Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized குட்டி தங்கத்தோடு மைசூர்_பெங்களூர் பயணம்

குட்டி தங்கத்தோடு மைசூர்_பெங்களூர் பயணம்

                  

பள்ளி முழுஆண்டு விடுமுறை முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் என் மகனை எங்காவது வெளியூர் அழைத்துச்செல்லலாம் அந்த பயணம் எங்களுக்கும் இனிமையாக இருக்க வேண்டும் அவனும் மகிழ்ந்திட வேண்டும் என நினைத்தேன்.என் கணவரிடம் “எங்கேயாவது டூர் போகலாம்..சர்வேஷிற்கும் என்ஜாய் பண்ணுற மாதிரி இருக்க வேண்டும்”என்றேன்.

இருவரும் யோசித்து பின்னர் பெங்களூர்,மைசூர் செல்லலாம் என முடிவு செய்தோம்.

பெங்களூரில் என் கணவரின் கசின்ஸ் இருப்பதால் அவர்களோடு ஊர்சுற்றலாம் என எண்ணியவர் உடனே அவர்களுக்கு கால் செய்துகேட்டார் .அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி பலநாட்களுக்கு பிறகு சேர்ந்து அரட்டை அடித்து மகிழலாம் என்ற எண்ணம்.

மே கடைசியில் செல்லலாமா இல்லை பள்ளி தொடங்கியதும் விடுப்பு போட்டுவிட்டு செல்லலாமா என அடுத்த யோசனை ஆரம்பமானது.ஒரு வழியாக மே கடைசி செல்லலாம் என முடிவு செய்தோம்.

இப்போது அடுத்த தலைவலி ஆரம்பமானது எங்களோடு சேர்ந்து வருவதற்கு இன்னொரு ஜோடி வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம்.அவர் கஸினின் நண்பரும் எங்களோடு பெங்களூர் வருவதற்கு தயாரானார் .

அடுத்தகட்டமாக பிளான் செய்துவிட்டு  மே 30 இரவு எட்டு மணிக்கு மைசூர் நோக்கி பயணமானோம்.ரயிலில் டிக்கட் புக் செய்யப்பட்டது.என் மகன் ஆரவாரமாக கிளம்பினான் ஏனென்றால் அவனுக்கு இதுதான் முதல் வெளியூர் பயணம்.

ரயிலில் செல்வதால் இட்லியும் வெங்காயச்சட்னியும் செய்து பார்சல்கட்டிக்கொண்டேன். என் மகனுக்கு அவசர தேவைக்கான மருந்து மாத்திரையும் ,அடுக்கிய துணிமனிகளை ஒரு முறை சரிபார்த்துவிட்டு கிளம்பினோம்.

எங்களோடு வந்த மற்றுமொரு தம்பதியும் நன்றாக பழகுபவர்களாக இருந்ததால்  பயணம் இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது.எங்களோடு வந்த தினேஷ் அண்ணா என் மகனை ஹீரோ என்று அழைக்க அவனும் அவரை ஹீரோமாமா என அழைத்தான்.என் மகனும் அந்த அண்ணாவும்  விரைவில் நெருக்கமாகிவிட்டார்கள் ஏனென்றால் இருவரும் சரியான வாயாடிகள் .

ரயிலில் ஏறியமர்ந்து நாங்கள் நால்வரும் அறிமுகப்படுத்திக்கொண்டோம் அவரவர் முறையே.அடுத்ததாக சிறிது நேரம் பேசிவிட்டு கொண்டுவந்த உணவினை அவரவர் பார்சலை பிரித்து உண்டோம்.

என் மகனுக்கு இட்லியை ஊட்டுவதற்கு என்னவர் ஸ்லீப்பர் பர்த்துக்கு ஏறி உட்கார்ந்து ஊட்டினார் பயங்கர சிரிப்பாய் வந்தது.கடைசியில் அவர் சொன்ன வார்த்தை”எப்படித்தான் வீட்ல வச்சு மேய்க்குற” (ஹாஹா….ஒருநாள் ஊட்டுனதுக்கே இப்படியா ?இது என் மைண்ட் வாய்ஸ்..இருந்தாலும் அவர் மெனக்கெடுவதல் ஒரு சந்தோஷம்😝😝😝)

எல்லோரும் படுத்து உறங்கச்சென்றோம்.காலை வேலை வந்தது உணவு கிடைக்கவில்லை என் மகனுக்கு நான் கொண்டு சென்ற பிரெட்டில் ஜாம் வைத்து அனைவரும் உண்டோம்.பத்து மணிக்கு மைசூர் செல்ல வேண்டிய ரயில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகிவிட்டது.நாங்கள் மைசூர் அடைந்தது மதியம் 12.45.அரைநாள் பொழுது வீணாகிவிட்டது என்ற கவலை வேறு.

ஓலா கேப் பிடித்து நேராக அவரவர் ரூமிற்கு சென்று குளித்து கிளம்பி வெளியே வந்தோம்.தினேஷ் அண்ணா மைசூரில் பேமஸான “ஹனுமந்து பிரியாணி” கடையில் தான் சாப்பிடவேண்டும் என்றார்.மணியாகிவிட்டதால் ரூம் இருந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டுவிட்டு நேராக மைசூர் பேலஸ்க்கு கேபில் விரைந்தோம்.

மைசூர் பேலஸ் அழகான கட்டிடக்கலையும் ராஜாக்கள் பயன்படுத்திய பொருட்களும் அத்தனை பிரம்மிப்பாய் இருந்தன.அதிலும் இரண்டு யானைகளை தலையோடும் தந்தத்தோடும் வெட்டி முகப்பு வாசலில் வைத்திருந்தார்கள்.அந்த காட்டுயானையின் தலை சற்று அச்சத்தை தருவதாகத்தான் தெரிந்தது.நீண்ட தந்தங்கள் பார்க்கவே அழகாய் இருந்தது.

ஒருவழியாக பேலஸை பார்த்து,ரசித்து,புகைப்படமெல்லாம் எடுத்து வெளியே வருவதற்கு மணி மாலை நான்கு மணியாகிவிட்டது.அப்படியே வெளியே வந்ததும் என் மகன்”அப்பா ஐஸ்க்ரீம் வேண்டும் வாங்கித்தாருங்கள்” என்று அடம்பிடிக்க  அனைவரும் ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்டுவிட்டு நேராக மைசூர் உயிரியல் பூங்காவிற்கு விரைந்தோம்.

மைசூர் உயிரியல் பூங்கா பார்க்க வேண்டிய இடம் குழந்தைகள் மகிழ்ந்து போவார்கள்.அங்கே பலவிதமான பறவைகளை பார்த்ததும் என் மினின் கண்ணெல்லாம் பிரம்மிப்பில் விழைந்தது.மயில் தோகை விரித்தாடியது அதிலும் வெள்ளை மயிலையும் கண்டு ரசித்தோம்.அடுத்ததாக கரடி,யானை,சிங்கம்,புலி,சிறுத்தைப்புலி,காண்டாமிருகம்,கரடி,நீர்யானை,சிறுத்தை,வரிக்குதிரை,ஓநாய்,நரி,காட்டெருமை,ஆலிவ்ரைட்லி எனப்படும் நட்சத்திர ஆமை,முதலை என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தோம் என் குட்டிமகனுடன்.இறுதியாக ஃபைனல்டச் தந்தது ஒட்டகச்சிவிங்கிதான் வானுயர கழுத்து வளர்த்தியான வெல்வட்டை போர்த்தியது போன்று அழகான மிருகம் அதைப்பார்த்துதான் என் மகன் மிகவும் ஆனந்தமானான் நாங்களும்தான்.

ப்ரிந்தாவன்கார்டன் போகவேண்டுமென ஆசை ஆனால் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டு மணிநேரமாகும் சென்றுவருவதற்கு இரவு பதினொன்று ஆகிவிடும் என்றதும் அதனை கைவிட்டோம் ஏற்கனவே மணி இரவு ஏழாகிவிட்டது.அடுத்ததாக  மைசூரில் முதன்முதலாக மைசூர்பாகு இனிப்பை கண்டுபிடித்த குருஸ்வீட்ஸ் என்பதறிந்து அங்கே ஸ்வீட் வாங்கிக்கொண்டோம் அதன்பின்னர் நேராக “ஹனுமந்து பிரியாணி”கடைக்கு சென்று நடந்த வேகத்தில் பசியெடுக்க வயிறார உண்டோம்.நேராக ரூமிற்கு செல்வதற்கு இரவு ஒன்பதானது 

காலை ஆறுமணிக்கு “வொன்டர்லா” பெங்களூரில் செல்வதென பிளான் செய்யப்பட்டது.குளித்து கிளம்பினோம் .போகும் வழியில் சென்னாப்பட்டணா என்ற ஊரில் பிரசித்தி பெற்ற கண்ணன் கோவிலுக்குச்சென்றோம் ஒருமணிநேர காத்திருப்புக்கு பலன் கிடைத்தது.அத்தனை அழகான கண்ணன் ஒரு குழந்தை உண்மையிலேயே தவழ்வது போன்ற அமைப்பு.தலைக்கு கிரீடமாக வெண்ணெய் சாற்றப்பட்டிருந்தது ஆடையாகவும் வெண்ணெய்தான் கையில் ஒரு கவலம் வெண்ணெய் வைத்திருந்த அந்த தவழும் கண்ணனின் கண்கள் உண்மையில் ஈர்க்கும் காந்த சக்தி வாய்ந்ததுதான் அத்தனை பளீரென காட்சியளித்தது.விட்டுவருவதற்கே மனமில்லை.அந்த கோவிலின கண்ணனை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டுமாம்.நேராக வொண்டர்லா நோக்கி பறந்தது கார்.பத்து மணிக்கு அடைந்ததும் அருகிலிருந்த ஹோட்டலில் மைசூருமசால்தோசையை வாங்கி உண்டோம்.அனைவரும் ஜெர்ஸி உடைகளை வாங்கிக்கொண்டோம் ஏனென்றால் அதை அணிந்து குளிக்க மட்டுமே அனுமதி.நேராக வொண்டர்லா சென்று அங்கு லக்கேஜ்களை கிளார்க் ரூமில் வைத்துவிட்டு.அவரின் மாமாவின் குடும்பம் அங்கே அப்படியே வந்தார்கள்.ஒரே குதூகலமாய் அனைவரும் குளிக்கச்சென்றோம்.என் மகன் தண்ணீரில் இறங்கவே மாட்டேன் என்று அடம்பிடித்தின்.அவனை தண்ணீரில் இழுத்துச்சென்று குளிக்கவைத்ததற்கு எனக்கும் என் கணவருக்கும் கடைசியில் அவன் கோபமும் அழுகையும் அத்தோடு நான்கு அடியும்தான் பரிசாக கிடைத்தது.வேற வழியின்றி அதையும் வாங்கிக்கொண்டோம்.

அடுத்தடுத்த தண்ணீர் விளையாட்டுகளில்  குளிக்க “நான் வரமாட்டேன்” என அழுகை இன்னும் அதிகமாகிப்போனது.அந்த நேரம் ஆபத்பாந்தவனைப்போன்று அவருடைய மாமாவின் மனைவி(அதாவது அவருடைய அத்தை) “நான் பார்த்துக்கிறேன் நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்கப்பா” என சொன்னார்.முதலில் தயங்கிய என் மகன் ஒருவழியாக சமாதானமாகிப்போனான்”நான் கலா அம்மாகிட்ட இருந்துக்கிறேன் …இங்க பிரெண்ட்ஸ்லாம் இருக்காங்க(அவன் பிரெண்ட்ஸ் எனக்குறிப்பிட்டது என்னவரின் கசின்களுடைய குழந்தைகள் அக்ஷயா,அட்ஷத்,லோகித்) …நீங்க போய்ட்டு வாங்க” என்றான்.

அப்பாடா என சற்று பெருமூச்சு விட்டவாறு நாங்கள், அவருடைய கசின்கள் அவரவர் ஜோடியோடு,மற்றும் எங்களோடு வந்த தினேஷ்_ரேவதி ஜோடி.ஒருவரையொருவர் கலாய்த்த வண்ணம் ஆர்ப்பாட்டமும் ஆரவாரமுமாய் ஆரம்பமானது .முதலில் கோர்னெட்டோ என்கிற த்ரில்லர் கேம் அவரவர் ஜோடியோடு அமர்ந்து எட்டு வடிவ பலூனில் அவர்கள் கூறும் விதிமுறையோடு செல்லவேண்டும் .உண்மையில் உள்ளே இறங்கும்போது”ஆவென” கத்தியவாறு சென்றோம் அப்படியொரு வேகம்.ஜோடியோடு த்ரில் அனுபவித்த பயணமது.

அடுத்ததாக “லேசி ரிவர்”ஒருவர் மேல் ஒருவர் தண்ணிரை தெளித்தவாறு கத்திக்கொண்டே சென்றோம்.ஆறு போன்று மெல்ல மெல்ல தள்ளுமாறு அமைத்திருந் தனர் .தானாக பலூனில் அமர்ந்ததும் இழுத்துச்சன்றது அருமையாக இருந்தது.

“வேவ் “என்ற விளையாட்டு பயங்கரமான அலையை ஏற்படுத்தும்போது மூச்சுமுட்டுமளவுக்கு தண்ணீர் வந்தது.அவரவர் ஜோடியோடு குதித்து மகிழ்ந்து விளையாடினோம்.ஆனால் இந்த விளையாட்டுக்கு எந்தவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லாமல் இருந்தது பெரிய வருத்தம்.எங்கள் கண்முன்னரே ஒரு பெண்ணுக்கு தண்ணீர் உள்ளே சென்றுவிட்டதென தூக்கிச்சென்றது மனதை பதறவைத்தது.

என் மகன் தண்ணீருக்குள் இறங்காயல் காலில் நீர்படும் இடத்தில் படுத்து உருண்ணதை கண்டு எங்கள் அனைவருக்கும் சிரிப்பு அடக்க இயலவில்லை.

அடுத்ததாக “ரெயின் டிஸ்கோ” என்ற விளையாட்டுக்கு சென்றோம் பல வண்ண மின்விளக்குகள் தங்கள் வெளிச்சத்தில் மாறி மாறி பிரகாசிக்க  மழைத்துளிப்போல் நீர் அந்த இடமெங்கும் செயற்கையாக சிதறியது.நடுவில் அனைவரும் ஒரு சேர பல விதமான ஆடல் கலைகளை ஆடித்தீர்த்தோம் மிகவும் சந்தோஷமான விளையாட்டு.நாங்கள் ஒருபுறமாட எங்கள் குழந்தைகள் ஒரு புறமாட கடைசியாக குழந்தைகளுடன் நாங்களும் சேர்ந்து ஆடிக்கழித்தோம்.

அடுத்ததாக “ரோலர் கோஸ்டர்”என்ற விளையாட்டுக்கு பயங்கர கூட்டம் மாலை வேலை வேறு நெருங்கிவிட்டது.அனைவரும் பலமணி நேர காத்திருப்புக்கு பிறகு அந்த விளையாட்டுக்கு சென்றோம்.சதீஷ் அண்ணா தினேஷ் அண்ணாவிடம்”மச்சி வண்டி தண்ணியில குதிக்கும்போது எல்லோரையும் கவர் பண்ணி ஒரு செல்ஃபி எடுக்குற “என்றதும்.தினேஷ் அண்ணா பதிலுக்கு”அடப்பாவி என் ஃபோனை தண்ணீக்குள்ள போடனும்னு முடிவு பண்ணிட்ட…நீ நடத்து” என்றார்.அனைவரும் கலகலவென சிரித்தோம்.

அவரவர் ஜோடியோடு அமர்ந்து கொண்டபின் தடதடவென அந்த ரயில் போன்ற வாகனம் கிளம்பியது.அது தலைகீழாய் பல குலுக்கு குலுக்கி கடைசியாக தண்ணீரை எங்கள் உடலெல்லாம் வாரி இரைத்தவாறு வந்து நின்றது.அது தலைகீழாய் சுற்றும்பொழுது தலையே சுற்றுவது போலிருந்தது.

எல்லாம் முடிந்தபின்னர் பணம் கட்டி விளையாடும் லக்கி விளையாட்டுகள் இருந்தன.அனைவரும் ரூபாய் முந்நூறு வீதம் செலுத்தி மூன்று முறை வாலிபால் போட்டால் அங்கே இருந்த பெரிய நாய் பொம்மை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் களமிறங்கினர்.

நான் என் கணவரிடம்”தேவையில்லாமல் பெட் கட்டாதீங்க இது நமக்கு செட் ஆகாது …நமக்கு செட் ஆகுறதை விளையாடலாம்” என சொல்ல அவரும் மறுப்பேதும் கூறாமல் என்னோடு கிளம்பினார்.

.

என் குட்டி மகளுக்கு பொம்மையென்றால் கொள்ளைப்பிரியம்.அவளுக்காக 200 ரூபாய் கட்டி முழுமுயற்சியோடு இரண்டு ஜம்பிங் பால்களையும் அந்த தொட்டியில் போட்டுவிட்டேன்.அந்த பிங்க் கலர டெடிபியரையும் வென்றுவிடாடேன்.உண்மையில் சொலாலபாபோனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை அந்த இடத்தில் புரிந்து கொண்டேன்.என் கணவரும் என்முயற்சி கண்டு மனமுவந்து பாராட்டினார்.என் மகளுக்கு ஒன்றேமுக்கால் வயதுதான் ஆரம்பமாகியிருந்து..வொண்டர்லா செல்வதற்கு பிளான் செய்ததால் என் சுட்டிபெண்ணை அம்மாவின் கவனிப்பில் விட்டுவந்தேன் இருந்தாலும் என்  தாய்மை

எல்லா இடங்களிலும் என் மகளின் நினைவுகளை சுட்டிக்காட்டியது.

கடைசியாக என் மகனையும் மற்ற குட்டீஸ்களையும் அழைத்துச்சென்று அவர்களுக்கான சின்ன விளையாட்டுகளான ஜாலி ட்ரெயின்,குதிரை ராட்டினம்,போகோ கப் ஆகியவற்றில் விளையாட வைத்தே கூட்டிவந்தேன்.

இரவு 8 மணியாகிவிட்டது  அனைவரும் என்னவரின் மாமா வீட்டிற்கு விரைந்தோம்.என் புது டெடியும்தான் அவர்கள் வீட்டிற்கு சென்றது விருந்தாளியாக.

இரவு 10.30 மணியாகிவிட்டது வீடு வந்து சேர்வதற்கு .அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு உறங்கச்செல்வதற்கு 11  மணியாகிப்போனது.

பிரயாண களைப்புடன்,காலையிலிருந்து தண்ணீரிலேயே விளையாண்டது மேலும் அலுப்பை கூட்டியது நன்றாக அசந்து உறங்கிவிட்டோம்.

பெங்களூரில் ஏ.சி போடப்படாமலேயே இரவெல்லாம் குளிர்ந்த காற்று வீசியது.ரம்மியமான அந்த சூழல் அருமையாக இருந்தது.

என்னவரின் மாமா வீடு அபார்ட்மெண்ட் குடியிருப்புதான்.ஆனால் சுற்றி மரமும் செடியும் சூழ்ந்து இயற்கையின் அம்சமான இடம் அவர்களின் வீடு அங்கே நீச்சல்குளமும் குழந்தைகள் விளையாட பார்க் வசதியும் அழகாய் அமைத்திருந்தார்கள்.

காலையில் எழுந்ததும் பெண்கள் தனிக்குழுவாகவும்,ஆண்கள் தனிக்குழுவாகவும் பிரிந்து சிறிது நேரம் இயற்கையை ரசித்த வண்ணம் நடந்து சென்றோம் .அதன்பின் ஆண்கள் அனைவரும் எங்களோடு சேர்ந்து ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்திட அங்கே சிரிப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர கலந்தன.

குளித்துமுடித்த பின்னர் அனைவருக்கும் என்னவரின் அத்தை(கலா அம்மா) இடாலி சூடான சிக்கன் கிரேவியும் பரிமாறினார்.

பத்தரை மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி “சிவாஜி நகர்” பஜாரிற்கு சென்றோம்.பத்தரை மணிக்கு கிளம்பிய நாங்கள் அந்த இடத்திற்கு வந்தடைய இரண்டு நேரமானது .நாங்கள் பஜாரை சென்றடைய 12.30 மணியாகிப்போனது.குறைந்த விளையில் ஹேன்ட்பேக்,பர்ஸ் மற்றும் பல பொருட்கள் விற்றுக்கொண்டிருக்க தேவையானதை வாங்கிக்கொண்டு வீடுதிரும்ப மணி  5 ஆகிவிட்டது.மதிய உணவு உண்ணாததால் நடந்த நடைக்கு பசி வயிற்றைக்கிள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றால் .இது டின்னர் ரெஸ்டாரன்ட் உணவு செய்வதற்கு 7 மணியாகிவிடும் என்றனர்.

அதன் அருகிலேயே “ஆம்பூர் பிரியாணி” கடை இருந்தது.முதலில் பயந்து கொண்டே ஒரு பார்சலை எடுத்து சேர் செய்து சாப்பிட்டோம் .ஸ்டார் ஹோட்டலில்கூட இத்தனை அருமையாய் பிரியாணி சாப்பிடவில்லை அவ்வளவு நன்றாக இருந்தது.பிரியாணியும் சிக்கன் 65 இரண்டையும் உண்டுவிட்டு .அவர்கள் வீடு வந்து சேர்வதற்கு எட்டுமணியானது.எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து சரிபார்த்தபின்னர் நேராக அவரின் மற்றொரு மாமாமகன் வீட்டிற்கு சென்றோம் அங்கே இரவு உணவை முடித்து விட்டு .பெங்களூருக்கு ஒரு பை பை சொல்லிவிட்டு ஸ்லீப்பர் பஸ்ஸில் ஏறிய நாங்களா மறுநாள் காலை 6 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தோம்.

அனைவரையும் சேர்ந்து ஊர்சுற்றி மகிழ்ந்ததால் எதையோ தொலைத்தது போன்ற சிறு வருத்தம் தொற்றியது.மற்றொரு முறை மற்றொரு பயணத்தில் இதே கூட்டம் ஒன்றுசேர்வோமா என்று மனம் எதிர்பார்க்கிறது.மீண்டும் ஒரு பயணம் இனிமையாய் இதுபோல் அமைவதற்கு காத்திருக்கிறேன்.

  • காயத்ரி வெங்கடகிருஷ்ணன்


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09

9 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டிற்கு ராஜலிங்கமும், மகாலிங்கமும் வர அவர்களை அனைவரும் வரவேற்க எழுந்து சென்ற சந்திரசேகர் “ஹே வாங்கப்பா, இங்க தான் இருக்கீங்க வரதே இல்ல.. இப்போவது வரணும்னு தோணுச்சே” என்று குறைபட்டு கொண்டே ஆனால் நண்பனை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59

59 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுனுக்கு தப்பு செஞ்சவங்களை நம்புறாங்க. வீட்டில அவங்க பேசறத சொல்றத கேட்கிறாங்க. ஆனா இதுவரைக்கும் திவினால இவங்க யாருக்கும் பிரச்சினை வரலன்னு தெரிஞ்சும் அவள நம்பாம சொல்லவரதகூட கேட்காம இப்படி நடந்துக்கிறாங்களே. எல்லாருக்கும் அதிகபட்ச கோபமே