2015ல் தீபாவளிக்கு அடுத்த நாள் கொடைக்கானல் டூர் போலாமுனு ப்ளான் போட்டோம்.
சந்தோஷ் அண்ணா, ஜீவா, பரணி, கௌதம், கௌதம் கூட வேலை செய்யற இரண்டு பேரு, முத்து அண்ணன், ராஜேஷ். அப்புறம் நான்.
அந்த டைம்ல சரியான மழை. தீபாவளி அன்னைக்கு கூட நாலு மணி நேரத்திற்கு மேல் மழை பகலில்.
எங்க வீட்டுல திட்டு விழுந்துச்சு. மழை நேரத்தில எங்கடா எல்லோரும் மலை ஏற போறீங்கனு.
இதே கூத்து எல்லோர் வீட்டிலும் நடந்தது.
நாங்க முடிவு செய்தோம்.
எங்களுக்கு பிரச்சினையா இருந்தது வண்டி தான்.
கௌதம் மற்றும் அவன் நண்பர் வண்டி மட்டும் தான் இருந்தது.
எப்படியோ அடுத்தவன் கிட்ட பேசி பேசி நைட்ல வண்டி எடுத்துட்டு வந்துட்டோம்.
காலையில ஐந்து மணிக்கு எல்லோரும் எங்க ஊரு காளியம்மன் கோவில் முன்னாடி வந்து நின்றோம்.
“டேய் சேது. முத்து அண்ணா எங்கடா?” என்று சந்தோஷ் அண்ணா கேட்டாரு.
“எனக்கு தெரிலண்ணா. நீ போன் பண்ணி பாரு” என்று நான் சொல்லிவிட்டேன்.
ஃபோன் பண்ணி “அண்ணா சீக்கிரம் வாங்க. கோவில்ல நிக்கறோம்” என்று சொல்ல,
“எனக்கு உடம்பெல்லாம் வலிக்குதுடா. காய்ச்சல். நீங்க போங்க. நான் வரல” என்று சொன்னாரு
அவர் வரவில்லை என்பது எங்களுக்கு வருத்தம் இல்லை. வண்டி இல்லை எங்களுக்கு இப்போது.
இருக்கற வண்டிக்கு பூஜைய போட்டுட்டு தேங்காய உடைக்க சண்டை போட்டு நான் வாங்கி ரோட்டுல போட்டேன். உடையவில்லை.
ஜீவா என்னை பார்த்து “ஏன்டா இது கூட உடைக்க தெரியாதா?” என்று சொல்லிவிட்டு அவன் வாங்கி உடைக்க, தேங்காய் உடையாமல் உருண்டு போச்சு.
அப்புறம் கொஞ்சம் வசைகள் வாங்கிய பின் உடைத்துவிட்டு, சிறு தூறல்மழை ஆரம்பிக்கும் போது வண்டிகளை எடுத்தோம்.
சந்தோஷ் அண்ணா எங்க ஊருல இருந்து 30 கிலோமீட்டர் போயி வண்டி எடுத்துட்டு மூலனூர் என்ற ஊருக்கு வந்தாரு. நாங்களும் அங்க போனோம் எங்க ஊருல இருந்து.
சரியாக 6.13க்கு நாங்க அங்க சந்திச்சோம்.
அப்போ கனமழை பெய்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மழை பெய்தது. திரும்பி வீட்டுக்கு போலாம் என்ற பேச்சுக்களும் அடிப்பட்டது.
என்ன ஆனாலும் பரவாயில்லை. கொடைக்கானல் மழை ஏறியே ஆகனுமுனு முடிவு செய்தோம்.
மழை நின்ற பின்னர் நான்கு வண்டியில் எட்டு பேர் கொண்ட குழு கிளம்பியது.
தாராபுரம் பழனி வழியாக கொடைக்கானல் மழை அடிவாரம் சென்றோம். அதுவரை வழியில் எங்குமே மழை இல்லை. கிட்டத்தட்ட 80கிலோமீட்டர் வந்து இருந்தோம்.
கருப்பசாமி கோவில் முன்னாடி சாமிய கும்பிட்டுட்டு சில போட்டோக்களையும் எடுத்துவிட்டு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து ஏற ஆரம்பித்தோம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு வண்டிக்கு மட்டும் தான் எல்லா பேப்பர்ஸ்ம் இருந்தது.
மெல்ல மெல்ல மழை ஏற ஆரம்பித்தோம்.
நானும் பரணியும் ஒரு வண்டி. ராஜேஷ் சந்தோஷ். ஜீவா கௌதம். அவங்க நண்பர்கள் இருவரும் ஒரு வண்டி.
15 கிலோமீட்டர் ஏறியிருப்போம். வெண்பனி அப்படி எங்கள் மீது மோதியது.

ஜெர்கின் என்கிட்டயும் பரணிகிட்டயும் தான் இல்லை. குளிர ஆரம்பிச்சுருச்சு.
மலை ஏற ஏற அங்க அங்க நிறுத்தி ஃபோட்டோ எடுத்தோம்.
ஒவ்வொரு இடமும் மறக்க முடியாத அனுபவம்.
ரோடு முழுக்க ஈரமாக இருந்தது. ஆனால் மழை இல்லை.
சூரிய ஒளிபடாத சில இடத்தில் நின்றோம். அங்கு நீண்ட நெடிய மரங்கள். சுற்றியும் பச்சைபசேல் என்று இருந்தது.
பனிமூட்டத்தில் பச்சை நிறங்களை ரசித்த படியே சென்றோம்.
பெருமாள் மலை செல்லும் போது மணி பத்து ஆகி இருந்தது.
கொடைக்கானல் பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தோம். டோல்கேட்டை தாண்டிய உடனே சில்வர் பால்ஸ் இருந்தது. அந்த நேரம் அங்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. குளிரும் நேரத்தில் லேசான நீர்ச்சாரல் வந்தது.
அங்கே நாங்கள் விதவிதமாக ஃபோட்டோ எடுத்தோம். தண்ணீர் அருவியில் இருந்து கொட்டும் போது எங்கள் வாயிக்குள் செல்வது போல, தண்ணீரை பிடித்து வைப்பது போல, இன்னும் நிறைய.

அப்படியே முடிச்சிட்டு அங்க இருக்கற கடைகளில் மிளகாய் பஜ்ஜி வாங்கினோம். எல்லோருக்கும் ஒன்று. பிறகு வடை வாங்கினோம்.
சில்லென்று காற்று வீசும் போது சுடச்சுட மிளகாய் பஜ்ஜி. செம்ம டேஸ்ட்.
சாப்பிடும் போது அங்கே இருக்கும் குரங்குகளுக்கும் சிலவற்றை வீசினோம்.

சில குரங்குகளுக்கு அருகில் சென்று ஃபோட்டோ எடுத்தோம்.
“டேய் வந்த உடனே உங்க சொந்தகாரங்க கூட சேர்ந்துட்டியா” என்று கௌதம் சொல்ல,
“இல்லடா. உன் லவ்வர் கூட பேசிட்டு இருக்கேன். நீ விட்டுட்டு போயிட்டனு ஃபீல் பண்ணிட்டு இருக்கு” என்று சொன்னேன்.
இதுபோல் சில கிண்டல் கேலிகள் அனைவருக்கும் ஏற்பட்டது.
அங்கிருந்து கொடைக்கானல் நகரம் செல்லும் வரை பல எஸ்டேட்கள் இருந்தன.
“டேய் சோழமுத்தா. இங்க பாரு எத்தனை எஸ்டேட்னு” என்று நான் சொல்ல,
“அதுக்கென்னடா இப்போ”என்று பரணி சொன்னான்.
“இல்லடா இங்க இருக்கற ஏதாவது எஸ்டேட் காரன் பொண்ணை கல்யாணம் பண்ணி இங்கேயே செட்டில் ஆயிடலாமுனு தோணுதுடா” என்று சொன்ன மறுகணமே
“ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லயாம். அவனுக்கு ஒன்போது பொண்டாட்டி கேட்குதாம்” என்று சொல்லிவிட,
“உனக்கு பொறாமைடா” என்று பேசிக்கொண்டே 10.45க்கு நகரம் வந்தோம்.
வீட்டிற்கு போன் பண்ணி சொன்னேன் வந்துவிட்டோம் என்று.
“இங்க நல்ல மழை.காலையில இருந்து விடாம பெய்யுது. அங்க மழையா?” என்று கேட்க, நானும் இல்லை சொன்னான்.
சாப்பிடலாமுனு போயி பார்த்தா ஒரு கடையிலும் எதுவும் இல்லை. எங்களுக்கு சரியான பசி.
தேடிதேடி கடைசியாக ஒரு கடையில தக்காளி சோறு தான் கிடைச்சது. நல்லா சாப்டுட்டு பைன் பாரஸ்ட்க்கு கிளம்பினோம்.
“மச்சா வண்டிய நிறுத்துடா. நான் ஓட்டுறேன்” என்று நான் கேட்க,
எதுக்கு நிறுத்திகிட்டு. இந்தா புடி என்று வண்டி ஓட ஓடவே மாற்றினோம்.
“டேய் வெளங்காதவைங்களா! விழுந்தா என்ன ஆகி இருக்குமுனு தெரியுமா?” என்று சந்தோஷ் அண்ணா சொல்ல,
“நீ தூக்கிட்டு போயிருக்கனும். அவ்வளவு தான்” என பரணி சொன்னான்.
“நா எதுக்கு தூக்கிட்டு போறேன். இங்கயே கிடந்து சாகுன்னு விட்டுட்டு போயிருவேன்” என்று மாறி மாறி பேசிக்கிட்டே பைன்பாரஸ்ட் வந்து சேர்ந்தோம்.

கேட் வழியாக உள்ளே போகும் போதே சிலர் டேபிளில் கேரட், மாங்காய் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்வார்கள்.
பலர் அங்கு இருந்தார். பல காதல் ஜோடிகள் மரத்துக்கு மரம் சேர்ந்து நின்று வெறுப்பேற்றினார்கள்.
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு நாங்களும் உள்ளே சென்று ஃபோட்டோ எடுத்தோம் அதிகம் உயரம் கொண்ட பைன் மரங்களுக்கு இடையில் மிதமான சூரிய ஒளியும், பனி காற்றும் இதமாக இருந்தது.
கொஞ்சம் நேரம் அங்கேயே சுற்றிவிட்டு கேரட் வாங்கி சாப்பிட்டோம். அதுவும் அடுத்தவன் சாப்பிடுறத புடுங்கிட்டு ரோட்டுல ஓடிட்டே சாப்டோம்.
அங்க இருந்து அப்படியே குணா குகை சென்றோம்.
கூட்டம் அதிகமாக இருந்தது. ஏதோ லேடிஸ் காலேஜ் டூர்னு நினைக்கிறேன். நிறைய பெண்கள் இருந்தனர். ஜாலியா சைட் அடிச்சுகிட்டே உள்ளே போனோம்.
போகும் போது எங்கள் குழுவில் உள்ள ஆர்ஜே ஜீவா எப்பவும் போல ஆரம்பிச்சுட்டான்.

குணா குகைக்கு செல்லும் வழியில் சில மரத்தின் வேர்கள் அழகாக தரைக்கு மேலே படர்ந்து இருக்கும்.

குணா குகைக்கு சென்று பார்த்துவிட்டு அங்கு இருந்த குரங்குகள் உடன் ஃபோட்டோ எடுத்துவிட்டு கிளம்பினோம்
அங்கு விழுந்து கிடந்த மரத்தின் மீது அமர்ந்து சில ரகளைகள் செய்து கொண்டு இருந்தோம்.
அப்போ எங்கள பார்த்துவிட்டு சில பெண்கள் சிரித்துக்கொண்டும் கிண்டல் அடித்துக்கொண்டு சென்றனர்.
வெளியே வந்த உடன் ப்ரட் ஆம்லேட் சுட சுட சாப்பிட்டோம். கொடைக்கானலில் ஸ்பெஷல் ப்ரட் ஆம்லேட் தான்.
அப்போ அங்கே நிறுத்தி இருந்த பைக் மேலே குரங்குகள் ஏறி விளையாடிட்டு இருந்துச்சு. அதுல ஒருத்தர் வண்டியில் இருந்த அவர் வண்டியின் ஒரிஜினல் ஆர்.சி புக்கை எடுத்துட்டு போயிட்டுச்சு. புலம்பிக்கிட்டே போனாரு போலீஸ் புடிப்பாங்கனு.
எங்களுக்கு அந்த கவலை இல்லை. காரணம் எங்க கிட்ட ஜெராக்ஸ் கூட இல்லை. பழைய வண்டி ஓனர் ஜெராக்ஸ் தான் இருந்தது.
அங்கிருந்து கிளம்பி வியூ பாயிண்ட் போய்விட்டு மாங்காய் வாங்கி சாப்டோம்.
பிறகு பில்லர் ராக் போனோம். போற வழியிலே மழை பெய்து இருக்கும் போல. ரோட்டில ஈரம் இருந்துச்சு.
முன்னாடி ஒரு வேன் போயிட்டு இருந்துச்சு. நான் தான் பைக் ஓட்டிட்டு போயிட்டு இருந்தேன்.
இறக்கத்தில் போகும் போது அந்த வேன் தீடீரென்று நிற்க, நானும் ப்ரேக் போட்டேன்.
ஆனால் வண்டி நிக்காம இடிக்க போயிட்டுச்சு. அந்த வேன் சரியாக கிளம்புறதுக்கும் என் வண்டி நிக்கறதுக்கும் சரியாக இருந்தது.
ஒரு நிமிஷம் உயிரு போயிட்டு வந்துச்சு. காரணம் நாங்க போனது அடுத்தவன் பைக். அதுக்கு பேப்பரஸ் இல்லை.
ஒருவழியாக பில்லர் ராக் வந்து சேர்ந்தோம்.
வரும் வழியில் பசங்க கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். கோல்ஃப் மைதானங்கள் பச்சை பசேல் என்று அருமையாக இருந்தது.
பில்லர் ராக் முன்னாடி மக்காச்சோளம் கருது வாங்கி அதுமேல எலுமிச்சை பழச்சாறு மற்றும் மிளகாய் தூள் உப்பு சேர்த்து தேய்ந்து சாப்பிட்டு கொண்டே குறுகிய வழியில் நடந்து சென்றோம்.

சங்குயில் செய்த அலங்கார பொருட்கள்,ஜெர்கின் கடைகள், சாக்லேட் கடைகள், விளையாட்டு பொருட்கள் கடைகள், கீ செயின் கடைகள் என்று நிறைய கடைகள் கடந்து சென்றோம்.
பில்லர் ராக் பார்க்கும் போது என் அருகில் மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் ஒருவர் நின்றாள். அழகான பெண். கொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு இருக்க, அவளும் என்னை அடிக்கடி திரும்பி பார்த்துவிட்டு சென்றாள்.
ஒருவழியாக அங்கிருந்து கிளம்ப வெளியே வந்து பலூன் சுடும் போட்டியில் பங்கு பெற்று ஒன்றை கூட சுடாமல் அங்கிருந்து புறப்பட்டோம்.
நேராக ஜெர்கின் கடைக்கு சென்றோம். அது நாங்கள் ரெகுலராக வாங்கும் கடை. அதனால் தான் காலையில் இருந்து குளுரிலேயே சுத்திட்டு வந்தோம்.
அந்த கடையில் ஜெர்கின், சில வீட்டு அலங்கார பொருட்கள், அம்மாவுக்கு சுவட்டர் வாங்கிட்டு கிளம்பி நேராக லேக் பகுதிக்கு வந்தோம்.
அங்கே சாக்லேட் கடையில் வாங்கி சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படகு சவாரி செய்தோம்.

கிட்டத்தட்ட 60 வயது இருக்கும். இருவர் மட்டுமே செல்லும் படகு சவாரியில் வயதான ஜோடிகள் அழகாக சிரித்துக்கொண்டே பயணித்தனர்.
வெளியில் வந்த பின்னர் குதிரை சவாரி இருந்தது. போலாம் என்று நான் சொன்னோன்.
நீ அப்படி குதிரையிலேயே ஊருக்கு வந்துரு. நாங்க போறோம் என்று ஜீவா சொல்ல, ஏன்டா இப்படி பண்ணுறீங்கனு சொல்லிட்டு கிளம்பினோம் ஊரை நோக்கி.
புறநகர் பகுதி வந்த உடனே மழை. சற்று வேகமாக வர இன்னைக்கு ஊரு போயி சேர்ந்த மாதிரி தான் என்று சொல்லிவிட்டு ஒதுங்கினோம். ஐந்து நிமிடங்களில் மழை நின்றது.
வரும்போது பெருமாள் மலை தாண்டி பழனி வழியில் சிறிது தூரம் சென்றால் ஒரே ஒரு டீ கடை இருக்கும்.
அங்கு தான் எப்பவும் டீ குடிப்போம் கொடைக்கானலில் இருந்து கிளம்பும் போது.
அதுவரை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சாலை பகுதி முடிவடைந்தது. இனி அடிவாரம் வரை இறங்குமுக சாலை தான். கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம்.
அனைவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து கொஞ்சம் இயக்கி பின்னர் ஆஃப் செய்தனர்.
“மச்சா ம்ம்ம் ” என்று நான் சொல்ல பரணி தன் காலில் உந்தி கொடுக்க வண்டி இறங்கியது. எங்கள் குழுவில் உயரமானவன் அவன் தான்.
கடைசியாக எங்கள் வண்டி தான் வந்தது.
15 கிலோமீட்டர் சென்று இருப்போம். அப்போது எங்களை தாண்டி வேகமாக சென்ற கார் ஒன்று சந்தோஷ் அண்ணன் வண்டியை ஒதுக்கிவிட்டு சென்றது. நிலை தடுமாறி அவர் அருகில் இருந்த பாறை மீது மோதினார்.
காலில் சிறுகாயம். பின்னாடி இருந்து ராஜேஷ்க்கும் கையில் சிறு கீறல்கள். வண்டியின் முன் பகுதியில் மட்டும் சில பாகங்கள் உடைந்தது.
பெரிய அளவில் பிரச்சினை இல்லாததால் அங்கிருந்து புறப்பட்டு பழனி வந்து ஒரு பேண்டேஜ் வாங்கி போட்டுட்டு தாராபுரம் நோக்கி சென்றோம்.
தாராபுரம் அருகில் வரும்போது செக்போஸ்ட் இருந்தது. அங்கு ஒரு கான்ஸ்டபிள் இரண்டு இளைஞர்களை வைத்து வண்டிகளை பிடித்து கொண்டு இருந்தார்.
நானும் கௌதமும் சிக்கினோம். மற்ற வண்டிகள் வேகமாக சென்றது.
அவன் வண்டிக்கு எல்லாம் இருந்தது. எங்கள் வண்டிக்கு நாங்கள் ஓனர் இல்லாத காரணத்தால் பிடித்துக்கொண்டார்.
அப்போது அருகில் போலீஸ் கூட வச்சு இருந்த பையன் பணம் கொடுத்துட்டு போங்கன்னு சொல்ல,50 ரூபாய் கொடுத்தேன்.
அதுக்கு கான்ஸ்டபிள் வாங்காம 100 வேண்டும் என்று கேட்டார்.
நான் இல்லை எங்களிடம் என்று சொல்ல,
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை.
அதில் என்ன படிச்ச. ஏன் மேல படிக்கல. அது இதுன்னு கேட்டான். நானும் அசராமல் பதில் சொன்னேன்.
காசு கொடுத்துட்டு போ என்று சொல்ல இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்ல மாற்றி மாற்றி பேச்சு சென்றது.
இறுதியில் பாக்கெட் செக் பண்ணுவேன்னு சொன்னான். இருக்கற மொத்த காசையும் புடுங்கிடுவேன்னு சொன்னான்.
அப்போ அருகில் இருந்த என் நண்பன் கையை தூங்கிவிட்டான். வந்து செக் பண்ணிகோ என்று.
ஆனால் என்னிடம் 600 இருந்தது. உடன் இருந்த சின்ன பையன் என்னை தேட வர தடுத்தேன்.
100 ரூபாயை கொடுத்துவிட்டு அந்த 50ஐ வாங்கிட்டு கிளம்பினோம்.
என் கூட வந்த அத்தனை பக்கிகளும் சில மீட்டர் தூரத்தில் நின்று தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“ஏம்பா என்ன ஆச்சு?” என்று ராஜேஷ் கேட்க,
நடந்த எல்லாவற்றையும் கூறினோம்.
“ஏண்டா இதுக்கு முதல்லயே 100ஆ கொடுத்திருந்தா முன்னாடியே போயிருக்கலாமா?” என்று ஜீவா கூற, புலம்பிக் கொண்டே வீடு வரை சென்றோம்.
இந்த டூர் போக ஒரே காரணம் பரணி தான். எல்லோருமே இதுக்கு முன்னாடி கொடைக்கானல் இதே குழுவோட போனோம்.
அதற்கு அடுத்து டூர் சொந்த பைக் வாங்குன அப்புறம் தான் போனோம். எல்லோரும் அவரவர் வண்டியில். அதுவரைக்கும் டூர் போடவே இல்லை.
(இந்த சேட்டைகள் செய்த அந்த குரூப் மெம்பர்ஸ் யார் யாரென்று பார்க்கனும்னு தோணியிருக்கும். எல்லா போட்டோவும் போட்டவன் அதை போடாமல் இருப்பேனா?)

– சேதுபதி விசுவநாதன்