Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் மனம்தான் காரணம் – புறநானூற்றுச் சிறுகதை

மனம்தான் காரணம் – புறநானூற்றுச் சிறுகதை

 

பிசிராந்தையாரே! உமக்கு என்ன ஐயா வயது இப்போது?” 

“ஏன்? எவ்வளவு இருக்கலாம் என்று நீங்கள் தான் ஒரு மதிப்புப் போட்டுச் சொல்லுங்களேன் பார்ப்போம்?” தம்மிடம் கேள்வி கேட்ட புலவர்களைப் பார்த்து எதிர்க் கேள்வி போட்டார் பிசிராந்தையார், 

”உம்மைப் பார்த்தால் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதுக்கு மேல் மதிக்க முடியாது!” 

”நிஜம்தானா?” 

“சந்தேகமென்ன? அதற்கு மேல் மதிப்பதற்கு உம்முடைய தோற்றம் இடங்கொடுக்காது! 

”என் உண்மை வயதுக்கும் நீங்கள் கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் போலிருக்கிறதே?” 

”அப்படியானால் உம்முடைய உண்மை வயதுதான் என்ன? சொல்லுமேன்!” 

“சொல்லட்டுமா? நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்களே? பொய் சொல்கிறேன் என்பீர்கள் 

“பரவாயில்லை சொல்லுங்கள். ” 

”இப்போது எனக்கு அறுபத்தெட்டாவது வயது நடக்கின்றது.” 

”என்ன ? அறுபத்தெட்டா? நாங்கள் ஆச்சரியப்பட வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே பொய் சொல்கிறீரா?” 

“நான் நிஜத்தைத்தான் சொல்கின்றேன். உங்களால் நம்பமுடியவில்லை என்றால் அதற்காக நான் என்ன செய்ய முடியும்?” 

‘எப்படி ஐயா நம்ப முடியும்? தலை சிறிது கூட நரைக்க வில்லை. தோலிலும், தசையிலும் கொஞ்சம் கூட சுருக்கம் விழக்காணோம். இருப்பத்தைந்து வயது வாலிபன் மாதிரிக் குடுகுடு என்று நடக்கிறீர். கண்கள் தாமரை இதழ்களைப் போல மலர்ச்சியும் ஒளியும் குன்றாமல் இருக்கின்றன. உமக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டதென்றால் படைத்தவனே வந்து சத்தியம் பண்ணினாலும் நம்ப முடியாதே ஐயா! 

”நம்ப முடியாவிட்டால் என்ன? உண்மையைப் பொய்யாக மாற்றிவிடவா முடியும்? 

”முடியாது என்றாலும் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமல்லவா?” 

”காரணம் என்னவோ சர்வ சாதாரணமானதுதான்!” 

 

”இல்லை, பிசிராந்தையாரே! இந்த அழியா இளமையின் காரணம் ஏதோ பெரிய இரகசியமாகத்தான் இருக்க வேண்டும். சர்வ சாதாரணமாக இருக்க முடியாது.” 

”என் மனைவி மாட்சிமை நிரம்பியவள். எனக்கு மக்களும் உள்ளனர். அவர்கள் அறிவு நிரம்பிய மக்கள். என்னுடைய ஏவலாளர்கள் ஒருபோதும் என் கருத்துக்கு மாறாக நடந்து கொண்டதில்லை. எம்நாட்டு அரசன் தீமை புரியாத நல்வழியில் நடக்கிறான். சான்றோர்கள் நிறைந்த நல்ல ஊரில் நான் வாழ்கிறேன்!” 

”அது சரி! இவைகளுக்கும் உம்முடைய இளமைக்கும் என்ன ஐயா சம்பந்தம்?” 

”சம்பந்தம் இருப்பதனால்தான் சொல்லுகிறேன்!” “அந்தச் சம்பந்தம் எங்களுக்குப் புரியவில்லையே?” ”புரியாதுதான் புரிய வைக்கிறேன்! கேளும்.” “சொல்லுங்கள்! கேட்கிறேன்.” 

“உடல் மூப்பு அடைவதும், அடையாததும் மனத்தைப் பொறுத்து அமைகின்றது. கவலைகள் குறைந்து மனம் உற்சாகமாக இருந்தால், ஒருவனுடைய உடலும் உற்சாகமாக இருக்கிறது. எனக்கு மனைவியாலும் கவலை இல்லை, மக்களாலும் கவலை இல்லை. ஏவலாளர்களாலும் கவலை இல்லை, என் நாட்டு அரசாட்சியினாலும் கவலை இல்லை. என்னைச் சுற்றி வாழுகின்றவர்களாலும் கவலை இல்லை. சான்றோர்களின் அறிவைப் பருகி என் மனம் புஷ்டியாக இருக்கிறது. ஆகவே இளமை நிறைந்து இருக்கிறது.” 

“அப்புறம்..” 

”மனம் நரைக்கவில்லை; திரைக்கவில்லை; சுருங்கவில்லை; தளரவில்லை; தாழவில்லை! அதனால், உடலும் நரை திரை சுருக்கம், மூப்பு, முதிர்ச்சிக்கு ஆளாகவில்லை. இப்போது புரிகிறதா புதிர்?” 

 

”புதிர் புரிகிறது. ஆனாலும், உம்முடைய இளமை அதிசயமானது! அற்புதமானது! அறுபத்தெட்டு வயதை முப்பது வயதாகக் காட்டும் அளவிற்கு உயரியது.” 

”ஏதோ , என் பாக்கியம்! இதை நினைத்து நான் ஒரேயடியாகப் பெருமைப்படுவதில்லை !” 

”பெருமை, சிறுமை உணர்வுகளை வென்றதனால்தானே நீர் இந்த இளமையைக் காப்பாற்றுகிறீர்.” 

“இருக்கலாம்” பிசிராந்தையார் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறினார். 

சந்தேகமென்ன? இளமைக்கு மனம்தான் காரணம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதைதமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதை

  நல்ல வெயிலில் பசிக் களைப்போடு பல காத தூரம் நடந்து வந்திருந்தார் மோசிகீரனார். சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையின் அரண்மனைக்குள் அவர் நுழைந்த போது அலுப்பும், சோர்வுமாக அவரைக் கிறக்கமடையச் செய்திருந்தன. உறக்கம் கண் இமைகளை அழுத்தியது. எங்கேயாவது ஓரிடத்தில்

எவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதைஎவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதை

  கொல்லி மலையின் அடிவாரம். அது வளம் நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும் அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழிநடைக் களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய , பகற்பொழுதை அங்கே கழித்தாக வேண்டும்.  கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம்.

பரணர் கேட்ட பரிசு – புறநானூற்றுச் சிறுகதைபரணர் கேட்ட பரிசு – புறநானூற்றுச் சிறுகதை

  பரணர் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய் யென்பதா? அல்லது அந்தச்