Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் பண்ணன் வாழ்க! – புறநானூற்றுச் சிறுகதை

பண்ணன் வாழ்க! – புறநானூற்றுச் சிறுகதை

 

சிறுகுடியின் பெரிய வீதி ஒன்றில் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டு அந்த வியக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் கிள்ளிவளவன். மழைக் காலத்தில் சிறிய முட்டைகளை எடுத்துக்கொண்டு சாரி சாரியாகக் கூட்டிற்குச் செல்லும் எறும்புகளைப்போல் அந்தப் பெரிய மாளிகைக்குள் ஏழை மக்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சோறு நிறைந்த பாத்திரங்களைத் தாங்கி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு செல்லும் அவர்களைப் பார்த்தால் இப்படி அவர்களுக்கு அன்னதானம் செய்து அனுப்பும் அந்தக் கொடைவள்ளல் யார் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றும். 

பழுத்த மரத்தில் கூடும் பறவைகளின் கூட்டத்தைப் போல, உண்டு செல்பவர்களும் உண்டு கொண்டிருப்பவர்களும் உண்ண வருபவர்களுமாக ஒரே ஆரவார ஒலிகள் நிறைந்து விளங்கியது. 

கிள்ளிவளவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. அங்கிருந்த மக்களிடம் அந்த மாளிக்கைக்குரியவரின் பெயர் என்னவென்று கேட்டான். ‘பண்ணன்’ என்று மறுமொழி கிடைத்தது. வளவன். அரசன். ஆனால் அப்போது அந்தத் தெருவோரத்தில் சாதாரண உடையில் யாரோ வழிபோக்கன் மாதிரி நின்று கொண்டிருந்தான். பசிப்பிணிக்கு வைத்தியம் செய்யும் அந்த வள்ளலை அரசன் என்ற முறையில் காண்பதைவிட அவனிடம் சோறு பெறச் செல்லும் சாதாரண மனிதர்களுள் ஒருவனாகச் சென்று கண்டு வாழ்த்திவிட்டு வர வேண்டும் என்ற எண்ணம் வளவனுக்கு உண்டாயிற்று. 

உடனே அருகிலிருந்த ஒரு பாணனிடம் யாழை இரவல் வாங்கிக் கொண்டான். ஒன்றும் தெரியாதவனைப்போல் எதிரே வந்தவர்களிடம் எல்லாம் “ஐயா! இங்குப் பசி நோய்க்கு வைத்தியம் செய்யும் பண்ணன்’ என்பவர் வசிக்கிறாராமே? அவருடைய வீடு பக்கத்தில் இருக்கிறதா? தொலைவில் இருக்கின்றதா?” என்று வழி கேட்டுக்கொண்டே போய் அந்த மாளிகைக்குள் நுழைந்தான். யாழ் வாசிக்கும் பாணன் ஒருவன் யாசிக்கச் செல்வது போல் நடித்துக் கொண்டு குனிந்த தலையோடு போவது அந்த மன்னாதி மன்னனுக்குத் துன்பமாகத்தான் இருந்தது. ஆனால் பண்ணனைக் கண்டு வாழ்த்தும்போது அவனைவிடத் தாழ்ந்த நிலையிலிருந்தே வாழ்த்திவிட்டுத் தான் இன்னார் என்று தெரியாமல் வந்துவிட வேண்டுமென்பதுதான் வளவனுடைய திட்டம். 

கையில் இரவல் வாங்கிய யாழ், மெய்யில் யாசகனைப் போன்ற குழைவு இயற்கையான கம்பீரத்தை மறைத்துக் கொண்டு வலிய உண்டாக்கிக் கொண்ட பணிவு. வளவன் வயிறு வளர்க்கும் பாண்னாகப் பண்ணன் முன்னால் போய் நின்றான். 

”வாருங்கள்! வாருங்கள்! பாணரே! உங்களுக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உடனே மறுக்காமல் தருகிறேன்…’ பண்ணன் மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். 

பாணனாக நின்று கொண்டிருந்த கிள்ளிவளவன் தெய்வ பிம்பத்தைப் பயபக்தியோடு தரிசனம் செய்வதைப் போல் இமையாமல் பண்ணனையே பார்த்தான். கை கூப்பி வணங்கினான். கண்களில் கண்ணீர் மல்கியது. 

”பண்ணா நீ கொடுத்துக் கொடுத்து உயர்ந்தவன். உன்னிடம் நான் வாங்க வரவில்லை. கொடுக்க வந்திருக்கிறேன்” 

“எதை கொடுக்கப் போகிறீர்கள்?” 

”என்னுடைய வாழ்நாளில் எஞ்சியவற்றை எல்லாம் உனக்கு அளிக்க முடியுமானால் தயங்காமல் அளித்து விடுவேன்.’‘ 

”ஏன் அப்படி வாழ்வில் வெறுப்பா?” 

”இல்லை நான் வாழ்கிற நாட்களையும் சேர்த்துப் பண்ணன் வாழ்ந்தால், அதனால் அன்ன தானமாவது ஒழுங்காக நடை பெறும். இப்படிக் கூறிவிட்டு மீண்டும் பண்ணனை வணங்கி  வெளியேறினான் வளவன். பண்ணன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அனுமானத்துக்கு எட்ட அந்தப் பாணனின் முகத்தை எங்கோ எப்பொழுதோ ஏதோ பெரிய இடத்தில் கண்ட மாதிரி நினைவு வந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மழலை இன்பம் – புறநானூற்றுச் சிறுகதைமழலை இன்பம் – புறநானூற்றுச் சிறுகதை

  ஆந்தை கத்துவது போலவும், காக்கை கரைவது போலவும் மற்றவர்களுக்குக் கேட்க முடியாத ஒலியாக இருந்தாலும் பெற்றவர்களுக்கு அது குழந்தையின் மழலை. அதனால் அவர்கள் அடையும் இன்பமே தனி. உவமை கூற முடியாத இன்பம் அது.  ஒரு சமயம் அதியமான் என்ற

அவனுக்குத்தான் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதைஅவனுக்குத்தான் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

  இந்த உலகத்தில் இரண்டு வகையான காதல் காவியங்கள் வழங்குகின்றன. காதலித்தவனும் காதலித்தவளும் தங்கள் கருத்து நிறைவேறி இன்பமுறும் காவியங்கள் ஒரு வகை. இருவருமே காதலில் தோற்று அமங்கலமாக முடியும் காவியங்கள் இன்னொரு வகை இருவகைக் காவியங்களும் காதல் காவியங்களே.  ஆனால்

சிவந்த விழிகள் – புறநானூற்றுச் சிறுகதைசிவந்த விழிகள் – புறநானூற்றுச் சிறுகதை

  தகடூர் அரண்மனையில் அன்று ஆரவாரம் நிறைந்திருந்தது. திரும்பிய இடமெல்லாம் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்பட்டன. அரண்மனையைச் சேர்ந்த பகுதிகளில் சிறப்பான அலங்காரங்கள் செய்திருந்தார்கள். அங்கங்கே மங்கள வாத்தியங்கள் இன்னிசை முழக்கின. இவ்வளவிலும் கலந்து கொள்ள அரசன் அதியமானோ அரண்மனையைச் சேர்ந்த ஏனைப்