Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1

 

காதலினால் அல்ல!
ரெ.கார்த்திகேசு

முன்னுரை

  • காதல் என்பது உன்னதமான பொருள்.

 

  • காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எல்லாத் தலைமுறைகளிலும் காதல் கதைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.

 

  • ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படத் தொடங்கியபோது, ஒரு பெண் காதலிப்பது — அதாவது தானே தனக்குத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது — ஒரு தவறு என்று கருதப்பட்டது. அவள் பெற்றோர்கள் சொற்படி அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடவனை மணப்பது என்பதுதான் அவளுக்குள்ள கடமை எனக் கருதப்பட்டது. ஆரியர்கள் பெண்ணுரிமையை அடக்கி வைத்த காலத்திலிருந்தே இது ஆரம்பித்திருக்கலாம்.

 

  • இன்று நாம் அறிவொளி பெற்ற சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்களுக்குக் கல்வி பெருகிவிட்டது. பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களை விட (அறிவிலும் அனுபவத்தாலும் இல்லாவிட்டாலும்) கல்வியில் உயர்ந்தவர்களாக இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர் சமுதாயத்தில் இது உண்மை.

 

  • ஆனாலும் இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. கல்வியில் உயர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட, தன் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தன் உரிமை என்று தெரிந்திருந்தும், காதலிப்பதில் ஒரு பயமும் வெட்கமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகக் காதலிக்க விடுவதில் சமுதாய பயமும் நாணமும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் தங்களுக்கே மிகப் பெரிய முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இன்னமும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.

 

  • ஆனால் உடற்கூறு ரீதியாக இந்த இளம் வயதில் ஏற்படுகிற காதல் இதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு எழத்தான் செய்கிறது. அரும்புகிற கட்டத்தில் சமுதாயக் கட்டுப்பாடுகளை அது மீறத்தான் துடிக்கிறது. அறிவு இடையிடையே வந்து உறுத்தினாலும் இயற்கை உணர்ச்சி கொப்பளிக்கத்தான் செய்கிறது. இப்படி அறிவுக்கும் இயற்கை உணர்ச்சிக்கும் நடக்கின்ற மனப் போராட்டங்கள் காதலர்களுக்கு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் ஒரு சாகச இன்பத்தையும் ஏற்படுத்தி அவர்களை அலைக்கழிக்கின்றன.

 

  • இந்த உணர்வுகளை வடித்துப் பார்க்கத்தான் இந்தக் கதைப் பின்னணியை நான் அமைத்துக் கொண்டேன். இந்தக் காதல் விஷயத்தில் இந்த நாவலில் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பரிமாணங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

 

  • இந்த நாவலை எழுதியதன் இன்னொரு காரணம் 24 ஆண்டுகளாக நான் கண்டு , நடந்து, பழகி, பருகிய மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் இயற்கை அழகின் ஒரு பகுதியையாவது ஒரு நாவலில் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆசையும்தான். நாவல் பூர்த்தியடைந்து அதை மீண்டும் படித்த போது இந்த வளாகத்தின் இயற்கை எழில் என் எழுத்துத் திறத்தை விட மிகப் பெரியது என்று தெரிந்து கொண்டு வியந்து குனிந்திருக்கிறேன்.

 

  • இயற்கை என்பது மேலும் உன்னதமான பொருள்.

 

  • அன்புடன்,

 

  • (ரெ.கார்த்திகேசு)
  • —————

 


 

காதலினால் அல்ல!
1
 

  • அந்த வெளிர் நீலக் கடல் பரப்பை அகிலா ஆசையுடன் பார்த்தாள். காலை எட்டு மணி இளவெயிலில் அதன் மேனியில் பளபளப்பு ஏறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் கண்களைத் தாழ்த்தினால் பாலச் சுவரில் விட்டு விட்டுக் கட்டியுள்ள சிமிந்திக் கம்பங்களூடே அது துண்டு துண்டாய் உடைந்து படபடத்தது. அந்த பனிரெண்டு கிலோமீட்டர் பினாங்கு பாலத்தில் விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து பார்க்கும் போது ஒரு சினிமாவில் வருகிற மாதிரி அந்தத் தூண்கள் “விஷ் விஷ்” என்று செங்குத்துக் கோடுகளாய் ஓடி மறைந்தன. ஆனால் பாலத்தின் பக்கச் சுவர்களின் விளிம்பின் மேலாகக் கண்களை ஓடவிட்டால் கடல் எல்லையில்லாமல் நீண்டிருந்தது.

 

  • வலது பக்கத்தில் ஜியார்ஜ் டவுனின் கட்டடங்கள் வான் வெளியில் செங்குத்துக் கற்களாய் நினறிருந்தன. கொம்தார் கட்டடம் எல்லாக் கட்டடங்களுக்கும் மேலே உயர்ந்து கொடிக்கம்பமாய் நின்றிருந்தது. பினாங்குத் தீவுக்கும் அக்கரையிலுள்ள பட்டர்வொர்த் துறைமுகத்திற்குமிடையே உள்ள வடநீரிணையில் பல கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. பிரயாணிகள் •பெர்ரிகள் ஏராளமான ஜன்னல்கள் அமைத்த பெட்டிகளாய் மிதந்து கொண்டிருந்தன. இவற்றுக்கு ஒரு கழுத்தும் தலையும் அமைத்தால் பிரம்மாண்டமான அன்னங்கள் போல இருக்கும் என அகிலா வேடிக்கையாகக் கற்பனை பண்ணிக் கொண்டாள்.

 

  • இடது பக்கத்தில் காட்சிகள் இன்னும் பசுமையாக இருந்தன. கடலுக்குக் கோணல்மாணலாய்க் கரை போட்ட மாதிரி ஜெர்ஜாக் தீவின் குன்றுகள் தெரிந்தன. ஒரு குறுகிய வெண்மணல் திட்டு அந்த குன்றுகளுக்கு அடிக்கோடிட்டிருந்தது. அந்த விரிந்த கடலில் அந்த நேரத்தில் ஒரே ஒரு சிறிய இயந்திரப் படகு மட்டும் “டுப் டுப்” என்று சத்தமெழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. எதிரில் பாயான் லெப்பாசின் புதிய மின்னியல் தொழிற்சாலைகளும் தூரத்தில் விமான நிலையத்தின் ஓடும் பாட்டையும் தெரிந்தன.

 

  • கொஞ்சம் தலை நிமிர்ந்த போது கடலுக்கும் வானுக்குமிடையே உள்ள வெளியில் விமானம் ஒன்று கோழிக் குஞ்சுக்குக் குறி வைத்து இறங்கும் பருந்து போல நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தது. விமானத்தின் வால் பகுதியில் பொறித்திருந்த மாஸ் நிறுவனத்தின் கிளந்தான் பட்டம் அகிலாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அதன் நீண்ட முன்னிறக்கைகள் வலது பக்கம் கொஞ்சம் இறங்கி நிமிர்ந்து நேராகின. பருந்தின் விரித்த கால் நகங்கள் போல் அந்த விமானத்தின் சக்கரங்கள் வெளியாகி நீண்டிருந்தன. அதன் பூதாகார உடல் தரையைத் தொட விரைந்து கொண்டிருந்தது.

 

  • தன் லட்சியங்களும் தரை தொடுகின்ற நேரம் இதுதான் என அகிலா எண்ணிய போது அவள் மனம் கிளுகிளுத்தது. இரண்டு வாரங்களுக்கு முன் பினாங்கு அஞ்சல் முத்திரையிட்ட கனமான நீண்ட உரையில் “உங்களுக்கு மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் இயலில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் பத்திரங்களுடன் …. தேதி இப்பல்கலைக் கழகத்தின் “தேசா கெமிலாங்” மாணவர் விடுதியில் வந்து பதிந்து கொண்டு..” என்ற கடிதம் வந்த அன்றே அவள் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது.

 

  • எவ்வளவு துன்பங்களுக்குப் பின்! எத்தனை தூங்கா இரவின் படிப்புகள்! ஒவ்வோர் ஆண்டும் அவள் முந்தைய வகுப்பு மாணவிகள் பரிட்சைப் படிகள் ஏற ஏற, பல்கலைக் கழகங்களில் இடம் பெற்று விடை பெற்றுப் போகப் போக “நம்மால் முடியுமா? முடியுமா?” என்று எத்தனை பதைபதைப்புகள்!

 

  • எஸ்டிபிஎம் முடிவு வருவதற்கு முந்திய இரவில் என்ன பாடு பட்டது மனம்! அன்றிரவு தூங்காமல் ஜன்னலை வெறித்துப் பார்த்திருந்து, பெயிலாகப் போகிறோம் என்று பயந்து, தோழிகள் சிரிப்பதாகக் கனவு கண்டு, பத்து முறை எழுந்து விளக்குப் போட்டுத் தண்ணீர் குடித்து, “தூங்கம்மா!” எனத் தாயைக் கெஞ்ச வைத்து, மறுநாள் ஒரு “ஏ” இரண்டு “பி”, இரண்டு “சி” என்று அறிந்து வாய் பிளந்து சிரித்து குதித்து தோழிகளைக் கட்டிக்கொண்டு, அந்த படபடப்பில் காரில் காத்திருந்த அப்பாவை மறந்து விட்டு, அப்புறம் ஓடிவந்து அவரிடம் காட்டி அவர் தன் கன்னத்தில் முத்தமிட்டு…

 

  • படபடப்புகள் முடியவில்லை. எந்தப் பல்கலைக் கழகம், என்ன பாடம், எப்படி வரிசைப்படுத்துவது என்று பலரிடம் ஆலோசனை கேட்டு அலைந்து, “நீ அறிவியல் மாணவி. பௌதிகத்தில் “ஏ”, கணக்கில் “பி”, ரசாயனத்தில் “பி”, வாங்கியிருக்கிறாய். •பார்மசி முதலில் போடு, கம்ப்யூட்டர் இரண்டாவது போடு” என்ற ஒரு பட்டதாரி ஆசிரியர் ஆலோசனையை ஏற்று, மனுச் செய்து நாட்களை எண்ணிக் காத்திருந்து…

 

  • “அதோ அந்தப்பொண்ணுக்கு இடம் கெடச்சி லெட்டர் வந்திருச்சின்னு சொல்றாங்களே! உனக்கு ஏன் இன்னும் வரல…?” என்று அப்பா பீதியை எழுப்பி, “கெடைக்கலன்னா லட்டர் அனுப்ப மாட்டாங்களாம்! ரெண்டு வாரம்வரைக்கும் வரலன்னா இல்லன்னுதான் அர்த்தம்” என்ற ஒரு தகவல் கேட்டு அன்றிரவு அழுது…

 

  • மறுநாள் காலையில் “இடம் கெடைக்காதவங்க மஇகா கல்விக் குழுத் தலைவரப் போய்ப் பாக்கச் சொல்றாங்கள, கோலாலம்பூர் போய் பாத்திட்டு வந்திருவமா…” என்று பேசிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த அஞ்சல்காரர் வீசிப்போன தடிப்பான உரையில் செய்தி கிடைத்து,..

 

  • கடித்தைப் பார்த்ததும் வாய்திறந்து சிரித்த அப்பா அப்புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களில் ஊறிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். “என்ன அப்பா?” என்று கேட்டவளை அணைத்துக் கொண்டார்.

 

  • “இல்லம்மா! இது ரொம்ப சந்தோஷமா… எனக்குப் பேசவே முடியில. எங்கப்பா, உன் தாத்தா, தோட்டத்தில தொழிலாளியா இருந்தவரு. அவருக்கு மகனாப் பொறந்து தமிழ்ப் பள்ளிக்கூடத்தில படிச்சி ஒரு தமிழ் வாத்தியாராவும் தலைமை ஆசிரியராவும் நான் வந்தேன். அதுதான் என்னால ஏற முடிஞ்ச உயரம். நீ பாரு, பட்டதாரியாகப் போற, அதுவும் கம்ப்யூட்டர் துறையில! நம்ம குடும்பத்தில பல்கலைக் கழகத்தில அடியெடுத்து வைக்கிற முதல் ஆள் நீதான். என் பரம்பரைய உயர்த்தப் போற, அந்த சந்தோஷம் தாங்க முடியில…!” அவளும் ஆனந்தத்தில் அழுதாள், அம்மா வந்து உச்சி மோந்து உட்கார வைக்கும் வரை.

 

  • அதன் பிறகு எல்லாம் அத்தனை வேகத்தில் நடந்தன. முதலில் சாமான்கள் வாங்கும் படலம்: பள்ளிக்கூடச் சீருடைகளை மூட்டை கட்டிவிட்டு வகுப்புக்களுக்கு சுதந்திரமாகப் போட்டுச் செல்ல சில ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள், பிளவுஸ், புதிய உள்ளாடைகள், பஞ்சாபி ஆடைகள், அம்மா வற்புறுத்திக் கொடுத்த இரண்டு புடவைகள், எல்லாவற்றையும் திணிக்க புதிதாக ஒரு பேக்.

 

  • பினாங்கு விடுதியில் தங்குவதற்கான தட்டுமுட்டுச் சாமான்கள், “வேண்டாம். வேண்டாம்” என்று மறுத்தும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்கள், அதன் பின் மருத்துவ சோதனை, கட்ட வேண்டிய கட்டணங்களுக்கு பேங்க் டிரா•ப்ட், செலவுக்குப் பணம், தோழிகளிடம் விடைபெறுதல், ஆசிரியர்களிடம் ஆசி வாங்குதல், உடன் வந்தே தீருவேன் என்று அடம்பிடித்த தம்பிக்கு அவன் பள்ளிக்கூடத்திலிருந்து அனுமதி பெறுதல், இன்று காலை ஆறு மணியிலிருந்து பிரயாண ஏற்பாடுகள்… எல்லாம் ஒரு குடைராட்டினத்தில் சுற்றும்போது கண்ட காட்சிகளாக “விர் விர்”ரென்று ஓடிவிட்டன.

 

  • இதோ இது அந்த ஏற்பாடுகளின் கடைசிக்கட்டம். அப்பா காரோட்டிப் போகிறார். தம்பி முன்னிருக்கையில். தான் பின்னாலிருந்து கடலையும் பினாங்குப் பாலத்தையும் வேடிக்கை பார்த்தவாறு…. இது வெறும் பாலமல்ல; தன் முந்திய வாழ்வையும் வளமான எதிர்காலத்தையும் இணைக்கின்ற உறவுப் பாலம். இனி நான்காண்டுகளுக்குத் தன் இல்லமாக இருக்கப்போகும் பல்கலைக்கழகத்திற்கான பாதை.

 

  • “அதோ தெரியுது பாரம்மா, அதுதான் சான்ஸலரி, துணைவேந்தர் அலுவலகம் அப்புறம் பதிவாளர் அலுவலகம் எல்லாம் அங்கதான்!” என்று அப்பா சுட்டிக்காட்டினார். காரின் முன் கண்ணாடிகள் ஊடே மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு குன்றில் கம்பீரமாக நின்றிருந்தது அந்தக் கட்டடம்.

 

  • *** *** ***

 

  • அகிலாவுக்கு அந்தப் பல்கலைக் கழக வளாகம் புதிய உலகமாய் இருந்தது. ஒலிகள், அசைவுகள், வாசனைகள் அனைத்தும் புதியவையாக இருந்தன. இந்த 150 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த நிலப் பரப்பு, ஒழுங்கான நேரான சாலைகள், சாலைகளை நிழலில் அரவணைக்கும் பிரமாண்டமான வரிசை மரங்கள். கைகளில் கோப்புகளை ஏந்தியவாறு துருதுருவென்று அலைகிற மாணவர் கூட்டம்.

 

  • வந்து சேர்ந்த அந்த முதல் நாள் மாணவியாய்ப் பதிவு செய்து கொள்ளும்போது அப்பா முழுக்கவும் உடனிருந்து உதவினார். பதிவுக்கு பேட்ஜ் அணிந்திருந்த சில மூத்த மாணவிகள் உடனிருந்து வழிகாட்டினார்கள். தம்பி பெட்டிகளையும் சாமான்களையும் முக்கி முக்கித் தூக்கினான். “தேசா” என்று அழைக்கப்படும் மாணவர் விடுதிகளில் “கெமிலாங்”கில் (“பிரகாசம்”) இரண்டாம் மாடியில் அகிலாவுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிய அறை. அவளுடைய அறைத் தோழி இன்னும் வரவில்லை. சிறிய படுக்கையும் எழுது மேசையும் இருந்தன. சின்னஞ்சிறு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால் மரங்கள் தெரிந்தன.

 

  • அவளை அறையில் விட்டு விட்டு “இன்னும் எதாச்சும் வேணுமா? காசு போதுமா? அடிக்கடி போன் பண்ணு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு அப்பா தம்பியுடன் திரும்பிப் போய்விட்டார். அவர்கள் போனவுடன் இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்ந்திராத புதிய அனுபவம் பயமாக வந்து கவிந்தது. ஆனால் இங்கு வந்திருக்கிற ஆயிரம் புதிய மாணவர்களுக்கும் இந்த அனுபவம் புதிதுதான் என்ற எண்ணம் ஆறுதலாக இருந்தது. மேலும் அந்தத் தனிமையை எண்ணவே முடியாதபடி அவள் செய்ய வேண்டிய பல காரியங்கள் காத்துக் கிடந்தன.

 

  • பகல் முழுக்க அவள் பல இடங்களுக்கு அலைந்தாள். பல்கலைக் கழகத்தை அவளுக்குப் பழக்கப் படுத்த பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விரிவுரை அறைகளைத் தேடிப்போக வரைபடமும் வழிகாட்டிப் புத்தகமும் கொடுத்தார்கள். விடுதிப் பதிவு, வகுப்புப் பதிவு, நூல்நிலையப் பதிவு, மாணவர் சங்கப் பதிவு, துணைப்பாடப் பதிவு, மொழிப் பதிவு என்று ஏராளமான பதிவுகளுக்கு விளக்க நாள் குறித்து அட்டவணை தந்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் விடுதி முன் கூட்டமாகக் கூடி வரிசை பிடித்துக்கொண்டு மூத்த மாணவிகள் வழிகாட்ட நடநட என்று நடக்கவேண்டியதாயிற்று.

 

  • ஆனால் நடப்பது என்பது இங்கு இன்பமான அனுபவமாக இருந்தது. கால் பரவி நடப்பதற்கு ஆனந்தமான சோலையாக இருந்தது. எங்கும் நிழல் தரும் பிரம்மாண்டமான மரங்கள். மழை மரங்கள், வேப்ப மரங்கள், காட்டுத் தீக்கொழுந்து மரங்கள் இன்னும் அவளுக்குப் பெயர் தெரியாத வெப்ப மண்டல பலவகை மரங்கள். நேரான ஒழுங்கான சாலைகள். புல் வெளிகளினூடே நடைபாதைகள். ஆங்காங்கே உட்கார்ந்து பேச நீண்ட மேசைகள், நாற்காலிகள்.

 

  • அந்த ஜூலை மாதத்து வெயிலில் பூ மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்சானா மரங்களில் பொடிப்பொடி மஞ்சள் பூக்கள் அடர்ந்து பூத்து மரத்தையே மஞ்சள் குளிக்க வைத்திருந்தன. தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் அந்தப் பூக்கள் தரையில் மஞ்சள் கம்பளமாக விரிந்திருந்தன. ஆங்காங்கே காட்டுத் தீக்கொழுந்து மரங்களில் இரத்தச் சிவப்பில் பூக்கள் கிளைகளை மூடியிருந்தன. செர்ரி மரங்கள் போன்ற சில குட்டை மரங்களில் இலைகள் முற்றாக உதிர்ந்து ஊதா நிறப் பூக்கள் மட்டுமே கிளைகளைப் போர்த்திருந்தன. இவற்றினிடையே புதர் போன்ற போகன்வில்லா செடிகளில் வண்ணம் வண்மாய், பொங்குகிற பால் நுரையாய் பல நிறங்களில் பூக்கள் குலுங்கின. மகரந்தத் குடைகளை கவிழ்த்துப் பிடித்ததகு போன்ற செம்பரத்தைப் பூக்களும் பல நிறங்களில் இருந்தன.

 

  • பல்கலைக் கழகப் பொருளாளர் அலுவலகத்தில் முதல் பருவக் கட்டணம் கட்டச் சென்ற போது வழியில் கடலும் பினாங்குப் பாலமும் தெரிந்தன. புல் வெளிகளினூடே நடைபாதைகள். ஆங்காங்கே உட்கார்ந்து பேச நீண்ட மேசைகள், நாற்காலிகள்.

 

  • அந்த ஜூலை மாதத்து வெயிலில் பூ மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்சானா மரங்களில் பொடிப்பொடி மஞ்சள் பூக்கள் அடர்ந்து பூத்து மரத்தையே மஞ்சள் குளிக்க வைத்திருந்தன. தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் அந்தப் பூக்கள் தரையில் மஞ்சள் கம்பளமாக விரிந்திருந்தன. ஆங்காங்கே காட்டுத் தீக்கொழுந்து மரங்களில் இரத்தச் சிவப்பில் பூக்கள் கிளைகளை மூடியிருந்தன. செர்ரி மரங்கள் போன்ற சில குட்டை மரங்களில் இலைகள் முற்றாக உதிர்ந்து ஊதா நிறப் பூக்கள் மட்டுமே கிளைகளைப் போர்த்திருந்தன. இவற்றினிடையே புதர் போன்ற போகன்வில்லா செடிகளில் வண்ணம் வண்மாய், பொங்குகிற பால் நுரையாய் பல நிறங்களில் பூக்கள் குலுங்கின. மகரந்தத் குடைகளை கவிழ்த்துப் பிடித்ததகு போன்ற செம்பரத்தைப் பூக்களும் பல நிறங்களில் இருந்தன.

 

  • பல்கலைக் கழகப் பொருளாளர் அலுவலகத்தில் முதல் பருவக் கட்டணம் கட்டச் சென்ற போது வழியில் கடலும் பினாங்குப் பாலமும் தெரிந்தன.

 

  • அந்தக் குன்றிலிருந்து பார்த்தால் நீண்ட கிளைகள் நீட்டித் தவழ்ந்திருந்த மழைமரங்களூடே கடலும் பாலமும் சட்டமடித்து மாட்டப்பட்ட அழகிய ஓவியங்களாய்த் தெரிந்தன. சூரிய ஒளி பட்டுப் பட்டு கடல் தகதகத்தது.

 

  • மனதில் மகிழ்ச்சி இருந்தது. எஸ்டிபிஎம் பரிட்சையை வெற்றி கொண்ட பெருமை இருந்தது. பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிவிடவில்லை என்ற நிம்மதி இருந்தது. பல்கலைக் கழகத்தில் இடம் பிடித்துவிட்ட களிப்பு இருந்தது. ஒரு கவின் சோலையாக உள்ள இந்தக் கல்விச் சாலையில் இருக்கிறோம் என்ற பெருமிதம் வந்தது. “புதிய வானம், புதிய பூமி” பாட்டு அவள் உதட்டுக்கு வந்தது. தன்னையே வரவேற்க இவையெல்லாம் அமைந்தது போல.

 

  • ஆனால் ஒன்று மட்டும் பல்கலைக் கழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்தே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. இந்த ஒரு வாரம் முதலாண்டு மாணவர்கள் மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் அடுத்த வாரத்தில் மூத்த மாணவர்களும் மாணவியர்களும் தங்கள் புதிய ஆண்டுப் பதிவுக்கு வந்து சேருவார்கள்; அப்போதுதான் அவர்களின் ரேகிங் ஆரம்பமாகும். முன்பு கேட்டிருந்த “நடனமாடு, கொச்சைக் கதை சொல், சட்டையை அவிழு” போன்ற கதைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து மனசு கலவரப்பட்டது. அந்த பயங்கர எதிர்பார்ப்பில் மனதில் இன்னும் அதிகமாக மருட்சி மண்டியது.

 

  • *** *** ***

 

  • அகிலா தன்னுடைய துணை (மைனர்) பாடமாக கணிதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். தனக்குத் தெரிந்த, பழகிய பாடங்களிலேயே நிற்பது நல்லது என அவளுக்குத் தோன்றியது. அறிமுக உரையில் அவளுடைய கணினி இயல் டீன் பேசும்போதும் அதைத்தான் சொன்னார். “இந்தப் பல்கலைக் கழகத்தில் துணைப் பாடமாக நீங்கள் எந்தத் துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அறிவியல் மாணவராக இருந்தாலும் மனித இயலில் கூட துணைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இலக்கியம் கூட எடுக்கலாம். ஆகவே எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழக்கமில்லாத புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து அவதிப்படவேண்டாம்” என்றார்.

 

  • அகிலாவுக்கு இலக்கியத்தைத் துணைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது. அவள் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் கற்றபோதே தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறாள். இடைநிலைப் பள்ளிக்கூடத்தில் மலாய் மொழியில் அதன் தற்கால இலக்கியங்கள் பலவற்றை அறிமுகம் செய்து கொண்டாள். அவளுடைய ஆங்கிலமும் சரளமாக இருந்ததனால் தானாகவே ஆங்கிலத்தில் பொழுது போக்கு இலக்கியங்கள் பலவற்றைப் படித்திருக்கிறாள். எல்லா இலக்கியங்களும் அவளைக் கவர்ந்துள்ளன.

 

  • இந்தப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை வலுவானது என அவள் அறிந்திருந்தாள். தேசிய இலக்கியவாதி ஷனோன் அஹமாட் இங்குதான் பேராசிரியராக இருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். இங்கு மலாய் இலக்கியம் மட்டுமல்லாது ஆங்கில இலக்கியமும், ஆசிய ஆப்பிரிக்க ஒப்பீட்டு இலக்கியமும் சொல்லித் தரப்படுகிறது என்பதையும் வழிகாட்டிப் புத்தகங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இலக்கியம் எடு எடு என ஆசை தூண்டிக் கொண்டே இருந்தது.

 

  • ஆனால் அந்த ஆசையைக் கட்டிப் போட்டுவிட்டாள். இலக்கியம் படிக்க இன்னும் ஆயுசு இருக்கிறது. ஆனால் அதிக பரிச்சயமில்லாத பாடத்தை எடுத்து பட்டத்தைக் கோட்டை விட்டுவிடக் கூடாது. கணக்கு அவளுக்கு எளிதாக வரும். அதை எடுப்பது நல்லது. கணினித் துறைக்கும் அது துணையாக இருக்கும். ஆகவே கணிதத்தையே பதிந்து கொண்டாள்.

 

  • புதன் கிழமை இரவு எல்லா சமயங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சமயச் சொற்பொழிவுகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இந்து சமய மாணவர்கள் விரிவுரை மண்டபம் “வி”யில் கூடவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 

  • அந்த மண்டபத்தில்தான் முதன் முதலாக இந்திய மாணவர்களை அவள் ஒருமொத்தமாகப் பார்த்தாள். கெமிலாங் விடுதியில் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்ட மாலதியுடன் அவள் உட்கார்ந்தாள். மாலதி மனிதவியல் மற்றும் கல்வியியலில் இருந்தாள். ஆசிரியை ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்திருந்தாள். ஏறக்குறைய 80 மாணவர்கள் வந்திருந்தார்கள். இந்திய மாணவர்கள் சுமுகமாகத் தமிழில் பேசி அறிமுகம் செய்து கொண்டார்கள். மலேசியாவின் பல பகுதிகளிலும் இருந்து அவர்கள் வந்திருந்தார்கள்.

 

  • விரிவுரை அரங்கத்தின் உட்காரும் இடம் படிகள் படிகளாக உயரமாகவும் பேச்சாளர் மேடை தாழ்வாகவும் அமைக்கப்பட்டிருந்து. தான் உயரமான இடத்திலிருந்து பேச்சாளர்களைக் குனிந்து பார்ப்பதை இனிப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அறையில் குளிர்சாதனம் இதமாக இருந்தது.

 

  • பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு இந்தியப் பேராசிரியர்களும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தின் சமயப் பேச்சாளர் ஒருவரும் பேசினார்கள். கல்வித்துறைப் பேராசிரியர் கமலநாதன் இந்து சமயத்தைப் பற்றியும் குறிப்பாக சைவ சமயத்தின் பழமையைப் பற்றியும் பேசினார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முருகேசு தொடர்ந்து இந்து மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தன்னம்பிக்கையைப் பற்றியே அதிகம் பேசினார். புதிய மாணவர் அறிமுகம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் கடுமையான “ரேகிங்” செய்வதையும், இப்படிச் செய்பவர்களை அதிகாரிகளிடம் புகார் செய்ய புதிய மாணவர்கள் தயங்கக் கூடாது என்று அவர் சொன்ன போது ரேகிங் இருப்பது உறுதியாகி மனதில் திகில் பரவியது.

 

  • இப்படி நடந்தால் அதிகாரிகளிடம் சொல்ல பயப்படுபவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னால், புகார் கொடுத்தவர் பெயர் வெளிப்படாமல் தாம் அதிகாரிகளுடன் நடவடிக்கை எடுக்க அவர் உறுதி கூறியது அவர்களுக்குத் தெம்பாக இருந்தது. இராமகிருஷ்ணா ஆசிரமப் பேச்சாளர் ரமணீதரன் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். மூவருமே சரளமான எளிய தமிழில் பேசியது அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு பேராசிரியர்களுமே தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் படித்து இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

 

  • திரும்ப விடுதிக்கு அவளும் மாலதியும் பேசிக்கொண்டே வந்தார்கள். மாலதி ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவள். “நீங்க மலேசியாவில் தெற்கு, நான் வடக்கு. இங்க வந்து சேந்திருக்கிறோம். ஆனா நீங்கதான் ரொம்ப தூரம் வந்திருக்கிறீங்க!” என்று அகிலா சொன்னாள்.

 

  • “நான் இந்தப் பல்கலைக் கழகத்தைத்தான் முதல் தேர்வாப் போட்டிருந்தேன். ஏன்னா இங்கதான் நாலு ஆண்டுகளுக்குள்ள பட்டதாரி ஆசிரியரா ஆக முடியுது. மத்த பல்கலைக் கழகங்கள்ள மொதல்ல ஒரு பட்டம் வாங்கிட்டு அப்புறம் இன்னொரு வருஷம் ஆசிரியர் பயிற்சிக்கு தனியா டிப்ளோமா செய்யணும்” என்றாள் மாலதி.

 

  • இரவு பத்து மணிக்குப் பல்கலைக் கழகம் அமைதி பூண்டிருந்தது. இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டிருந்து. சாலை விளக்குகள் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன. மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மரத்தடியில் நடந்த போது அங்சானா மரத்தின் மஞ்சள் பூக்கள் காலடியில் நசுங்கின.

 

  • “ரொம்ப அழகா இருக்குங்க மாலதி இந்தக் கேம்பஸ்” என்றாள் அகிலா.

 

  • “ஆமா அகிலா! நான் வந்ததும் இந்தக் காட்சிகளைப் பாத்து அசந்து போயிட்டேன். ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் கடல்! ரொம்ப அழகா இருக்கு! ஒரு உல்லாசத் தளம் போல இருக்கு” என்று ஒத்துக் கொண்டாள் மாலதி.

 

  • “குடும்பத்த விட்டு நாலு வருஷம் பிரிஞ்சிருக்கிறதுக்கு இந்த அழகான இடத்தில இருக்கிறது ஒரு ஆறுதல்தான்!”

 

  • “ரொம்ப மகிழ்ந்து போயிடாதம்மா! பாடங்கள் ஆரம்பிச்ச பிறகு இந்த அழகையெல்லாம் நின்னு பாக்கிறதுக்குக் கூட நேரமிருக்காதின்னு சொல்றாங்க. அதோட மாணவர்கள் இயக்கத்தில சேர்ந்து தொடர்ந்து நடவடிக்கைகள்ள ஈடுபடணும். அதுக்கெல்லாம் மார்க் உண்டு. அந்த மார்க் வச்சித்தான் அடுத்த வருஷம் விடுதியில இடம் கெடைக்கிறதும் கெடைக்காததும் இருக்கு!”

 

  • அகிலா புறப் பாடத்திட்டத்தில் கலாச்சார நடனக் குழுவில் பதிந்து கொண்டிருந்தாள். மேலும் பேச்சுப்போட்டி சங்கத்திலும் சேரவேண்டுமென்று உறுதி செய்து கொண்டாள். பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளிலும் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறாள். ஆனால் பாடங்களும் பாடங்களுக்கான ப்ராஜக்ட் செய்முறைகளும் நிறைய இருக்கும் போது இத்தனையையும் சமாளிக்க முடியுமா என்ற பயம் வேறு வந்தது.

 

  • “ஆனா இதுக்கெல்லாம் மொதல்ல அடுத்த வாரத்துப் பிரச்சினைய மொதல்ல சமாளிச்சாகணுமே!” என்று பெருமூச்சு விட்டாள் மாலதி.

 

  • “என்ன அடுத்த வாரப் பிரச்ன?”

 

  • “அதான் நம்ம சீனியர் கொரங்குங்க வரப் போகுத! இப்ப நம்ம பேராசிரியர் சொன்னார ரேகிங்!”

 

  • “சீ! அதெல்லாம் ரொம்ப இருக்காதுங்க மாலதி! அதிகாரிகள் ரொம்ப கண்டிப்பாத்தான இருக்காங்க!”

 

  • “அப்படி நெனைக்காதம்மா! அதிகாரிகள் கண்ணில மண்ணத் தூவிட்டு எல்லாம் பண்ணிடுவாங்க. எனக்கு இங்குள்ள ஒரு சீனியர் மாணவியத் தெரியும். அவ அனுபவத்தைக் கேட்டீன்னா ஒடம்பெல்லாம் சிலுத்துப் போயிடும்! அவங்களத் தற்கொல பண்ணிக்க யோசிக்கிற அளவுக்கு கொடுமைப் படுத்தியிருக்காங்க தெரியுமா? அத்தனையும் ஒரு அதிகாரிக்கும் தெரியாது!”

 

  • அகிலாவுக்குக் “குப்”பென்று ஒரு பயம் வந்து பற்றியது. அறைக்குள் வந்து நுழைந்த போதும் அந்த பயம் போகவில்லை. உடல் வியர்த்திருந்தது.

 

  • *** *** ***

 

 

1 thought on “ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16

16  பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31

31  மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8

8  அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற