Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘பரிசல் துறை’-1

கல்கியின் ‘பரிசல் துறை’-1

1

காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட ‘சலசல’ சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச மரத்துடன் ஒரு வேப்ப மரமும் அண்டி வளர்ந்து இருந்தது. இவற்றின் அடியில் இருந்த மேடையில் ஒரு கல்லுப் பிள்ளையார் எழுந்தருளியிருந்தார்.

பிள்ளையார் சதா சர்வதா இருபத்திநாலு மணி நேரமும், அவருக்கெதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு காப்பி ஹோட்டலைப் பார்த்த வண்ணமாய் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அரை கப் காப்பி எப்போதாவது யாராவது கொடுத்தது உண்டோ என்றால், கிடையாது. சில சமயங்களில் காப்பிக் கொட்டை வறுக்கும் போது வரும் வாசனையை அநுபவிப்பதுடன் அவர் திருப்தி அடைய வேண்டியிருந்தது.

வேலம் பாளையம் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். அதற்குச் சமீபத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதின்மூன்று மைல் தூரத்திலிருப்பது. கிராம வாசிகள் ரொம்பவும் சாமான்யமான ஜனங்கள். குடியானவர்களும், கைக்கோளர்களும், ஹரிஜனங்களும்தான் அங்கே வசித்தார்கள். காவேரிக் கரையில் இருந்தும் ஜலக் கஷ்டம். அவ்விடம், காவேரி ஆற்றின் தண்ணீர் சாகுபடிக்குப் பயன் படுவதில்லை. பூமி அவ்வளவு மேட்டுப் பாங்காயிருந்தது. சாதாரணமாய், கரையிலிருந்து வெகு ஆழத்தில் ஜலம் போய்க் கொண்டிருக்கும். பெரும் பிரவாகம் வருங்காலத்தில் அரச மரத்தின் அடிவேரைத் தொட்டுக் கொண்டு போகும்.

இப்படிப்பட்ட பட்டிக்காட்டிலே கொண்டு வந்து காப்பி ஹோட்டல் வைத்திருந்தார் ஒரு பாலக்காட்டு ஐயர். அவர் வட துருவங்களுக்குப் போய்ப் பார்த்து, அங்கே கூட ஹோட்டல் அதிகமாகி வியாபாரம் கம்மியாய்ப் போனதைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

பரிசல் துறையிலிருந்து கிராமம் கொஞ்ச தூரத்திலிருந்தது. பரிசல் துறைக்கு அருகில் இரண்டே கூரைக் குடிசைகள். அவற்றில் ஒன்றிலேதான் ஹோட்டல். அதன் வாசலில் இங்கிலீஷிலே “டிரிப்ளிகேன் லாட்ஜ்” என்றும், தமிழிலே “பிராமணாள் காப்பி – டீ கிளப்” என்றும் எழுதிய போர்டு ஒன்று தொங்கிற்று. அன்று சந்தை நாள் ஆகையால் ஹோட்டலில் வியாபாரம் அதிகம். உள்ளே ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் தையல் இலையில் வைத்திருந்த இட்டிலியை வெகு சிரமத்துடன் விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“ஐயரே! எங்கே, ஒரு கப் காப்பி ‘அர்ஜெண்’டாக் கொண்டாரும் பார்க்கலாம்” என்றார் அவர்களில் ஒருவர்.

“ஏஞ்சாமி! நீங்க காப்பியிலே தண்ணீ ஊத்தற வழக்கமா, தண்ணியிலே காப்பி ஊத்தற வழக்கமா” என்று கேட்டார் ஹாஸ்யப் பிரியர் ஒருவர்.

“ஐயர் பாடு இனிமேல் கொண்டாட்டந்தான். காவேரித் தண்ணியெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து காப்பி, டீன்னு சொல்லி வித்துப்பிடுவாரு. காங்கிரஸ் கவர்மெண்டிலேதான் கள்ளுக்கடையை மூடிடப் போறாங்களாமே?” என்றார் மூன்றாவது பேர் வழி.

“ஆமாம், போங்க! இந்த மாதிரிதான் எத்தனையோ நாளாய்ப் பேசிக்கிட்டிருக்கிறாங்கோ!” என்றார் ஒரு சந்தேகப் பிராணி.

“இந்தத் தடவை அப்படியெல்லாம் இல்லை; நிச்சயமாய் சாத்திவிடப் போகிறார்கள். இப்போது காங்கிரஸ்தானே கவர்மெண்டே நடத்தறது? உத்தரவுகூடப் போட்டுட்டாங்களாம். அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு சொட்டுக் கள்ளு, சாராயம் இந்த ஜில்லாவிலேயே பேசப்படாது.”

“கள்ளுக்கடை மூடினால் ஐயருக்கு ரொம்பக் கொண்டாட்டம் என்கிறீங்களே? நிஜத்திலே அவருக்குத்தான் ஜாஸ்தி திண்டாட்டம்” என்றார் ஒரு வம்புக்கார மனுஷர்.

“அது என்னமோ? கொஞ்சம் வியாக்யானம் பண்ணுங்க!” என்றார் ஒரு கல்விமான்.

“ஆமாம்; பொழுது சாய்கிற வரைக்கும் ஐயர் காப்பிக் கடையிலே இருக்கிறாரு. பொழுது சாய்ந்ததும் கடையை மூடிக்கிட்டு எங்கே போறாரு கேளுங்க. என் வாயாலே நான் சொல்லலை. அவரையே கேட்டுக்கங்க…”

அப்போது உள்ளேயிருந்து, “இந்தா கவுண்டரே! இப்படியெல்லாம் பேசினால் இங்கே ஒண்ணும் கிடைக்காது. காப்பி வாயிலே மண்ணைப் போட்டுடுவேன்” என்று கோபமான குரல் கேட்டது.

“சாமி! சாமி! கோவிச்சுக்காதிங்க. இனிமே நான் அப்படி உங்க கிட்டக்கச் சொல்லலை, சாமி!” என்றார் கவுண்டர்.

அப்போது பரிசல் துறையிலிருந்து, “ஏ ஓடக்காரத் தம்பி, எத்தனை நேரம் நாங்க காத்துக்கிட்டிருக்கிறது?” என்று ஒரு கூக்குரல் கேட்டது.

மேற்சொன்ன ரஸமான சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன், “ஐயரே! இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா?” என்றான்.

அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவன், “அதோ பார்த்தாயா, சுப்பண்ணா! பத்ரகாளி போறாள்!” என்றான் பக்கத்திலிருந்தவனிடம். ஓடக்காரத் தம்பி உடனே எட்டிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி தலையில் கத்திரிக்காய்க் கூடையுடன் பரிசல் துறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவ்விடம் அரசமரத்துப் பிள்ளையார் இருந்த இடத்துக்குக் கீழே சுமார் 30, 40 அடி ஆழம் இறங்கித்தான் தண்ணீர்த் துறைக்குப் போக வேண்டும். ஒரு கையால் தலைக் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கை ஊசலாட, இடுப்பு நெளிந்து நெளிந்து அசைய அந்த இளம்பெண், ஓடத்துறைக்கு இறங்கிக் கொண்டிருந்த காட்சியை அசப்பிலே பார்த்தால் உயர்தர சித்திரக்காரன் எழுதிய ஒரு சித்திரக் காட்சியைப் போல் தோன்றியது.

ஓடக்காரத் தம்பி அவளைப் பார்த்த உடன், “சரி, சரி, இந்த ஐயர் இட்லி கொடுப்பார் என்று காத்திருந்தால், அடுத்த வெள்ளிக்கிழமைச் சந்தைக்குத் தான் போகலாம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்து விர்ரென்று வெளியே சென்றான்.

அவன் போனவுடன் ஹோட்டலில் பின்வரும் சம்பாஷணை நடந்தது:-

“என்ன, பழனிச்சாமி திடுதிப்பென்று கிளம்பி ஓடிட்டான்.”

“காரணமாகத்தான். அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேணுமென்று இவனுக்கு ரொம்ப ஆசை. அவள் அப்பன் காளிக் கவுண்டன் ‘கூடாது’ என்கிறான். ‘கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனுக்கு இரண்டாந் தாரமாகத்தான் கட்டிக் கொடுப்பேன்’ என்கிறான். காளிக் கவுண்டன் பெரிய மொடாக்குடியன். தெரியாதா உனக்கு?”

“அதேன் பத்திரகாளி என்று அவளுக்கு பேரு? அவள் அப்பன் வைச்சது தானா?”

“அவள் நிஜப் பேரு குமரி நங்கை, ரொம்ப முரட்டுப் பெண். அப்பனுக்கு அடங்கமாட்டாள். ஊரிலே ஒருத்தருக்குமே பயப்பட மாட்டாள். அதனால்தான் ‘காளிமவள் பத்திரகாளி’ என்று அவளுக்குப் பெயர் வந்தது.

“அவளைக் கட்டிக்க வேணுமென்று இந்தப் பையனுக்கு ஆசை உண்டாச்சு பாரேன்! என்ன அதிசயத்தைச் சொல்ல?”

குமரி நங்கை பரிசலின் சமீபம் வந்ததும் அதில் ஏற்கனவே ஏறியிருந்தவர்களைப் பார்த்து, “ஏன், ஓடக்காரர் இல்லையா, என்ன” என்றாள்.

“அதோ பார் பின்னாலே!” என்றான் பரிசலில் இருந்தவர்களில் ஒருவன்.

குமரி நங்கை திரும்பிப் பார்த்தாள். பழனிச்சாமி அவளுக்கு வெகு சமீபமாய் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் காரணமில்லாமல் திடுக்கிட்டாள். பரிசலில் இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.

ஆனால், பழனிச்சாமி இதையெல்லாம் சற்றும் கவனிக்காதவன் போல் விரைவாகச் சென்று பரிசலில் ஏறினான். குமரி நங்கை ஏறினாளோ இல்லையோ, பரிசல் இரண்டு தடவை நின்ற இடத்திலேயே வட்டமிட்டு விட்டு, விர்ரென்று போகத் தொடங்கியது. படகிலிருந்தவர்கள் ஏதேதோ ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழனிச்சாமியாவது குமரி நங்கையாவது வாயைத் திறக்கவில்லை.

அக்கரை நெருங்கியதும், பழனிச்சாமி பரிசலைச் சிறிது நிறுத்தி, “துட்டு எடுங்க!” என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, “இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி! வரும்பொழுது தருகிறேன்” என்றான். குமரி நங்கையும் கையில் இரண்டணாவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்; அதைப் பழனிச்சாமி கவனிக்கவுமில்லை; வாங்கிக் கொள்ளவுமில்லை. பரிசலைக் கரையிலே கொண்டு சேர்த்து விட்டுக் கீழே குதித்தான். எல்லாரும் இறங்கினார்கள். குமரி நங்கை கடைசியாக இறங்கி, இரண்டணாவை நீட்டினாள். பழனிச்சாமி அப்போதும் அதைப் பாராதவன் போல் இருக்கவே, அவள் பரிசலின் விளிம்பில் அதை வைத்து விட்டுப் போய் விட்டாள்.

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 41கல்கியின் பார்த்திபன் கனவு – 41

அத்தியாயம் 41 வழிப்பறி சக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள். இந்த ஆரவாரம் காதில்

சாவியின் ஆப்பிள் பசி – 20சாவியின் ஆப்பிள் பசி – 20

ஜாமீன் கிடைத்து விட்டது என்கிற செய்தி அளித்த மகிழ்ச்சியிலும் வியப்பிலும் சாமண்ணா ஆழ்ந்து விட்டபோது கோமளம் மாமி தொடர்ந்து சொன்னாள். “மாமாகிட்டே பாப்பா வந்து கரையாக் கரைச்சு சொல்லிட்டா! அவரும் ஏற்பாடு பண்ணியாச்சு! மூணு நாளைக்கு முன்பே உன்னை எங்காத்துக்கு வரச்

சாவியின் ஆப்பிள் பசி – 25சாவியின் ஆப்பிள் பசி – 25

சாமண்ணா அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போன போது சுபத்ரா முகர்ஜிக்கு மூர்ச்சை தெளிந்திருந்தது. ஆனாலும் மெலிந்து வாடிப் போயிருந்தாள். ஈனசுரத்தில் பேசினாள். உதடுகள் தெளிவில்லாத ஓசைகளை விடுத்தன. நகரின் புகழ் பெற்ற டாக்டர் மக்டனால்ட் துரையே வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு,