சாவியின் ‘ஊரார்’ – 02

2

முறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே ‘ப்ளாக்’ டயல் ‘ஸீக்கோ’ பளபளத்தது. ‘V’ போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா.

சிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான்.

சாமியாரை நெருங்கி வந்து “என்ன சாமி! சௌக்கியமா? சிகரெட் ஊதறீங்களா?” என்று பரிவோடு குழைந்த குரலில் கேட்டான். வேதாசலம் வலிய வந்து பேசுவது சாமியாருக்கு வியப்பாயிருந்தது. ‘என்னமோ இருக்கு விசயம்!’

“என்ன பிராண்டு?”

“வில்ஸ்தான். ஏன் 555 தான் குடிப்பீங்களா?”

“இல்லே, சார்மினார் தான் பழக்கம்…”

“மணி என்ன ஆகுது சாமி?”

“கையிலே வாட்ச் கட்டிக்கிட்டு என்னை டைம் கேக்கறீங்களே! ஏழு மணி ஷோ ஆரம்பிக்கிற நேரமாச்சு. ரிக்கார்டு போடறாங்களே…”

“இன்னா படமாம்?”

“சில நேரங்களில் சில மனிதர்கள்.”

“நீங்க பாத்துட்டீங்களா?”

“நான்தான் நிஜ வாழ்க்கையிலேயே பல பேரைப் பார்த்துக்கிட்டிருக்கேனே! இதை சினிமாவிலே வேறே பாக்கணுமா? பதினாறு வயதினிலே வந்தா பாக்கலாம்னு ஒரு ஆசை!”

“சாமியாருக்குப் பதினாறு வயசு கேட்குதா?” வேதாசலம் கேலியாகச் சிரித்தான்.

“கேலி இருக்கட்டும், எங்கே வந்தீங்க?”

“இந்த வாட்ச் என் கைக்கு எப்படி இருக்குது?”

“அழகா இருக்குது. புது வாட்ச்சா? எப்ப வாங்கினீங்க?”

“சிங்கப்பூர்லேர்ந்து வந்துது.”

“கடத்தல் சரக்கா?”

“தெரிஞ்சவர் வாங்கிட்டு வந்தாரு.”

“அவர் எனக்கும் தெரிஞ்சவர்தான்!” என்று கண் சிமிட்டிச் சிரித்தார் சாமியார்.

வேதாசலம் பழைய ரிஸ்ட் வாட்ச் ஒன்றை ஜிப்பா பையிலிருந்து எடுத்து “இதைக் கையிலே கட்டிக்குங்க. ‘ஒமேகா’ வாட்ச்! நாற்பது ரூபா கொடுத்து ரிப்பேர் செஞ்சிருக்கேன்” என்றான்.

“இந்தக் கட்டைக்கு எதுக்குப்பா இதெல்லாம்…”

“அட, கட்டிக்குங்க சாமி! அன்போட தரேன்.”

சாமியார் கையில் பலாத்காரமாக வாட்சைக் கட்டி, “உங்க கைக்கு இது ரொம்ப சைஸா இருக்குது” என்றான்.

“என்ன வேதாசலம்! என்ன விசயம்! எதுக்கு அடி போடறே?”

“உங்க கையாலே ஒரு உதவி…”

“அதானே பார்த்தேன். அதுக்குத்தான் இந்த வாட்சா! ம்… சொல்லு.”

வேதாசலம், சாமியார் காதை ஐந்து நிமிடம் கடித்தான்.

“ஓகோ!” என்று பல்லைக் கடித்தார் சாமியார். ‘அடப்பாவி’ என்பது அதன் அர்த்தம்.

“நீங்க மனசு வெச்சாத்தான் முடியும். காலையிலே கருக்கலோட வீட்டுக்கு வந்துடுங்க.”

“எள்ளு இருக்கா?”

“மூட்டை மூட்டையா இருக்கு…”

“ஆளாக்கு எள்ளை எடுத்து ராத்திரியே தண்ணீலே ஊறப்போட்டு வை. பனவெல்லாம் கொஞ்சம் வேணும்…”

“ஆவட்டும்…” வேதாசலம் திரும்பிப் போய்விட்டான்.

‘அயோக்கியன், இவன் என்னைப் பார்த்து பதினாறு வயசு கேட்குதான்னு கேலி பேசறான்… வீதியிலே பெரிய மனுசனாட்டம் உலாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளே நடத்தற அக்கிரமம்… ம்… பாவம், பாவம், இந்தப் பாவத்துக்கு நான் வேறே ஒடந்தையா?’ சாமியார் உறுமினார்.

காலை வேளையில், இருட்டு பிரியாத முன்பே, சாமியார் அந்த வீட்டுக்குள் வந்திருப்பது குமாருக்கு ஆச்சரியமாயிருந்தது.

“டேய், குமாரு! வாசக்கதவைச் சாத்துடா. சாமி! இப்படி சோபாவிலே உட்காருங்க. இட்லி சாப்பிடறீங்களா?”

“வேணாம்!”

“டீ?”

“காப்பி இருந்தா குடுங்க…”

சாமியார் காப்பி குடித்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். பெரிய வீடு. இரண்டு கட்டு. முற்றத்துக்கு மேலே ‘பந்தோபஸ்து’ கம்பி போட்டிருந்தது. நெல் மூட்டைகள் அடுக்கியிருந்தன. குருவிகள் நெல் மணிகளைக் கொத்திக் கொண்டிருந்தன. கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு தகர டப்பாவை எடுத்து அதற்குள்ளிருந்து லேகியத்தை எடுத்து கச்சக்காய் அளவுக்கு உருட்டினார்.

“எங்கே, வரச் சொல்லுங்க அம்மாவை” என்றார்.

“குமாரு, வனஜாவைக் கூப்பிடுடா” என்றான் வேதாசலம்.

பின் கட்டிலிருந்து வனஜா வந்து நின்றாள். ஐம்பொன் விக்கிரகம் மாதிரி. சின்ன வயசு. மூக்கு கூர்மையாக இருந்தது. வைர பேசரி போட்டிருந்தாள். சிரித்த முகத்தில் சோகம் தெரிந்தது. நெற்றியிலே பொட்டில்லை.

“நாக்கை நீட்டும்மா…”

நீட்டினாள்.

கையைப் பிடித்து நாடி பார்த்தார். கண்களையும் பார்த்தார்.

“வாயிலெடுத்தியா?”

“இப்பக்கூட சத்தம் கேட்டுதே” என்றான் வேதாசலம்.

“இந்தா, இந்த லேகியத்தைச் சாப்பிடு. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு, ஊற வைச்ச எள் தண்ணியை எடுத்துப் பனவெல்லம் கலந்து சாப்பிடு. பானகம் மாதிரி இருக்கும். தண்ணிலே வெல்லம் கரையற மாதிரி அதுவும் கரைஞ்சிடும். ரெண்டே தினத்திலே சரியாப் போயிடும், கவலைப்படாதே போ” என்றார் சாமியார்.

குமாருக்கு எதுவும் புரியவில்லை.

“வனஜா அடிக்கடி வாயிலெடுக்கிறாங்களே, ஏன்?” என்று மட்டும் யோசித்தான்.

“அப்ப நான் வரட்டுமா?”

சாமியார் கிளம்பி வாசல் வரை போய்விட்டார். வேதாசலம் அவரைத் தொடர்ந்து போய், “சாமி, சங்கதி யாருக்கும் தெரியக்கூடாது. ஜாக்கிரதை. மானம் போயிடும்” என்று ரகசியக் குரலில் எச்சரித்து அனுப்பினான்.

ட்டிலில் உட்கார்ந்திருந்த சாமியார் நெற்றியில் ‘பட்’ என்று அடித்துக் கொண்டார்.

“ஏன் அடிச்சுக்குறீங்க!” குமாரு கேட்டான்.

“கொசு கடிக்குது.”

“வாட்ச் ஏது?”

“உங்க மாமன் கொடுத்தான்.”

“எங்க மாமா நல்லவரு!”

“குமாரு, உனக்கு வெவரம் தெரியாதுடா? உன் மாமன் இந்த வாட்ச்சை எனக்கு ஏன் கொடுத்தான் தெரியுமா?”

“ஏன்?”

“லஞ்சம். அந்த ரகசியத்தை நான் வெளியே சொல்லக்கூடாதாம். சொன்னா உங்க மாமன் என்னை ஊரை விட்டே தொலைச்சுப்புடுவான்…”

“எனக்குத் தெரியணும்…”

“தெரிஞ்சாலும் புரியாதுடா!”

“சொல்ல மாட்டீங்களா?”

தூரத்தில் இரண்டு நாய்கள் காதல் புரிந்து கொண்டிருந்தன.

“மனுசங்க இந்த நாய்களைவிடக் கேவலமாப் போயிட்டாங்க, குமாரு.”

“என்ன சொல்றீங்க?”

“உங்க மாமங்காரனுடைய அண்ணன் செத்துப் போய் எத்தனை வருசம் ஆகுது?”

“ரெண்டு வருசம்”

“வனஜா உங்க மாமனுக்கு என்ன வேணும்?”

“அண்ணன் பெண்ஜாதி.”

“அதாவது, உங்க மாமனோட அண்ணனுக்கு இரண்டாவது பெண்ஜாதின்னு சொல்லு. முதல் சம்சாரம் தவறிப் போனதும் இவளைக் கட்டிக்கிட்டாரு. ஏழைப் பொண்ணு. பாவம் தங்க விக்கிரகமாட்டம் இருக்கா, கலியாணம் கட்டி ரெண்டு வருசத்திலே புருசனைப் பறி கொடுத்துட்டா. அனாதையா இப்ப உங்க மாமன் வீட்டிலேயே வாழ்ந்துகிட்டிருக்கா. இப்ப வாயிலெடுக்கறா? என்ன அருத்தம்? என்ன அருத்தம்னேன்?”

குமாரு விழித்தான்.

“உனக்குப் புரியாதுடா இந்த விவகாரமெல்லாம். நாய் ஜென்மங்கடா! உங்க மாமனுக்கு விசயம் தெரிஞ்சா உன்னையும் என்னையும் தொலைச்சுப்புடுவான். நீ போய்ப் படி. போடா…”

“எங்க மாமா ரொம்ப நல்லவராச்சே!”

“அயோக்யன். வனஜா சீதையுமில்லே. உன் மாமன் வேதாசலம் லட்சுமணனும் இல்லே. அண்ணன் சம்சாரத்தையே கெடுத்தவனை நீ நல்லவன்னு நம்பிக்கிட்டிருக்கயா? ஏன் புயல் அடிக்காது? ஆளுக்குள்ளே ஆளு. அதான் சொன்னனே. இந்த ஒலகத்திலேயே ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயும் இன்னொரு ஆள் இருக்கான். சில நேரத்திலே அந்த உள்ளுக்குள்ளே இருக்கிற ஆளு வெளியே வருவான். நல்லாப் பேரு வெச்சான் இந்த சினிமாவுக்கு – சில நேரங்களில் சில மனிதர்கள். அதிலே ஒருத்தன் உங்க மாமன். அவனைப் போயி நல்லவன்னு சொல்றியே! நம்பிக்கிட்டிரு. நாமத்தைப் போடுவான் உனக்கு. ஊர் சொத்தைக் கொள்ளை அடிச்சுக்கிட்டு அண்ணன் பெண்ஜாதியைக் கெடுத்துகிட்டு… நீ வூட்டுக்குப் போடா, உங்க மாமன் பாக்கப் போறான். சந்தேகப்படுவான்.”

ப்போது அந்தப் பக்கமாக டெய்லர் கடை கேசவன் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். சாமியார் ‘ஒமேகா’வைப் பார்த்தார். அது 7.50 காட்டியது.

இந்த இருட்டு வேளையிலே இவன் இப்படி எங்கே போகிறான் என்று சாமியார் சந்தேகப்பட்டார். சாவடிப் பக்கம் சைக்கிள் திரும்பியது. அங்கே ஆப்பக் கடை ராஜாத்தியின் உருவம் தெரிந்தது. சற்று நேரத்தில் அவர்கள் இரண்டு பேரும் சாவடிக்குள் நுழைவதும் தெரிந்தது.

‘இது வேறே ஒரு கேஸ் – தனிக் கதை!’ என்று சாமியார் சிரித்துக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13

13 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   மறுநாள் பிரியா அக்சராவிடம் வந்த வாசு “என்ன சிஸ்டர் இன்னைக்கு என்ன ஸ்பஷல்?” அக்சரா பதில்கூற வாயெடுக்க அவளை அடக்கிய ப்ரியா “ஏன் உங்க வீட்டில சமைக்க மாட்டிங்களா? ஏதோ ஒரு தடவை

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 09வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 09

சமயற்காரர், “மகாராஜனே அந்தப் பணத்தை நான் என் கையாலும் தொடுவேனா? தொட்டிருந்தால் சட்டப்படி அது குற்றமாய் விடாதா? பிறருடைய பொருளை எவனொருவன் சுய நலங்கருதி அபகரிக்கிறானோ அவன் சட்டப்படி குற்றவாளியா கிறான் அல்லவா? ஆகையால், நான் என் சுய நலத்தைக் கருதவே

ராணி மங்கம்மாள் – நா. பார்த்தசாரதி – 1ராணி மங்கம்மாள் – நா. பார்த்தசாரதி – 1

ராணி மங்கம்மாள் – முன்னுரை ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த மங்கம்மாவை நாயகியாக