Tamil Madhura Ongoing Stories ஷமீராவின் என் வாழ்வே நீ யவ்வனா – 8

ஷமீராவின் என் வாழ்வே நீ யவ்வனா – 8

“கவின் கிளாஸ்.. எங்கே மேடம்..”
பார்வையை சுழற்றிய யவ்வனா கேட்க,

“அதோ அந்த ப்ளாக் தான்..”
என்ற வித்யாவின் குரலிலோ மெல்லிய பதட்டம்..

அதை உணர்ந்த யவ்வனாவிற்கு புரியவில்லை எதற்கு இந்த பதட்டமென்று..
பள்ளிக்கு வந்ததில் இருந்தே வித்யா பதட்டத்தோடே இருப்பதை கண்டு அதை அவளிடமே கேட்டாள்.

“ஏன் ஒருமாதிரி இருக்கீங்க.. எதாவது பிரச்சனையா..”

“ம்ம்..எல்லாம் நான் பெத்து வச்சிருக்கேனே..அதை நினைச்சு தான்..இன்னைக்கு என்னென்ன சொல்லுவாங்களோனு நினைச்சாளே பக்கு பக்குங்குது..”

என்று அவள் சொல்ல ஒருவேளை கவின் படிப்பில் சற்று சுமாராக இருப்பானாக்கும்..அதை நினைத்து வருந்துகிறாள் என்றெண்ணி,

“ஏன் மேடம்..கவி செக்கேன்ட் ஸ்டாண்டர்ட் தானே படிக்கிறான்..எல்லாம் போக போக நல்லா படிப்பான்.. அதற்கெல்லாம் ஏன் கவலை படுறீங்க..”

என்று சொல்ல,

“அட..ஏன் யவ்வா நீ வேற..படிப்பு வரலைனா கூட எம்புள்ள என்ன மாதிரினு பெருமையா சொல்லிட்டு போயிட்டே இருப்பேனாக்கும்..அதொன்னும் பிரச்சனை இல்ல..ஆனா இந்த பைய உலகத்து சேஷ்ட்டையும் ஒன்னா வச்சிருக்கான்…பசங்கலேந்து மிஸ்ஸுங்க வரை எல்லாருட்டையும் தன் வாலுதனத்தை காட்ட வேண்டியது..யாரு பேச்சுக்கும் அடங்குறதே கிடையாது…படிக்கிறது ரெண்டாப்பு ஆனா பெரிய டானு மாதிரி இந்த நண்டு சிண்டெல்லாம் கூட்டு சேர்த்துக்கிட்டு இவன் செய்யுற அலப்பறை இருக்கே..ஷப்பா..மீட்டிங்க்கு மீட்டிங் இவனை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணவே அந்த மிஸ்ஸு ஒரு அரைமணி நேரம் எடுத்துப்பாங்க….”
என்று அவள் சொன்னதை கேட்டு சிரிப்பு பொங்கியது.

“சிரிக்காத யவ்வா..நான் சீரியஸா தான் சொல்றேன்..சின்னவளை பத்திகூட கவலையே இல்ல..அவ பாட்டுக்கு சமத்தா இருந்துப்பா..ஆனால் இவனை தான் சமாளிக்கவே பெரும்பாடாக இருக்கு..எப்பவும் இவுக அப்பா வருவாங்க..அவங்க முன்னாடி நிறுத்தி பேசவிட்டு நான் தப்புசிப்பேன்..இந்த தடவ மனுஷன் ஏதோ வேலைனு நைசா எஸ்ஸாகிட்டாரு..நான் என்ன சொல்ல போறேனே தெரியல..”
என்று புலம்பியவளை பார்க்க ஒரு பக்கம் பாவமாக தான் இருந்தது.

வித்யாவின் மூத்தமகன் கவினிற்கு இன்று பெற்றோர் – ஆசிரியர் கூட்டம்.
தேர்விற்கான மதிப்பீடினையும் அத்தோடு பிள்ளைகளின் பண்புநலன்களையும் கலந்தாயவே ஒவ்வொரு தேர்விற்கு பின்பும் நடத்தபடும்.

அதே போல் இன்று காலாண்டு தேர்வு முடிந்தபின் நடக்கும் மீட்டிங்கிற்கு தான் வந்திருந்தனர் வித்யாவும் யவ்வனாவும்.

கணவன் காலையிலே தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் இன்று வர இயலாது.மீட்டிங் முடிந்ததும் பிக்கப் செய்ய வருவதாக கூறியிருக்க தனியாக செல்ல வேண்டுமா என்று மலைப்பாக இருந்தது.

யாரை உடன் அழைத்து செல்லலாம் என்று யோசித்தவள் அனு மசக்கையின் சோர்வில் உறங்கி விட்டதால் யவ்வனாவை தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.

அவர்கள் கவினின் வகுப்பை வந்தடைய அங்கே ஏற்கனவே நிறைய பிள்ளைகளின் பெற்றோர்களும் அனைத்து பாட ஆசிரியர்களும் இருந்தனர்.

அவரவர் ரேங்க் கார்டை பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் பேசிவிட்டு கையெழுத்துட்டு அனுப்பி வைத்துக்கொண்டிருக்க வித்யாவை பார்த்ததும் பென்ச்சில் அமர்ந்திருந்த கவின்,

“அம்மா..”
என்று ஓடி வந்து அன்னையின் கையை பற்றிக் கொண்டவன் யவ்வனா புறம் திரும்பி,

“ஹாய் அக்கா..”என்றான்.

“இதான் எங்க கிளாஸ்..அதோ அந்த பென்ச்ல தான் நான் உட்கார்ந்திருப்பேன்..வாங்க க்கா..என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு காட்டுறேன்..”
சிறுபிள்ளைக்கே உரிதான ஆர்வத்தோடு பேச,

“டேய் நல்லவனே..பொறுடா.. அப்புறம் உன் ப்ரெண்டெல்லாம் காட்டலாம்..”
என்று பிடித்து நிறுத்தினாள் வித்யா.
அப்பொழுது,

“கவின் அம்மா தானே நீங்க..”
என்று அவர்களை அணுகிய வகுப்பு ஆசிரியர் அவர்களை அழைத்து சென்றவர் அவனது ரேங்க் கார்டினை எடுத்து வித்யாவிடம் கொடுத்தார்.

எல்லா பாடத்திலுமே மதிப்பெண் நன்றாக எடுத்திருக்க அதனை கவனித்த யவ்வனா கவினின் புறம் குனிந்து,

“நான் பார்த்த வரைக்கும் நீ தப்பி தவறிக் கூட புக்கை எடுக்க மாட்டீயே.. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு மார்க்..”
என்று கிசுகிசுப்பாய் கேட்க,

“அக்கா..நான் சிட்டி ரோபோ மாதிரி..சங் சுவைங்னு ஒரு வாட்டி பார்த்தாலே போதும்..”
என்று தன் முகத்தின் முன் கையை ஆட்டி கூறினான் அவளை போல் கிசுகிசுப்பாவே..

தொண்டையை கனைத்துக் கொண்ட ஆசிரியர்,
“கவின் நல்லா படிக்கிறான்..அதில் எந்த பிரச்சனையும் இல்லை..ஆனால் படிப்பு மட்டும் இருந்தால் போதாதே மேடம்..டிஸிப்லீன் ரொம்ப முக்கியம் இல்லையா….”
என்று அவர் தொடங்கவும்


‘ஆஹா..ஆராம்பிச்சிடாங்களே..”
என்று வித்யாவுள் ஆபாய மணி அடித்தது.

யவ்வனா கவினை பார்க்க அவன் அப்பாவியாய் விழித்தான்.
“….. ஆனால் அது உங்க பையனுக்கு கொஞ்சம் கூட இருக்க மாட்டேங்குது..எப்போ பாரு நான்-ஸ்டாப் டாக்கிங்..கிளாஸ கவனிக்கிறதே இல்ல…லெசன் நடத்தும் போது கிளாஸை டிஸ்டர்ப் பண்றா மாதிரி எதாவது ஸ்டுப்பிட் கொஸினா கேட்கிறது…”

‘அப்படி என்னடா கேட்ப..”
மெதுவாய் யவ்வனா கேட்க,

“அவங்க சொல்றது புரியாம தான் கேப்பேன் க்கா..’
என்றான் பாவமாய்..

“…இவன் பண்றதோட கூட உள்ள பசங்களையும் கெடுக்குறான்..ஹோம் வொர்க் கொடுத்தால் வீட்டுல எழுதாம இங்க வந்து சப்மிட் செய்யும் போது அவசர அவசரமா எழுதுறது..கிளாஸ் ஹார்ஸ்லே சாப்பிடுறது..”

‘இப்போ இல்ல..அது போன வருஷம்..’

“பர்மிஸன் கேட்காம கிளாஸை விட்டு வெளியே போறது..”

‘ரொம்ப அர்சென்டா சுச்சு வந்துச்சு..பர்மிஸன் கேட்க லேட் ஆகுமுனு ஓடிட்டேன்..’

“பசங்களுட்ட வம்பு பண்றது..அடிக்கிறது.. டீச்சர்ஸுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்காமல் எதிர்த்து எதிர்த்து பேசுறது..”

என்று இன்னும் அவர் லிஸ்ட்டை நீட்டிக்கொண்டே போக ஒவ்வொன்றுக்கும் யவ்வனாவிடம் பதில் சொல்லிக்கொண்டே வந்தான் கவின்.

“டேய்..மகனே..என் வாத்தியாருட்ட கூட நான் இவ்வளவு பேச்சு வாங்குனது இல்லடா..”
என்று வித்யா கவலையாய் எண்ண பொறுக்க மாட்டாமல் ஆசிரியரின் பேச்சை யவ்வனா,

“குறுக்க பேசுறதுக்கு சாரி மிஸ்..ஆனால் நீங்க சொல்ற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்க முடியாது.. அதெப்படி எங்க புள்ள செய்யுற எல்லாமே தப்புனு சொல்வீங்க…கிளாஸை கவனிக்கலனு சொல்றீங்க…கவனிக்காம எப்படி கொஸின் கேட்பான்..கேள்வி கேட்க கேட்க தானே அறிவு வளரும்..அதை பற்றி மேலும் மேலும் யோசிக்க தோணும்…சின்ன பையன் அவனுக்கு தெரிஞ்சா மாதிரி தான் கேள்வி கேட்பான்..அதை நாம தான் புரிஞ்சிக்கிட்டு பக்குவமா அவனுக்கு விளக்கனும்..ஹோம் வொர்க் எங்க எழுதினாலும் சப்மிட் செய்யாமல் இருந்ததில்லைல.. அப்புறம் என்ன மிஸ்..? 

என்னைக்காவது ரொம்ப பசிச்சிருக்கும் சாப்பிட்டு இருப்பான்..சின்ன பசங்க அடிச்சிப்பாங்க உடனே சேர்ந்துப்பாங்க..நாம தன்மையா சொன்னா கேட்டுக்க மாட்டாங்களா என்ன..??கேப்பேல கவின்…”
என்று அவள் கேட்டதற்கு வேகமாய் மண்டையை உருட்டினான்.

“அப்புறம் என்ன மிஸ்.. இவ்வளவு கம்ப்ளைன்ட் சொல்றீங்களே..போன தடவையை விட இப்போ ரொம்ப நல்லா மார்க் எடுத்திருக்கான்.. அதுக்கு பாராட்ட வேண்டாமா…நாம ஊக்குவித்தால் தானே பிள்ளைங்களும் ஆர்வமா கத்துக்க தோன்றும்…நான் சொன்னதில்
தப்பேதும் இல்லையே மிஸ்..”
என்று அவள் முடிக்கும் போது அவர் கையெடுத்து கும்பிடாத குறை தான்..

அதன்பின் எதுவுமே பேசாமல் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட வெளியே வந்ததும் அவளை கட்டிக் கொண்ட கவின்,

“சூப்பர் க்கா.. தேங்க்ஸ்… தேங்க்ஸ்..”
என்று குதித்தான்.

“அந்த மிஸ் எவ்வளவு பேசுவாங்க தெரியுமா..அவங்க வாயவே அடைச்சுப்புட்டியே..போற எடத்துல பொழச்சிப்ப போ..”
என்றாள் வித்யாவும் சிரிப்புடன்..

“பின்ன என்ன மேடம்..சின்ன பிள்ளைங்க விளையாட்டா தான் இருக்கும்..அதுக்கு போய் குற்ற பத்திரிக்க வாசிச்சா..”
என்று அவள் கூற,

“அதுக்குனு இவன் கேட்குற குண்டக்க மண்டக்க கேள்விக்கெல்லாம் எனக்கே சில நேரம் டென்ஷனாகிட்டும்..அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்..”
என்று வித்யா கூற அதே சமயம் அவள் அழைப்பேசியும் ஒலித்தது.
பிரகாஷ் தான்.

எடுத்த உடனே,

“சாரிம்மா..என்னால இப்பவும் வர முடியாது போல..வேலை நெட்டி முறிக்குது..தமிழ் வருவான் அவனோட வந்திடுங்க..”
என்று அவன் கூற அவளும் புரிந்துக் கொண்டவளாய்,

“சரி பரவால்லங்க..ஆனால் ஏன் தமிழ் தம்பிய சிரமப்படுத்தறீங்க…நாங்க ஆட்டோ பிடிச்சே வந்திடுவோமே..”
என்றாள் சங்கடமாய்.
தமிழ் எனவும் சட்டென்று நிமிர்ந்தாள் யவ்வனா.

“நானும் சொன்னேன்டி..அவன் தான் நான் ப்ரீயா தான் இருக்கேண்ணா..போயிட்டு வரேன்னு கிளம்பிட்டான்..”

“ஹோ..சரி…அப்புறம் இன்னைக்கு மீட்டிங் அமோகமா போச்சு…”

“ஏன்.. என்னாச்சு..”

“நீங்க வீட்டுக்கு வாங்க..சொல்றேன்..”
என்று கூறி வைத்தவள்,

“தமிழ் தான் அழைக்க வராராம்..”
என்று சொல்ல அவளுள் ஒரு இனிய படபடப்பு…

அன்றைக்கு பிறகு நிறைய முறை அவன் வீட்டிற்கு வந்திருந்தாலும் அவள் தூரமாய் நின்று பார்பாளே அன்றி அவன் முன் வரவில்லை.

ஏனோ அன்று அவன் அவ்வளவு விசுவாசமாய் பேசிய பின்னும் தான் செய்யும் வேலை எல்லாம் அவனுக்கு தெரிந்தால் என்ன செய்வான்..தன்னை பற்றி என்ன நினைப்பான் என்ற பயமே அவனிடம் விலகி நிற்க செய்தது.

ஆனால் இன்று அவனை நேரெதிரே பார்க்க தான் போகிறோம் என்னும் போது எழும் படபடப்பை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.

“ஸ்கூல் முடியிற நேரமாச்சு..நான் போய் மதுவையும் அழைச்சிட்டு வரேன்..நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க..”

என்று கூறி உள்ளே செல்ல தன் ஸ்கூலின் அருமை பெருமைகளை அளந்துவிட்ட கவினிற்கு செவி சாய்த்து வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தவளை,

“யவ்வனா..”
என்று ஆழ்ந்து அழைக்கப்பெற்ற குரலில் சிலிர்த்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அதே அசரவைக்கும் புன்னகையோடு நின்றிருந்தான் தமிழ்.

‘அய்யோ…இப்ப யாரு இவன புன்னகை மன்னனா வந்து நிக்க சொன்னா.. மானங்கெட்ட மனசு மறுபடியும் சாய பார்க்குதே…’

என்று உள்ளுக்குள் புலம்பியவள் வெளியே மிக சாதாரணமாக பார்த்து,

“எப்படி இருக்கீங்க சர்..”
என்க அவனோ தொடர்ந்து,

“இன்னைக்கு தேவியார் தரிசனம் கிடைச்சிருக்குல சேமமா இருக்கேன்…நான் கூட தேவி மறுபடியும் திருச்சிக்கே போயிட்டீங்களோனு நினைச்சேன்..ஊருல இருந்துட்டே தான் கண்ல படலையோ..”
என்று கேட்க,

“அய்யோ… சித்தப்பா..அக்கா பேரு யவ்வனா..தேவி இல்ல…”
என்றான் கவின் அங்கே தானும் இருப்பதை உணர்த்துவது போல..

அவனுக்கு என்ன சொல்வது என்று விழித்தவன் பின் பேச்சை மாற்றும் பொருட்டு,

“ஆமா..இவங்க உனக்கு அக்காவா..இது உனக்கே ஓவரா இல்ல..”
என்றான்.

“ஏன் சித்தப்பா..”
என்று கவின் புரியாமல் கேட்க,

“உங்க அம்மா மாதிரி இருக்காங்க…அபாரமா அக்கானு கூப்பிட்டு சின்ன பொண்ணாக்க பார்க்குறீயே…நியாயமாடா இது..நீங்களாவது சொல்ல மாட்டீங்க..”
என்று அவனிடம் தொடங்கி அவளிடம் முடிக்க,

“ஏங்க.அவன் எப்படியோ கூப்பிடுறான்…உங்களுக்கு ஏன் நோவுது..”
என்றாள் கடுப்பாக..

கவினோ அதுக்குள்
“அப்போ ஆன்ட்டினு கூப்பிடவா..”
என்று இடைப்புக,

“தங்கமே..இதை தான் நான் எதிர்பார்த்தேன்..”என்று ஹைஃபை கொடுத்தான்.

‘ஏது..ஆன்ட்டியா…அடேய்…”
என்று அதிர்ந்தவள்,

“கவி..இந்த ஆன்ட்டி..ஆண்டானா எல்லாம் கூப்பிட கூட்டிட்டு போய் உன் மிஸ்ஸுக்கிட்ட கோத்து விட்ருவேன்..”
என்று அவனை மிரட்டி,


“உங்களுக்கு ஏன் சர் இந்த வேலை..”
என்று தமிழை கேட்க,

“எரிச்சலாகுதுல..அதே மாதிரி தான் நீங்க ‘சர்..’ போடும் போது எனக்கும் இருக்கு..நான் என்ன உங்க டீச்சரா..இல்ல பாஸ்ஸா..சும்மா..சர் சர் னு “
என்றான்.

“உஃப்..இதுக்கு தான் இந்த பில்டப்-ஆ..யப்பா மொக்க மோகன் உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன்..இப்படி சீலிப்பர் செல்ஸ்ஸெல்லாம் கிளப்பி விடாதீங்க..”
என்று அவள் கூற அதற்கு கவின் ஏதோ சொல்ல வரவும்,

“உடனே நீ..சித்தப்பா பேரு தமிழ்.. மோகன் இல்லேனு ஆரம்பிக்காத..”
என்று அவசரமாய் கூற தமிழ் வாய்விட்டு சிரித்தான்.

அதே சமயம் வித்யாவும் தன் இளைய மகள் மதுவுடன் வந்தாள்.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா தமிழ்”
என்று அவள் கேட்க,

“இல்லண்ணி..இப்போ தான் வந்தேன்”
என்று வித்யாவிடம் கூறியவன்

“மது பாப்பா”
என்றபடி அவளை தூக்கி கொஞ்ச உடனே மூக்கு வேர்த்துவிட்டது கவினிற்கு..

“அவள மட்டும் தூக்குறீங்க…நானும் இங்க தானே இருந்தேன்..என்னை தூக்குனீங்களா..”
என்று சிணுங்களாய் கோவித்துக் கொள்ள,

“டேய்..மது சின்ன பொண்ணு..நீ பெரியவன் தானே..சரி வா உன்னையும் தூக்குறேன்..”
என்க மதுவும் அவனை சீண்டுவது போல் நாக்கை துருத்தினாள்.

“வேணாம் போங்க…”
என்று அவன் கோபமாய் முன்னால் போக,

“சரிதான் வாடா..வாலு..”
என்று மறுக்கையில் அவனையும் தூக்கிக்கொண்டவன் கார் அருகில் வந்ததும் தான் விட்டான்.

காரில் அவனுக்கு அருகில் சண்டையிட்டு போட்டி போட்டுக்கொண்டு மதுவும் கவினும் ஏறிக்கொள்ள இது ரெண்டையும் வச்சிக்கிட்டு..
என்று தலையில் அடித்துக் கொண்டு பின்னால் வித்யா ஏற அவளை தொடர்ந்து யவ்வனாவும் ஏறினாள்.

அதன்பின் கவினையும் மதுவையும் வம்பிழுத்துக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டுமே அவர்கள் பயணம் தொடர,

“இவன் என்ன..எனக்குமேல பேசுவான் போலவே’

என்று எண்ணினாலும் அவனை இரசிக்காமல் இருக்க முடியவில்லை.அவனையே பார்த்துக் கொண்டும் அவன் பேசுவதை சிரித்து இரசித்துக் கொண்டும் வந்தவளுக்கு இப்பயணம் இப்படியே தொடராதா என்றிருந்தது.

நன்றாக பேசிக்கொண்டு வந்தவன் திடீரென ஓரிடத்தில் வண்டியை ஸ்லோ செய்து விண்டோவை இறக்கி வெளியே தலையை நீட்ட அவளும் வெளியே பார்த்தாள்.

அங்கே ஒரு பெண்ணை மூன்று பேர் வழிமறித்து நிற்பது தெரிந்தது.

தமிழ் அவர்களை பார்த்தபடி ஹாரன் அடித்து அவர்கள் கவனத்தை தன்புறம் திருப்ப தமிழைக் கண்டதும் அப்பெண்ணின் முகத்தில் நிம்மதியும் மற்றவர் முகத்தில் கலவரமும் இன்ஸ்டெண்டாய் அப்பிக் கொண்டது.

அந்த பசங்களை ஒரு பார்வை பார்த்தவன் அப்பெண்ணை நோக்கி,

“நீ..சேகர் அண்ண மவ தானே..இன்னேரத்துல இங்க என்ன பண்ணுற..வீட்டுக்கு கிளம்பு”
என்று அதட்டலாய் கூற அவளும் வேகமாய் தலையை ஆட்டிவிட்டு நகர முற்பட்டாள்.

அந்த பசங்களும் அப்படியே கலண்டுக் கொள்ள எத்தனிக்க ஒருவன் மட்டும் திமிராய்,

“நா இங்க பேசிட்டு இருக்கேன்..என்ன நீ பாட்டு போற..”
என்று அவன் கூறியது இவர்களுக்கும் கேட்டது.

‘செத்தான்’ என்று வித்யா முணுமுணுக்க கதவை திறந்துக்கொண்டு தமிழ் இறங்கினான்.

அவன் வரவும் மற்ற இருவரும்,

“டேய் வேணாம்டா வாடா போயிருலாம்..”
என்று இழுக்க இவனோ அசையாமல் நின்றான்.

அருகில் சென்றதும் அப்பெண்ணை பார்த்து போ என்பதுப்போல் தலையசைக்க அவளும் உடனே நகர்ந்துவிட்டாள்.

அவளை தடுக்க கைநீட்டியவனின் கன்னத்தில் பளீரென்று ஒரு அரைவிட திடுக்கிட்டு யவ்வனா ஏதோ தனக்கே விழுந்தது போல கன்னத்தை பிடித்துக்கொண்டாள்.

என்ன பேசினான் என்றுக் கேட்கவில்லை எனினும் அவன் முகத்தில் அத்தனை கடுமை.பேசிக்கொண்டே மூவரையும் இன்னும் நாலு சாத்து சாத்தினான்.

“என்ன மேடம்..இவங்க பாட்டுபோய் இப்படி அடிக்கிறாங்க..”
என்று அதிர்ச்சியாய் வித்யாவை கேட்க அவளோ,

“தமிழ் அப்படி தான்..”
என்றாள் சாதாரணமாய்..

“அப்படி தான்னா புரியல்ல..”


“ம்ம்ம்..தமிழுக்கு வாய் பேசுதோ இல்லையோ கை ரொம்ப நல்லா பேசும்..யாரு என்னானு லாம் யோசிக்காது..தப்பா ரைட்டானு தான் பாக்கும்..”

“யாரும் இவரை கேக்க மாட்டாங்களா..”

“ஆளை பார்த்தா அடுத்தவங்க பேச்சுக்கு அடங்குறவர் மாதிரியா இருக்கு..இங்க யாரும் தமிழ எதிர்த்து பேசமாட்டாங்க..அப்படிங்குறதவிட அவர் அழுத்தமா ஒரு பார்வை பார்த்தாலே வாய மூடிறுவாங்க..”

என்னும் போது அவன் முதல் முறை தன்னை பார்த்த பார்வையில் தான் பயந்தது நினைவு வந்தது.

“அதுவும்..”
என்று ஏதோ சொல்ல வந்தவள் அவன் கார் அருகில் வந்ததும் அப்படியே நிறுத்தினாள்.

உள்ளே ஏறியதும் அதுவரை இருந்த கடுமையெல்லாம் மறைந்து மீண்டும் அதே குறும்புன்னகை ஒட்டிக்கொண்டது.

“அந்நியனாடா நீயு..”
என்று வாயை பிளந்தது யவ்வனாவின் மனம்..

மீதி பயணத்திலும் அவனையே தான் பார்த்திருந்தால் ஆனால் ஒருவிதயோசனையோடு..

வீடு வந்ததும் அவர்களை இறக்கிவிட்டு வண்டியை திருப்பவும்,

“காஃபி குடிச்சிட்டு போலாம்..வா தமிழ்”
என்று வித்யா அவனை அழைக்க,

“இல்லண்ணி அப்புறம் வரேன்..அம்மா வேற கால் பண்ணிட்டே இருந்தாங்க..”

என்றவன் கவினிடமும் மதுவிடமும் டாட்டா காட்ட அவர்கள் முன்னால் சென்றதும் கடைசியாய் அவர்களை தொடர்ந்த யவ்வனா அவனை கடக்கும் நேரம்,

“அப்படி பார்த்தா என்னங்க அர்த்தம்”
என்று கேட்க ஜெர்காகி நின்றாள்.இதயம் படபடவென அடித்துக்கொள்ள முயன்று,

“என்ன சொல்றீங்க..புரியலையே..”
என்றாள் விளங்காதது போல்..

அவனோ,

“புரியல..ஹம்ம்ம்….ஆனா எனக்கு புரிஞ்சிது..”
என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.

‘மடச்சி..பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாக்குறது மாதிரி பார்த்து வச்சா..அவன் கவனிக்காம இருப்பானா..ஹைய்யோ போச்சு..என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்..இருக்குற சிக்கல்ல ம்ச்..’

என்று ஒருபுறம் தன்னை எண்ணிக் கடுப்பானாலும் மனதின் ஒரு மூலையில் 

‘புரிஞ்சிது’ என்னும் போது அவன் இதழின் ஓரம் தெறித்தப் புன்னகை வெட்கம் கொள்ள வைத்தது.

காரை மில்லில் நிறுத்திவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு தமிழ் கிளம்ப மீண்டும் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘என்ன இன்னிக்கி அம்மா ஓயாம அடிக்கிது..’
என்றெண்ணியவன் அழைப்பை ஏற்க,

“சொல்லும்மோய்..”
என்று கூறவும்

“உன்னை வீட்டுக்கு வரச்சொன்னேன்..இன்னும் எங்கடா சுத்துற..”
என்று கடித்து குதறாத குறையாய் வசுமதி சத்தமிட,

“என்னம்மாச்சு..வீட்டுக்குதான் வந்திட்டு இருக்கேன்..”
என்று சொல்ல ஒரு பதிலும் இன்றி மறுமுனையில் அழைப்பு துண்டிக்க பட்டிருந்தது.

“என்னாச்சு..”
என்று குழம்பினாலும் வீட்டிற்கு விரைந்தான்.

கதவு திறந்தே கிடக்க கூடத்தில் அன்னையை காணாது,

“அம்மா..”

என்று அழைத்தபடி உள்ளே வந்தவன் பின் ஏதோ தோன்ற தன் அறைக்குள் செல்ல அங்கே தரையில் கால்களை மடக்கி அதில் தலைசாய்த்து வசுமதி அமர்ந்திருக்க அவர் அருகில் ஒரு ட்ரவல் பேக் நிறைய பணத்தோடு திறந்து கிடந்தது.

இருங்க….!இருங்க….!இது நமக்கு நல்லா பரீச்சயம் ஆன பேக்போல் இருக்கே..ஆஹா..ஆம்..அதே தான்..யவ்வனாயை இத்தனை சிக்கலுக்கு உள்ளாக்கிய அந்த விநாயகம் கடையில் மனோ புகைப்படத்துடன் இருந்த அதே பேக் தான்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 26என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 26

அத்தியாயம் -26   பாசிப்பருப்பு பச்சை நிற சேலையில் மடிப்பினை சரிபடுத்தி பின் செய்த சுதா, குட்டிக்யூரா  பவுடரை கர்சீப்பில் தெளித்து  லேசாக முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஐடெக்ஸ் ஸ்டிக்கரை எடுத்து நெற்றியில் ஒட்டிக்  கொண்டாள். “சரித்த நான் கிளம்புறேன். நீங்க

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3

அத்தியாயம் – 3 “அப்பா, சரயு ஆன்ட்டிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” சந்தனா சந்தோஷத்தில் கூவினாள். “சரயு, சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு நெருக்கமான தோழி. அப்படித்தானே சரயு” என்றான். ஆமாம் என ஆமோதித்தாள் சரயு. “நேரமாகிவிட்டதே. வீட்டில கணவர்…?” என

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13

அத்தியாயம் – 13  அரவிந்த் பொன்னியின் செல்வன் கால்வாசி புத்தகத்தை படித்து முடித்த போது கிட்டத்தட்ட நள்ளிரவாகி விட்டது. ஒரே இடத்தில் அசையாமல் இருந்தது அவன் காலை மரத்து போக வைத்திருந்தது. அவன் மேல் இருந்த பிஞ்சுக் காலை எடுத்து ஒரு