸ்டைலான ஸ்லிப்பர்கள் அணிந்து வருவார். எமன் வேடத்தின் போது, தங்க விளிம்புடன் மினுமினுக்கும் “கூலிங்கிளாஸ்” அணிந்துகொண்டு காட்சி தருவார்.

பார்க்கிறவர்கள் தங்களுக்குள் குறை கூறிக் கொள்வார்கள். பரிகாசமாகப் பேசுவார்கள். ஆனால் பண்ணையார் முன்னே விமர்சிக்கமாட்டார்கள். “குறத்தி ஆக்டிலே கொன்னுட்டீங்க போங்க! “. “எமன் அடா அடா என்ன ஆர்ப்பாட்டம் எத்தனை மிடுக்கு அபாரமான நடிப்பு. பிரமாதம் ஐயா பிரமாதம்” என்ற ரீதியில் புகழ்ந்து தள்ளுவார்கள் அவரிடம்.

“நம்ம பண்ணையார் சரியான வேஷப் பிரியன்” என்றும் ஊர்காரர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். வாழ்க்கை கூட அவருக்கு நாடகமாகத்தான் தோன்றியதுபோலும். ஒரு ஹீரோ வாகத் தன்னை எண்ணிக் கொண்டு அலங்காரத் தோற்றத்தோடு ஊர் சுற்றுவார். விதம்விதமான டிரஸ்கள். கழுத்தணிகள். விசித்திரமான தலை முடிச் சிங்காரிப்புகள். இவற்றோடு சிங்காரம் ஜம்மென்று பவனி வருவதை சிவபுரம்காரர்கள் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

பண்ணையார் ஒரு மோட்டார் பைக் வாங்கினார். அதில் எடுப்பாக அமர்ந்து வேகமாகப் போய் வந்தார். “சினிமாவிலே மோட்டார் பைக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். அதுக்காக இப்பவே டிரெய்னிங்” என்று அவர் நண்பர்களிடம் சொன்னார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருக்கிறது என்பது இது போன்ற அவரது பேச்சுக்களினால் அவ்வப்போது விளம்பரமாயிற்று.

சிங்காரம் அந்த ஊர் தியேட்டருக்கும், அருகில் உள்ள நகரத்தில் இருந்த தியேட்டர்களுக்கும் வருகிற எல்லாப்படங் களையும் பார்த்துவிடுவார். தனியாகப் போக மாட்டார். சில நண்பர்களையும் உடன் அழைத்துப் போவார். தாராளமாக காப்பிடிபன் சப்ளை பண்ணுவார்.

படம் பார்க்கிறபோதே, “இவன் என்ன நடிக்கிறான், மொண்ணை மூஞ்சி! நானாக இருந்தால் இந்த இடத்திலே பிய்ச்சு உதறி இருப்பேன், தெரியுமா?… முண்டம், நடிக்கிறானாம் நடிப்பு. இப்படியா இஸ்பேட் ராஜா மாதிரி நிற்கிறது? சே, நான் என்றால் என்ன பண்ணுவேன் தெரியுமா?” என்ற தன்மையில் தொன தொணப்பார்.

நண்பர்கள் அவருடைய சிநேகத்தை இழக்க விரும்பாத காரணத்தினாலே, சிங்காரம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். “ஆமா அது சரிதான்” என்று என்னவா வது சொல்லி வைப்பார்கள்.

“நீங்க சினிமாவிலே நடிக்கத்தான் வேண்டும். ஜோரா ஆக்ட் பண்ணி, ஒரே படத்தில் ஸ்டார் ஆகிவிடுவீங்க!” என்று சொல்லி அவர் தலையில் ஐஸ் வைத்தார்கள் சில பேர்.

“நடிக்காமலா போகப்போறேன்பின்னே! பார்த்துக்கிட்டே யிருங்க. ஒருநாள் ஐயாவாள் சினிமா ஸ்டார் ஆகி ஜொலிக்கப் போறது நிச்சயம்” என்று, ஒரு சுவால்மாதிரி அறிவித்தார் சிங்காரம்.

அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவும் தவறவில்லை. யார் யாருக்கெல்லாமோ கடிதங்கள் எழுதினார். சென்னைக்கு சில தடவைகள் போய் வந்தார். சிவபுரம் பக்கம் வந்த திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு தடபுடலாக விருந்து உபசாரம் செய்தார்.

வேட்டையாடவும் அவரை அழைத்துப் போனார். அந்த அன்பரும் “சான்ஸ் வரும்போது உங்களுக்கு தந்தி கொடுக்கிறேன்” என்று சொல்லிப்போனார்.

சும்மா இருக்க முடியுமா சிங்காரத்தால்? அவர் அடிக்கடி நடிப்புப் பயிற்சிகள் செய்துகொண்டிருந்தார். பெரிய கண்ணாடி முன்னே நின்று முகத்தைச் சுழித்தும் இளித்தும் பலவிதக் கோரணிகளும் பண்ணிக் களித்தார். முகபாவங்களை நடிததுப பழகினார் அப்படி, உத்திரத்திலிருந்து கயிறு கட்டித தொங்கி, தூண்மேலே ஜம்ப் பண்ணிப் பழகினார். ஸ்டண்ட் நடிப்புக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதுபோன்ற சமயங்களில் சிங்காரத்தைப் பார்க்க நேரிட்டவர்கள், “இவருக்கு பைத்தியம் பிடிச்சிட்டுது போலிருக்கு! என்றுதான் நினைத்தார்கள். அவ்வளவுக்கு சினிமா நடிப்புப் பித்து சின்னப்பண்ணையாரை ஆட்டி வைத்தது.

திடீரென்று சிவபுரம் வாசிகள் ஒரு புதிய காட்சியைக் கண்டார்கள். சின்னப் பண்ணையார் குதிரை மீது பவனி வந்தார்.

அருமையான குதிரை ஒன்றை வாங்கி, சவாரி பழகி, சிங்காரம் அதன் மீதமர்ந்து ஊரைச் சுற்றினார். காலையிலும் மாலையிலும் ஊர்ப் புறத்து ரோடுகளில் வேகமாகக் குதிரை சவாரி செய்தார். சினிமா ஹிரோ குதிரை மீது செல்கிற கட்டங் களை அவர் கற்பனை செய்து கொண்டு அவ்வாறெல்லாம் திரிந்தார்.

தேர்ந்த வாத்தியார் ஒருவரை ஏற்பாடு செய்துகொண்டு வாள் பயிற்சி, சிலம்ப வித்தை எல்லாம் கற்கலானார் அவர். எதைச் செய்தாலும் சினிமா ஹீரோ என்ற கோணத்திலேயே அவர் இயங்கினார்.

“சினிமாவிலே நடிக்கிற சான்ஸ் கிடைக்காமல் போனால், ஐயா அவுட் ஆயிடுவார் போலிருக்கே! அந்த ஏக்கத்திலேயே பைத்தியம் ஆயிடுவாரு” என்று அவரை அறிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

“நான் கூடிய சீக்கிரம் மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். இங்கே வந்திட்டுப் போனாரில்லே சினிமா டைரக்டர், அவர் லெட்டர் எழுதியிருக்காரு. ஒரு சான்ஸ் கிடைக்கும்னு தோணுது” என்று சிங்காரம் ஒரு நாள் செய்தி அறிவிப்பு செய்தார்.

அது வேகமாகவே சிவபுரம் நெடுகிலும் பரவியது. “நம்ம சின்னப் பண்ணையார் சினிமாவிலே நடிக்கப்போறாரு!” என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டார்கள் ஊர்க்காரர்கள்.

“டைரக்டரிடமிருந்து ட்ரங்கால் வந்தது. நாளைக்கு நான் புறப்படுகிறேன்” என்று சிங்காரம் தெரிவித்தார் ஒருநாள்.

அவர் சென்னைக்குப் புறப்படுவதற்கு முந்திய நாள் மாலை டிப்டாப்டாக டிரஸ் செய்துகொண்டு, குதிரை மீது அமர்ந்து ஜம்மென்று ஊர்வலம் வந்தார். அதையும் போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

சின்னப் பண்ணையாரின் பங்களாச் சுவர்களில் அப்படி ஏகப்பட்ட போட்டோக்கள் தொங்கின. விதம் விதமான போஸ்களில் சிங்காரம் காட்சி தரும், சிரித்து விளங்கும் போட்டோக்கள்.

“இனமேல் சினிமா ஸ்டில்களையே ஃபிரேம் பணணி மாட்டி விடலாம்” என்று அவர் மனம் எண்ணியது.

“சிவபுரம் ரிக்ரியேஷன் கிளப்” சிங்காரத்துக்குப் பிரிவு உபசாரக் கூட்டம் நிகழ்த்தியது. அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டிப் பலர் பேசினார்கள். மாலைகள் சூட்டினார்கள்.

அவர் பிரயாணம் கிளம்பிய மாலையில் அவரை வழி அனுப்புவதற்காகப் பெரும் கூட்டம் திரண்டு நின்றது. ரயில்வே நிலையத்தில் ஏகப்பட்ட மாலைகள் அவருக்கு அணிவிக்கப் பட்டன. எக்ஸ்பிரஸ் புறப்பட்டபோது, “நம்ம ஊர் ஹிரோ வாழ்க! சினிமா ஹீரோ சின்னப்பண்ணை சிங்காரம் அவர்களுக்கு ஜே!” என்ற கோஷங்கள் ஒலித்தன.

சிங்காரம் வாசலில், சினிமா ஹீரோவுக்கு உரிய தோரணை யோடு நின்று, ஒய்யாரமாக போஸ் கொடுத்து, அழகாகச் சிரித்து, ஸ்டைலாகக் கையசைத்தார். வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கிறவரை அவர் அவ்வாறே கையசைத்து, பிரியா விடை பெற்று நின்றார்.

அவரைப் பற்றியும், அவர் நடிக்கப் போகிற படம் பற்றியும் கற்பனையோடு சுவாரஸ்யமாக அளந்து மகிழ்ந்தபடி உள்ளூர் அன்பர்கள் பிரிந்து போனார்கள்.

சில மாதங்கள் சிங்காரம் சென்னையிலேயே தங்கிவிட்டார். படம் சம்பந்தமான வேலைகள் முழுவதும் முடிந்த பிறகுதான் அவர் சிவபுரம் திரும்பினார்.

சிங்காரத்தின் நண்பர்கள் அவரைக் கண்டுபேச வந்தார்கள். மற்றும் பலரும் அவரைப் பார்த்துக் கும்பிடு போட்டு நலம் விசாரித்தார்கள்.

எல்லோரிடமும் சொல்வதற்கு சின்னப் பண்ணையாரிடமும் விஷயங்கள் நிறையவே இருந்தன. சென்னை மாநகரம் பற்றியும், சினிமா உலகம் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும் அவர் கதைத்தார். அவர் நடித்த படம் குறித்தும் பொதுவாக நிறையச் சொன்னார்.

“அதில் நீங்கள்தான் ஹிரோவா?” என்று கேட்டார் ஒருவர்.

சினிமாச் சிரிப்பு சிரித்தார் சின்னப் பண்ணை. “நாமெல்லாம் முதல் சான்சிலேயே ஹிரோ ஆகிவிட முடியுமா!” என்றார் அலட்சியமாக.

“வில்லன் வேஷம்….”, என்று ஒருவர் தயங்கித் தயங்கி சொற்களை மென்றார்.

“வில்லன் ஆக்டிலேகூட ஜமாய்க்கலாம். டாப் ஆகக்கூட இருக்கும். ஆனா, நமக்கு வில்லன் ஆக்ட் சரிப்படாது. ஒரு படத்திலே வில்லனாக வந்தால் அப்புறம் வர்ற படங்களிலே எல்லாம் வில்லனாக நடிக்கிற சான்சுதான் கிடைக்கும். நல்ல ரோல்களிலே வரணும்” என்று சிங்காரம் லெச்சர் அடித்தார்.

“காதல் காட்சிகள் உண்டா உங்க படத்திலே?” இது ஒருவர் கேள்வி.

உலகம் தெரியாத ஒரு அப்பாவியைப் பார்ப்பதுபோல் பண்ணையார் அவரைப் பார்த்தார். “இந்தக் காலத்திலே லவ் ஸீக்குவன்ஸ் இல்லாமல் படம் ஏதய்யா? காதல் காட்சிகள், கனவுகள், பாட்டுகள் எல்லாம் உண்டு படத்திலே” என்று பொதுப்படையாகப் பேசினார் சிங்காரம்.

அவருக்கு என்ன வேடம், அவர் எப்படி நடித்திருக்கிறார் என்று எவரும் எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை, சிங்காரம் பேச்சுகளிலிருந்து.

அதை தூண்டித் துருவிக் கேட்ட ஒன்றிரு பேர்களிடம்கூட, “படம் வரும். அப்ப பார்த்துக்கிடுங்களேன். என்ன அவசரம்” என்று சொல்லி, பேச்சை முடித்துவிடுவார் பண்ணையார்.

இதனால் எல்லாம் சிவபுரம் வாசிகளின் ஆசை தூண்டி விடப்பட்டிருந்தது. “நம்ம பண்ணையார் நடித்த படத்தை அது வந்த உடனேயே பார்த்துவிட வேண்டியதுதான்!” என்று அனைவரும் தீர்மானித்திருந்தார்கள்.

அந்தப் படம் அவர்கள் ஊருக்கே வந்துவிட்டது.

ஊராரின் மனநிலையை அறிந்து வைத்திருந்த தியேட்டர்காரர்களும் “நம் ஊர் சின்னப் பண்ணையார் சிங்காரம் நடித்த படம்! காணத் தவறாதீர்கள்!” என்று விளம்பரப்படுத்தி விட்டார்கள்.

முதல் காட்சியிலேயே பார்த்துவிட வேண்டும் என்று முண்டி அடித்து மோதிச் சாடினார்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக.

