Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 14

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 14

14
 

  • அகிலா தன் புதிய அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

 

  • பிற்பகலில் அந்த கெமிலாங் விடுதி ஓ என்று கிடந்தது. முதல் பருவத்தின் மத்தியில் முதல் சோதனை விரைவில் வருவதால் மாணவர்கள் அனைவரும் விரிவுரையிலோ அல்லது நூல் நிலையத்திலோ இருந்தார்கள். அகிலாவுக்கும் அன்று பிற்பகலில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது. ஆனால் அவள் போகவில்லை. போக மனசு வரவில்லை.

 

  • விசாரணையும் அது முடிந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் அவளால் விடுபட முடியவில்லை. விடுதிக்குத் திரும்பும் வழியில் பொதுத் தொலைபேசியில் வீட்டுக்குப் போன் செய்து அப்பாவிடம் சுருக்கமாக முடிவைச் சொன்னாள். அவருக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. முடிவு எதிர்மறையாக இருந்தால் பல்கலைக் கழகத்திலிருந்து தான் விலகப் போவதாக அவள் முன்னமே எச்சரித்து குடும்பத்தில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தாள். “அப்படிச் செய்யதேம்மா, என் கனவையெல்லாம் பாழாக்காத!” என்று அப்பா கெஞ்சியதைப் பொறுக்க முடியாமல் “முடிவு எப்படின்னு பாப்போம் அப்பா!” என்று அவருடைய ஆறுதலுக்காகச் சொல்லி வைத்திருந்தாள்.

 

  • இப்போது முடிவு சரியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்க மனம்தான் சரியில்லை.

 

  • விடுதிக்கு வந்து கொஞ்ச நேரம் தலையணையில் முகம் புதைத்து அழுதாகிவிட்டது. அப்புறம் “இது என்ன பைத்தியக்காரத்தனம்? யாருக்கு விடுதலை கிடைத்தால் என்ன? யார் யார் அந்த விடுதலையை எப்படிக் கொண்டாடினால் நமக்கென்ன? படிக்க வந்த வேலையைப் பார்ப்போம்” என்ற எண்ணம் வந்தது.

 

  • முகம் கழுவிக் கொண்டு மேசைக்கு முன் உட்கார்ந்து சில புத்தகங்களிலிருந்து குறிப்பெடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் புத்தகங்களில் மனம் பதியவில்லை. புத்தகப் பக்கங்களின் விஷயத்தை மறந்து கண்கள் வெறித்துப் போய் மனம் பின்னோக்கி அன்று காலை நடந்தவற்றை நினைத்த பொழுது அவள் கண்கள் அவளை மீறி அழுதன.

 

  • அன்று காலையில் சாப்பிடவில்லை. மத்தியானமும் சாப்பிடப் போக மனம் வரவில்லை. எதுவும் ருசிக்கவில்லை. பசி இருந்தாலும் மரத்துப் போன உடலில் அது அதிகமாகத் தெரியவில்லை. மனம் ஜெசிக்காவையும் கணேசனையும் மாறி மாறி நினைத்தது. சின்னஞ்சிறு பள்ளிக்கூடப் பெண்ணாகத் தன் வயதுத் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குள் எப்படி இவர்கள் நுழைந்து புயல்களை எழுப்பினார்கள் என்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.

 

  • ஜெசிக்காவின் பனிப்போரையும் சிடுசிடுப்பையும் தாங்க முடியாமல் நேற்றுத்தான் இன்னொரு சீனத் தோழியுடன் பேசி உடன்பாடு செய்து கொண்டு விடுதித் தலைவருக்கு அறிவித்து விட்டு அறையை மாற்றிக் கொண்டிருந்தாள். புதிய அறைத் தோழியும் சீனப் பெண்தான். ஆனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாள்.

 

  • புதிய அறை பழைய அறையைப் போல வசதியாக இல்லை. இரவிலும் பகலிலும் ஒரே புழுக்கமாக இருந்தது. அறையிலிருந்த சீலிங் விசிறி சுழல்கையில் கரகரவென ஒரு பழைய டிராக்டரைப் போல சத்தம் போட்டது. சாலைக்குப் பக்கமாகவும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை ஒட்டியும் இருந்ததால் மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப்பட்டு சீறிப் பாயும் சத்தம் சகிக்கவில்லை. இந்த அறையிலிருந்த ஒரே நிம்மதி ஜெசிக்காவின் நச்சுப் பார்வை எந்நேரமும் தன் மேல் மேயவில்லை என்பதுதான்.

 

  • கணேசனின் விசாரணையில் ஏற்பட்ட எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அவள் உள்ளத்தை மகிழ்ச்சியின் முகடுக்குக் கொண்டு வந்திருந்தன. ஆனால் அதற்குப் பின் நடந்தவை அந்த முகடிலிருந்து அவளை ஏமாற்றப் பாதாளத்துக்குத் தள்ளிவிட்டிருந்தன.

 

  • தன் மேல் ஜெசிக்காவுக்கு ஏற்பட்டிருந்த இந்தக் காரணமற்ற வெறுப்பை அகிலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணைக்கு முன்னாலிருந்தே அகிலாவை விடாமல் குடைந்து கொண்டிருந்தாள். விசாரணை நெருங்க நெருங்கத் தன்னை ஒரு எதிரியாகவே பாவிக்கத் தொடங்கி விட்டாள்.

 

  • இரண்டு நாட்களுக்கு முன் வெளிப்படையாகவே சண்டையைத்

 

  • தாடங்கினாள். “கணேசனின் இந்த நிலைக்கு யார் காரணம் சொல்? நீதானே? நீதானே? அப்படியிருக்க அவரைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்? ஒரு அணுவாவது செய்கிறாயா? என்னைப் பார்! அவருக்கு ஆதரவு திரட்ட மாணவர் சங்கத்துக்கு தீர்மானம் போட்டிருக்கிறேன். கையெழுத்து வாங்கிச் சேகரித்து வருகிறேன். பெரித்தா கேம்பஸில் செய்தி எழுதியிருக்கிறேன். நீ என்ன செய்திருக்கிறாய், சொல்! நீ அவருடைய எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கியிருக்கிறாய்! அவ்வளவுதான்!”

 

  • கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்று அகிலாவின் தசைகளும் ரத்தமும் துடித்துக் கொண்டிருப்பதை அவளால் ஜெசிக்காவுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை. கணேசன் தண்டிக்கப் பட்டால் அந்தத் தண்டனையைத் தானே தனக்கு விதித்துக் கொள்வது என்ற அவளின் முடிவையும் அவள் ஜெசிக்காவுக்குச் சொல்லவில்லை. அதைச் சொன்னால் ஜெசிக்கா அலட்சியப் பபடுத்துவாள். “ஆமாம்! நீ ஒருத்தி தொலைந்து போவதால் அதில் கணேசனுக்கு என்ன நன்மை?” என்று கேட்பாள்.

 

  • “ஜெசிக்கா! நீ இந்தப் பல்கலைக் கழகத்தில் மூன்று வருடங்கள் இருந்து எல்லாரையும் தெரிந்து வைத்திருக்கிறாய். நான் இப்போதுதான் வந்திருக்கும் முதலாண்டு மாணவி! உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்? அவருக்காக வருத்தப் படுவது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும்!” என்று அமைதியாக பதில் சொன்னாள்.

 

  • “ஆமாம்! உன் வருத்தத்தால் என்ன ஆகப் போகிறது? கணேசனின் எதிர்காலம் தொலைந்தது! தொலைந்தது! எல்லாம் உன்னால்!” என்றாள்.

 

  • ஒரு ஆற்றாமை உணர்வும் தான் காரணமில்லாமல் ஜெசிக்காவினால் சித்திரவதை செய்யப்படும் உணர்வும் கூடி அகிலாவின் மனதில் கோபத்தை எழுப்பின. ஒரு நாயால் மூர்க்கமாக விரட்டப் படும் பூனைக்குட்டி ஒரு மூலையில் அகப்பட்டுக் கொள்ளும் போது எதிர்த்துச் சீறுவது போல அகிலா சீறினாள். “என்னை என்ன செய்யச் சொல்கிறாய் ஜெசிக்கா? யார் என்னைக் காப்பாற்றும்படி இந்த கணேசனைக் கேட்டார்கள்? எத்தனையோ மாணவர்கள் வேடிக்கை பார்த்து விட்டுப் போனது போல அவரும் போயிருக்கலாமே! அப்படிப் போயிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதல்லவா? நானா கூப்பிட்டேன்? அவராக வந்து இதில் மாட்டிக் கொண்டதற்கு நான் என்ன செய்யட்டும்?”

 

  • ஜெசிக்காவின் கண்களில் நெருப்புத் தணல்கள் எரிந்தன. “நன்றி கெட்ட மிருகமே! போ! என் அறையை விட்டுப் போ! என் கண் முன்னே நிற்காதே!” என்றாள்.

 

  • “இது உன் அறை இல்லை. எனக்குப் பல்கலைக் கழகம் முறைப்படி ஒதுக்கிய அறை. என்னைப் போகச் சொல்ல நீ யார்?” என்று திருப்பிக் கத்தினாள்.

 

  • ஜெசிக்கா கதவை ஓங்கி அறைந்து விட்டு எங்கோ போனாள். இந்த வெறி பிடித்த பெண்ணுடன் மேலும் காலம் கழிக்க முடியாது என்பது அகிலாவுக்குத் தெளிவாகிவிட்டது. அதன் பிறகுதான் ஜெசிக்காவுக்குத் தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் பேசி அறை மாற்றத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டாள்.

 

  • வியாழனன்று அறை மாற்றி வந்த போதும் இந்த அறையும் தனக்கு நீண்ட நாள் நீடிக்கப் போவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. நாளைக் காலை கணேசனுக்கு வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்து தானும் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. ஆகவே இங்கிருந்தும் விரைவில் மூட்டை கட்டும் நிலை வரலாம்.

 

  • ஜெசிக்காவுடன் தான் போட்ட சண்டைக்குப் பின் தனக்கும் கணேசன் மேல் அனுதாப உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதை அவளுக்குக் காட்டுவதற்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம் என நினைத்த போது அந்த முடிவு மேலும் இறுகியது.

 

  • கணேசன் மேல் அனுதாபமா? அனுதாபத்திற்காகவா இதைச் செய்கிறேன் என்று தன்னையே கேட்டுப் பார்த்தாள். மாணவர் கேன்டீனில் அன்று கணேசனும் ராகவனும் தனித்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட போது அவர்களுடன் போய்ப் பேச வேண்டும் என்று உந்தியதும் அனுதாபம்தானா?

 

  • மாலதியுடன் கேன்டீனில் பசியாறிக் கொண்டிருந்த போது கணேசனும் ராகவனும் வந்து உட்காருவதை அவள் கவனித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் அகிலாவைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் முகங்கள் செழிப்பில்லாமல் இருந்ததையும் அவர்கள் உரையாடலில் சிரிப்பில்லாமல் இருந்ததையும் அவள் கவனித்தாள்.

 

  • மாலதிக்கு விரிவுரை இருந்ததால் அவசரமாகப் பசியாறிவிட்டு அவள் புறப்பட்டுப் போய்விட்டாள். தனிமையில் உட்கார்ந்து தன் காப்பியை அருந்திக் கொண்டிருந்த அகிலா கொஞ்ச நேரம் அவர்களைக் கவனித்தவாறு இருந்தாள். கணேசனை அந்த சோகமான தருணத்தில் பார்த்த போது ஒரு பாசமும் நன்றி உணர்ச்சியும் சுரந்தன. “போ, போய்ப் பேசு” என்று அவளுடைய இளமை மனது சொல்லிற்று. “சீ! அந்நிய ஆண்களிடம் என்ன பேச்சு?” என்று அவளுடைய அம்மாவின் உருவத்தில் மரபு வழியான ஒரு மனது எச்சரிக்கையை விடுத்தது.

 

  • இவர் அந்நியரல்ல! எனக்குத் தெரிந்தவர். எனக்காக இந்த நிலைமைக்கு வந்தவர். அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதில் தவறில்லை. அது கடமையும் கூட. அவருக்காக நான் எடுத்துள்ள முடிவை நான் அவருக்கு அறிவிக்க வேண்டும். அது நன்றிக் கடன்!

 

  • எண்ணம் உறுதிப்பட்டதும் காப்பிக் கோப்பையை வைத்து விட்டு எழுந்து நடந்தாள்.

 

  • அவர்கள் இருவர் முன்னாலும் அமர்ந்து இத்தனை தைரியமாக, இத்தனை கோர்வையாகத் தன் முடிவைச் சொல்ல முடிந்தது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் பெற்றோர்களும் பள்ளிக்கூடமும் அமைத்துக் கொடுத்த கூட்டுக்குள்ளிருந்து ஒரு புழுவாக வாழ்ந்துவிட்டு இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தவுடன் தான் வெளிப்பட்டு ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகடித்துப் பறக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டாள். நெருக்கடியான நிலைமைகள் புதிய பயங்களைக் கொடுப்பதைப் போலவே புதிய தைரியங்களைக் கொடுக்கின்றன. புதிய பழகு முறைகளையும் கொடுக்கின்றன. தான் முற்றி வருவதாக அகிலா நினைத்துக் கொண்டாள்.

 

  • ஆனால் கணேசனின் அந்த அன்புப் பிடி…! அதை அவள் எதிர் பார்க்கவில்லை. அவர்களிடம் ஒரு நாலு வாக்கியங்களில் தன் முடிவைச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்விட வேண்டும் என்று எண்ணி வந்திருந்தவள் அவனுடைய பிடியில் சிக்கிக் கொண்டாள்.

 

  • அவன் அவள் கைகளைப் பிடிப்பது இது முதன் முறையல்ல. அன்றைக்கு ரேகிங் கும்பலிடமிருந்த காப்பாற்றிய போதும் கை பிடித்துத்தான் இழுத்து வந்தான். ஆனால் இன்றைய பிடியில் மின்சாரம் பாய்ந்தது. அன்பும் பாசமும் நன்றி உணர்ச்சியும் பாய்ந்தன. அதுதான் தான் இருப்பது மாணவர்கள் நிறைந்த கேன்டீன் என்பதையும் மறந்து அவள் கண்களில் கண்ணீரைப் பெருக வைத்தது.

 

  • அங்கிருந்து புறப்பட்டு தன்னறைக்குத் திரும்பிய போது அவளுடைய மனம் பிசைந்து போட்டது போல மசிந்து கிடந்தது. திரும்பத் திரும்ப கணேசனின் அன்பான பிடியை நினைத்தது. வேண்டாம் என்று தடுத்தும் கேட்கவில்லை. தன் கட்டுப்பாட்டையும் மீறி அந்தப் பிடிக்கு ஆயிரம் அர்த்தங்களை மனம் கற்பித்துக் கொண்டே இருந்தது. அன்பு, பாசம் என்ற உணர்வுகளையும் மீறி இது காதல் என்றும் மனம் கற்பித்துக் கொண்டது.

 

  • அகிலாவின் அறிவு இந்த மன உணர்வுகளை வலிந்து மறுத்தது. ஒரு கண நேரம் தான் சொல்லிய முடிவில் வியந்து போய் கணேசன் தன் கைகளைப் பற்றிக் கொண்டதற்கு இத்தனை தீவிரமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்ளாதே என அது எச்சரித்தது. அது ஒரு தானியங்கியான நடவடிக்கை. அது தசைகளின் இயக்கம். அதன் பின் உள்ள உணர்வு வியப்பாக இருக்கலாம்; நன்றியாக இருக்கலாம். அது காதலாக இருக்க வேண்டியதென்பது அவசியம் இல்லை. இதைப் பெரிது படுத்தாதே, இதை விரிவு படுத்தாதே என்ற எச்சரிக்கைகள் அவள் தலைக்குள் கிசுகிசுத்தன.

 

  • அதனால் அடுத்த சில நாட்களில் கணேசனைச் சந்திப்பதை அவள் தவிர்த்து வந்தாள். ஓரிரு சந்தர்ப்பங்களில் அவனை நூல் நிலையத்திலும் கேண்டீனிலும் தூரத்தில் பார்த்த போது அங்கிருந்து அவன் கண்ணில் படாமல் அகன்றாள். சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு தன் மனதில் அரும்புகின்ற உணர்வுகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர்த்தாள்.

 

  • அவனை அடுத்து சந்திக்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக விசாரணை நடைபெறும் நாளான வரும் வெள்ளிக் கிழமைதான். வெள்ளிக் கிழமை வெள்ளென மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டிடத்திற்குப் போக வேண்டும். ஆனால் ஜெசிக்கா கண்டிப்பாக அங்கிருப்பாள். அவள் நச்சுப் பார்வையைச் சந்திக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை. அந்தப் பிசாசின் அறையிலிருந்து விடுதலை பெற்றாகிவிட்டது. இனி அவளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவள் பார்வைக்கு அஞ்சத் தேவையில்லை.

 

  • கணேசனைப் பார்த்து விசாரணையில் என்ன நடந்தாலும் அஞ்ச வேண்டாம் என்று உறுதி கூற வேண்டும். தன் முடிவை மறு உறுதிப் படுத்தி அவனுக்கு ஊக்கமூட்ட வேண்டும். விழவேண்டி நேர்ந்தால் இருவருமே தோழமையுடன் வீழ்வோம் என ஆதரவூட்ட வேண்டும். அவன் கைகளை ஒரு நண்பனின் கைகளாகக் குலுக்கி விசாரணையில் வெற்றி பெற வாழ்த்துக் கூற வேண்டும். விசாரணை முடியும் வரையில் அங்கேயே காத்திருக்க வேண்டும். விசாரணை முடிவை அவன் வாயாலேயே கேட்டுத் தெரிந்து கொண்டபின் தன்னுடைய அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

 

  • ஆனால் வியாழனன்று அறையை மாற்றிக் கொண்டிருந்த இக்கட்டான வேளையில் அவளுடைய விடுதியின் அலுவலர் ஒருவர் அவளைத் தேடி வந்து அவசரக் கடிதம் ஒன்றைக் கொடுத்து அதை சமர்ப்பித்துவிட்டதற்கான கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு சென்றார். அந்தக் கடிதம் மாணவர் விவகாரப் பிரிவிலிருந்து வந்திருந்தது. மறுநாள் காலையில் 8 மணிக்கு நடைபெறவிருக்கும் சிறப்பு விசாரணைக் கூட்டத்தில் அகிலா கலந்து கொள்ள வேண்டுமென்று உதவிப் பதிவதிகாரி முத்துராமன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம்.

 

  • அவளுக்குப் புரியவில்லை. ஒன்பது மணிக்கு நடைபெறவிருந்த விசாரணையை எட்டு மணிக்கெல்லாம் நடத்துகிறார்களா? அப்படியிருந்தாலும் தான் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லையே! இப்போது ஏன் தன்னை அவசரமாகக் கடைசி நேரத்தில் அழைத்திருக்கிறார்கள்?

 

  • எப்படியிருந்தாலும் எந்த விதத்திலாவது கணேசனுக்கு உதவ முடிந்தால் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டாள். ஒரு வேளை கணேசனுக்குத் தரப்படும் தண்டனையைத் தானும் தனக்கு விதித்துக் கொள்ளும் முடிவை விசாரணைக் குழுவில் முறையாக அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள். கணேசனைத் தேடிப் போய் இது பற்றிப் பேசலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். வேண்டாம் என்று தடையும் விதித்துக் கொண்டாள். கணேசனோடு இனி சந்திப்புக்கள் வேண்டாம். நாளை நடப்பது போல நடக்கட்டும் என உறுதி செய்து கொண்டாள்.

 

  • மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அவள் மாணவர் விகாரப் பிரிவின் முன் நின்ற போது அவள் எதிர் பார்த்தது போல கணேசனை அங்கே காணோம். எதிர்வாதிகளான ராஜன், வின்சன்ட் ஆகியோர்களைக் கூடக் காணோம். ஆனால் பரசுராமன் அங்கிருந்தான். அகிலாவைப் பார்த்ததும் புன்னகை புரிய முயன்றான். அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

  • கூட்டம் எட்டு மணிக்குச் சரியாகத் தொடங்கியது. டத்தோ சலீம் அனைவருக்கும் நன்றி கூறி இந்தச் சிறப்பு அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததன் நோக்கங்களை விளக்கினார். விசாரணைக் குழுவின் கவனத்துக்கு வந்துள்ள புதிய தகவல்களைத் தான் உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் அவர்களை வரவழைத்திருப்பதை விவரித்து அந்தப் புதிய தகவல்கள் என்ன என்று சொல்லிய போது அவள் இதயத்தில் பால் பொழிந்தது. தன்னுடைய முறை வந்த போது மீண்டும் ஒருமுறை அன்று நடந்தவற்றை நினைவு படுத்தித் தெளிவாகக் கூறினாள். பரசுராமனின் முறை வந்த போது அவள் சொன்ன அனைத்தையும் அவனும் உறுதிப் படுத்தினான்.

 

  • அவளுடைய பயங்கள் ஒவ்வொன்றாக அகன்றன. நீதியை நிலை நாட்டுவதற்காக நடவடிக்கைகளை முயன்று எடுத்துள்ள பேராசிரியர் முருகேசுவை அவள் நன்றியுடன் நோக்கினாள். கடைசி நேரத்தில் உண்மையைச் சொல்லி அனைவரையும் காப்பாற்றியுள்ள – இதுவரை தான் வெறுத்து வந்துள்ள – பரசுராமன் மீது கூட அன்பு சுரந்தது. சாட்சி சொல்ல வந்துள்ள சீன மாணவர், உடன் சாட்சிக்கு வந்துள்ள விடுதித் தலைவர்கள் அனைவர் மீதும் நன்றியுணர்ச்சி பெருகியது. இந்த நல்லவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மோசமான அநீதி இழைக்கப் படுவதைத் தடுத்துள்ளார்கள். இது நல்ல இடம். இது நல்ல பல்கலைக் கழகம். இதில் வந்து படிக்க நான் கொடுத்து வைத்தவள் என நினைத்துக் கொண்டாள்.

 

  • இவையனைத்தும் கணேசனுக்குத் தெரியுமா? விசாரணையின் போக்கைப் பார்த்தால் அவனுக்கு இதுபற்றி இன்னும் சொல்லப்படவில்லை என்றுதான் தெரிந்தது. இனி ஒன்பது மணிக்கு அவன் அழைக்கப்பட்டு இந்த உண்மைகள் அவனுக்குச் சொல்லப்பட்டு அவனுடைய நேர்மை நிலைநாட்டப் படும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.

 

  • அது நிகழ்ந்தது. உண்மைகள் வெளிப்படும் வேளையில் கணேசனுடைய கண்கள் பலமுறை அகிலாவின் கண்களைச் சந்தித்தன. “நம் துன்பங்கள் களையப்பட்டு விட்டன அகிலா! நம் தளைகள் அறுபட்டுவிட்டன!” என அவன் கண்களால் அனுப்பிய செய்திக்கு அவள் நன்றிச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

 

  • “கணேசன் எல்லாக் குற்றங்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுகிறார். ராஜன், வின்சன்ட், பரசுராமன் ஆகியோரின் குற்றம் நிருபிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நான் கல்வி அமைச்சிடம் கலந்து பேச வேண்டும். அதன் பின் விசாரணைக் குழு நாளைக்குக் கூடி தண்டனையை நிர்ணயிக்கும். இந்தக் கூட்டம் இதனுடன் முடிகிறது. நீங்கள் அனைவரும் போகலாம்” என டத்தோ சலீம் கூறியவுடன் அனைவரும் எழுந்தனர். ராஜனும் வின்சன்டும் மற்றவர்களிடம் பேச விருப்பமில்லாமல் அவசரமாக வெளியே போனார்கள். மற்றவர்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் டத்தோ சலீம் கணேசனுடன் கைகுலுக்கினார். “உனக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். உண்மை வெளிப்பட்டதில் மிக மகிழ்கிறேன்!” என்றார்.

 

  • அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கணேசன் பேராசிரியர் முருகேசுவிடம் விரைந்து வந்தான். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை!” என்றான்.

 

  • அவர் அவன் தோள்களைப் பற்றினார். “உண்மை தோற்காது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அதுதான் வெல்லும்! வாழ்த்துக்கள்” என்றார். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. “போ கணேசன்! விரிவுரைகளை ஒரு நாளைக்கு மறந்து விட்டுப் போய் உன் வெற்றியைக் கொண்டாடு!” என்றார்.

 

  • அகிலா காத்திருந்தாள். பேராசிரியரின் பிடியிலிருந்து விடுபட்டு நேராக அவளை நோக்கி வந்தான். அவள் இரண்டு கைகளையும் மீண்டும் பிடித்துக் கொண்டான். “அகிலா! வாங்க நம்ம ரெண்டு பேரும் தனியா போய் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்!”

 

  • அவளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவள் முகம் சிரித்துச் சிவந்திருந்தது. அவனுடன் போகத் தயாராகத் தலையாட்டினாள்.

 

  • இதற்குள் செய்தி வெளியில் பரவிவிட்டிருந்தது. விசாரணை அறைக் கதவைத் திறந்து கொண்டு ஜெசிக்காவின் தலைமையில் கணேசனின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் நுழைந்தார்கள். ஜெசிக்கா புயல்போல் ஓடிவந்து கணேசனை அப்படியே அணைத்துக் கொண்டாள். “கணேசன்! ஹிபிப் ஹ¤ரே!” என்று யாரோ கத்தினார்கள். தொடர்ந்து அனைவரும் முழங்கினார்கள். இரண்டு பேர் கணேசனைத் தூக்கினார்கள். “ஹிபிப் ஹ¤ரே” முழங்கியவாறு அவனை வெளியே தூக்கிச் சென்றார்கள். அந்த ஆரவாரத்தில் அகிலா பின் தள்ளப் பட்டாள்.

 

  • மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப் பட்டன. ஏறக்குறைய பத்து மோட்டார் சைக்கிள்களில் முடிந்தவர்கள் எல்லாம் ஏறிக் கொண்டார்கள். “ஹிபிப் ஹ¤ரே” சத்தத்தில் இன்னும் பலரும் கலந்து கொண்டார்கள். ஓரத்தில் முகம் தொங்கி நின்று கொண்டிருந்த ராஜாவையும் அவனுடைய கேங்கையும் கண்டபோது சத்தம் இன்னும் உச்ச கட்டத்தை அடைந்தது.

 

  • பாதுகாவலர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைவர் ரித்வானும் நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் கொண்டாட்டத்திற்கான காரணத்தை அவர் அங்கீகரிப்பவர் போலத் தோன்றினார்.

 

  • பரசுராமனும் ஒரு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாவின் கூட்டம் அவனைக் கைகழுவி விட்டது. கணேசனின் வெற்றி ஊர்வலத்துக்கு அவனை யாரும் கூப்பிடவில்லை.

 

  • மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ஆரம்பமாகியிருந்தது. ஹாரன்கள் அலறின. ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிள்தான் முதன்மை வகித்துச் சென்றது. அவள் பின்னிருக்கையில் உட்கார்ந்து கணேசன் அனைவருக்கும் கையசைத்துக் கொண்டிருந்தான். “ஹிபிப் ஹ¤ரே!” என்ற எழுச்சி மந்திரத்துடன் பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிவர ஊர்வலம் விரைந்தது.

 

  • அகிலா கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்தாள். ஊர்வலம் கண்களை விட்டு மறைந்ததும் மாணவர் விவகாரப் பிரிவு கட்டிட முன் வாசலில் நின்றவாறு மரங்களினூடே தெரியும் கடலை வெறித்துப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பியது.

 

  • துடைத்துக் கொண்டு தன் விடுதியில் தன் புதிய அறையை நோக்கி நடந்தாள். அறையை அடைந்ததும் அந்தப் புழுங்கும் மத்தியான வேளையில் படுக்கையில் தலையணையில் முகம் புதைத்து தன் விருப்பம் போல் அழுதாள்.

 

  • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

13  நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27  எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25

25  “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.   கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட