கள்வக்காதல் பாகம் 4
சரசுவின் ஒவ்வொரு துணிகளையும் அவர் எடுத்து வைக்க அசையாமல் இருந்தாள் அவள்.அந்த நொடிகளில் பழனியின் மனதில் வலிகள் ரணங்களாய் மாறி இருந்தும் தன் மனைவிக்காக அதை வெளிக்காட்டாமல் வேலையை தொடர்ந்தார்.
“சரசு. வேற என்னெல்லாம் எடுத்து வைக்கனுமுனு சொல்லு. நான் மறந்துட போறேன்” என்றதும்,
“என் உசுரு மட்டும் தான் பாக்கி இருக்கு. அதையும் எடுத்து வச்சுடுங்க. இந்த வயசான காலத்துல இப்படி கட்டுனவர விட்டுட்டு போறதுக்கு பேசாம செத்தே போயிடலாம்” என்று அழுகையை தொடர்ந்தாள்.
“அடியே கிறுக்கச்சி. நானென்னா செத்தா போயிட்டேன். இப்படி ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்க. போயி பத்துநாள் புள்ள வீட்டுல இருந்துட்டு வர சொன்னா அழுகை அதிகமால இருக்கு” என தன்னுள் இருந்த வேதனையை அடக்கிவிட்டு கூற,
“உங்களுக்கு அப்படி தான் இருக்கும். என்னோட கஷ்டம் எனக்கு தான்” என முந்தானையில் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து சமையலறை செல்ல,
அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்தார் அந்த பாசமிகு கணவர்.
*******
“அடடே. வா மாப்ள. என்னது புதுசா ஊர் பக்கம் வந்து இருக்கீங்க. நம்ம வீட்டுக்கு கூட மாப்ளைக்கு வழி தெரிஞ்சுடுச்சா?” என்று கதிர்வேல் கூற,
“ஏனுங்க மாமா. ஊருக்கு வந்துட்டு உங்கள பாக்காம என்னைக்காச்சும் போயிருக்கனா? சொல்லுங்க பாப்போம்” என கார்த்திக் எதிர்வாதம் வைத்துவிட்டு, “அம்மா அப்பாவ ஒருவாரம் சென்னை கூட்டிட்டு போலாம்னு வந்தேனுங்க மாமா” என்றான்.
“மாப்ளைக்கு எங்க இருந்து இந்த ஞான உதயம் வந்துச்சு. ஏன்டா மாப்ள கல்யாணம் ஆகி ஏழு வருசத்துல இப்ப தான் புத்தி வந்துச்சா. இல்ல வேற ஏதாவது காரணமா.
எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு தெரியலையே” என்று அவர் கேட்க,
சண்டை போடும் நிலையில் அவன் இல்லை என்றாலும், கோவம் அனலாய் எரிந்தது அவன் கண்களில்.
“என்னங்க மாமா பண்றது. மாமன் கூட்டம் பொண்ணு இல்லனு சொல்லி, பொறத்தில பொண்ணு கட்டுனா அப்படி தானுங்க இருக்கும். கட்டுனவ சொல்றத தான கேட்கனும். உங்க மச்சினரு பொண்ணா போனதால மாமனுக்கு மருமவ கையில கஞ்சி கெடைக்குது” என்று சுளீரென்று உண்மைய சொன்னான் கார்த்திக்.
“அதென்னவோ உண்மை தான்டா மாப்ள. சரி வந்த விசயத்தை சொல்லுடா” கதிர்வேல் கூற,
“அம்மா மட்டும் தான் மாமா வராங்க. அப்பா வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. தோட்டம், மாடுன்னு எதையும் விட்டு வர மாட்டேன். நீ உங்க அம்மாவ மட்டும் கூட்டிட்டு போன்னு கறாரா சொல்லிட்டாரு மாமா” என்றதும்,
“கார்த்தி உன்ன சின்ன வயசுல இருந்து பாக்குறேன். உன்ன மட்டும் இல்ல. நானும் மச்சேனும் சின்ன புள்ளையில இருந்து ஒன்னா வந்தவங்க. உன்னையும் தெரியும். அவரை பத்தி நல்லாவே தெரியும். இப்போ என்ன அவர அப்போ அப்போ பாத்துகனும். அத சொல்ல தானே மாப்ள வந்த” என்று மீசையை முறுக்கி கொண்டு கதிர்வேல் கூறினார்.
“ஆமாங்க மாமா. அம்மாவ திரும்ப கூட்டிட்டு வர பத்து நாள் ஆகுமுங்க. அதுக்கு தான் சொல்லிட்டு போலாம்னு வந்தேனுங்க. நான் வரேன்னுங்க” என்று சொல்லிவிட்டு அவன் நகர,
“மாப்ள உங்கப்பா பத்தி கவலைப்படாத. ஆனா அம்மாவ மட்டும் தனியா கூட்டிட்டு போற விசயத்தை யோசிச்சு முடிவு எடு. சரசு இதுக்கு சரின்னு சொன்னாலான்னு எனக்கு தெரியும்டா. அப்பா அம்மாவ பிரிச்சுடாத. வீட்டுக்கு போயி பாரு. அழுதுட்டு இருப்பா உங் அம்மா.மச்சேன விட்டு வர்றதுக்கு. பாத்துக்க மாப்ள” என்று சொல்லிவிட்டு தன் கயிற்று கட்டிலில் சாய்ந்தார்.
அதை கேட்டுவிட்டு கார்த்திக் எதுவும் பேசாமல் வெளியே சென்றான். பெருமூச்சுடன் சுவற்றில் மாட்டிவைத்த தன் மனைவியின் போட்டோவை பார்த்துவிட்டு, பழனியின் நிலையை எண்ணி கவலைகொண்டார் கதிர்வேல்.
அவர் அம்மா அப்பாவை பிரிச்சிடாத என்று சொன்னது கார்த்திக்கின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
வேகமாக வீட்டை நோக்கி நடையை எடுத்து வைத்தான்.
வரும் வழியில் கண்ட உறவுகளை சில நிமிடம் விசாரித்து விட்டு நகர்ந்தான்.
வீட்டினுள் நுழைந்தவுடன்,
“கார்த்தி அம்மாவ அவ்வளவு தூரம் கூட்டிட்டு போற. கொஞ்சம் கவனமா பாத்துக்க. அவளும் விருப்பம் இல்லாம பேரனுக்காக தான் வர்றா” என்றார் பழனி தன் குரலில் அழுத்தம் குறைந்து.
“அப்பா. அம்மாவ நான் நல்லா பாத்துப்பேனுங்க. விஷ்ணுக்காக தான் இப்போ அம்மாவ கூட்டிட்டு போறேனுங்க. அம்மா துணி மாத்திரை எல்லாம் எடுத்து வச்சுட்டாங்களாப்பா” என்று கேட்டான்.
“அம்மாவோட துணி, மாத்திரை, மருந்து சீட்டு எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.அப்புறம் பேரனுக்கு துணி எடுத்து வச்சுருக்கேன். மறக்காம எடுத்துக்கோ. அவளுக்கு மூட்டுவலி பிரச்சினை இருக்கு. அதனால மாடிப்படி ஏறவிடாத கார்த்திக்” என்று அவர் ஒவ்வொன்றையும் சொல்ல சொல்ல கார்த்திக் தலை அசைத்துக் கொண்டே இருந்தான்.
இவை அனைத்தும் அவனுக்கே தெரியும். ஆனாலும் பழனி அனைத்தையும் சொன்னார். கார்த்திக்கு தெரியாது பழனி சரசின் காதல். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அப்பா அம்மாவுக்கு வயசாயிடுச்சு என்பது மட்டுமே.
அருகில் இருந்த கோவிலுக்கு சென்ற சரசு திரும்பி கண்களை துடைத்தபடியே உள்ளே வந்தாள்.
கார்த்திக் தன் மனைவியுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருந்தான்.
பழனியும் சரசும் எதுவும் பேசாமல் அமைதியாகவே நேரத்தை கடத்தினர். கடிகாரத்தில் நொடி முள் நகரும் சப்தம் கேட்கும் அளவுக்கு அமைதி. கண்களில் நீர் மட்டும் சரசிடம் இருந்தது. தன் மனதில் உள்ள வலிகளை கண்ணில் காட்டினால் தன் ஆருயிர் மனைவியின் நெஞ்சம் தாங்காது என்பதால் அமைதியாக இருந்தார் அந்த கிழவர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தார் பழனி.
“சரசு பையன் வீட்டுக்கு போற. மருமக வீட்டை எப்படி வச்சு இருப்பானு தெரியல. ஏதாவது முன்ன பின்ன இருந்தாலும் பையன் கிட்ட சொல்லாத. அப்புறம் அவங்களுக்குள்ள தேவை இல்லாத சண்டை வரும்.
பேரன் கூட இருக்க போற. ஏன் தாத்தா வரலன்னு கேட்டா உடம்பு சரியில்லைன்னு மட்டும் சொல்லு. புள்ள ஏங்கிடுவான்”என்று சொன்னதும் மேலும் கண்ணீர் துளிகள் பெருகியது அவளின் கண்களில்.
