Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 22

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 22

22
 

    • “சாப்பிடு கணேசு! பாரு எப்படி எளச்சிப் போய் கெடக்க! உங்க யுனிவர்சிட்டியில என்னதான் சாப்பாடு போட்றாங்களோ தெரியில! இப்படி எலும்புந் தோலுமா வந்து நிக்கிற” என்று அத்தை சத்தமாக உபசரித்தாள்.

 

    • யுனிவர்சிட்டியில் யாரும் சாப்பாடு போடுவதில்லை; வேண்டுவதைத் தானாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்று அத்தைக்குச் சொல்லி விளங்க வைக்க முடியாது. அதோடு தான் அப்படி ஒன்றும் இளைத்துப் போகவில்லை என்பதை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

 

    • சாப்பாட்டு மேசையில் பத்து பேர் சாப்பிடக் கூடிய உணவு இருந்தது. ஆடு பிரட்டி வைத்து கோழிக் குழம்பு வைத்திருந்தாள். கோழி ஈரலைத் தனியாகப் பிரட்டியிருந்தாள். நெய் மணக்க பிரியாணி செய்திருந்தாள். ஊடான் கலந்த முட்டைக் கோஸ் பிரட்டல். தயிர் விட்ட வெள்ளரிக்காய். நல்ல சர்க்கரை விட்டு இனிக்க இனிக்க மாங்காய் சட்டினி செய்திருந்தாள். ஒரு ஜக்கில் சிவப்புக் கலரில் சிரப் கலக்கி வைத்திருந்தாள்.

 

    • “சிரப் நான்தான் கலக்கினேன். வெள்ளரிக்காயும் நான்தான் வெட்டினேன்!” என்று தன் பங்கைத் தம்பட்டமடித்தாள் மல்லிகா.

 

    • “இப்பல்லாம் கிள்ளான்ல நல்ல நாட்டாட்டுக் கறியே கெடைக்கிறதில்ல. அதினால காப்பாருக்கு ஆள் அனுப்பி வாங்கியாரச் சொன்னேன். கோழியும் நாட்டாட்டுக் கோழிதான். அந்த சமையக்கரம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் முந்தரிப் பருப்பு அரைச்சி போடச் சொன்னேன். நல்ல ருசியா இருக்கும். ஏலக்கா போட்டிருக்கலாம். மணமா இருக்கும். இருந்திச்சி, முடிஞ்சி போச்சி கணேசு. சாப்பிடு, சாப்பிடு” என்றாள்.

 

    • “முட்டக் கோஸ் நல்லா இருக்கம்மா. ஊடான் போட்டிருக்கில்ல, அதுதான்!” என்று மல்லிகாவும் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

    • “ரெண்டு முட்டையும் ஒடச்சிப் போட்டிருக்கலாம். எங்க, இந்த சமையக்காரம்மா சுத்த சோம்பேறி. நாம்ப ஒண்ண சொன்னா அது ஒண்ணச் செய்யும். பாரு பிரியாணில நெய்யே காணும்!”

 

    • மேசையில் மட்டும் சாப்பாடு நிரம்பி வழியவில்லை. அத்தையின் பேச்சிலும் மல்லிகாவின் பேச்சிலும் சாப்பாட்டைத் தவிர வேறு விஷயங்களே இருக்கவில்லை. கறிக்குத் தேங்காயைப் பிழிந்து போடுவதற்கும் அரைத்துப் போடுவதற்கும் என்ன வித்தியாசம் என்பது முதல் கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது வரை அத்தை அவனுக்கு விளக்கிக் கொண்டே இருந்தாள். மல்லிகாவும் அத்தையும் இப்படிப் பெருத்துக் கொழு கொழுவென்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டான்.

 

    • அத்தையின் சாப்பாடு மிக ருசியாகத்தான் இருந்தது. கணேசன் தன் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டான். ஆனால் ஓரளவுக்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை. பல்கலைக் கழகத்திற்குப் போனதிலிருந்து மேகி மீயும் ரொட்டிச் சானாயும் சப்பாத்தியும் தோசையுமாகக் கொறித்துக் கொறித்துச் சாப்பிட்டு பழக்கமாக்கிக் கொண்ட பின்னர் இப்படி தட்டு முழுக்கக் கொட்டிச் சாப்பிடுவது முன்பு போல் முடியவில்லை.

 

    • “இந்த மாமா மிந்தியெல்லாம் வந்தா நல்லா கலகலன்னு பேசும். இப்ப ஏன் இப்படி உம்மணா மூஞ்சாக் கிடக்குது?” என்று மல்லிகா சீண்டினாள்.

 

    • உண்மையில் அவர்களின் இடைவிடாத பேச்சுக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லைதான். சாப்பாட்டைப் பற்றி அவர்களைப் போல் இடைவிடாமல் வருணிக்க அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

    • “எனக்கு சாப்பிட்றதுக்கே நேரமில்ல. இதில பேச எங்க நேரம்? மல்லிகா! பேசிக்கிட்டே சாப்பிட்டா செரிக்காதுன்னு சொல்றாங்க. அதினால பேசாம சாப்பிடு!” என்றான்.

 

    • “ஆமா! என்னைக்குமா இப்படிப் பேசிக்கிட்டே சாப்பிட்றோம்! மாமா வீட்டுக்கு வந்திருக்கேன்னுதான் இத்தன பேச்சி!”

 

    • “ஆமாப்பா! இந்த மல்லிகா சாப்பாட்டத் தட்டில போட்டுகிட்டு போய் ஏதாவது வீடியோ பாக்க உக்காந்திரும். அப்புறம் பேச்சாவது, மூச்சாவது! தட்டில என்ன இருக்கின்னு கூட தெரியாது! இன்னைக்கு மாமாவ பாத்ததில இத்தன கொண்டாட்டம்” என்று அத்தையும் தாளம் போட்டாள்.

 

    • அந்த வீட்டின் நடைமுறைகள் ஏனோ அவனுக்கு வேடிக்கையாக இருந்தன. அந்த வீடு அவன் பழகிய வீடுதான். அங்குதான் அவன் வளர்ந்தான். இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கும் பழகியவைதான். ஆனால் பல்கலைக் கழகத்திற்குப் போன இந்த மூன்றாண்டுகளில் அந்தப் பழக்கங்களெல்லாம் அவனுக்கு மெது மெதுவாக அன்னியமாகிக் கொண்டு வந்தன.

 

    • முதலில் அந்த வீட்டின் பெருந்தீனி அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏராளமாகச் சமைத்து ஏராளமாகக் கொட்டுகிறார்கள். சமையலுக்கு ஆளிருந்தது. அந்த அம்மா ஏராளமாக ஆக்கிப் போடுவது தனது கடமை என ஆக்கிக் கொண்டிருந்தாள். அத்தையோ மல்லிகாவோ அதைக் கண்டு கொள்வதில்லை.

 

    • காலையில் ஒன்பது வரை தூங்கினார்கள். 10 மணிக்குக் கறியுடன் இட்டிலி தோசை பண்ணிப் பசியாறி பிற்பகலில் தூங்கி எழுந்து மூன்று மணிக்குச் சாப்பிட்டார்கள். பிற்பகலிலும் இரவில் ஒரு மணி வரையிலும் தமிழ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சினிமா இதழ்கள் இரைந்து கிடந்தன. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே தமிழ்ப்பத்திரிகை வாங்கி முக்கியமாகச் சினிமாச் செய்தியைத்தான் படித்தார்கள். மல்லிகாவுக்கு எல்லா நடிகர் நடிகையர் பேரும் தெரிந்திருந்தது. அவர்கள் அந்தரங்க வாழ்கைகளை அறிந்து வைத்திருந்தாள். அதைப் பற்றியே சளசளவென்று பேசினாள்.

 

    • அத்தைக்குப் படிப்பில்லை. அத்தை கணவர் சுமாராகப் படித்து வியாபார மூளையை வளர்த்துக் கொண்டவர். அத்தைக்குப் பெரும் பணத்தைத் தேடி வைத்து விட்டு இளம் வயதில் செத்துப் போனார். அத்தை மல்லிகாவைப் படிக்க வைக்க முயன்று தோற்றுப் போனாள். அந்த வீட்டில் எங்கும் அறிவின் அறிகுறிகள் இல்லை. பணம் நிறைய இருந்தது. கொச்சையான ஆடம்பரம் இருந்தது.

 

    • அத்தை எந்த நேரமும் மொத்தமாக ஒரு அட்டிகை போட்டுக் கொண்டிருந்தாள். அதை ஆண்டுக்கொரு முறை அழித்து புதிதாகச் செய்வாள். மூக்கில் வைரமும் விரலில் நவரத்தினங்களாகவும் போட்டுக் கொண்டிருந்தாள். அவளும் மல்லிகாவும் அடிக்கடி நகைப் பெட்டியை வெளியே எடுத்து நகைகளை எடுத்து வரிசைப் படுத்தி அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இது உனக்கு, இது எனக்கு!” என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

    • மாமா வாங்கிப் போட்டிருந்த வீடுகளிலிருந்து வாடகை வந்து கொண்டிருந்தது. அவருடைய சேமிப்புப் பணத்தை எடுத்து இரண்டு மூன்று நம்பிக்கையான ஆட்கள் மூலமாக அத்தை வட்டிக்கு விட்டிருந்தாள். அந்த வட்டித் தரகர்கள் வீட்டுக்கு வந்து அத்தையுடன் உட்கார்ந்து பேசும் போது பதினைந்து வட்டி இருபது வட்டி என்று பேரம் நடப்பதை கணேசன் கேட்டிருக்கிறான். ஆனால் அதில் எதிலும் மல்லிகாவையோ அல்லது கணேசனையோ அத்தை ஈடுபடுத்துவதில்லை. அந்த விஷயங்களையெல்லாம் அந்தரங்கமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

 

    • அந்த வட்டித் தரகர்கள் அத்தையையும் அத்தை மகளையும் ஏகமாகக் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வரும் போதெல்லாம் பழம், இனிப்பு என்று வாங்கி வருவார்கள். சில சமயங்களில் உடும்பு இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி என்றும் கொண்டு வருவார்கள். ஊருக்குப் போய்விட்டு வரும் நேரங்களில் அத்தைக்குப் பட்டுப் புடவை நகை என்று வாங்கி வந்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்து விட்டு இன்னும் நான்கைந்தை அகோர விலைக்கு விற்றுச் செல்வார்கள்.

 

    • அத்தைக்கு அவர்கள் தன் மேல் காட்டும் கரிசனம் – அது தன் பணத்துக்காகத்தான் என்று தெரிந்திருந்தாலும் – வேண்டியிருந்தது. அவளுக்கு வேறு உறவினர்கள் இல்லை. இருக்கின்ற சிலரையும் தன் பணத்தைக் கொள்ளையிட வந்தவர்கள் என்று பேசி விரட்டிப் பகைத்துக் கொண்டாள். தன் அண்ணனை – கணேசனின் அப்பாவை – மட்டும் பணத்தையும் பொருளையும் கொஞ்சம் கொஞ்சம் காட்டிக் கையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

    • அவர்களையும் அவள் வீட்டுக்குள் அண்ட விடுவதில்லை. அவளே போய் அவர்களைப் பார்த்து ஏதாகிலும் பொருள்கள் வாங்கிக் கொடுத்துக் கொஞ்சம் காசையும் கையில் கொடுத்து விட்டு தன் வீட்டுப் பக்கம் வரத் தேவையில்லாமல் ஆக்கி விடுவாள்.

 

    • கணேசன் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன் வீட்டுக்குத்தான் முதலில் வர வேண்டும் என்று கட்டளை போட்டிருந்தாள். அப்படி அவன் வந்தவுடன் ஓரிரு நாட்கள் அவனை வீட்டில் வைத்திருந்து தானே தனது டிரைவர் வைத்த காரில் அவனை ஏற்றிச் சென்று அவர்களுக்குக் காட்டிவிட்டு கையோடு திரும்பக் கொண்டு வந்து விடுவாள். போகும் போதே ஒரு டஜன் பீர் போத்தல்களையும் காரில் வாங்கிப் போட்டுக் கொள்வாள். அதற்காகவே அப்பா அவளை அமோகமாக வரவேற்பார். அதற்குப் பிறகு அந்த பீரைத் திறப்பதிலும் குடிப்பதிலும் உள்ள அக்கறை வேறு எதிலும் அவருக்கு இருக்காது.

 

    • அதே வேகத்தில் பக்கத்து எஸ்டேட்டில் கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு வாழும் அவனுடைய அக்காளையும் கொண்டு கொஞ்ச நேரம் காட்டிவிட்டு வந்து விடுவாள். அக்காளின் கணவருக்கும் சில பீர் போத்தல்கள் சென்று சேரும். அங்கும் கொண்டாட்டங்கள்தான் இருக்குமே தவிர எந்த முக்கியமான விஷயத்தையும் பேச முடியாது.

 

    • கணேசனின் அண்ணன் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போய் அங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது தீபாவளிக்கு வந்து ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக் கொண்டு போவதோடு சரி!

 

    • இந்த முறையும் நாளைக்குக் காலையில் இப்படி ஒரு மின்னல் வேகப் பயணத்தை அத்தை ஏற்பாடு செய்திருந்தாள்.

 

    • சாப்பாடு முடிந்து இரண்டு பேரும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கணேசன் சொன்னான்: “அத்தை! நாளைக்கி அப்பா வீட்டுக்குப் போனா நான் அங்கயே ரெண்டு நாள் தங்கிட்டு வரலான்னு பாக்கிறேன்!” என்றான்.

 

    • “ஏன் கணேசு?” அத்தை அதிர்ந்து போய்க் கேட்டாள். “இங்க என்னா கொற உனக்கு?”

 

    • “இங்க ஒரு கொறயும் இல்ல அத்த! அம்மாவோட ஒக்காந்து கொஞ்சம் பேசணும். எப்பவுமே அவசரமா திரும்பிட்றோம்… அதினாலதான்!”

 

    • “ஐயோ, என்னா பேசப் போற அவங்களோட? அந்த அசிங்கத்தில போயி எப்படித்தான் இருக்கப் போறியோ! சரி, ரெண்டு நாள் வேணாம்! ஒருநாள் இருந்திட்டு வந்திடு!” என்றாள்.

 

    • “ஆமாம் மாமா! ஒரு நாள் போதும். வந்திடு எனக்குப் பொளுதே போவாது!” என்றாள் மல்லிகா.

 

    • *** *** ***

 

    • அத்தை வந்ததிலிருந்து வீடு கோலாகலமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் தான் வந்திருப்பதை விட அத்தை வந்திருப்பதையே பெரிதும் விரும்பியிருப்பது போலத் தெரிந்தது. வழக்கமான பீர் போத்தல்களும், ஆட்டு இறைச்சி இரண்டு கட்டியும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அத்தை.

 

    • அத்தைக்கு கணேசனை அங்கு விட்டுச் செல்ல விருப்பமே இல்லை. போகும் போது “நாளைக்கு மத்தியானம் டிரைவரை அனுப்பி வைக்கிறேன். வந்திடு கணேசு!” என்று சொல்லிச் சென்றாள்.

 

    • “மாமா! மறக்காம வந்திடு! இல்லன்னா ஒங்கிட்ட பேசமாட்டேன்!” என்று சிணுங்கிப் போனாள் மல்லிகா.

 

    • அத்தை திரும்பிப் போவதற்கு முன்னமே அப்பா போதையில் சாய்ந்து விட்டார். அத்தையின் பீர் போத்தல்களில் மூன்றைக் காலி செய்திருந்தார்.

 

    • அப்பா தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் கணேசன்: “ஏம்மா! அப்பாவ ஏன் இப்படி குடிக்க விட்ற? உடம்பு என்னத்துக்கு ஆகும். இப்பவே பாரு, அவருக்குக் கையெல்லாம் ஆடுது. எதுவுமே ஞாபகத்தில இருக்கிறதில்ல. இப்படியே இருந்தா எப்படி?”

 

    • அம்மா சட்டென்று பதில் சொன்னாள்: “இல்ல கணேசு. அப்பாவுக்கு வேல கஷ்டமான வேல பாரு! செம்பன கொலய அறுக்கணும். தூக்கணும். லோரில போடணும். உடம்பு வலி போறதுக்கு இப்படிக் கொஞ்சம் குடிப்பாங்க, அப்புறம் தூங்கிடுவாங்க. ஒரு வம்பு தும்புக்கு போவ மாட்டாங்க!”

 

    • “உடம்பு வலிக்கு புஷ்டியான ஆகாரம் சாப்பிடணும். நல்ல வைட்டமின்கள் சாப்பிடணும். குடியா அதுக்கு மருந்து?”

 

    • “நான் நல்ல சாப்பாடுதான போட்றேன். அவங்கதான் சாப்பிட மாட்றாங்க. குடிக்கலேன்னா தூங்க மாட்டாங்க. வெளிக்குப் போக மாட்டாங்க! ரொம்ப கஷ்டப் படுவாங்க! என்னதான் போட்டு திட்டுவாங்க, அடிப்பாங்க!”

 

    • இந்த அம்மாவே இப்படி குடி என்பது முக்கியம்தான் என்பது போலப் பேசினால் இந்த அப்பாவை யார்தான் திருத்த முடியும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அம்மாவின் இந்த அறியாமையாவது சுட்டிக் காட்ட வேண்டும் என்று எண்ணினான்.

 

    • “ஏம்மா! நீயுந்தான வேல செய்ற! ஒனக்கு ஒடம்பு வலியில்லியா? நீ ஏன் குடிக்கிறதில்ல? குடிக்காம எப்படி ஒன்னால தூங்க முடியுது?” என்று கேட்டான்.

 

    • “எனக்கு எதுக்கு குடி? சீ, நான் வாய்லியே வச்சதில்ல! நான் ரெண்டு இஞ்சியத் தட்டி ஒரு கசாயத்த வச்சிக் குடிச்சன்னா எல்லாம் சரியாப் போயிடும். மரக்கட்ட மாதிரி தூங்கிடுவேன்.” பெருமையுடன் சொன்னாள்.

 

    • “அப்ப அந்தக் கஷாயத்த அப்பாவுக்கு வச்சிக் குடுத்தா என்னா?”

 

    • “அதுக்கா? கசாயமா? நல்லா இருக்கு நீ பேசிறது! அதுக்கு தண்ணிதான் கசாயம். அத விட்டு கசாயத்தக் கொண்டி குடுத்தா என் மூஞ்சிலியே ஊத்தி, என் மயரப் புடிச்சி இளுத்து அடிக்கும்.”

 

    • “அடிச்சா நீ வாங்கிக்குவியா!”

 

    • “வாங்கிக்காம என்ன பண்றது? புருஷனாப் போயிடுச்ச! பொம்பிளயா வந்தவ வாங்கிக்கத்தான் வேணும்!”

 

    • இருபதாம் நூற்றாண்டும் பெண் விடுதலை இயக்கமும் அவனது பெற்றோர்களை எப்படித் திரும்பிப் பார்க்காமலேயே தாண்டிப் போயின என்று அவனுக்கு விளங்கவில்லை. அவனுடைய பெற்றோர்கள் பழைமையில் மரத்துப் போனார்கள். அவர்கள் மூளையின் உயரணுக்கள் செத்து விட்டன. அவனால் அவற்றுக்கு உயிரூட்ட முடியுமா?

 

    • அன்று பின்னிரவில் அப்பா கொஞ்சம் போதை தெளிந்து எழுந்திருந்தார். அம்மாவை எழுப்பி சாப்பிட உட்கார்ந்தார். மத்தியானம் செய்த ஆட்டுக் கறியை சூடாக்கிப் பரிமாறினாள் அம்மா. கணேசன் எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.

 

    • “கணேசு, சாப்பிட்டியா?” என்று கேட்டார்.

 

    • “அத்தையோட உக்காந்து அப்பதே சாப்பிட்டனே, நீங்க பாத்திட்டுத்தான இருந்திங்க அப்பா! அது கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?”

 

    • “ஆமா, ஆமா! எங்க அது, தங்கச்சி போயிடுச்சா?”

 

    • “போயிட்டாங்க!”

 

    • “எங்கிட்ட சொல்லிக்கிலிய!”

 

    • “நீங்க படுத்துத் தூங்கிட்டிங்க!”

 

    • “ஓஹோ! கொஞ்சம் தண்ணி சாப்பிட்டன்ல! ஒடம்பு அசதி வேற. அதான் தூங்கிட்டேன்.”

 

    • தன் மனைவியைப் பார்த்தார். “தண்ணி இன்னும் மிச்சமிருக்கா புள்ள!”

 

    • ஒரு போத்தல் மீதமிருந்தது. எடுத்து வர விருட்டென்று எழுந்தவளை கணேசன் கைப்பிடித்து உட்கார வைத்தான்.

 

    • “அப்பா! இப்படி நீங்க தண்ணி சாப்பிட்றது ஒடம்புக்கு நல்லதில்லப்பா. கொஞ்சம் கொஞ்சமா கொறச்சி, அப்படியே விட்டிருங்கப்பா!” என்றான்.

 

    • “அட, நான் ரொம்ப சாப்பிட்றதில்ல கணேசு. இன்னைக்கு தங்கச்சி வாங்கிட்டு வந்து ஊத்திச்சா ரெண்டு போத்த சாப்பிட்டேன். இல்லன்னா ஒரு நாளக்கு அரை போத்ததான். அவ்வளவுதான்!”

 

    • “இல்லப்பா! நான் கேள்விப் பட்டேன். தினமும் ரெண்டு மூணு போத்தல் குடிக்கிறிங்களாம். இன்னைக்கு நீங்க மூணு போத்தல் குடிச்சத நானே பாத்தேனே! இப்படிக் குடிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?”

 

    • “இல்லவே இல்லயே! இன்னைக்கு உங்க அத்தை வந்திச்சி, நீ வந்திருக்க, அந்த சந்தோஷத்தில குடிச்சேன். இல்லன்னா ரொம்ப வச்சிக்க மாட்டேனே!”

 

    • அவன் அவரை இரக்கமாகப் பார்த்தான். இவர் முழுகப் போகும் மனிதர். நான் கரையேற்றத் துடிக்கிறேன். இல்லை நான் முழுகத்தான் போகிறேன், என்னை விடு என்று இன்னும் ஆழப் போகிறார்.

 

    • “ஆளு இப்படி மெலிஞ்சிப் போயிருக்கிங்க! கையெல்லாம் ஆடுது. மூச்சு வாங்குது. இதுக்கெல்லாம் குடிதான் காரணம்னு தெரியிலியா உங்களுக்கு?”

 

    • “வேல ரொம்ப கஷ்டம் கணேசு. நான் என்னா ஆபிசில ஒக்காந்து கிராணி உத்தியோகமா பாக்கிறேன்? செம்பன கொல தள்ளணும். ஒரு கொல என்னா கனம் தெரியுமா? ஒன்னால ஒரு கொல தள்ள முடியுமா? ஏன் கை ஆடாது? ஆனா கொல தள்ளும் போது வந்து பாரு! கையும் காலும் ஸடெடியா இருக்கும்!”

 

    • பல தடவை விழுந்திருக்கிறார். ஒரு முறை கால் முறிந்து ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருந்தார். எல்லாம் அவருக்கே மறந்து விட்டது.

 

    • கணேசன் பெருமூச்சு விட்டான். “அப்பா. இன்னும் ரெண்டு வருஷத்தில எனக்குப் படிப்பு முடிஞ்சிரும். நான் வேலைக்குப் போன பிறகு நீங்களும் அம்மாவும் வேலய விட்டிருங்க. என்னோட வந்து இருங்க. சௌக்கியமா இருங்க. ஆனா அதுக்குள்ள இந்தக் குடிப் பளக்கத்த விட்டிரணும். இது அசிங்கமான பளக்கம். அநாகரிகமான பளக்கம்!”

 

    • அப்பா அம்மாவை முறைத்துப் பார்த்தார்.” ம்… கேட்டுக்கிட்டியா? புள்ள ரொம்ப படிச்சிருச்சி பாத்தியா? அதுதான் அப்பனுக்கே புத்தி சொல்லுது.”

 

    • “அப்பா! நான் நல்லதுக்குத்தான் சொல்றேன். இந்தக் குடியினால பின்னால பெரிய பிரச்னைகள்ளாம் வரும். உடம்புக்கு ஆகாது. உடனே விட்ருங்கன்னு சொல்லுல! கொஞ்சங் கொஞ்சமா விடுங்க.”

 

    • “நீயா எனக்குத் தண்ணி வாங்கித் தர்ர? உன் கிட்ட நான் கேட்டனா? உன் காசிலியா குடிக்கிறேன்? நான் சம்பாதிக்கிறேன், நான் குடிக்கிறேன்!” கத்தினார்.

 

    • “நீங்க சம்பாதிச்சி நீங்க குடிக்கல. உங்க சம்பாத்தியம் சாப்பாட்டுக்கே பத்தாது. அத்தை கொண்ணாந்து குடுக்கிற காசில குடிக்கிறிங்க. அது ஒரு பெருமையா உங்களுக்கு?”

 

    • “என் தங்கச்சி எனக்குக் குடுக்கிறா! நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?” அவர் கையாட்டிய வேகத்தில் சோறு எங்கணும் தெறித்தது.

 

    • பேச்சு வேறு முரட்டுத் தனமான திக்கில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்கு போதை தெளிந்திருக்கலாம். ஆனால் அறியாமை தெளியவில்லை. எப்போது தெளியும்? தெளியுமா? தெரியவில்லை.

 

    • கணேசன் காசை அவ்வப்போது மிச்சம் பிடித்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறான். அதை அப்பாவிடம் இப்போது சொல்ல முடியாது. சொல்லுகின்ற தைரியம் அம்மாவுக்கும் இல்லை.

 

    • இந்த அப்பாவின் இயலாமையால்தான் அவன் அத்தை வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அத்தை அன்பாகத்தான் சோறு போடுகிறாள். மகன் போல வைத்துக் கொள்ளுகிறாள். ஆனால் அப்பா அம்மா இருக்கும் போதே அத்தை வீட்டுச் செலவில் படிப்பதும் சாப்பிடுவதும் வெட்கம்தான். ஆனால் யாருக்கு வெட்கம்? தனக்கா தன்னைப் பெற்றவர்களுக்கா?

 

    • கணேசன் எழுந்து சென்றுப் படுத்து விட்டான். அப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து போத்தலைக் கையில் தூக்கிக் கொண்டு வெளியில் போய் உட்கார்ந்து கொண்டார். அம்மா ஒரு பேச்சும் பேசாமல் போய்ப் படுத்து விட்டாள். அப்பாவின் குரல் அவனுக்கு மட்டுமல்லாமல் அடுத்துள்ள ஐந்து வீடுகளுக்கும் அந்த பின்னிரவில் ஒரு நாயின் ஊளையைப் போல வழிந்து கொண்டே இருந்தது.

 

    • “புத்தி சொல்ல வந்திட்டானுங்க புத்தி! இவனுங்களா வந்து கொலை தள்ளுறானுங்க? கொலையத் தூக்கி லோரில போட்டுப் பாத்திருக்கியா? பாம்பு கடிச்சா வந்து பாப்பியா? அப்பனுக்கு ஒடம்பு வலிக்கு ஒரு தண்ணி வாங்கிக் குடிக்க அஞ்சு வெள்ளி தரதுக்கு நாதியில்லாத நாய்க்கெல்லாம் பேச்சில கொறச்ச இல்ல! எங்கிருந்து வந்த? அப்பன் இல்லாம வந்தியா? பெத்ததுக்கு ஒரு நன்னியுண்டா…? படிக்கிறானுங்களாம் படிப்பு…!”

 

    • பெற்றதுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்று கணேசன் தன்னையே கேட்டுக் கொண்டான். பன்றிகளும்தான் பெற்றுப் போடுகின்றன. “என்னைப் பன்றியாகப் பெற்றாயே!” என்று நன்றி சொல்ல வேண்டுமா? பெற்றது ஒரு பெருமையா? பெறாமல் இருந்திருக்கலாமே! இந்தத் துன்பங்களுக்கெல்லாம் இடம் இல்லாமல் போயிருக்குமே!

 

    • கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மா தூக்கிக் கொடுத்த அழுக்குப் பிடித்த தலையணையின் நாற்றமும் வெளியிலிருந்து வரும் இடைவிடாத பேச்சின் நாற்றமும் புழுக்கள் போல அவன் மனசிலும் உடம்பிலும் ஊர்ந்து கொண்டே இருந்தன.

 

    • அத்தையின் காரும் டிரைவரும் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று ஏங்க ஆரம்பித்தான்.

 

    • இன்னொரு கவலையும் அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. அகிலா என்னும் அந்த அழகிய மலரை இந்தச் சாக்கடைக்குள் எப்படிக் கொண்டு வந்து வைப்பேன் என்றும் கவலைப் பட ஆரம்பித்தான்.

 

    • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20

20  பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9

9  கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் “தம் தம்” ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.  

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23  அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில்