Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3

3
 

  • அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம் ஆண்டு அவன் முன் பூதாகாரமாக இருந்தது. புதிய பாடங்கள் தொடங்கவிருக்கின்றன.

 

  • அவன் சிறப்புத் துறையாக எடுத்துக் கொண்ட வர்த்தக நிர்வாகத் துறையில் கால அட்டவணை தாமதமாகத்தான் வந்தது. அப்படி வந்தும் பாடங்களின் நேரத்தை விரிவுரையாளர்கள் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பதிவுக்காக அவன் மேலும் கீழும் அலைய வேண்டியதாயிற்று. அலைந்தும் அவன் விரும்பிய முக்கியமான இரண்டு பாடங்களில் பெயர் பதிந்து கொள்ள முடியவில்லை. இணைப் பேராசிரியர் டாக்டர் சீத்தாராமன் நடத்தும் கணக்கியல் வகுப்பின் விரிவுரை நேரங்கள் மற்றொரு பாடத்தோடு மோதின. அவருடைய வகுப்பு அவனுக்குப் பிடிக்கும். இந்தியாவிலிருந்து வந்த அனுபவமிக்க விரிவுரையாளர். சுவையாகப் பேசுவார். மனமில்லாமல் அந்தப் பாடத்தை அடுத்த பருவத்துக்குத் தள்ளிப் போட்டுவிட்டான். மேலும் ஒரு பாடமும் துணை (மைனர்) பாடமான பொருளாதாரத்தோடு ஒத்துவரவில்லை. பொருளாதாரப் பாடமான அனைத்துலகப் பொருளாதாரம் பாடத்தை இந்த பருவத்தில் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மைனர் யூனிட்டுகளை நிறைவு செய்ய முடியாது.

 

  • புறப்பாடங்கள், கட்டாய பாடமான பஹாசா மலேசியா இவற்றுக்கும் பதிவு குழப்பமானதாக இருந்தது. அந்த ஆண்டில்தான் முதன் முறையாக விரிவுரையாளர்கள் நேரடியாகக் கணினியில் பதிவு செய்யும் முறையை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்த வேலை மிக மெதுவாக நடந்தது. பாதி விரிவுரையாளர்களுக்கு கணினியை சரியாக இயக்கத் தெரியவில்லை. தவறான விசைகளைத் தட்டி இருந்த “டேட்டா”வையெல்லாம் அழித்துவிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மத்திய கணினியும் சோம்பேறித்தனமாக இயங்கியது. நேரம் நீண்டது. பதிவுக்காகக் காத்திருந்த மாணவர்கள் வரிசையும் ஆங்காங்கே நீண்டு நீண்டு நின்றது.

 

  • இந்த ஆண்டு ப்ரொஜக்ட், பரொஜக்ட் என்று நிறைய வேலை கொடுத்துக் கொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டில் செயல்முறைப் பயிற்சியும் இருக்கிறது. எந்த நிறுவனத்துக்கு அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையே அவன் பொறுப்பிலிருக்கும் மாணவர் சங்கங்கள் இந்த ஆண்டில் இரண்டு மூன்று தேசிய அளவிலான திட்டங்களை ஏற்பாடு செய்ய அவனை ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தன. பருவத்தின் தொடக்கத்தில் “கெர்த்தாஸ் கெர்ஜா” (திட்டத் தாள்) விரிவாக எழுதி மாணவர் விவகாரங்களின் உதவித் துணை வேந்தருக்கு சமர்ப்பித்து அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் அந்தத் திட்டங்கள் தொடங்கப்படும். அந்தத் தாள்களை தயார் செய்யும் வேலை தன் தலையில் ஒரு பகுதியாவது விழும் என அவனுக்குத் தோன்றியது. சென்ற ஆண்டு இறுதியில் பரிட்சை முடிந்து விடுமுறைக்குப் புறப்பட்ட போதே இரண்டு மாணவர் சங்கங்களின் தலைவர்கள் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள்.

 

  • ஆனால் அவன் இந்த வாரம் புதிய பருவத்திற்கு யுஎஸ்எம் வளாகத்திற்குள் வந்ததும் அவனுக்குப் புதிய கவலைகள் காத்திருந்தன. மாணவர் விவகாரப் பிரிவில் உதவிப் பதிவாளராகவும் இந்திய மாணவர்கள் நலனுக்குப் பொறுப்பாகவும் இருந்த முத்துராமன் முதல் நாளே அவன் “பர்ஸரி”யில் அந்தப் பருவக் கட்டணம் செலுத்த வந்திருந்த போது அவனைப் பார்த்தார். அவனைத் தனியே அழைத்தார்.