“மாத்திரை ஒழுங்கா சாப்பிடு. மாடிப்படி ஏறாத. பையன் மேல கோவப்படாத. பத்து நாள் தான். கண்ண மூடி தொறக்கறதுக்குள்ள போயிடும். நல்லபடியா போயிட்டு வரனும் சரியா?” என சின்ன குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிக்கொண்டு இருந்தார் அந்த கிழவன்.
ஆம் சரசு சின்ன குழந்தை தான். தன் ஊரையும் கணவரையும் தவிர அவளுக்கு வேற எதுவும் தெரியாது. அன்பானவள். யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுபவள்.
பதினாறு வயதில் பழனியின் கையினை பிடித்தாள். 50 வருட வாழ்க்கையில் இதுவே முதல் பிரிவு.
10 ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை கார்த்திக்.
அதனால் பிரசவத்திற்கு கூட அன்னை வீட்டுக்கு செல்லாத பெண்ணை இன்று பெற்ற மகனே தந்தையை விட்டு பிரித்து செல்கிறான்.
வலிகளை தாங்குமா இந்த இதயங்கள்?
கண்ணீருடன் “ஏனுங்க உடம்ப பாத்துக்கோங்க. மாத்திரைய சரியா எடுத்துக்கோங்க. நேரா நேரத்துக்கு சாப்பிடுங்க. கதை பேசிகிட்டே சாப்பிடாம இருக்க போறீங்க. உங்கள தனியா விட்டுட்டு போக இந்த கிழவி மனசு அடிச்சிக்குது” என அழுதாள்.
தன் கையால் முகத்தை பிடித்து கண்ணீரை துடைத்து விட்டு, “போகும் போது கண்ண கசக்காத. பையன் பார்த்தா வருத்தப்படுவான்.
சந்தோஷமா போயிட்டு வாடி” என்று தட்டி கொடுத்தார்.
ஆனால் இவையெல்லாம் கார்த்திக்கு தெரியாது. புரியவும் செய்யாது. அம்மா வருவதை தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ச்சி கொண்டான்.
மாலை வேளை நெருங்கியது.
கணவனும் மனைவியும் பிரியும் நேரமும் வந்தது.
“அப்பா நேரமாச்சு. கிளம்பலாமுனு இருக்கேன்” என்றதும், பேக்கை எடுத்துக்கொண்டு சரசுடன் வீட்டை தாழிட்டு விட்டு கிளம்பினார்.
சரசு எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள். கணவன் இல்லாமல் இவ்வளவு தூரம் எப்படி போவது என்ற பயமும் கவலையும் அவளை மேலும் மேலும் பற்றியது. நடைகள் தளர்ந்தது. ஆனால் போயாகவேண்டுமே.
“என்னப்பா. பையன் கூட ஊருக்கு கிளம்பிட்டியா?” எதிரே வந்தவர் கேட்க,
“இல்லப்பா. வீட்டுல மட்டும் தான் போற. நானும் ஊருக்கு போயிட்டா யாரு மாடு கன்னுக்கு தீனி போடுறது” என்றார்.
“அட என்னப்பா நீ வெவரம் இல்லாம பேசற. பையன் ஆசையா வந்து கூப்டா போயிட்டு வரமா மாடு கன்னுன்னு!. ஆள் போட்டுட்டு போக வேண்டியது தானே” என்றதும்,
“அதெல்லாம் ஒத்து வராதுப்பா. காட்டுல வேற வேலை போயிட்டு இருக்கு. பேரன பாத்தா திரும்பி வரவும் மனசு இருக்காது. என்ன தான் ஆள் போட்டாலும் நாம இருந்து பாக்கற மாதிரி வருமா? அதான் வீட்டுல மட்டும் தாட்டிவிடுறேன்” என சொல்லிவிட்டு நகர்ந்தார்.
கார்த்திக் மனதில் ஏதோ ஓங்கி அடித்தது போல் இருந்தது. அவரின் சொல்லில் இருந்த வலிகளை சரசு நன்கு உணர்ந்தாள்.
இடையிலே பலரும் கேட்க அதே பதிலை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.
ஆம் அந்த ஊர் முதன்முதலில் பார்க்கிறது. பழனி மனைவியை ஊருக்கு அனுப்பி வைப்பதை.
பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த வேளையில், “கார்த்தி தினமும் போன் பண்ணு. அம்மாகிட்ட நான் பேசனும். பத்திரமா பாத்துக்கோ. இது தான் அம்மா மொதமொறைய ஊருக்குன்னு வர்றா. கவனமா பாத்துக்க” என்றார் அந்த கணவன்.
அப்பாவின் சொல்லில் இருந்த பாசம் புரிந்தாலும் அவர் மீது கொண்ட அந்த பயமும் கோபமும் அவரையும் அழைத்துச் செல்ல ஏற்கவில்லை.
பேருந்தும் வந்தது. ” அப்பா போயிட்டு வரேனுங்க” என்று சொல்லிவிட்டு நகர, “போயிட்டு வர்றேன்” என்று சரசு அவரை பார்த்து சொல்லும் போது அவரின் கண்ணிலும் நீர் எட்டி பார்த்தது.
“பத்திரமா போயிட்டு வா” என கூறும் போது இருவரும் கண்ணீரை அடங்கினர். அந்த வாடிய முகமும், நீர் தேங்கிய கண்களும் கூறுகின்றன அந்த கிழவன் கிழவியின் 50 வருட காதலை.
பஸ்ஸில் ஏறி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவள் கன்னத்தில் நீர் தாரையாக ஓடியது. ஆனால் மகனுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொண்டாள்.
பேருந்து செல்லும் வழியில் பார்க்கும் மரங்களும் வயல்களும் வாய்க்கால்களும் அவளை மேலும் நிலைகுலைய வைத்தது. தான் இத்தனை ஆண்டுகள் இருந்த இடத்தை விட்டு வெளியே போவது போல உணர்ந்தாள்.
கார்த்திக் தன் போனை எடுத்து மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தான்.
பேருந்து ஊரை தாண்டியதும் அவளது இதயம் கனத்து போயிருந்தது.
அதே நேரத்தில் பேருந்து தன் கண்ணை விட்டு அகலும் வரையில் அந்த நிறுத்தத்திலேயே வேதனையில் நங்கூரமிட்டு இருந்தார் பழனி.
பெருமூச்சுடன் துண்டை உதறி தோளில் போட்டு நடக்க ஆரம்பித்தார் பழனி.
“என்னடா மாப்ள. சம்சாரத்த பத்திரமா மகன் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு வர்றபோல” என ராமசாமி கேட்டார்.
“ஆமாங்க மாமா. பேரன பாக்கனும்னு சரசு சொல்லிட்டே இருந்தாளுங்க. பையன் வரவும் போயி ஒரு பத்து நாளு இருந்திட்டு வான்னு அனுப்பி விட்டுட்டு வர்றனுங்க. அது இருக்கட்டுமுங்க. இந்த நேரத்தில இங்க என்ன பண்ணுறீங்க” என்றார் பழனி.
“அப்படியே பொடிநடையா வந்தேன்டா. ஏன்டா மாப்ள எனக்கு பதிமூனு வயசா இருக்கும் போது தான் நீ பொறந்த. உன்ன 70 வருசமா பாக்குறேன். சரசையும் உனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து பாக்குறேன். நீ என்கிட்டயே பொய் சொல்லுறியேடா” என்றதும், பழனியின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.
பேசாமல் இருவரும் நடந்தார்கள் சில அடி தூரம். “என்னங்க மாமா பண்றது. பையன் கூப்டாம நானா எப்படி கேட்கறது. பேரனுக்குனு சொல்லி கூப்டறான் அவ அம்மாவ. போகாதனு சொல்ல முடியுமா என்னால?” என்று குரல் ஒடுங்க கூறினார்.
“உன்ன விட்டுட்டு போக அவளுக்கும் மனசு இல்ல. தனியா அனுப்ப உனக்கும் மனசில்லை. எப்படியோ பாசத்தில உன் மவன் உங்க பாசத்தை ஆட்டி பார்த்துட்டான்.” என கூறிவிட்டு,
“பார்த்தேன்டா மாப்ள உங்க ரெண்டு பேரையும் பஸ் ஸ்டாப்ல. போயிட்டு வரேன்னு சொன்ன அப்போ உன் கண்ணையும் பாத்தேன். கருவளையம் வந்த அவ கண்ணையும் பாத்தேன். அதுல தாண்டா கண்டுபுடிச்சேன்” என்று ராமசாமி கூற, பதில் எதுவும் பேசாமல் தலைகுனிந்தவாறே நடந்தார் பழனி.
“மாப்ள பத்துநாள் தான்டா. சீக்கிரம் போயிடும். தனியா இருக்கற மாதிரி இருந்தா என் சாலைக்கு வந்துடு ராத்திரிக்கு. பேசிட்டாவது இருக்கலாம்டா. உனக்கும் கொஞ்சம் வருத்தம் இல்லாம இருக்கும்” என்றார் ராமசாமி.
தன் வீட்டிற்கு சென்றால் வரவேற்கவோ அல்லது திட்டவோ அல்லது பார்க்கவோ அவள் இருக்க மாட்டாள் என்று மனதில் அழுதபடியே மனைவி இல்லாத வீட்டை நடந்தார் பழனிசாமி.
*********
கள்வக்காதல் தொடரும்.
********
(((((((கதை பற்றிய உங்கள் விமர்சனத்தை yaazhistories@gmail.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.)))))