Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8

8
 

    • அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற எண்ணம் பொங்கிப் பொங்கி அவளை அழ வைத்தது. அவனுடைய இரண்டாவது குற்றச் சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் அவன் தண்டனை இன்னும் கடுமையாகும் என்று உதவித் துணை வேந்தர் எச்சரித்திருந்தது அவளுக்கு பயங்கரமான கற்பனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

 

    • இன்னும் கடுமையான தண்டனை என்றால் என்ன? ஒரு பருவம் தள்ளி வைப்பார்களா? ஓராண்டு தள்ளி வைப்பார்களா? அல்லது மிகக் கடுமையாகப் பல்கலைக் கழகத்தை விட்டே வெளியேற்றி விடுவார்களா? என் மானம் காக்க முன் வந்த அந்த நல்ல மனிதனுக்கு இப்படி நேர்ந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தான் சும்மா இருக்க முடியுமா? அவன் பல்கலைக் கழகத்தை விட்டுத் தள்ளப்பட்டால் தானும் விலகி விடுவது ஒன்றுதான் தான் அவனுக்குச் செய்யும் கைமாறாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மேலும் மேலும் வலுப் பெற்றுக் கொண்டிருந்தது.

 

    • இந்த எண்ணத்தை ஜெசிக்காவிடம் சொன்ன போது அவள் தலைகுனிந்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பின் “உன்னிஷ்டம்” என்று அலட்சியமாகச் சொன்னாள். ஆனால் இதையே அவளுக்கு நெருங்கிய தோழியாக மாறிவிட்ட மாலதியிடம் சொன்ன போது அவள் சீறினாள்: “முட்டாளே! அவசரப்பட்டு உன் எதிர்காலத்தப் பாழாக்கிக்காத! பல்கலைக் கழகத்தில கெடச்ச இடத்தக் காரணமில்லாம உதறிட்டா பின்னால சேத்துக்கவே மாட்டாங்க! நீ காலம் பூரா பட்டம் வாங்கிறத மறந்திட வேண்டியதுதான்! உங்க அப்பா அம்மாவ நெனச்சுப் பார்!” என்றாள்.

 

    • “விளங்குது மாலதி. ஆனா அவருக்கும் அப்படித்தான ஆகும்? அவர் எதிர்காலம் பாழாப் போகும்போது நான் மட்டும் நிம்மதியா படிச்சி பட்டம் வாங்கி சந்தோஷமா இருக்க முடியுமா?”

 

    • “சந்தோஷமா பட்டம் வாங்கலன்னா, கவலையோட வாங்கிக்க! கணேசனுக்கு ஏதாவது சீரியசான தண்டனை கொடுத்தாங்கன்னா அதை எதிர்த்து ஏதாகிலும் பண்ணப் பார்ப்போம். அப்படியில்லன்னா அது அவருடைய விதி! இந்த சமுகத்திலுள்ள அநீதிக்கு அவர் ஒரு பலி! நம்மால என்ன செய்ய முடியும்? நீ எதுக்கு இதில அர்த்தமில்லாத தியாகியா மாறணும்? இதில யாருக்கு லாபம் சொல்லு? அநியாயம் பண்ற அந்த ராஜனோட கேங்குக்குத்தான் லாபம்!”

 

    • மாலதி முதல் ஆண்டுதான் என்றாலும் அகிலாவுக்கு இரண்டு வயது மூத்தவள். எஸ்பிஎம் முடித்து நான்காண்டுகள் தற்காலிக ஆசிரியையாக இருந்து அனுபவம் பெற்று சொந்த முயற்சியில் எஸ்டிபிஎம் எடுத்து இரவிரவாகப் படித்து இரண்டு முறை பரிட்சை எழுதித் தேரி வந்தவள். அகிலாவை ஒரு தமக்கைக்கு உள்ள உரிமையோடு அதட்டிப் பேச அவளுக்கு முடிந்தது.

 

    • அவள் பேசுகிற நியாயம் புரிந்தது என்றாலும் கூட அகிலாவின் மனம் ஒரு பக்கம் “கணேசனின் துயரத்தில் நீ சந்தோஷம் காணலாமா?” என்று இடித்துக் கொண்டே இருந்தது.