அவர்கள் மனசில் விதம் விதமான எதிர்பார்ப்புகள். படத்தின் ஹிரோ அவராக இருப்பார் என்று எண்ணியவர்களுக்கு முதலி லேயே ஏமாற்றம் கிட்டிவிட்டது. புகழ் பெற்ற ஸ்டார் நடிகர் ஒருவரின் பெயர் எடுப்பாக போஸ்டர்களில் காணப்பட்டது. இருந்தாலும், நம்ம பண்ணையார் துணை ஹிரோவாக வரக்கூடாதா என்று அவர்கள் நினைத்தார்கள்.

யார் யாரோ ஜோடியுடன் அவர் ஜோராக ஆக்ட் பண்ணியிருப்பார் என்று அநேகர் எதிர்பார்த்தார்கள்.

படம் ஆரம்பித்து ஓடியது. ஒடிக்கொண்டே இருந்தது.

“என்ன நம்ம ஆளை இன்னும் காணோம்” என்று பரபரத்தது ரசிகர்களின் மனம்.

இடைவேளை வந்தது.

“இதுவரை சின்னப் பண்ணையார் தலை காட்டவேயில்லையே! அவர் நடிச்ச பாகம் படத்திலே இருக்குதோ இல்லையோ!” என்று முணுமுணுத்தார்கள் சில சந்தேகப் பிச்சுகள்.

அவர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்!

இடைவேளைக்குப் பிறகு படம் விறுவிறுப்பாக வளர்ந்தது. ஹிரோ நடிகர் பல வேலைத்தனங்கள் பண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு கூட்டம். ஹீரோவை தாக்குவதற்காக நாலைந்து பேர் ஓடி வருகிறார்கள். ஹிரோ கால்களாலும் கைகளாலும் அவர்களுக்கு செம்தியாகக் கொடுக்கிறார். அப்போது “விடாதே, பிடி, உதை” என்று கூவிக்கொண்டு மூன்று பேர் வருகிறார்கள். ஹிரோவின் ஆட்கள். எதிரிகளோடு மோதுகிறார்கள். குத்து கிறார்கள். எதிரிகளை விரட்டி அடித்து, வெற்றி மிடுக்கோடு ஹிரோவைப் பார்க்கிறார்கள்.

“ஹ்விட். ஹ்விட்டோ ஹ்வீட்!”

தரை ரசிகர்கள் மத்தியிலிருந்து ஒரு விசில் ஒசை, “அதோ சின்னப் பண்ணையார்” என்றொரு கூவல்.

எல்லோரும் பார்த்து விட்டார்கள் – சிங்காரத்தின் நிழலை. குத்துவீரர் மூவரிலே ஒருவர். எதிரியைத் துரத்திவிட்டு வெற்றிச் சிரிப்பு சிரித்து நின்றார்.

படம் ஓடி, காட்சிகள் வளர்ந்தன. ஆனாலும், சிங்காரம் அப்புறம் தென்படவேயில்லை. சப்பென்றாகி விட்டது சிவபுரம் காரர்களுக்கு.

“பத்து நிமிடம் கூட வரவில்லை அவர். என்னவோ நாமும் படத்திலே நடிச்சிட்டோம் என்று பேருக்கு வந்து போகிறார் நம்ம பண்ணையார். ப்சு, இவ்வளவுதானா”

உள்ளூர் ரசிகர் ஒவ்வொருவரின் மனமும் செய்த விமர்சனம் இதுதான். என்றாலும் தியேட்டர்காரருக்கு திருப்தி –

“படம் இரண்டு வாரம் வெற்றிகரமாகப் போகும். நம்ம பண்ணையார் நடித்த படம் என்பதுக்காக சிவபுரம்காரர்கள் எல்லோரும் படத்தை, கண்டிப்பாகப் பார்த்துப் போடுவாங்க.”
(“சினிமிக்ஸ், 1984)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லிக்கண்ணன் கதைகள் – மனம் வெளுக்கவல்லிக்கண்ணன் கதைகள் – மனம் வெளுக்க

சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார். ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ! அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து

குமரன்குமரன்

டீ, காபி என்ற  இரைச்சலும், வழி அனுப்ப வந்த உறவினர்களுடன் பயணிகளின சலசலப்பு, நடுவே பாம் என்ற ஓசையுடன் ட்ரெயின் வந்து நிற்பதும், அதன் பின் கிளம்பி செல்வதும், போர்ட்டர்கள் லக்கேஜ்களை இழுத்து செல்லும் ஒலியும், அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையும்

சிலிகான் மனதுசிலிகான் மனது

தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி . பலவண்ண பூக்களிடமிருந்து எல்லா  திக்கும் பரவிய நறுமணம் என்று காண்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும்