Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20

20
 

  • பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத் தேர்வுக்கான பட்டியல் வெளியாகிவிட்டது. நூலகத்தில் எந்த நேரமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் நேரங்களில் வெள்ளென போனால் ஒழிய உட்கார இடம் கிடைக்கவில்லை.

 

  • அகிலா செய்திருந்த எசைன்மென்டில் நான்கை விரிவுரையாளர்கள் திருத்திக் கொடுத்திருந்தார்கள். கணினி எசைன்மென்டுகளில் இரண்டு B-யும் ஒரு C-யும் வாங்கியிருந்தாள். கணிதத்தில் மட்டும் A கிடைத்திருந்தது. ஒரு முதலாண்டு மாணவருக்கு இது மிகவும் நல்ல கிரேடுகள் என்று கணேசன் அவளைப் பாராட்டினான். முதலாண்டு மாணவர்கள் பல்கலைக் கழகப் படிப்பு முறை தெரியாமல் தடுமாறுகிற ஆண்டு. ஆகவே எசைன்மென்டில் C வாங்கினாலே பெரிய விஷயம்தான்.

 

  • கணேசன் அகிலாவுக்கு எல்லா விஷயங்களிலும் துணையாகவும் வழிகாட்டியாகவும் மாறிவிட்டான். நூலகத்தில் அவளுக்கு இடம் பிடித்து வைத்தான். அகிலாவுக்கு போக்குவரத்துப் பிரச்சினையும் தீர்ந்திருந்தது. தனக்கு வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் கணேசன் அவள் போக வேண்டிய இடங்களுக்கு அவளைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகத் தயாராக இருந்தான். அவள் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் அவன் கேட்பதில்லை.

 

  • இதற்கிடையே இந்திய கலாச்சாரக் கழகம் மாணவர் உபகாரச் சம்பள நிதிக்காக ஆண்டு தோறும் நடத்தும் கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அந்த விழாவில் அகிலாவின் பரதநாட்டியம் ஒன்று இடம் பெற வேண்டும் என கணேசன் அவளை வற்புறுத்தி இணங்க வைத்துப் பெயர் கொடுத்திருந்தான்.

 

  • இத்தனை படிப்பு வேலைகளுக்கிடையில் மேலும் ஒரு நடனத்துக்குப் புதிதாகப் பயிற்சி செய்து அரங்கேற்றுவதில் நேரம் அதிகம் செலவாகும் என்றுதான் முதலில் தயங்கினாள். இரண்டாயிரம் பேர் வந்து பார்க்கின்ற அந்த பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியில் ஆட அவளுக்கு நடுக்கமாகவும் இருந்தது. இருந்தாலும் வேந்தர் விருந்தில் ஆடிய அனுபவம் கொஞ்சம் கை கொடுத்தது. அதோடு இந்திய மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மேலும் பல்கலைக் கழகங்களில் நடை பெறுகின்ற எல்லா இனக் கலை நிகழ்ச்சிகளிலும் அதிகமான கூட்டம் வருவது இந்திய கலாச்சாரக் கழகம் நடத்துகின்ற இந்தக் கலை நிகழ்ச்சிக்குத்தான். அதில் ஆட வாய்ப்புக் கிடைத்திருப்பது ஒரு பெருமைதான் என எண்ணினாள். அடுத்த முறை வீட்டுக்குப் போகும்போது தனது பரத நாட்டிய பயிற்சிக் கேசட்டுகளில் தேடி ஒரு சிறிய பாடலை எடுத்துப் பயிற்சி பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.

 

  • பரத நாட்டிய ஆடைகள் எல்லாம் அம்மாதான் அடுக்கி வைத்திருக்கிறாள். அம்மாவுக்கு முன்னதாகப் போன் பண்ணி நல்ல ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து பெட்டி போட்டு வைக்கச் சொல்ல வேண்டும்.

