Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11

11
 

    • பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன. சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தது. மரங்கள் ஈரந் தோய்ந்திருந்தன. புதராக மண்டியிருந்த செம்பருத்திச் செடிகளின் பூக்களில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய மோட்டார் சைக்கிள் நனைந்திருந்தது. இருக்கைகளில் ஈர இலைகளும் பொடிப்பொடியான பூக்களும் கொட்டிக் கிடந்தன.

 

    • துணி எடுத்து ஈரத்தையெல்லாம் துடைத்து விட்டு, ராகவனையும் அழைத்துக்கொள்ள அவர் தங்கியிருந்த தேசா கெம்பாரா விடுதிக்குக் கிளம்பிய போது மணி ஏழேமுக்கால் ஆகிவிட்டது. கெம்பாரா விடுதியை நெருங்கியபோது வளாகத்தின் தென்பகுதியில் இருந்த காம்பியர் குன்றுகளைப் பார்த்தான். அந்தக் குன்றின் சாரல்களிலிருந்து நீராவி மூட்டம் வானை நோக்கி புஸ்ஸென்று பொங்கிக் கொண்டிருந்தது. காற்றில் பறக்கும் ஒரு வெண் துகிலை அந்தப் பச்சைக் குன்றுகள் போர்த்திக் கொண்டிருந்தது போல இருந்தது. நேற்று அகிலாவை வெள்ளை உடையில் பார்த்த நினைவு மனசை இலேசாக உராய்ந்து மறைந்தது.

 

    • கெம்பாரா விடுதியின் கீழ் ராகவனுக்காகக் காத்திருந்தான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். எட்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. விடுதியிலிருந்து மாணவர்கள் காலை உணவை முடித்துவிட்டு சாரைசாரையாக விரிவுரை அறைகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.

 

    • பேராசிரியரைப் பார்க்கத் தாமதமாகிவிடுமோ என்ற கவலை வந்தது. அவர் நேரங் காப்பதில் மிகவும் கண்டிப்பானவர் என்பது அவருடைய மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். விரிவுரை மண்டபத்தில் விரிவுரை தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னால் தயாராக இருப்பார். சரியான நேரத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தாலும் கூடத் தொடங்கி விடுவார்.

 

    • ராகவன் ஒரு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். “குட் மோர்னிங், கணேசன். லேட்டாயிடுச்சா? இல்ல, சரியா எட்டு மணிக்குப் போயிடலாம்” என்று கூறியவாறு அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்தார். கணேசனின் மோட்டார் சைக்கிள் மனிதவியல் கட்டடத்தை நோக்கிச் சீறி விரைந்த போது வளாகத்தின் குளிர் காற்று அவர்கள் முகங்களில் வீசிச் சட்டைக்குள் ஊடுருவி மார்பில் சிலிர்த்தது.

 

    • கணேசனின் மனம் பேராசிரியர் தரப் போகும் தகவலை எண்ணிப் படபடத்தது.

 

    • *** *** ***

 

    • பேராசிரியர் அவர்களுக்காகத் தயாராகக் காத்திருந்தார். அவர்களை வரவேற்று உட்கார வைத்ததுடன் “இதைப் பார்த்திங்களா ரெண்டு பேரும்…?” என்று ஒரு பத்திரிகையைத் தூக்கி அவர்கள் முன் போட்டார். அது அந்த வாரத்திய “பெரித்தா கேம்பஸ்” என்ற மாணவர் வார இதழ். அன்று காலையில்தான் விநியோகிக்கப் பட்டிருந்தது. கணேசனோ அல்லது ராகவனோ பார்க்கும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. “மூணாம் பக்கம் பாருங்க” என்று சொன்னார்.

 

    • கணேசன் பத்திரிகையை அவசரமாகப் பிரித்து மூன்றாம் பக்கம் பார்த்தான். “மாணவர்களிடையே ரேகிங்: பல்கலைக் கழகம் நேர்மையாக நடக்கிறதா?” என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியை எழுதிய நிருபர் ஜெசிக்கா ஓங் என்று பெயர் போட்டிருந்தது.

 

    • ஜெசிக்கா வளாகத்தில் ரேகிங் நடப்பதைக் கண்டித்து எழுதியிருந்தாள். அதைத் தடுக்க முடியாத பல்கலைக் கழகப் பாதுகாப்புத் துறையின் கையாலாகாத் தனத்தைச் சாடி எழுதியிருந்தாள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கையில் அகப்பட்ட அப்பாவிகளை பல்கலைக் கழகம் தண்டிக்க முயலுவதாக ஜெசிக்கா தனக்கு வேண்டிய மாணவர்களிடம் பேட்டி கண்டு படத்துடன் போட்டிருந்தாள். பல்கலைக் கழக வளாகத்துக்குள் வெளியிலுள்ள குண்டர் கும்பல்களின் உறுப்பினர்கள் நுழைந்திருப்பதாகவும் அதைப் பாதுகாப்புத் துறை மூடி மறைக்க முயலுவதாகவும் எழுதியிருந்தாள். செய்தியில் “ஒரு மாணவர் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்” எனப் பெயர் குறிப்பிடாமல் போட்டிருந்தது. அகிலாவின் ரேகிங் நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டிருந்தாலும் அகிலாவின் பெயர் குறிப்பிடப் படவில்லை. “காராட் கேங்” என ஒரு ரகசியக் கும்பல் இந்திய மாணவர்களிடையே இயங்கி வருவதும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் யார் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இந்த ரேகிங் பிரச்சினை பற்றி மாணவர் விவகார உதவித் துணை வேந்தர் டத்தோ சலீமிடம் “பெரித்தா கேம்பஸ்” கருத்துப் பெற இயலவில்லை என்று போட்டிருந்தது.

 

    • ஜெசிக்கா நாளைக்கு நடக்கும் என்று சொன்ன அதிசயம் இதுதான் என கணேசன் புரிந்து கொண்டான். இதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என அவனுக்குப் புரியவில்லை. படித்து முடித்ததும் பேராசிரியரைப் பரிதாபமாகத் தலை நிமிர்ந்து பார்த்தான்.

 

    • “இந்த செய்தி வரப் போறது உனக்கு முதலிலேயே தெரியுமா கணேசன்?” என்று கேட்டார். அவர் குரலில் கொஞ்சம் கோபமும் கவலையும் இருந்தது.

 

    • “சத்தியமாகத் தெரியாது சார். நேற்று இரவு கூட ஜெசிக்காவோடு பேசிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு அதிசயம் நடக்கப் போகுதுன்னு மர்மமாகச் சொன்னாங்க. ஆனால் இதுதான் அது என்று சொல்லவே இல்லை!” என்றான்.

 

    • “நான் டத்தோ சலீமோட நேற்று நீண்ட நேரம் பேசினேன் கணேசன்!” என்று சொல்லி நிறுத்தினார். இருவரும் ஒன்றும் சொல்லாமல் அவர் வாய் பார்த்துக் காத்திருந்தார்கள். “அவர் என்னுடைய கருத்தை முழுசாக் கேட்டுக் கொண்டாலும் வழக்கு விசாரணைன்னு வந்திட்டதினால இதைக் கடைசி வரை பல்கலைக் கழக நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தித்தான் ஆகணும்னு சொல்லிட்டார். யாருடைய வாதத்துக்கு சரியான சாட்சியங்கள் இருக்கு அப்படிங்கிறதையும் பாக்கணும்னு சொல்லிட்டாரு. உன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு வர்ர வெள்ளிக்கிழமை விசாரணையில நீ என்ன நிருபணங்களைக் கொண்டு வர்ரங்கிறதப் பொறுத்துத்தான் தீர்ப்பு இருக்கும்னு உறுதியா சொல்லிட்டாரு!”

