சாவியின் ‘ஊரார்’ – END

9

காலையில் இருட்டு அழியுமுன் அவுட் போஸ்ட் பழனி வந்தான். பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்கப் போனான்.

“வேப்பஞ் செடியை ஒடிக்காதே. இப்பத்தான் தலை தூக்குது” என்று கூறிப் பல்பொடி எடுத்துக் கொடுத்தார் சாமியார்.

“கன்னங்கரேல்னு இருக்குதே!” என்றான் பழனி.

“இதிலே துலக்கிப் பாரு. பல் வெள்ளை வெளேர்னு ஆகும்!” என்றார் சாமியார்.

“இது எதிலே செஞ்சுது?”

“ஆலங்குச்சி வேலங்குச்சி ரெண்டையும் இடிச்சு, உமித்தூள் கறுக்கி… ஆலும் வேலும் பல்லுக்குறுதி – நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதிம்பாங்களே…”

“டீ சாப்பிடறீங்களா? கொண்டு வரச் சொல்லட்டுமா?”

“சாப்பிடலாம். ரெண்டு நாளா எங்கே காணோம் ஆளை?”

“ஒரு சாவுக்குப் போயிருந்தேன்… குமாரபாளையத்துக்கு.”

“குமாருவை எங்கே காணோம்? கோழி கூவறதுக்குள்ளே வந்துடுவானே. ராத்திரி ரொம்ப நேரம் இங்கே கண் விழிச்சுக்கிட்டிருந்தான் இல்லையா? தூங்கியிருப்பான். ஆமாம், நீ ஏன் ராத்திரி ஒண்ணுமே பேசாம மௌனமாக் குத்துக்கல் கணக்கா உட்கார்ந்துகிட்டிருந்தே?”

“என் அபிப்பிராயத்தை யாரும் கேக்கலையே!”

“உன் அபிப்பிராயம் என்ன? இப்பத்தான் சொல்லேன்.”

“இத இருங்க வரேன்” என்று கூறி, கிணற்றடிக்குப் போனான் பழனி. தண்ணீர் சேந்தி வாயைக் கொப்பளித்தான். முகத்தைக் கழுவினான். இதற்குள் டீ வந்தது.

சாமியாரும் பழனியும் அதைக் குடித்தார்கள். சுடச் சுட அது வயிற்றில் இறங்கியதும் தான் சாமியாருக்குச் சற்று சுறுசுறுப்பு வந்தது. இரண்டு சார்மினார் எடுத்து பழனிக்கு ஒன்று கொடுத்துத் தானும் பற்ற வைத்துக் கொண்டார்.

“என்ன பள்னி? என்ன செய்யலாம் சொல்லு!”

“நீங்க எதுக்கு பலியாகணும்? நீங்களா கொலை செஞ்சீங்க?”

“இல்லே…”

“அப்புறம் நீங்க எதுக்கு போகப் போறீங்க?”

“போகலேன்னா ஊர்லே என்னைச் சும்மா விடமாட்டாங்க போலிருக்கே. ஊரைப் பகைச்சுகிட்டு அப்புறம் ஒழுங்கா வாழ முடியுமா?”

“என்ன செஞ்சிடுவாங்களாம்?”

“நான் ஆண்டி. ஊருக்கு எளைச்சவன். என்ன வேணாலும் செய்வாங்க.”

“அதனாலே…?”

“நான் போயிடறதே மேல். நான் இருந்து யாரைக் காப்பாத்தப் போறேன்? நான் போறதனாலே இந்த ஊருக்கு ஆபத்து இல்லேன்னா அதுக்காக நான் தியாகம் செய்தா என்ன?”

“இதுக்கு பேர் தியாகமில்லே சாமி. இளிச்சவாதனம். கள்ளச்சாராயம் காச்சனாங்க. பாத்துகிட்டு சும்மா இருந்தீங்க. பிக்பாக்கெட் அடிச்சாங்க, தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்தீங்க. இந்த ஊரில் நடக்கிற அக்கிரமம், அயோக்கியத்தனம், திருட்டுத்தனம், அடாவடித்தனம் அத்தனையும் பார்த்துக்கிட்டு, சகிச்சுக்கிட்டு இருந்தீங்க. இப்ப கொள்ளைக்காரங்க ஊரைக் கொளுத்திடுவோம்னு பயமுறுத்தினா அதுக்கு உங்களை பலியாகச் சொல்றாங்க? ஏன்? ஏன்? ஏன்னு கேட்கிறேன்…”

“ராத்திரி நீயே இதையெல்லாம் எடுத்துப் பேசியிருக்காமே?”

“நான் ஏன் பேசணும்? என்னை யார் கேட்டாங்க? அதனாலே கடைசி வரைக்கும் வேடிக்கைப் பார்க்கலாம்னு தான் சும்மா இருந்தேன். இது ஊரா இது? மனுசங்களா இவங்க? நன்றி கெட்டவங்க. சுயநலக்காரங்க. கொளுத்த வேண்டிய ஊர்தான் இது. சுடுகாடாக்க வேண்டியது தான்…”

“விசயத்தைப் போலீசிலே சொல்றதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“எனக்கு சரியாப்படலே சாமி! அதனால் சிக்கல் ஏற்படும்னுதான் தோணுது. கொள்ளைக்காரங்க வாராவதிக்குப் பக்கத்திலே லாரியைக் கொண்டு வந்து நிறுத்துவாங்க. அதுக்கு முன்னாடியே வந்து வேவு பாப்பாங்க, போலீசுக்கும் அவங்களுக்கும் கைகலப்பு ஏற்படலாம். உயிர்ச்சேதம் ஆகலாம். அவங்களைப் பிடிக்கவே முடியாது. இதே மாதிரி வடக்கே ஒரு ஊரிலே நடந்திருக்கு. பயங்கர கேஸ்.”

“அதனாலே…?”

“காதும் காதும் வெச்சாப்பல யாரையாவது அனுப்பி வைச்சுடறதுதான் நல்லது. ஆனா நீங்க போகக் கூடாது, ஊர்லே யாராவது போகட்டும். ஒரு புலி வந்திச்சு. அதையே இந்தப் போலிசாலே புடிக்க முடியல்லே. என்னை சஸ்பெண்ட் செஞ்சு வெச்சிருக்காங்க. கொள்ளைக்காரங்களையா புடிச்சுடப் போறாங்க? விடுங்க சாமி. என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம். நான் இன்னக்கி ஒரு கேஸ் விசயமா கூடலூர் போறேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க. நான் வரவரைக்கும் எந்த முடிவும் எடுக்காதீங்க.” என்று கூறிப் புறப்பட்டான் பழனி.

காலையிலிருந்து குமாருவைக் காணாமல் சாமியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஆப்பக்கார ராஜாத்தி சொன்னாள்:

“குமாருக்கு ஒடம்பு சொகம் இல்லையாம். ஒருவேளை மாரியத்தாளாயிருக்குமோன்னு சந்தேகப்படறாங்க.”

“என்னது?” சாமியார் பதறினார். சட்டென்று கிணற்றடிக்குப் போனார். குளித்தார். விபூதி பூசிக் கொண்டார். செடியிலிருந்து வேப்ப இலையைக் கொத்தாக ஒடித்துக் கொண்டார். நேராகக் குமாருவின் வீட்டுக்கு நடந்தார். அந்த வாசலிலுள்ள ஓடுகளின் இடுக்கில் அந்த வேப்பிலைக் கொத்தைச் செருகினார். உள்ளே எட்டிப் பார்த்தார். வேதாசலம் தலை தெரிந்தது.

“குமாரு இருக்கானா?”

சாமியார் குரல் கேட்டு, வேதாசலம் விரைந்து வந்தான்.

“இருக்கான். ராத்திரி வந்து படுத்தவன்தான், மாரியாத்தாளாயிருக்குமோன்னு தோணுது…”

சாமியார் உள்ளே போய் குமாரு பக்கத்தில் நின்று “குமாரு” என்று கூப்பிட்டார். அவன் கண் திறந்து பார்க்கவில்லை.

“சாமி! சாமி! போவாதீங்க, போவாதீங்க. நீங்க போனா நானும் செத்துடுவேன்” என்று ஜுரவேகத்தில் அலறிக்கொண்டிருந்தான் குமாரு.

“எனக்கும் சந்தேகமாத்தான் இருக்குது. எதுக்கும் மாரியாத்தாளுக்குப் பொங்கல் வைக்கிறேன்னு வேண்டிக்குங்க. சரியாப்போயிடும். ஊர்லே எங்க பார்த்தாலும் ஒரு மாதிரியா இருக்குது.”

விபூதி எடுத்துக் குமாருவின் நெற்றியில் இட்டார். சாமியார் கண் கலங்கிப் போனார். அவன் அலறல் அவரைக் கலக்கிவிட்டது.

திரும்பி மரத்தடிக்கு வந்தார்.

பகலெல்லாம் நல்ல வெயில் அடித்தது. புழுதிக் காற்று வீசியது. அந்தக் காற்று கீழே கிடந்த அரசமரத்துச் சருகுகளை அடித்துக் கொண்டு போயிற்று. பகல் வேளைச் சோம்பேறித்தனம் கிராமத்தைக் கவ்வியிருந்தது. டெய்லரிங் மெஷின் சத்தம், காகங்கள் கரையும் ஒலி, கழுதைகள் கத்தும் ஓசை, தூரத்தில் நெடுஞ்சாலையில் லாரிகள் – பஸ்கள் ஓடும் தேசலான இரைச்சல், இதெல்லாம் சாமியார் காதில் விழுந்து கொண்டிருந்தன. இரண்டு அணில்கள் ஒன்றையொன்று துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. சாமியார் எண்ணமிட்டார். விசிறியால் விசிறிக் கொண்டார். படுத்தார், புரண்டார், எழுந்தார். மஞ்சள் வெயில் அடித்து இரண்டு தூறல் போட்டன. மண்வாசைன அடித்தது. இருட்டு வந்தது.

ராத்திரி எட்டு மணிக்கு எல்லோரும் மரத்தடியில் கூடி விட்டார்கள். சாமியார் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்வதில் எல்லோருமே ஆவலாக இருந்தார்கள்.

“என்ன முடிவுக்கு வந்தீங்க சாமி?” – நாட்டாமை கேட்டான்.

“நான் எந்தக் குத்தமும் செய்யாதப்போ என்னை ஏன் போகச் சொல்றீங்க? உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிச்சு அவனை அனுப்புங்கள்…” – சாமியார் குரல் தீர்மானமாக ஒலித்தது.

“யாரும் ஒத்துக்கிடலையே…”

“மேத்தா, வாராவதிக்கடியிலே செத்துப் போயிட்டான். லாரி மோதியிருக்குது. யாரோ துரத்தியிருக்காங்க. கைகலப்பு நடந்திருக்குதுங்கற வரைக்கும் தெளிவாத் தெரியுது. அப்புறம் துரத்தி ஓடினவன் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டியதுதானே?”

“முடியலையே…”

“அதுக்கு நான் என்ன செய்யட்டும்?”

“நீங்கதான் போகணும். இதுதான் ஊரார் தீர்ப்பு…”

“தீர்ப்பா, அபிப்பிராயமா? வேண்டுதலா? தெளிவாச் சொல்லுங்க…”

“அபிப்பிராயம், வேண்டுதல், தீர்ப்பு எல்லாம்தான்” என்றான் நாட்டாமை.

“நான் போகல்லேன்னா?”

“போக வைப்போம்…”

“என்ன செய்வீங்க?”

“அதைச் சொல்ல முடியாது.”

“விசயம் அந்த அளவுக்கு வந்துட்டுதா! ஒகோன்னானாம்!”

“சரி, நான் போறதா வச்சுக்குங்க. அதில் எனக்கென்ன லாபம்?” சாமியார் கேட்டார்.

“இந்த ஊரைக் காப்பாத்தறீங்களே, அது புண்ணியம் இல்லையா?”

“புண்ணியம் மட்டும் போதுமா? பணம் வேண்டாமா!”

“கொடுக்கிறோம், அப்படி வாங்க வழிக்கு. எவ்வளவு பணம் வேணும்?”

“என் மனைவிக்குப் பணம், என் மகனுக்குப் பணம். என் தங்கச்சிக்குப் பணம். பதினைந்தாயிரம் வேணும்.”

“அப்புறம்?”

“எனக்கு நிலம்.”

“நிலமா! எவ்வளவு?”

“ஒரு காணி நிலம் வேணும். பாரதியார் கேட்டாரே, அவ்வளவுதான்.”

“நிலம் எதுக்கு?”

“ஒருவேளை கொள்ளைக் கூட்டத்தாருங்க மனசு இரங்கி என்னை விடுதலை செஞ்சுடறாங்கன்னு வச்சுக்குவோம். அப்ப நான் திரும்பி வருவேன். அந்த நிலத்தை வைச்சுப் பொழைச்சுக்குவேன்.”

“தியாகத்துக்கு விலை கேட்கறீங்களா?”

“ஆமாம், தியாகி நிலம் கேட்கிறேன்.”

“சரி, ஒத்துக்குங்கப்பா. சாமியார் திரும்பியா வரப்போறார்!” என்றான் நாட்டாமை சிரித்துக் கொண்டே.”

“அப்புறம் என்ன சாமி வேணும்?”

“இந்தப் பிள்ளையார் கோவிலை ஒரு வாரத்துக்குள்ளே கட்டி முடிச்சுடணும். வீட்டுக்கு ஒரு ஆள் வந்து வேலை செய்யணும். கோயிலைக் கட்டி முடிச்சப்புறம் தான் நான் கிளம்புவேன்.”

“இவ்வளவுதானே? அப்புறம் ஒண்ணுமில்லையே! உங்க இஷ்டப்படியே இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கட்டிக் கொடுத்துடறோம், போதுமா?”

“இன்னொரு சங்கதி. கொள்ளைக் காரங்க ஒரு வேளை என்னைக் கொன்னு பாடியைக் கொண்டு வந்து இந்த ஊர்லேயே போட்டுடறாங்க, அப்ப என்ன செய்வீங்க?”

“நாங்களே உங்க அந்திமச் சடங்குகளையெல்லாம் செய்து முடிச்சுடறோம்.”

“அனாதைப்பொணம் தானேன்னு அலட்சியப் படுத்துவீங்களே, உயிரோடு இருக்கிறபோதே இந்த கதின்னா…?”

“ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டோம். நீங்க எப்படி செய்யச் சொல்றீங்களோ அப்படியே செய்றோம்.”

“பூப்பல்லக்கு ஜோடிக்கணும்.”

“ஜோடிக்குறோம்.”

“மேளம், பாண்டுவாத்தியம், தாரை தப்பட்டை எல்லாம் ஏற்பாடு செய்யணும்.”

“செய்யறோம்.”

“பன்னீர் தெளிக்கணும்.”

“தெளிக்கிறோம்.”

“சந்தனம் பூசணும்.”

“பூசறோம்.”

“அதிர்வேட்டு ஆகாசவெடி எல்லாம் கொளுத்தணும்.”

“கொளுத்தறோம்.”

“ஊரே கூடி பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் பெருங் கூட்டம் தலைகுனிஞ்சபடி நடக்கணும்.”

“நடக்கிறோம்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன?”

“இதெல்லாம் வாயாலே சொன்னாப் போதாது. செய்து காட்டணும். என் கண்ணாலே என் அந்திம கால ஊர்வலம் நடக்கறதை நான் பார்க்கணும். நாளைக்கே இதை நடத்திக் காட்டிடுங்க. நான் கேட்ட பணத்தைக் கொடுத்துடுங்க. நிலத்தை எழுதி ரிஜிஸ்டர் பண்ணிடுங்க.”

“இவ்வளவுதானா? வேறே ஏதாவது ஆசை உண்டா சாமியாரே?” நாட்டாமை கேட்டான்.

“இவ்வளவுதான்.”

சாமியார் விருப்பப்படியே அவர் கேட்ட பணத்தை வசூலித்துக் கொடுத்தார்கள். நிலம் எழுதிக் கொடுத்தார்கள். பிள்ளையார் கோயிலைக் கட்டி முடித்தார்கள்.

பாண்டு வாத்தியம், வாண வேடிக்கைகளோடு ஊர்வலத்தையும் நடத்திக் காட்டினார்கள்.

முதல் நாளே வந்து, “நாளைக்கு முப்பதால் தேதி சாமி” என்று ஞாபகப்படுத்தி விட்டுப் போனான் நாட்டாமை.

“ரெடியா இருக்கேன்” என்றார் சாமியார்.

மறுநாள் காலை யாரும் எதிர்பாராத அந்தச் செய்தி வந்தது. கொள்ளைக் கூட்டத்தைப் பிடித்து விட்டதாகப் பத்திரிக்கையில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்த போது சாமியாருக்கு வியப்புத் தாங்கவில்லை.

கூடலூர் போன பழனிதான் கொள்ளைக் கூட்டத்தார் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டு பிடித்ததாக அந்தச் செய்தி சொல்லிற்று.

சாமியார் சந்தோஷ வெறியில் “ஹாஹாஹா!” என்று சிரித்தார்.

“என்ன சாமி?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் குமாரு. அவனுக்கு உடம்பு சரியாகிவிட்டது.

“இதப்பாருடா! கொள்ளைக் கூட்டம் பிடிபட்டுப் போச்சாம்டா! பிடிச்சவன் யார் தெரியுமா? நம்ம பள்னி! முருகன்தான் பள்னி ரூபத்திலே வந்து புடிச்சிருக்கான். நான் தப்பிச்சுட்டேன்டா, தப்பிச்சுட்டேன்!” எக்காள சிரிப்புச் சிரித்தார் சாமியார்.

குமாரு பல்லைக் கடித்தான். தன் நிஜார்ப் பையிலிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தான். ஊராரைப் பார்த்து ‘டமால்! டமால்’ என்று சுட்டான். ஊரார் அவ்வளவு பேரும் செத்துக் கீழே வீழ்வதைப் போல் கற்பனை செய்து பார்த்துக்கொண்டான்.

“உங்களுக்கு இதுதான் சரியான தண்டனை” என்று தனக்குதானே சொல்லி மகிழ்ந்தான்.

வானத்தில் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. “ஒரு தரம் நாம் ரெண்டு பேரும் சிங்கப்பூர் போய் வருவோமாடா குமாரு?” என்று கேட்டார் சாமியார்.

“அங்கே நிஜத் துப்பாக்கி கிடைக்குமா?” – குமாரு கேட்டான்.

“எதுக்கு நிஜத் துப்பாக்கி?”

“இந்த ஊராரை நிஜமாகவே ஒருதரம் சுடணும் போல இருக்கு” என்றான் குமாரு.

“நீ துப்பாக்கியிலேயே இரு, படிடா. வா, திருக்குறள் சொல்லித் தரேன். இப்படிப் பிள்ளையாருக்கு முன்னாலே வந்து உட்காரு. வா. உன்னைப் பெரிய படிப்பாளியாக்காமல் நான் விடப்போறதில்லை. அதான் ஊரார் கிட்டே நிறையப் பணம் வாங்கி வச்சிருக்கேன். அவ்வளவையும் உன் படிப்புக்குச் செலவழிக்கிறேன். எனக்கெதுக்கு அந்தப் பணம்?” என்று கூறி உரத்த குரலில் பயங்கரமாகச் சிரித்தார். அம்மாதிரி அவர் சிரித்ததை ஊரார் அதுரை கண்டதில்லை.

முற்றும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 39ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 39

39 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் அம்பிகாவிடம் “இது? இவ போட்டோ இங்க எப்படி வந்தது?” என அம்பிகா “இது ருத்திராவோட ரூம்.. அவன் மட்டும் தான் வருவான். அவன் போனதுக்கு அப்புறம் யாரும் இங்க வரதில்ல…உனக்கு அக்சராவை முன்னாடியே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43

43 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ருத்திராவை பார்த்துவிட்டு ஆதர்ஷ், அக்சரா இருவரும் திரும்பி வண்டியில் வரும் வழியில் அக்சரா வேடிக்கை பார்த்துக்கொண்டே வர ஆதர்ஷ் அமைதியாக வந்தான். அக்ஸா “என் மேல கோபமா?” என ஆதர்ஷ் புன்னகையுடன் “கோபப்பட இதுல