 

    • இரவு நேரங்களில் இதைப்பற்றியே நினைவாக இருக்கும் போது கணேசனைத் தனிமையில் பார்த்து அவன் கைபிடித்து நன்றி சொல்லி அழ வேண்டும் என்று அவளுக்குப் பலமுறை தோன்றியது. ஆனால் அவனைத் தனிமையில் காண முடியவில்லை. கணேசனின் விவகாரத்தைத் தன் சொந்த விவகாரமாக எடுத்துக் கொண்டு ஜெசிக்கா வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனோடு ஒட்டிக் கொண்டேயிருந்தாள். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ பேரவையிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல அவள் பல மாணவர்களைப் பார்த்துப் பேசி கையெழுத்தும் வாங்கிக் கொண்டிருந்தாள். அறைக்கு வந்த போதும் கணேசனின் வழக்கு பற்றியே பேசித் தானும் கலங்கி அகிலாவையும் கலங்க அடித்துக் கொண்டிருந்தாள்.

 

    • முதல் விசாரணை நடந்தபோது அகிலா கணேசனோடு ஒன்றாக இருந்து எல்லாவற்றையும் சேர்ந்து அனுபவித்ததில் அவளுக்கு ஏதோ ஒருவித இன்பம் இருந்தது. அவனுடைய துயரத்தில் அவளும் அவளுடைய துயரத்தில் அவனும் பங்கு கொண்டதில் ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது. அவனுக்காக அழுத கண்ணீர் துயரமாக இருந்தாலும் பெருமையாக இருந்தது.

 

    • ஆனால் இனி நடத்தப்படவிருக்கும் இரண்டாவது விசாரணையில் அகிலாவுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய விவகாரம் முடிந்து விட்டது. அவள் சொன்ன உண்மைகள் தள்ளப்பட்டு விட்டன. இனியுள்ளது கணேசன் இரவில் அவன் விடுதியில் மிரட்டப்பட்ட விவகாரம். அதில் அவளுக்குச் சம்பந்தமில்லை. இனி தான் கணேசனுக்குப் பரிந்து முறையீடு கொடுக்க முடியாது. அவனுக்குப் பரிந்து சாட்சி சொல்ல யாரும் அவளை அழைக்க மாட்டார்கள். விசாரணை அறைக்கு வெளியே அவளும் அவனும் பயங்களையும் தைரியங்களையுப் பரிமாறிக் கொள்ள முடியாது.

 

    • ஜெசிக்காவைப் போல அவனுடைய வழக்கைப் பெரிதாகப் பேசி அவனுடைய வக்கீல் போல அலைந்து திரிய அவளுக்கு முடியாது. உனக்கு நான் பிரியாத துணை என அவனோடு எந்த நேரமும் ஒட்டிக் கொண்டிருக்க அவளால் முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி வந்தது. ஜெசிக்காவை விடவும் இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவளும் ஈடுபட்டவளும் நான்தானே என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்கியது.

 

    • ஆனால் முடியவில்லை. வெட்கம் தடுத்தது. என்ன இருந்தாலும் அந்நியன். ஆண். ஆகவே அடக்கமில்லாமல் பழக முடியாது. அவள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் அவள் காலையும் கையையும் கட்டி தான் நினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய்க்குக் கூடப் பூட்டுப் போட்டிருந்தது.

 

    • அவனுக்காக அவள் கண்ணீர் விட்டாலும் அது அவள் அறைக்குள் அவள் தலையணையில்தான். கணேசன் பார்க்க முடியாது. அழாதே என்று பாசத்தோடு ஆறுதல் கூற முடியாது. அந்த எண்ணத்தில் அவள் ஏக்கம் இன்னும் மிகையானது.

 

    • *** *** ***

 

    • ஏக்கம் துயரங்களுக்கிடையே பாடங்களில் வேலைகள் குவிந்து கொண்டிருந்தன. ஒரு எளிய கணினி செயலிக்கு புரோக்ராம் எழுதச் சொல்லி டாக்டர் தாஜுடின் இரண்டு வார அவகாசம் கொடுத்திருந்தார். டாக்டர் அயிஷா இரண்டு புத்தகங்களில் அத்தியாயங்கள் நிர்ணயித்துப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். டியோட்டோரியலில் அந்த இரண்டு அத்தியாயங்கள் பற்றியும் அவள் பேச வேண்டும். அதற்கான புத்ததகங்கள் நூல்நிலைய அடுக்கிலிருந்து மாயமாக மறைந்திருந்தன. அதை அவள் ரிசர்வ் செய்துவிட்டு கொண்டு போனவர்கள் திருப்பித் தரக் காத்திருந்தாள்.

 

    • புறப்பாடத்தில் அவள் கலாச்சார நடனங்களுக்குப் பதிந்து கொண்டிருந்தாள். புதன்கிழமைகளில் ஐந்து முதல் ஏழு வரை பயிற்சி. புதிய மாணவர் மையக்கட்டிடத்தில் பண்பாட்டு அரங்கத்தின் மேல் மாடியில் பயிற்சி நடந்தது. இரண்டாவது வாரத்தில் மிக எளிதான ஜோகெட் நடனம் சொல்லிக் கொடுத்தார்கள். நுண்கலைப் பிரிவில் டியூட்டராக உள்ள லத்தீ•பா என்ற ஒரு இளம் மலாய்ப் பெண் பயிற்சியாளராக இருந்தார்.

 

    • அன்று அகிலா நடனத்துக்கு உரிய தொடைகளைக் கவ்வும் டைட்சும் தொளதொளவென்ற டீ ஷர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். அகிலாவுக்கு பரதநாட்டியம் தெரியும். பள்ளியில் கொஞ்சம் மலாய் நடனமும் பழகியிருக்கிறாள். ஆகவே ஜோகெட்டின் அசைவுகள் எளிதாகவும் நளினமாகவும் வந்தன.

 

    • ஒரு தாடி வைத்த மலாய்க்காரர் ஓரத்தில் உட்கார்ந்து அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அகிலாவின் மீதே இருந்தன. திடீரென தானும் எழுந்து அகிலாவின் பக்கத்தில் புகுந்து ஆட ஆரம்பித்தார். எல்லாரும் பெண்களாக ஆடிக் கொண்டிருக்கும் இடத்தில் யார் இந்தக் கரடி என்று எரிச்சலுற்றாள் அகிலா. ஆனால் பயிற்சி ஆசிரியை ஒன்றும் சொல்லாததால் அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஆள் அனுபவித்து ஆடினார். அவருடைய உடம்பு நடனத்துக்கு நன்றாக வளைந்து வந்தது. ஒரு ஜோகெட் பைத்தியமாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.

 

    • பயிற்சியில் அவள் உடல் தொப்பையாக நனைந்திருந்தது. முதுகிலும் அக்குளிலும் வியர்த்து டீ ஷர்ட் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முகப் பௌடரை வியர்வை நாற்றம் தூக்கி அடித்துக் கொண்டிருந்தது.

 

    • ஆட்டம் முடிந்து அறையின் மூலைக்குப் போய் துண்டு எடுத்து அவள் கால்களைத் தூக்கி வைத்துத் தொடையில் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தத் தாடிக்காரர் பின்னால் வந்தார். “நன்றாக ஆடுகிறாய். உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

 

    • சட்டென்று காலை இறக்கி டீ ஷர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். தோற்றம் கலைந்த நிலையில் ஒரு அந்நிய ஆடவன் அவள் அருகில் நிற்பது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த ஆள் இப்படி இங்கிதமில்லாமல் வந்து பேசுவது எரிச்சலாகவும் இருந்தது. “நீங்கள் யார்?” என்று கேட்டாள்.

 

    • “நான் ஒரு ரசிகன்தான். நல்ல நடனத்தை ரசிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா?” என்றார்.

 

    • அகிலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அழகிய பெண்களைக் கண்டால் ஈயென இளிப்பவர்கள் பல்கலைக் கழகத்துக்குள்ளும் இருப்பார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டாள். அவளுக்கு இந்த அனுபவம் தன்னுடைய பள்ளிக்கூட காலத்தில் சக மாணவர்களிடம் உண்டு. அதிலும் பெண்கள் இப்படித் தலை கலைந்து வியர்த்து சட்டை முதுகை ஒட்டியிருக்கும் காட்சியில் இவர்களுக்குப் பித்தம் தலைக்கேறிவிடும் என அவளுடைய நடனத் தோழிகள் கிளுகிளுத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆண்கள் அங்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்திருந்தாள். இந்த ஆளை அலட்சியப் படுத்துவதுதான் சரி என்று பட்டது. பதில் சொல்லாமல் இருந்தாள்.

 

    • “என்னோடு நடனமாட வருகிறாயா?” என்று அந்தத் தாடிக்காரர் தொடர்ந்து சீண்டினார்.

 

    • “உங்களோடு நான் ஏன் ஆடவேண்டும்?” சீறினாள்.

 

    • “உனக்கு நல்லது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்!” என்றார் அவர். அந்த ஆளின் நமட்டுச் சிரிப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஊட்டியது.

 

    • நேராக லத்தீ•பாவிடம் சென்றாள். “சே லத்தீ•பா!” என்று அழைத்து அவரிடம் இந்த ஆளைச் சுட்டிக் காட்டினாள்.

 

    • “என்ன அகிலா?” என்று கேட்டார் லத்தீ•பா.

 

    • “இந்த ஆள் என்னை அவருடன் ஆடவருகிறாயா என்று கேட்கிறார்” என்றாள்.

 

    • லத்தீ•பா சிரித்தார். “இந்த ஆள் அப்படிக் கேட்பது உனக்குப் பெரிய பெருமை அகிலா. இவரை நான் அறிமுகப் படுத்தவில்லை அல்லவா? இவர்தான் பேராசிரியர் முகமட் கௌஸ். நுண்கலைத் துறையின் தலைவர்!”

 

    • அகிலா அதிர்ந்து போனாள். பேராசிரியர் கௌஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மலாய் பாரம்பரிய நடனங்களைக் கரைத்துக் குடித்தவர். பரத நாட்டியமும் முறைப்படி கற்றவர். டெலிவிஷன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நவீன நடனங்களை உருவாக்கி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தியவர்.

 

    • “ஐயோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டது. மன்னித்து விடுங்கள் பேராசிரியர் அவர்களே! நீங்கள் இந்த இடத்தில் இவ்வளவு சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை!” என்றாள்.

 

    • “நீ என்னுடன் ஆடுகிறேன் என்று சொன்னால் மன்னித்து விடுகிறேன்!” என்றார்.

 

    • “இப்போதேவா?” என்று புரியாமல் கேட்டாள்.

 

    • “இப்போதல்ல. இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஆகஸ்டில் நடைபெறுகிற இரவு விருந்தில் வேந்தருக்கு முன்னால் ஆட ஒரு புதிய நடனத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் வேண்டும். ஒரு ஆண் நான். இன்னும் இரண்டு ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுத்துவிட்டேன். இன்னும் ஒரு பெண் வேண்டும்!”

 

    • அகிலாவுக்குப் பயம் பற்றிக் கொண்டது. இன்னும் வேர்த்துப் போனாள். “நானா? வேந்தரின் விருந்திலா? நான் இப்போதுதான் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். எப்படி…”

 

    • “நீதான். வேந்தரின் விருந்தில்தான்! புதிதாக ஆரம்பிப்பவர்கள்தான் எனக்கு வேண்டும்!”

 

    • “ஐயோ என்னால் முடியாது!” என்றாள்.

 

    • லத்தீ•பா பின்னால் முதுகில் இடித்தார். “சரி என்று சொல் முட்டாள் பெண்ணே!”

 

    • “சரி!” என்றாள்.

 

    • “அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இரவு 8 முதல் 10 வரை இங்கே பயிற்சி!” பேராசிரியர் கௌஸ் வெளியேறினார். அகிலா கொஞ்ச நேரம் அங்கேயே பிரமை பிடித்து நின்றாள்.

 

    • “என்னைக் கூப்பிடவில்லையே என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது!” என்றார் லத்தீ•பா.

 

    • *** *** ***

 

    • அந்த வார இறுதியில் சனிக்கிழமை பின்காலை வேளையில் அலோர் ஸ்டார் பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்று அதில் இருந்து இறங்கிய போது அகிலாவுக்கு அந்த ஊர் புதிதாகத் தெரிந்தது. பிறந்ததிலிருந்து அவள் இந்த ஊரைவிட்டுப் பிரிந்ததில்லை. அலோர் ஸ்டார் அரசினர் தமிழ்ப்பள்ளியில் தமிழைத் தொடங்கியதிலிருந்து தேசியப் பள்ளிகளுக்கு மாறி ஆறாம் பாரம் வரை இந்த ஊருக்குள்ளேயே சுழன்று சுழன்று படித்தாகிவிட்டது. இப்போது பினாங்கிற்குப் போய் மூன்று வாரம் இருந்து திரும்பும்போது இந்த ஊர் வேறு மாதிரி இருந்தது. அந்த பஸ் ஸ்டேஷன், கடை வரிசைகள், ஆறு, பழைய பாலம், மார்க்கெட், பார்க்கும் எல்லா இடங்களிலும் ஒரு மந்திர மயமான ஈர்ப்பு இருந்தது.

 

    • அப்பா பஸ் ஸ்டேஷனில் தம்பியுடன் காத்திருந்தார். அவளைக் கண்டதும் தம்பி ஓடிவந்து அவளுடைய தோள்பையை வாங்கிக் கொண்டான். “எப்படிம்மா, பஸ் சௌரியமா இருந்திச்சா?” என்று அப்பா கேட்டார். முதல் முறை பினாங்கிலிருந்து விரைவு பஸ் பிடித்து வருகிறாள். ஒன்றரை மணி நேரப் பயணம்தான். “பஸ் நல்லா இருக்குப்பா. ஒரு கஷ்டமும் இல்ல!” என்றாள். “அம்மா எப்படிப்பா?” என்றாள்.

 

    • “இருக்காங்க, என்னா கொறச்சல்? நீ போய்ட்டியேங்கிற ஏக்கந்தான். இன்னைக்கு காலையில இருந்து மாஞ்சி மாஞ்சி சமைச்சிக்கிட்டிருக்கு வீட்டில!”

 

    • அம்மாவின் சமையலுக்கு நாக்கு ஏங்கியது. தன் வீட்டில் தனக்கே உரிய பீங்கான் தட்டில் பழகிய பாத்திரங்களிலிருந்து பழகிய கரண்டிகளில் சோற்றையும் அம்மாவின் கைவாகுவில் மணக்கும் கறிகளையும் அள்ளி இஷ்டம் போல் பிசைந்து வாயில் திணித்துப் புரையேறி “மெதுவா சாப்பிடும்மா” என்று அம்மா முதுகில் தட்டித் தண்ணீரெடுத்துக் கொடுக்கும் மனக் காட்சியில் அவள் கரைந்தாள்.

 

    • போகும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த பழைய இடங்களைப் புதிதாகப் பார்த்தாள். அவை தோற்றத்தில் முன்பு போல் இருந்தாலும் உணர்வில் மாறி இருந்தன. ஆனால் கொஞ்ச தூரம் போவதற்குள் மாறியிருப்பது ஊரல்ல, தான்தான் என்ற உணர்வு வந்தது.

 

    • நான் பழைய அகிலா இல்லை. பள்ளி மாணவி அல்ல. பட்டப்படிப்பு மாணவி. வாழ்க்கையில் விவரம்தெரிந்த நாள் முதலாய் தனக்கு முன்னுதாரணமாகக் கொண்ட அப்பாவையும் கல்வியில் மிஞ்சியாகிவிட்டது. இன்னும் நான்காண்டுகளில் தான் பட்டதாரி. தன் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி.

 

    • பட்டதாரிக்குரிய வேலை வரும். கைநிறையச் சம்பளமும் தனி அலுவலகமும் டெலிபோனும் வரும். இன்சூரன்சும் சேமிப்பும் வரும். வரும் கணவனும் பட்டதாரியாக இருப்பான். இருக்க வேண்டும். அது யாராயிருக்கும்? கணேசனா?

 

    • அவன் நினைப்பு வந்து. அவன் தன்னைக் கைப்பிடித்து அழைத்துப் போனது, ஜெசிக்காவுடன் உட்கார்ந்து சீரியசாகப் பேசியது, விசாரணை அறைக்கு முன் காத்து நின்றது, குளிர்பானம் வாங்கிக் கொடுத்தது….

 

    • அவனுடைய நினைப்பு ஏன் வரவேண்டும்? என் பிறந்த ஊரையும் எனக்கே உரிய வாசனைகளுடன் கூடிய என் அறையையும் பாசமிக்க குடும்பத்தையும் பழகிய தோழிகளையும் நினைத்து அனுபவிக்க வேண்டிய இந்த நேரத்தில் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு ஏன் அவன் நினைவு வரவேண்டும்?

 

    • நான் அவனைக் காதலிக்கிறேனா? சீச்சீ! காதல் பண்ணும் அளவுக்கு எனக்கும் அவனுக்கும் என்ன நெருக்கம்? முன்பின் தெரியாத ஆள். பார்த்து மூன்று வாரம் ஆகவில்லை. நிர்ப்பந்தத்தால் பழகியது இரண்டு மூன்று நாட்கள். அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

 

    • அவனுக்காக நான் அழுதேன். என்னை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற வந்த இளவரசனாக அவனை நினைத்தேன். எனக்காக அவன் தண்டனை அனுபவிக்கிறான் என வருந்தினேன். அவனுக்கு நான் உதவ நினைத்து முயன்றதெல்லாம் வீணாகிவிட்டதே என ஏங்கினேன். அவன் ஆறுதல் சொல்ல நான் தேறினேன். ஜெசிக்கா அவனோடு ஒட்டியிருப்பதைப் பார்த்து பொறாமைப் பட்டேன். நான் ஒட்டியிருக்க முடியவில்லையே என மனதுக்குள் பிழியப் பட்டேன். எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுதான் காதலா?

 

    • “சீச்சீ” என மீண்டும் உதறினாள். சந்தர்ப்பங்களினால் நாங்கள் சந்தித்தோம். பஸ்ஸிலும் டெக்சியிலும் ஆட்களை சந்திப்பதில்லையா? அப்படி! பஸ்ஸில் தடுக்கித் தடுமாறுபவர்களைக் கைத்தாங்கலாகப் பிடிப்பதல்லையா? அப்படித்தான். எல்லாம் தருணங்களின் நிர்ப்பந்தங்கள். இந்த நிர்ப்பந்தங்கள் விலகியவுடன் ஒரு சிறிய புன்முறுவலுடன் உறவு நின்றுவிடும்.

 

    • “சௌக்கியமா அகிலா!”

 

    • “சௌக்கியம் கணேசன்! நீங்க எப்படி இருக்கிங்க?”

 

    • “ஓக்கே! எக்கோனமிக்ஸ் லெக்சர் இருக்கு, பை பை!”

 

    • முடிந்து விடும். அவ்வளவுதானா? அவ்வளவுதான் என்றால் வந்த இடத்தில் ஒரு வழிப் பயணி பற்றி ஏன் இத்தனை நினைவுகள்? இந்த ஊரின் காற்றை ஆழ்ந்து சுவாசித்து தோழிகளை நினைத்து நினைத்துத் தேடாமல் ஏன் கணேசனைப் பற்றியே சிந்தனை?

 

    • தம்பி பிடித்து உலுக்கினான். “பினேங்குக்குப் போயி அக்கா செவிடாப் போச்சிப்பா!” என்றான்.

 

    • திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். “என்ன அருண்?”

 

    • “அப்பா என்னமோ கேக்கிறாங்க, நீ என்னமோ யோசனையில இருக்கியே!”

 

    • “என்ன கேட்டிங்க அப்பா?”

 

    • “இல்ல, அந்த ரேகிங் கேஸ் பத்தி சொன்னிய, அது என்ன ஆச்சின்னு கேட்டம்பா!”

 

    • “ஓ அதுவா?” அகிலா பெருமூச்சு விட்டாள். “அந்தப் பையனுங்க ஒருமாதிரி சூழ்ச்சி பண்ணி எங்களையே குத்தவாளி ஆக்கப் பாக்கிறாங்கப்பா. அடுத்த வாரம் இன்னும் விசாரண இருக்கு!”

 

    • அகிலா மீண்டும் கணேசனை எண்ணிக் கவலைப் பட்டாள்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29

29  அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு “உம்” என்று ஓட்டி வந்தார்.   பகல் முழுவதும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31

31  மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6

6  அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட