Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் வெட்கம்! வெட்கம்! – புறநானூற்றுச் சிறுகதை

வெட்கம்! வெட்கம்! – புறநானூற்றுச் சிறுகதை

 

சோழன் கிள்ளிவளவன் கருவூரை வளைத்துக் காண்டிருந்தான். கருவூர் மன்னனோ வளவனின் முற்றுகைக்கு ஆற்றாமல் புலியைக் கண்ட ஆடு போல அஞ்சி நடுங்கிக் கோட்டைக்குள்ளே பதுங்கிக் கிடந்தான். “இவன் பயந்து கிடக்கிறானே! இந்தக் கோழையோடு நமக்கு என்ன போர் வேண்டிக் கிடக்கிறது?” என்று நினைத்துக் கிள்ளிவளவனாவது முற்றுகையைத் தளர்த்திப் போரையும் விட்டிருக்கலாம். அதுவும் இல்லை . அவன் முற்றுகையும் உடும்புப் பிடியாக நீடித்தது. இவன் நடுக்கமும் பயமும் நாளுக்கு நாள் பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. 

இந்த நிலையில் இரண்டு பக்கமுமுள்ள துயரங்களை உணர்ந்து அவற்றைத் தவிர்க்க ஏதாவது செய்ய நினைத்தார் ஆலத்தூர் கிழார் என்ற புலவர். கிள்ளிவளவனுக்கு நண்பர் அவர். பெருவீரனும் பேரரசனுமாகிய வளவன் பயங்கொள்ளியாகிய ஒரு சிற்றரசனை அவன் கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு ஒடுங்கிக் கிடந்தபோதும் எதிர்த்து நின்ற நிலை தகுதிவாய்ந்த தாக்கப்படவில்லை அவருக்கு. செத்த பாம்பை அடிப்பது போல் இழிந்த முயற்சி இது’ என்று எண்ணினார். 

உடனே கருவூருக்கு விரைந்து சென்றார். ” ஆலத்தூர் கிழார் கருவூர்க் கோட்டையினருகே வெளிப் புறத்திலிருந்த வளவனின் பாசறைக்குச் சென்று அவனைக் கண்டார். கிள்ளிவளவன் மரியாதையோடு அவரை வரவேற்று உபசரித்தான். 

”கிள்ளி! உன்னுடைய இந்த முற்றுகையைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.” 

“என்ன? என்னுடைய முற்றுகை வெட்கப்படத்தக்க செயல் என்றா சொல்கிறீர்கள்?” 

“ஆம் கிள்ளீ! சந்தேகமில்லாமல் இது வெட்கப்படத்தக்க செயல்தான். நீ போர் செய்தாலும் போர் செய்யாவிட்டாலும் உன் புகழ் குன்றப்போவது இல்லை. உன் பெருமை உனக்கே தெரியும். நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.” 

”பீடிகை இருக்கட்டும் புலவரே விஷயத்தைச் சொல்லுங்கள்” கிள்ளிவளவன் ஆத்திரப்பட்டான், 

”பொறு கிள்ளீ! உன்னிடம் சொல்லுவதற்குத்தானே நான் இங்கே வந்திருக்கிறேன். உன் வீரர்கள் அந்தக் கருவூரானின் காவல் மரங்களைக் கோடாரியால் வெட்டி வீழ்த்துகின்ற ஓசை கோட்டைக்குள் அவன் செவிகளிலும் கேட்கத்தான் கேட்கிறது. ஆனால் கோழையாகிய அவன் காவல் மரங்களை அழிக்கும் போதும் தன் உயிருக்கு அஞ்சிக் கோட்டையை விட்டு வெளியே வந்து போர் செய்யாமல் பதுங்கிக் கிடக்கின்றான். எவ்வளவு கோழையாயிருந்தாலும் தன் காவல் மரங்களை மாற்றான் பற்றுவதைக் கண்டு எவனும் பொறுத்து வாளா இருக்க மாட்டான். அவன் கோழையிலும் கோழை. ஆகவேதான் கதவடைத்துக் கொண்டு கிடக்கிறான். வளவர் மன்னவா! இந்தக் கோழையோடு போர் செய்வதற்காக அவனை ஒரு வீரமுள்ள மனிதனாக மதித்து வானவில் போலநிறங்களால் அழகிய உன் முரசத்தை முழங்கி நீ போருக்காக முற்றுகையிடலாமா? வெட்கம் ! வெட்கம்! இதைவிட வெட்கப்படத்தக்க காரியம் வேறென்ன 

 

இருக்க முடியும்?” ஆலத்தூர் கிழார் பேசி முடித்துவிட்டுக் கிள்ளிவளவனின் முகத்தைப் பார்த்தார். 

அவன் முகத்தில் சிந்தனைக் குறிகள் தென்பட்டன. வளவன் ஒரு காவல்காரனைக் கூப்பிட்டுப் படைத்தலைவனை அழைத்து வருமாறு பணித்தான் படைத்தலைவன் வந்து வணங்கி நின்றான். 

”நம் படைகளும் நாமும் இன்றே தலைநகர் திரும்ப வேண்டும்! இந்தப் போர் தேவையில்லை நமக்கு. உடனே நகர் திரும்ப ஏற்பாடு செய்” ஆணை பிறந்தது அரசனிடமிருந்து. 

ஆலத்தூர் கிழார் மனமகிழ்ந்து அவனைப் பாராட்டினார். கிள்ளி அவருக்கு நன்றி செலுத்தினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புலவர் தூது – புறநானூற்றுச் சிறுகதைபுலவர் தூது – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானிடமிருந்து தூதராக வந்திருந்த ஒளவையாரைத் தனது படைக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான் தொண்டைமான் இளந்திரையன்.  கம்பீரமான தோற்றத்தோடு விளங்கிய அந்த ஆயுதசாலை முழுதும் ‘பளபள வென்று மின்னும் புத்தம் புதிய ஆயுதங்கள் நிறைக்கப்பட்டுக் கிடந்தன.  நீள நீளமான வேல்கள் ஒருபுறம்

பண்ணன் வாழ்க! – புறநானூற்றுச் சிறுகதைபண்ணன் வாழ்க! – புறநானூற்றுச் சிறுகதை

  சிறுகுடியின் பெரிய வீதி ஒன்றில் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டு அந்த வியக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் கிள்ளிவளவன். மழைக் காலத்தில் சிறிய முட்டைகளை எடுத்துக்கொண்டு சாரி சாரியாகக் கூட்டிற்குச் செல்லும் எறும்புகளைப்போல் அந்தப் பெரிய மாளிகைக்குள் ஏழை மக்கள்

இந்த உலகம் – புறநானூற்றுச் சிறுகதைஇந்த உலகம் – புறநானூற்றுச் சிறுகதை

  நன்கணியார் தெருவழியே நடந்து கொண்டிருந்தார். தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் கலியாணம் போலிக்கிறது. வாத்தியக்காரன் மங்கலமயமான இராகத்தைத் தெருவெல்லாம் கேட்கும்படி வாரியிறைத்துக் கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அழகான பெரிய பந்தல், பந்தல் தூண்களில் வாழை மரங்கள்;    மாவிலைத் தோரணங்கள்.