Tamil Madhura சிறுகதைகள் தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)

தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)

ருமருங்கும் வானைத் தொட்டு உயர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்களுக்கு மத்தியில், வளைத்து நெளிந்து சென்ற மலைப்பாதையில்… மெதுவாக ஊர்ந்தது அந்த இனோவா. மழையின் ஊடே உதகமண்டலத்தில் அந்த சரிவான பாதையில் வண்டியை ஓட்டுவது சிரமமாகவே இருந்தது காண்டீபனுக்கு.

அதில் பயணித்த அனுஜா காண்டீபன் இருவரும் பன்னாட்டு கம்பனி ஒன்றில் வேலை செய்வதால் தங்களது கலாச்சாரத்தையும் அப்படியே உருமாற்றிக் கொண்டவர்கள்.

ஐந்தடி உயரத்திலிருந்த அனுஜா ஹைஹீல்ஸ் செருப்பு, அபாயகரமான கிராப் டாப் மற்றும் மினிஸ்கர்ட்டுடன் காட்சியளித்தாள். அதற்குக் கொஞ்சமும் குறையமால் ரிப்ட் ஜீன்ஸ், வயத்து பக்கத்தில் கிழிஞ்ச டீஷர்ட், காதில் கடுக்கன் போட்டது பத்தாதுன்னு புதுசா நாக்கில் வேற தோடு என்று பெண்களுக்கே சவால் விடும் பேஷன் சிம்பலாய் இருந்தான் காண்டீபன்.

“அம்மா அப்பா கூட பொட்டானிக்கல் கார்டனுக்கு வந்தது. கலர் கலர் பூ, செடி கொடிகளை வச்சு எப்படி விதவிதமா பறவைகள், மிருகம்னு செட் பண்ணிருப்பாங்கன்னு தெரியுமா? மார்வலஸ்… “ சிலாகித்தபடி சொன்னாள் அனுஜா.

தனது ஹான்ட்பாகை திறந்து டச் அப் செய்து கொண்டாள். தலை முடியை சரி செய்து கொண்டு லிப்ஸ்டிக்கை மேலும் தீட்டினாள். கைப்பையிலிருந்த சென்ட்டை இன்னொரு முறை ஸ்ப்ரே செய்தது கண்டு வண்டியோட்டிக் கொண்டிருந்த காண்டீபன் முறைத்தான்.

 

“அறிவிருக்கா உனக்கு… மேக் அப் பண்ற நேரமா இது. என்ன விஷயத்துக்கு போறோம்னு புரியாம இத்தனை லிப்ஸ்டிக்கும், மேக்கப்பும்… ஷ்… ஹப்பா… துக்கம் விசாரிக்கப் போறோம். அதுமாதிரியா டிரஸ் பண்ணிருக்க..”

“நீ மட்டும் எப்படி டிரஸ் போட்டிருக்க…” என்று அவள் குத்திக் காட்டியதும்.

“வாசனோட அம்மாவுக்குக் கண்ணு தெரியாது. அந்த தைரியத்தில்தான் இந்த டிரஸ்”

“அதே தைரியம்தான் எனக்கும்”

“எதுக்கு இவ்வளவு மேக்அப்” எரிச்சலான குரலில்

“போன தடவைதான் எங்கேயும் கூட்டிட்டு போகல இந்த தடவை எங்கயாவது போலாமே”

“நம்ம ஊட்டிக்கு வந்ததே வாசனோட வீட்டுக்கு போக மட்டும்தான். உன் மத்த ப்ளான்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வை” என்றான்

“அதுக்கும், என்னைக் கொலை பட்டினியா கூட்டிட்டுப் போறதுக்கும் என்ன காரணம்”

“சிச்சுவேஷன் என்னன்னா, நம்ம கூட வேலை செஞ்சவன் செத்துட்டான். கண்ணு தெரியாத அவனோட அம்மாட்ட துக்கம் விசாரிக்கப் போறோம்… குரலில் கொஞ்சமாவது ஒரு பீலிங் வேண்டாம். பட்டினி இருந்தால்தான் உனக்கெல்லாம் அது வரும்” என்றான் கடுப்பாக.

கார் பள்ளம் ஒன்றில் ஏறி இறங்கியதும் உடம்பில் அனைத்து எலும்புகளும் ஒரு குலுங்கு குலுங்கிய உணர்வு. “போன தடவையோட இந்த தடவை ரோடு மோசம்” என்றாள்.

“வாசனோட அம்மா பேரு ஜெயமாலாதானே ”

“ஆமாம்”

“கண்ணு இல்லாம வாழுறது எவ்வளவு பெரிய கஷ்டம். இப்ப யாரு அவங்களைப் பாத்துக்குறாங்க” மஸ்காராவை கண்களில் தீட்டியவாறு கேட்டாள்.

“வாசனோட அக்கா கூட தங்கிருந்தாங்க போலிருக்கு. இப்ப அவங்க வீட்டுக்கு போயிட்டாங்களாம். வீடு கூட பக்கம்தான் போலிருக்கு. அப்பறம் ஒரு வேலைக்காரி காலைல வந்துட்டு சாயந்தரம் ஏழு மணிக்கு போவாளாம். நைட் பதினோரு மணிக்கு கூர்க்கா ஒருத்தன் காவலுக்கு வருவானாம்”

“இப்ப மணி என்னாச்சு?” இருண்டு கிடந்த சுற்றுப்புறத்தையும் அதற்கு நடுவே தெரிந்த சிறு சிறு வீடுகளையும் பார்த்தவாறே கேட்டாள்.

“எட்டரை”

ஸ்னோடன் ரோட்டைத் தாண்டிய அவர்களது கார்  சற்று தள்ளி அமைந்திருந்த தனியான அந்த அழகு வீட்டின் முன் நின்றது.

“டிங் டிங்” என்ற காலிங் பெல்லின் ஓசைக் கேட்டு கதவைத் திறந்து போர்ச்சுக்கு வந்த ஜெயமாலாவுக்கு அதிகபட்சம் ஐம்பத்தி ஐந்து வயதிருக்கும். மாநிறத்திலும் வெகு திருத்தமான முகம் சிறு வயதில் அழகியாய் இருந்திருப்பார். அப்படியே வாசனின் முக ஜாடை அவருக்கு.

கண்களுக்கு அந்த இரவு வேளையில் கூட கறுப்புக் கண்ணாடி தந்திருந்ததைப் பார்த்து அனுஜா சிரிக்க, அவளை முறைப்பால் அடக்கினான் காண்டீபன்.

இந்த நாடகம் எதையும் அறியாத ஜெயமாலா வாசனின் தோழர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்களை உள்ளே வரவேற்றார்.

“சாரி ஆன்ட்டி சீக்கிரமே வரணும்னு முயற்சி பண்ணோம் இருந்தும் நேரமாயிடுச்சு”

வீடு முழுவதும் சிறு சிறு செடிகள், அதில் பூக்கள் என்று கலர்புல்லாக இருந்தது.

“பரவால்ல. இந்த நேரமெல்லாம் எதையாவது நினைச்சுட்டு உக்காந்திருப்பேன். நீங்க என்னைத் தேடி வந்தது என் தனிமைக்கு ஆறுதலா கூட இருக்கு”

“இங்க இருக்குறதை விட நீங்க உங்க மகளோட வீட்டுக்குப் போயிடலாமே”

“பிரச்சனை இல்லப்பா… வாசன் மெட்ராஸ்ல இருந்தப்பக் கூடத் தனியாத்தானே இருந்தேன். அவன் தினமும் இந்த நேரத்துக்கு போன் பண்ணுவான். அதுக்காகக் காத்துட்டு இருப்பேன். இப்ப அவனை ரொம்ப மிஸ் பண்ணுறேன்” அவரது குரலில் கரகரப்பு.

