சாவியின் ஆப்பிள் பசி – 13

சாமண்ணா சிறிது நேரம் பிரமித்து நின்றான். கோமளத்தின் அசைக்க முடியாத வாதங்கள் அவனுடைய அடித்தள நம்பிக்கையை அசைத்து விட்டன. கண்களில் அவனது அம்மா மின்னி மறைந்தாள். விசாலாட்சி என்று பெயர். ஒரு காலத்தில் விசாலமாக இருந்த அவள் கண்கள் வயது அறுபத்தைந்தை எட்டிய போது, ஊட்டம், ஆதரவு எல்லாம் இழந்து அவளது அடிப்படை ஆசை குறுகியது போல் கண்களும் குறுகிவிட்டன. வெறும் காலடி ஓசையை வைத்தே – “சாமு, வந்துட்டியாடா?” என்பாள். சாமண்ணா அவளைப் பொறுத்த வரை ஒரு நிழல்தான். அவன் கால், கை, முகம் எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பமான நிழலாகத் தெரியும்.

ஆபரேஷன் செய்து கண்ணாடி போட்டால் கண் தெரியுமாம். ஆனால் நூறு ரூபாய் செலவாகுமே! எங்கே போவது பணத்துக்கு? அதுவும் சாமண்ணா படிப்பு கிடிப்பு எதுவும் வராமல் வெறும் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும்போது? அவள் இறந்து போவதற்கு முன் அவளுக்குக் கண் கொடுக்க முடிந்ததா? தன் பிள்ளையின் உருவத்தைப் பார்த்து மகிழ அவளுக்குக் கொடுத்து வைத்திருந்ததா?

“என்ன பிரமிச்சுப் போய் நிற்கிறே?” என்று வக்கீல் மாமி கோமளம் சீண்டியவுடன் சாமண்ணா தத்தளித்து நிஜ உலகுக்கு வந்தான்.

“நீங்க சொல்றதை எல்லாம் ஒத்துக்கறேன் மாமி! வாழ்க்கையிலே முன்னேறம்னா நாலு பேர் ஆதரவு வேண்டியதுதான். நான் அதை மறுக்கலே. ஆனா எங்க அம்மாவை உத்தேசித்து இந்த விஷயத்திலே என்னாலே எதுவும் செய்ய முடியாத நிலை. அதனால் தான்…”

“அப்படி என்ன நிலை? பெரிய நிலை! சொல்லு!” என்றாள் கோமளம்.

சாமண்ணா சற்று கலங்கி நின்றான். மனசுக்குள் ஓர் உணர்வுப் பிரளயம் நடந்து கொண்டிருந்தது.

கர்ணனை அண்ணன் என்று அறிந்த போது நிஜ அர்ச்சுனனுக்குக் கூட அந்த அளவுக்குச் சோகம் தோன்றியிராது.

“கேளுங்கோ மாமி!” என்றான். குரலில் விசேஷ அக்கறை தொனித்தது.

“எங்க அப்பாவுக்கு லட்சுமிநாராயணன்னு பேரு. தாத்தா நிறைய சொத்து வச்சுட்டும் போனார். அத்தனையும் திண்ணையிலே சீட்டாடியே தோத்துட்டார். தாத்தா சேர்த்து வைத்ததை மட்டுமில்லை, அம்மா தொங்கத் தொங்க நூறு பவுன் நகையோடு வந்தா; அதையும் சீட்டாடியே விட்டாச்சு! ஒரு பக்கம் வாதம் இழுத்துப் படுக்கையிலே படுத்துட்டார் பாருங்கோ. அப்போ தான் என் அம்மா கையைப் பிடிச்சிண்டு அழுதார். பேச முடியவில்லை. அம்மாவோட அருமை அப்பத்தான் தெரிஞ்சுது. ஆனாலும் அம்மா அவரைத் தவிக்க விடவில்லை. ரெண்டு வருஷம் நாயா உழைச்சு அவரைக் காப்பாத்தினா. அப்பா அழுதுண்டே கண்ணை மூடினார்.

அப்ப எனக்குப் பத்து வயசு. அப்பா போன கையோடு பிடிவாதம், கோபதாபம் எல்லாம் வந்துடுத்து. படிப்பு மட்டும் ஏறல்லை. தத்தாரிகளோடு அலைஞ்சேன். அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.

அப்பப்ப எனக்கு புத்தி சொல்லி திருத்தப் பார்ப்பா. அடம் பிடிப்பேன். அழுவேன். சொல் பேச்சைக் கேட்க மாட்டேன். பேசாம இருந்துடுவா! ரெண்டு வருஷம் என் உதாசீனத்தைப் பொறுத்துண்டிருந்தா. ஒருநாள் குடத்துல தண்ணி எடுத்துட்டு வீட்டுக்கு வரும்போது கீழே விழுந்துட்டா. நான் அன்று தெருக்கூத்து பார்த்துட்டு காலையில வந்து பார்க்கிறேன். வீடு திறந்திருக்கு. இருட்டா இருக்கு. அம்மா அம்மான்னு உள்ளே போறேன்.

அம்மா விழுந்த இடத்திலேயே கிடக்கிறா. முனகறா! எழுந்திருக்க முடியலை. தூக்கி வாரி எடுத்தேன். உள்ளே கொண்டு படுக்க வச்சேன். உள்ளூர் வைத்தியனை அழைச்சுண்டு வந்து காண்பிச்சேன். பயன்படலே. நம்ப மாட்டீங்க! அம்மா ஒரு வாரம் படுத்துக்கிட்டே சமையல் செய்தாள். கும்மட்டியைப் பக்கத்திலே வச்சுண்டு…

(சாமண்ணாவுக்கு இப்போது கண்ணீர் வந்தது.)

அப்பவாவது அனுசரணையா இருந்தேனா! இல்லை; என் பணிவிடைகளை அவள் எதிர்பார்த்தாளா? அதுவுமில்லை. பத்து நாளைக்கு அப்புறம் ஒருநாள் தானே எழுந்து உட்கார்ந்துட்டா.

அதுக்குப் பிறகு ஒரு வருஷம் இருந்திருப்பாளோ என்னவோ. எப்படியோ நாளை ஓட்டிண்டே வந்துட்டா.

ஒருநாள் அம்மா திருப்பதிப் பெருமாள் படத்துகிட்டே பேசிண்டு இருக்கச்சே கேட்டுட்டேன்! ‘பெருமாளே! என்னைப் பலவீனமாக்கறே! சரி! என் பிள்ளையை யார் அப்புறம் கவனிச்சுப்பா? அவனும் படிக்காமல், உலகம் தெரியாமல் இருந்துட்டானே, நாளுக்கு நாள் முடியாமப் போறதே. நான் கண் மூடறதுக்கு முன்னாடி நீதான் அவனுக்கு ஒரு வழி காட்டணும், என் அப்பனே!”

அம்மா பேசினப்புறம் நான் பக்கத்திலே போய் நிற்கிறேன், கண் தெரியலை. என்னைப் பார்க்காமலே அந்தப் பக்கம் போனா. ‘அம்மா’ன்னேன். அப்போதுதான் திரும்பி என்னைச் சூன்யமாப் பார்த்தா. ஒரு வருஷமா பார்வை குறைஞ்சு போயிருக்கு. அதை என்கிட்டே சொல்லவே இல்லை. ‘நிழலாத்தான் நீ தெரியறே’ன்னு சொன்னவுடனே எனக்குத் துக்கம் தொண்டையை அடைச்சுது. காரணம், அப்பத்தான் நான் முதல் முதல் சம்பாதிச்சுப் பணம் கொண்டு வந்திருந்தேன். நாடகக் கம்பெனியிலே சேர்ந்திருந்தேன். பக்கத்து டவுன்லே கிருஷ்ண லீலாவிலே நடிச்சுண்டிருந்தது அம்மாவுக்குத் தெரியாது. ஒன்பது ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அது ஒன்பது கோடி ரூபா. அம்மா கையிலே அதைக் கொடுத்து நமஸ்காரம் பண்ணணும்னு ஆசை. அவள் கையாலே எண்ணிப் பார்த்தால் சந்தோஷப்படுவாளே, கண் பார்வை போயிடுத்தேங்கிறதே நினைக்கிறப்போ துக்கமாப் போயிடுத்து.

கையிலே கொடுத்தேன். வாங்கிண்டா. ‘ரூபாயாடா? ரூபாயாடான்னு?’ கேட்டா. சம்பாதிச்சேன்னு சொன்னேன். சந்தோஷம் தாங்கலை. ‘சுவாமிகிட்டே வேண்டிக் கொண்டேன் உடனே கொடுத்துட்டாரே’ன்னு மகிழ்ந்து போனாள்.

அம்மாவிடம் கம்பெனி வேலைன்னு சொன்னேன். கம்பெனின்னா டிராமாக் கம்பெனின்னு அவளுக்குத் தெரியாது. இப்படி மூணு மாசம் பணம் கொடுத்தேன். அம்மா உடம்பு அதுக்குள்ளே இற்றுப் போச்சு. படுத்துட்டா. நான் தவிக்கிறேன். அவள் கண்ணுக்கு சிகிச்சை கொடுக்கலைங்கற தாபம் என்னை வாட்டி எடுக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு இன்னும் வரும்படி வரலையேங்கற தாபம். அம்மா என்னைப் பக்கத்திலே உட்காரச் சொல்லி முகத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கிறா. எனக்கு அழுகையா வர்றது. ‘அம்மா நீ மன்னிப்பேன்னு சொன்னா உங்கிட்டே ஒரு உண்மையைச் சொல்றேன்,’ அப்படீங்கறேன். ‘சொல்லு’ என்கிறா.

‘நான் கம்பெனிலே வேலை செய்யலை. நாடகத்திலே நடிக்கறேன்’ என்கிறேன்.

ஒரு கணம் திகைச்சுப் போயிட்டா. சங்கடப்பட்டாளா? தெரியலை. தெளிஞ்சு என்னைப் பார்த்தாள்.

‘சாமு, இதை விட்டுடு’ என்றாள்.

‘அம்மா! என்னை மன்னிச்சுடு! எனக்கு வேற எந்தத் தொழிலும் வராது! படிப்பு இல்லை! நடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு. நான் பிரமாதமா வருவேன்னு எல்லாரும் சொல்றா’ன்னு சொன்னேன்.

‘நீ சொல்றே, ஒத்துக்கறேன். நீ நன்னா இருப்பே. நிச்சயம் முன்னுக்கு வருவே. ஆனா ஒண்ணே ஒண்ணு! நீ நன்னா வாழணும்னு ஆசைப்படறேன். அதனாலே அம்மா சொல்ற வார்த்தையைத் தட்டாதே. நாடகத்திலே நடி. வேண்டாங்கலை. ஆனா ஒரு நடிகையையோ, ஆடறவாளையோ, பாடறவாளையோ, தேவதாசிகளையோ கல்யாணம் பண்ணிக்காதே. இந்த விஷயத்துலே நான் சொல்றதைச் சத்தியமா எடுத்துக்கோ.’

அம்மாவுக்கு அதுக்கு மேலே பேச்சு வரவில்லை. கண்மூடி விட்டது. ‘அம்மா! அம்மா! இத பாரு. கண்ணைத் திறந்து பாரு. சத்தியம் பண்றேன்’னு கையைப் பிடிச்சேன்.

அம்மா போயாச்சு. நான் சொன்ன வார்த்தை அவள் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.

இந்தச் சத்தியம் தான் மாமி என் மனசிலே அப்படியே ஆழமாக் கிடக்கு! இதனாலதான்… இதனாலேதான்…”

சாமண்ணா முகத்தைக் குனிந்து கொண்டு கண்ணீர் உகுத்தான்.

கோமளம் அவனைக் கனிவோடு பார்த்தாள். பார்வையில் இரக்கமும் அனுதாபமும் தெரிந்தன.

“இருக்கட்டும் சாமண்ணா! எதுக்கு அழறே? ஏன் விலகி விலகிப் போறேன்னு இப்பத்தான் தெரியறது. உன்னை நான் சங்கடப்படுத்திட்டேன். இல்லை? இதிலே நானும் உன்னைக் குழப்பிட்டேன்னு மனசுலை வச்சுக்காதே. எப்படி எப்படி எல்லாம் நடக்கணுமோ, அப்படித்தான் எதுவும் நடக்கும். பார்க்கலாம். நீ கலங்காமல் போயிட்டு வா” என்று ஆறுதலாகச் சொல்லி அனுப்பினாள்.

அன்றைக்குச் சூரியகுளம் கொட்டகையில் மீண்டும் கோலாகலம்.

‘கர்ணா அர்ச்சுனா’ நாடகம் தனது இணையற்ற இருபத்தைந்தாம் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

நாலு நாளுக்கு மேல் ஒரு நாடகம் தேறாத அந்தக் காலத்தில், ‘கர்ணா அர்ச்சுனா’ அந்த ஊரையும் சுற்றுப்புற கிராமங்களையும் கவர்ந்து விட்டது. எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு நாடகம் பார்க்க வந்தார்கள். மேல் தட்டு மக்கள் தினம் தினம் தொடர்ந்து வந்தார்கள்.

இருபத்தைந்து நாட்களாகத் தொடர்ந்து நாடகத்துக்கு வரும் பெரும் கூட்டத்தைக் கண்ட வக்கீல் வரதாச்சாரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சிங்காரப் பொட்டுவைக் கூப்பிட்டு, “இன்னொரு விழா எடுத்துடுவோம். பிரமாத விளம்பரம் கிடைக்கும். ஜனங்கள் ஒரே குஷியிலே இருக்காங்க” என்றார்.

ஏற்கெனவே நாடகத்தில் வரும் பாட்டுக்கள் சில பாமரர் வாயில் தவழ ஆரம்பித்து விட்டன.

“அடே துர்யோதனப் பாதகா! உன்னைத் துடைத்து எடுக்க என் புஜம் புடைத்து நிற்கிறது” என்ற சாமண்ணாவின் வீர கர்ஜனையைத் தெருச் சிறுவர்கள் அவ்வப்போது கூச்சலிட்டுக் காட்டினார்கள்.

‘இருபத்தைந்தாவது நாள்’ நாடக விழாவன்று பல பேர் டிக்கெட் கிடைக்காமல் வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

அன்று நாடகத்தில், இடைவேளை வந்த போது மேடை மீது நாற்காலிகள் போட்டு ஊர்ப் பிரமுகர்களைக் கொண்டு போய் உட்கார வைத்தார்கள். வக்கீல்தான் விழாவை முன்நின்று நடத்தினார்.

சகுந்தலாவின் தந்தை டாக்டர் ராமமூர்த்தி எழுந்து வரவேற்புரை பேச ஆரம்பித்த போது ஏக ஆரவாரம்!

“ஊரிலே வியாதி கூடக் குறைஞ்சு போச்சு (சிரிப்பு) உண்மை தான் என்கிறேன். எனக்கு அது தெரிகிறது. காரணம் இந்த டிராமா! (கரகோஷம்) டிராமான்னா சிங்காரப் பொட்டுதான், சாமண்ணாதான்.” (ஒரே கரகோஷம்)

(சபையில் ஒருவர் ‘சாமண்ணா இரண்டு மடங்கு’ என்று கத்தினார். அதைத் தொடர்ந்து ஒரு பலத்த கரகோஷம்).

“அடேயப்பா! உங்கள் அபிமானம் இப்போதுதான் புரிகிறது. இத்தனை நாளும் சாமண்ணாவின் திறமையை அறிந்து கொள்ளாமல் அந்தப் பிறவி நடிகரை வெறும் கோமாளி ஆக்கி வைத்திருந்தோம். இப்போது அர்ச்சுனன் உயரத்துக்கு அவரைத் தூக்கியாச்சு. இன்னும் அவர் மேலே போய்…”

மேடை நிறைய மலர் மாலைகள் உதிர்ந்து கிடந்தன. பிரமுகர்களுக்கும் மாலை, நடிகர்களுக்கும் மாலை.

அடுத்தாற்போல் வக்கீல் வரதாச்சாரி எழுந்தார்.

“சகோதர சகோதரிகளே!

சாமண்ணா நடிப்பைப் பாராட்டி நாடக அபிமானி ஒருவர் இந்தச் சங்கிலியையும், மோதிரத்தையும் அவருக்குப் பரிசாக அளிக்கிறார். அந்த அபிமானி இந்த சபையில் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அவர் தான் யார் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ‘ஒரு அபிமானி’ அவ்வளவுதான்! அவருடைய இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்படி சாமண்ணாவை அழைக்கிறேன்.”

சாமண்ணா சங்கோஜத்தோடு வந்தான். யார் அந்த அபிமானி என்று யோசித்தான்.

வரதாச்சாரி தங்கச் சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் போட, சாமண்ணா சற்று அதிகமாகக் குனிய சங்கிலி கீழே விழுந்து விட்டது.

‘ஒன்ஸ்மோர்’ என்று சபையில் ஒருவர் கத்த ஒரே ஆரவாரம்.

வரதாச்சாரி சங்கிலியை ‘ஒன்ஸ்மோர்’ பண்ணிக் காண்பித்தார்.

பளபள என்று அபரஞ்சித் தங்கம் சாமண்ணாவின் மார்பு பூராவும் மின்னியது. பெரிய சங்கிலி. நன்றாகக் கனத்தது. சாமண்ணாவுக்குத் தன் தாயார் ஞாபகம் வர, கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

இந்தச் சமயத்தில் முன் வரிசையிலிருந்து சகுந்தலா எழுந்து மேடையை நோக்கிச் சென்ற போது சபையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் அவளையே கண்கொட்டாமல் பார்த்தனர்.

மேடை ஏறிச் சென்றவள் வரதாச்சாரியிடம் ஏதோ கிசுகிசுத்து விட்டுத் தன் கையிலிருந்ததைக் கொடுக்க அவர் எழுந்து,

“சாமண்ணாவுக்கு இன்னொரு பரிசு! அந்தக் காலத்தில் மகாராஜாக்கள் தான் பொன்னாடை போர்த்துவான்னு சொல்லுவா! இப்ப மிஸ் சகுந்தலா இந்தப் பொன்னாடையை சாமண்ணாவுக்கு அன்பளிப்பா வழங்கறா. நம்ப டாக்டர் மகள் ஒரு ராஜகுமாரி மாதிரிதானே?”

சகுந்தலா நிறையச் சிரித்துக் கொண்டு சாமண்ணா தன்னைப் பார்க்கிறானா என்று கவனித்தாள்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து கைகூப்பியபடி புன்முறுவல் பூத்ததும் இருப்பிடத்தை நோக்கிச் சென்றாள்.

வக்கீல் மாமி அப்போது சட்டென்று பாப்பா உட்கார்ந்திருக்கும் அடுத்த வரிசையைப் பார்த்தாள். பாப்பா வெறித்து உட்கார்ந்திருந்தாள்.

அந்தப் பார்வை கோமளத்தின் உள்ளத்தைச் சங்கடப்படுத்தியது.

சில நிமிடங்களில் இடைவேளை முடிய, அடுத்து வந்த முதல் காட்சியிலேயே சாமண்ணா தோன்ற, கரகோஷம் சபையைப் பிளக்க, சாமண்ணாவின் தோள் மீது அலங்காரமாக இருந்த அந்தச் சால்வையையே பார்த்துக் கொண்டிருந்தாள் கோமளம்.

அவளுக்கு எங்கேயோ வலித்தது.

பாப்பா தலைகுனிந்து கீழே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவள் கண்களிலிருந்து நீர்த்திவலைகள் கீழே உதிர்ந்து கொண்டிருக்கும் என்பது கோமளத்திற்குத் தெரியும்.

அவள் தொண்டை கரகரத்தது.

1 thought on “சாவியின் ஆப்பிள் பசி – 13”

  1. I hate this mother. Her thought because of their forward community! அதற்கு மகனை குலத்தொழில் செய்ய சொல்லவில்லை கூத்தாடியாக அனுமதிக்கிறாள் ஆனால் மருமகள் மட்டும் உயர்சாதியில் இருக்க வேண்டுமாம். அவனும் சத்தியம் தவறாத உத்தமனாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 13கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 13

அத்தியாயம் 13 – பயம் அறியாப் பேதை      முத்தையனைப் போலீஸ் சேவகர்கள் வீதியில் சந்தித்து அழைத்துக் கொண்டு போனதை அச்சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் போக நேர்ந்த செங்கமலத்தாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தச் செங்கமலத்தாச்சி, முத்தையன் குடியிருந்த அதே வீதியில், அவனுடைய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 11கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 11

அத்தியாயம் 11 – போலீஸ் ஸ்டேஷன்      தெரு வாசற்படியில் தள்ளப் பெற்ற கார்வார் பிள்ளை மெதுவாகத் தள்ளாடிக்கொண்டு எழுந்திருந்தார். மேல் வேஷ்டியை எடுத்துத் தூசியைத் தட்டிப் போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையென்பதைக் கவனித்துக் கொண்டு, அவசரமாய்க் கிளம்பி நடந்தார்.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42

அத்தியாயம் 42 – தண்டோரா ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும்,