சூரப்புலி – 3

அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்தது போலத் தோன்றிற்று. அந்தக் குரலைக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போய் ஊமையாகி விட்டனவோ என்னவோ? சூரப்புலியின் உள்ளத்திலே அக்குரலைக் கேட்டதும் புதுவிதமான பயம் உண்டாயிற்று. தடியடியைவிட அக் குரல் கொடுமையானது என்று அதற்குப் பட்டது. 

சற்று நேரத்தில் பக்கத்திலே சிறுசிறு குரல்கள் எழுந்தன. காட்டுக்கோழி, மயில் முதலான ஆயிரக்கணக்கான பறவைகள் இரவிற்காக அடங்கும் சமயத்தில் பலவிதமாகக் கூவின . இரவில் இரை தேடப் புறப்படும் சிறிய விலங்குகளின் காலடி ஓசை மெதுவாக நாற்புறமும் கேட்டது. கானகத்திலே இருள் சூழ்ந்து எல்லாம் அசைவற்றுக் கிடப்பது போல வெளிக்குத் தோன்றினாலும் அந்தச் சமயத்திலே ஆயிரம் ஆயிரம் பிராணிகள் பதுங்கிப் பதுங்கி நடந்தான். ஆயிரம் ஆயிரம் பிராணிகள் உயிருக்குப் பயந்து எச்சரிக்கையோடு மறைவிடங்களிலே பதுங்கியிருந்தன. உறக்கம் வந்த போதிலும் சிறு ஒலியையும் அவை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தன. 

சூரப்புலிக்குத் தானும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எப்படியோ தோன்றிற்று. பழங்காலத்திலே வனத்திலே திரிந்த அதன் மூதாதையரின் உணர்ச்சி அதன் உள்ளத்திலே எங்கோ மறைந்திருந்து இப்பொழுது திடீரென்று மேலோங்கி எழுந்துவிட்டது. 

சூரப்புலி பசியையும், தாகத்தையும், உடல் நோவையும் மறந்து எச்சரிக்கையோடு ஓர் அடர்ந்த புதரின் மத்தியிலே படுத்தது. அதன் காதுகள் அடிக்கடி உயர்ந்து நின்று ஒலிகளைக் கவனித்தான். அதற்கு உறக்கம் வரவேயில்லை. திடீர் திடீரென்று அது துள்ளியெழும். ஏதோ ஒரு பிராணி பக்கத்திலே பதுங்கிப் பதுங்கி வருவது போல அதற்குத் தோன்றிற்று. ஆனால் எதுவும் வரவில்லை. இருட்டு இவ்வளவு கருங் கும்மென இருக்குமென்று அதற்குத் தெரியவே தெரியாது. வயல் வெளிகளிலேயும், மேட்டுப்பாளையத்திலும் இருட்டிலே இருந்து சூரப்புலிக்கு பழக்கமுண்டு. அதன் கண்கள் அந்த இருட்டிலே நன்றாகப் பார்க்கப் பழகியிருந்தன. ஆனால் கானகத்துப் புதர் இருட்டிலே ஒன்றுமே தெரியவில்லை. அதனால் சூரப்புலி திடுக்கிட்டெழுவதும் பிறகு மெதுவாகப் படுப்பதுமாக இருந்தது. 

விடியும் வரையில் தாக்கமில்லாமல் சூரப்புலி பயத்தோடு இரவைக் கழித்தது. இன்னும் நன்றாக விடியவில்லை. அடர்ந்த மரஞ்செடி கொடிகளுக்கிடையே சூரியனுடைய கதிர்கள் விரைவிலே புகுந்து ஆதிக்கஞ் செலுத்த முடியாது போலிருக்கிறது. பளிச்சென்று விடிந்த பிறகு முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தண்ணீரைத் தேடிப்போக வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சூரப்புலியின் முன்னால் திடீரென்று ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது. அப்படி ஒரு சம்பவம் சுமார் 20 கஜ தூரத்தில் நடக்குமென்று அது எதிர் பார்க்கவேயில்லை. 

சூரப்புலி மறைந்து தங்கியிருந்த புதருக்கு முன்னால் கொஞ்சம் வெட்டவெளி இருந்தது. அதன் மத்தியிலே குட்டை போல நீர் தேங்கியிருந்தது. மங்கிய வெளிச்சத்திலே அது இப்பொழுது கண்ணுக்குப் புலப்பட்டது. பக்கத்திலேயே தண்ணீர் இருக்க இரவெல்லாம் தாங்க முடியாத தாகத்தோடு கிடந்ததை நினைத்து அது ஆச்சரியப்பட்டுக் கொண்டு அந்தக்குட்டையை நோக்கிச் செல்ல ஒரு காலை முன்னால் வைத்தது. அந்தச் சமயத்திலேதான் அந்தக் கொடிய சம்பவம் மின்னல் வேகத்திலே நடந்தது. காட்டெருமை யொன்று தனது இளங்கன்றோடு அந்தக் குட்டையை நோக்கி வந்தது. அதற்கும் மிகுந்த தாகமாகத்தான் இருக்க வேண்டும். அது குட்டையிலுள்ள தண்ணீரில் வாயை வைத்து இரண்டு வாய் குடித்திருக்கலாம், அதனருகில் துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண் டிருந்த கன்றின் மீது எங்கிருந்தோ திடீரென்று வந்து ஒரு சிறுத்தைப் புலி பாய்ந்தது. தண்ணீரைத் தேடி அந்தக் குட்டைக்கு வரும் விலங்குகளை எதிர்பார்த்து அது பக்கத்திலேயே மறைந்திருக்க வேண்டும். சிறுத்தைப்புலி அங்கு வந்தபோது கொஞ்சங்கூட ஓசை உண்டாகவில்லையே என்று நினைத்து ஆச்சரியப்படுவதற்கெல்லாம் சூரப்புலிக்கு நேரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் அதற்குள்ளே ஒரு கடுமையான போராட்டம் தொடங்கி விட்டது. 

சிறுத்தைப்புலி சரியாக எருமைக்கன்றின் மீது பாய்ந்துவிட வில்லை. துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த கன்று எப்படியோ ஒரு சாண் வித்தியாசத்தில், அதன் கொடிய கோரைப் பற்களுக்கும் அதன் முன்னங்கால்களிலிருந்து தயாராக நீட்டிக்கொண்டிருந்த கூர்மையான நகங்களுக்கும் தப்பிவிட்டது. புலி மீண்டும் தனது முயற்சியைத் தொடங்குவதற்கு முன்னால் தாய் எருமை முந்திக் கொண்டது. தண்ணீரை விட்டு ஒரே பாய்ச்சலில் தனது கன்றின் அருகே சீறிக்கொண்டு வந்தது. தலையைச் சற்றுக் கீழே குனிந்து பயங்கரமாகத் தோன்றும் அதன் இரண்டு கொம்புகளையும் நேராக வைத்துக் கொண்டு அது சிறுத்தையின் மீது பாய்ந்தது. அப்பா அப்பொழுது அதன் தோற்றம் எவ்வளவு பயங்கரம் அதன் கண் களிலே அப்பொழுது தோன்றிய கோபாவேசத்தை யாராலும் குலைநடுக்கமெடுக்காமல் பார்க்க முடியாது. 

சாதாரணமாக வீட்டிலேயும், தெருவிலேயும் பார்க்கின்ற எருமை ஒரு மந்தமான பிராணி. “ஏண்டா, எருமையைப் போல மெதுவாக நடக்கிறாய்?” என்று சுறுசுறுப்பில்லாதவனைப் பார்த்துச் சொல்வது தம் வழக்கம். நாம் பழக்கி வைத்திருக்கும் எருமை சோம்பலுக்கும் மந்தமரன தன்மைக்கும் எடுத்துக்காட்டு. ஆனால் காட்டெருமை அதற்கு முற்றிலும் வேறுபட்டது. அதன் மூர்க்கத்தனத்தையும் வேகத்தையும் வலிமையையும் அளவிட்டுச் சொல்லமுடியாது. காட்டிலேயுள்ள எந்த மிருகத்தையும் அது எதிர்த்துப் போராடப் பின் வாங்காது. கன்றைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான நிலையிலிருந்த அந்தக் காட்டெருமைக்கு இன்னும் அதிகமான பலமும் ரோசமும் தோன்றிவிட்டன. சிறுத்தைப்புலி தனது தந்திரத்தை யெல்லாம் பயன்படுத்தி அதன் முரட்டுத் தாக்குதலுக்குத் தப்பித்துக் கொண்டு பின்பக்கமாகச் சென்று காட்டெருமையின் மீது பாய முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. நினைக்க முடியாத வேகத்திலே காட்டெருமை இரண்டு பக்கங்களிலும் திரும்பித் திரும்பித் தன்னுடைய கொம்புகள் எப்பொழுதும் சிறுத்தைக்கு எதிராக இருக்குமாறு வைத்துக்கொண்டு போரிட்டது. அதன் சீற்றத்தைக் கண்டு சூரப்புலி நடுங்கியது.

கணத்திலே அதன் மார்பைப் பகிர்ந்துவிடும். அதனால், சிறுத்தை கீழே விழுவதற்கு முன் லாகவமாகத் தன் உடம்பைத் திமிறித் தனது கால்களைத் தரையில் ஊன்றி நின்றது. அப்பொழுதும் காட்டெருமை தனது தாக்குதலை விடாமல் வாலை உயரத் தூக்கிக்கொண்டு, தலையைக் கீழே குனிந்து மூர்க்கத்தோடு சிறுத்தையின் மீது பாய்ந்தது. சிறுத்தை இதை எதிர்பார்க்கவில்லை. அதன் இடது முன்னங்கால் சப்பைப் பகுதியிலே எருமையின் கடினமான கொம்புகள் தோலை வகிர்ந்துவிட்டன. சிறுத்தைக்கு அதற்கு மேல் போராட விருப்பமில்லை. அது திடீரென்று பாய்த்து வந்தது போலவே மறுபுறம் திரும்பி அம்பு போலப் பாய்ந்தோடி மறைந்தது. காட்டெருமைக்கும் உடம்பிலே சில காயங்கள் ஏற்படாமலில்லை. ஆனால், அவற்றை லட்சியம் செய்யாமல் தனது கன்றைக் காத்த பெருமிதத்தோடு கம்பீரமாக, சிறுத்தை சென்ற திசைக்கு எதிர்த்திசையில் மரங்களிடையே புகுந்து சென்றுவிட்டது. ஒருவிதமான சம்பவமும் நடைபெறாததைப் போல எருமைக்கன்று துள்ளிக் குதித்துக் கொண்டு தாயின் பின்னால் சென்றது. 

இந்தப் பயங்கர சம்பவத்தை நேரில் பார்த்த சூரப்புலி செய்வதறியாமல் அசைவற்றுப் படுத்துக் கிடந்தது. புதரை விட்டு  காட்டெருமை கோபாவேசத்தோடு சீறுகின்றபோது அதன் நாசித்துவாரங்களிலிருந்து பெரிய நாகப்பாம்பு சீறுவதுபோல் ஓசை கேட்டது. இடையிடையே இடி முழக்கம் போலக் காட்டெருமை முழங்கியது. சிறுத்தையின் உறுமலும் சீறலும் அதனோடு கலந்து அந்தப் பகுதியையே அசைவற்று நிற்கும்படி செய்துவிட்டன. திறந்த வாயோடு சிறுத்தை தனது பல்லைக் காட்டி எருமையைப் பயமடையச் செய்த முயற்சியெல்லாம் பலிக்கவில்லை, அதனால், அது ஒரே பாய்ச்சலாக எருமையின் முதுகின் மேலே பாய்ந்தது. அதன் மண்டையில் தனது பாதத்தால் அறையப் பார்த்தது. இதை எதிர்பார்த்துக் காட்டெருமை முந்திக்கொண்டது. பாய்ந்து மேலெழுந்த நிலையில் வரும் சிறுத்தையின் மார்புப்பகுதியிலே எருமை வேகமாகத் தனது கொம்புகளால் தாக்கிற்று. சிறுத்தை இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திடீரென்று கீழே சாய்ந்தது. ஆனால், தரையில் மல்லாந்து விட்டால் தனது கதி அதோகதியாக முடியுமென்று அதற்குத் தெரியும். எருமையின் கொம்புகள் ஒரு வெளியே வந்தால் சிறுத்தையின் கோரைப்பற்களுக்கு இரையாக வேண்டுமோவென்ற சந்தேகம் அதைப் பிடித்தது. அந்தச் சந்தேகத் தாலும் பயத்தாலும் அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை பசியும் தாகமும் உடல்வலியும் எப்படியோ மறைந்துவிட்டனபோலத் தோன்றின. சூரப்புலி அப்படியே படுத்துக் கிடந்தது. நன்றாக விடிந்த பிறகு, புதரைவிட்டு வெளியே புறப்படலாம் என்ற நினைப்பு அதன் உள்ளத்திலே மெதுவாக உருவாயிற்று. 

இந்த நிலையிலே மற்றொரு கொலைக்காட்சி நடைபெற்றுவிட்டது. சிறுத்தையும் எருமையும் செய்த போராட்டத்தால் பயந்து பதுங்கி யிருந்த காட்டுப் பிராணிகளிடையே மறுபடியும் புதிய உயிர் வந்தது போலத் தோன்றியது. காட்டுக்கோழிகள் கூவின . மயில்கள் தூரத்திலே அகவும் ஒலி கேட்டது. சிறு விலங்குகளின் நடமாட்டம் மெதுவாகத் தொடங்கிற்று. அப்பொழுது ஒரு காட்டெலி தன் வளையை விட்டுப் பதுங்கி வெளியே வந்தது. குட்டைக்கு ஒரு பக்கத்திலே உயர்ந்து வளர்ந்திருந்த நெல்லி மரத்திலிருந்து இரவிலே விழுந்து கிடந்த காய்களைத் தேடி அது வந்திருக்கவேண்டும். ஆனால் அது மரத்தடிக்குச் செல்லவேயில்லை. பாதி வழியிலேயே அதன் ஆயுள் முடிந்துவிட்டது. எங்கோ இருந்து ஒரு ஆந்தை அதன் மேலே திடீரென்று பாய்ந்தது. பகலிலே பார்த்தால் குருடு போலத் தோன்றும் அந்த ஆந்தைக்கு மங்கிய காலை வெளிச்சத்திலே கண் நன்றாகத் தெரிந்தது. அது ஒரே பாய்ச்சலில் எலியைத் தன் கால் விரல்களில் பற்றிக்கொண்டு தனது கூரிய அலகால் தலையில் குத்திக் கொன்று விட்டது. அது சுற்றுமுற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே தான் கொன்ற இரையைக் கொத்தித் தின்னலாயிற்று. 

சூரப்புலிக்கு ஆந்தையிடத்திலும் பயம் ஏற்பட்டுவிட்டது இரையை முடித்துவிட்டு ஆந்தை அந்த இடத்தைவிட்டுப் பறந்து போகும் வரையில் அது புதரைவிட்டு அசையவே இல்லை அப்படியிருக்கும் பொழுது அதே இடத்தில் மற்றொரு கொன் நடக்குமென்று அது எதிர்பார்க்கவேயில்லை. 

குட்டையிலுள்ள தண்ணீர் பல பிராணிகளுக்குத் தாகத்தை போக்கி உயிரைக் காப்பாற்றுவது போலவே வேறு பல பிராணிகளுக்கு உயிரைக் கவரும் யமனாகவும் இருந்தது. அந்தக் குட்டையை விட்டால் அப்பகுதியில் குடிநீருக்கு வேறு வழி இல்லை. அதனா அங்கும் பல பிராணிகள் வருவது வழக்கம். கடமான் ஒன்று எச்சரிக்கையோடு வந்து. நீர் அருந்திவிட்டு வேகமாக மறைந்தது. நீர் அருந்தும் முன்பு அது பல தடவை சுற்றும் முற்றும் விறைத்துப் பார்த்ததைக் காணச் சூரப்புலிக்கு அதிசயமாகவிருந்தது. கடமானின் காதுகள் ஒரு சிறிய ஓசையையும் கேட்பதற்குத் தயாராக முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தன. 

இந்தக் கடமான் சென்ற சில விநாடிகளில் இரண்டு சிறிய மான்கள் ஆணும் பெண்ணுமாக அங்கு வந்தன. பார்ப்பதற்குக் கடமானின் குட்டிகளோ என்று நினைக்கும்படி அவை அவ்வளவு சிறியவைகளாக இருந்தன. ஆனால் அவை கடமான் குட்டிகளல்ல; அவை இரலை என்று சொல்லப்படும் அழகான சிறிய மான்கள். அவை சாதாரணமாக அடர்த்தியில்லாத பகுதிகளில்தான் காணப்படும். செடிகளும் புல்லும் நிறைந்த காட்டுப்பகுதி அவற்றிற்குப் பிடித்தமான இடம். பெரிய காட்டு விலங்குகளின் பயமும் அங்குக் குறைவு. ஆனால், அந்த இரண்டு இரலைகளும் எப்படியோ இந்தப் பகுதிக்குத் தவறி வந்துவிட்டன. குடிநீர் கிடைக்காமல் துன்பப்பட்டு வந்தனவோ என்னவோ யார் சொல்லமுடியும் ? 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 6சூரப்புலி – 6

இப்படி அது பல முறை ஊளையிட்டுப் புலம்பிற்று. அந்தப் புலம்பல் எப்படியோ அந்தப் பக்கமாகத் தற்செயலாக மூன்றாம் நாள் மாலையில் சென்ற ஒரு துறவியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சட்டென்று நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அந்த வேதனைக் குரல் கேட்டது.

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்

சூரப்புலி – 7சூரப்புலி – 7

சில இரவுகளில் அது குகைக்குள்ளே தனியாகப் படுத்துத் தூக்கம் வரும் வரையில் பகலிலே நடந்த சம்பவங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். அன்றைய சம்பவங்களிலிருந்து மெது வாகப் பழைய வாழ்க்கையைப் பற்றிய நினைப்பும் வரும். பவானி ஆற்றில் வந்த வெள்ளத்தைப்பற்றியும், பாக்கு வியாபாரியின் மாளிகை யிலே