“சாரி ஆன்ட்டி வாசனுக்கா இந்த நிலைமைன்னு நினைக்கும் போது நம்பவே முடியல. சத்தம் போட்டுக் கூட பேசமாட்டான். அவனைக் கொல்லுற அளவுக்கு என்ன காரணம் இருக்கும். ஏதாவது பிரச்சனையைப் பத்தி உங்ககிட்ட சொல்லிருக்கானா”

“அதுதான் எனக்கும் புரியல. மாசம் ஒரு தடவை மூணு நாள் தங்கிட்டு போவான். ஆனால் அன்னைக்கு வழக்கத்துக்கு மாறா திடீருன்னு ஒரு நாள் சாயந்தரம் நாலு மணிக்கே  வீட்டுக்கு வந்தான். நானோ ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.

என்கிட்டே ‘அம்மா வேற வேலைக்கு போலாம்னு பாக்குறே’ன்னு சொன்னான். வீட்டுக்கு வந்ததும் ராத்திரி பேசலாம்டான்னு சொல்லிட்டுக் கிளம்பினேன். ராத்திரி வந்தப்ப என் மகன் உயிரோட இல்லை. யாரோ சுட்டுட்டாங்க… “ விம்மினார்.

“அழாதிங்க ஆன்ட்டி” அவரருகே அமர்ந்த அனுஜா கண்களைத் துடைத்தாள். எதிலும் பெரிதாகப் பற்றுதல் இல்லாத அவளுக்கே அவரது நிலையைக் கண்டு பரிதாபமாக இருந்தது.

“இது எப்படி நடந்தது. அவனுக்கு  வேற எங்க வேலை கிடைச்சது. ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா… இந்தக் கேள்விக்கெல்லாம் எனக்கு விடை கிடைக்கவே இல்லை” ஜெயமாலா கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“நாங்களும் அந்தக் கேள்விகளுக்கு விடை தேடிட்டு இருக்கோம். எங்களுக்கும் கிடைக்க மாட்டிங்குது” என்றான் காண்டீபன்.

ஆழமாக மூச்சினை இழுத்தவர் “ஏம்மா அந்த நெட்டுக்குள்ள இருந்த செடில பூத்திருந்த  சிவப்பு பூவை பறிச்சியா” என்றார்.

“ஆமாம் ஆன்ட்டி”

“அந்தப் பூவை வச்சிருந்தால் வண்டு, ஈசல் எல்லாம் வாசம் அட்ராக்ட் பண்ணும். அதனால அதை அதிலேயே வச்சுடு உனக்கு வேற பூ தரேன்” என்றார்.

 

“வாசத்தை வச்சே கண்டுபிடிச்சுட்டிங்களா ஆன்ட்டி. எனக்கு அவ பெர்பியூம் வாசம் மட்டும்தான் தெரியுது” என்றான் காண்டீபன்.

“உன்னோட பெர்பியூமை விட இந்தப் பூவின் வாசம் ஸ்ட்ராங். பாத்துக்கோ” என்றார் தருவித்துக் கொண்ட சிரிப்புடன்.

சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு “பேசாம இந்தப் பூவை வீட்டில் வளர்த்தால் சென்ட்டு வாங்கும் செலவு மிச்சம்” என்றான் காண்டீபன்.

“போடா இந்த பெர்பியூம் பத்தி உனக்கெங்கே தெரியப்போகுது. இது  ‘டாம் போர்ட்’ஸ் ஜாஸ்மின் ரோஜ்’ ப்ரேக்ரன்ஸ், என் பேவரேட். எங்கப்பா யூரோப்லேருந்து வாங்கிட்டு வருவர். இதைத் தவிர நான் வேற எதுவுமே  யூஸ் பண்ண மாட்டேன்” என்றவளிடம்.

“பேசிட்டே இருக்கேன் பாருங்க… உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்றவாறு எழுந்தார்.

“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி” என்று அவசரமாக மறுத்தான் காண்டீபன்.

“வாசன் இருந்தால் இப்படி சொல்லுவிங்களா…” என்று கேட்டவரிடம்

“அப்ப டீ மட்டும் போதும் ஆன்ட்டி”

“நீங்க கேட்டாலும் வீட்டில் சாப்பாடு இல்லை. வேலைக்காரி கிளம்பிட்டா. நானும் எட்டு மணிக்கே சாப்பிட்டுட்டேன். உங்களுக்கு டீயும் பிஸ்கட்டும்தான்” என்றார்.

சமையலறையில் நுழைந்தவரின் கூடவே உதவச் சென்றாள் அனுஜா.

காலி டின்னை துளாவிப் பார்த்துவிட்டு “பிஸ்கட் தீர்ந்துடுச்சே… “ என்றவர் “ப்ரெட் டோஸ்ட் போட்டுத்தரட்டுமா” என்றார்.

“சரி ஆன்ட்டி” என்றால் அனுஜாவும் தயங்காமல்

“நான் டீத்தூள் சர்க்கரை எல்லாம் எனக்கு சௌகரியமா கைக்கு எட்டுற மாதிரி வச்சிருப்பேன். நீ கலைச்சுட்டா எனக்கு கஷ்டமாயிடும். நீங்க ஹாலில் உக்காந்து டிவி பாருங்க. நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார்.

“ஒகே நாங்க டிவி பாக்குறோம்” என்று விட்டு வெளியே சென்றாள். ஹாலில் காண்டீபன் இல்லாததைக் கண்டுவிட்டு டிவியை ஆன் செய்து சத்தமாக வைத்தாள். பின்னர் பூனை நடை நடந்து மாடிக்கு சென்றாள். அங்கு வாசனின் ரூமிற்குள் மெதுவாகப் புகுந்தாள்.

லைட்டைப் போட்டுவிட்டு அங்கிருந்த பொருட்களை சத்தம் அதிகம் எழுப்பாமல் தேடிக் கொண்டிருந்தான் காண்டீபன். அவளைக் கண்டதும் முறைத்தான்

“உன்கிட்ட என்ன சொன்னேன். அந்தக் கிழவிகிட்ட பேச்சுக் கொடு லாப்டாப்பை நான் தேடி எடுத்துடுறேன்னு தானே சொன்னேன். இப்ப அந்தம்மா வந்துட்டா நம்ம மாட்டிப்போம்”

“அதுக்கு நம்மளைத் தெரியவா போகுது. அந்தம்மா தானே டீ போட்டுக் கொண்டு வரேன்னு சொல்லிருக்கு. நான் டிவியை சத்தமா வச்சுட்டு வந்திருக்கேன். ஒண்ணும் கேட்காது”

“போலிஸ் கிட்ட மாட்டிருக்க சான்ஸ் இருக்கா?”

“நான் விசாரிச்சேன்… இல்லை”

“நம்ம லேப்டாப்பில் இருந்ததை இந்நேரம் வேற எங்கயாவது அப்லோட் பண்ணிருக்கப் போறான்” என்றாள் பதட்டமாக.

“வாய்ப்பே இல்லை. அதுக்குள்ளே இருந்ததெல்லாம் சீக்ரெட்  டேட்டாக்கள். ஒரு வருஷம் கஷ்டப்பட்டுத் திருடினது. இந்நேரம் வித்து நம்ம மில்லினராயிருக்க வேண்டியது.

பாவி வாசன், நேர்மை, நீதின்னு பேசி எதையோ காப்பாத்தப் போற மாதிரி நமக்கே புத்தி சொல்லிட்டு லாப்டாப்பை வேற தூக்கிட்டு வந்துட்டான்”

“அதுதான் அன்னைக்கு ராத்திரியே நம்ம அவனை மோப்பம் பிடிச்சு வந்து சுட்டுக் கொன்னுட்டோமே. நாயி சுடுறதுக்கு முன்ன கூட லாப்டாப் பத்தி வாயத் திறக்கல” அனுஜாவின் குரலில் எரிச்சல்.

“அதுனாலதான் சொல்றேன் அவனால லாப்டாப்பை மறைச்சு வச்சிருக்க முடியுமே தவிர அதிலிருக்கும் இன்பார்மேஷனை அப்லோட் பண்ண நேரமிருந்திருக்காது”

“இன்னைக்கு வேணும்னா கிழவியை போட்டுத் தள்ளிட்டு மறுபடியும் தேடலாமா”

“கொஞ்சம் டைம் தரலாம், விசாரிக்கலாம், சரிவரலைன்னா போட்டுடலாம். லாப்டாப்பை இன்னும் ரெண்டு நாளில் அந்த வெளிநாட்டுக் கம்பனிக்குத் தரலைன்னா அவங்களே  நம்மைப் போட்டுத் தள்ளிடுவாங்க”

இருவரும் தேடிக் கொண்டே இருந்தாலும் அவர்கள் தேடியது சிக்கவே இல்லை.

ஒரு சில நிமிடங்களில் கீழே ஜெயமாலா அழைக்கும் சத்தம் கேட்டு ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கீழே சென்றனர்.

தட்டுத் தடுமாறியபடி பெரிய தட்டில் பிரட் டோஸ்ட்களைக் கொண்டு வந்து வைத்தவரை இரக்கமில்லாது பார்த்தபடி நின்றிருந்தனர் இருவரும்.

“பிரட் டோஸ்ட் பண்ணிருக்கேன். அனுஜா டீ கப்ஸ்ம், ஜாமும் எடுத்துட்டு வரணும். கொஞ்சம் ஹெலப் பண்றியாம்மா” என்றார்.

“எஸ் ஆன்ட்டி “ என்றபடி கடுப்பாய் வந்தாள்.

கப்புகளை எடுத்தவர் “ஜாம் பாட்டில் அந்தக் கடைசி அலமாரில இருக்கும்மா. உனக்குப் பிடிச்சதை எடுத்துக்கோ” என்றார்.

கடைசி அலமாரியில் ஒரே ஒரு ஜாம்தான் இருந்தது.

“எங்க பிடிச்சதை எடுக்க ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு” என்றாள் எரிச்சலுடன்.

“அப்படியா மார்மலேட், ஸ்ட்ராபெரி, செர்ரி எல்லாம் நானே போட்டு வச்சது இருக்குமே”

“உங்களுக்குத்தான் கண்ணு தெரியாதே வேலைக்காரி திருடிட்டு போயிருப்பா” என்றாள் குதர்க்கமாக

“இருக்கலாம்மா. ஆனால் நீ ஏன் திடீருன்னு இவ்வளவு கோவமா பேசுற”

“இல்லையே… நான் நல்லாத்தான் பேசுறேன்” சமாளித்த அனுஜாவைப்  பார்த்து முறைத்தான் காண்டீபன்.

“இல்லையே குரல்ல அப்படித் தெரியலையே” அப்பாவியாக பதில் சொன்னார் ஜெயமாலா.

இப்ப தூண்டில் போடுறேன் பாரு என்று அனுஜாவிடம் ஜாடை காண்பித்தவண்ணம் “ஆன்ட்டி, அன்னைக்கு வாசன் வந்தப்ப ஆபிஸ் லேப்டாப்பை எடுத்துட்டு வந்துட்டான். அதில் தான் அனுஜாவோட ப்ராஜக்ட்ஸ் முழுசும் ஸ்டோர் ஆயிருக்கு. அந்த வேலை எல்லாம் மறுபடியும் செய்றது கஷ்டம். அதனால் வாசன் ரூமைக் கொஞ்சம் செக் பண்ணி சொல்ல முடியுமா?” என்றான்.

“அப்படியா என்கிட்டே உங்க ஆபிஸிலிருந்து வந்தவங்க யாருமே இதைப் பத்தி சொல்லலையே”

“அது அனுஜா பொறுப்பில் இருக்கு. அதனால அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வாசன் வேலைக்காக வாங்கிட்டு ஏதோ மறதில எடுத்துட்டு வந்துட்டான்”

“எனக்கு இதைப் பத்தியெல்லாம் என்னப்பா தெரியும்… நீங்க சாப்பிடுங்க அப்பறம் அவன் அலமாரி சாவியைத் தரேன். உங்களோடது அதில் இருந்தால் எடுத்துக்கோங்க” என்றார்.

விஷயம் சுலபமாக முடிந்ததை எண்ணி “தாங்க்ஸ் ஆன்ட்டி “ என்று குதித்த அனுஜா உடனே டோஸ்ட்டில் தாராளமாக ஜாமைத் தடவ ஆரம்பித்தாள்.

“இது என்ன ஜாம் நல்லாருக்கே”

“பெலடோனா பெர்ரி ஜாம் வீட்டில் இந்த செடி இருக்கு, அதில் விளைஞ்ச பெர்ரியை வச்சு நானே என் கையால் தயாரிச்சது. இன்னும் ஒரு ஸ்லைஸ் ஜாம் வச்சு சாப்பிட்டாத்தான் உன் லாப் டாப் கிடைக்கும்” என்றார் செல்ல மிரட்டலாக.

 

“நீங்க சாப்பிடலையா”

தனக்கும் ஒரு பிரட்டை எடுத்து டீயில் தொட்டு சாப்பிட்டார்.

 

உண்டு முடித்ததும் “ஆன்ட்டி நீங்க லேப்டாப்பைத் தந்தால் கிளம்பிடுவோம்” என்றான் காண்டீபன்.

 

ஒரு அலமாரி சாவியைத் தந்தவர் “மாடில வலது புற ரூம்ல இருக்கும்  அலமாரிலதான் வாசனின் பொருள்கள் எல்லாம் இருக்கு எடுத்துக்கோங்க” என்றார்.

சரியாக தங்களது கணினியை எடுத்துக் கொண்டவர்கள் வாசனின் படத்தைப் பார்த்து “உங்கம்மா மாதிரி நீயும் ஒரு கேனையா இருந்திருந்தா இந்நேரம் படத்துக்குள்ள போகாம எங்களோட சேர்ந்து கோடீஸ்வரனா ஆயிருக்கலாம்” என்று எகத்தாளமாய் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினர்.

வர்கள் கிளம்பியதும் கதவைத் தாழ் போட்ட ஜெயமாலா கூர்க்காவை அழைத்து தனது மகள் ராகினி வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னார்.

அர்த்த ராத்திரியில் தனது வீட்டுக் கதவைத் தட்டிய அன்னையைப் பார்த்து அதிர்ந்த ராகினி

“என்னம்மா ஆச்சு. இந்நேரம் வந்திருக்க… உடம்புக்கு எதுவும் செய்யுதா”

“ராகினி… நம்ம வாசனைக் கொலை பண்ணவங்க இன்னைக்கு வந்தாங்கடி… “

“என்னம்மா சொல்ற…”

“ஆமாம் கொலையாகுற அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் வாசன் ஒரு லாப்டாப்பை பத்திரமா பரணில் வச்சுட்டு அம்மா இது எக்காரணம் கொண்டும் வெளிய தெரியக் கூடாது. இதில் இருக்குறது ரகசியத் தகவல்கள். இதை யாரு கேட்டாலும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிருந்தான்.

மேல விவரத்தை ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்து கேட்கிறதா சொல்லிருந்தேன். அதுக்குள்ளத்தான் அவனை சுட்டுட்டாங்க. கண்ணிலாத என்னால கொலைகாரனைக்  கண்டுபிடிக்க முடியுமா இல்லை பழிதான் வாங்க முடியுமா. அதனாலதான் ஒரு தூண்டில் விரிச்சேன்”

“தூண்டிலா”

“எனக்குத் துணையா இருந்த எல்லாரையும் அனுப்பினேன். அப்பத்தானே லாப்டாப்பைத் தேடி கொலைகாரன் வருவான். அதே மாதிரி வந்தான்”

“அவன்தான் கொலைகாரன்னு எப்படிக் கண்டுபிடிச்ச”

“அதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தை சொல்றேன்.

எதுவுமே திருட்டு போகாதப்ப திருட்டு முயற்சி அதனால் கொலைன்னு சொல்லி கேசை மூட முயற்சி பண்ண போலீஸ்காரங்ககிட்ட வாசன் சொன்ன விவரத்தை சொல்றதா வேணாமான்னு தெரியல. அதனால் அப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணேன்.

முதல் காரியமா வீட்டில்  சில ஏற்பாடுகளை செஞ்சேன். உன் வீட்டுக்கார் வந்திருந்தப்ப அந்த லாப்டாப்பிலிருக்கும் தகவல் எல்லாத்தையும் அழிச்சுட சொல்லிட்டேன். தவிரவும் அவர் மூலமா அதே மாதிரி மாடலில் வேற ஒண்ணு வாங்கி வச்சேன்

வாசனை சுட்ட அன்னைக்கு அந்த ரூமில் ஒரு வித்யாசமான பெர்பியூம் வாசம் வந்துச்சு. அது அப்படியே என் மனசில் பதிஞ்சிருச்சு. அது பெண்கள் உபயோகப் படுத்தும் சென்ட்டா இருக்கலாம்னு என் மனசில் அப்பவே பட்டது. ஆனால் போலிஸ்காரங்க விசாரணை செஞ்சபோது அந்த சென்டின் தடயமே மறஞ்சிருந்தது. இன்னைக்கு வீட்டிக்கு வந்த பொண்ணு மேல அந்த சென்ட்டின் வாடை. அவள் வாயாலேயே அது வெளிநாட்டில் மட்டுமே கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டேன்.

அடுத்து  வாசன் ரூமில் யாரு நுழைஞ்சாலும் அதிலிருக்கும் சென்சார் ஸ்டார்ட் ஆகி பேச்சு பதிவாகும். அது என்னோட கண்ணாடில ஓட்டிட்டு இருக்கும் ரிசீவர் கேட்டு காதில் பொருத்திருக்கும் இயர்போன் மூலமா நான் கேட்கலாம்.

இவங்க ரெண்டு பேருக்கும் நான் டீ போட்டுட்டு இருந்தப்ப அவங்க வாசனோட அறையில் நுழைஞ்சு தேட ஆரம்பிச்சாங்க. அப்ப பேசினதக் கேட்டு அவங்கதான் கொலைகாரன்னு உறுதி படுத்திக்கிட்டேன்”

“உடனே போலீசில் தகவல் தந்திருந்தா உன் உயிருக்கே ஆபத்து. ஆனாலும் அவங்க கிளம்புனதும் தந்திருக்கலாமே”

“என்னால அவங்களை அடையாளம் சொல்ல முடியுமா இல்லை அவங்க வந்த வாகனத்தைப் பத்தின விவரம் சொல்ல முடியுமா… அதனால அவங்க கிட்டநான் வாங்கி வச்சிருந்த டூப்ளிகேட் லேப்டாப்பைத் தந்துட்டேன்”

“கண்டுபிடுச்சு வந்துடப் போறாங்கம்மா…”

“மாட்டாங்க. அவங்களுக்கு நான் கருப்பு பெர்ரில செஞ்ச ஜாமைத் பிரட் டோஸ்ட்டோட தந்துட்டேன். அவங்க எங்க வலிப்பு வந்து படுத்திருக்காங்களோ யாருக்குத் தெரியும்”

“அந்த டெவில் பெர்ரியா…”

பெருமூச்சு விட்டபடி தலையாட்டினார் “ஆமாம். அதுக்கு இன்னொரு பேரு டெத் பெர்ரி”

 

ரண்டு மணி நேரம் கழித்து, கோயம்புத்தூரை நோக்கி வண்டி கொண்டை ஊசி வளைவில் இறங்கியது. “லாப்டாப்பை செக் பண்ணியா”

“ ‘ஆன்’ ஆனால்தானே…பேட்டரில சார்ஜே இல்லை… “

பாதை ஏதோ மாறி மாறி நகர்வதைப் போலத் தோன்ற, இரண்டு மூன்று இடங்களில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவது போல போய்விட்டான்.

“சாவு கிராக்கி… மலைப்பாதைல குடிச்சுட்டு ஒட்டி சாகவே வருதுங்க” என்று ஒரு வண்டிக்காரர் சொன்னபோதுதான் எதிரிலிருக்கும் உருவம் வானத்தில் மிதப்பதைப் போலத் தெரிவதை உணர்ந்தான்.

“எனக்குத் தலை வலிக்குது, தொண்டை உலர்ந்து போச்சு, மூச்சு விடவே சிரமமா இருக்கு” என்று அனுஜா சொல்ல.

அதே அறிகுறிகள் தனக்கும் இருப்பதை உணர்ந்தவன் “எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி…” அவன் மனதில் பொறி தட்ட செல்லை உயிர்பித்து கூகுள் டாக்கில் “பெலடோனா பெர்ரி” என்றான் அவசர அவசரமாக.

அழகான பெண்குரல் ஒன்று அச்சுப் பிசகாத உச்சரிப்புடன் “ஐரோப்பாவை இருப்பிடமாகக் கொண்ட இந்த பெர்ரி பழங்கள் குளிர் பிரதேசங்களில் தளைத்து வளரும் தன்மையுடையது. ஆபத்தான இந்தச் செடியின் ஒரு இலை ஒரு மனிதனையே சில நிமிடங்களில் கொன்றும் விடும். சுவை நிறைந்த இதன் பழங்களை உண்ட சில மணி நேரம் கழித்து சித்த பிரம்மை, மாயத்தோற்றம், கடுமையான வலிப்பு முதலியவற்றை நிரந்தரமாக உண்டாக்கும் தன்மையுடையது. சிறிது சிறிதாக சேதாரத்தை உண்டாக்கி ஆறு மணி நேரத்தில் உண்ட மனிதனை செயலிழக்க வைக்கும் தன்மை உடையது. இதற்கு இன்னொரு பேரு டெத் பெர்ரி”

 

“அடிப்பாவி கிழவி” என்று கத்தியவனிடம் என்னவென்று கூடக் கேட்க முடியாது கடுமையான வலிப்பு வந்து துடித்தபடி சீட்டில் கிடந்தாள் அனுஜா. ஓடிக்கொண்டிருந்த காரின் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியா மயக்கத்தில் ஆழ்ந்தான் காண்டீபன். கடைசியாக நினைவாக அவனது மனதில் தோன்றிய காட்சியில் வாசன் என்றோ சொன்னது மின்னி மறைந்தது

“எங்கம்மா பாட்டனி மூலிகைகள் பத்தி ரிசெர்ச் செய்து டாக்டரேட் வாங்கினவங்கடா… வீடு முழுசும் செடி கொடிகள்தான் இருக்கும். உடம்பில் வியாதியை குணமாக்குற மூலிகையும் சரி நோயை உருவாக்குற மூலிகையும் சரி அவங்களுக்கு அத்துப்படி”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை மூன்று – அன்பு வளர்க்கும் அண்ணல்   அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன;

ஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினிஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி

ஆரஞ்சு நிற புடவை     “உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…” ****** “ஹாய்..”   பேஸ்புக் சாட்டில்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

நாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த