Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9

9
 

    • கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் “தம் தம்” ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.

 

    • பல்கலைக் கழகத்தின் புதிய ஓட்டப்பந்தய ஸ்டேடியத்தில் சிகப்பு வண்ண ஓட்டப் பாட்டையில் கணேசன் அப்போது பத்தாவது சுற்று ஜோகிங் வந்து கொண்டிருந்தான். அவனோடு ஓடிய ரவியும் ராகவனும் அசந்து உட்கார்ந்து விட்டார்கள். இன்னும் இருபது சுற்றாவது ஓடாமல் விடுவதில்லை என கணேசன் ஓடிக் கொண்டிருந்தான்.

 

    • புதிய பருவத்திற்குப் பல்கலைக் கழகம் புகுந்ததிலிருந்து ஜோகிங் செய்ய நேரம் கிடைக்கவில்லை. முந்தைய பருவங்களில் வாரத்திற்கு மூன்று நாள் ஓடுவான். இன்று அவன் நண்பன் ரவியும் அவர்களுக்கு அண்ணன் போல் பழகிவிட்ட மூத்த மாணவர் ராகவனும் வந்து கூப்பிட்டவுடன் ஒத்துக் கொண்டான். புதிய ஸ்டேடியத்தில் ஓடலாம் என முடிவு செய்தார்கள். அவர்களுக்கு வசதியாக அன்று ஞாயிற்றுக் கிழமை. ஸ்டேடியம் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது. ஐந்தாறு சீன மாணவர்கள் மட்டும் மத்தியிலுள்ள புல் திடலில் தாய்ச் சீ பழகிக் கொண்டிருந்தார்கள்.

 

    • இந்த ஸ்டேடியத்தை அண்மையில்தான் கட்டி முடிந்திருந்தார்கள். அதற்கு நேர் எதிரில் ஹாக்கிக்காக செயற்கைத் திடலும் அமைத்திருந்தார்கள். புதிய ஸ்குவாஷ் கோர்ட்டுக்களும் பக்கத்தில் இருந்தன.

 

    • உண்மையில் பல்கலைக் கழக வளாகத்தில் ஜோகிங் செய்ய ஸ்டேடியம் வேண்டும் என்பதில்லை. அதன் சாலைகளிலும் சோலைகளிலும் எந்த இடத்திலும் ஜோகிங் செய்யலாம். ஆனால் ஸ்டேடியத்தில் சுற்றுக் கணக்கு வைத்து ஜோகிங் செய்யலாம். பாட்டை சமமாக இருக்கும். ஓடுவதற்கு அமைக்கப்பட்ட சிறப்புப் பாட்டையாதனால் பாதத்தை எம்பிக் கொடுக்கும்.

 

    • ஓட ஓட கணேசனுக்கு ஆனந்தமாக இருந்தது. எண்ணம் எங்கு அலைந்தாலும் உடலின் முயற்சி அநேகமாகத் தானியங்கியாக நடந்தது. கால்கள் தாளம் தவறாமல் எம்பின. அந்த எம்புதலுக்கேற்ப கைகள் வீசின. உடல் இயக்கத்தின் வெப்பத்தில் அவன் தசை நீர் ஆவியாகி அந்தக் காலை வேளையிலும் உடல் பூராகப் பொங்கி வழிந்தது. அவன் புதிதாக வாங்கி நைக்கி ஒடும் சப்பாத்துக்கள் மெத்து மெத்தென்றிருந்தன. போன விடுமுறையின் போதுதான் அத்தை இந்த விலையுயர்ந்த சப்பாத்துகளை வாங்கிக் கொடுத்திருந்தாள்.

 

    • அத்தையை நினைத்த போது கணேசன் நெஞ்சில் நன்றி பெருக்கெடுத்தது. அத்தை எப்போதும் அப்படித்தான். கணேசனுக்கு ஏதாகிலும் வேண்டும் என்று ஒரு குறிப்பு தெரிந்துவிட்டால் போதும். உடனே போய் எங்கிருந்தாவது வாங்கிக் கொடுத்து விடுவாள்.

 

    • விடுமுறையில் கிள்ளானில் அத்தை வீட்டில் இருந்தபோது ஒரு நாள் கால் நகங்கள் வெட்டிக் கொண்டிருந்தான். “ஏன் கணேசு, உன் நகம் இப்படி வளைஞ்சி கெடக்குது?” என்று அத்தை கேட்டாள்.

 

    • “அடிக்கடி ஜோகிங் போறென்ல, அத்தை! சப்பாத்து சரியில்ல! அது நெகத்தை கெடுத்திருது” என்றான்.

 

    • “ஏன் சப்பாத்து சரியில்ல? “

 

    • ”என் சப்பாத்து சாதாரண விளையாட்டு சப்பாத்து. அதப் போட்டு ஓடுனா இப்படித்தான். ஜோகிங்கிக்கு தனி சப்பாத்து இருக்கு! ஆனா ரொம்ப விலை!”

 

    • அத்தை விடவில்லை. அடுத்த நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போய் கிள்ளான் கடைத் தெருவில் அலைந்து அவன் தடுத்தும் விடாமல் 200 வெள்ளி செலவழித்து உயர்தர பிரான்டான நைக்கி சப்பாத்தை வாங்கிக் கொடுத்தாள். அந்தச் சப்பாத்தை வாங்கியதில் அவன் மகிழ்ந்ததை விட அத்தையும் அவள் மகள் மல்லிகாவும் மகிழ்ந்ததுதான் அதிகம்.

 

    • அத்தைக்கு இப்போது இங்கு நடக்கின்ற குழப்பங்கள் தெரியவந்தால் எவ்வளவு கவலையும் கலவரமும் அடைவாள் என நினைத்துப் பார்த்தபோது உள்ளம் சோர்ந்தது. அவளுக்கு அவனுடைய படிப்பும் எதிர்காலமும் ஒரு பொருட்டே அல்ல. அவன் அவனாக இருப்பதுதான் பெரிது.

 

    • “ஏன் கணேசு அங்கல்லாம் போய் இப்படி லோல் பட்ற. யுனிவர்சிட்டி கினிவர்சிட்டியெல்லாம் உனக்கு எதுக்கு? பேசாம விட்டுட்டு வந்து மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு!” என்பாள்.

 

    • 15வது சுற்று. மூச்சு வாங்கினாலும் உடல் இன்னும் களைக்கவில்லை. ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தான். வளாகத்துக்கு வெளியே தெற்கு கேட்டுக்கு அப்பால் யாப் சோர் ஈ சாலையில் கார்கள் விரைவாக ஓடிக் கொண்டிருந்தன. அதற்கப்பால் காம்பியர் குன்றுகள் பசுமையாகத் தெரிந்தன.

 

    • அத்தை நினைவுகவனுடைய இடைவிடாத ஓட்டத்துக்கு இடையிலும் சிதறல் சிகறலாக வந்தது. அத்தைதான் அவனுக்குக் குடும்பம். தன் தந்தைக்குத் தங்கையான இந்த அத்தை இளம் வயதில் அவர்கள் வீட்டில்தான் வளர்ந்தாள். கிள்ளானை அடுத்துள்ள ஒரு தோட்டத்தில் பால்மரம் வெட்டிப் பிழைக்கும் குடும்பம் அது. அப்பா அப்போதும் குடி, இப்போதும் குடிதான்.

 

    • பகலில் உழைப்பு, பிற்பகலில் தூக்கம். மாலையில் அம்மாவுடன் காசுக்குச் சண்டை. அப்புறம் கள்ளுக்கடையில் குடி. இரவில் பெண்டாட்டியை அடித்துவிட்டு மயக்கம் கலந்த தூக்கம். விடிகாலையில் இயந்திரம்போல் எழுந்து வேலை. இதுதான் அப்பா.

 

    • பின்னால் சமுதாய சீர்திருத்த நோக்கம் கொண்ட இளைஞர்கள் செய்த புரட்சியில் அந்தத் தோட்டத்தின் கள்ளுக்கடையை மூடிவிட்டார்கள். ஆனால் அதே வேகத்தில் அந்தத் தோட்டத்தில் கள்ளச் சாராயம் புகுந்தது. முன்பு கள் குடித்துத் தள்ளாடினாலும் இயற்கை பானத்தில் தெம்பாக இருந்த அப்பா சாராயம் குடித்து உள்ளுறுப்புக்களை எரித்துக் கொள்ள ஆரம்பித்தார்.

 

    • அம்மாவுக்கு அந்தக் குடும்பத்தில் ஒரு பங்கு இருந்ததாகவே தெரியவில்லை. வாயிருந்தும் அவள் ஊமை. அப்பாதான் அவள் உலகம். வேறு உலகம் தெரியாது. பிள்ளைகளை வளர்க்கக்கூட அவளுக்குத் தெரியாது. அப்பா சாராயம் வாங்கி வா என்றாள் இன்றும் நங்குநங்கென்று ஓடுவாள்.

 

    • பிள்ளைகள் – கணேசன், அவனுக்கு முந்திய ஒரு அக்காள், ஒரு அண்ணன் – மூவரும் தாங்களாகத்தான் வளர்ந்தார்கள். இதற்கிடையில் வேறு ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்த கணேசனின் தாத்தா இறந்து விட இந்த மங்களம் அத்தை அவர்கள் குடும்பத்தில் அடைக்கலம் தேடி வந்து அவளும் பால்வெட்டப் போய் குடும்பத்துக்கு வேலைக்காரியாகவும் இருந்து அப்பாவிடம் உதையும் வாங்கிக் கொண்டு கிடந்தாள்.

 

    • ஆனால் இந்த அத்தையிடம் சிவந்த மேனியும் வடிவான முகமும் ஒரு மயக்கச் சிரிப்பும் இருந்தன. கணேசனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவளும் “கணேசு, கணேசு” என ஒரு மகனைப் போல அவனை அணைத்துக் கொஞ்சினாள்.

 

    • அவர்கள் தோட்டத்திற்குத் துணி விற்கும் இளைஞரான வியாபாரி ஒருவர் மாதந்தோறும் வருவார். தவணைக்குச் சேலைகளும் பிற துணிகளும் விற்பார். அவர்கள் வீட்டுக்கு மாதந்தோறும் வரப்போக இருந்தவர் அத்தையைப் பார்க்க விசேஷமாகவும் வரத் தொடங்கினார். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேதோ பலகாரங்கள் வாங்கிக் கொடுத்து நண்பராகி அத்தையிடம் சிரித்துச் சிரித்துப் பேசினார்.

 

    • இதைப் பார்த்துப் பொருக்காத அவன் அப்பா ஒருநாள் அத்தையைப் போட்டு அடிக்க அதைக் கேள்விப்பட்ட துணி வியாபாரி மறுநாள் வந்து அப்பாவையும் அம்மாவையும் நேராகக் கேட்டார்: “நான் மங்களத்த கட்டிக்க விரும்புறேன்! என்ன சொல்றீங்க?”

 

    • இதைக் கேட்டு முதலில் வீட்டில் கலவரம்தான் நிகழ்ந்தது. அவர் ஏதோ பேசக் கூடாதததைப் பேசிவிட்டதைப் போலவும் இதனால் குடும்ப மானம் போய்விட்டது போலவும் அப்பா குதித்தார். அப்புறம் பேச்சு வார்த்தைகள் நடந்தன. பணம் கைமாறியது.

 

    • அவனுக்கு ஆறு வயது இருக்கும் போது தோட்டக் கோயிலில் அத்தையின் திருமணம் நடந்தது கணேசனுக்கு ஒரு பழைய மங்கிக் கிழிந்து போன புகைப்படம் மாதிரி துண்டு துண்டாக ஞாபகத்தில் இருந்தது. அத்தை புதிதாகப் புடவை கட்டிக்கொண்டு மாலை போட்டுக் கொண்டிருந்த காட்சி, அண்டாக்களில் வெந்து கொண்டிருந்த ஆட்டிறைச்சிக் குழம்பின் வாசனையோடும் வீட்டில் குவியல் குவியலாகச் சுட்டுப் போடப்பட்டிருந்த அதிரசங்களின் எண்ணெய் பிசுபிசுப்போடும் நினைவுக் குகைகளின் ஓரங்களில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

 

    • கல்யாணத்திற்குப் பின் வீட்டுக்குள் என்ன காரணத்தினாலோ பெரிய சண்டை நடந்தது. அத்தை மல்லிகைப் பூ மணமும் சந்தன மணமும் மாறாமல் கணேசனை அணைத்துக் கொண்டு ஒரு மூலையில் சுருண்டிருந்தாள். சண்டையின் உச்சத்தில் அந்த மாமா அறைக்குள் வந்து அத்தையைக் கையைப்பிடித்து எழ வைத்தார். “மங்களம், இந்த ஈன ஜனங்களோட மூஞ்சில இனி எந்த நாளும் முளிக்கவே கூடாது. வா. கடைசியா எல்லார் கிட்டயும் போயிட்டு வரேன்னு சொல்லிக்க! கார் கொண்டாந்திருக்கேன், ஏறு!” என்றார்.

 

    • அத்தை அவனைத்தான் அதிகமாகக் கட்டிப் பிடித்து அழுதாள். அப்புறம் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டுக் கார் ஏறிப் போய்விட்டாள்.

 

    • அன்றிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகள் அத்தை அந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. ஆனால் அவள் வாழ்க்கை முற்றாக மாற்றம் அடைந்து விட்டதை அவ்வப்போது செவிவழிச் செய்திகளாக கணேசனின் குடும்பம் கேட்டு வாய் பிளந்து கொண்டிருந்தது.

 

    • அத்தையின் கணவர் வியாபாரத்தில் வளர்ந்து விட்டாராம். கார் வைத்து வியாபாரம் செய்கிறாராம். வியாபாரம் ஓஹோ என்று நடக்கிறதாம். ஒரு பெண் குழந்தையாம். எல்லாம் இந்த மனைவி கொண்டு வந்த அதிர்ஷ்டம் என்று மனைவியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாராம். பங்களா வாங்கி விட்டார்களாம். “உன் மூதேவி அண்ணன் முகத்தில முளிக்காத மங்களம். வந்த சீதேவி ஓடியே போயிடுவா!” என்ற அவருடைய மருட்டலில் மங்களம் இவர்கள் குடும்ப நினைப்பையே விட்டுவிட்டாளாம்.

 

    • “ஓ அப்படியா! அவ வரவேணாம்! வந்தா செருப்பாலியே அடிப்பேன்!” என்று இருமி இருமி பதில் சவால் விட்டார் அவன் அப்பா.

 

    • ஆனால் அத்தை ஒரு நாள் அவர்கள் வீடு தேடி வரத்தான் செய்தாள். ஓர் ஐந்து வயதுப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு டிரைவர் வைத்து ஓட்டிய சொந்தக் காரில் வந்திறங்கி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். “ஐயோ என்ன உட்டுட்டுப் போயிட்டாங்க அண்ணி! நெஞ்சு வலிக்குதுன்னு படுத்தாங்க! பட்டுன்னு போயிட்டாங்க! எனக்கு இனி குடும்பம்னு சால்லிக்க வேற யாரு இருக்காங்க உங்கள விட்டா….?”

 

    ——————–

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16

16  பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 22ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 22

22  “சாப்பிடு கணேசு! பாரு எப்படி எளச்சிப் போய் கெடக்க! உங்க யுனிவர்சிட்டியில என்னதான் சாப்பாடு போட்றாங்களோ தெரியில! இப்படி எலும்புந் தோலுமா வந்து நிக்கிற” என்று அத்தை சத்தமாக உபசரித்தாள்.   யுனிவர்சிட்டியில் யாரும் சாப்பாடு போடுவதில்லை; வேண்டுவதைத் தானாகத்தான்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 14ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 14

14  அகிலா தன் புதிய அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.   பிற்பகலில் அந்த கெமிலாங் விடுதி ஓ என்று கிடந்தது. முதல் பருவத்தின் மத்தியில் முதல் சோதனை விரைவில் வருவதால் மாணவர்கள் அனைவரும் விரிவுரையிலோ அல்லது நூல் நிலையத்திலோ இருந்தார்கள்.