 

  • “கணேசன், இந்த வருஷமும் நம்ப பையங்க ரேகிங் ஆரம்பிப்பாங்க போல இருக்கு. துணைவேந்தர் எவ்வளவோ எச்சரிக்கை குடுத்திருந்தும் நம்ப பசங்க அதுக்குச் சவால் விட்ற மாதிரி நடந்துக்கிறாங்க. புதிய இந்திய மாணவர்கள் ரொம்ப பயந்திருக்காங்க. பல பெற்றோர்கள் வேற எங்கிட்ட வந்து பிள்ளைங்க பத்திரமா இருப்பாங்களான்னு திரும்பத் திரும்ப கேக்கிறாங்க. உன்னைப் போல சீனியர் மாணவர்கள்தான் இதைத் தடுக்க முடியும். ஒரு கண்ணு வச்சிரு. ஏதாச்சும் நடந்தா எங்கிட்ட வந்து சொல்லு” என்று சொல்லிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க அவசரமாக நகர்ந்து விட்டார்.

 

  • முதல் நாளிலிருந்து ஒரு சிறிய மாணவர் குழு ரேகிங்கிற்குத் தயாராகி வருகிறது என்பதை கணேசன் கேள்விப் பட்டிருந்தான். எத்தனை கடுமையான காவல்கள் போட்டிருந்தாலும் எண்ணாயிரம் மாணவர்கள் அலையும் இந்த வளாகத்தை எத்தனை அதிகாரிகள் இருந்தாலும் கண்காணிக்க முடியாது. புதிய பழைய மாணவர்களைப் பிரித்து வைக்கவும் முடியாது. அவர்கள் கலந்து பழக அனுமதிக்க வேண்டும். அது முக்கியம். அப்போதுதான் சகோதரத்துவம் வளரும். ஆனால் அதைப் பயன் படுத்திக் கொண்டு சொந்தச் சகோதரர்களை எல்லை மீறி எள்ளுவதும் அசிங்கமாக நடத்துவதும் சில சீனியர் மாணவர்களுக்கு விகாரமான விளையாட்டாக இருந்தது.

 

  • அந்தச் சூழ்நிலையில்தான் அந்த இரண்டாம் நாள் சில ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் ஆட்டுக் குட்டிகளாக அகப்பட்டுக் கொண்டு அவதிப்பட்டதை அவன் பார்த்தான்.

 

  • இந்த மாணவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை. அந்தப் பெண்ணை இந்த முரடர்களிடமிருந்து காப்பாற்றி அவளை விடுதியில் கொண்டு விட்டு வந்தது முதல் அவன் சிந்தனை இந்த மாணவர்களையும் அவர்களின் அட்டகாசத்தில் பயந்து மருண்டு கலங்கிப் போயிருந்த பெண்ணைப் பற்றியுமே மாறி மாறிச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயரைக் கூட அவன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவள் இருந்த பயத்தில் தன்னைப் பார்த்தாலும் அவளை மானபங்கம் செய்ய வந்திருக்கும் முரடன் போலத்தான் தெரிந்திருக்கும். ஆகவேதான் அவளிடம் அவன் அதிகம் பேசவில்லை. அவளைப் பாதுகாப்பாக அவளுடைய தேசாவில் சென்று விட்டு விடுவதே முக்கியமாகப் பட்டது.

 

  • ஏன் இந்த மாணவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? அவர்கள் வளர்ப்பில் உள்ள குற்றமா? அவர்கள் படிப்பில் உள்ள குறைபாடுகளா? அவர்கள் சமுதாயப் பின்னணி அப்படிப் பட்டதா? ஏன் சமுதாய, பல்கலைக் கழகப் பண்பாடுகளுக்கு அந்நியமாக இருக்கிறார்கள்?

 

  • இந்த மாணவர்கள் எல்லாம் அவனுக்கு அறிமுகமானவர்கள்தாம். எல்லாரும் இடை நிலைப்பள்ளிக் கூடங்களில் நல்ல தேர்வெண்கள் வாங்கியவர்கள். எஸ்டிபிஎம் என்னும் இடைநிலைப் பள்ளிக்குப் பிந்திய தேர்விலும் தேர்வு பெற்று பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றவர்கள். சிலர் வேண்டுமானால் அரசாங்கம் விதிக்கும் கோட்டா முறையினால் குறைந்த மதிப்பெண்கள் இருந்தாலும் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றிருக்கலாம். அறிவியல் துறையில் இந்த மாதிரிக் குறைந்த மதிப்பெண்களுடன் வந்து இடம் பெற்றுள்ள சில மாணவர்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் மற்றவர்கள் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்று போட்டியில் வென்று வந்த புத்திசாலி மாணவர்கள்தான். ஆண்டுக்கு ஆண்டு பள்ளிக்கூடங்களிலிருந்து உதிர்ந்து விடும் மற்ற சோதா இந்திய மாணவர்களைப் போன்றவர்கள் அல்ல.

 

  • ஆனால் அவர்கள் படிப்பில் உள்ள அந்தப் புத்திசாலித் தனத்தை அவர்கள் பேச்சிலோ நடத்தையிலோ காண முடியவில்லை. உண்மையில் இடைநிலைப் பள்ளிக் கூடங்களில் இருந்த அவர்களுடைய படிப்பு அக்கறை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தவுடன் அடியோடு குறைந்து விட்டது போலிருந்தது. புதிதாகத் தங்கள் குடும்பங்களிலிருந்து கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் முற்றாக வீணடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

 

  • அவர்களின் குடும்ப வளர்ப்பு, குடும்பக் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதையும் கணேசனால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டேயிருக்க ஆசைப் படுகிறார்கள். கேன்டீனில் மரத்தடியில் புல்வெளிகளில் என்னேரமும் கூடியிருப்பார்கள். சத்தமாகப் பேசுவார்கள். சத்தமாகச் சிரிப்பார்கள். மற்ற இன மாணவர்கள் வேடிக்கை பார்த்து சுட்டிக் காட்டிச் சிரிக்குமளவுக்குப் பேசுவார்கள். மாலையில் இரவில் நள்ளிரவிலும் இவர்கள் கூடிப் பேசுவதைக் காணலாம்.

 

  • கணேசன் ஆரம்ப காலத்தில் இவர்களோடு இருந்திருக்கிறான். பல்கலைக் கழகத்தில் சேர்ந்த புதிதில் கலாச்சாரத் தாகத்தோடு தமிழ் மாணவர்கள் என்ற சகோதர பாசத்தோடு அவர்களிடம் சேர்ந்திருக்கிறான். ஆனால் போகப்போக அவர்களுடைய கலாச்சாரம் அவனுக்கு அந்நியமானதாகத் தெரிந்தது. அதிலுள்ள கொச்சைத் தனத்தை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

 

  • தமிழ்ப் பேச்சு என்றாலும் முற்றாகக் கொச்சையாக இருக்கும். நிறைய மலாய் வார்த்தைகள் இருக்கும்.”ஆமாலா, இல்லைலா” என்று ஏராளமாக “லா” போட்டுப் பேசுவார்கள். பேசும் விஷயம் எல்லாம் “குட்டிகள்”, சினிமாவில் வரும் காமாந்தகாரங்கள், மற்றவர்களைப் பற்றிய வம்பளப்பு. இதற்கிடையே “தமிளன்” “தமிளன்” என்ற பெருமித உணர்வும் சகோதர பாசமும் குறையாமல் வழியும். ஆனால் இதே கூட்டம் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தங்கள் தமிழ்ச் சகோதரிகளை வம்புக்கிழுக்கவும் கேலி கிண்டல் செய்யவும் தயங்குவதில்லை. இந்த சகோதர பாசம் கூட்டமாக சிகிரெட் பிடிப்பது, பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியில் உள்ள காப்பிக் கடையில் உட்கார்ந்து பீர் குடிப்பது என்று பொங்கி வழிந்தது.

 

  • கணேசன் மெதுமெதுவாக அவர்களிடமிருந்து விலகிவிட்டான். இதே பல்கலைக் கழகத்தில் முறையான இன, மொழி உணர்வோடு ஒரு சிறிய குழு இருந்தது. அவர்கள் இந்திய பண்பாட்டுச் கழகத்தில் இணைந்து கலை விழாக்களும் சமய விழாக்களும் நடத்தினார்கள். மாணவர்களுக்குக் கடனுதவி வழங்க நிதி திரட்டினார்கள். ஆண்டுக்கு ஒரு முறை தோட்டப்புறங்களுக்குச் சென்று தங்கி சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களில் தமிழ் நன்றாகத் தெரிந்த ஒரு குழு பேச்சுப் போட்டிகள், தமிழ் வகுப்பு என நடத்தியது. கணேசன் அவர்களோடு ஒன்றாக இருந்தான். சென்ற ஆண்டிலிருந்து அந்தச் சங்கத்துக்கு துணைத் தலைவராகவும் இருக்கிறான்.

 

  • அவனுடைய நிர்வாகத்துறை சிறப்புப் பாடம் மிகக் கடுமையாக இருந்தாலும் மாணவர் சங்க நடவடிக்கைகளை அவன் புறக்கணிப்பதில்லை. “ஐசெக்” என்ற பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் அக்கறையுள்ள அனைத்துலக மாணவர் சங்கத்தின் பல்கலைக் கழக கிளையில் பொருளாளராக இருந்தான். இதனால் அனைத்துலக மாணவர் சங்கங்களில் உள்ள மாணவர்களை அறிமுகப் படுத்திக்கொள்ள முடிந்தது.

 

  • அவனுக்கு நீச்சல் சிறுவயதிலிருந்தே தெரியும். ஆகவே நீச்சல் குளத்து உயிர் காப்புச் சங்கத்திலும் இடம் பெற்று அந்த சங்கத்தின் செயலாளராகவும் இருந்தான். இந்த நடவடிக்கைகளினால் புள்ளிகள் அதிகம் பெற்று இந்த மூன்று ஆண்டுகளிலும் விடுதியில் தங்க அவனுக்குத் தொடர்ந்து இடம் கிடைத்தது.

 

  • இந்த தறுதலை மாணவர்கள் இந்திய பண்பாட்டுக் கழகத்திடம் சேருவதில்லை. ஆனால் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து கூச்சலிட்டுக் கலாட்டா செய்வார்கள். கேலி செய்வார்கள். கெட்ட வார்த்தைகளைக் கூவிவிட்டு ஒளிந்து கொள்வார்கள். இதனால் இந்த இரு குழுக்களிடையே அடிநாதமாக ஒரு பகைமை உணர்வு பரவிக்கொண்டே வந்தது.

 

  • இந்தப் பகைமையின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தங்களுக்குள் ஒரு ரகசியச் சங்கம் அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் கிளம்பியது. தங்களை “காராட் கேங்” என்று அழைத்துக் கொண்டார்கள். அவர்கள் அடையாளமாக ஒரு காதில் கடுக்கண் அணிந்து கொண்டார்கள். தலையை மொட்டையாக வெட்டிக் கொண்டார்கள்.

 

  • பல்கலைக் கழகம் இவர்களைக் கவனித்துக் கொண்டு வந்தது. ஆனால் எல்லாவற்றையும் ரகசியமாகச் செய்வதில் இவர்கள் திறமை சாலிகளாக இருந்தார்கள். இவர்களை நேரடியாகக் கேட்டால் இப்படி ஒரு கூட்டம் இருப்பதை இவர்கள் உறுதியாக மறுத்து விடுவார்கள்.

 

  • இப்படி ஒரு ரகசியச் சங்கம் இருப்பது பற்றித் தான் கேள்விப் பட்டிருப்பதை மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் சில சமயம் இந்தியப் பண்பாட்டுக் கழக மாணவ அலுவலர்களிடம் பேசி எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் ஆலோசனை எதையும் இந்த மாணவர்கள் கேட்கும் நிலையில் இல்லை என்பதை அதன் நடப்பாண்டுத் தலைவர் உதவித் துணை வேந்தரிடம் விளக்கி விட்டார்.

 

  • காராட் கேங்கின் அட்டகாசம் கடந்த ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கையின் போது உச்ச கட்டத்தை எட்டியது. பல்கலைக் கழகம் இந்த நடவடிக்கையை முற்றாகத் தடை செய்திருந்தாலும் மாணவர்களை ஆங்காங்கே ரேகிங் செய்கிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணமிருந்தன. குறிப்பாக இந்திய மாணவர்கள் மட்டுமே தீவிரமான ரேகிங்கில் ஈடுபடுவதாகவும் அதற்குப் பலியாகுபவர்களும் இந்திய மாணவர்களே என்றும் தெரிந்தது. இந்த ரேகிங்கினால் வதை பட்ட மாணவர்கள் பயத்தினால் வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். அதைத் தெரிந்திருந்த சீனியர் மாணவர்களும் இந்திய இனப் பற்றின் காரணமாக குற்றம் செய்தவர்களை மூடி மறைத்தார்கள். காராட் கேங் என்பது இந்திய மாணவர்களின் மனதில் திகிலை எழுப்பும் விஷயமாக வளர்ந்து விட்டிருந்தது.

 

  • போன ஆண்டில் இந்திய மாணவர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் முருகேசு இந்திய மாணவர்கள் இப்படிச் செய்வதை ஆத்திரத்துடன் கண்டித்துப் பேசினார்.

 

  • “இந்த காராட் கேங் மாணவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் திருந்துபவர்கள் அல்ல. வெளிப்படையாக சமுதாயத்தைப் பகைத்துக் கொள்ளுவது அவர்களுக்குப் பெருமையான செயலாக இருக்கிறது. ஆகவே இப்படியெல்லாம் செய்வார்கள் என்பது எதிர் பார்க்கப் பட்டதுதான். ஆனால் இவர்களை இந்தியர் என்ற இனப்பற்றுடன் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களே, நீங்கள்தான் கண்டிக்கத் தக்கவர்கள். இவர்கள் நம் இனமாக இருக்கலாம். ஆனால் நம் இனத்தின் விஷ வித்துக்கள். கோடரிக் காம்புகள். இவர்களை களையெடுக்காவிட்டால் நம் இனம் தழைக்காது. ஆகவே ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

 

  • “புதிய மாணவர்கள் இவர்களுக்கு பயந்து பயந்து சாக வேண்டாம். தமிழர்களின் வீரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால் உண்மை வாழ்க்கையில் படு கோழைகளாக இருக்கிறோம்.

 

   • “பாதகம் செய்பவரைக் கண்டால், – நீ

 

   • பயங் கொள்ளலாகாது பாப்பா!

 

   • மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்

 

   • முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!”

 

  • என்று பாரதியார் யாருக்காகப் பாடினார்? அக்கிரமம் செய்யும் மாணவர்களை எதிர்க்கக் கற்றக் கொள்ளுங்கள். அவர்கள் முகத்தில் ஓரிரு முறை உமிழ்ந்தால் எல்லாம் திருந்துவார்கள்” என்று அவர் கூறியதைக் கேட்டு கூட்டம் உற்சாகமாகக் கைதட்டியது.

 

  • ஆனால் காராட் கேங்கின் அக்கிரமங்கள் இந்த ஆண்டிலும் நீடித்துள்ளன. அதிகாரிகள் பலவிதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அவர்கள் செயல்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிப் பெண்ணும் பையனும் மாட்டிக் கொண்டார்கள். அந்தப் பெண்ணின் அழகிய பயந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்தப் பையன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய காட்சியும் நினைவுக்கு வந்தது. சிரித்துக் கொண்டான்.

 

  • உறக்கம் வருவதுபோல இருந்தது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விளக்கை அணைக்க அவன் எழுந்த போது அவன் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்தான். கதவின் முன்னால் ராஜன் நின்றிருந்தான். இவன் ஏன் இந்த நேரத்தில்… அறையைத் தேடி..?

 

  • என்ன என்பது போல் அவனைப் பார்த்தான் கணேசன்.

 

  • “கீழ வா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ராஜன்.

 

  • “என்ன பேசவேண்டியிருக்கு இந்த நடு ராத்திரியில?” என்று கேட்டான் கணேசன்.

 

  • “கீழ வா தெரியும்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று இறங்கிப் போனான் ராஜன்.

 

  • இது நல்லதற்கா கெட்டதற்கா என்று தெரியவில்லை. ஆனால் இறங்கி என்னதான் என்று பார்த்து விடுவோமே என்று சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனான்.

 

  • வரவேற்பறை விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் இருந்தது. பெரும்பாலும் காலியாகவே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தவாறு இரண்டு மூன்று மாணவர்கள் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிச்சம் மட்டுமே அந்த அறையை மங்கலாக ஒளிப்படுத்திக் கொண்டிருந்தது. தூரமூலையில் நான்கு இந்தியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களாகத்தான் இருக்க வேண்டுமென கணேசன் அவர்களை நோக்கிப் போனான்.

 

  • ராஜன் அங்கிருந்தான். காராட் கேங்கைச் சேர்ந்த இன்னொரு மாணவன் இருந்தான். கணேசன் அவனைப் பார்த்திருக்கிறான். அவன் பெயர் தெரியவில்லை. மற்ற இரண்டு பேர்கள் புதியவர்கள். முகத்திலும் உடையிலுமிருந்து வெளியாட்கள் போலத் தெரிந்தது. அவர்கள் முறைப்பிலிருந்து இவர்கள் நட்போடு வரவில்லை எனத் தெரிந்தது.

 

  • ராஜன் எழுந்து நின்றான். அடுத்தவர்களுக்குக் கேட்காத தணிந்த குரலில் “கணேசன். இன்னைக்கு என்னை “மாலு” (அவமானம்) பண்ணிட்ட இல்ல! அதுக்காக ஒன்ன எச்சரிச்சிட்டுப் போகத்தான் வந்தோம்!” என்றான்.

 

  • கணேசனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. குற்றத்தையும் செய்து விட்டு இத்தனை தைரியமாகப் பேசுகிறானே! “நீ செஞ்ச அநியாயத்துக்கு எச்சரிக்கை எனக்கா ராஜன்? இவங்க யாரு?” என்று புதியவர்களைக் காட்டிக் கேட்டான்.

 

  • புதியவர்களில் ஒருத்தன் எழுந்து வந்து கணேசனின் தோளில் கைவைத்தான். “இதோ பாரு பிரதர்! நாங்க யாரு தெரியுமா? ஆறு சீட்டு கேங் கேள்விப் பட்டிருக்கியா! நாங்கதான்.”

 

  • கணேசன் கேள்விப்பட்டிருக்கிறான். பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே உள்ள சுங்கை டுவா பகுதியில் இயங்கிவரும் ஒரு ரகசியக் கும்பல். வெட்டுக்கும் குத்துக்கும் அஞ்சாத கும்பல். இவர்கள் எப்படி பல்கலைக் கழகத்தின் வளாகத்துக்குள் வந்தார்கள்?

 

  • “தோ பாரு! இந்த ராஜன் என்னோட தம்பி மாதிரி. அவங்ககிட்ட ராங்கி பண்ணாத. நம்பள்ளாம் தமிளங்க இல்ல? ஒத்துமையா இருக்கணும். அவன பத்தி நீ ஏதாவது மேல போய் சொன்ன, உனக்கு அது நல்லதில்ல!”

 

  • தொலைக்காட்சிப் பெட்டியின் இருண்டும் பிரகாசித்தும் வரும் ஒளியில் அந்த ஆளின் முகம் ஒரு அசல் தமிழ்ப்பட வில்லன் முகம் போல் இருந்தது. கணேசனுக்கு ஆத்திரம் புரண்டு கொண்டு வந்தது. கத்தி உதவிக்கு ஆட்களைக் கூப்பிடலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில். அவர்கள் போவதற்கு எழுந்து விட்டார்கள்.

 

  • அந்த முரடன் வந்து கணேசனின் நெஞ்சில் கைவைத்தான். லேசாக அழுத்தினான்

 

  • “ஒத்துமையா போயிடு பிரதர். தமிளனுக்குத் தமிளன் சண்ட வேணாம். ஒரு தடவதான் வார்னிங். அடுத்த தடவ பாராங்கோ, ஆசிட்டோ சொல்ல முடியாது. வௌங்குதா?”

 

  • எழுந்தார்கள். மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உதைத்து ஸ்டார்ட் பண்ணி சத்தமாக வெளியேறினார்கள். இருளில் வந்து இருளிலேயே உட்கார்ந்து கட்டைக் குரலில் பேசிவிட்டு இருளோடு கலந்து மறைந்தார்கள்.

 

  • கணேசன் கொஞ்ச நேரம் அங்கிருந்த சோபாவில் அதிர்ந்து உட்கார்ந்து விட்டான்.

 

  • முதலில் ஆத்திரம்தான் பொங்கிப் பொங்கி வந்தது. வெளியிலுள்ள குண்டர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? அப்படித் திருட்டுத் தனமாக வந்தவர்கள் துளியும் பயமில்லாமல் ஒரு மாணவனை மிரட்டுவதா? அதற்குப் பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்களே துணையா? இந்த ராஜன் தன் நெஞ்சில் இத்தனை தைரியம் கொண்டிருக்கிறானா?

 

  • அப்புறம் பயம் வந்தது. இவ்வளவு தூரம் வந்தவர்கள் இனி தீமை செய்யத் தயங்குவார்களா? சொன்னது போல இருட்டில் தன்னை அரிவாளால் வெட்டவோ, முகத்தில் அமிலம் ஊத்துவதற்கோ தயங்குவார்களா? போலிசுக்கே பயப்படாதவர்கள் இந்தப் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கா பயப்படுவார்கள்?

 

  • இதுவரை இந்த பல்கலைக் கழக மாணவர்களின் ரகசியக் கும்பல் நடவடிக்கைகள் கேலியும் கிண்டலும் பேச்சும் குடியும் என்ற அளவில் எரிச்சலூட்டுவதாக மட்டிலும்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் அது வெறும் எரிச்சலாக இல்லாமல் வன்செயலின் எல்லையைத் தொட்டுவிட்டது.

 

  • தனக்கு இந்தச் சண்டையெல்லாம் தேவைதானா? படிக்க வந்தவன் மற்றவர்கள் யார் எப்படிப் போனால் என்ன என்று தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போனால் நல்லதில்லையா?

 

  • இல்லை என்று சொல்லிக் கொண்டான். பேராசிரியர் முருகேசு சொன்னது சரிதான். இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர்களிடையே நச்சுக் கன்றுகள் துளிர்த்துள்ளன. இவற்றை இப்போதே களையா விட்டால் இவை வளர்ந்து வேர் பிடித்து விடும். ஏற்கனவே தமிழ்ச் சமுதாயத்தின் அடிப் பகுதிகளில் இவ்வாறான அவலங்கள் தோன்றியிருப்பதற்கு மொத்தமாகச் சமுதாயத்தின் அக்கறையின்மைதான் காரணம். அது போல இந்தப் பல்கலைக் கழகத்துக்கு உள்ளும் நடக்க அனுமதிக்கக் கூடாது.

 

  • மற்ற இன மாணவர்கள் அறிவுத் தெளிவு பெற்று ரேகிங் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு தங்கள் இனப் புதிய மாணவர்களுக்கு கல்வி, புறப்பாட நடவடிக்கைகளுக்கு ஆக்கரமான வழிகாட்டிகளாக மாறிவிட்ட பிறகு இந்திய மாணவர்கள் மட்டும் இப்படி வெறி பிடித்துத் திரிவது ஏற்கனவே பல்கலைக் கழக மாணவர்களிடையே அவமானப் பேச்சாகி விட்டது. இந்த நிலையில் ரகசியச் சங்க நடவடிக்கைகள் வெளியார் கும்பல்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் இந்த இனத்திற்கு ஏற்படும் அவமானத்தை இரத்தம் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டி வரும். இதை அனுமதிக்கக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிக் கவலையில்லை. மாணவர்களின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

 

  • உண்மையில் இன்று காலை நடந்த சம்பவத்தைப் பற்றி பல்கலைக் கழக அதிகாரிகளிடம் அவன் முறையீடு செய்ய மனமில்லாமல் இருந்தான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோ பையனோ முறையீடு செய்தால் அவர்களுக்காகச் சாட்சி சொல்லத் தயாராக இருந்தான். ஆனால் தானாகச் சென்று முறையீடு செய்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போடவேண்டாமென்று இருந்தான். ஆனால் இப்போது ராஜன் எல்லை மீறிவிட்டான். தன்னை நேரடியாக மிரட்டி என்னையே பாதிக்கப் பட்டவனாக ஆக்கிவிட்டான்

 

  • “மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்று பேராசிரியர் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன. உமிழத்தான் வேண்டும். அந்த ஒரு மொழி மட்டுமே அவர்களுக்குப் புரியும் என்று தோன்றியது. நான் எச்சில் உமிழாவிட்டால் அவர்கள் என் முகத்தில் அமிலம் உமிழ்வார்கள்.

 

  • மணியைப் பார்த்தான். இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் போய் விடுதியின் பெங்காவாவையோ பாதுகாப்பு அதிகாரிகளையோ தொந்திரவு செய்ய வேண்டாமென நினைத்தான். நாளைக் காலையில் முதல் வேலையாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த தள்ளிப் போடும் முடிவு பெரிய இக்கட்டில் கொண்டு விடப் போகிறது என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

  ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

2  எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15

15  அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31

31  மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து