 

    • கணேசனுக்கு மனதில் கல் விழுந்தது போல இருந்தது. மேக மூட்டமான அந்தக் காலையில் பேராசிரியரின் அறை இன்னும் கொஞ்சம் இருண்டு விட்டது போல இருந்தது. குனிந்தவாறு ராகவனைப் பார்த்தான். அவர் முகமும் இறுகித்தான் இருந்தது.

 

    • “ஆனால் டத்தோ சலீம் ஒன்று சொன்னார். நீ குற்றம் செய்தியோ இல்லியோ, விஷயத்தை முத்த விடாம குற்றத்தை ஒப்புக் கொண்டு பல்கலைக் கழகம் உட்பட எல்லாத் தரப்புக் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கொண்டால், நீ கடந்த காலத்தில குற்றங்கள் இல்லாத நல்ல மாணவனா இருந்திருப்பதை கருத்தில் வச்சி, குறைந்த பட்சத் தண்டனை தரலாம்கிறார். என்ன சொல்ற?”

 

    • கணேசன் அதிர்ச்சியடைந்தான். என்ன சொல்கிறார்? குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடு என்கிறாரா? நான் செய்யாத குற்றத்தை “நான்தான் செய்தேன்” என ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரச் சொல்கிறாரா? அவனுடைய இதயத்தின் ரத்தத்துளிகள் எல்லாம் அந்த எண்ணத்தை மறுத்தன!

 

    • “சார். நான் குற்றமற்றவன். இந்த அநியாயமான குற்றச் சாட்டால இந்தப் பல்கலைக் கழகம் என்னை வெளியேத்தினாலும் சரிதான். நான் செய்யாத குற்றத்தை செய்தேன்னு சொல்லி ஒருநாளும் என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள மாட்டேன்!” என்றான்.

 

    • “அவசரப்படாம அமைதியா யோசிச்சுப் பாருப்பா கணேசன். நீ உன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சி பண்ணி அது முடியாமப் போனா உன் எதிர்காலமே பாழாப் போயிடும். அதிக பட்ச தண்டனைங்கிறது பல்கலைக் கழகத்த விட்டே நீக்கிறதாக இருக்கலாம். அப்புறம் எந்த உள்நாட்டுப் பல்கலைக் கழகத்திலும் உன்னைச் சேத்துக்க மாட்டாங்க! குறைந்த பட்சத் தண்டனை ஒரு பருவம் அல்லது ஒரு வருஷம் தள்ளி வைக்கிறதா இருக்கலாம். அதுவும் கடுமையானதுதான். அதினால விட்டுக் கொடுத்து எதிர்காலத்தக் காப்பாத்திக்கிறது விவேகமில்லையா?”

 

    • ஒரு நிமிடம் யோசித்தான். பின் தலை தூக்கிச் சொன்னான். “இல்லைங்க சார்! அது விவேகமாக எனக்குத் தெரியில. என்னை வேணுன்னா நான் காப்பாத்திக்கலாம்! ஆனா இந்த காராட் கேங் பையன்களுடைய கேலியிலும் அவமதிப்பிலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்னால காலந்தள்ள முடியாது. அதே போல என்னோட சேர்ந்த மற்ற நண்பர்களும் அவர்களுடைய கீழ்த்தரமான கேலிக்கு இலக்காகிறத நான் பாத்திக்கிட்டு இருக்க முடியாது. என்னுடைய தன்மானத்த விட்டுக் கொடுக்காம உண்மையக் கடைசி வர சொல்லி அந்த உண்மை எடுபடாமப் போனா இந்தப் பல்கலைக் கழகத்தவிட்டு நான் வெளியேர்ரதுதான் சரியான வழி!”

 

    • அவன் கைககள் வெடவெடவென்று ஆடின. கண்களில் நீர் தளும்பித் தளும்பி மறைந்தது.

 

    • கொஞ்ச நேரம் அறையில் அமைதி நிலவியது. பின் பேராசிரியர் பேசினார். “இந்தப் பத்திரிகைச் செய்தி நிலைமையை இன்னும் மோசமாக்கிட்ட மாதிரிதான் தெரியுது. விடியற் காலையில பாதுகாப்புத் துறைத் தலைவர் எனக்கு வீட்டுக்கு போன் செய்தாரு. இந்தப் பத்திரிகைச் செய்தியை நீயும் ஜெசிக்காவும் சேர்ந்துதான் ஏற்பாடு செய்திருக்கனும்னு சொன்னாரு. தன்னுடைய பொறுப்புக்களை நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும் அவமதிச்சிட்டதா கருதுறாரு. ஆகவே விசாரணையில உனக்கு அதிக பட்சத் தண்டனை தரணும்னுதான் அவர் பரிந்துரைப்பார்னு நெனைக்கிறேன். டத்தோ சலீமின் பேரும் இதில இழுக்கப் பட்டிருக்கிறதினால அவருக்கு உன் பேரில் இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் இப்ப இருக்கா இல்லையான்னு சொல்ல முடியாது. ஆகவே நீ இன்னமும் கொஞ்சம் ஆழமாக யோசி! எனக்கு நீ இப்ப பதில் சொல்ல வேண்டாம். விசாரணையின் போது உனக்கு எது சரின்னு படுதோ அப்படி பதில் சொல்லலாம்!” என்றார்.

 

    • பேராசிரியரின் பேச்சில் ஒரு நம்பிக்கை இன்மையும் சோர்வும் இருப்பது தெரிந்தது. அவரும் இதில் தோற்றுவிட்டவர் போல்தான் பேசினார்.

 

    • ராகவனும் கணேசனும் எழுந்து வணக்கம் சொல்லி கதவு நோக்கி வந்தார்கள். திடீரென்று பேராசிரியர் பேசினார்: “கணேசன், நான் இப்படி சொல்றதினால உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னு அர்த்தமில்லை. நீ சொல்றதுதான் உண்மைன்னு எனக்கு நிச்சயமா தெரியுது. ஆகவே நீ நிரபராதின்னு நான் உளப்பூர்வமா நம்புறத டத்தோ சலீமிடம் உறுதியா சொல்லத் தயங்க மாட்டேன். ஆனா சந்தர்ப்பங்கள் நமக்கு சாதகமா இல்லைங்கிறத நாம் மறந்தடக் கூடாது!” என்றார்.

 

    • “சரிங்க சார்! எனக்குப் புரியிது. உங்கள் நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி!” என்று சொல்லி கதவைச் சாத்தி ராகவன் பின் தொடர வெளியே வந்தான் கணேசன்.

 

    • மனிதவியல் கட்டடத்திற்கு வெளியே வந்து மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்த போது வானம் தொடர்ந்து மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. எப்போதும் பளிச்சென்றிருக்கும் பல்கலைக் கழக வளாகம் கொஞ்சம் இருண்டே இருந்தது. உண்மையிலேயே அப்படி இருக்கிறதா, தன் மனம்தான் தன்னை வெளியில் பிரதிபலித்துக் காட்டுகிறதா என கணேசன் யோசித்தான்.

 

    • “என்ன இன்னைக்கு இந்த மழை மறுபடியும் வரும் போல இருக்கே! வானம் இருட்டிக்கிட்டே இருக்கு கணேசன்!” என நிலைமையை உறுதிப்படுத்தினார் ராகவன்.

 

    • தொடர்ந்து சொன்னார்: “சரி கணேசன். இப்ப மணி ஒன்பதாகுது. எனக்கு பத்து மணிக்குத்தான் அடுத்த லெக்சர்! உனக்கு எப்படி?” என்று கேட்டார்.

 

    • “பதினொரு மணிக்குத்தான்! டுயுட்டோரியல்”

 

    • “அப்ப மாணவர் இல்லக் கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போவோமே! காலையில நீ கூட பசியாறியிருக்க மாட்டியே!” என்றார்.

 

    • “ஆமாம் ராகவண்ண. நானும் இன்னும் பசியாறலதான்! வாங்க போவோம்!”

 

    • மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து மாணவர் இல்லத்தின் கேன்டீனை நோக்கிப் போனார்கள்.

 

    • *** *** ***

 

    • கணேசனின் கண்கள் ஒரு காரணமுமின்றி அலைந்தன. அவர்களைச் சுற்றி ஏராளமான மலாய், சீன, இந்திய மாணவர்கள் கலகலவென்ற பேச்சுடன் விரிவுரைக்குப் போகும் அவசரத்துடன் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வண்ண வண்ணமாக துடோங் அணிந்த மலாய் மாணவிகள் கூட்டங் கூட்டமாக உட்கார்ந்து மலாய் உணவுகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். சீன மாணவ மாணவிகள் பெரும்பாலும் ஜீன்சில் இருந்தார்கள். சில பஞ்சாபி ஆடைகளும் மேற்கத்திய ஸ்கர்ட்டுகளும் தெரிந்தன. எங்கும் புத்தகங்களும் கோப்புகளும் பைகளுமாக சாப்பாட்டு மேசைகள் நிரம்பி வழிந்தன. மொத்தமாக மாணவர்களை விட இரண்டு மடங்கு அதிகமான மாணவிகள் அங்கு இருந்தார்கள். பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் இப்போது மாணவர்களை விட மாணவிகள் தொகையே அதிகமாக இருந்தது.

 

    • இரண்டு நாசி லெமாக் பொட்டலங்கள், இரண்டு தேநீருடன் அவர்களுடைய பசியாறல் மிக மெதுவாக மிக அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் கலகலப்பான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் அந்த உற்சாகங்களுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் போல சோகத் தீவாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவன் ஏதோ சொல்ல நினைப்பவர் போல கணேசனின் முகத்தைப் பார்த்துப் பார்த்துத் தயங்கினார். தன்னுடைய விழிகளில் இருந்த வெறுமையும் விரக்தியும் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும் என கணேசன் எண்ணிக் கொண்டான். கணேசனுக்கு எதைப் பற்றியும் பேசுகின்ற உற்சாகம் இல்லாமல் இருந்தது.

 

    • ராகவன் கொஞ்ச நேரம் காத்திருந்து அப்புறம் கொஞ்சம் கனைத்துச் சொன்னார்: “கணேசன், பேராசிரியர் சொன்னதை நான் திரும்பத் திரும்ப நெனைச்சிப் பாக்கிறேன். மறக்க முடியில!” என்றார்.

 

    • “எதைச் சொல்றிங்க ராகவன் அண்ண?” என்று கேட்டான் கணேசன்.

 

    • “அதான், அந்த மன்னிப்புக் கேக்கிறதப் பத்தி….!”

 

    • கணேசன் அமைதியாக இருந்தான். அவர் தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டுப் பேசினார்: “உனக்கு ரொம்ப மூத்தவன் அப்படிங்கிற முறையில உனக்குப் புத்தி சொல்ல உரிமை உண்டுன்னு நெனச்சித்தான் சொல்றேன் கணேசன். நீ குற்றம் செய்யிலங்கிறது உண்மை. ஆனா ஒரு பொறியில அகப்பட்ட எலி மாதிரி இப்ப நீ மாட்டிக்கிட்டு இருக்கிற. அந்தப் பொறியிலிருந்து விடுபட பேராசிரியர் ஒரு வழி காட்டியிருக்காரு.”

 

    • கணேசன் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். “செய்யாத குத்தத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்றிங்களாண்ண?”

 

    • “ஆமாம் கணேசன்! வேற வழி?”

 

    • “எல்லார் முன்னிலையிலும் அவமானப்படச் சொல்றிங்களா?”

 

    • “இந்த மன்னிப்பு விஷயத்த விசாரணைக் கமிட்டி வெளிய தெரியாம ஆர்ப்பாட்டம் பண்ணாம முடிச்சிரும்னுதான் நெனைக்கிறேன்!”

 

    • “விசாரணைக் கமிட்டி அமைதியா முடிச்சிடலாம். ராஜாவும் காராட் கேங்கும் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சி கைகொட்டிச் சிரிக்க மாட்டாங்களா? என்ன மட்டுமா பாத்துச் சிரிப்பாங்க? நீங்க உட்பட என் நண்பர்கள், காராட் கேங்குக்கு எதிரா உள்ள அத்தனை பேரையும் பார்த்துச் சிரிப்பாங்களே!” சொல்லும்போது அவன் கண்களில் கொஞ்சம் நீர் ததும்பியது.

 

    • “கணேசன், எங்களப் பத்தி நீ கவலப்படாத. நிலைமைய எப்படி சமாளிச்சிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்தச் சில்லறைச் சிரிப்புகளைக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பொறுத்துப் போயிட்டா எல்லாம் சரியாப் போயிடும். உன்னப்பத்தி சிந்திச்சிப் பாரு! படிப்பையும் எதிர்காலத்தையும் வீணாக்காத! கொஞ்சம் மனசக் கல்லாக்கிக்கிட்டு மன்னிப்புக் கேட்டுக்க! கொஞ்ச நாள் தலை குனிஞ்சி நடந்தா என்ன? எல்லாம் காலத்தால ஆறக்கூடிய புண்கள்தான்! யோசிச்சுப் பாரு!” என்றார்.

 

    • கணேசன் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து தரையைப் பார்த்திருந்தான். மீண்டும் அவனுடைய ஒவ்வொரு ரத்தத் துளியும் இந்தத் தீர்வை ஏற்காதே என்று அவனுக்குள்ளிருந்து கொதித்தது.

 

    • பின்னாலிருந்து தயக்கம் பயம் சோகம் கலந்த பெண்குரல் ஒன்று “கணேசன்” என அழைத்தது. இரண்டு நண்பர்களும் தலை தூக்கிப் பார்த்தார்கள். அகிலா புத்தகப் பையை நெஞ்சோடு அணைத்தவாறு அவர்கள் மேஜைக்குப் பின்னே நின்றிருந்தாள்.

 

    • இரண்டு பேருக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் ராகவன்தான் சமாளித்துக் கொண்டு சொன்னார். “அகிலா! வாங்க!” என்றார்.

 

    • அகிலா கணேசனைப் பார்த்தாள். “கணேசன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” என்றாள்.

 

    • “உட்காரு அகிலா!” என்றான் கணேசன். அகிலா ராகவனுக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.

 

    • அவர்கள் தனியாகப் பேச விரும்புவதைப் புரிந்து கொண்ட ராகவன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு “எனக்கு லெக்சருக்கு நேரமாச்சி!” என்று கிளம்ப எத்தனித்தார். அகிலா உரிமையோடு அவருடைய கையைப் பிடித்தாள். “ராகவன் அண்ண! உங்கள எல்லாரும் அண்ணன்னுதான் கூப்பிட்றாங்க! நானும் அப்படிக் கூப்பிடலாமா?” என்று கேட்டாள்.

 

    • “தாராளமா கூப்பிடலாம் அகிலா!” என்றார்.

 

    • “கொஞ்ச நேரம் இருந்து போங்க அண்ண! நான் கணேசனோட பேசிறதுக்கு நீங்கள் சாட்சியா இருக்க வேணும்” என்றாள்.

 

    • ராகவன் உட்கார்ந்தார். கணேசன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். அகிலா அவன் முகத்தையும் மேஜை முகப்பையும் மாறா மாறிப் பார்த்துப் பேசினாள்: “இந்த ரேகிங் கேஸ்ல என்னக் காப்பாத்த வந்து இப்ப ரொம்ப பெரிய பிரச்சினையில நீங்க மாட்டிக்கிட்டு இருக்கிறத இந்தப் பல்கலைக் கழகக் கேம்பஸ்ல எல்லாரும் கவலையோட பேசிக்கிறாங்க. உங்க நிலைமைக்கு நானே ஒரு காரணமாயிட்டத என்னால பொறுக்க முடியில. கேம்பஸ் மாணவர்கள் என்னப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்றவாளியப் பார்க்கிற மாதிரிதான் பார்க்கிறாங்க!”

 

    • “அது உங்க குற்றம் இல்ல அகிலா! அப்படி நெனைச்சிக் கவலப் படாதிங்க” என்றான் கணேசன்.

 

    • தலை குனிந்து பேசினாள்: “என் குற்றமோ இல்லியோ! வர்ர வெள்ளிக் கிழமை நடக்கிற விசாரணையில உங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தா அதுக்கு நானே ஒரு முக்கிய காரணமா இருப்பேன். நான் மட்டும் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வராம இருந்தா உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதில்லையா?”

 

    • ராகவன் குறுக்கிட்டுப் பேசினார். “இதெல்லாம் தற்செயலா நடந்தது அகிலா! நீங்க எதுக்காக ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகணும்? உண்மையில இதில நீங்களும் அறியாம மாட்டிக்கிட்ட ஒரு பலி கெடாதான்!” என்றார்.

 

    • “அது எப்படியோ இருக்கட்டும்! நீங்களெல்லாம் எனக்கு ஒரு சமாதானம்தான் சொல்றிங்க. ஆனா நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். கணேசன்! உங்களுக்கு எந்தத் தண்டனையை இந்தப் பல்கலைக் கழகம் விதிக்குதோ அதே தண்டனைய நான் சுயமாகவே எனக்கு விதிச்சிக்குவேன். உங்களை ஒரு வருஷம் தள்ளி வச்சா நான் ஒரு வருஷம் விடுமுறை எடுத்துக்குவேன். உங்களப் பல்கலைக் கழகத்த விட்டே தள்ளிட்டாங்கன்னா நானும் விலகிடுவேன்!”

 

    • கணேசன் திடுக்கிட்டான். அவனை அறியாமலேயே எட்டி மேசைமேல் இருந்த அவள் கைகளைப் பற்றினான். “என்ன சொல்றிங்க அகிலா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? எதுக்காக நீங்க உங்கள இப்படி தண்டிச்சிக்கணும்?”

 

    • கைகளை விலக்கிக் கொள்ள அவள் முயலவில்லை. “நீங்க எதுக்காகத் தண்டிக்கப் பட்றிங்க? நீங்க ஏன் நல்லவரா இருந்து செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கணும்? அதுதான் இந்த பல்கலைக் கழகத்தில நீதின்னா, அந்த நீதி எனக்கும் பொருந்தட்டுமே!”

 

    • “வேண்டாம் அகிலா!”

 

    • “என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!”

 

    • “எனக்காகவா?”

 

    • “உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!”

 

    • அவனுடைய கைகளில் தன் கைகள் பிடிபட்டுள்ள இதமான சூழ்நிலையில் அகிலா விசும்பி அழ ஆரம்பித்தாள். ராகவன் கொஞ்சம் வெட்கத்துடன் தங்களை யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் அகிலாவுக்கும் கணேசனுக்கும் தங்களைச் சுற்றி மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதது போல் இருந்தது.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 18ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 18

18  மோட்டார் சைக்கிளைக் கீழ்த் தளத்தில் நிறுத்தி விட்டு “ஷங்ரிலா” ஹோட்டலின் பிரம்மாண்டமான வரவேற்பறைக்குள் நுழைந்த போது அதன் அகண்ட பரப்பும் உயரமும் ஆடம்பரமும் கணேசனை வியப்பில் ஆழ்த்தின. பினாங்கின் மையப் பகுதியான கொம்தாரின் பக்கத்தில் அந்தக் கட்டடத் தொகுதியின் ஒரு

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24

24  “காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை” என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.   “காதல் என்பது மிகவும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23  அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில்