சாவியின் ‘ஊரார்’ – 03

3

க்கம்மா, ஜக்கம்மா!” – சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது.

சாமியார் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்தாயிற்று. ‘வானம் பொழியுது, பூமி விளையுது’ டயலாக் அவருக்கு மனப்பாடம்.

‘ஒரு தடவை மெட்ராஸுக்குப் போய் நடிகர் திலகத்தைப் பார்த்துப் பேசிட்டு வரணும். அவர் வீட்டு வாசல்லே கூடப் பிள்ளையார் கோயில் கட்டியிருப்பதாகக் கேள்வி. இந்த அரசமரத்துப் பிள்ளையாருக்கும் சின்னதா ஒரு கூரை போட்டுக் கொடுக்கச் சொல்லணும். மெட்ராஸுக்குப் போகக் குறைஞ்சது அம்பது ரூபாயாவது ஆகுமே. பணத்துக்கு எங்க போறது?’

பின்பக்கத்திலுள்ள வில்வ மரத்திலிருந்து கோட்டான் ஒன்று கத்தியது. வடக்குத் திசையில், வெகு தூரத்திற்கப்பால் நாய் ஊளையிடும் சத்தம் காற்றில் மெலிதாக ஒலித்தது.

சாமியார் ஆகாசத்தைப் பார்த்தார். ‘ஸப்தரிஷிகள்’ கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. தூக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்தார். கிணற்றடிக்குப் போனார். டீ தயாரித்துச் சாப்பிட்டார். சார்மினார் ஒன்றைப் பற்ற வைத்து ஊதினார், சுகமாக இருந்தது.

சிவாஜி எட்டப்பனை ஏசிக் கொண்டிருந்தார்.

தென் திசையிலிருந்து யாரோ ஒரு ஆள் வருவது நிழலாகத் தெரிந்தது. அலை அலையாக வானத்தை நோக்கி உயர்ந்த க்ராப்.

ப்ளேட் பக்கிரி நெருங்கி வந்தான்.

“இப்படி எங்கிருந்து வரே!” – சாமியார் கேட்டார்.

“சினிமாவுக்குப் போயிட்டு வரேன்…”

“தெற்கு பக்கத்திலிருந்து வரே. சினிமாக் கொட்டா வடக்கால இல்லே இருக்குது?”

“வெளியூர்லே பார்த்தேன். இப்பத்தான் பஸ்ஸுலே இறங்கி வரேன்.”

“ப்ளேடு, எங்கிட்டேயே பொய் சொல்லாதடா! தப்பு. உண்மையைச் சொல்லிடு. அவினாசி தேருக்குப் போயிட்டு வரயா? திருவிழாக் கூட்டத்திலே பிக்பாக்கெட் அடிச்சுட்டு வந்திருப்பே!”

தூரத்தில் போலீஸ் விசில் கேட்டது.

“அவுட்போஸ்ட் ரோந்து போகுது.”

பக்கிரி பின்வாங்கினான்.

“ஏன் பயப்படறே? மடியிலே கனமா?”

“இந்தாங்க நூறு ரூவா.”

“எதுக்கு?”

“புள்ளையார் கோயில் கட்ட.”

“ஏது?”

“சாமியாரே! உனகெதுக்கு அந்தக் கேள்வியெல்லாம்? பேசாம வச்சுக்கோ. எங்கயோ அடிச்சேன். வாங்கிக்குவியா!”

“திருட்டு சொத்தெல்லாம் தொடமாட்டேன். முதல்லே இந்த இடத்தை வுட்டுப் போயிடு நீ…”

“பக்கிரி, இடுப்பில் கட்டியிருந்த தன் நாலு முழ வேட்டியை விலக்கி, அதற்குள்ளிருந்த சிவப்பு நிற நிஜார் பாக்கெட்டுக்குள் கையை விட்டான். ஒரு பர்ஸ், கனமான பர்ஸ், வெளியே வந்தது.

“இது ஏது உனக்கு?”

“பொள்ளாச்சி சந்தையிலே அடிச்சேன். ஆயிரத்து இருநூறு ரூவா. இதைப் பத்திரமா வச்சிரு. காலையிலே வந்து வாங்கிக்கறேன். இதிலே புள்ளையாருக்கு நூறு ரூபா!”

“போலீசைக் கூப்பிடவா!”

“இன்னா சாமியாரே, பயமுறுத்தறயா? அவுட் போஸ்ட் எம்மேலே கை வைச்சிருவானா? கிழிச்சிறமாட்டேன். இந்தா புடி மரியாதையா வெச்சுக்கோ…”

“தொட மாட்டேன் பாவப் பணம்.”

“புடிக்கப் போறியா, இல்லையா?”

“இல்லேன்னா…?”

பக்கிரி இடுப்பிலிருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்து சாமியார் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு போனான். சாமியார் பயந்து போனார்.

“இதை வெச்சுக்கோ. இப்ப வூட்டுக்குப் போறேன். பெண்ஜாதி இந்த பர்ஸைப் பார்த்தா ஏதுன்னு கேப்பா. திருடினதுன்னு தெரிஞ்சா ஊரைக் கூட்டுவா. அப்புறம் ஊருக்குள்ளே என் மரியாதை என்ன ஆகும்?”

‘உனக்கு மரியாதை வேறே இருக்குதா ஊருக்குள்ளே?’ சாமியார் எண்ணிக் கொண்டார்.

பக்கிரி மணிபர்ஸை சாமியார் மீது வீசிவிட்டு “சார்மினார் வச்சிருக்கியா? ஒண்ணு குடு” என்றான்.

கொடுத்தார். பற்ற வைத்துக் கொண்டு “காலையிலே பாக்கறேன்” என்று கூறிப் போய்விட்டான்.

‘கள்ளனுக்கு, கள்ளக் காதலுக்கு, கள்ளக் கடத்தலுக்கு, கள்ளச் சாராயத்துக்கு – இவ்வளவுக்கும் நான் தான் துணையா? ஊருக்கிளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிம்பாங்க. சரியான பலமொழி’ என்று எண்ணிக் கொண்டே பர்ஸை எடுத்துப் பைக்குள் பத்திரப்படுத்தினார் சாமியார்.

காலையில் குமாரு வந்தான்.

“கோடி வீட்டு கெய்வி செத்துட்டாங்க” என்றான்.

“அடப்பாவமே, எப்படா?”

“ராத்திரியே செத்துட்டாங்களாம். வனஜாம்மா சொன்னாங்க…”

“வயசாச்சு. எண்பது எண்பத்தஞ்சு இருக்குமே. குளிர்லே விறைச்சிட்டுது போலிருக்கு. பாவம் நடுவிலே கண் தெரியாமே இருந்து முந்தின ஆட்சியிலே கண் ஆப்ரேஷன் செஞ்சு, கண்ணாடி போட்டாங்களே. அப்புறம் கண் ரொம்ப நல்லாத் தெரிஞ்சுதே. தெருக்கூத்துக்கெல்லாம் கூடப் போய் பார்த்துட்டு வருமே! அடாடா”-சாமியார் ‘ச்’சுக் கொட்டினார்.

குமாரு, சாமியார் முகத்தையே பார்த்தான்.

“கெழவியைத் தூக்கிப் போடறத்துக்கு ஏதாவது ஏற்பாடு நடக்குதாடா? அனாதைக் கெழவி, பாவம்! ஒரே ஒரு புள்ளை இருந்தான் – மிலிட்ரியிலே செத்துட்டான், நீ போய்ப் பார்த்தயா குமாரு?”

“பார்த்தேன். யாருமே இல்லை. பக்கத்தூட்டம்மாத்தான் வந்திருக்காங்க. அழுவறத்துக்குக் கூட ஆள் இல்லே…”

“ராத்திரி ஊமைக் கோட்டான் கத்திச்சு. நாய் ஊளையிட்டுது. அப்பவே நெனைச்சேன். ஏதோ நடக்கப் போகுதுன்னு. கெழவியைத் தூக்கிடுச்சா!”

சாமியார் எழுந்து வேகமாக நடந்தார். பக்கிரி எதிரே வந்தான்.

“டே பக்கிரி, கூடவே வாடா, கெழவி போயிடுச்சாம்”

“எந்தக் கெழவி?”

“மிலிட்ரி சாமிக்கண்ணு அம்மாடா. வா, போய்ப் பாப்பம்.”

நாலு பேரைக் கூட்டி வறட்டி, விறகு சேர்த்து, பச்சை மூங்கில் வெட்டி வந்து, புதுச் சட்டி கொண்டு வந்து ஒரு மாதிரி கிழவியின் காரியத்தை முடித்து விட்டுத் திரும்பிய சாமியார் கிணற்றடியில் போய் நின்றுகொண்டு வாளி வாளியாகத் தண்ணீர் சேந்தித் தலையிலே ஊற்றிக்கொண்டார். தலையைத் துவட்டிக் கொண்டே கட்டிலில் வந்து உட்கார்ந்தார். நல்ல பசி. டீ போட்டுக் குடித்தார். இந்தச் சமயம் வெளியூரிலிருந்து வந்த ஆள் ஒருவன் அவரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான்.

சாமியார் படித்து விட்டு முகத்தைச் சுளித்தார்.

திண்டிவனத்திலிருந்து அவருடைய சகோதரி பண உதவி கேட்டு எழுதியிருந்தாள்.

“சாமியாராகி ஊரை விட்டு வந்தாலும் விடமாட்டாங்களே! என் கிட்டே ஏது பணம்?”

“நாலு நாளா காய்ச்சல்லே படுத்திருக்காங்க. செலவுக்குப் பணம் இல்லியாம்! திருவிழாவிற்கு போறேயே, அப்படியே அண்ணனைப் பார்த்துட்டு வா. சீட்டுத் தரேன்னு சொன்னாங்க” என்றான் அந்தத் திண்டிவனத்து ஆள்.

“நான் பாங்க்கா வச்சிருக்கேன்? ஆண்டிகிட்டே ஏது பணம்?”

சைக்கிளில் பக்கிரி வந்தான். அவன் முகத்தில் அவசரம் தெரிந்தது.

சற்று தூரத்தில் ஒரு காலை பெடலில் வைத்தபடியே, “தரீங்களா…” என்று கேட்டான்.

சாமியார் எடுத்துக் கொடுத்தார்.

பக்கிரி அதிலிருந்து நூறு ரூபாய் நோட் ஒன்றை உருவி சாமியாரிடம் கொடுத்துவிட்டு வேகமாய்ப் போய் விட்டான். திண்டிவனத்து ஆசாமியை எதிரில் வைத்துக் கொண்டு சாமியாரால் அதிகம் பேச முடியவில்லை.

“இந்தா நூறு ரூபா இருக்குது. புள்ளையார் கோயில் கட்டறதுக்குன்னு கொடுத்தான். எடுத்துட்டுப் போய்க் கொடு. குழந்தீங்கல்லாம் நல்லாருக்குதா? ஜாரிச்சேன்னு சொல்லு.”

திண்டிவனம் ஆள் போய் விட்டான். குமாரு வந்தான். சாமியார் ஒமேகாவைப் பார்த்தார். அதை மறந்து போய்க் கையில் கட்டியபடியே தலைமுழுகியிருந்தது அப்போதுதான் தெரிந்தது.

“இன்னா ஆச்சுடா வனஜாவுக்கு?” – குமாருவைக் கேட்டார் சாமியார்.

“வாயிலெடுத்துட்டுதான் இருக்காங்க…”

“சரியாயிடும்…”

“இந்தாங்க, வனஜாம்மா குடுத்திட்டு வரச் சொன்னாங்க” எவர்சில்வர் டிபன்பாக்ஸைச் சாமியாரிடம் கொடுத்தான் குமாரு.

“இன்னாடா இது? வாசனை பலமா இருக்குது?”

“கோழி பிரியாணி. வூட்லே செஞ்சாங்க…”

பசிக்கு சாமியார் ஒரு பிடி பிடித்தார். தண்ணீரைக் குடித்தார். ஏப்பம் விட்டார்.

“கோழி’ விடியக்காலை சீக்கிரம் எழுப்பிடும்டா! கோழியாச்சே!” என்று சிரித்தார் சாமியார்.

எங்கிருந்தோ அந்த நாய் ஓடி வந்தது. “இந்த நாய்க்கு தான் எங்கே மணக்குமோ? சனியனே, இந்தாத் தொலை…” மிச்ச பிரியாணியை, டிபன் பாக்ஸைக் கவிழ்த்துக் கொட்டினார்.

திடீரென்று ஊர் நாய்களெல்லாம் சேர்ந்து குலைத்தன. காது செவிடு பட்டது. நரிக்குறவர்கள் கூட்டம் ஒன்று ஊரோரத்தில் வந்து ‘முகாம்’ போட்டுக் கொண்டிருந்தார்கள்.

குமாரு அவர்களை வேடிக்கை பார்க்க ஓடி விட்டான்.

ஒமேகாவை ஆட்டிக் காதில் வைத்துப் பார்த்தார். அது ஓடிக்கொண்டிருந்தது. மணி பன்னிரண்டரை.

ட்ராமாக்காரி ரத்னாபாய் வந்தாள். பிள்ளையாரைச் சுற்றினாள். விளக்குக்கு எண்ணெய் ஊற்றினாள்.

“இந்தாங்க மைசூர்பாகு. நெய்யிலே செஞ்சது.”

“ஏது?”

“அவனாசி திருவிழாவுக்குப் போயிருந்தேன். ட்ராமா ஓட்டல்லே வாங்கிட்டு வந்தேன். அசல் நெய்யிலே தயாரிச்சதுன்னு போர்ட்லே எழுதியிருந்தது.”

“அது நெய்யில்லே. பொய்! அது சரி, நாட்டாமைக்காரரைப் பார்த்தியா?”

“எங்கே?”

“இல்லையே!”

“நீயும் அவரும் சேர்ந்து உட்கார்ந்து ஒட்டல்லே சாப்பிட்டுக் கிட்டிருந்ததாக் கேள்விப்பட்டேன்…”

“யார் சொன்னது?”

“சும்மா ஒரு யூகம்தான். நாட்டாமக்காரரை ரெண்டு நாளாக் காணோம். அவினாசிலே திருவிழா! நீ ட்ராமாக்குப் போயிட்டே கணக்குப் போட்டுக் கிட்டேன். ரெண்டும் ரெண்டும் நாலு” என்றார் சாமியார்.

“நான் வாரன்” ரத்னாபாய் போய் விட்டாள்.

அவுட் போஸ்ட் பழனி மஃப்டியில் வந்தான்.

“சிகரெட் இருக்கா?” என்று கேட்டான்.

“இன்னா பள்னி. டிரஸ்ஸில்லாமே வரே?” சிகரெட் கொடுத்தார்.

“சஸ்பெண்ட்லே இருக்கே.”

“லஞ்சமா?”

“இல்லே. சத்தியமங்கலம் காட்டிலிருந்து புலி வந்தது பாருங்க. அதைப் புடிக்கலையாம். அது விசயமா எனக்கும் எஸ்.ஐ.க்கும் கொஞ்சம் தகராறு” என்றான்.

“புலியைத்தான் புடிச்சுட்டாங்களே! பேப்பர்லே பார்த்தேனே.”

“அது வேறே புலி” – என்றான் பழனி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16

16 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மாலையில் பார்க்கில் சந்திப்பதாக அனைவரும் முடிவெடுக்க ஆதர்ஷ் நேராக அங்கே வர வாசுவும் ஏதோ வேலையாக விக்ரமை காண சென்றவன் விக்ரம், சஞ்சு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது. பிரியா, ரஞ்சித்,

கல்கியின் பார்த்திபன் கனவு – 02கல்கியின் பார்த்திபன் கனவு – 02

அத்தியாயம் இரண்டு ராஜ குடும்பம் பொன்னன் போன பிறகு, வள்ளி வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை மெழுகிச் சுத்தம் செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து கொண்டு வந்தாள். பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே இறங்கிக்