Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 30

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 30

30
 

  • மாலையில் அறையில் உட்கார்ந்தவாறு நூலகத்தில் இருந்து கடன் பெற்று வந்த ஒரு கணினிப் பாடநூலிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் அகிலா. கொஞ்ச நேரம் நூலைப் பார்ப்பதும் அப்புறம் கொஞ்சம் வெறித்து ஜன்னல் கண்ணாடிகள் வழியாக வெளியில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக இருந்தாள். அந்த மலாய் மொழிபெயர்ப்பு நூல் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. எவ்வளவுதான் விரிவுரைகள் மலாயிலேயே நடந்தாலும் இறுதியில் ஆங்கில மூல நூலைப் பார்த்தால்தான் முழு விஷயமும் புரிகிறது. ஆங்கில மூலநூலைத் தேடிக் கிடைக்காததனால்தான் இந்த மலாய் நூலைத் தூக்கி வந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய விடைகள் அதில் கிடைக்காமல் அது அவளை அலைக்கழித்தது.

 

  • பாடத்தில் மனம் ஈடுபடாமல் இருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல என்பது அவளுக்குப் புரிந்தது. தீபாவளி முடிந்து அவள் பல்கலைக் கழகம் திரும்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் வந்த நாளிலிருந்து கணேசனைப் பார்க்க முடியவில்லை. அவள் அலோர் ஸ்டாரிலிருந்து திரும்பி பினாங்கில் பஸ் விட்டு இறங்கிய போதே கணேசன் தன்னை அழைத்துப் போக வந்திருப்பானா என்று ஒரு நப்பாசையுடன் எட்டி எட்டிப் பார்த்தாள். அவன் இல்லை. நேற்றுத்தான் தன் வீட்டில் தீபாவளி முடித்துக் கொண்டு கிள்ளானுக்குப் போயிருப்பவன் இத்தனை சீக்கிரம் வந்திருப்பான் என்று எதிர்பார்க்கும் தன் முட்டாள் தனத்தைக் கடிந்து கொண்டாள்.

 

  • நசநசவென தூறிக் கொண்டிருந்த மழையில் குளுகோரிலிருந்து துணிப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்து விடுதிக்குள் வருவதற்குள் அவள் முற்றாக நனைந்து போய்விட்டாள். நடந்து கொண்டிருக்கும் போதே அன்றைக்கு கணேசனுடன் தொப்பரையாக நனைந்து அவன் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து அவனைக் கட்டிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குத் திரும்பிய நினைவு வந்து கிளுகிளுக்கச் செய்தது.

 

  • அவளுடைய இந்தியத் தோழிகள் யாரும் பல்கலைக் கழகத்திற்குத் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரவர் ஊர்களிலும் வீடுகளிலும் இன்னும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள். தோழிகள் இல்லாத, குறிப்பாக கணேசன் இல்லாத வளாகம் அவளுக்கு வெறிச்சோடிக் கிடந்தது. வளாகம் திரும்பிய முதல் இரவிலேயே தனிமை உணர்ச்சி தீவிரமாக மேலோங்கி இருந்து. நாளைக்கு எல்லோரும் திரும்பி விடுவார்கள். வளாகம் முன்பு போல கலகலப்பாக இருக்கும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டாள்.

 

  • மாலதி மறுநாள் வந்துவிட்டாள். காலை விரிவுரை முடிந்தவுடன் சந்தித்து இருவரும் கேன்டீனில் சாப்பிடப் போனார்கள். அகிலா சுற்றுமுற்றும் பார்வையை அலைய விடுவது யாருக்காக என்று மாலதிக்குத் தெரிந்துதானிருந்தது.

 

  • “என்ன, உங்க ஆள இந்தப் பக்கத்திலியே காணோமே! இன்னும் திரும்பிலியா? திரும்பியிருந்தா பலகாரத்த ஈ மொய்க்கிற மாதிரி இந்நேரம் இங்க வந்திருப்பாரே!” என்று மாலதியே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.

 

  • “தெரியில மாலதி. ஒரே நாள்ள வந்திர்ரேன்னுதான் போனாரு! அத்தை வீட்டில விருந்து ரொம்ப பலம் போல!” என்றாள் அகிலா. மாலதியைப் பார்த்து அது ஒரு வேடிக்கை என்பது போலச் சிரித்தாள். உள்ளுக்குள் மாலதிக்கு மறைத்து உள்ளம் ஏங்கியது.

 

  • “தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்தாரா? அந்தக் கதை சொல்லவே இல்லியே!” மாலதி கேட்டாள்.

 

  • “வந்திருந்தார். என்ன சொல்ல வேண்டியிருக்கு? எல்லா விருந்தாளிகளும் மாதிரி வந்து போனாரு, அவ்வளவுதான்!”

 

  • “ஏய், மறைக்கிற பாத்தியா! இவர் எல்லா விருந்தாளிகளையும் போல இல்லியே! இவர் ரொம்ப சிறப்பான விருந்தாளின்னு உங்க அப்பா அம்பாவுக்குக் காட்டுறதுக்குத்தான நீ கூப்பிட்டிருந்த?”

 

  • மாலதியிடம் மறைக்க முடியாது. அதோடு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. காதல் செய்திகள் சாம்பிராணிப் புகை போல. மறைத்து வந்தாலும் பறந்து மூக்கில் நுழைந்து விடும்.

 

  • “அப்பா அவரப் பார்த்து நல்ல முறையில சிநேகமாத்தான் பேசினார் மாலதி. ஆனா அம்மா அவர்கிட்ட முகங்கொடுத்தே பேசில!”

 

  • “ஏன்?”

 

  • “என்னமோ தெரியில! ஒரு காரணமில்லாத வெறுப்பு. நான் அவர அறிமுகப் படுத்தப் பார்த்த போதும் வேணும்னே வெலகிப் போய்ட்டாங்க!”

 

  • “அப்படியா? அப்ப கணேசன் வருத்தப் படுலியா?”

 

  • “தெரியில. அப்புறம் அவரோட பேசிற சந்தர்ப்பம் கெடைக்கில. இனி வந்தாதான் கேக்கணும்!”

 

  • கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு அகிலாவே சொன்னாள்: “அன்னைக்கு ராத்திரி அம்மா என்னப் பிடிச்சிக்கிட்டாங்க. ஏன் இங்கக் கூப்பிட்டேன்னு திட்டினாங்க. ஆளப் பாத்தா தோட்டக் காட்டான் மாதிரி இருக்கு, எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கிலன்னாங்க!”

 

  • மாலதியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. “அப்ப ரொம்ப சீரியசாத்தான் வெறுக்கிறாங்க போல இருக்கு! அப்பா என்ன சொன்னாரு?”

 

  • “அப்பா மொதல்ல ஆதரவா பேசினாரு. ஆனா கடைசியில ‘இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும்’ அப்படிங்கிறாரு”

 

  • “அப்ப ரெண்டு பேரும் வேண்டான்னு சொல்லிட்டாங்களா? அப்புறம் என்ன செய்யப் போற அகிலா?”

 

  • அகிலா சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தவாறிருந்தாள். அப்புறம் பேசினாள்: “வந்ததிலிருந்து ரொம்ப யோசிச்சுப் பார்த்திட்டேன் மாலதி. இந்த விஷயத்தில அப்பா அம்மாவோட பிற்போக்குத் தனத்த என்னால ஒத்துக்க முடியில. என்னோட வாழ்க்கைக்கு வேண்டியவர நான் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை இல்லியா? ஆகவே நான் கணேசன் மேல உள்ள என் பிரியத்த மாத்திக்கப் போறதில்ல!” என்றாள். அந்தத் தருணத்தில் அந்த உறுதி இன்னும் பலப் பட்டது.

 

  • “பிரியம்னா… காதல்னு தெளிவா சொல்லேன்!”

 

  • “ஆமா. காதல்தான். அது என்ன பெரிய குத்தமா?”

 

  • மாலதி கொஞ்சம் யோசித்துப் பேசினாள்: “எனக்குத் தெரியாதம்மா. இதுவரைக்கும் எனக்கு அப்படி நடந்ததில்ல. என்னப் பாத்து இளிச்ச எந்த ஆம்பிளயும் இதுவரைக்கும் காதல்னு எங்கிட்ட வந்ததில்ல. நானும் அப்படி யாரையும் தேடிப் போனதுமில்ல. எங்க அப்பா அம்மா பாத்து வைக்கிற யாரையும் கட்டிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!”

 

  • “அப்படின்னா நான் செய்றது தப்புங்கிறியா?”

 

  • “ஐயோ! அப்படி இல்ல. எனக்குத் தெரியாத விஷயம் பத்தி நான் யாருக்கும் ஆலோசனை சொல்லத் தயாரா இல்லன்னுதான் சொன்னேன்!”

 

  • கொஞ்ச நேரம் மௌனமாகச் சாப்பிட்டார்கள். திடீரென எதையோ நினைத்துக் கொண்டது போல மாலதி கேட்டாள்: “கணேசன் இன்னும் கேம்பசுக்குத் திரும்பி வரலன்னு ஒனக்கு நிச்சயமாத் தெரியுமா?”

 

  • அகிலா திடுக்கிட்டாள். “ஏன் அப்படி கேக்கிற மாலதி?”

 

  • “இல்ல, நீ சொல்றதப் பார்த்தா தனக்கு உங்க வீட்டில கிடைச்ச வரவேற்பில கோவமாகி ஒருவேள உன்னப் பாக்க வேண்டான்னு இருக்காரோ என்னமோ”

 

  • அகிலா கலவரமடைந்தாள். அப்படியும் இருக்குமா?

 

  • *** *** ***

 

  • அன்று இரவும் அதற்கடுத்த நாளான இன்றும் கூட கணேசனை வளாகத்தில் காணவில்லை. விரிவுரைக்குப் போய் வரும் போதெல்லாம் அவன் மோட்டார் சைக்கிள் எங்காவது தென்படுகிறதா என்று சுற்றிப் பார்த்தாள். காணவில்லை. அவனுடைய நண்பர்கள் சிலரைப் பார்த்தாள். ஆனால் கணேசனைப் பற்றிக் கேட்க வெட்கமாக இருந்தது.

 

  • இன்று முழுவதும் விரிவுரைகளில் மனம் செல்லில்லை. செய்ய வேண்டிய எசைன்மெண்டுகள் இரண்டு மூன்று இருந்தன. ஒன்றைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை. நூலகத்தில் உட்கார்ந்தால் ஒருவேளை கணேசன் வெளியில் இருப்பானோ என்று மனம் தேட வைத்தது. வெளியே இருக்கும் போது ஒருவேளை நூலகத்தின் உள்ளே இருப்பானை என்று தேடவைத்தது. இன்று முழுவதும் இந்தத் தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.

 

  • மாலதி ரொம்பவும்தான் கலவரப் படுத்தி விட்டாள். அப்படி இருக்குமா? கோபித்துக் கொண்டுதான் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறானா? அம்மா அன்றைக்கு நடந்து கொண்டது அவனுக்குப் பெரிய அவமானமாகப் பட்டிருக்குமா? அவன் விடைபெற்றுப் போவதற்கு முன் “அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!” என்று சொன்னதை நினைத்துப் பார்த்தாள். உண்மையில் கோபப்பட்டுப் பேசினானா? தான்தான் புரிந்து கொள்ளவில்லையோ?

 

  • அல்லது இன்னும் கிள்ளானிலிருந்து திரும்பவில்லையா?

 

  • அவள் ஜன்னலுக்கு அப்பால் விடுதிக்கு வரும் குறுகிய சாலை இருந்து. அதில் மோட்டார் சைக்கிள்கள் வந்த போதெல்லாம் அது அவனுடைய மோட்டாரா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லாத போது தூரத்தில் தெரிந்த குன்றுகளைப் பார்த்தாள். சூரியன் சூடு குறைந்து விழுந்து கொண்டிருந்தது. அடிவானம் சிகப்புச் சாயம் பூசிக் கொள்ளத் தொடங்கியிருந்தது. அது அவளுடைய தனிமையை இன்னும் அதிகப் படுத்தியது.

 

  • அறைக்குள் இருப்புக் கொள்ளவில்லை. ஆனால் எங்கு போவதென்றும் தெரியவில்லை. நூலகத்துக்குப் போகலாம். ஆனால் பிடிக்கவில்லை.

 

  • அவள் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். யார்? மாலதி வந்திருப்பாளோ? இருக்காதே! மாலதிக்கு இன்று மாலை டியுடோரியல் இருக்கறதென்று சொன்னாளே!

 

  • கணேசன்? முடியாது. ஆண்கள் பெண்கள் விடுதிக்குள் அறை ஏறி வர முடியாது. ஒருவேளை கீழே இருந்து ஆள் அனுப்பியிருப்பானோ! ஆசைகள், ஆசைகள். ஆயிரம் ஆசைகளோடு ஓடிக் கதவைத் திறந்தாள். ஜெசிக்கா!

 

  • ஜெசிக்காவா? எப்படி, ஏன் வந்தாள்? கடைசியாகச் சண்டையிட்டுப் போன பிறகு ஜெசிக்கா ஒரு நாளும் அவளோடு பேசியதில்லை. ஆனால் பின்னால் வேறு காதலனைப் பிடித்துக் கொண்டு கணேசன் மீதுள்ள ஆசைகள் தணிந்து விட்டிருந்த பொழுது அகிலாவைப் பார்த்து ஓரிரு முறை புன்னகைத்து நட்பைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு நாளும் நின்று பேசியதில்லை. இன்றைக்கு ஏன் அறை தேடி வந்தாள்?

 

  • “ஹாய்” என்றாள் ஜெசிக்கா. அவளுடைய முத்திரைச் சிரிப்பு அப்படியே இருந்தது.

 

  • “ஹாய் ஜெசிக்கா! என்ன ஆச்சரியம்! திடீரென்று தேடி வந்திருக்கிறாயே!” என்றாள் அகிலா.

 

  • “இப்படி வந்த உன்னைத் தொந்திரவு படுத்தியதற்கு மன்னித்துக் கொள் அகிலா. ஆனால் உனக்குச் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது” என்றாள். சிரிப்பு மறைந்திருந்தது.

 

  • “என்ன செய்தி?”

 

  • “கணேசனைப் பற்றிய செய்தி” என்றாள்.

 

  • அகிலாவுக்குத் திகீரென்றது. கணேசனுக்கு என்ன? ஏன் இப்படி இவள் செய்தி கொண்டு வர வேண்டும்? “ஏன், அவருக்கு என்ன? எங்கே அவர்?” என்று கேட்டாள்.

 

  • “பதட்டப் படாதே! கணேசனுக்கு ஒன்றுமில்லை. கிளாங்கில்தான் இருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு முன் என்னிடம் •போனில் பேசினார்!”

 

  • “என்ன பேசினார்?”

 

  • ஜெசிக்கா அறையைச் சுற்றிப் பார்த்தாள். பின் பேசினாள்: “நான் நினைக்கிறேன், நாம் கீழே போய் பேசுவது நல்லது. கேன்டீனுக்குப் போவோம். ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்!” என்றாள்.

 

  • “என்னை மிகவும் பயப்படுத்துகிறாய் ஜெசிக்கா. அவசரமான செய்தியாக இருந்தால் இப்போதே சொல்லிவிடு!” என்றாள் அகிலா.

 

  • “அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் மிக முக்கிய செய்திதான். வா, தனிமையில் உட்கார்ந்து ஆறுதலாகப் பேசுவோம்!”

 

  • ஜெசிக்காவை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அகிலா உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டாள். கேன்டீனை நோக்கி மௌனமாக நடந்தார்கள். என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாள்? ஏன் இந்த முஸ்தீபும் மர்மமும்? கணேசனுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தது. அவன் கிள்ளானிலிருந்து •போன் செய்திருக்கிறான் என்று தெரிந்தது. அகிலா தேடுவாள் என்று தெரிந்து தான் இன்னமும் வளாகத்துக்குத் திரும்பவில்லை என்ற செய்தியைச் சொல்லச் செய்திருக்கிறான் என்று தெரிந்தது.

 

  • ஆனால் அதற்கு மேல் என்ன செய்தி? “இதோடு இந்த உறவு முறிந்தது என்று சொல்லிவிடு” என்று தன் உயிர்த் தோழியை விட்டுச் சொல்லச் செய்திருக்கிறானா? “என்னால் அவள் முகத்தில் முழிக்க முடியாது!” என்று சொல்லியிருக்கிறானா? அம்மாவின் வெறுப்பு இத்தனை தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டதா? மனம் கற்பனைகளை இரட்டிப்பாக்கிக் கொண்டேயிருந்தது.

 

  • கேன்டீனில் கூட்டம் இன்னும் சேரவில்லை. ஆளுக்கொரு பானம் வாங்கிக் கொண்டு மிக ஒதுக்குப் புறமான இடத்துக்குப் போனார்கள்.

 

  • “உன்னிடம் பேச வேண்டும் என்று பல முறை நான் நினைத்ததுண்டு. ஆனால் உன்னோடு நான் சண்டையிட்ட சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து எனக்கே வெட்கமாகப் போகும். அதனால் உன்னைச் சந்திக்க எனக்கு தைரியம் வருவதில்லை!” என்றாள் ஜெசிக்கா.

 

  • அகிலா சிரித்தாள். “உனக்கா தைரியம் இல்லை. இந்தப் பல்கலைக் கழகத்திலேயே நீதான் பெரிய தைரியசாலி என்பதுதான் உண்மை!” என்றாள்.

 

  • “எல்லா தைரியங்களையும் விட மன்னிப்புக் கேட்பதற்குத்தான் அதிக தைரியம் வேண்டும். என்னை மன்னித்து விடு அகிலா!” என்றாள்.

 

  • “நான் அதையெல்லாம் மறந்து விட்டேன். நீயும் மறந்து விடு!” என்றாள் அகிலா.

 

  • “நன்றி. கணேசன் மிக நல்வன். அவனைக் காதலனாக அடைந்த நீ அதிர்ஷ்டசாலி”

 

  • அகிலாவுக்குப் பொறுமை குறைந்தது. இதற்காகவா கூப்பிட்டாள்? தன் பழைய காலக் காதல் வாழ்க்கையைச் சொல்லி ஆயாசப் படவா அறையைத் தேடி வந்தாள்? “என்ன ஜெசிக்கா! கணேசனைப் பற்றி முக்கியமான விஷயம் சொல்ல வேண்டு மென்று சொல்லி பழைய விஷயங்களைப் பேசுகிறாயே!”

 

  • ஜெசிக்கா சிரித்தாள். “அவசரப் படாதே! நிறைய விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது!”

 

  • திடீரென்று ஜெசிக்காவின் இந்த வருகைக்கு ஒரு உள் நோக்கம் இருக்கும் என அகிலாவுக்குத் தோன்றியது. தன் காதலைக் குலைக்கும் ஏதோ ஒரு விஷக் கதையை அவள் சொல்லப் போகிறாள் என்று நினைத்தாள். இவளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தோன்றியது.

 

  • “முதலில் கணேசன் நேராக எனக்குப் •போன் செய்த காரணம் ஐசேக் மாநாட்டுக்கான செயலகத்தில் எங்களுக்கு தனி நேரடி •போன் இருப்பதால்தான். விடுதியில் உனக்கு •போன் செய்து பிடிப்பது கடினம். இரண்டாவதாக நீண்ட நேரம் பேச முடியாது. ஆகவேதான் என்னை தூதாக அனுப்பியிருக்கிறார்.”

 

  • உண்மைதான். விடுதியில் அவளுக்கு •போன் செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. ஆனால் என்ன தூது?

 

  • “மேலும் நான் இன்னும் அவருடைய சிநேகிதியாக இருக்கிறேன். காதலியாக இருக்க ஆசைப் பட்டேன். முடியவில்லை. ஆகவே சிநேகிதியாக இருக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லையல்லவா?” என்று சிரித்தாள்.

 

  • “இல்லை ஜெசிக்கா. உன்னைக் காதலியாக கணேசன் நினைத்திருந்தாலும் நான் குறுக்கே நிற்க மாட்டேன்” என்றாள் அகிலா. ஆனால் அது வேடிக்கைப் பேச்சு என அவளுக்கே தெரிந்தது.

 

  • “எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை!”

 

  • “சரி விஷயத்தைச் சொல்!” என்று அவசரப் படுத்தினாள் அகிலா.

 

  • “கணேசன் சொன்ன செய்தி இதுதான். கணேசன் தீபாவளிக்கு அடுத்த நாள் கிள்ளானிலிருந்து பஸ் ஏறி பினாங்குக்குத் திரும்பி விட்டாராம். இரவு பினாங்கை அடைந்து தன் அறையை அடைந்த போது அவருடைய அறைத் தோழன் பாதுகாவல் அலுவலகம் அவரை பலமுறை அறையில் வந்து தேடியதாகச் செய்தி சொல்ல பாதுகாவல் அலுவலகத்திற்கு அந்த இரவில் அவசரமாகச் சென்றிருக்கிறார். அங்கே கணேசன் உடனடியாக கிள்ளானுக்கு அத்தை வீட்டுக்குப் •போன் செய்ய வேண்டும் என்று செய்தி சொல்லியிருக்கிறார்கள்!”

 

  • “ஏன்?” திகிலோடு கேட்டாள் அகிலா.

 

  • ஜெசிக்கா தனது பானத்தைக் கொஞ்சமாக உறிஞ்சினாள்.

 

  • “தீபாவளி அன்று இரவு கணேசன் தனது வீட்டுக்குப் போன போது கொஞ்சம் கலவரம் நடந்திருக்கிறது!”

 

  • “என்ன கலவரம்?”

 

  • “அவன் தீபாவளி அன்றைக்கு வீட்டுக்கு வரவில்லை என்று சண்டை போட்டிருக்கிறார்கள்”

 

  • அகிலாவுக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்தது. தன் வேண்டு கோளினால்தானே அவன் அத்தை வீட்டுக்குப் போகாமல் தன் வீடு வர வேண்டியிருந்தது!

 

  • “ஆமாம். தீபாவளி அன்றைக்குக் காலையில் அலோர் ஸ்டாருக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்!”

 

  • “தெரியும்! எனக்கு எல்லா விவரமும் தெரியும். கணேசனின் அத்தைக்கு ஒரு மகள் இருக்கிறாள் தெரியுமா?”

 

  • “சொல்லியிருக்கிறார்!”

 

  • “அவர்கள் இருவருக்கும் அத்தை கல்யாணம் பேசி முடித்திருப்பது தெரியுமா?”

 

  • அகிலா திடுக்கிட்டாள். இந்த விஷயம் பற்றி கணேசன் சொன்னதே இல்லையே. அத்தை மகள் பற்றிப் பேச்செடுத்த போதும் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான்.

 

  • “எனக்குச் சொல்லவில்லை ஜெசிக்கா!”

 

  • அவள் குரலில் இருந்த ஏமாற்றத்தை ஜெசிக்கா புரிந்தது போலப் பேசினாள். “இதோ பார். இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே! அத்தைக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தாலும், மல்லிகாவுக்கும் அந்த ஆசை இருந்தாலும், கணேசனுக்கு அந்த எண்ணம் ஒரு நாளும் இல்லை. என்னிடம் பல முறை அதைச் சொல்லியிருக்கிறார்!”

 

  • “சரி, அதற்கென்ன இப்போது? என்ன •போன் கால் வந்தது என்று சொல்!”

 

  • “அவசரப் படாதே, சொல்கிறேன்! தீபாவளி அன்று அத்தை திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார். உடனடியாக மல்லிகாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். கணேசன் அதை உறுதியாக மறுத்திருக்கிறார். அவர் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்களிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்!”

 

  • அகிலாவுக்குக் கலவரமாக இருந்தது. கணேசன் குடும்பத்தில் ஒரு சண்டை உண்டாகத் தான் காரணமாக அமைந்து விட்டோமே என்ற வருத்தம் வந்தது. ஆனால் கணேசனின் உறுதி மகிழ்ச்சியைத் தந்தது. தான் அம்மாவின் பேச்சைக் கேட்டு அதற்கு எதிரிடையாக முடிவு எடுத்ததைப் போலத்தான் கணேசனும் செய்திருக்கிறான் என்பது நிம்மதியாக இருந்தது.

 

  • ஆனால் அந்தக் தையெல்லாம் ஏன் இந்த ஜெசிக்காவிடம், அதுவும் •போனில்…?

 

  • “அத்தையிடமும் மல்லிகாவிடமும் அந்த முடிவைச் சொல்லி விட்டுத்தான் பஸ் ஏறி இங்கு வந்திருக்கிறார். வந்து சேர்ந்தவுடன்தான் •போன் செய்தி வந்திருக்கிறது!”

 

  • “என்ன செய்தி!”

 

  • “கணேசன் முன்னரேயே இந்த விஷயத்தை என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறார். நான்தான் இதெல்லாம் வெறும் மிரட்டல் என்று தட்டிக் கழித்தேன்!” என்றாள் ஜெசிக்கா.

 

  • “என்ன மிரட்டல் ஜெசிக்கா? யார் மிரட்டினார்கள்? தெளிவாகச் சொல்!”

 

  • “அந்த அத்தை மகள் மல்லிகா முதலிலேயே ஒரு முறை கணேசன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் போனால் விஷத்தைக் குடித்து இறந்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறாள். ஆனால் கணேசன் அதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டார்”

 

  • திகில் புகுந்த மனதுடன் அகிலா கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

  • “அந்தப் பெண் அன்றிரவு சொன்னது போலச் செய்து விட்டாளாம். ஏதோ வீட்டிலிருந்த விஷத்தைக் குடித்து விட்டாளாம். இரவில் தூக்கிச் சென்று மருத்துவ மனையில் சேர்த்து விட்டுப் •போன் செய்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் கணேசன் இரவோடு இரவாக மோட்டார் சைக்கிளிலேயே கிள்ளானுக்குப் போய்விட்டார்!”

 

  • அகிலா உறைந்து போய் ஜெசிக்காவை வெறித்துப் பார்த்தவாறிருந்தாள்.

 

  • “கவலைப் படாதே! அவள் உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். கணேசன் நாளைக்கு அல்லது நாளன்றைக்குத் திரும்பி விடுகிறேன் என்று சொல்லச் சொன்னார்”

 

  • என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் வந்த திகில் கொஞ்சம் அகன்ற போது உள்ளத்தைப் பெரிய கருமேகம் போலத் துக்கம் வந்து கவ்வியது. ஏன் தான் புனிதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் நட்பு இவ்வளவு மூர்க்கமான எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கிறது? ஏன் உறவுகளையும் மனிதர்களையும் பலி கொள்ளுகிறது? என்ன செய்து விட்டோம் இருவரும்? பெரும் குற்றம் செய்து விட்டோமா?

 

  • அகிலா முகத்தைப் பொத்திக் கொண்டு ஜெசிக்காவின் முன் அழ ஆரம்பித்தாள்.

 

  ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11

11  பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன.

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 5ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 5

5  “பஹாசா மலேசியாவும் குடிமக்கள் கடப்பாடுகளும்” என்ற பாடம் எல்லா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டிருந்தது. அதில் தேர்வடையாவிட்டால் பட்டம் கிடைக்காது என்பதால் எல்லா மாணவர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். “பூசாட் பஹாசா” என்னும் மொழிகள்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17

17  புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு