Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் அன்றும் இன்றும் – புறநானூற்றுச் சிறுகதை

அன்றும் இன்றும் – புறநானூற்றுச் சிறுகதை

 

ன்று பெளர்ணமி. வான்வெளியின் நிலப்பரப்பில் முழு நிலா தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. விண்மீன்கள் மினுமினுத்ததுக் கொண்டிருந்தன. அழகான பெண்ணின் சிவந்த மேனியில் சந்தனக் குழம்பு பூசினால் தெரியும், மங்கலான காந்தியைப் போல நிலா ஒளியில் மலைச் சிகரங்கள் தென்பட்டன. 

கண்ணைக் கவரும் நீல நிறத் தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு பெரிய சுனை. அந்தச் சுனையின் கரையில் கப்பும் கவடுமாக ஓங்கி வளர்ந்திருந்தது. ஒரு மூங்கிற் புதர். அந்தப் புதருக்கு அருகே அதை ஒட்டி ஒரு சிறு குடிசை தோன்றுகிறது. அங்கே குடிசைவாயிலில் இரண்டு இளம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உள்ளே யாரோ வயதான ஆடவர் ஒருவர் தூங்குவது போலத் தெரிந்தது. 

அமர்ந்திருந்த பெண்களின் முகத்தில் அழகு இருந்தது. ஆனால் இளமைக் குறுகுறுப்பு இல்லை. மணியில் மாசு படிந்தாற் போலச் சோகம் அந்த இளம் நெற்றிகளில் படிந்திருந்தது. 

 

கண்களின் ஓரங்களில் ஈரம் கசிந்திருந்தது. அவர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளவில்லை

அவர்கள் வானப் பரப்பில் நீந்தி வரும் நிலாவையும் அதன் கீழே எழில் மிகுந்து தோன்றும் ண்ணுலகத்து மலைச்சிகரங் களையும் இலட்சியமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

இரவு நேரம், மனித சஞ்சாரமில்லாத கானகம். துணையாக வந்திருந்த பெரியவரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தார். பாவம், இந்த அப்பாவிப் பெண்கள் மட்டும் ஏன் இப்படி உறக்கம் வராமல் விழித்துக் கிடக்கின்றார்கள்? வானத்துச் சந்திரனிலும் வையகத்து மலைச் சிகரங்களிலும் இவர்களுடைய அழகிய விழிகள் எவற்றைத் தேடுகின்றன? முகங்களிலே சோகமும் விழிகளிலே கண்ணீர்த் தடமுமாக இவர்கள் நடிக்கும் சோக நாடகம் என்னவாக இருக்கும்? ஒன்றும் விளங்காத புதிராக 

அல்லவா இருக்கின்றது

அரசகுமாரிகளைப் போன்ற கம்பீரமான அழகுடைய இவர்கள் இரவு நேரத்தில் இந்தக் காட்டில் நடுக்கும் குளிரையும் பொறுத்துக்கொண்டு ஒரு குடிசை வாசலில் உறக்கமின்றி வீற்றிருக்க வேண்டிய அவசியம்? 

நல்ல வேளை! நம்முடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பம் இதோ நெருங்கிவிட்டது. நீண்ட நேர மெளனத்துக்குப் பிறகு அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ உரையாடத் தொடங்குகின்றனர். அதைக் கூர்ந்து கவனிப்போம்

சங்கவை”என்ன அக்கா?” “கபிலர் நன்றாக உறங்கிவிட்டாற்போல் இருக்கிறதடி!” 

”பாவம்! வயதான காலத்தில் நம்மைக் காப்பதற்காக இப்படி அலைகிறார். நடந்து வந்த களைப்பு நன்றாகத் தூங்கி விட்டார் அக்கா !” 

“அதோ தொலைவில் நிலா ஒளியின் கீழ் என்ன தெரிகிறது பார்த்தாயா?” 

”ஆம் அக்கா! பறம்பு மலை அழகு மிகுந்து தோன்றுகிறது!” 

”சங்கவை! இன்று இந்த நிலாவையும் அதன் கீழ் ஒரு காலத்தில் நமக்குச் சொந்தமாயிருந்த அந்த அழகிய மலையையும் பார்க்கும் போது உன் உள்ளம் உருகவில்லையாடி?” 

“ஒரு காலம் என்ன அக்கா? போன பெளர்ணமியின் போது கூட உரிமையோடு அந்த மலையில் வாழ்ந்தோம். நம்முடைய தந்தை உயிரோடு இருந்தார்!” சங்கவைக்கு அழுகை வந்துவிட்டது. கண்கள் மளமளவென்று நீரைச் சொரிந்தன. அவள் துயரம் தாங்க முடியாமல் அழுது விட்டாள் அப்போது. 

மூத்தவளுக்கு மட்டும் மனம் கல்லா என்ன? அவள் வாய்விட்டு அழவில்லை. தலை குனிந்து கண்ணீர் சிந்தினாள். 

”சங்கவை! அழாதே அம்மா! மனித எண்ணங்களின்படி விதியின் எண்ணங்கள் இருப்பதில்லை” அங்கவையின் குரல் தழுதழுத்தது. 

“அந்த விதியும் அதன் எண்ணங்களும் பாழாய்ப் போக! போன பெளர்ணமியன்று அதோ தொலைவில் அற்புதமான அழகுடன் தெரியும் பறம்புமலை நம்முடையதாக இருந்தது. நம்முடைய அன்புத் தந்தையும் உயிரோடு இருந்தார். இதோ இன்று இந்தப் பெளர்ணமிக்குள் விதி நம்முடைய வாழ்வை எவ்வளவு பயங்கரமாக மாற்றிவிட்டது அக்கா. மூவேந்தர்கள் வஞ்சனையால் நம்முடைய பறம்பு மலையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். நம்முடைய தந்தையையும் கொன்று விட்டார்கள். ஒரு திங்களுக்குள் எவ்வளவு குரூரமான மாறுபாடுகள்? இந்த விதிக்குக் கண் என்பதே இல்லையோ 

அக்கா ?” 

”இருக்கிறதோ, இல்லையோ?” கண் பெற்றவர்களை எல்லாம் குருடர்களாக்கி விட்டுத் தன் ஆணையை நிலைநாட்டுவதற்குத் தெரிகிறது விதிக்கு அது போதாதா? 

 

“நல்ல உலகம்! நல்ல விதி” – 

“விதியும் உலகமும் எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும்! நீ உறங்குவதற்கு வா, உள்ளே போய்ப்படுத்துக் கொள்ளலாம். கபிலர் விழித்துக் கொண்டு விட்டால், ஏன் உறங்கவில்லை? என்று நம்மைக் கடிந்து கொள்வார்.” 

“உறங்கத்தானே பிறந்திருக்கிறோம்! தந்தையை நிரந்தரமாக உறங்க வைத்துவிட்டோம். வளமான வாழ்வை அளித்து வந்த பறம்பு மலையை மூவேந்தர்கள் கையில் உறங்கக் கொடுத்து விட்டோம்.” 

” சொல்லியும் வருந்தியும் பயன் என்ன சங்கவை? நாமும் வாழ்கிறோம் நடைப் பிணங்களாக” பெண்கள் இருவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உறங்கச் சென்றனர். விரைவில் தூக்கமும் ஆட்கொண்டு விட்டது. 

இப்போது, உறங்கிவிட்டதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த கபிலர் மெல்ல எழுந்தார். குடிசைக்கு வெளியே வந்தார். 

நிலா ஒளியில் அவர் தலைவைத்துப் படுத்த இடம் கண்ணீர்ப் பிரவாகத்தின் ஈரத்தால் நனைந்திருப்பது தெரிந்தது. 

முழு நிலாவையும் அதன் கீழ்த்தெரிந்த வளமான பறம்பு மலையையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் கபிலர். கண்களில் நீர்மல்கித் திரண்டு பார்வையை மறைத்த போதுதான் அவருடைய நோக்கு தடைப்பட்டது. 

“போன பெளர்ணமியில் என் உயிரினுமினிய அரசன் பாரி ஆண்ட மலை அதோ தெரிகிறது! இப்போது அந்த மலை பாரிக்குச் சொந்தமில்லை. அதைச் சொந்தம் கொண்டாடு வதற்குப் பாரியும் இந்த உலகத்தில் உயிரோடில்லை . நான் மட்டும் , உயிரைச் சுமந்து வாழ்கிறேன். இதோ உறங்குகின்ற பாரியின் மக்கள் அங்கவை, சங்கவை இருவரையும் காத்துக் கணவன்மார் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை எண்ணி வாழ்கிறேன்.” 

கபிலருக்கு இந்தச் சோக சிந்தனைக்குப் பிறகு உறக்கமே வரவில்லை . அப்படியே முழு நிலாவையும், அதன் கீழ் தெரியும் . பறம்பு மலையையும் பார்த்தவாறே குடிசை வாசலில் உட்கார்ந்து விட்டார். சற்றுமுன் அங்கவைக்கும் சங்கவைக்குமிடையே நடைபெற்ற சம்பாஷணை அவருடைய நினைவில் மிதந்தது. அவருடைய நினைவும் அந்தச் சோகத்தில் மிதந்து கொண்டிருந்தது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தலை கொடுத்த தர்மம் – புறநானூற்றுச் சிறுகதைதலை கொடுத்த தர்மம் – புறநானூற்றுச் சிறுகதை

  குமணன் காட்டுக்குத் துரத்தப்பட்டான். அவன் தம்பியாகிய இளங்குமணனிடம் அரசாட்சி சிக்கியிருந்தது. காமுகனிடம் அகப்பட்டுக் கொண்ட குலப் பெண்ணைப் போல, குமணன் அரசாண்ட காலத்தில் அடிக்கடி அவனால் உதவப் பெற்று வாழ்க்கையை நடத்தியவர் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர். இளங்குமணன் ஆட்சிக்கு

கண் திறந்தது! – புறநானூற்றுச் சிறுகதைகண் திறந்தது! – புறநானூற்றுச் சிறுகதை

  அரண்மனைக்கு எதிரே திறந்தவெளியில் ஒரு பெரிய யானை துதிக்கையை ஆட்டிக்கொண்டு நின்றது. சுற்றிலும் அரண்மனை வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். யானையின் அருகே பாகன் கையில் அங்குசத்தோடு நின்றான். பக்கத்திலிருந்த மேடை மேல் அமைச்சர்களுக்கும், மந்திரச் சுற்றத்தினருக்கும் நடுவில் ஓர் இருக்கை

தோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதைதோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

  ‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப்