Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29

29
 

  • அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு “உம்” என்று ஓட்டி வந்தார்.

 

  • பகல் முழுவதும் அப்பாவின் வீட்டில் அத்தையும் அப்பாவுமாகச் சேர்ந்து அவனைத் தார்தாராய்க் கிழித்துப் போட்டார்கள். அவனால் அந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்து விட்டதென்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்து மண்ணாய்ப் போகப் போகிறார்கள் என்னும் செய்திகளை வெவ்வேறு கடுமையான வார்த்தைகளால் இருவரும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கிறார்களே என்ற நாணம் ஏதும் இல்லாமல் பேசினார்கள்.

 

  • “யாரு அந்த வேசச் சிறுக்கி? எனக்குக் காட்டு! என்ன சொக்குப் பொடி போட்டு உன்ன மயக்கினான்னு நேரா நாலு வார்த்த கேக்கிறேன்!” என்று அத்தை சொன்ன போது அவனுக்கு கோபம் எரிமலையாகக் குமுறி எழுந்தது. நான் இதயத்தில் சூட்டிய பூவை இப்படிக் குதறுகிறாள். நான் புனிதமானதாக எண்ணிக் காப்பாற்றுகின்ற எண்ணங்களின் மீது எச்சில் உமிழுகிறாள். அவள் குரல்வளையைப் பற்ற வேண்டும் போல் கோபம் வந்தது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் கோபாவேசங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

 

  • இடையே ஓரிரண்டு முறை காதல் என்பதும் கல்யாணம் என்பதும் சம்பந்தப் பட்டவர்களின் சொந்த விஷயம் என்பதை கணேசன் அவர்களுக்கு உணர்த்த முயன்றான். அவர்கள் விவாதக் கூச்சலில் அது விகாரமான பதில்களைத்தான் பெற்றது. “ஓ, அப்ப இத்தன நாள் எங்கையில காசு வாங்கித் தின்னது ஒன் சொந்த விஷயமா? புஸ்தகத்துக்கு இத்தன வெள்ளி, சாப்பாட்டுக்கு இத்தன வெள்ளின்னு கணக்குப் பாத்து வாங்கிட்டுப் போனது சொந்த விஷயமா?” என்று அத்தை கத்தினாள்.

 

  • “நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்” என்று அப்பா தாளம் போட்டார்.

 

  • “அத்த, நீங்க கொடுத்த காச எல்லாம் நான் வேலக்கிப் போயி சம்பாரிச்சி திருப்பிக் குடுத்திட்றேன். நீங்க எனக்கு இன்னமே எந்தக் காசும் கொடுக்க வேணாம்!” என்றான்.

 

  • “அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தன நா அவ ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?” என்று அப்பா கேட்டார்.

 

  • அவனால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து சோர்ந்து போய் தன் பையை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றான்.

 

  • “நில்லு, எங்க போற?” என்று அத்தை அதட்டினாள்.

 

  • “நான் போறேன் அத்தை. இங்க இருந்தா இப்படியே பேசிக்கிட்டே இருப்பிங்க. என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சி. அதுல எந்த மாத்தமும் இல்ல. ஆகவே நான் இப்படியே போய் பஸ் பிடிச்சி பினாங்குக்குத் திரும்பிப் போறேன்!” என்றான்.

 

  • வீடு கொஞ்ச நேரம் அதிர்ந்து இருந்தது. அப்புறம் அத்தை சொன்னாள்: “இதோட முடிஞ்சி போச்சா கணேசு? இப்படி வெளியாயிட்ட எல்லாம் சரியாப் போயிடுமா? அப்ப சரி. ஆனா எம்பிள்ளைக்கு யாரு பதில் சொல்றது? நான் எப்படி அவ மொகத்த பார்த்து ‘ஒன் மாமன் ஒன்ன ஏச்சிட்டு இன்னொருத்தியோட போயிட்டான்னு’ சொல்றது? நீயே வா. இப்பவே எங்கூட வந்து நீயே அவ மொகத்த பாத்து சொல்லிட்டு எங்க வேணுமானா தொலஞ்சி போ!” என்றாள்.

 

  • கணேசனுக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விட வேண்டும் என்றிருந்தாலும் இந்த அத்தையின் முகத்தில் இனி எந்த நாளும் விழிக்க வேண்டாம் என்று இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த விஷயத்தை மல்லிகாவிடம் சொல்லாமல் போவது நல்லதல்ல என்றே பட்டது. அவள் எனக்கு எதிரியல்ல. அவளும் என் அன்புக்கு உகந்தவள்தான். அவள் இவர்களைப் போல வயதிலும் உணர்விலும் முற்றிப்போன கட்டையல்ல. இளம்பெண். இளைய புதிய தலைமுறை. காதல் என்பது என்ன என சொன்னால் அவளுக்குப் புரியும். அதிலும் அத்தையால் இந்த விஷயம் விகாரப் படுத்தப் பட்டும் கொச்சைப் படுத்தப்பட்டும் அவளுக்குச் சொல்லப் படுவதை விட தானே அவளுக்கு இதமாக எடுத்துச் சொல்லலாம். நிலைமையை உணர வைக்கலாம் அதுதான் சரி.

 

  • அத்தையுடன் மீண்டும் காரில் ஏறினான். ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. கிள்ளான் வந்து சேரும் வரை ஒரு பேச்சும் பேசவில்லை. அத்தை பிரயாணம் முழுவதிலும் விம்மி விம்மி அழுது கண்களைத் துடைத்துக் கொண்டே இருந்தாள்.

 

  • *** *** ***

 

  • காரிலிருந்து இறங்கியவுடன் “ஏம்மா இவ்வளவு லேட்டா வர்ரிங்க?” என்று மல்லிகா தனக்கே உரிய குழந்தைத் தனத்துடன் சிணுங்கினாள். அத்தை ஒரு பதிலும் சொல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே போனாள். மல்லிகா புதிர் நிறைந்த கண்களால் கணேசனைப் பார்த்தாள்.

 

  • கணேசன் வரவேற்பறையில் நாற்காலியில் உட்கார்ந்தான். மல்லிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். “ஏன் மாமா அம்மா ஒரு மாதிரியா இருக்காங்க? உங்க வீட்டில ஏதாச்சிம் சண்டையா?” என்று கேட்டாள்.

 

  • அவளைப் பார்க்கும் போது அவள் இன்னும் குழந்தையாகிவிட்டது போலத் தெரிந்தது. தான் சொல்லப் போகும் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாள். “அப்படியா, சரி அதினால என்ன!” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு உதறி விடுவாளா? அல்லது அவள் அம்மா குமுறி எழுந்ததைப் போல எழுந்து ஏசுவாளா? “உன்னால் என் வாழ்வே சூன்யமாகிவிட்டதே” என்று சினிமா பாணியில் அழுவாளா? அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

 

  • ஜெசிக்காவுடன் இதைப் பற்றி அவன் ஒருமுறை பேசிய நினைவு வந்தது. கொஞ்சம் தைரியமும் வந்தது.

 

  • “என்ன மாமா பேசாம இருக்கிங்க?” என்றாள்.

 

  • அதற்குள் உள்ளே போயிருந்த அத்தை மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள். “சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!” என்றாள்.

 

  • அத்தையின் முன்னிலையில் இந்த விஷயத்தைப் பேச முடியாது என்று தெரிந்தது. “மல்லிகா இப்படி வா!” என்று அவளை இழுத்துக் கொண்டு தான் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் தன்னறைக்குள் அவளை இழுத்துப் போனான். அவனுடைய சாமான்கள் புத்தகங்கள் பல இன்னும் அந்த அறையில் இருந்தன. இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் நாள் வந்து விட்டது என்பதுதான் அவன் மனதில் விளைந்த முதல் நினைப்பாக இருந்தது.

 

  • மல்லிகா கலவரத்துடன் படுக்கையின் மேல் உட்கார்ந்தாள். அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்த படி இருந்தாள்.

 

  • “மல்லிகா, ஒங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். ஆர்ப்பாட்டம் பண்ணாம அமைதியா கேளு!” என்றான்.

 

  • “ஏன் அம்மா இப்படிச் சத்தம் போட்றாங்க? அவங்க சொல்றது ஒண்ணும் வௌங்கிலிய! என்ன நடந்திச்சி?” என்று கேட்டாள்.

 

  • மனதைத் திடப் படுத்திக் கொண்டு சொன்னான்: “மல்லிகா, இன்னக்கி எங்க வீட்டில அத்தை உன் கல்யாணப் பேச்ச எடுத்தாங்க!”

 

  • “என்ன பேச்சு? என்ன சொன்னாங்க!”

 

  • “உடனே எனக்கும் ஒனக்கும் கல்யாணம் நடக்கணும்னாங்க!”

 

  • கொஞ்சம் வெட்கப்பட்டவள் போல் சிறு புன்னகையை இழைய விட்டாள். ஆனால் அது மின்னலாக மறைந்து மீண்டும் அவள் கண்களில் கலவரம்தான் நிறைந்தது.

 

  • “ஒடனேன்னா, எப்ப?”

 

  • “இப்பவே, இந்த வருஷமே!”

 

  • “ஏன் அம்மாவுக்கு இவ்வளவு அவசரம்? அடுத்த வருஷம் உங்க படிப்பு முடிஞ்சவொண்ணதான இதப்பத்திப் பேசிறதா இருந்தது!” என்றாள்.

 

  • “நான் கல்யாணத்துக்குத் தயாரா இல்ல மல்லிகா!”

 

  • மல்லிகா கொஞ்சம் அகலமாகவே சிரித்தாள். “எனக்கும் ஒண்ணும் அவசரமில்ல மாமா! இதுதானா பிரச்சின? நான் அம்மாகிட்ட சொல்லிட்றனே, அடுத்த வருஷம் வச்சிக்கலாம்னு!”

 

  • “அப்படி இல்ல மல்லிகா! அது இல்ல பிரச்னை!”

 

  • மீண்டும் அவனைக் கலவரத்துடன் பார்த்தாள். “அப்புறம் என்ன பிரச்னை?” என்று கேட்டாள்.

 

  • அவளுடைய கைகளைப் பிடித்தான். “மல்லிகா, நான் ஒண்ணக் கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னு அத்தை கிட்ட சொல்லிட்டேன்!” என்றான்.

 

  • அதிர்ந்து போனாள். அவளுடைய கண்களில் கண்ணீர் ஊற ஆரம்பித்தது. “முடியாதுன்னா? ஏன் அப்படி…?”

 

  • “எனக்கு இன்னொரு பெண் இருக்கா, எங்க பல்கலைக் கழகத்தில. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியப் பட்றோம். அவளத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்”

 

  • அதிர்ச்சியில் குழம்பிப் போயிருந்தாள். அவனைக் கண் விரித்துப் பார்ப்பதும் படுக்கையை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தாள். கண்களில் கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது.

 

  • “மல்லிகா, நான் சொல்றத அமைதியா கேளு! நாம் ரெண்டு பேரும் ஒண்ணா வளந்தவங்க. ஒன்மேல எனக்கு ரொம்பப் பிரியம் இருக்கு. ஆனா ஒன்ன ஒரு தங்கச்சி மாதிரிதான் என்னால நினைக்க முடியுது மல்லிகா!” என்றான்.

 

  • அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் அழுதவாறே இருந்தாள். அவள் பேசாத நிலையில் அவன்தான் பேச்சைத் தொடர வேண்டியிருந்தது.

 

  • “நீயே சொல்லு! என்னைக்காச்சும் உங்கிட்ட நான் தவறாப் பழகியிருக்கேனா? ஒன்ன காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கேனா? கல்யாணத்தப் பத்தி எப்பவாவது பேசியிருக்கேனா?”

 

  • மீண்டும் பேச்சில்லை. “ஒன்ன நான் ரொம்ப விரும்புறேன் மல்லிகா. எனக்கு என்னைக்குமே நீ ஒரு தங்கைதான். அதனாலதான் உங்கம்மோவோட விருப்பத்துக்கு என்னால சம்மதிக்க முடியில!”

 

  • நீர் குளங்கட்டியிருந்த கண்களால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “அப்ப என்ன உங்களுக்கு வேண்டாமா?” என்று தேம்பல்களுக்கிடையில் கேட்டாள்.

 

  • “நீ எனக்கு வேணும் மல்லிகா. ஒரு தங்கையா இரு!” என்றான்.

 

  • “என்ன உங்களுக்குப் பிடிக்கிலியா? ஏன் திடீர்னு பிடிக்காம போச்சி? நான் என்ன தப்பு செஞ்சேன்?”

 

  • “நீ ஒரு தப்பும் செய்யில! ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா….!”

 

  • “நான் அழகா இல்லியா மாமா? அவ, நீங்க விரும்பிற பொண்ணு இன்னும் ரொம்ப அழகா இருக்கிறாளா?”

 

  • “சீ! ஒன்னோட அழகுக்கு என்ன கொறச்சல்? அவ ஒண்ணும் பெரிய அழகியில்ல…!”

 

  • “ஆனா நல்லாப் படிச்சவ, இல்ல? நல்லா பேசத் தெரிஞ்சவ, கெட்டிக்காரி! என்னப் போல படிக்காத முட்டாள் இல்ல!”

 

  • “ஏன் இப்படிப் பேசிற மல்லிகா. அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல! இது மனசு சம்பந்தப் பட்ட விஷயம். எங்கள ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப பிடிச்சிப் போச்சி!”

 

  • “அப்ப என்னப் பிடிக்கில. இன்னொருத்தியப் பாத்த வொண்ண நான் அவலட்சணமாவும் முட்டாளாவும் போயிட்டனா?”

 

  • “ஏன் இப்படிப் பேசிற மல்லிகா? அதெல்லாம் இல்ல. உன்ன என் மனைவியா நான் நெனச்சதே இல்ல. இதெல்லாம் எங்க அப்பாவும் உன் அம்மாவும் தாங்களா நெனைச்சிக்கிட்டு பேசிப் பேசி உன் மனசில ஏத்தின நம்பிக்கை. அதை நீ நம்ப வேணாம்!”

 

  • “அப்பவெல்லாம் பேசாமதான இருந்திங்க! அப்பவே ஏன் அப்படிச் சொல்லல! இவ எனக்கு வேணாம் அவலட்சணம், முட்டாள்னு அப்பவே சொல்லியிருந்தா நான் அப்பவே உங்கள மறந்திருப்பேனே!”

 

  • கொஞ்ச நேரம் குற்ற உணர்ச்சியில் வாய் மூடி இருந்தான். பின் பேசினான்: “அப்ப எல்லாம் அத நான் வேடிக்கையாதான் நெனச்சேன். அப்புறம் அது சீரியஸ்னு தெரிஞ்சப்பவும் மறுத்து சொல்ல தைரியம் இல்லாமப் போச்சி. ஆனா இப்ப அதை வெளிப்படுத்திற நேரம் வந்திருச்சி. நான் என்ன செய்ய முடியும் மல்லிகா?”

 

  • “நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்” மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அழுதாள்.

 

  • “என்ன மல்லிகா இது! நீ அவலட்சணமும் இல்ல, முட்டாளும் இல்ல. அழகான புத்திசாலியான நல்ல பொண்ணு. உன்னக் கட்டிக்க எத்தனயோ பேர் தயாரா இருப்பாங்க! நானே ஒனக்கு மாப்பிள்ள பாத்துக் கட்டி வைக்கிறேன் பார் மல்லிகா!” என்றான்.

 

  • “வேணாம், ஒனக்கெதுக்கு அந்த சிரமம்? எனக்கெதுக்கு இனிமே மாப்பிள்ளையும் கல்யாணமும் கருமாதியும். எனக்கு ஒண்ணுமே தேவையில்ல! இனி வாழ்நாள் முழுக்க நான் அவலட்சணமாவும் முட்டாளுமாவே இருந்திட்டுப் போறேன்!” ஓங்கி அழுதாள். அறையிலிருந்து எழுந்து ஓடினாள். வரவேற்பறையில் காத்திருந்த அவளுடைய அம்மாவைக் கட்டிக் கண்டு குலுங்கி அழுதாள்.

 

  • “பாத்துக்கிட்டல்லம்மா! உங்க மாமன் எவ்வளவோ நாளா திட்டம் போட்டு வச்சிருந்திருக்கான். எப்படா படிப்பு முடியும், இவங்ககிட்ட இருந்து கறக்கிறதெல்லாம் கறந்துகிட்டு சமயம் வரும் போது எல்லாத்தையும் கைகழுவிட்டுப் போயிடுவோம்னு காத்துக்கிட்டே இருந்திருக்கான். இப்ப பிள்ளை தலை தூக்கியாச்சி, மீசை மொளச்சாச்சி. இந்த படிப்பிறிவில்லாத மூட ஜனங்களோட சகவாசம் வேணான்னு தூக்கிப் போட்டாச்சி! நம்பதான் ஏமாந்த முட்டாள்களா ஆயிட்டோம்!” அத்தை மல்லிகாவை அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டேயிருந்தாள்.

 

  • கணேசன் அறையிலிருந்து வெளியே வந்தான். “அத்தை நீங்க என்னக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம அசிங்கமா பேசிறிங்க. நீங்க என்ன ஆளாக்கிப் படிக்க வச்சதுக்கு என் தோலச் செருப்பா தச்சிப் போட நான் தயார். அந்த நன்றிய என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆனா என் தங்கையா நெனச்சிருக்கிற மல்லிகாவ…”

 

  • அவன் முடிப்பதற்குள் அத்தை சீறினாள். “என்ன தங்கச்சி தங்கச்சின்னு இன்னைக்குப் புதிசா ஆரம்பிச்சிருக்கிற? இத்தன நாள் மொறப் பொண்ணு, இன்னொருத்தி வந்தவுடனே தங்கச்சியா? ஒரு நாளாவது அவளத் தங்கச்சின்னு கூப்பிட்டிருப்பியா? என்ன அண்ணன்னு கூப்பிடுன்னு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கியா? திடீர்னு அண்ணன் வேஷம் போட்றியா?”

 

  • இந்த அத்தைக்குத் தன் உணர்வுகளை விளக்கிச் சொல்ல முடியாதென்று உறுதியாகிவிட்டது. விளக்கம் சொல்லச்சொல்ல அதை விகாராமாக்கிக் கொண்டிருக்கிறாள். இனி இதை வளர்த்த வேண்டாம் என்று தோன்றியது.

 

  • “அத்தை, இப்ப நான் என்ன சொன்னாலும் அது எடுபட மாட்டேங்குது. உங்க கோபம் கொஞ்சம் தணிஞ்சவொடனே இதப் பத்திப் பேசுவோம். நான் போயிட்டு வாரேன் அத்தை!” தன் துணிப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

 

  • வாசலில் நின்றான். “மல்லிகா! உன் அழுகையும் அதிர்ச்சியும் தீர்ந்தவொடன அமைதியா நெனச்சிப் பாரு. நான் சொல்றது உனக்குப் புரியும். உம்மேல எனக்கு எந்தக் கோவமும் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சி நான் போன் பண்றேன். போயிட்டு வாரேன்!” இறங்கி நடந்தான்.

 

  • *** *** ***

 

  • நெடுஞ்சாலையில் அந்த எக்ஸ்பிரஸ் பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. பினாங்குக்கான பஸ்ஸைப் பிடித்து அவன் ஏறி உட்கார்ந்த போதே மாலை ஆகிவிட்டது. மத்தியானம் அவனுக்கு யாரும் சாப்பாடு போடவில்லை. சாப்பாடு வாங்கிச் சாப்பிட வேண்டும் என்னும் எண்ணமும் மறந்து போயிருந்தது. வழியெல்லாம் உள்ளம் பெரும் குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்டுக் கொண்டேயிருந்தது.

 

  • என்ன செய்து விட்டேன்! அமைதியாகப் போய்க் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பங்களிலும் அவலப் புயலை எழுப்பியதற்கு நான்தானா காரணம் என்று மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்தை என்னதான் தந்திரக்காரியாக இருந்தாலும் அவள்தான் தனக்கு அம்மாவாக இருந்து அனைத்தும் செய்தவள். அவள் காண்பித்த உலகத்தில்தான் அவன் இத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருந்தான். “அத்தை, படம் பாக்கப் போறேன் காசு குடுங்க!” என்று பள்ளிக்கூட நாளிலிருந்து அவளிடம் உரிமையாகக் கேட்டு பழகியிருக்கிறான். இன்று எப்படி அந்த அத்தையை இந்த அளவுக்கு எதிரியாக எண்ண முடிந்தது? எப்படி அவளை எதிர்த்துப் பேசி விவாதிக்க முடிந்தது? எடுத்தெறிந்துவிட்டு வெளெயேற முடிந்தது?

 

  • மல்லிகாவின் அழுகையில் குளித்த முகம் நினைவுக்கு வந்தது. எத்தனை முறை இவளைச் சிரிக்க வைத்திருக்கிறேன்! தலையில் குட்டி அழ வைத்த நாட்களில் கூட கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைத்திருக்கிறேன். இன்று ஏன் அவளை அழ வைத்தேன்? ஏன் இப்படி எனக்கு அணுக்கமான, எனக்குச் சொந்தமான குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தினேன்? நான் செய்தது சரியா, பிழையா?

 

  • “நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

 

  • “அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தினி நா அவங்க ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?”

 

  • குரூரமான கேள்விகள். ஆனால் அவனால் பதில் சொல்ல முடியாத கேள்விகள். நன்றி கெட்டவன்தானா? ஏன் நன்றி கெட்டேன்? ஒரு புதிய காதலி முளைத்து விட்டதனாலா? அவளுடைய மோகம் என்னை மயக்கி விட்டதா? அதனால் என் அன்புக்குரிய அனைவரையும் பகைத்துக் கொள்ளத் துணிந்து விட்டேனா?

 

  • மனதின் ஆழத்தில் இன்னொரு குரல் இந்தக் குற்றங்களைச் சரிப்படுத்த முன் வந்தது. இல்லை. இதில் ஒன்றும் நன்றி கெட்ட தனம் இல்லை. நான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை என் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோர்களின் வாழ்க்கையிலும் அத்தையின் வாழ்க்கையிலும் நான் இரண்டறக் கலந்திருந்தாலும் என் வாழ்க்கை என தனியாக ஒன்று இனி உருவாக வேண்டும். அது என் விருப்பத்தில் உருவாக வேண்டும். அதில் என் மனைவியாக அகிலாதான் இருப்பாள். அவளை அந்த இடத்திலிருந்து மறுக்க வேறு யாருக்கும் – பெற்றோர்க்குக் கூட – உரிமை இல்லை.

 

  • ஆனால் இதையெல்லாம் இன்னும் அமைதியாகவும் அவசரமில்லாமலும் அசிங்கப் படுத்தாமலும் செய்திருக்கலாம். அசிங்கப் படுத்தியது நானல்ல. அத்தை இப்படி ஆவேசமாக திருமணப் பேச்சை எடுத்து தன்னை நெருக்காமல் இருந்தால் இதனை இதமாக உரிய காலத்தில் எடுத்துச் சொல்லிச் செய்திருக்கலாம். அத்தையின் முரட்டுப் புத்திதான் அத்தனையையும் இப்போது அசிங்கப் படுத்தியிருக்கிறது.

 

  • மல்லிகாவை நினைந்து உண்மையிலேயே பரிதாபப் பட்டான். அப்பாவியாக இருந்து தன் அம்மாவின் ஆசை காட்டல்களுக்கு ஆளாகி அந்த ஆசைகளின் ஏமாற்றத்திற்கு இப்போது பலியாகிப் போனாள். “சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பிலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!” என்று அத்தை அவனை விரட்டியிராவிட்டால் மல்லிகாவிடமும் மென்மையாக இதை எடுத்துச் சொல்லியிருக்க முடியும். அத்தை தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெறியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளையும் பிய்த்து எறிவது என்று முடிவு செய்து விட்டாள்.

 

  • “நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்” என்று மல்லிகா மீண்டும் மீண்டும் கூறித் தன்னைத் தண்டித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இது திடீர் என்று ஏற்பட்டதல்ல. மல்லிகாவின் உள்ளே நீண்ட நாட்களாகப் புதைந்து கிடந்த தாழ்வு மனப்பான்மை முற்றாக மேலே வந்து அவளை ஆக்கிரமித்துக் கொண்டது தெரிந்தது.

 

  • அவள் உண்மையில் அழகி. ஆனால் இந்தத் திடீர் நிராகரிப்பு அவளை தன்னைத்தானே பழித்துக் கொள்ளத் தூண்டியிருக்கிறது. அவள் பக்கத்தில் நீண்ட நேரம் இருந்து ஆறுதல் கூறியிருந்திருக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் ஏங்கியது. ஆனால் அதற்கு அத்தை கொஞ்சமும் இடம் வைக்கவில்லை. அதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவில்லை.

 

  • அகிலாவை நினைத்தான். அவள் நினைப்பு ஒரு துன்ப நிவாரணிக் களிம்பு போல, ஈரமான மழைத் தூறல் போல, மனதில் படர்ந்தது. அகிலாவை அடைவதற்கான உறுதியான காலடி எடுத்து வைத்தாயிற்று. இனித் திரும்ப முடியாத பயணம். அதிலே ஒரு பெருந் ததடைக்கல்லாக இருந்த அத்தையைத் தாண்டியாகிவிட்டது. சிறு நெருடலாக இருந்த மல்லிகாவையும் ஒதுக்கியாயிற்று. ஆனால் அகிலா…?

 

  • “இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!” என்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது.

 

  • நெடுஞ்சாலையில் இரவு கவிந்திருந்தது. ஏதோ ஓர் ஊருக்குப் பிரியும் சந்திப்பை பஸ் கடந்து கொண்டிருந்தது. அந்தக் கிளைப் பாதை ஏதோ ஓர் இருளடைந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த சந்திப்பில் மட்டும் சில நூறு மீட்டர்களுக்கு பிரகாசமான மஞ்சள் ஹேலோஜன் விளக்குகள் ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன. அதைக் கடந்ததும் மீண்டும் இருள் கவிந்தது. கொஞ்ச நேரமாவது தூங்க முடியுமா என்று பார்க்க கணேசன் இருக்கைக்குள் ஆழ்ந்தான்.

 

  ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

12  வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.   மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 14ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 14

14  அகிலா தன் புதிய அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.   பிற்பகலில் அந்த கெமிலாங் விடுதி ஓ என்று கிடந்தது. முதல் பருவத்தின் மத்தியில் முதல் சோதனை விரைவில் வருவதால் மாணவர்கள் அனைவரும் விரிவுரையிலோ அல்லது நூல் நிலையத்திலோ இருந்தார்கள்.

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25

25  “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.   கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட