Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27
 

  • எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும் நிறைய விருந்தினர்களின் கார்கள் ஓரத்தையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன. அந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கலகலவென்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

 

  • ஆனால் அத்தை வீட்டில் அந்தக் கலகலப்பெல்லாம் ஒன்றும் காணோம். வரவேற்பறையில் ஒரு மங்கலான விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வெளிச்சம் தெறித்து விழுந்து கொண்டிருந்தது.

 

  • கேட்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். மல்லிகா எட்டிப் பார்த்தாள். அவள் முகம் பிரகாசமானது அந்த அரையிருட்டிலும் தெரிந்தது. “அம்மா, மாமா வந்திரிச்சி…” என்று சொல்லியவாறு வீட்டுக் கம்பிக் கதவைத் திறந்து வெளியே வந்து பூட்டியிருந்த கேட்டையும் திறந்தாள். “இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சதா மாமா?” என்ற கேள்வியில் கிண்டல் மட்டும் அல்லாது கோபமும் இருந்தது.

 

  • “சௌக்கியமா மல்லிகா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். டெலிவிஷனில் ஏதோ உள்ளூர் கலை நிகழ்ச்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது. யாரோ சினிமாவில் பாடிய பாட்டுக்கு வாயசைத்தவாறு பத்துப் பனிரெண்டு பெண்களும் ஆண்களும் அதே சினிமாவின் விரசமான நடனத்தை யந்திரத் தனமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அத்தையைக் காணோம்.

 

  • “எங்க அத்தை?” என்று கேட்டான்.

 

  • “இருக்காங்க! வருவாங்க, நல்லா வாங்கப் போறிங்க!” என்றாள்.

 

  • “ஏன் வாங்கப் போறேன்? அதான் வந்திட்டேனே!” என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.

 

  • “ஆமா, வந்திட்டிங்க! நேத்தே வந்திருந்து எங்களோட காலையில இருந்து தீவாளி கும்பிடாம, யாரோ வெளி ஆளு மாதிரி வந்திருக்கிங்கள… ஏன் வெள்ளனே வர்ல மாமா?” அவள் குரல் குழைந்து தளுதளுக்க ஆரம்பித்தது. அழ ஆயத்தம் செய்கிறாள் என்று தோன்றியது.

 

  • “அட அதான் வந்திட்டனே, அப்புறம் என்ன மல்லிகா! நீ போய் எனக்கு தீபாவளி சாப்பாடு எடுத்து வை. பசியோட வந்திருக்கேன்!” என்றான்.

 

  • அத்தை உள்ளிருந்து வந்தாள். “ஆமா, எடுத்து வைடி! விருந்தாளி வந்திருக்கார்ல! போய் உபசாரம் பண்ணு! கேக்கிறதில மாத்திரம் வெக்கம் இல்ல!” சீறினாள்.

 

  • “ஏன் அத்த இவ்வளவு சூடா இருக்கிங்க?” என்று கேட்டான்.

 

  • “ஆமா, ஆமா! ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேட்டுக்க! எவ்வளவு மானாக்கேடா போச்சி எனக்கு இன்னக்கி காலயில?” என்றாள்.

 

  • “என்ன மானக் கேடு அத்த?”

 

  • “சாம்பிராணி போட வீட்டில ஒரு ஆம்பிள இல்ல. காலையில வீட்டுக்கு வர்ரவங்கல்லாம், எங்க கணேசக் காணோம், வரலியா, வரலியான்னு கேக்கிறாங்க. பதில் சொல்லி மாளல எனக்கு! என்ன அநியாயம் பண்ணிட்ட இந்த வருஷம் நீ…?”

 

  • “இல்ல அத்த, முக்கியமா தவிர்க்க முடியாத வேல இருந்ததினாலதான நான் வர முடியாம போச்சி! நான்தான் போன்ல உங்களுக்குச் சொன்னன…!”

 

  • அத்தை அதைக் கேட்கத் தயாராக இல்லை. “அது என்னா தீவாளி அன்னைக்கி அப்படிப்பட்ட வேல உனக்கு? உங்க யுனிவர்சிட்டி வாத்தியாருங்களுக்கு இன்னக்கி தீவாளின்னு தெரியாதா? அவங்க ஊட்டில எல்லாம் தீவாளி கொண்டாட மாட்டாங்களா? யாருன்னு சொல்லு நான் வந்து கேக்கிறேன்!”

 

  • பொய்யைத் தொடர வேண்டியிருந்தது: “இதல்லாம் லெக்சரர்ஸ் குடுக்கிற வேலயில்ல அத்த. மாணவர்கள் தாங்களா செய்த ஏற்பாடு. அத என் தலையில போட்டுட்டாங்க!” என்றான்.

 

  • “அதெப்படி தீவாளி அன்னைக்குன்னு செய்வாங்க? ஒரு நாள் மின்ன பின்ன செய்ய மாட்டாங்களா? இங்கிருந்து போயி உன்னாட்டம் படிக்கிற எத்தன பேரு திரும்பி வந்திருக்காங்க! ஒனக்கு மாத்திரந்தான் ஸ்பெஷலா?”

 

  • அத்தை தன் பொய்களுக்கு உள்ளே ஊடுருவி விட்டாள் எனத் தெரிந்தது. தான் நினைத்தது போல அவள் இந்த விஷயங்களில் அத்தனை வெகுளியாக இல்லை. தன்னையொத்த மற்ற மாணவர்கள் திரும்பி வந்ததைப் பார்த்து பேசியும் இருப்பாள் எனத் தெரிந்தது. ஆனால் தான் வராததற்குக் காரணமாக அவள் எதைச் சந்தேகிக்கிறாள் எனத் தெரியவில்லை.

 

  • தொடர்ந்து இன்னுமொரு ஐந்து நிமிடக்கள் பொரிந்து கொண்டே இருந்தாள் அத்தை. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவளை எதிர்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்த விஷயம் இன்னும் பெரிதாகிவிடும் என்ற பயம் இருந்தது. மல்லிகா பயந்தவாறு ஒரு மூலையில் இருந்தாள்.

 

  • ஒரு இடைவெளி ஏற்பட்டபோது சொன்னான்: “ஏன் அத்த இந்த விஷயத்த இவ்வளவு பெரிசா எடுத்துக்கிறிங்க? முடிஞ்சா வந்திருக்க மாட்டேனா? முடியாமப் போச்சி, மன்னிச்சிக்குங்க!”

 

  • அத்தை முறைத்தபடி நின்றாள். “அதாவது, பிள்ளைய ரெண்டு மூணு வருஷம் தனியா விட்டதில கொஞ்சம் துளுத்துப் போச்சி! அதான் விஷயம். எல்லாம் நான் உங்க அப்பாகிட்ட சொல்லி வச்சிருக்கேன். அங்க போய் கேட்டுக்க! நாளக்கி அங்க போவதான? இல்ல அதுக்கும் நேரமில்லன்னு ஓடிடுவியா?”

 

  • “இல்ல அத்த நாளக்கி போய் அப்பாவயும் அம்மாவயும் பாத்துட்டுத்தான் போவேன்” என்றான்.

 

  • என்ன சொல்லி வைத்திருக்கிறாள் அத்தை? அவனுக்கு அவள் மீது எரிச்சலாக வந்தது. ஏன் இத்தனை அதிகாரம் செலுத்துகிறாள்? தன் மீது ஏன் இத்தனை குறைவான மரியாதை வைத்திருக்கிறாள்? பல்கலைக் கழகம் போய் படிக்கும் அளவுக்கு வளர்ந்தாயிற்று. அடுத்த வருடம் ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கப் போகும் பட்டதாரி. இன்னும் சின்னப் பொடியனைப் போலவே நடத்துகிறாள். நான்தான் ரொம்பவும் பணிந்து பணிந்து இடம் கொடுத்து விட்டேனோ எனக் கேட்டுக் கொண்டான். இனி கொஞ்சம் சிலிர்க்க வேண்டும். திரும்பப் பேசவேண்டும். “நான் விரும்பிய இடத்துக்குப் போவேன், அதைப்பற்றி உனக்கென்ன அத்தை?” என்று கேட்க வேண்டும். ஆனால் கொஞ்சம் காலம் போகட்டும் என இருந்தான்.

 

  • அத்தை உள்ளே போய்விட்டாள். மல்லிகா அங்கு வந்து பரிவோடு அவன் கையைப் பற்றினாள். அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்குப் போனாள்.

 

  • வழக்கமான ஆடம்பரமான தீபாவளிச் சாப்பாடு இருந்தது. “சாப்பிடு மாமா, சாப்பிடு! பசிக்குதின்னு சொன்னேல்ல! சாப்பிடு! இந்த அம்மாவுக்கு புத்தியே இல்ல. தீவாளியும் அதுவுமா எப்படிப் புடிச்சிப் பேசிடிச்சி பாரு! நீ சாப்பிடு! ” என்று மல்லிகா கனிவோடு வற்புறுத்தியபடி இருந்தாள்.

 

  • அத்தை தனக்குக் கொடுத்த வரவேற்பினால் ஏற்பட்ட எரிச்சலில் வயிற்றில் சுரந்த அமிலங்களால் அவன் பசிதான் செத்துப் போயிருந்தது.

 

  • *** *** ***

 

  • மல்லிகா கொடுத்த புதுத் துணிகளை அணிந்து கொண்டு வீட்டில் காலையில் பசியாறிவிட்டு அவன் அப்பா வீட்டுக்குப் புறப்பட அத்தையிடம் சொல்லிக் கொள்ளச் சென்ற போது “இரு, ட்ரைவர் இப்ப வந்திடுவாரு! நானும் வர்ரேன்!” என்றாள். அத்தை தன் கூட வருவது அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. “ஏன் உங்களுக்குச் சிரமம் அத்தை? நான் பஸ் பிடிச்சிப் போயிட்றனே!” என்றான்.

 

  • “பரவால்ல இரு. நானும் அங்க போக வேண்டிய வேலை இருக்கு” என்றாள். தானும் வருகிறேன் என்று கிளம்பிய மல்லிகாவை அத்தையே தடுத்து விட்டாள்.

 

  • “சும்மா கெட, ஒனக்கு அங்க வேல இல்ல! அந்த சுப்பையா செட்டியார் வந்து கொஞ்சம் காசு குடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. வாங்கி வை!” என்று அதட்டி அவளை வரவிடவில்லை.

 

  • அப்பாவின் தோட்டப்புற வீடு எப்போதும் போல்தான் இருந்தது. நேற்று முடிந்த தீபாவளியின் எஞ்சிய களையாக. வீட்டில் ஒரு நிரந்தரமான பீர் மணம் இருந்தது. ஓரத்தில் பீர் போத்தல்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டிறைச்சி கோழியிறைச்சியின் தின்ற எச்சங்கள் சமயலறையிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. அத்தையின் உபயத்தில் நேற்று விருந்து மிகவும் உச்சமாக இருந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அத்தையோடு அவன் நண்பகலில் போய்ச் சேர்ந்த போது அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

  • அம்மா போய் அவரை உலுக்கி உலுக்கி எழுப்பினாள். அவர் புரண்டு உறுமி “ஏன் தொந்திரவு பண்ற?” என்று சீறி விழுந்து, “ஓ தங்கச்சி வந்திருக்கா? இதோ வந்தர்ரேன்!” என்று எழுந்து தூக்கக் கலக்கத்தில் கணேசனை கண்ணைக் குறுக்கிப் பார்த்து ஒரு வெறுப்பை உமிழ்ந்து விட்டு பின்னால் குளியலறைக்குப் போனார்.

 

  • “நேத்து அக்கா வந்திருந்திச்சிப்பா, பிள்ளைங்களோட. இருந்திட்டு ராத்திரிதான் போனாங்க!” என்று அம்மா பட்டும் படாமலும் சின்னச் சின்னக் குடும்பக் தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுக்குக் குடிக்கக் கோப்பி கலந்து கொடுத்து சில முறுக்கு வகையறாக்களும் எடுத்து வைத்தாள். அத்தை ஒன்றும் சாப்பிடாமல் பேசாமல் உர்ரென்று இருந்தாள்.

 

  • அப்பா வந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று. “அதென்ன அப்படி தீவாளிக்குக் கூட வர முடியாம ஒரு படிப்பு? இந்த உலகம் முளுக்க தீவாளிக்கு லீவு உட்றாங்க! ஒனக்கு மட்டும் லீவு உட்றதில்லியா? வருஷத்துக்கு ஒருநாளு மச்சான் படத்துக்கு சாம்பிராணி போடணும்னு தங்கச்சி எப்படி காத்துக்கிட்டு இருக்குது? ஒன்ன மகன் மாறி வச்சிப் பாக்கில? சோறு போட்ல? காசு குடுக்கில? இப்படித்தான் நன்னி செலுத்திறதா? அப்பாங்கிற மரியாத இல்ல, அம்மாங்கிற மரியாத இல்ல, தாயப்போல வளத்தாளே அத்தைங்கிற மரியாத இல்ல! புள்ளங்க ரொம்ப கெட்டுப் போச்சி!” என்று பினாத்திக் கொண்டே இருந்தார்.

 

  • நேற்றிரவு கொஞ்சம் பீர் உள்ளே இறங்கிய மயங்கிய நிலையில் அத்தை இந்த வார்த்தைகளை அவர் வாயில் திணித்திருக்க வேண்டும். அது இப்போது கக்கப்படுகிறது எனப் புரிந்து கொண்டான்.

 

  • “கெட்டுப் போனது மாத்திரமில்ல அண்ண! ரொம்ப துளுத்துப் போச்சி! மீசை வந்திடுச்சி, படிப்பு கொஞ்சம் ஏறிடுச்சி! திமிர் ஏறிப் போச்சி!” என்று அத்தை உடன் வாசித்தாள்.

 

  • கணேசனால் சும்மா இருக்க முடியவில்லை. “ஏன் அத்த அதயே திருப்பித் திருப்பிப் பேசிறிங்க! நான் வேணுமானா வராததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்! விடுங்க!” என்றான்.

 

  • கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அப்புறம் அப்பா கேட்டார்: “என்னமோ படிப்பு படிப்புன்னு அலையிற. எதுக்கு படிப்பு? படிச்சி வேல பாத்து என்னா அப்படி சம்பாரிச்சி கிளிக்கப் போற! படிக்காதவன்லாம் அந்த பிஸ்னசு, இந்த பிஸ்னசுன்னு ஆயிரம் ஆயரமா சம்பாரிக்கிறான்! படிப்பாம் படிப்பு!”

 

  • என்ன சொல்லுகிறார் என்று புரியவில்லை. அவருக்கும் தனது படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருநாளும் படிப்பு பற்றிக் கேட்டதுமில்லை. ஒரு காசும் கொடுத்ததும் இல்லை. அப்படிச் சம்பந்தமில்லமல் ஒதுக்கி வைத்திருந்த விஷயத்தை இப்படி இழுத்துப் பேசுவதேன்? அவரை அண்ணாந்து பார்த்தான்.

 

  • “அத்த ஒரு நல்ல கட வச்சிக் குடுக்கிறேன்னு சொல்லுது, இங்கயே கிள்ளான்லியே! பெரிசா, மினிமார்க்கெட் மாதிரி! நாலு ஆளுங்கள வச்சி நடத்தலாம். உக்காந்து சம்பாரிக்கலாம். என்ன சொல்ற?”

 

  • அதிர்ச்சியோடு அத்தையைப் பார்த்தான். “என்ன அத்தை இது?” என்றான்.

 

  • “ஆமா. ஒரு மினிமார்க்கெட் வெலைக்கு வருது. நல்ல இடம்னு சொல்றாங்க. அருமையான வியாபாரம். ஒரு நாளக்கி ஆறாயிரம் ஏழாயிரம் வெள்ளிக்கு வியாபாரம் நடக்குதாம். நெறய சரக்கோட தர்ரன்னு சொல்றாங்க! வாங்கிப் போட்டா ஒன்னோட எதிர்காலத்துக்கு நல்லது!” என்றாள்.

 

  • அவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன சொல்றிங்க அத்தை. என்னோட எதிர்காலத்தப் பத்தி இப்ப என்ன?” என்றான்.

 

  • “வேறென்னா, அப்பா சொல்ற மாதிரி நீ என்ன படிப்புப் படிச்சாலும் எவ்வளவு சம்பாரிக்க முடியும் சொல்லு. ரெண்டாயிரம் வெள்ளி சம்பாரிப்பியா? இப்பவே மாசத்துக்கு எல்லாச் செலவும் போக அந்த மினிமார்க்கெட்டில 20 ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலான்னு சொல்றாங்க. யாரு ஒனக்கு அந்த மாதிரி சம்பளம் குடுப்பாங்க சொல்லு! இப்ப இந்த மாதிரி ஒரு சான்ஸ் இனி நமக்கு வருமா? அதான் இப்பவே வாங்கிப் போட்டு வியாபாரத்தில பூந்திட்டின்னா ஓஹோன்னு இருக்கலாம். அதுக்குத்தான்…!”

 

  • தன்னை தன் இடுப்பில் கட்டி வைத்துக் கொள்ள அத்தை ஒரு இனிப்பு வலை வரிக்கிறாள் எனத் தெரிந்தது. இருபதாயிரம் முப்பதாயிரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் தன்னை அவள் கால் விரல்களுக்குக் கீழ் அழுத்திக் கொள்ளப் போடுகிற திட்டம் எனத் தெரிந்தது. தான் அத்தையிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எத்தனை தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறேனோ அதைவிடத் தீவிரமாக தன் அடிமைச் சாசனத்தை நீட்டிக்க அத்தை திட்டம் தீட்டுவதாகப் பட்டது. தான் தொடர்ந்து படிப்பது தன் சுதந்திரத்திற்கு வழி வகுத்துவிடும் என்று அத்தை தெரிந்து கொண்டாள். தனக்கு இறக்கைகள் முளைத்துத் தான் தன் சொந்த முயற்சியில் பறப்பது அத்தைக்குப் பிடிக்கவில்லை. ஆகவே தன் பணபலத்தைக் காட்டி அந்த இறக்கையை நறுக்க நினைக்கிறாள்.

 

  • “அத்தை! என் படிப்பு அடுத்த வருஷம் முடிஞ்சிடும். அது வரைக்கும் எனக்காக நீங்க எந்தத் திட்டமும் போட வேண்டாம். இப்ப அவசரப் பட்டா படிப்பு வீணாப் போயிடும். ஆகவே இந்த விஷயத்தில எனக்கு சம்மதம் இல்ல!” என்றான். அவனுடைய துணிச்சல் அவனுக்கே வியப்பாக இருந்தது.

 

  • அப்பா கத்தினார்: “நான் என்ன சொன்னேன் தங்கச்சி! இதெல்லாம் சொல் பேச்சு கேக்கிற பிள்ளையா? அதெல்லாம் நாம சொல்றபடி கேக்காது! நல்லதுக்குத்தான சொல்றாங்கன்னு தெரியாது. தலையில திமிர் பிடிச்சிப் போச்சி. எனக்குத் தெரியுமே!” என்றார்.

 

  • “அப்ப மத்ததயும் சொல்லிடுங்க அண்ண!” என்றாள் அத்தை. அடுக்கடுக்காகத் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதைப் பற்றி இந்த இரண்டு பேரும் தான் இல்லாத வேளையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.

 

  • “ஆமா, சொல்லிட வேண்டியதுதான்” என்று தொடங்கினார் அப்பா. “சரி, உனக்குத்தான் தொழிலுக்கு ஒரு நல்ல வழி காட்டுனா வேணாங்கிற. என்னமோ படிச்சி கிளிச்சிட்டுத்தான் மறு வேலங்கிற. எப்படியோ தொலஞ்சி போ. ஆனா இப்ப தங்கச்சியோட மவ எவ்வளவு நாளா காத்திட்டு இருக்கு. அதுக்கும் வயிசாயிக்கிட்டு போவதில்ல! அதுக்கு ஒரு வளி பண்ணிட்டுப் போய்ப் படிச்சிட்டு வா!”

 

  • என்ன வழி? மல்லிகாவுக்குத் தான் ஏன் வழி சொல்ல வேண்டும்? புரியவில்லை.

 

  • “என்ன சொல்றிங்க அப்பா? மல்லிகாவுக்கு இப்ப என்ன?” என்றான்.

 

  • “அதான் வயசுக்கு வந்த பொம்பிள பிள்ளய எவ்வளவு நாள் சும்மா ஊட்டுலயே வச்சிக்கிட்டு இருக்கிறதுன்னு தங்கச்சி கவலப் படுது!”

 

  • “அதுக்கு?”

 

  • “உடனே நாள் பாத்து ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டா அப்புறம் கவல இருக்காது”

 

  • “யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?”

 

  • அத்தை திடீரென்று சீறினாள்: “பாத்திங்களா அண்ண! என்னமோ ஒண்ணும் தெரியாது மாதிரி பேசிறத! அன்னைக்கும் இந்த மாதிரிதான், என்னமோ தனக்கு சம்பந்தமிலாத மாதிரி பேச்சி! நீங்க சொன்ன மாதிரி யுனிவர்சிட்டி போனதில இருந்து பேச்சு நடத்தயெல்லாம் கொஞ்சம் மாறித்தான் போச்சி!”

 

  • “என்ன சொல்ல வர்ரிங்க அத்த? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!”

 

  • “இன்னும் என்னா வௌக்கமா சொல்றது? சீக்கிரமா அடுத்தடுத்த மாசத்தில மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் போய் படிப்ப முடிச்சிட்டு வான்னுதான் சொல்றேன்!”

 

  • அதிர்ந்தான். எதற்காக இப்படி அவசரப் படுகிறார்கள்? ஏன் இப்படி அதிவிரைவாகத் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள்? புரியவில்லை. அப்பாவுக்கும் அத்தைக்குமிடையிலான இந்த ரகசியப் பேச்சுகள் தான் நினைத்ததை விட மிகவும் ஆழமாக இருக்கின்றன என்று மட்டும் தெரிந்தது.

 

  • “அத்தை! இது என்ன தீடீர்ன்னு இப்படி ஒரு குண்ட போட்றிங்க? கல்யாணத்த பத்தி இப்ப நான் நெனைக்கவே இல்ல. படிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆகவே அது முடிஞ்சி அடுத்த வருஷம் பரிட்சை எழுதி முடிச்சப்புறம்தான் கல்யாணத்தப் பத்தி யோசிக்கணும். எதுக்கு இப்படி திடீர்னு அவசரப் பட்டுச் செய்யணும்?”

 

  • அப்பா தனது வழக்கமான பாட்டைப் பாடினார்: “நான் சொல்லுல தங்கச்சி? நம்ப சொல்றது ஒண்ணயும் கேக்க மாட்டான். திமிருன்னா அப்படி ஒரு திமிரு!”

 

  • அத்தை கேட்டாள்: “ஏம் பண்ணிக்கக் கூடாது? உனக்கு என்ன கஷ்டம்? எல்லா வேலயும் நான் பாக்கிறேன். நாள் பாக்கிறதில இருந்து விருந்து ஏற்பாடு, தாலி எல்லாம் நான் செஞ்சுத் தரேன் உனக்கு. நீ ஒரு மூணு நாள் லீவு எடுத்திட்டு வந்து தாலிய மட்டும் கட்டிட்டுப் போ! போய் உன் படிப்பப் பாரு! யாரு வேணாங்கிறா?”

 

  • “ஏன் இப்படி ஒரு அவசரம் அத்தை? நான் என்ன ஓடியா போயிடப் போறேன்?”

 

  • “ஓடத்தான விருப்பப் பட்றாப்பில இருக்கு! நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவொடனே எங்க வீடெல்லாம் நாகரிகமில்லாமப் போச்சி! அதான் தீவாளிக்குக் கூட வர விருப்பமில்லாமப் போச்சி! அப்படி மாறிட்ட போது எங்க வீட்டுப் பொண்ண நாங்கதான பாதுகாக்கணும்! அதுக்காகத்தான் சொல்றேன்!”

 

  • தலைகுனிந்து யோசித்தான். அத்தைக்குத் தன் மீது பெரிய அழிக்க முடியாத சந்தேகம் விழுந்து விட்டது. அகிலாவையும் தன்னையும் இணைத்து யாராவது அவளிடம் சொல்லியிருப்பார்களா? இருக்கலாம்! இந்தப் பக்கமிருந்து தனக்குத் தெரிந்த மாணவர்கள் அங்கே பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள். அவர்கள் மூலமாகத் தகவல் வந்திருக்கலாம். அதனால்தான் அத்தை இப்படி கண்ணி வைத்துத் தன்னைப் பிடிக்கிறாள்.

 

  • என்ன சொல்வது என்று யோசித்தான். தற்காலிகச் சமாதானங்கள் சொல்லி இப்போதைக்கு விடுபடலாம். ஆனால் இதற்காக மேலும் பல பொய்கள் சொல்ல வேண்டி வரும். இப்போதே உண்மையச் சொல்லி விடுதலை வாங்கிக் கொள்ளலாம். இதனால் பூகம்பம் வெடிக்கும். பிரளயம் வரும். ஆனால் உண்மையாலும் உறுதியாலும்தான் இதனைச் சமாளிக்க வேண்டும். அத்தையின் முந்தானையில் தான் முடிந்து வைக்கப்படுவதிலிருந்து அவிழ்த்து வெளியேற இதுதான் நல்ல தருணம்.

 

  • அகிலா என்னும் அரிய காதலி தன் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்க அங்கே காத்திருக்கிறாள். அவளைக் கைப்பிடித்துத்தான் தன் கனவுக் குடும்பத்தை அமைக்க வேண்டும். அது பணமில்லாத, ஆடம்பரமில்லாத வாழ்வாக இருக்கலாம். ஆனால் காதல் தோய்ந்த மனம் ஒன்றித்த வாழ்வாக இருக்கும். இந்த அத்தையின் முரட்டு ஆதிக்கத்திலிருந்து வெளியேற அது ஒன்றுதான் வழி.

 

  • அத்தையை நேராகப் பார்த்தான். “அத்தை! இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க முடியாது!”

 

  • அத்தை அவனை கனல் கக்கும் விழிகளால் முறைத்துப் பார்த்தாள். “முடியாதா? ஏன் முடியாது? எனக்கு காரணம் சொல்லு!”

 

  • “ஏன்னா, நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!” என்றான்.

 

  • வீடு திகைத்திருக்க அப்பா மட்டும் உரத்த குரலில் கூவினார்: “நானு சொன்னனா இல்லியா? அத்தினியும் திமிரு, ஒடம்பு முளுக்கத் திமிரு!”

 

  ***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

2  எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15

15  அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6

6  அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட