சாவியின் ‘ஊரார்’ – 04

4

ட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

“என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி.

பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக்கார அலமேலு மீதிருந்த தூசியைத் தட்டியபடி, “அலமேலுவும் ரெட்டை நாடி. நானும் ரெட்டை நாடி! கட்டில் தொய்யாம என்ன செய்யும்? அதை நெனைச்சுத்தான் சிரிச்சேன்!” என்றார்.

“சாமியார் நல்ல தமாஸ்!” என்றான் பழனி.

ஆப்பக்கடை ராஜாத்தி வந்தாள். அலுமினிய டிபன் பாக்ஸ் ஒன்றில் இட்லியும் மீன் குழம்பும் கொண்டு வந்து சாமியார் பக்கத்தில் ‘ணக்’ கென்று வைத்தாள். “இத்தோட ஆறு ரூவா நாற்பது பைசா” என்றாள், குரலில் ஒரு அழுத்தத்தோடு.

பழனி ஓரக்கண்ணால் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். களையான முகம். எடுப்பான நெற்றி – கன்னத்தில் குழி.

“இன்னா அப்படிப் பாக்கறே?” என்று பழனியை அதிகாரத்தோடு அதட்டினாள்.

“ரோட்லே கடை போடறே. ஈ மொய்க்குது. டிராபிக்கு எடைஞ்சலா இருக்குது. கேஸ் எழுதிறவா?” என்றான் பழனி.

“பெரிய டிராபிக் துள்ளிப்போகுது ரோட்லே! ஏன்? காலையிலே சாப்பிடலையா? வந்து சாப்பிட்டுப் போயேன். என்ன ஆச்சு புலி! அதைப் புடிக்காதே. ஈ மொய்க்குதாம். ஓசிலே சாப்பிடறப்போ? சாமியாரே! காசு எப்ப தரப்போறே?” என்றாள்.

“தரேன்.”

“தரேன்னா? எப்பன்னு கரெக்டா தெரியணும்…”

“காசு வரட்டும், ஆண்டி கிட்டே ஏது பணம்?”

“அந்த பேச்செல்லாம் வேணாம். சாமியாராச்சே. போனாப் போகுதுன்னு கொடுத்தா கெடு வெச்சிட்டே போறது நல்லாருக்கா? இது நாயமா உனக்கு? சனிக்கிழமை வருவேன். கொடுத்துடணும். இல்லே, நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன்.” வேகமாகத் திரும்பி நடந்தாள்.

சாமியாருக்கு அவமானம் தாங்கவில்லை. ஆனாலும் அவள் சொன்ன சுடுசொற்களை மௌனமாக ஜீரணித்துக் கொண்டார். அவுட்போஸ்ட் அசந்து போனான். ஆப்பக் கடைக்காரி மீது கேஸ் பிடித்து அவளைப் பழிவாங்க எண்ணினான். ஸஸ்பென்ஷனில் இருக்கும் தனக்கு அந்த அதிகாரம் இல்லாததால் சும்மா இருந்துவிட்டான்.

பழனியின் முகம் பசியால் வாடியிருப்பதைக் கண்ட சாமியார், டிபன் பாக்ஸிலிருந்து இரண்டு இட்லிகளை எடுத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

“நீங்க சாப்பிடலையா?…”

“ஆப்பக்டைக்காரம்மா பேசினது வயிறு நிரம்பிட்டது… ஆண்டவனே!”

மீன் குழம்பு வாசனைக்கு நாய் ஓடி வந்தது. அவன் சாப்பிட்ட பிறகு, “சாமி கிட்டே பத்து ரூபா பணம் கேக்கலாம்னு வந்தேன். சாமியே சங்கடத்திலே இருக்காங்களே, நான் வரட்டுங்களா?…” என்று இழுத்தபடி எழுந்தான்.

“பத்து ரூவாய்க்கு அப்படி என்ன நெருக்கடி?”

“அரிசி வாங்கணும். சம்பளம் வாங்கலையே! சஸ்பெண்ட்லே இல்லே இருக்கேன்?”

“ஓகோ! அப்படியா! இந்த வாட்ச்சை எடுத்துக்கிட்டுப் போ. யார் கிட்டேயாவது கொடுத்து ஒரு அம்பது ரூவா கடன் வாங்கிட்டு வா. எனக்கு நாப்பது ரூவா கொடு. ஒரு மாசத்துலே திருப்பிக் கொடுத்துடலாம்” என்றார் சாமியார்.

“இது ஏது சாமி வாட்ச்?”

“வேதாசலம் குடுத்தான்.”

“சும்மாக் குடுக்க மாட்டானே. கஞ்சனாச்சே! ஏதோ சுளுக்கு இருக்குது…” என்று இழுத்தான் பழனி.

“இருக்குன்னு வச்சுக்கயேன்” என்றார் சாமியார்.

பழனி ‘ஒமேகா’வை வாங்கிக் கொண்டு அவசரமாகப் புறப்பட்டான்.

சாமியார் கிணற்றடிக்குப் போய் தண்ணீரைச் சேந்தித் தலையிலே கொட்டிக் கொண்டார்.

‘சாமியாராச்சே போனாப் போகுதுன்னு குடுத்தா, இது நாயமா இருக்கா உனக்கு?”

‘சனிக்கிழமை வருவேன். கொடுத்துடணும். இல்லே, நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன்.’

தலையைத் துவட்டிக் கொண்டார். நெற்றியிலும் உடம்பிலும் திருநீற்றைப் பூசினார். பிள்ளையாரைச் சுற்றி வந்தார். குளித்ததும் திடீரென்று பசி வேகம் தோன்றி வயிற்றுக்குள் உஷ்ண அலை புரண்டது.

கட்டிலில் போய் உட்கார்ந்து டிபன்பாக்ஸை எடுக்க கையை விட்டுத் துழாவினார். அது தட்டுப்படவில்லை. குனிந்து தரையில் பார்த்தார். இல்லை, எழுந்தார். தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வந்தார். காணவேயில்லை.

‘ராஜாத்தி எடுத்துப் போயிருப்பாளோ?’

மரத்தின்மீது ஏதோ சலசலப்பு கேட்டது. அண்ணாந்து பார்த்தார். அரச மரத்தின் மீது உட்கார்ந்திருந்த குரங்கின் கையில் அந்த டிபன்பாக்ஸ் இருந்தது! அது அந்த அலுமினிய டிபன் பாக்ஸைக் காலி செய்து விட்டு தொப்பென்று கீழே போட்டது.

‘பிச்சையெடுத்தானாம் பெருமாளு, அத்தைப் பிடுங்கினானாம் அனுமாரு. இந்தக் குரங்கு எப்போ வந்தது இங்கே? நேற்று நரிக்குறவங்களோடு வந்திருக்குமோ?’

குமாரு இட்லி கொண்டு வந்தான். தேங்காய்ச்சட்னி சலவை செய்த மாதிரி.

“ஏதுடா!”

“வனஜா அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க…”

“வாயிலெடுக்கறாங்களா இன்னும்?”

“இல்லே. சரியாயிடுச்சாம். சொல்லச் சொன்னாங்க. புள்ளார் விபூதி வாங்கிட்டு வரச் சொன்னாங்க.”

“அப்படியா? மாமன் எங்கே போயிருக்கான்?”

“சேலம்…”

“அங்கே இன்னா?”

“கரும்பு சாகுபடியாளர் கூட்டமாம். போயிருக்காரு.”

“உன்னை எங்கேடா காணோம் நேத்தெல்லாம்?”

“நரிக்குறவங்களைப் பார்க்கப் போயிருந்தேன். துப்பாக்கி வச்சிருக்காங்களே!”

“காடை கவுதாரி சுடுவாங்க…”

“நேத்துகூட ஒரு முயல் சுட்டாங்க.”

“உனக்கெதுக்குடா, அதெல்லாம். படி. நல்லாப் படிச்சு முன்னுக்கு வா!”

“மூணாவது படிச்சிருக்கேனே, பத்தாதா!”

“திருக்குறள் படிப்பியா? அர்த்தம் புரிஞ்சுக்குவியா?”

“அதிலே என்ன இருக்குது?”

“எப்படி வாழணுங்கிற தத்துவங்களெல்லாம் இருக்குடா. அதுக்கு ஒப்பான நூல் இந்த ஒலகத்திலேயே இல்லைடா!”

“காக்கி டிரஸ் போட்டுகிட்டு துப்பாக்கி பிடிச்சுக்கிட்டு லெப்ட்ரைட் நடக்கணும். அதான் எனக்கு ஆசை…”

“நல்ல ஆசைடா!”

“இந்தாங்க…”

“என்னடா அது?”

“வில்ஸ் பாக்கெட். உங்களுக்குத்தான்”

“ஏது?”

“எங்க மாமன் நிறைய அடுக்கி வெச்சிருக்காரு. ஒரு பாக்கெட் எடுத்துட்டு வந்தேன்…”

“திருப்பிக் கொண்டு வெச்சிடு. திருடக் கூடாது. பொய் பேசக் கூடாது. தெரிஞ்சுதா! இதுக்குத்தான் திருக்குறள் படிக்கணுங்கிறது!”

“ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குங்க…”

“திருட்டு சொத்து. தொடமாட்டேன். கொண்டு போயிடு…” குமாரு உற்சாகம் குறைந்து வீட்டுக்குப் போனான்.

ழனி திரும்பி வந்தான். பாத்து ரூபாய் நோட்டுகளை எண்ணிச் சாமியாரிடம் கொடுத்தான்.

“கிடைச்சுட்டுதா பணம்?”

“எண்பது ரூபா கெடச்சுது…”

“இந்தா. நீ இருபது வச்சுக்கோ. பணம் கெடச்சுதும் திருப்பிக் கொடு, போதும். போறப்போ ஆப்பக்கடைக்காரம்மாவிடம் இந்த ரூபாயைக் கொடுத்துடு” என்று இன்னொரு பத்து ரூபாயை எடுத்துப் பழனியிடம் தந்தார்.

“அந்த பொம்பளையைச் சும்மா விடக்கூடாது சாமி மரியாதையில்லாமப் பேசிட்டாளே, மனசு கொதிக்குது எனக்கு” என்றான் பழனி.

“என்னைத்தானே பேசினா? நீ ஏன் கோபப்படறே? போ போ”- பழனியைச் சாந்தப்படுத்தினார் சாமியார்.

அடுத்த நிமிடம் குமாரு இரைக்க இரைக்க ஓடி வந்தான். “டெய்லர் கேசவனை நல்லபாம்பு கடிச்சுட்டுதாம். வண்டியிலே போட்டுக் கிட்டு வராங்க…” என்றான்.

நாலைந்து பேர், வண்டியிலிருந்த கேசவனைத் தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள். ராஜாத்தி ஓடி வந்தாள். “ஐயோ, ஐயோ!” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள்.

கேசவன் மனைவி அவளைச் சந்தேகத்துடன் பார்த்தாள்.

சாமியார், வேட்டியின் ஒரு மூலையில் நீளமாகக் கிழித்தார். மந்திரித்தார். நாடா போல் கிழித்திருந்த துணியில் முடிச்சு மேல் முடிச்சாகப் போட்டுக் கொண்டிருந்தார். ஏழாவது முடிச்சின் போது கேசவன் கண் திறந்தான்.

“இனி உயிருக்குப் பயமில்லை. எடுத்துக்கிட்டுப் போங்க” என்றார் சாமியார். இதற்குள் ஊரே அரச மரத்தடியில் கூடிவிட்டது. ராஜாத்தி, சாமியார் காலில் விழுந்து கும்பிட்டாள். கேசவன் மனைவி அதையும் பார்த்தாள்.

‘தன் புருசன் மீது இவளுக்கு ஏன் இத்தனை கரிசனம்? ஏதோ ரகசியம் இருக்குது’ என்று எண்ணிக் கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு எண்ணெய்ப் பதார்த்தம் எதுவும் சாப்பிடக் கூடாது. உப்பில்லாப் பத்தியம் இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே சாமியார், முடிச்சுப் போட்ட துணியை அரச மரத்தில் கட்டிவிட்டார்.

“பாம்பு அம்புட்டுதாமா?” கேசவன் மனைவியிடம் கேட்டார்.

“அம்புடலையாம். ஓடிடுச்சாம்.”

“அதுங்கண்ணைப் புடுங்க…” என்று சபித்தாள் ராஜாத்தி.

“இருளனைக் கூப்பிட்டு பாம்பு கடிச்ச எடத்துலே ‘கொந்து’ போடச் சொல்லுங்க. வெசம் வெளியே வந்துரும்” என்றார் சாமியார்.

“போய் வரேன் சாமி. நீங்கதான் தெய்வம்” என்றாள் ஆப்பக்கடை ராஜாத்தி.

“அவுட்போஸ்ட் பணம் கொடுப்பாரு, வாங்கிக்க” என்றார் சாமியார்.

“மன்னிச்சுடுங்க சாமி! காலையிலே கொஞ்சம் துடுக்காப் பேசிட்டேன். அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தப்புதான். மன்னிச்சுடுங்க. நீங்க பணம் கொடுக்க வேணாம்.”

“ஏன்?”

“கேசவனைக் காப்பத்தனீங்களே.”

“மந்திரம், வைத்தியம், ஜோசியம் இதுக்கெல்லாம் நான் பணம் வாங்கற வழக்கமில்லே, தெரியுமா? ஆமாம், கேசவன் உனக்கு என்ன வேணும்?” – சாமியார் கேட்டார்.

“தெரியாத மாதிரி கேக்கறீங்களே!” ராஜாத்தி வெட்கத்தோடு திரும்பி நடந்தாள்.

சாமியாருக்கு மெட்ராஸில் வேலை இருந்தது. கட்டிலை எடுத்து அரச மரத்தடியில் சாற்றிவிட்டு, பையை எடுத்துக் கொண்டு குமாருவைக் கூப்பிட்டார். “நான் வரேண்டா!” என்று புறப்பட்டார்.

“பட்டணத்துக்கா?”

“ஆமாம். சாயந்தரம் நாலு மணி பஸ்ஸுக்குப் போறேன். திங்கக்கிழமை திரும்பிருவேன். உங்க மாமன் வந்தா சொல்லு…”

“எனக்கு இன்னா வாங்கி வருவீங்க?”

“சிலேட்டு, வாய்ப்பாடு, பென்சில், பேனா, நோட்புக், முத்தமிழ் நான்காம் வாசகம், திருக்குறள். எனக்கு அபிராமி அந்தாதி…”

சற்று தூரம் நடந்தார், தெருக் கோடியில் கமலா எதிரில் வந்தாள்.

“வாம்மா, நல்ல சகுனம், எதிரிலே வரே!” என்றார் சாமியார்.

“பட்டணம் போறீங்களா?”

“ஆமாம்.”

“எனக்கு ஒரு வழி செய்ய மாட்டீங்களா? என்னைக் கொண்டுபோய் என் புருசன் கிட்டே எப்ப சேர்க்கப் போறீங்க?” கண்ணீருக்குத்தாள் அந்தப் பெண்.

“முருகனை வேண்டிக்க. பார்க்கலாம். எல்லாம் நல்லபடியா நடக்கும். சிந்தாதிரிப்பேட்டையில் எங்கே இருக்கான்னு சொன்னே?”

“சாமிநாயக்கன் சந்துலே பார்க்கறேன். அழுவாதேம்மா. நல்ல காலம் பொறக்கும். புள்ளையாரைச் சுத்திட்டு போ.”

நாலு நாள் கழித்து சாமியார் திரும்பி வந்தார். ஊரில் ஏதோ பெரிய ரகளை நடந்திருப்பதுபோல் தோன்றியது. சூழ்நிலை சரியில்லை. எல்லார் முகத்திலும் ஒரு திகிலும் பயமும் தெரிந்தது.

“இன்னாடா விசயம், குமாரு? ஊர்லே ஒருத்தன் முகத்திலேயும் சிரிப்பைக் காணோம்” என்று ஆவலோடு விசாரித்தார் சாமியார்.

“ஒரு கொள்ளைக்கூட்டம் வந்து ஊரையே கலக்கிடுச்சு.”

“என்னது, கொள்ளைக் கூட்டமா? என்னடா சொல்றே?” என்று கட்டிலை நிமிர்த்திப் போட்டார் சாமியார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 15பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 15

சாதாரணமாக, ஆடவர்கள், கலியாணமாவதற்கு முன்பு கெட்டு அலைவதுண்டு; பருவச்சேஷ்டை காரணமாக ஏதோ விதங்களிலே உடலையும் மனதையும் பாழாக்கிக் கொள்வதுண்டு; பித்தளையைப் பொன்னென்றும், காடியைக் கனிரசமென்றும் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டோ , கேட்டோ , வீட்டிலே பெரியவர்கள், சரிசரி, பையனுக்கு வயதாகிவிட்டது,

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50

50- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த திவி ஆதிக்கு கால் செய்தாள். முதலில் இருந்த கோபத்தில் இவன் கட் பண்ணலாமா என யோசித்து இருந்தும் எதுவும் எமெர்கென்சியோ என அட்டென்ட் செய்ய திவி “பிஸியா இருக்கீங்களா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”