Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் வெட்கம்! வெட்கம்! – புறநானூற்றுச் சிறுகதை

வெட்கம்! வெட்கம்! – புறநானூற்றுச் சிறுகதை

 

சோழன் கிள்ளிவளவன் கருவூரை வளைத்துக் காண்டிருந்தான். கருவூர் மன்னனோ வளவனின் முற்றுகைக்கு ஆற்றாமல் புலியைக் கண்ட ஆடு போல அஞ்சி நடுங்கிக் கோட்டைக்குள்ளே பதுங்கிக் கிடந்தான். “இவன் பயந்து கிடக்கிறானே! இந்தக் கோழையோடு நமக்கு என்ன போர் வேண்டிக் கிடக்கிறது?” என்று நினைத்துக் கிள்ளிவளவனாவது முற்றுகையைத் தளர்த்திப் போரையும் விட்டிருக்கலாம். அதுவும் இல்லை . அவன் முற்றுகையும் உடும்புப் பிடியாக நீடித்தது. இவன் நடுக்கமும் பயமும் நாளுக்கு நாள் பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. 

இந்த நிலையில் இரண்டு பக்கமுமுள்ள துயரங்களை உணர்ந்து அவற்றைத் தவிர்க்க ஏதாவது செய்ய நினைத்தார் ஆலத்தூர் கிழார் என்ற புலவர். கிள்ளிவளவனுக்கு நண்பர் அவர். பெருவீரனும் பேரரசனுமாகிய வளவன் பயங்கொள்ளியாகிய ஒரு சிற்றரசனை அவன் கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு ஒடுங்கிக் கிடந்தபோதும் எதிர்த்து நின்ற நிலை தகுதிவாய்ந்த தாக்கப்படவில்லை அவருக்கு. செத்த பாம்பை அடிப்பது போல் இழிந்த முயற்சி இது’ என்று எண்ணினார். 

உடனே கருவூருக்கு விரைந்து சென்றார். ” ஆலத்தூர் கிழார் கருவூர்க் கோட்டையினருகே வெளிப் புறத்திலிருந்த வளவனின் பாசறைக்குச் சென்று அவனைக் கண்டார். கிள்ளிவளவன் மரியாதையோடு அவரை வரவேற்று உபசரித்தான். 

”கிள்ளி! உன்னுடைய இந்த முற்றுகையைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.” 

“என்ன? என்னுடைய முற்றுகை வெட்கப்படத்தக்க செயல் என்றா சொல்கிறீர்கள்?” 

“ஆம் கிள்ளீ! சந்தேகமில்லாமல் இது வெட்கப்படத்தக்க செயல்தான். நீ போர் செய்தாலும் போர் செய்யாவிட்டாலும் உன் புகழ் குன்றப்போவது இல்லை. உன் பெருமை உனக்கே தெரியும். நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.” 

”பீடிகை இருக்கட்டும் புலவரே விஷயத்தைச் சொல்லுங்கள்” கிள்ளிவளவன் ஆத்திரப்பட்டான், 

”பொறு கிள்ளீ! உன்னிடம் சொல்லுவதற்குத்தானே நான் இங்கே வந்திருக்கிறேன். உன் வீரர்கள் அந்தக் கருவூரானின் காவல் மரங்களைக் கோடாரியால் வெட்டி வீழ்த்துகின்ற ஓசை கோட்டைக்குள் அவன் செவிகளிலும் கேட்கத்தான் கேட்கிறது. ஆனால் கோழையாகிய அவன் காவல் மரங்களை அழிக்கும் போதும் தன் உயிருக்கு அஞ்சிக் கோட்டையை விட்டு வெளியே வந்து போர் செய்யாமல் பதுங்கிக் கிடக்கின்றான். எவ்வளவு கோழையாயிருந்தாலும் தன் காவல் மரங்களை மாற்றான் பற்றுவதைக் கண்டு எவனும் பொறுத்து வாளா இருக்க மாட்டான். அவன் கோழையிலும் கோழை. ஆகவேதான் கதவடைத்துக் கொண்டு கிடக்கிறான். வளவர் மன்னவா! இந்தக் கோழையோடு போர் செய்வதற்காக அவனை ஒரு வீரமுள்ள மனிதனாக மதித்து வானவில் போலநிறங்களால் அழகிய உன் முரசத்தை முழங்கி நீ போருக்காக முற்றுகையிடலாமா? வெட்கம் ! வெட்கம்! இதைவிட வெட்கப்படத்தக்க காரியம் வேறென்ன 

 

இருக்க முடியும்?” ஆலத்தூர் கிழார் பேசி முடித்துவிட்டுக் கிள்ளிவளவனின் முகத்தைப் பார்த்தார். 

அவன் முகத்தில் சிந்தனைக் குறிகள் தென்பட்டன. வளவன் ஒரு காவல்காரனைக் கூப்பிட்டுப் படைத்தலைவனை அழைத்து வருமாறு பணித்தான் படைத்தலைவன் வந்து வணங்கி நின்றான். 

”நம் படைகளும் நாமும் இன்றே தலைநகர் திரும்ப வேண்டும்! இந்தப் போர் தேவையில்லை நமக்கு. உடனே நகர் திரும்ப ஏற்பாடு செய்” ஆணை பிறந்தது அரசனிடமிருந்து. 

ஆலத்தூர் கிழார் மனமகிழ்ந்து அவனைப் பாராட்டினார். கிள்ளி அவருக்கு நன்றி செலுத்தினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதைதமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதை

  நல்ல வெயிலில் பசிக் களைப்போடு பல காத தூரம் நடந்து வந்திருந்தார் மோசிகீரனார். சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையின் அரண்மனைக்குள் அவர் நுழைந்த போது அலுப்பும், சோர்வுமாக அவரைக் கிறக்கமடையச் செய்திருந்தன. உறக்கம் கண் இமைகளை அழுத்தியது. எங்கேயாவது ஓரிடத்தில்

பரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதைபரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதை

  சிற்றரசனான பாரி வள்ளலின் பறம்பு மலையை மூவேந்தர் களும் முற்றுகையிட்டிருந்தனர். பாரியின் மேல் அவர்களுக்கு இருந்த பொறாமையின் அளவை அந்த முற்றுகையின் கடுமையே காண்பித்தது. பாரியை வெல்ல வேண்டும், அல்லது கொல்ல வேண்டும். இரண்டிலொன்று முடிந்தாலொழிய எவ்வளவு காலமானாலும் தங்கள்

ஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audioஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audio

      அது ஒரு வேடனின் குடிசை காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக் கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம் பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற்போல் அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது