சூரப்புலி – 1

அது ஒரு சிறிய நாய்க்குட்டி. எப்படியோ அது அந்தப் பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தது. தெரு வழியாக அலுப்போடு மெதுவாக ஓடிக்கொண்டிருந்த அந்தக் குட்டி, மாளிகையின் வாயிலுக்குப் பக்கத்தில் வந்து, கொஞ்ச நேரம் தயங்கித் தயங்கி நின்றது. அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வாயில் கதவைத் தாண்டி, உள்ளே நுழையலாமா என்று ஆலோசித்தது. உள்ளே யிருந்து யாராவது கூப்பிட மாட்டார்களா என்றுகூட எதிர்பார்த்தது. ஆனால் தெருவில் போகிற நாய்க்குட்டியை யார் அன்போடு கூப்பிடு வார்கள் ? வீதிகளிலே இப்படி எத்தனையோ நாய்கள் அலைந்து திரி கின்றன; அவற்றை யாராவது கூப்பிடுவார்களா? யஜமானனில்லாமல் ஊரைச் சுற்றி எச்சில் பொறுக்கித் திரியும் நாயை யார் மதிக்கிறார்கள்? 

சுற்றிச் சுற்றித் திரிந்து அதற்கு ஒரே அலுப்பு. இரண்டு நாட்களாகப் பட்டினி. அதனால் பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த நாய்க்குட்டி, அதற்கு மேலே எங்கும் போக முடியாமல் அப்படியே அந்த மாளிகை வாயிலருகே படுத்துவிட்டது. தெருவழியே போகிறவர்களுக்கு அந்த நாய்க்குட்டி அந்தப் பெரிய மாளிகையைச் சேர்ந்தது என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அது ஆதரவற்ற அனாதை. வாவென்று அன்போடு கூப்பிடுவதற்கு அதற்கு ஒருவரும் இல்லை. அது களைப்பினால் மேலும் ஓடமுடியாமல் அப்படியே படுத்துக் கிடந்தது. 

கொஞ்ச நேரத்தில், அந்தப் பெரிய மாளிகைக்குள்ளிருந்து ஒரு பயங்கரமான சடைநாய் வெளியே ஓடி வந்தது. வாயிலருகே படுத்துக்கிடந்த நாய்க்குட்டியைக் கண்டதும் அது உர்ரென்று கோபத்தோடு உறுமிற்று. எழுந்திருக்கவே சக்தியில்லை என்றாலும் உயிருக்கே ஆபத்து என்றால் எங்கிருந்தோ ஒரு வேகம் வந்துவிடு கிறதல்லவா? அந்த நாய்க்குட்டி வாலை இடுக்கிக்கொண்டு எழுந்து, ‘வீல்’ என்று கத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தது. சடை நாய்க்குப் பின்னாலேயே மாளிகைக்குள்ளிருந்து வந்த சிறுவன் ஒருவன் அதன் ஓட்டத்தைக் கண்டு கைகொட்டிச் சிரித்தான். பிறகு சடைநாயைப் பார்த்து, “சடையா, உள்ளே போ” என்று உத்தரவிட்டான். சடையனும் அந்த உத்தரவிற்குப் பணிந்து மாளிகைக்குள்ளே சென்று, ஒரு சாய்வு நாற்காலிக்கு அருகில் கம்பீரமாகப் படுத்துக் கொண்டது. 

கால்களுக்கிடையே வாலை இடுக்கிக்கொண்டும் பயந்து அலறிக் கொண்டும் ஓடுகின்ற அந்த நாய்க்குட்டியின் மேல் சிறுவனுக்கு நோட்டம் விழுந்துவிட்டது. அதை மாளிகைக்குள் கூப்பிட்டால் மறுபடியும் சடையனை அதன் மேல் பாயவிட்டு வேடிக்கை பார்க்கலாம் மல்லவா? அதனால் சிறுவன் அந்த நாய்க்குட்டியை மெதுவாக, “சோ சோ வா” என்று கூப்பிட்டான். இப்படிக் கூப்பிடுவதைத் தான் அது இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது 

அதன் உள்ளத்திலே சந்தேகமும் பயமும் இருந்தாலும், பசி தாங்க முடியாமல் மெல்ல மெல்லச் சிறுவனை நோக்கி அடியெடுத்து வைத்தது. அதைச் சிறுவன் மாளிகைக்குள்ளே அழைத்துச் சென்றான். அத்தனை பெரிய மாளிகைக்குள் அந்த நாய்க்குட்டி இது வரையிலும் காலெடுத்து வைத்ததேயில்லை, தயங்கித் தயங்கி எச்சரிக்கையோடு முன்னால் சென்றது. சிறுவன் தன் ஜேபியிலிருந்த பிஸ்கோத்து ஒன்றை அலட்சியமாக எடுத்து, அதன் முன்னால் வீசி யெறிந்தான். நாய்க்குட்டி ஆவலோடு வாலைக் குழைத்துக் கொண்டு அதைத் தன் வாயில் கவ்விற்று. 

அந்தச் சமயத்திலே சடையன் மறுபடியும் வெளியே வந்து விட்டது. அதைக் கண்டதும் நாய்க்குட்டி வீல் என்று கத்திக் கொண்டும் வாலை இடுக்கிக் கொண்டும் ஓட்டம் பிடித்தது. சிறுவன் வாய்விட்டு உரக்கச் சிரித்துக் கொண்டு குதித்தான், ஆனால் அவன், அந்த நாய்க்குட்டியை ஓடிப் போக விட்டுவிடவில்லை. தெரு வழியாக ஓடி மீண்டும் ஒரு பிஸ்கோத்தை அதற்குப் போட்டான். அப்படியே மெதுவாக அதை மாளிகைக்கு அழைத்து வந்துவிட்டான். சடையனைக் கண்டு அது பயந்து அலறுவதிலே அந்தச் சிறுவனுக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்காக அதை அவன் மாளிகை யிலேயே வைத்துக்கொண்டான். இவ்வளவு பயந்து அலறுகின்ற நாயை அவன் கண்டதேயில்லை. பயம் மிகுந்த அந்த நாய்க்குட்டிக்கு வேடிக்கையாகச் சூரப்புலி’ என்று பெயர் வைத்தான். 

சூரப்புலியின் மீது சடையன் அடிக்கடி உறுமிக் கொண்டு பாய வரும். அந்தச் சிறுவனுடைய உத்தரவுப்படிதான் அது அப்படிப் பாய்ந்தது. வாலைக் கால்களுக்கு நடுவே இடுக்கிக்கொண்டும், வீல் என்று அலறிக்கொண்டும் சூரப்புலி , நாற்கால் பாய்ச்சலில் மாளிகையை விட்டு வெளியே வேகமாக ஓடும், கைதட்டிக் கொண்டு சிறுவன் சிரித்துக் கூத்தாடுவான். அவன் வீட்டிற்குச் செல்லப்பிள்ளை. அவன் என்ன செய்தாலும் யாரும் ஏன் என்று கேட்கமாட்டார்கள். ஒரே மகன். அதிலும் பணம் நிறையச் சம்பாதித்தவருடைய மகன். பையனுடைய தகப்பனார் பாக்கு வியாபாரி. மேட்டுப்பாளையத்திற்குப் பக்கத்திலே, நீலகிரி மலைச் சரிவில் முகு மரங்கள் ஏராளமாகச செழித்து வளர்கின்றன அந்த மரங்களிலே குலை குலையாகக் காய்த்துத் தொங்கும் பாக்குக் காய்களை, கமுகுத்தோட்டங்களின் சொந்தக்காரர்களிடமிருந்து வாங்கி, வெளியூர்களுக்கு அனுப்புவது, அவருடைய தொழில். தோட்டக் காரர்களுக்குக் கிடைப்பதைவிட அதிகமான வரும்படி இவருக்குண்டு. இவ்வாறு சம்பாதித்த பணத்தைக் கொண்டு, பெரிய மாளிகை கட்டி, அவர் ஆடம்பரமாக வாழ்ந்துவந்தார். 

பாக்கு வியாபாரிக்குப் பகலெல்லாம் கடையிலே வேலையிருக்கும். அதனால் அவருக்குத் தம் மகனைக் கவனிக்க நேரமில்லை. பெரிய மாளிகையிலே குடும்பம் நடத்துகின்ற அம்மாளுக்கோ வேலைக்காரர் களையும் வீட்டுக் காரியத்தையும் மேற்பார்வை செய்யவே நேரம் . போதாது. அதனால் அந்தச் சிறுவன் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தான். சடையனோடும் சூரப்புலியோடும் விளையாடுவதும், வேடிக்கை செய்வதும் அவனுடைய வேலை. சடையனுக்கு அவனோடு விளையாடுவதில் எப்பொழுதும் விருப்பம் தான், ஆனால் சூரப்புலியின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது. சடையனின் கொழுத்த உருவத்தையும், பயங்கரமான உறுமலையும் கண்டு அது சதா நடுங்கிக்கொண்டிருந்தது. மாளிகையை விட்டு ஓடிப்போகவும் அதற்கு விருப்பம் இல்லை. ஓடிப்போனால் சோற்றுக்கு எங்கே போவது? முன்னால் பட்டினி கிடந்ததே போதும். பணக்காரச் சிறுவன், அதற்குப் பயங்காட்டி வேடிக்கை செய்தாலும் பிஸ்கோத்து நிறையக் கொடுக்கிறான். குறித்த வேளைக்கு மாளிகையிலே உணவு கிடைக் கிறது.

பல சமயங்களிலே சடையன் சூரப்புலியின் பங்கான உணவையும் அபகரித்துக்கொள்ளும். எத்தனை உணவு வைத்தாலும் கொழுத்திருந்த அந்த நாய்க்குத் திருப்தி ஏற்படாது. வேலைக்காரன் ஏமாந்த சமயத்தில் சூரப்புலியை விரட்டி முடுக்கிவிட்டு, அதன் பங்கையும் தின்றுவிடும். அப்படியிருந்தாலும், சூரப்புலி , தொடர்ந்து பட்டினியாகக் கிடக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் வேலைக்காரர் கள் ஏமாறமாட்டார்கள். அதனால் ஒருவேளை பட்டினி கிடந்தாலும் சூரப்புலிக்கு அடுத்த வேளையில் உணவு கிடைத்தது. தெரு வழியாக ஓடினால் அது கூடக் கிடைக்காதே ! 

மேலும், வெளியிலே சென்று எச்சில் இலைகளுக்குக் காத்திருப் பதை அது வெறுத்தது. அது இழிவான காரியம் என்று அதற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சூரப்புலியின் தாய் ஒரு சாதாரண நாட்டு நாய்தான். ஆடுகளை இரவு நேரங்களிலே அடைத்து வைக்கும் பட்டியைக் காப்பது அதனுடைய வேலை. அதைப் பட்டி நாயென்றும் சொல்லுவார்கள். உருவத்திலே சிறியதாகவும், பார்ப் பதற்கு அதிகமான அழகில்லாததாகவும் இருந்தாலும் அது பட்டியைக் காப்பதிலே திறமை வாய்ந்தது. இருட்டிலே திருட்டுத்தனமாகப் பட்டிக்குள்ளே நுழைய வரும் குள்ள நரிகளை எதிர்த்துப் போராடக் கூடிய வலிமை அதற்கு இல்லாவிட்டாலும் அது ஏமாறாமல் நரி வருவதை முன்னாலேயே கண்டுபிடித்துப் பெரிய சத்தத்தோடு குரைக்கும். அந்தச் சத்தத்தைக் கண்ட நரி ஓடிவிடும் ஆட்டுப் பட்டியில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆட்டுப் பட்டிக்காரனும் விழித்துக் கொள்வான். 

சூரப்புலி இளங்குட்டியாக அதன் தாயோடு இருக்கும் காலத்திலே, ஒருநாள் இரவு, பவானியாற்றிலே திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. நீலகிரி மலையிலே மழை கொட்டு கொட்டென்று கொட்டிற்று. அதனால் வெள்ளம் பெருக்கெடுத்து இரண்டு கரைகளையும் உடைத்துக்கொண்டு, மேய்ச்சல் நிலமெல்லாம் பாய்ந்தோடிற்று. அந்தச் சமயத்தில், ஆட்டுப்பட்டி பவானியாற்றின் கரைக்கு அருகிலே ஒரு வயல் வெளியில் இருந்தது. வெள்ளம் வருகிறதைப்பற்றிப் பட்டி நாய் எப்படியோ அறிந்து கொண்டு, எச்சரிக்கை செய்ய முயன்றது. குரைத்துக் குரைத்து முன்னும் பின்னும் ஓடி ஓடிக் காண்பித்தது. ஆனால், ஆட்டுக்காரன் அதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அன்று அவனுக்கு நல்ல தூக்கம். முதல் நாளிரவு அவன் கூத்துப் பார்க்கப் போயிருந்தான். அதனால், அன்று அவனுக்கு நல்ல தூக்கமில்லை. பட்டி நாயின் எச்சரிக்கையைக் கவனியாமல் அவன் தூங்கிவிட்டான். வெள்ளம் – கொந்தளித்து வேகமாகப் பாய்ந்தது,

பட்டி நாய் தனது ஒரே குட்டியை அழைத்துக்கொண்டு, வேகமாக ஓடி ஒரு சிறிய குன்றின் மேலே ஏறிற்று. அங்கே குட்டியை விட்டுவிட்டு, மறுபடி யும் ஆட்டுக்காரனுக்கு எச்சரிக்கை செய்ய ஓடிற்று. ஆனால், அதன் முயற்சி வீணாகப் போய்விட்டது. வெள்ளம், பட்டி கிடந்த நிலத்துக்குள்ளே புகுந்து, பட்டியையும் ஆடுகளையும் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஆட்டுக்காரனும் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டான். அவனுக்கு எச்சரிக்கை செய்ய வந்த பட்டி நாயும் வெள்ளத்திற்குப் பலியாயிற்று. அதன் பிறகுதான் அந்தக் குட்டி, எப்படியோ இரண்டு நாள் பட்டினியாக அலைந்து திரிந்து, கடைசியில் அந்தப் பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தது. 

அதனால், பணக்காரச் சிறுவன் செய்கிற வேடிக்கை விளையாட்டையும் சடையனின் உறுமலையும், விரட்டலையும் உணவை ஏமாற்றிப் பிடுங்கும் அடாத செய்கையையும் பொறுத்துக்கொண்டு சூரப்புலி , ஆறு மாதங்கள் அந்த மாளிகையிலே கழித்தது. தினமும் அது பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சம் அல்ல. இருந்தாலும், அந்த மாளிகையை விட்டுத் தெருவிலே போய் அலைய அதற்கு விருப்ப மில்லை . 

ஆனால் அதன் பிறகு ஒரு நாள் நடந்த சம்பவத்தால் மாளிகை யிலே அதன் வாழ்வு முடிந்து போயிற்று. அந்தப் பெரிய மாளிகை யின் பின்புறத்தில் நிறையக் காலி இடம் உண்டு. அங்கே கோழி களையும், குள்ள வாத்துகளையும் வளர்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு ஒரு பெட்டைக் கோழியைக் கூண்டிற்குள்ளே அடைக்க மறந்து விட்டார்கள். அதைக் கவனித்த சடையன், எல்லோரும் தூங்குகிற சமயம் பார்த்து அந்தப் பக்கம் வந்து, சத்தம் செய்யாமல் கோழியைப் பிடித்துக்கொண்டது. பகலிலே தாராளமாகப் பக்கத்தில் வந்து விளையாடும் சடையனைக் கண்டு, கோழி பயப்படவில்லை. அதனால், சடையனுக்கு அதைப் பிடிப்பது எளிதாக முடிந்தது. மெதுவாகக் கோழியின் பக்கத்தில் போய், அதன் கழுத்தைப் பிடித்து, ஒரே கடியில் இரண்டு துண்டாக்கிவிட்டது. கோழி சத்தம் செய்யா மலேயே செத்துப்போய்விட்டது. சடையன் அந்தக் கோழியைத் தூக்கிக்கொண்டு. சூரப்புலி வழக்கமாகப் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தது. 

சடையன் செய்த கெட்ட காரியத்தை மாளிகையில் உள்ளவர் களுக்கு அறிவிக்கச் சூரப்புலி வாயெடுத்தது. அதன் கருத்தைத் தெரிந்து கொண்டு சடையன், கோழியைக் கீழே போட்டுவிட்டு, கோபத்தோடு உர்ரென்று உறுமுவதுபோல் பாவனை செய்தது. சூரப்புலி பயந்து வாலை இடுக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டது. சூரப்புலியின் இடத்திலேயே சடையன் கோழியைப் போட்டுத் தின்றது. பிறகு, கோழிப் பொங்குகளையும், எலும்புகளை யும் அங்கேயே போட்டுவிட்டுத் தன் இடத்திலே போய்ச் சுகமாகத் தூங்கலாயிற்று. மறுநாள் காலையில், மாளிகையில் ஒரே பரபரப்பு. வேலைக்காரர்கள் கூச்சல் போட்டார்கள். கோழியைச் சூரப்புலிதான் அடித்துத் தின்றுவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அதனால், அதைக் கட்டி வைத்து, சாட்டையால் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். சூரப்புலி வாள்வாளென்று கத்தி அழுத்து. சடையன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு, பக்கத்திலே மகிழ்ச்சியோடு படுத்திருந்தது. சூரப்புலிக்கு இரக்கம் காட்டுபவர்கள் யாருமே இல்லை. 


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புத்திசாலி யூகி – குழந்தைகள் கதைபுத்திசாலி யூகி – குழந்தைகள் கதை

இன்னைக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு புத்திசாலி ஜப்பானிய சிறுவனைப் பற்றிய கதைதான். அந்த சிறுவனின் பெயர் யூகி. அதுக்கு முன்னாடி நம்ம சுனாமியைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். இதை தமிழில் ஆழிப் பேரலைன்னு சொல்லுவாங்க. நம்ம எல்லாருக்கும் கடற்கரை, பீச் ன்னு

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்

ஆமையின் அழகான மகள் – நைஜீரிய நாட்டுபுறக் கதைஆமையின் அழகான மகள் – நைஜீரிய நாட்டுபுறக் கதை

ஒரு காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ராஜா இருந்தார். காட்டு மிருகங்கள் மற்றும் விலங்குகள் மீது அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.  அந்த நாட்டில் வசித்த ஆமை ஒன்று அனைத்து மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் புத்திசாலித்தனமாக பார்க்கப்பட்டது. ராஜாவுக்கு எக்பென்யோன் என்ற மகன்