Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் பெற்றவள் பெருமை – புறநானூற்றுச் சிறுகதை

பெற்றவள் பெருமை – புறநானூற்றுச் சிறுகதை

 

போர் முடிந்துவிட்டது. ஒலித்து ஓய்ந்த சங்கு போல் போர்க்களம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. இருபுறத்துப் படைகளிலும் இறந்தவர் போக இருந்தவர் நாடு திரும்பினர். பல நாட்கள் போர்க்களத்தில் ஓய்வு ஒழிவின்றிப் போரிட்ட களைப்பு ! பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்? வீடு, வாசல், மனைவி மக்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்காதா? 

வீரர்கள் வரிசை வரிசையாக வெற்றிப் பெருமிதத்தோடும் களைப் போடும் தங்கள் தலைநகரத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். உற்றார் உறவினர்கள் அவர்களை மகிழ்ச்சி யோடு எதிர்கொண்டழைக்கிறார்கள். ஒரே ஆரவாரம் ; ஒரே கோலாகலம்! வருவோரும் வரவேற்போருமாக மயங்கிக் கலந்து நின்ற அந்தக் கூட்டத்தின் ஓர் ஓரத்தில் வயதான கிழவி ஒருத்தியைக் காண்கிறோம்., 

கொக்கின் இறகுபோல் நரைத்து வெளுத்த கூந்தல். பசிய நரம்புகள் புடைத்துத் தசை சுருக்கமடைந்து எலும்புகள் தெரியும் 

 

தோள்கள். வற்றி வறண்டு குழிகள் விழிந்த முகம். போர்க் களத்திலிருந்து வந்து கொண்டிருந்த வீரர்களின் கூட்டத்தில் ஒளி குன்றிய அவள் விழிகள் யாரையோ தேடித் துழாவின. 

நீண்ட நேரமாகக் கால் கடுக்க நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சியது. எல்லோரையும் போலப் போருக்குப் போன அவள் புதல்வன் திரும்பி வரக் காணோம். ஆவல் ததும்பி நிற்கத் துழாவிய அவள் விழிகளுக்கு மகனுடைய முகம் அந்தக் கூட்டத்தில் தென்பட வில்லை . நேரம் ஆக ஆக அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. நம்பிக்கையை மீறிய சந்தேக நிழல் மனவிளிம்பில் மெல்லப் படியத் தொடங்கியது. போர்க்களத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் வீரர்கள் எவரையாவது கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தாள். மகனின் அடையாளத்தைச் சொல்லி அவன் என்ன ஆனான்?’ என்று கேட்டால் பதில் சொல்லாமலா போய் விடுவார்கள்? கிழவிக்குத் துணிவு வந்தது. தளர்ந்த நடை நடந்து கூட்டத்தை நெருங்கினாள். கூட்டத்தில் வந்து கொண்டிருந்த வீரர்களோ வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

“ஐயா! ஐயா! கொஞ்சம் நில்லுங்களேன்.” 

“ஏன் கிழவி? உனக்கென்ன வேண்டும்? எதற்காக இப்படி இந்த நெருக்கடியில் வந்து இடிபடுகிறாய்?” 

“உங்களை ஒன்று கேட்க வேண்டும். ஐயா! தயவு செய்து கொஞ்சம் பதில் சொல்லிவிட்டுப் போங்களேன்.” 

”என்ன கேட்க வேண்டுமோ, அதை விரைவாகக் கேள். எனக்கு அவசரம், வீட்டுக்குப் போக வேண்டும்.” 

”கோபப்படாதீர்கள் ஐயா! என் ஆத்திரம் எனக்கு என் மகன் ஒருவன், உங்களைப் போலவேதான் போருக்குப் போனான். இதுவரை திரும்பி வரக் காணோம்.” 

கிழவியை உற்று நோக்கிவிட்டு, ”எனக்குத் தெரியாதே பாட்டி வேறு யாரையாவது பார்த்துக் கேளுங்கள்” என்று கூறிச் சென்றான் அந்த வீரன். 

 

”ஐயா! ஐயா.” “போ கிழவி! உனக்கு வேறு வேலை இல்லை.” 

“”ஐயா! நீங்களாவது சொல்லுங்கள் ஐயா! என்ன ஆயிற்றோ ?’ என்று பெற்று வயிறு பதறித் துடிக்கிறது.” 

”எனக்கு உன் மகனையே தெரியாதே பாட்டி” ”ஐயா! அவன் சிவப்பா, உயரமா. நல்ல அழகு” 

”அப்படி ஆயிரம் பேர் அதிலே யாரென்று நினைவு வைத்துக் கொள்ள முடியும்?” 

அடுத்து உண்மையிலேயே அவள் மகனை நன்றாகத் தெரிந்த ஒரு வீரன் வந்தான். தன் மகனோடு அடிக்கடி அவன் சுற்றித் திரிந்து பழகுவதைப் பலமுறை அவளே கண்டிருக்கிறாள். மகனைப் பற்றிய செய்தியை அவனாவது கூறுவான் என்ற ஆவலோடு கிழவி அவனை நெருங்கினாள். ஆனால் அவனோ அவளைக் கண்டும் காணாதவனைப் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு போக முயன்றான். 

“இந்தாப்பா! உன்னைத்தானே?” கிழவி அவனைவிட வில்லை . 

“என்ன பாட்டி ”என் மகனைப் பற்றி?” 

அவன் கிழவியைப் பரிதாபகரமாகப் பார்த்தான். பரக்கப் பரக்க விழித்தான். பின்பு பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுவென்று நடந்துவிட்டான். 

“ஏய் ஏய் என்னப்பா? பதிலே சொல்லாமல் போகிறாய்?” கிழவி கூப்பாடு போட்டாள். ஆனால் அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை. வேகமாக நடந்து கிழவியின் கண்களிலிருந்து மறைந்து விட்டான், விசாரித்து விசாரித்து வாய் அலுத்துவிட்டது கிழவிக்கு. ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஏமாற்றம் நிலவ அப்படியே நின்றுவிட்டாள். 

ஆரம்பத்திலிருந்து இந்தக் கிழவியின் செய்கைகளையும் பரபரப்பையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தெருவோரத்தில் நின்றனர் சில விடலைப் பிள்ளைகள். இவர்களில் ஒருவனுக்கு இந்தக் கிழவியின் மகன் என்ன ஆனான் என்ற உண்மை தெரியும். கிழவியின் மகன் மார்பிலே புண்பட்டு வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான் என்பதை இவன் எப்படியோ விசாரித்து தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்

தங்களுக்குத் தெரிந்த உண்மையை வேறொரு விதமாக மாற்றிச் சொல்லிக் கிழவியை ஏமாற்றி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ஒரு குறும்புத்தனமான ஆசை இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. விடலைப் பிள்ளைகள் தானே? அதனால் விடலைத்தனமான ஆசை ஏற்பட்டது

கிழவி! கிழவி! உன் மகன் என்ன ஆனான் என்பது எங்களுக்குத் தெரியும். தாங்களாகவே வலுவில் கிழவிக்கு – முன் போய் நின்றுகொண்டு இப்படிக் கூறினார்கள் இவர்கள். 

”அப்படியா? நீங்கள் நன்றாயிருக்க வேண்டும். உங்களுக்கு எல்லா நன்மைகளும் பெருகட்டும். என் மகன் எங்கேயிருக்கிறான் அப்பா ?” 

‘பாட்டி சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டீர்களே?” ”கோபம் என்ன பிள்ளைகளா? சொல்லுங்கள்.” 

”உன் மகன் இப்போது இந்த உலகத்திலேயே இல்லை. போரில் பகைவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடி முதுகில் அம்பு பாய்ந்து இறந்து போய்விட்டான்…” 

”என்ன? என்ன? என் மகனா? புறமுதுகு காட்டியா இறந்தான்? இருக்காதப்பா..! அவன் மானமுள்ளவன். கனவிலும் அப்படி இறக்க நினைக்கமாட்டானே?” 

”நாங்கள் பொய்யா சொல்கிறோம்?” 

அவன் இறந்துவிட்டான் என்ற துயரம் கூட அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. அவன் முதுகில் புண்பட்டு இறந்தான் என்று கேட்டதுதான் அவள் இதயத்தைக் குமுறச் செய்தது. அவள் வீரக்குடியிலே பிறந்து வீரக்குடியிலே வாழ்க்கைப்பட்டு வீரனை மகனாகப் பெற்றவள் ‘மானமில்லாத காரியத்தை மகன் செய்து விட்டான்!’ என்றெண்ணுகிற போதே அவள் மனம் கொதித்தது. 

“என் மகன் முதுகில் புண்பட்டு இறந்திருப்பானாயின் அவனுக்குப் பால் கொடுத்த இந்த மார்பை அறுத்தாவது என் களங்கத்தை, அவனைப் பெற்றுப் பாலூட்டிய களங்கதைப் போக்கிக் கொள்வேன். இதோ இப்போதே புறப்படுகின்றேன் போர்க்களத்திற்கு…” ஆத்திரத்தோடு அறைகூவிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள் கிழவி. 

அவள் தலை மறைந்ததும் அவர்கள் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தனர். மார்பிலே புண்பட்டு வீரனாக மாண்ட அவனை முதுகிலே புண்பட்டுக் கோழையாக இறந்ததாகக் கூறிக் கிழவியை ஏமாற்றிவிட்ட பெருமை அவர்களுக்கு. 

கிழவி போர்க்களத்துக்குப் புறப்பட்டபோது நன்றாக இருட்டிவிட்டது. அவள் கையில் ஒரு தீவட்டி இருந்தது. போர்க்களத்தில் ஒரே பிணங்களின் குவியல். இடறி விழுந்து விடாமல் சமாளித்துக் கொண்டு நடப்பது சிரமமாக இருந்தது அவளுக்கு. அவள் மனத்தில் ஒரு வெறி. மகன் எப்படி இறந்தான் என்பதை அறிந்து கொள்ள ஒரு துடிப்பு. ஒவ்வொரு உடலாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டே அந்த நள்ளிரவில் தன்னந்தனியே போர்க்களத்தைச் சுற்றிக் கொண்டிருந்தாள் அவள். அவள் இடையில் ஒரு வாளும் துணையிருந்தது. 

தளர்ந்த அவள் உடலில் நடுக்கம் சிறிதுமில்லை. உள்ளத்தில் தனிமையும் இருளும் பயத்தை உண்டாக்கவில்லை. உறுதி! மகனின் ஆண்மையைப் பரிசோதிக்கின்ற உறுதி ஒன்றுதான் அவள் உள்ளத்தில் நிறைந்திருந்தது. பெற்ற பிள்ளையை, ஒரே பிள்ளையை இழந்த துயரம் இருக்க வேண்டிய இடமான 

 

மனத்தில் அவன் இறந்த விதத்தை அறிந்து கொள்ளுகிற ஆவலே விஞ்சி நின்றது

இதோ, கண்டுபிடித்துவிட்டாள். இது அவள் மகனின் சடலம்தான். ஆனால் இதென்ன? அவன் மார்பிலல்லவா புண்பட்டு இறந்திருக்கிறான்? முதுகில் கடுகளவு இரத்த காயம்கூடக் கிடையாது. அவளுடைய மனம் பூரித்தது. அவள் மகன் அவளை ஏமாற்றிவிடவில்லை. அவளுடைய குடியின் பெருமையைக் காப்பாற்றிவிட்டான். அந்த விடலைப் பிள்ளைகள் வேண்டுமென்றே பொய் சொல்லியிருப்பதை அவள் இப்போது தான் புரிந்து கொண்டாள். பெற்ற வயிறு பெருமை கொண்டது. அழ வேண்டியவள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள். பத்துத் திங்கள் சுமந்து அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சி சாதாரணமானது. இப்போது அடைந்த பெருமை..?‘ 

இது ஈடு இணையற்ற ஒரு வீரத்தாயின் பெருமை. ஒரு வீரனைப் பெற்றவளின் பெருமை

இந்தப் பெருமை வெறும் பெருமையா? ஆயிரமாயிரம் பெருங்காப்பியங்கள் பாட வேண்டிய பெருமை அல்லவா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதைஅடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதை

  ஒரு சமயம் சங்கப் புலவர்கள் யாவரும் கூடியிருந்த அவையில் பாண்டிய மன்னன் புலவர்களை நோக்கி ஒரு ஐயத்தை வெளியிட்டான். ”குபேரன் முதல் கோவணாண்டி வரை வாழ்க்கைக் கயிற்றில் ஒரே நூலில் கோக்கப்பட்டிருந்தும் அவர்களுக்குள் தகுதியினால் வேறுபாடு ஏன்? அடிப்படையில் ஒற்றுமை

யாரைப் புகழ்வது – புறநானூற்றுச் சிறுகதையாரைப் புகழ்வது – புறநானூற்றுச் சிறுகதை

  ஏனாதி திருக்கிள்ளி என்று ஒரு சோழ அரசன். பல முறை அடிக்கடி போர்களில் ஈடுபட்டவன். இதன் காரணமாக இவன் உடலில் புண்களும் தழும்புகளும் இல்லாத இடமே கிடையாது. எந்தப் போரிலும் வீரர்களை முன்னணிக்கு அனுப்பிவிட்டுத் தான் சும்மா இருந்துவிடுகிற வழக்கம்

அவனுக்குத்தான் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதைஅவனுக்குத்தான் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

  இந்த உலகத்தில் இரண்டு வகையான காதல் காவியங்கள் வழங்குகின்றன. காதலித்தவனும் காதலித்தவளும் தங்கள் கருத்து நிறைவேறி இன்பமுறும் காவியங்கள் ஒரு வகை. இருவருமே காதலில் தோற்று அமங்கலமாக முடியும் காவியங்கள் இன்னொரு வகை இருவகைக் காவியங்களும் காதல் காவியங்களே.  ஆனால்