Tamil Madhura சிறுகதைகள் திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

62201109_402069690385817_1224776285994090496_n
நாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த கிராமத்தைச் சேர்ந்தவன். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் காடுகள் நிறைந்த வழியில் பயணம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தான். அதனால் அனைவரும் சீக்கிரம் கிளம்ப முடிவு செய்தோம்.

நண்பர்கள் குழு என்றால் அதில் நேரம் தவறி வருவதையே கொள்கையாகக் கொண்டவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பது இயல்பே. அத்தகைய இரு நண்பர்களால் பிற்பகல் கிளம்ப வேண்டிய எங்களது பயணம் தாமதமாகி ஏழு மணியாகிவிட்டது.

வண்டியை செலுத்தி வந்தது எனது தோழன் ராகேஷ். அவன் ஒரு நல்ல புகைப்படக் கலைஞனும் கூட. அவன் எங்கு சென்றாலும் அவனுடன் அவனது கேமிராவும் பயணிக்கும்.

வழியில் மழை வேறு அதனால் ஏற்பட்ட தாமதத்தையும் தாண்டி எங்களது பயணம் ஒரு வழியாகக் காட்டு வழி சாலையில் ஆரம்பித்தது. நகர வாழ்க்கைக்கு மாறாக அந்த இரவு நேரத்தில் மழையின் ஓசையை மீறிக் கொண்டு காரின் ஸ்டிரியோ ‘சண்டே பந்து, சண்டே பந்து’ என்று கன்னடக் குத்துப் பாடல் ஒன்றை உச்சபட்ச சத்தத்தில் அலறியது.

“இன்னும் எவ்வளவு நேரம்தான் டிராவல் பண்ணனும்”

“பாதி தூரம் தான் வந்திருக்கோம்” என்றான் ராகேஷ் .

அவர்கள் அனைவரின் பொறுமையையும் சோதிக்கவென்றே அவர்களது கார் நடுவில் பழுதாகி நின்றுவிட்டது.

“இங்க எங்கடா மெக்கானிக்கைத் தேடுறது”என்றவாறு இருவர் போனட்டைத் திறந்து பார்க்க,

“ஏதாவது கார் கண்ணில் படுதான்னு பாரு” என்று பிரதீப்பும், விஷ்வாவும் வெளியே வந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

எங்கும் பேரமைதி. அந்தப் பேரமைதியைக் கலைக்கும் வண்ணம் எங்கிருந்தோ இசை ஒன்று மெலிதாகக் கேட்க ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல அந்த சத்தத்தின் அளவு கூடியது. சத்தம் வரும் திசையை அனைவரும் பார்க்க, அங்கு காட்டுப் பகுதியிலிருந்து திருமண ஊர்வலம் ஒன்று இசைக்கருவிகளை இசைத்தவண்ணம் கிராமிய நடனமாடிக்கொண்டே வந்தது. அந்த மலைப்பகுதி மக்கள் அணிந்திருக்கும் உடையுடன் இசைக் கருவிகள் முழங்க, நடுநாயகமாக குதிரையில் மணமகன் அமர்ந்திருக்க, வித்யாசமாகக் குதித்தவண்ணம் ஒரு துள்ளல் நடையுடன் வந்த ஆண், பெண் , பெரியவர், சிறியவர் அனைவரும் நடக்க, நகரவாசியான எங்களுக்கு சுவாரசியமாக கூடவே சேர்ந்து நாங்களும் விசிலடிக்க ஆரம்பித்தோம். ராகேஷ் தனது கேமிராவில் புகைப்படம் எடுக்கத் துவங்கினான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு இசைமழையில் நனைந்தோம். ஊர்வலம் காட்டு மரங்களுக்கு இடையில் கடந்து மறைந்தது. நண்பர்கள் இருவர் அதற்குள் எதோ செய்து வண்டியை சரி செய்திருந்தனர். அனைவரும் எங்களது பயணத்தைக் தொடர்ந்தோம். ஒரு வழியாக நீண்ட பயணம் முடிந்து கிட்டத்தட்ட விடியும் நேரத்தில் விமேஷின் கிராமத்தை அடைந்தோம். காலையில் திருமணம் என்பதால் குளித்து ரெடியாகி திருமணத்தில் கலந்து கொள்ளத்தான் எங்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

திருமணம் முடிந்து விருந்து உண்டபின் இரவு தான் எங்களுக்கு ஓய்வு கிடைத்தது.

காலையில் கல்யாணத்தில் ராகேஷ் எடுத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்து கிண்டல் செய்து கொண்டே வந்தோம். படங்களைப் பார்த்தவண்ணம் இருந்த ராகேஷ் திடீரென்று அதிர்ச்சியில் ஊமையானான்.

“என்னடா” என்ற எங்களிடம் படங்களைக் காண்பிக்க அதில் ஒன்றுமே பதிவாகாமல் கருப்பாக இருந்தது.

“என்னடா ‘பிரான்க்’கா. எங்க கிட்டயேவா” என்று சிரிக்க

“சீரியசாடா… நம்ம ராத்திரி ஒரு திருமண ஊர்வலம் பார்த்தோமே… அப்ப எடுத்த போட்டோதான் இதெல்லாம் ஒண்ணுமே வரல. அதைவிட இந்தப் படத்தைப் பாரு” என்று காண்பிக்க

அதில் ரோட்டின் மறுபுறம் நின்றிருந்த விஷ்வாவும், பிரதீப்பும் தெளிவாகத் தெரிய, நடுவில் திருமண ஊர்வலத்தின் ஒரு காட்சி கூடப் பதிவாகவில்லை.

“உங்க கூடவே தானே இருக்கேன். இதில் கிராபிக்ஸ் பண்ண எல்லாம் சான்ஸே இல்லைடா… அந்த திருமண ஊர்வலத்தை நம்ம எல்லாருமே பார்த்தோம். ஆனால் ஒரு படம் கூட விழலையே” என்று திகிலுடன் கேட்க

“அதுக்கு நான் பதில் சொல்றேன்” என்றார் ஒரு பெரியவர். திருமணத்திற்கு வந்த சொந்தக்காரர். எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அந்தப் பெரிய அறையில்தான் அவரும் தங்கியிருந்தார்.

“இது ரொம்ப நாளைக்கு முன்னால நடந்த கதை. நீங்க சொல்ற பாதைக்கு பக்கத்தில் ஒரு கிராமம் இருந்தது. மலைஜாதி மக்கள் இருந்த கிராமத்தில் இருந்த ஒரு பையனுக்கும் பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கும் காதல். காதலர்கள் ரெண்டு பேரும் போராடி ஊர் பெரியவர்களைக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்க. திருமண நாளுக்கு முந்தின நாளில் அவங்க வழக்கப்படி சொந்த பந்தத்தோட கல்யாண ஊர்வலம் தொடங்கிச்சு. ஊர்வலம் நடுவில் இருக்கும் ரோட்டில் கொஞ்ச தூரம் நடந்து மறுபடியும் காட்டு வழியில் போகணும். ரோட்டில் எல்லாரும் நடந்து போயிட்டிருந்தப்ப பிரேக் டவுன் ஆன கண்டைனர் ஒன்னு ஊர்வலத்தில் இருந்தவங்க மேல மோதி, ஏறி எல்லாரும் கூண்டோட காலி.

அதுக்கப்பறம் இருந்து அந்தப்பக்கம் ராத்திரி வர்ற சிலர் அந்தக் கல்யாண ஊர்வலத்தைப் பார்த்ததா சொல்றாங்க. ஆனால் இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் அந்த ஆத்மாக்கள் செஞ்சதில்லை. இந்த மாதிரி சம்பவத்தை மறுபடியும் பார்த்தா ஒரு வார்த்தை கூடப் பேசாதிங்க. அந்த ஆத்மாக்கள் தன்னோட சடங்கை செஞ்சுட்டுப் போற வரைக்கும் எந்த தொல்லையும் தராதீங்க” என்றார்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் கேமிராவில் முதல் நாள் திருமண ஊர்வலத்தில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒன்றுவிடாமல் அழித்தான் ராகேஷ்.

அன்று இரவு எங்களால் சில வாய் கூட உணவு உண்ண முடியவில்லை. எப்படியாவது இந்த சம்பவங்களை மறக்கவேண்டும் என்று எண்ணியபடியே உறங்கச் சென்றோம்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)

இருமருங்கும் வானைத் தொட்டு உயர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்களுக்கு மத்தியில், வளைத்து நெளிந்து சென்ற மலைப்பாதையில்… மெதுவாக ஊர்ந்தது அந்த இனோவா. மழையின் ஊடே உதகமண்டலத்தில் அந்த சரிவான பாதையில் வண்டியை ஓட்டுவது சிரமமாகவே இருந்தது காண்டீபனுக்கு. அதில் பயணித்த அனுஜா

வல்லிக்கண்ணன் கதைகள் – மனம் வெளுக்கவல்லிக்கண்ணன் கதைகள் – மனம் வெளுக்க

சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார். ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ! அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து