Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16

16
 

  • பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து மெத்தென்று இருக்கும். யுஎஸ்எம்மின் நுண்கலை இயல் மாணவர்களின் நாடகங்கள், நடனங்கள், கவிதைகள் போன்ற படைப்புகள் அங்கேதான் அதிகமாக அரங்கேறும்.

 

  • பல்கலைக் கழகத்திற்கு ஏற்கனவே ஒரு பிரம்மாண்டமான மண்டபம் இருக்கிறது. 2,200 பேர் வரை அமரக்கூடிய தேவான் சையட் புத்ரா என்ற பட்டமளிப்பு விழா மண்டபம். பட்டமளிப்பு விழா தவிர பெரிய அளவிலான கலைநிகழ்ச்சிகளும் அங்குதான் நடக்கும். ஆனால் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு வசதியான மண்டபம் இல்லாத குறையை மாணவர் இல்லத்தின் பக்கத்தில் கட்டப்பட்ட இந்தப் புதிய கலாச்சார மண்டபம் போக்கியிருந்தது.

 

  • மாணவர் இல்லம், கலாச்சார மண்டபம் ஆகியவை அமைந்திருந்த இந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடைத்து மாணவர்கள் நடப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஓரங்களை வளைத்து வளைத்து வெட்டிய கற்கள் பதித்த அகன்ற நடைபாதை அமைத்திருந்தார்கள். அந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் பிரம்மாண்டமான மழை மரங்கள் அமைந்திருந்ததால் எந்நேரமும் நிழலாக இருக்கும்.

 

  • கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட கையோடு அந்த இடத்தை அழகு படுத்துவதற்காக அந்த நடைபாதையின் இருமருங்கிலும் புதிய சாலை விளக்குகளை அமைத்தார்கள். பளிங்கு நிறத்தில் பெரிய குடம் போன்ற விளக்குக் கூடுகளுக்குள் வெள்ளை நியான் விளக்குகள் கண்ணைக் குத்தாத மிருதுவான ஒளியை உமிழ்ந்தவாறு இருக்கும். இரவில் அந்தக் கம்பங்களின் அடியில் ஒளித் தீவுகள் தோன்றி நடைபாதையின் சிவப்புக் கற்களில் வண்ணக் கோலங்கள் போட்டிருக்கும்.

 

  • அதைவிடவும் இன்னொரு கலா பூர்வமான ஒளிப்பிரவாகமும் அங்கு உண்டு. கலாச்சார மண்டபத்தின் முன்னால் இருந்த பிரம்மாண்டமான மழை மரம் ஒன்றின் கீழ் சக்தி மிக்க விளக்குகள் பொருத்தி, அந்த ஒளியை மரத்தின் தண்டு மீதும் இலைகளின் மீதும் பாய்ச்சியிருந்தார்கள். அந்த ஒளி இரவில் மரத்தண்டின் பழுப்பு நிறத்தையும் இலைகளின் கரும் பச்சையையும் ஒரு இருள் கலந்த வண்ணத்தில் அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒளி வீச்சில் மரத்தினுள் விதம் விதமான நிழல் வீச்சுக்களும் தெரிந்தன.

 

  • இந்த அழகிய மரத்தின் அழகு பகலில் மட்டும் தெரிந்தால் போதாது, இரவிலும் தெரிய வேண்டும் என்று நினைத்து செலவைப் பாராமல் அதற்கு விளக்கு வசதிகள் செய்து கொடுத்த பல்கலைக் கழகத்தின் கலைமனத்தை எண்ணி வியந்தவாறு கணேசன் கலாச்சார மண்டபத்தின் படிக்கட்டுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 

  • எட்டு மணிக்கு நடனப் பயிற்சி ஆரம்பித்தால் பத்து மணிக்கு முடியும் என உத்தேசித்தான். ஆனால் ஒரு வேளை சீக்கிரம் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான். அன்று வெற்றி விழாக் களிப்பில் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த நண்பர்களை மெதுவாகக் கழற்றிவிட்டு, “ரொம்ப வேல இருக்குப்பா. லைப்ரரிக்குப் போகணும் ஆள விடுங்க!” என்று புறப்பட்டு வந்தான். தனியாகக் காத்திருந்தான்.

 

  • மாணவர் விடுதிக்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முதல் மாடியில் நடனப் பயிற்சி நடக்கும் அறை எது எனக் கண்களை மேயவிட்டுப் பார்த்தான். பல அறைகளில் விளக்கு எரிவது மூடிய திரைகளூடே தெரிந்தது. அந்த அறைகளில் ஒன்றிலிருந்து ஜோகேட் இசை ஒலிப்பதும் நிற்பதுமாக லேசாகக் கேட்டது. அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒலி நாடாவை நிறுத்தி இசைத்து பின்னோக்கிச் சுற்றி மீண்டும் இசைத்துத் தீவிரமாகப் பயிற்சி செய்கிறார்கள் என்று தெரிந்தது.

 

  • நடனமணிகள் ஜன்னல் திரைக்கு ஓரமாக வரும் சில வேளைகளில் மட்டும் அவர்கள் கருநிழல் நெளிந்து நெளிந்து தெரிந்தது. இதில் எந்த நிழல் அகிலாவின் நிழல்? சொல்ல முடியவில்லை. ஆண்களின் நிழலுக்கும் பெண்களின் நிழலுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துச் சோர்ந்து போனான்.

 

  • எந்த ஆண் அகிலாவோடு ஆடுகின்ற பாக்கியம் பெற்றிருக்கிறானோ என நினைத்த போது பொறாமையாகக்கூட இருந்தது. அவன் யார், மலாய்க்காரனா? சீனனா? இந்தியனா? தொட்டு ஆடுகிறார்களா, தொடாமல் ஆடுகிறார்களா?

 

  • ஜோகெட் நடனத்தில் நெருக்கமாக ஆடினாலும் தொட்டு ஆடுவதில்லை. ஆனால் பேராசிரியர் கௌஸின் நடன அமைப்பைப் பற்றிச் சொல்ல முடியாது. புதுமைகள் செய்கிறேன் என்று கட்டிப் பிடித்து ஆடவைத்தாலும் வைப்பார்.

 

  • அகிலாவை யாராவது தொட்டு ஆடுகிறார்களா என்பது பற்றி அவன் மனம் கவலைப் படுவது அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. தானும் கலாச்சாரக் குழுவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அப்படியானால் இரவில் அகிலாவோடு சேர்ந்து பயிற்சி செய்யலாம். தானும் தொட்டு ஆடலாம். அவள் அருகிலேயே இருக்கலாம்.

 

  • “பைத்தியம், பைத்தியம்” என்று மனசு கூவியது. இருக்கின்ற சங்கப் பொறுப்புக்களே முதுகை ஒடிக்கின்றன. இதற்கு மேல் கலாச்சாரக் குழுவிலும் சேர்ந்து முழங்காலையும் உடைத்துக் கொள்ளப் போகிறாயா என்று கேட்டது. உண்மைதான் என அயர்ந்தான். ஆனால் அகிலாவின் பக்கத்தில், அவள் மூச்சு விடும் தூரத்தில் தான் எந்நாளும் இருக்க வேண்டும் என்று ஆசை கொடுக்குப் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தது.

 

  • “மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அவள் போன போது முதலில் அவன் முகமும் மனதும் தொங்கிப் போயின. தான் நிராகரிக்கப் பட்டுவிட்டோம் என்னும் அவமான உணர்ச்சிதான் மேலோங்கி நின்றது. அதுவரை இருந்த வெற்றிக் களிப்புகள் தொலைந்திருந்தன.

 

  • அவர்கள் போகும் திசையைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது மனம் அவளுடைய வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென அவனுக்குப் புரிந்தது. “வேண்டாம், உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ” என்ற சொல்ல வந்தவளாக இருந்தால் ஏன் தொடங்கும் நேரம் முடியும் நேரம் இடம் எல்லாம் இப்படி விரிவாகச் சொல்ல வேண்டும்? “பத்து மணிக்கு வந்து விடு அங்கே பேசிக்கொள்ளலாம்” என்ற செய்தி அவளுடைய பேச்சில் இருந்தது அப்போதுதான் புரிந்தது.

 

  • அதன் பிறகு உள்ளம் நிலை கொள்ளவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு வந்து அலைய ஆரம்பித்துவிட்டான். பத்து மணிக்கு எட்டி எட்டிப் பார்த்தான். பயிற்சி முடிகிற அறிகுறிகள் தெரியவில்லை. படிக்கட்டில் சோர்ந்து உட்கார்ந்து விட்டான்.

 

  • அப்படிக் காத்திருப்பது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. நண்பர்கள் பார்த்துக் கேட்டால் என்ன சொல்வது? ஏன் இப்படிக் காத்திருக்க வேண்டும்? எப்படி இந்த அளவுக்குத் தன் மனதைக் கவ்வினாள்?

 

  • அவனுக்கு விடைகள் தெரியவில்லை. ஆனால் அவன் கை பிடிக்க அவள் கண்ணீர் விட்ட காட்சி மீண்டும் மீண்டும் வந்து நின்றது. அன்று விசாரணையில் தான் விடுதலை பெற்றதைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்த காட்சி நினைவுக்கு வந்தது. இப்படிச் சின்ன சின்ன அர்த்தமுள்ள பார்வைகளும் சிரிப்புகளும் கண்ணீரும்தான் தன் மனதில் காதல் கனலை மூட்டி விட்டன என்பது புரிந்தது.

 

  • முதல் மாடியில் இசை நின்றது. ஆட்கள் கலையும் அடையாளம் தெரிந்தது. எழுந்து படிக் கட்டுக்களுக்குள் நிழலில் உள்வாங்கி மறைவாகக் காத்திருந்தான். ஏன் மறைந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் கண்ணில் படாமல் அவளைப் பார்ப்பதுதான் சரி என்று பட்டது.

 

  • பேங்க் சிம்பானான் நேஷனல் பக்கத்தில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென சிலர் இறங்கினார்கள். கடைசியாக அகிலா இறங்கினாள். கையிலிருந்த துண்டால் கழுத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தவாறு நிமிர்ந்து பார்த்தாள். முகம் களைத்து இறுக்கமாக இருந்தது. கண்கள் கொஞ்சம் அலைந்து தேடின. என்னைத்தானா?

 

  • நிழலிலிருந்து வெளியே வந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவனைப் பார்த்தாள். முக இறுக்கம் கலைந்து மெலிதாகப் புன்னகைத்தாள். அவளை நோக்கி முன்னேறினான்.

 

  • “உங்களுக்காகத்தான் காத்திருக்கேன் அகிலா?” என்றான்.

 

  • “எனக்காகவா? ஏன்?” ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள்.

 

  • “சாயந்தரம் பேசணும்னு வந்தேன். நேரமில்லன்னு சொல்லிட்டிங்க! அதினாலதான் இப்ப வந்தேன்!”

 

  • “இந்த ராத்திரியிலியா?”

 

  • “ஓய்வாப் பேசிறதுக்கு ராத்திரிதான நல்ல நேரம்?”

 

  • தயங்கி நின்றாள். ஆசை மனதில் இருந்தாலும் இரவு சந்திப்பு ஒரு பெரிய குற்றம் போலத் தோன்றியது. உடனிருந்த அனைவரும்போய்விட்டார்கள்.

 

  • “என்ன பேசணும்?”

 

  • “இப்படி கொஞ்ச நேரம் உக்காந்து பேசுவமா அகிலா?” படிக்கட்டுகளைக் காட்டினான்.

 

  • உட்கார்ந்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். வியர்வை மணத்தோடு அவனோடு நெருங்கியிருப்பது கூச்சமாக இருந்தது. அடிக்கடி துடைத்துக் கொண்டாள். தலையைக் கைகளால் கோதிக் கொண்டாள். தலை முடி ரொம்ப கலைந்து அசிங்கமாக இருக்குமோ? முகமெல்லாம் வியர்வை வழிந்து கருப்புப் பொட்டுகள் தெரியுமோ? என்ற கவலைகள் அவளுக்குள் வந்தன.

 

  • ஆனால் அந்த கலைந்த தலைமுடியும் வியர்வையும் கருப்புப் பொட்டுக்களும்தான் அவனைக் கிறங்க அடித்தன. மிருதுவான சாலை விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அலங்காரமில்லாத ஆடம்பரமில்லாத சுய உருவத்தில் எத்தனை அழகாக இருக்கிறாள்! ஒரு புன்னகையையும் மருண்ட கண்களையும் மட்டுமே நகைகளாக அணிந்திருக்கிறாள். கழுத்தில் மட்டும் ஒரு தங்கச் சங்கிலி வியர்வையில் நனைந்து ஒட்டிக் கிடக்கிறது. அதன் பதக்கம் ஒன்று டீ ஷர்ட்டினுள் நிழலாடியது.

 

  • “என்னமோ சொல்லணும்னு சொன்னிங்க! பேசாம இருக்கிங்களே!” என்றாள்.

 

  • “எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல!”

 

  • “சரி! அப்ப யோசிச்சு வைங்க! பின்னால பேசிக்குவோம்!” எழுந்தாள். எழுவதாக நடித்தாள்.

 

  • பட்டென்று கையைப் பிடித்து உட்கார வைத்தான். இணங்கி உட்கார்ந்தாள். அந்தப் பிடி பிடித்திருந்தது.

 

  • “இன்னைக்குக் காலையில இருந்து நடந்ததை நினைக்கும் போது என் தலையே சுத்துது அகிலா! என்னோட மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்ல. ஆனா அந்த மகிழ்ச்சிய உங்ககிட்ட பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பமே கிடைக்காமப் போச்சு! அதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன்!” தயங்கித் தயங்கிப் பேசினான்.

 

  • “உங்க மகிழ்ச்சிய என்னோட ஏன் கொண்டாடணும்? அதுக்குத்தான் இந்த கேம்பஸ்ல உங்களுக்கு அளவில்லாத நண்பர்கள், நண்பிகள் இருக்காங்களே!” என்றாள். ஏளனம் இருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது.

 

  • “இருக்காங்க. ஆனா இப்படியெல்லாம் நடந்ததுக்கும் நீங்கதான் காரணம். அதில இருந்து நான் விடுதலை பெற்றதுக்கும் நீங்க ஒரு காரணம். அதுக்கெல்லாம் மேல எனக்காக இந்த பல்கலைக் கழக இடத்தையே தியாகம் செய்ய முன் வந்திங்களே, எனக்காக அழுதிங்களே, இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேணாமா? ஆகவே இந்த நல்ல முடிவ உங்களோடக் கொண்டாட்றதுதான் நல்லதுன்னு தோணிச்சி. ஆனா நான் நெனச்ச மாதிரி நடக்கல!”

 

  • அவன் தன்னைப் பற்றி இவ்வளவு சிந்தித்து வைத்திருப்பது அகிலாவுக்கு இனிப்பாக இருந்தது. ஆனால் மறந்து விட்டு உதறி விட்டுத்தானே போனான்? கோபமாகவும் இருந்தது.

 

  • “அதினால என்னங்க கணேசன்? கடைசியா உங்களுக்கு வேண்டிய உற்ற தோழியோடதான போய் கொண்டாடினிங்க! எனக்கு வருத்தம் ஒண்ணுமில்ல, சந்தோஷம்தான்!” என்றாள்.

 

  • “ஜெசிக்காவத்தான சொல்றிங்க! நான் ஜெசிக்காவோட மட்டும் போகல! இன்னும் பல நண்பர்களோட கூட்டமாத்தான் போனோம். உண்மையில நானாப் போகல! என்ன இழுத்துக்கிட்டுப் போனாங்க. நீங்கதான் பாத்திங்களே!”

 

  • பேசாமல் இருந்தாள். மௌனத்துக்குப் பின் அவன் பேசினான்: “ஜெசிக்கா என் •பிரண்டுதான். ஆனா விசேஷமான •பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண •பிரண்ட்!” என்றான். ஜெசிக்காவை மனதில் வைத்துக் கொண்டு அகிலா தன்னிடமிருந்து விலகிப் போய்விடக் கூடாது என்ற பயம் வந்தது.

 

  • “சாதாரண •பிரண்டா விசேஷ •பிரண்டான்னு எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு நான் ஏதோ பெரிய தீங்கு செய்திட்டதாக ஜெசிக்கா என்னோட போட்ட சண்டை, என்னை தன் அறைய விட்டு விரட்டினது எல்லாத்தையும் பார்த்தா அவ சாதாரணக் கூட்டாளியா தெரியல. உங்களுக்கு மட்டும் விசாரணையில விடுதல கெடைக்காம தண்டனை கெடைச்சிருந்தா ஜெசிக்கா என்னக் கொண்ணே போட்டிருப்பா!”

 

  • “இல்ல அகிலா! ஜெசிக்கா எல்லாத்திலியும் உணர்ச்சி வசப் பட்றவ! அவ நெனச்ச காரியம் நடக்கிலேன்னா அப்படித்தான் எல்லாரையும் கலக்கி எடுத்திருவா. அதத் தவிர எங்களுக்குள்ள வேற எதுவும் இல்ல!”

 

  • அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “அத ஏன் ஏங்கிட்ட சொல்றிங்க கணேசன்? உங்களுக்கிடையில எப்படிப்பட்ட நட்பு இருந்தாலும் எனக்கென்ன?” கேட்டுக் குனிந்து கொண்டாள். ‘இல்லையென்று சொல், மறு உறுதிப் படுத்து’ என்று அவள் மனது அவனைக் கேட்டது.

 

  • “இத உங்ககிட்ட சொல்றது முக்கியம்னு நெனச்சேன். ஜெசிக்கா உங்ககிட்ட நடந்துகிட்ட விதத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அவ அப்படி நடந்தது தெரிஞ்ச உடனே நான் ரொம்ப கலங்கிப் போயிட்டேன். உங்க மனம் புண்படக் கூடாதுன்னு என் மனம் அடிச்சிக்கிச்சி!”

 

  • விளக்குக் கம்பங்களில் ஏதோ பூச்சிகள் வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தன. அந்த உரையாடல் அவளுக்குச் சுகமாக இருந்தது. ஆனால் அந்த இரவு நேரத்தில் அப்படி ஒரு ஆணிடம் உட்கார்ந்து பேசுவது குற்றம் என்றும் பட்டது. ஏன் அது குற்றம் என்றும் தெரியவில்லை. திடீரென அம்மாவை நினைத்துக் கொண்டாள். “ஆம்பிளப் பிள்ளங்களோட தனியா என்ன பேச்சு உனக்கு?” என்று சிறு வயது முதல் கண்டித்துக் கண்டித்து அவள் சொல்லிக் கொடுத்த ஒழுக்கத்திலிருந்து தவறுகிறோமோ என்ற எண்ணம் வந்தது.

 

  • “சரி கணேசன். நான் புரிஞ்சிக்கிட்டேன். இத இத்தனை தூரம் வந்து இந்த ராத்திரியில காத்திருந்து நீங்க சொன்னதுக்கு நன்றி. நான் வரட்டுமா?” என்று எழுந்தாள்.

 

  • “ஏன் இத்தனை அவசரப் பட்றிங்க?” என்று கெஞ்சுவது போல் கேட்டான்.

 

  • “இதோ பாருங்க, வேர்த்துக் கொட்டுது. நான் போய் குளிக்கணும்” என்றாள்.

 

  • “இதோ பைக்கில ஏறுங்க! ஒரு நிமிஷத்தில கொண்டு விட்டிர்ரேன்” என்றான்.

 

  • “ஐயோ, இந்த வேர்வையோடயா? உங்க பைக்கே அழுக்காப் போகும்!” என்று சிரித்தாள்.

 

  • “அழுக்கான பரவாயில்ல! அது அழுக்குன்னு நான் நெனைக்க மாட்டேன். உங்களுக்கு இந்தச் சின்ன உதவி கூட செய்லேன்னா எப்படி?”

 

  • தயங்கி நின்றாள். அவன் தோள் தழுவி பைக்கில் பின்னால் உட்காரும் எண்ணம் கிளுகிளுப்பாக இருந்தது. ஆனால் ‘வேண்டாம் இது அதிகம்’ என ஒன்று வந்து மறுத்தது. ஆண்களிடம் ஜாக்கிரதை என்று எச்சரித்தது. யார் உள்ளிருந்து எச்சரிக்கிறார்கள். அம்மாவா?

 

  • “வேணாம் வேணாம். இதோ இங்க இருக்கிற தேசாவுக்கு எதுக்கு பைக்? நான் வரேன் கணேசன்.” எழுந்து நடந்தாள்.

 

  • “நில்லுங்க அகிலா!” என்றான். நின்றாள்.

 

  • “என்னைக்காவது ஒரு நாள் நாம் ரெண்டு பேரும் போய் இந்த வெற்றியைக் கொண்டாடத்தான் வேணும். கொறைஞ்சது என்னோட வந்து ஒரு நாள் சாப்பிடுங்க!” என்றான்.

 

  • தயங்கி நின்று யோசித்தாள். “சரி! என்னோட தோழிகளக் கேட்டுச் சொல்றேன். அவங்களுக்கு எப்ப ஓய்வா இருக்கோ அப்ப போகலாம்!” என்றாள்.

 

  • “தோழிகளா? அவங்க எதுக்கு?” என்று கேட்டான்.

 

  • “நாம் ரெண்டு பேர் மட்டும் தனியாப் போறது நல்லா இருக்காது!” என்றாள்.

 

  • “ஏன்? உங்களுக்கு விருப்பமில்லையா?”

 

  • தயங்கினாள். விருப்பமில்லையா? விருப்பமாகத்தான் இருக்கிறது. ‘ஆம்’ என்றால் வற்புறுத்துவான். ‘இல்லை’ என்றால் முறித்தது போலாகிவிடும். “அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?” மாலையில் மாலதி கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது.

 

  • “இன்னொரு நாளைக்கு சொல்றேன் கணேசன்! வரட்டுமா? பை பை!” தொங்கிப் போயிருந்த அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு அப்புறம் திரும்பிப் பார்க்காமல் விரைவாக நடந்தாள்.

 

  • அவள் போகும் திக்கைப் பார்த்திருந்தான். அவள் ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்று ஒரு ஆசையுடன் காத்திருந்தான். அவள் திரும்பவில்லை. சாலையைக் கடந்து தேவான் சையட் புத்ரா ஓரமாகப் போன பாதையில் விறுவிறு வென்று நடந்தாள். ஒளிக்கம்பங்களின் கீழ் அவள் உருவம் தெரிவதும் இருளில் மறைவதுமாக இருந்தது.

 

  • கணேசன் அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். மனம் சோர்ந்திருந்தது. எத்தனை அழுத்தமாக நிராகரித்து விட்டாள். இது முதன் முறையல்ல. மாலையில் அவளுடைய தோழிகள் முன்னிலையில் கேட்ட போதும் நிராகரித்தாள். இரவில் இந்த அமைதியான சூழ்நிலையில் தனிமையில் கேட்ட போதும் நிராகரித்து விட்டாள். ‘ஜெசிக்காவைப் பற்றி ஏன் என்னிடம் பேசுகிறாய்?’ என்று கேட்டதன் மூலம் தனக்கு யார் காதலி யார் காதலி இல்லை என்பதில் அவளுக்கு அக்கறை இல்லை எனத் தெரிந்தது. ‘அவசரப் படாதே கொஞ்ச நேரம் பேசலாம்’ என்றால் மறுத்து விட்டாள். ‘பைக்கில் ஏறு கொண்டு விடுகிறேன்’ என்றால் மறுத்து விட்டாள். ‘இன்னொரு நாள் சாப்பிடப் போகலாமா?’ என்றால் மறுத்து விட்டாள். கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை. முற்றாக நிராகரித்து விட்டாள்.

 

  • தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. தான் அவளுக்குச் சிறிதும் பொருட்டல்ல என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய அழுகையையும் சிரிப்பையும் எவ்வளவு தப்பாக அர்த்தப் படுத்திக் கொண்டேன்! அவள் அழுதது இயல்பாக தங்கள் இருவருக்கும் நேர்ந்து விட்ட துன்பம் பற்றி! தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டி வருகிறதே என்ற பயம் பற்றி! அவள் சிரித்தது இந்தத் துன்பம் முடிந்ததே என்பதனால்.

 

  • இதிலே எனக்கென்று ஒன்றும் இல்லை. அழுகை எனக்காக அல்ல. சிரிப்பு எனக்காக அல்ல. எனக்கு என்று நானாக அர்த்தப் படுத்திக் கொண்டேன். நான் முட்டாள். வாழ்க்கையை, மனிதர்களை இன்னும் தெரிந்து கொள்ளாத மடையன்.

 

  • இதையெல்லாம் காதல் என்று எண்ணிக்கொண்டு ஒன்பது மணிக்கு இங்கு வந்து ஒரு மணிநேரம் இருட்டில் காத்திருந்து வீணாக்கிய இளிச்சவாயன். அவள் தன்னைச் சிறிதும் எண்ணியிருக்காத நிலையில் என்னை அவள் மீது திணிக்க முயன்றேன். அவள் என்னைத் தீண்டத் தகாதவன் போல இரக்கமில்லாமல் பிடித்துத் தள்ளிவிட்டாள். கீழே விழுந்து புழுதியைப் பூசிக் கொண்டேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் எத்தனை அவமானம்!

 

  • சீ! இனி எந்த நாளிலும் அவள் பக்கத்தில் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது. இந்த அவமானத்தை இனியொரு முறை சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த முறை பேசப் போனால் கன்னத்தில் அறைந்தாலும் அறைவாள்.

 

  • இந்தத் தமிழ்ப் பெண்களே இப்படித்தான். சகஜமாகப் பழகத் தெரியாது. இங்கிதமாகப் பேசத் தெரியாது.

 

  • இன்றைக்குக் காலையில் கிடைத்த வெற்றிகள் எல்லாம் அர்த்தமில்லாதவையாகத் தோன்றின. அவளுடைய நிராகரிப்பு என்னும் வெள்ளத்தில் அந்த வெற்றிகளெல்லாம் அடித்துக் கொண்டு போனது போல இருந்தது. மனசு ஏமாற்றத்தில் கனத்துக் கிடந்தது.

 

  • சோர்வுடன் எழுந்து தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

 

  ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27  எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17

17  புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9

9  கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் “தம் தம்” ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.