Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘பரிசல் துறை’-3

கல்கியின் ‘பரிசல் துறை’-3

3

நதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்குப் போயிருந்தாள். பழனி, காலையும் மத்தியானமும் காப்பி ஹோட்டலில் சாப்பிடுவான்; இராத்திரியில் சமையல் செய்து சாப்பிடுவான்.

இப்போது சுரமாய்ப் படுத்ததும், அவன் பாடு ரொம்ப சங்கடமாய் போயிற்று. பக்கத்தில் வேறு வீடு கிடையாது. காப்பி ஹோட்டல் ஐயர் கொண்டு வந்து கொடுத்த காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுக் கிடந்தான். ஐயரும் பகலில்தான் காப்பி ஹோட்டலில் இருப்பார். இருட்டியதும் கதவைப் பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த தம்முடைய வீட்டுக்குப் போய் விடுவார்.

சுரமாய்ப் படுத்து மூன்று நாள் ஆய்விட்டது. இந்த நாட்களில் ஆற்றில் பரிசல் போகவில்லை. ஆகையால் ஊரெல்லாம் ஓடக்காரத் தம்பிக்கு உடம்பு காயலா என்ற சமாசாரம் பரவியிருந்தது.

பழனிசாமி முதல் நாளே அம்மாவுக்கு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டான். நாளை அல்லது நாளன்று அவள் வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அதுவரை ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தான் கழித்தாக வேண்டும். மூன்று நாள் சுரத்தில் பழனி ரொம்பவும் மெலிந்து போயிருந்தான். கை வீக்கம் ஒரு பக்கம் சங்கடம் அளித்தது. அன்று சாயங்காலம் எழுந்து விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவனுக்கு உடம்பில் சக்தியில்லை. “விளக்கு ஏற்றாமல் போனால்தான் என்ன?” என்று எண்ணிப் பேசாமல் படுத்திருந்தான்.

உள்ளே நன்றாய் இருண்டு விட்டது. திறந்திருந்த வாசற்படி வழியாக மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் தெரிந்தது. பழனி அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஏனெனில், அந்த வாசற்படியில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. அந்த வேளையில் யார் அங்கே வரக்கூடும்?

“யார் அது?” என்று கேட்டான்.

“நான் தான்” என்று குமரி நங்கையின் குரலில் பதில் வந்தது.

பழனி சற்று நேரம் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.

“விளக்கு இல்லையா?” என்று குமரி கேட்டாள்.

“மாடத்தில் இருக்கிறது. இதோ ஏற்றுகிறேன்” என்றான் பழனி.

“வேண்டாம். நீ படுத்திரு. நான் ஏற்றுகிறேன்” என்று சொல்லி, குமரி சுவரில் மாடம் இருக்கும் இடத்தைத் தடவிக் கண்டு பிடித்து விளக்கு ஏற்றினாள்.

“உனக்கு காயலா என்று சொன்னார்கள். பார்த்துப் போகலாமென்று வந்தேன். என்னால் தான் உனக்கு இந்தக் கஷ்டம் வந்தது. என்னால் எல்லாருக்கும் கஷ்டந்தான்…”

“ரொம்ப நன்றாய் இருக்கிறது. நீ என்ன பண்ணுவாய்? நான் பண்ணினதுதான் அநியாயம். அதை நினைக்க நினைக்க எனக்கு வேதனை பொறுக்கவில்லை. என்னமோ அப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. நீ மன்னித்துக் கொள்ள வேண்டும்.”

“நான் மன்னிக்கவாவது? என்னால்தான் உனக்கு எவ்வளவோ கஷ்டம். பரிசலில் வைத்திருந்த பணம் ஆற்றோடு போய்விட்டதல்லவா? அதற்குப் பதில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி, ஒரு துணிப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்த பழைய பத்து ரூபாய் நோட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு பையைப் பழனிச்சாமியின் பக்கத்தில் வைத்தாள்.

பழனி ரொம்பக் கோபமாய்ச் சொன்னான். “இந்தா பேசாமல் இதை எடுத்துக் கொண்டு போ. அப்படி இல்லையானால் நான் நாளைக்கே உன் அப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன்” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பரிசல் வாங்குவதற்குச் சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே? இனி என்ன செய்வாய்?”

“போனால் போகட்டும்; இந்தப் பரிசலும் போனாலும் போகட்டும். நான் செய்த தப்புக்கு இதெல்லாம் போதாது. குமரி, நான் இந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்து விட்டேன். அப்படிப் போனால்தான் உன்னை என்னால் மறக்க முடியும்?” என்றான்.

அப்போது குமரி நங்கையின் கண்களிலிருந்து பொல பொலவென்று ஜலம் உதிர்ந்தது.

பழனி அதைப் பார்த்துவிட்டு, “இது என்ன குமரி, நான் ஊரைவிட்டுப் போவதில் உனக்கு வருத்தமா?” என்றான்.

“நீ ஆண் பிள்ளை, ஊரை விட்டுப் போவாய்; என்னை மறந்தும் போய் விடுவாய். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது” என்று விம்மிக் கொண்டே கூறினாள்.

“நிஜமாகவா, குமரி! நான் என்ன கனாக் காண்கிறேனா!” என்றான் பழனி.

பிறகு, “அப்படியென்றால், என் மேல் இத்தனை நாளும் ஏன் அவ்வளவு கோபமாய் இருந்தாய்? என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய்? கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம்?” என்று கேட்டான்.

“அது பொய். நான் கள்ளுக் கடைக்காரனைக் கட்டிக்கப் போகிறதில்லை. எங்க அப்பன் அப்படி வற்புறுத்தியது நிஜந்தான். நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்பன் கள்ளுக் குடிக்கிறவரையில் நான் கல்யாணமே கட்டிக்கிறதில்லையென்று ஆணை வைத்திருக்கிறேன்..”

“என்ன? என்ன?” என்று பழனிச்சாமி வியப்புடன் கேட்டான்.

“சத்தியமாய்ச் சொல்லுகிறேன்; அதுதான் நிஜம்.”

“அப்படின்னா, உங்கப்பன் குடிக்கிறதை விட்டுட்டா, அப்புறம்?…”

“நடக்காததைப் பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்?…” என்றாள் குமரி. கண்களிலிருந்து மறுபடியும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அப்போது தண்ணீர்த் துறையில் யாரோ பேசும் குரல் கேட்டது.

குமரி திடுக்கிட்டு, “நான் போகிறேன். என்னால் உனக்கு எவ்வளவோ கஷ்டம். எல்லாவற்றையும் மன்னிச்சுக் கொள்” என்று கூறி விட்டு, போகத் தொடங்கினாள்.

பழனி “குமரி, குமரி! இந்தப் பணத்தை நீ எடுத்துக் கொண்டு போக வேண்டும். என்னிடம் பரிசல் வாங்கப் பணம் இருக்கிறது. நீ எடுத்துக் கொண்டு போகாவிட்டால், உங்க அப்பனிடம் கொடுத்து விடுவேன்” என்றான்.

“ஐயோ! அவ்வளவும் கள்ளுக்கடைக்குப் போய் விடுமே!” என்று சொல்லிக் கொண்டு குமரி அவன் அருகில் வந்தாள். பழனி பணப்பையை நீட்டினான். குமரி அதைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அப்போது என்ன தோன்றிற்றோ என்னவோ, சட்டென்று அவனுடைய உள்ளங்கையைத் தூக்கித் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பிறகு விரைவாக வெளியில் சென்றாள்.

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 55கல்கியின் பார்த்திபன் கனவு – 55

அத்தியாயம் 55 பராந்தக புரத்தில் சூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம்

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 11அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 11

நேரில் பேசிப் பயனில்லை. டெலிபோனில் பேசிப் பயனில்லை. கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் திட்டியும் எதனாலும் பலன் கிடைக்காமற் போயிற்று. ஆனால் சோமுவுக்கு வெகு வேகமாக வளர்ந்து கொழுந்து விட்டெரிந்த தீ அணையுமா? எப்படியேனும் என்னை இணங்கச் செய்ய வேண்டுமென்று கருதி மறுபடியும்

கல்கியின் பார்த்திபன் கனவு – 65கல்கியின் பார்த்திபன் கனவு – 65

அத்தியாயம் 65 குந்தவியின் நிபந்தனை பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள்.