 

  • அம்மாவை எண்ணிய போது மனசுக்குள் ஒரு சிறிய நடுக்கம் வந்தது. இப்போது இங்கே நடப்பதை அம்மா தெரிந்து கொண்டால் என்ன சொல்லுவாள்? நிச்சயம் கோபப் படுவாள். “ஏண்டி! நீ பினாங்குக்குப் படிக்கப் போனியா, இல்ல ஆம்பளப் பசங்களோட சுத்திறதுக்குப் போனியா? போயி இன்னும் மூணு மாசம் முழுசா முடியில. அதுக்குள்ள ஒனக்கு போய் •பிரன்ட் தேவைப் படுதா?” என்று சீறுவாள்.

 

  • அப்பா அமைதியாக இருப்பார். கோபப் பட்டாலும் சத்தமில்லாமல் பொறுமையாக என்ன விஷயம் என்று கேட்பார். ஆனால் அம்மாவுக்கு அந்தப் பொறுமை இருக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் கண்டிப்பாகப் பிடிக்காது.

 

  • தனக்கே கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தானும் கணேசனும் ஏதோ ஒரு வகையில் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஜோடியாகிவிட்டது தெரிந்தது. தான் அவனை எந்நேரமும் நினைத்திருப்பது தெரிந்தது. அவனுக்காக ஏங்குவது புரிந்தது. அவன் இல்லாத நேரங்கள் வெறுமையாக இருப்பது தெரிந்தது. அவனை நினைத்த போதெல்லாம் மனதில் ஒரு தண்மையான வெப்பம் பரவுவது சுகமாக இருந்தது.

 

  • இதுதான் காதல் என்பதா? நான் அவனுக்குக் காதலியா? நான் அவனுக்குக் காதலி என்பதன் அர்த்தம் என்ன? அவனுக்கு நான் என்னைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டேனா? ‘என்னை அனுபவித்துக் கொள்’ என்ற லைசன்ஸ் கொடுக்கப் பட்டது போலவா?

 

  • அவன் எனக்குக் காதலன் என்பதன் அர்த்தம் என்ன? இனி என்னைத் தவிர வேறு பெண்கள் அவனை அணுகக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்காகவா? அவன் மகிழ்ச்சியிலும் அவன் துயரத்திலும் தனக்கும் பங்கு என்பதாக இனி ஆகி விடுமா? இந்தப் பெண்ணுக்காகப் பெயர் குறிப்படப்பட்ட ஆணாக அவனும் அந்த ஆணுக்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுவிட்டப் பெண்ணாகத் தானும்… இனி வாழ்நாள் முழுவதும்….

 

  • நினைக்க இன்பமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய முடிவை நானாகச் செய்ய முடியுமா? அப்பாவுக்குச் சொல்லி அனுமதி கேட்க வேண்டாமா? அம்மாவுக்கு விளக்கி அனுமதி கேட்க வேண்டாமா?

 

  • ஒரு வேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால்? “எந்த மாதிரிக் குடும்பமோ, என்ன எளவோ தெரியில! முன்ன பின்ன தெரியாத அவனோட இனிமே சுத்தாத!” என்று அம்மா தடுத்து விட்டால்…?

 

  • “ஏம்மா! உனக்கு இவ்வளவு செஞ்சு வச்ச நாங்க, வளத்து, ஆளாக்கி, படிக்க வைச்ச நாங்க, உனக்கொரு நல்ல மாப்பிள்ளயத் தேடி ஒரு நல்ல வாழ்க்கய அமைச்சிக் கொடுக்க மாட்டோமா? ஏன் அவசரப் பட்ற இப்ப?” என்று அப்பா தனக்கே உரிய அமைதியோடும் உறுதியோடும் வழியை அடைத்து விட்டால்…?

 

  • “சரி அப்பா! அப்படியே ஆகட்டும்!” என்று அப்பாவிடம் சொல்லி விட்டு “மன்னிச்சிக்குங்க கணேசன்! எங்க பெற்றோர்கள் இதை வேண்டாங்கிறாங்க. ஆகவே இதை இப்படியே விட்டிடுவோம்!” என்று சொல்லி விடுதலை பெற்றுக்கொள்ள முடியுமா?

 

  • இல்லையென்றால் “அது முடியாது அப்பா! நான் அவரையே காதலராகவும் கணவராகவும் ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்! உங்களுக்கு விருப்பமில்லன்னா நான் வீட்ட விட்டு வெளியேறிப் போயிட்றேன்!” என்று, கட்டிய துணிகளோடு…. அந்தக் காட்சி வெறுப்பாக இருந்தது.

 

  • ஏராளமான காதல் நாவல்களில் காதலனுக்காகப் பெண் சகலத்தையும் துறக்கும் முடிவுகளை அகிலா படித்துப் படுக்கையில் இரவு நேரங்களில் கண்ணீரும் விட்டிருக்கிறாள். ஆனால் தன் இரத்தமும் சதையுமான அப்பாவையும் அம்மாவையும் முன்னால் வைத்துக் கொண்டு தன்னால் அப்படிச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

 

  • அப்படி முறித்துக் கொண்டு வர வேண்டிய அவசியம்தான் என்ன? கணேசன் யார்? தன் வாழ்க்கையில் நேற்று முளைத்தவன் அல்லவா? நல்லவனா கெட்டவனா என்பது கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தன் மேல் உண்மையான காதல் வைத்திருக்கிறானா அல்லது ஜெசிக்காவை கூட்டிக் கொண்டு அலைந்தது போல, அவள் சலித்து விட்டதால் புதிய பெண் துணையாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. அவன் கண்களில் உண்மை இருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையா அல்லது காதல் மயக்கத்தில் கிறங்கிப் போனதால் அப்படித் தெரிகிறதா என்றும் அவளால் நிச்சயித்துக்கொள்ள முடியவில்லை.

 

  • ஆனால் காதலில் நிச்சயங்களைத் தேடி அலைவதில் பொருளில்லை என்றும் அவளுக்குப் பட்டது. காதலில் உத்தரவாதம் கேட்க முடியுமா? சாயம் போகாத காதலாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று கன்டிஷன் போட்டுக் காதலிக்க முடியுமா?

 

  • கவர்ச்சியாக, அன்பாக இருக்கிறான். ஆனால் வாழ்நாள் முழுக்கத் தனக்கு உறவாகிப் போன அம்மாவையும் அப்பாவையும் விடவா? அவன் காட்டுகிற அன்பு அம்மாவும் அப்பாவும் காட்டுகிற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. தனக்கும் அவன் மேல் ஏற்படுகின்ற அன்பு தன் அம்மா அப்பா மீது ஏற்படுகின்ற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. என்னதான் பாசமான அம்மா அப்பாவாக இருந்தாலும் அவர்களை இருபத்து நாலு மணி நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் நினைவு மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஒரு சிறிய கிராமத்து மூலைக் கோயில் போல ஆரவாரமில்லாமல் இருக்கிறது. ஆனால் கணேசனின் நினைவு இருபத்து நாலு மணி நேரமும் மனசின் முன்னாலேயே இருக்கிறது. ஒரு இனிய தென்றல் போல வீசிக் கொண்டிருக்கிறது. சாப்பிடும் போதும் குளிக்கும் போதும் தூங்கும் போதும் விரிவுரைகளின் போதும்….

 

  • இது ஏன் என்று விளங்கவில்லை. எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை. தென்றலை அடக்கி வைக்க முடியுமா? வீசத் தொடங்கிய பின்னர் “போ போ” என்றால் போய் விடுமா? இது இயற்கையின் நியதியல்லவா? பள்ளம் நோக்கிப் பாய்கின்ற தண்ணீரை நிறுத்த முடியுமா?

 

  • முடியாதென்றால், இதுதான் இயற்கை நியதி என்றால், அப்புறம் ஏன் இந்தக் குற்ற உணர்வு? அம்மாவிடமும் அப்பாவிடமும் இதனை விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்களா?

 

  • “அம்மா நான் பல்கலைக் கழகத்தில ஒருத்தர விரும்புறேன். நீ சரின்னு சொன்னா அவரைக் காதலிக்கிலான்னு பாக்கிறேன்! எனக்கு அனுமதி கொடு!” முடியுமா? வாய் வருமா? இது அசிங்கமான பேச்சு என்று பொருள் வரும்படியாக இல்லாமல் இதைச் சொல்ல முடியுமா?

 

  • எந்தக் கதையில், எந்தக் காவியத்தில் அம்மா அப்பாவின் அனுமதியுடன் காதல் நடந்திருக்கிறது? கல்யாணத்திற்கு அனுமதி கேட்டு சண்டை போட்ட கதைகள் பல இருக்கின்றன. ஆனால் எந்த நாயகி, எந்த நாயகன் காதலிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள்? அனுமதி பெற்றுக் கொண்டு காதலிப்பது காதலாகுமா? காதல் என்பதே ரகசியம்தானே! ரகசியத்தில்தானே காதலின் மகரந்தங்கள் இருக்கின்றன! இல்லாவிடில் இந்த விஷயத்தில் இத்தனை இனிப்பு எப்படி வரும்? மூடப்பட்ட சூடப் பெட்டியாக இருப்பதால்தானே இதில் இத்தனை வாசம் இருக்கிறது? திறந்த, அனுமதிக்கப் பட்ட காதலாக இருந்தால் அது நீர்த்துப் போய்விடாதா?

 

  • கொஞ்ச நாள் அம்மா அப்பாவிடமிருந்து இதை மறைத்து வைப்பதுதான் நல்லது என அகிலாவுக்குத் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் அவர்களைக் கோபப்படுத்தாமல், வருத்தப் படுத்தாமல், இதை அவர்கள் முன் பேச முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. பேசுவதற்கு போதிய தைரியம் வரும் என்றும் தோன்றவில்லை. காதல் உறுதிப் பட்டபின், முகையாக மட்டுமே இப்போது இருக்கின்ற உறவு காயாகிக் கனியும் வரை வளர்ந்தால், அப்போது அம்மா அப்பாவிடம் சொல்லலாம். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்களின் அனுமதியை வேண்டி நிற்கின்ற நிலையில் அது இருக்காது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்கள் மறுத்தால் “நான் என் காதலனுடன் போகிறேன்!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

 

  • ஆனால் அந்த அளவுக்கு இது வளருமா என்றும் தெரியவில்லை. இப்போது அது விளையாட்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பேச்சும் கொண்டாட்டமும் நண்பர்களின் கேலியும் சிரிப்பும் என அது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆழம் இல்லாமல் இருக்கிறது.

 

  • அடுத்த முறை கணேசனோடு தனியாக இருக்கும் வேளை வந்தால் இந்தக் காதலைப் பற்றி ஆழமாகப் பேசவேண்டும் என்று அகிலா முடிவு செய்து கொண்டாள். அந்த சந்தர்ப்பம் வந்தது.

 

  • இந்தியக் கலைநிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் கூட்டத்திற்கு அகிலா அன்று போயிருந்தாள். என்னென்ன அங்கங்கள் என்பது பற்றியும் டிக்கட்டுகள் விநியோகம் பற்றியும் பேசினார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த போது கணேசன் சொன்னான்: “நாளைக்கு நீ என்னோட கண்டிப்பா சாப்பிட வரணும்!”

 

  • “ஏன் அப்படி கண்டிப்பா வரணும்?”

 

  • “ஏன்னா என்னோட பிறந்த நாள்!”

 

  • “அப்படியா? வாழ்த்துக்கள். யாராரெல்லாம் வாராங்க நம்ம கூட?” என்று கேட்டாள்.

 

  • “இனிமே கூட்டத்த சேர்த்துக்கிட்டுச் சாப்பிடப் போறதில எனக்கு அவ்வளவு ஆசையில்ல அகிலா! இந்தப் பிறந்த நாள உன்னோட மட்டும் தனியாக் கொண்டாடணும்!” என்றான்.

 

  • அவன் கண்களை கூர்ந்து பார்த்துவிட்டு புன்னகையோடு “சரி!” என்றாள்.

 

  • *** *** ***

 

  • அவ்வளவு பகட்டான இடத்துக்கு அவன் அவளை அழைத்து வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. புக்கிட் ஜம்போல் கோல்•ப் திடலை அடுத்துள்ள ஆடம்பர ஹோட்டலான இக்குவிடோரியல் ஹோட்டலின் கோ•பி ஹவுஸில் நுழைந்த போது அவள் அசந்து போனாள்.

 

  • அலங்காரத்துக்காக வைக்கப் பட்டிருந்த மங்கிய விளக்கு எரியும் மேஜைகளில், மற்றவர்கள் தொந்திரவு இல்லாத ஒரு மூலையில் அவர்கள் சென்று உட்கார்ந்த பிறகு அகிலா கேட்டாள்: “ஏன் இத்தனை விலையுயர்ந்த இடத்துக்கு கூப்பிட்டு வந்திங்க கணேஷ்? இது பணக்காரங்க காசைக் கரியாக்கிற இடமில்லையா?”

 

  • அன்று அவள் அழகான பஞ்சாபி உடை ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு இது பிடிக்குமா, இது பிடிக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டு தேடித் தேடி எடுத்த உடை. ஏனோ அவனை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. தனது நீல நிற பஞ்சாபி ஆடைக்கேற்ப ஒரு மெல்லிய நீலத்தில் துப்பட்டாவும் அணிந்து கொண்டிருந்தாள். நெற்றியில் அதே நீல வண்ணத்தில் ஸ்டிக்கர் பொட்டு இட்டிருந்தாள். தலை முடியை அழுந்த வாரிக் கட்டியிருந்தாள். அவனுக்காக, அவனுக்காகவென்றே கண்ணில் இலேசாக மை தீட்டியிருந்தாள்.

 

  • அவன் பார்த்த அந்த ஆசைப் பார்வையில் அந்த உடையலங்காரத்தை அவன் அங்கீகரித்தான் என்றே தோன்றியது. அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க அகிலா!” என்றான்.

 

  • அவளுக்கு அது சங்கீதமாக இருந்தது. அவனும் அன்று எடுப்பாகத்தான் உடுத்திக் கொண்டு வந்திருந்தான். என்றும் போல் ஜீன்ஸ் டீ சட்டை என்றில்லாமல் ஒரு உயர்ந்த பிரேன்ட் சின்னம் பாக்கெட்டில் பதித்திருந்த சில்க் போன்ற துணியில் முழுக்கை சட்டை அணிந்திருந்தான்.

 

  • “ரொம்ப நன்றி. உங்களுடைய பிறந்த நாளாச்சே, உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டுமேன்னுதான் இப்படி உடுத்தி வந்தேன். சந்தோஷம்தானே?”

 

  • “நான் வானத்தில பறக்கிறேன்னு என்னைப் பார்த்தா தெரியல?”

 

  • “தெரியுது! கொஞ்சம் இறங்கி வந்து பதில் சொல்லுங்க. ஒரு பல்கலைக் கழக மாணவர் இப்படி வந்து ஹோட்டல்ல காச வீணாக்கலாமா? அவ்வளவு பணக்கார வீட்டுப் பிள்ளையா நீங்க?”

 

  • சர்வர் வந்து நின்றார். மெனுவை வாங்கிப் பார்த்தார்கள். விலைகளைப் பார்த்ததும் அகிலாவுக்கு திக்கென்றது. அவள் இம்மாதிரியான இடத்திற்கு வந்து சாப்பிட்டதே இல்லை. இந்த மாதிரி விலைகளை இதற்கு முன் கண்டதும் இல்லை. எந்த உணவையும் வேண்டும் என்று சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது. கணேசன்தான் வற்புறுத்தி அதைச் சாப்பிடு இதைச் சாப்பிடு என்று ஆர்டர் கொடுத்தான்.

 

  • சர்வர் போனபின் கணேசன் சொன்னான்: “இன்னைக்கு இந்தப் பிறந்த நாள முதல் முதல்ல உன்னோடு சேர்ந்து கொண்டாட்றேன் இல்லியா அகிலா! அதினால அது ஸ்பெஷலா இருக்கணும்னு நெனச்சேன். நீயும் நானும் என்னைக்கும் நெனைச்சுப் பார்த்து மகிழக் கூடியதா இருக்கணும்னு நெனச்சேன். அதினாலதான் இந்த இடம்.”

 

  • “நீங்க அன்றைக்கு வாங்கிக் கொடுத்த மீ கோரேங், ரோஜாக் கூட நான் நெனப்பில வச்சிருக்கேன். அதுக்காக இவ்வளவு காசு செலவு பண்ணனுமா? உங்க பெற்றோர்கள் ரொம்ப பணக்காரங்க இருப்பாங்க போல இருக்கே!” என்றாள்.

 

  • “என் பெற்றோர்கள் ரொம்ப ஏழைகள் அகிலா! தோட்டத்து வாழ்க்கையிலேயே இன்னைக்கும் கிடந்து குடியும் கூழுமா அவதிப் பட்றாங்க. ஆனா எனக்கு ஒரு அத்தை இருக்காங்க, அட்சய பாத்திரம் மாதிரி…”

 

  • அன்று இரவில் ஏராளமாக அவர்களுடைய வாழ்க்கைக் கதைகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. தன் வாழ்க்கையும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக தன் பெற்றோர்களைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அனைத்தையும் கூறினாள் அகிலா. சுவையான உணவுகளூடே அந்தரங்க வாழ்க்கைகள் பரிமாறப் பரிமாற அவர்களிடையே அந்நியோன்யம் வளர்ந்து கொண்டிருந்தது.

 

  • அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எது எது விருப்பம், என்ன பாட்டு பிடிக்கும், என்ன உடை பிடிக்கும், எந்தத் தோழி உயிர்த்தோழி என்றெல்லாம் அவன் அக்கறையோடு கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொன்றுக்கும் பதிலாக தனக்கு என்ன பிடிக்கும் என்ற தகவலை அவன் பரிமாறிக் கொண்ட போது பல அவளுடைய விருப்பங்களுக்கு ஒத்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் முடியும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

  • சாப்பாடு முடிந்ததும் கிட்டத்தட்ட அறுபது வெள்ளியைக் கொடுத்து விட்டு அவர்கள் வெளியே வந்தார்கள். அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து அணுக்கமாக அணைத்துக் கொண்டாள். கேம்பசுக்குத் திரும்பினார்கள். யாராவது பார்த்து விடுவார்களே என்ற அச்சம் பல நாட்களுக்கு முன்பே அவளுக்கு நீங்கி விட்டிருந்தது.

 

  • “கொஞ்ச நேரம் வி.சி. ரோக் பக்கம் போய்உக்காந்திருப்போமா, அகிலா?” என்று கேட்டான்.

 

  • “சரி!” என்றாள். அந்த இரவு குளுகுளு வென்றிருந்தது. இந்தக் காதலனின் அணைப்பு வெது வெதுப்பாக இருந்தது.

 

  • வி.சி. பாறை மாணவர் விவகாரப் பிரிவுக்கு முன்னால் இருந்தது. துணை வேந்தரின் பழைய அலுவலகம் அங்கு அமைந்திருந்ததால் அந்த இடத்தை துணை வேந்தர் பாறை என்று மாணவர்கள் அழைக்க அதுவே நிலைத்து விட்டது. மாணவ காதல் ஜோடிகள் இரவில் உட்கார்ந்து பேச வசதியான இடம்.

 

  • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தார்கள். அகிலா தலை முடியை இறுகப் பிடித்திருந்த ரிப்பனை அவிழ்த்து விட்டு முடியை கழுத்திலும் தோளிலும் படரவிட்டாள். அவர்களிடையே எல்லா இறுக்கங்களும் தளர்ந்திருந்தன.

 

  • வி.சி. பாறையிலிருந்து பார்த்தால் கடல் பரப்பும் பினாங்குப் பாலமும் தெரியும். பினாங்குத் தீவின் கரையில் ஒரு தென்னந் தோப்பும் தெரியும். அன்று அந்தத் தென்னந்தோப்பின் மேலாக ஒரு பிரகாசமான நிலா வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. பினாங்குப் பாலம் முழுவதும் விளக்குகள் எரிந்து ஒளிமிக்கக் கற்கள் பதித்த தங்கச் சங்கிலி போல இருந்தது. உறுதியான அந்தப் பாலத்தின் மென்மையான அசையும் பிம்பம் கடலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

 

  • தூரத்தில் அக்கரையில் பட்டர் வொர்த் கப்பல் துறையில் உயர்ந்த கிரேன்கள் தெரிந்தன. துறையை ஒட்டியும் அருகில் கடலிலும் பல பெரிய சரக்குக் கப்பல்கள் கம்பீரமாக நின்றிருந்தன. இரும்பும் எ•குமாக செய்யப்பட்ட அந்தக் கப்பல்களின் மீதெல்லாம் சந்திர ஒளி உருகி வழிந்து அவற்றின் முரட்டுத் தனங்களை மென்மைப் படுத்திக் கொண்டிருந்தது.

 

  • அந்த இரவுப் பொழுதும் வானமும் கடலும் சந்திரனும் தங்கள் இருவருக்காகவும்தான் படைக்கப் பட்டிருக்கின்றன என அகிலா நினைத்துக் கொண்டாள். இந்த அனுபவம் மிக மிகப் புதியதாக இருந்தது. இதை அவள் புத்தகங்களில் படித்திருக்கிறாள். அப்போது இந்த அனுபவங்களுக்காக அவள் ஏங்கியதுண்டு. இப்போது அது இங்கே நிகழும் போது ஒரு இனிய கனவு கண்டு விழித்த போது அது கனவல்ல உண்மை என்று தெரிந்து கொண்டது போல் இதயம் மகிழ்ச்சியில் தளும்பிக் கொண்டிருந்தது.

 

  • அவன் அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு வழி நடத்தினான். அவள் விருப்பத்தோடு அவனை ஒட்டிக் கொண்டு நடந்தாள். இவன் தனக்குத் தலைமையேற்று வழி நடத்தத் தக்க நல்ல ஆண்மகன்தான் என்ற கருத்து அவள் உள்ளத்தில் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தது.

 

  • அவர்கள் வசதியான ஒரு புல் மேட்டில் உட்கார்ந்தார்கள். அவன் அவள் தோள்களைத் தழுவியிருந்தான். அவள் துப்பட்டாவினய் ஓரங்கள் அவன் அணைப்பில் கொஞ்சம் நசுக்கின. முகம் திருப்பி முத்தம் கொடுக்க வந்தான். கொஞ்சமாக இதழைக் கொடுத்துப் பின் வாங்கிக் கொண்டாள். இது வேண்டும் என்றும் இது குற்றம் என்றும் மனது மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது.

 

  • அந்த வேளையில் அன்று இரவு முழுவதும் குறுகுறுத்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி முட்டி மோதிக் கொண்டு வெளிப்பட்டது: “உங்க குடும்பத்தில எல்லாரையும் பத்திச் சொன்னிங்க! ஆனா ஒருத்தர் பத்தி மட்டும் சொல்லலியே!”

 

  • “யாரப் பத்தி சொல்லலே?”

 

  • “அதான், உங்க அத்த மக, மல்லிகா!”

 

  • “ஓ மல்லிகாவா?” கொஞ்சம் யோசித்துச் சொன்னான். “அவ சின்னப் பிள்ளை. வயசு ஆயிடுச்சே தவிர ஒண்ணும் தெரியாத வெகுளி! அவ எனக்குத் தங்கச்சி மாதிரி!”

 

  • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31

31  மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19

19  அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27  எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும்