யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 21

 

கனவு – 21

 

அடுத்த நாள் வைஷாலி வேலைக்கு விடுமுறை எடுத்திருந்தாள். பொழுது புலர்ந்ததும் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வர சஞ்சயன் அதைப் பருகியவாறே,

 

“வைஷூ…! நீ இன்றைக்கு வேலைக்குப் போக வேணாம். கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளு. நான் ஒருக்கால் என்ர வீட்ட போய்ட்டு வாறன். யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்காதை. நான் என்னட்ட இருக்கிற திறப்பால திறந்து வருவன் சரியா?”

 

சரியென மௌனமாகத் தலையசைத்தாள். ஏனோ அவளால் நேற்றைய இரவு  அதிர்ச்சியிலிருந்து அவ்வளவு இலகுவில் மீள முடியவில்லை. எடுத்திருந்த தீர்மானங்களை மீறி முதன் முதலாக மனதில் எதிர்காலம் குறித்த பயம் தோன்றியது. தனது எண்ணங்களிலேயே உழன்றவளால் சஞ்சயனோடும் சாதாரணமாகப் பேச முடியவில்லை.

 

மதியம் கடந்த நேரம் வீட்டுக்கு வந்த சஞ்சயன் முகத்தில் ஒரு உற்சாகம் தெரிந்தது. அவன் ஏதோ புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறான் என்று புரிந்தவள், அவனே சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்தாள்.

 

“பசிக்குது முயல்குட்டி… முதல்ல சாப்பாட்டைப் போடு…”

 

வயிறு நிறைய உண்டவன் வரவேற்பறையில் சென்று அமரவும் வைஷாலி அவனைப் பின்தொடர்ந்தாள். முகத்தில் கேள்வியை நோக்கித் தன் முன்னும் பின்னும் திரிபவளைச் சிரிப்புடன் நோக்கியவன்,

 

“கேட்க நினைக்கிறதை கேட்க வேண்டியது தானே… எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி என்னைச் சுத்துறாய்…?”

 

“அதுதான் தெரியுதே… சொல்லித் துலையன்டா…”

 

கொஞ்சம் கோபமாகவே உரைத்தவளைக் கூர்ந்து நோக்கியவன்,

 

“நான் இப்ப என்ர ப்ரெண்ட்டைப் பார்த்திட்டு வாறன். எல்லாம் சந்தோசமான விசயம் தான்…”

 

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் பார்த்தாள் வைஷாலி. அவனோ அதை எதையும் சட்டை செய்யாதவனாய் யாருக்கோ தொலைபேசியில் அழைப்பை எடுத்தவன் பேச ஆரம்பித்தான்.

 

“ஹலோ… அங்கிள்…”

 

“…………”

 

“ஓம்… நாங்கள் சுகம். நீங்கள் எல்லாரும் எப்பிடி இருக்கிறியள்?”

 

“……………”

 

“ஒரு நல்ல விசயம் சொல்லத்தான் ஹோல் பண்ணினான்.”

 

“……………….”

 

“ வைஷூவுக்கு நான் உங்களிட்டச் சொன்ன அந்த மாப்பிள்ளையையே செய்து வைச்சிடுவம் அங்கிள். அடுத்து வாற நல்ல நாளாகப் பார்த்துக் கல்யாணத்துக்கு தேவையான வேலைகளைச் செய்யுங்கோ…”

 

“………………..”

 

“ஓகே அங்கிள். நான் மிச்சம் பிறகு கதைக்கிறன். ஃபாய்”

 

பேசி முடித்துத் தொலைபேசியை அணைத்தவனை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.

 

“இப்ப எதுக்கு முறைக்கிறாய் முயல்குட்டி?”

 

“முறைக்காமல் உன்னைக் கொஞ்சச் சொல்லுறியா? என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய் இப்ப?”

 

“ஏன் நான் டெலிபோன்ல கதைச்சது உனக்குக் கேட்கேலையா?”

 

“சஞ்சு… ப்ளீஸ்…. இதெல்லாம் என்ன விளையாட்டு என்று சொல்லு பாப்பம்.”

 

பத்திரகாளியாகக் கண்கள் சிவக்க நின்றவளின் அருகில் சென்றவன் அவள் தோள்களைப் பிடித்து அழுத்தி அமர வைத்தான்.

 

“இங்க பாரு வைஷூ… இனியும் உன்னை இப்பிடித் தனியாக இருக்க விட்டிட்டு என்னால நிம்மதியாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாள் ராத்திரியும் எவன் வந்து கதவைத் தட்டுவான் என்று பயந்து சாகேலாது…”

 

“நான் ஏதாவது ஹொஸ்டல்ல போய் இருக்கிறன்.”

 

“சரி… நீ ஹொஸ்டல் போயிருந்தால் மட்டும் மிச்சப் பிரச்சினை எல்லாம் தீர்ந்திடுமா என்ன? நீ ஒரு துணையில்லாமல் இருக்கிறாய் என்றால் கண்டவனும் வாலாட்டத்தான் பார்ப்பான்.”

 

“அப்ப ஒரு பொம்பிளைப்பிள்ளை ஆம்பிளைத் துணையில்லாமல் தனியாக வாழவே முடியாதா?”

 

“எங்கட சமுதாயத்தை அப்பிடி உருவாக்கி வைச்சிருக்கிறம். என்ன செய்யிறது? விதண்டாவாதம் கதைக்காமல் கொஞ்சம் நான் சொல்லுறதைப் பொறுமையாகக் கேளு வைஷூம்மா… அவன் ரொம்ப நல்லவன். அவனும் ஒரு கலியாணத்தால பாதிக்கப்பட்ட ஆள்… உன்ர மனசு அவனுக்கும் புரியும். உன்னைப் புரிஞ்சு அன்பாக நடப்பான் வைஷூ…”

 

“எனக்கு வாயில நல்லா வருது…”

 

“என்ன வாந்தியா…?”

 

“டேய்… என்னைக் கொலைவெறி ஆக்காதை… நான் சீரியஸாக் கதைச்சுக் கொண்டிருக்கிறன்.”

 

“ஓகே… ஓகே… சொல்லுடி… நீ கலியாணம் கட்டுறதில என்ன தப்பு…?”

 

“இப்ப தப்புச் சரி பற்றி நான் கதைக்கேல்ல. எனக்கு எவனையும் கலியாணம் கட்ட விருப்பமில்லை. என்னை யாரும் புரிஞ்சு நடக்க வேணாம். நான் இப்பிடியே இருந்திடுறன்… தயவுசெய்து என்னை இப்பிடி டோர்ச்சர் பண்ணாதை சஞ்சு…”

 

“இங்க பாரு வைஷூ… நாங்கள் இனி வாழப் போறது கொஞ்சக் காலம் தான். எப்ப சாகப் போறம் என்று யாருக்கும் தெரியாது. நடந்ததை நினைச்சே எதுக்கு நிகழ்காலத்தைப் பாழாக்க வேணும்? உனக்கு வாழுற வயசு வைஷூ… புரியாத வயசில அறியாமல் எடுத்த ஒரு முடிவால நீ அனுபவிச்சது போதும்டி… இனியாவது சந்தோசமாக வாழ வேணும்… இந்த ஊராரிட கதைக்குப் பயந்து நீ வாழ்ந்தது போதும் வைஷூம்மா… இனியாவது உனக்காக வாழ்.”

 

“ஏன்டா என்னை இப்பிடிக் கொடுமைப்படுத்திறாய்? என்னால இன்னொரு கலியாணத்தை நினைச்சுப் பாரக்கவே முடியலையேடா… நீயே என்ர உணர்வுகளைப் புரிஞ்சு கொள்ளேல என்றா வேற யாருடா என்னைப் புரிஞ்சு கொள்ளுவாங்க? எனக்கு இதில விருப்பமில்லை… ப்ளீஸ்டா…”

 

“அப்பிடி இல்லடி… உன்ர முதல் கலியாண விசயத்தில என்ர, அங்கிள், அன்ரிட தப்பும் இருக்கு… நீ ஆசைப்படுகிறாய் என்ற ஒரே காரணத்திற்காக முரளி எப்பிடிப்பட்டவன் அவனிட கரெக்டர் என்ன என்றெல்லாம் பார்க்காமல் உன்னைக் கட்டி வைச்சிட்டம். நானும் உன்ர விருப்பத்தை மட்டும் யோசிச்சிட்டு உன்னை விட்டு விலகிட்டன். கூடப் படிச்ச நானாவது முரளி எவ்வளவு அற்றிறியூட் காட்டுற ஆள் உன்னை எப்பிடி சந்தோசமாக வைச்சிருப்பான் என்று யோசிச்சிருக்க வேணும். என்னட்ட சத்தியம் வாங்கேக்கயே எனக்குப் புரிஞ்சிருக்க வேணும். அவன் மனசு சுத்தம் இல்லை என்று. உன்ர வாழ்க்கையில நடந்த ஒரு விபத்தாய் நினைச்சு இந்தக் கலியாணத்தையும் முரளியையும் நீ மறக்க வேணும் வைஷூ… உன்னால முடியும். உனக்குத் துணையாக நான் இருக்கிறன் இப்ப. இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் உன்னை விட்டுப் போக மாட்டன்டி…  நீ என்ர முடிவுக்குச் சம்மதிப்பாய் என்றுதான் உன்னைக் கேட்காமலேயே அங்கிளிட்ட கலியாணத்துக்கு நாள் பார்க்கச் சொன்னான் வைஷூ…”

 

“அதுவும் உன்ர பிழை சஞ்சு… என்னைக் கேட்காமல் நீ எப்பிடி நாள் வைக்கிற வரை போகலாம்…? இப்பிடி எனக்காக யாரும் எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை… என்ர மரேஜ் லைப் ஸ்பொயிலானதுக்கு முற்று முழுதாக நான் தான் காரணம். கிறுக்குத் தனமா முரளியைக் காதலிச்சது என்ர பிழை… நீங்க யாரும் உங்களில பழி போடத் தேவையில்லை… என்னால யார் துணையும் இல்லாமல் தனியாக வாழ முடியும்…”

 

“எப்பிடி நேற்று அந்த மனேஜருக்குக் கதவைத் திறந்து விட்டது போலவோ… தயவுசெய்து என்னைக் கோபப்படுத்தாதை வைஷூ…”

 

“நான் நேற்றுச் செய்தது முட்டாள்தனம். ஏதோ யோசிக்காமல் கதவைத் திறந்திட்டன். ஆனால் இந்த அனுபவத்தை ஒரு பாடமாக வைச்சு இனி எவனுக்கும் கதவைத் திறக்க மாட்டன் தானே…”

 

“வைஷூ…! கொஞ்சம் பொறுமையாகக் கதை. நேற்று நீ கதவை திறந்தது மட்டுமில்லை பிரச்சினை. நீ தனியாக வாழுறது வெளில தெரியும் போது வேற நிறையப் பிரச்சினைகள் வரும்டி… சும்மா சின்னப்பிள்ளை போல ஒன்றும் விளங்காத போல அடம் பிடிக்காதை சரியா…?”

 

அவளுக்கு உண்மையில் என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. இருந்தாலும் இந்தத் திருமண விடயத்தை அவளால் அவ்வளவு இலகுவாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. பம்மல் கே சம்பந்தம் போல அவளுக்குக் கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே வெறுப்பும் விரக்தியும் ஒருங்கே வந்தன.

 

சஞ்சயனோ இந்த ஒரு விடயத்தில் மட்டும் அவள் பேச்சைக் கேட்கத் தயாராயில்லை. வைஷாலியோ அவனோடு ஒரு வார்த்தை பேசாது மௌனத்தால் தன் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தாள். ஒரே நாளில்  எதிர் எதிர் துருவங்களாக முறைத்துக் கொண்டு திரிந்தனர்.

 

அடுத்த நாளிலிருந்து வழக்கம் போல இருவரும் வேலைக்குப் போய் வந்தனர். வைஷாலி முச்சக்கரவண்டியில் செல்ல, சஞ்சயன் வீட்டிலிருந்து வங்கி, வங்கியிலிருந்து வீடு என்று முச்சக்கரவண்டியைத் தொடர்ந்து பாதுகாப்புச் சேவையை வழங்கிக் கொண்டிருந்தான். இரவிலும் அவள் வீட்டின் முன்னே காரைக் கொண்டு வந்து விட்டு விட்டு அதில் தூங்குவான்.

 

வைஷாலிக்கு இதனைப் பார்த்து மனவேதனை இன்னமும் அதிகரித்தது. தாங்க முடியாதவளாய் தாய்க்கு அழைத்தவள் விசாலிக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டுத் தன்னோடு வந்து தங்குமாறு அழைத்தாள். விசாலியை கணவனது பிறந்த வீட்டில் விட்டு விட்டு வைஷாலியின் பெற்றோர் மலையகத்துக்குக் குடிபெயர்ந்தனர். சஞ்சயனும் பொழுதெல்லாம் வைஷாலி வீட்டிலேயே கழித்து விட்டுத் தூங்க மட்டும் தனது வீட்டிற்குச் செல்வான்.

 

இன்னும் ஒரு மாதத்தில் நல்ல நாள் இருப்பதாகக் கூறித் திருமணத்துக்கும் நாள் குறித்தாயிற்று. வைஷாலி எல்லோரையும் கெஞ்சிப் பார்த்து, அழுத பார்த்து, கோபப்பட்டுப் பார்த்தும் எந்தப் பயனுமின்றிப் போயிற்று. எல்லோரதும் ஒரே பதில்,

 

“நீ முரளியைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்ட நேரம் நாங்க யாரும் மறுக்கேல்ல. உன்ர விருப்பத்தை நிறைவேற்றி வைச்சம் தானே. இப்ப நீ எங்கட ஆசைப்படி இந்தக் கலியாணத்தைச் செய்ய வேணும். அவ்வளவுதான்…”

 

வைஷாலிக்கோ வாழ்க்கை வெறுத்துப் போயிற்று. சஞ்சயன் மீதுதான் கோபம் மிக அதிகமாக இருந்தது. இருந்தும் பெற்றோரின் முன்னால் அவன் மேல் கோபத்தைக் காட்ட முடியாதவளாய் சகஜமாக நடப்பதாகக் காட்டிக் கொண்டாள். இத்தனைக்கும் அவளுக்கு யார் மாப்பிள்ளை என்று கூடத் தெரியாது. முன்பொருமுறை சஞ்சயன் கூற வந்த போது இவள் காது கொடுத்துக் கேட்கவில்லை. இப்போது அது யாராக இருக்கும் என்ற விடயம் வேறு இவள் மனதைக் குடைந்தது.

 

அன்று வைஷாலி வேலை முடித்து வந்ததும் சஞ்சயனோடு தனியாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

 

“என்ர முயல்குட்டிக்கு ரொம்பக் கோபமோ…?”

 

தெரிந்து கொண்டே கேட்டவனை நிமிர்ந்து ஒரு முறைப்பைப் பரிசளித்து விட்டு மறுபடியும் கை வேலையைத் தொடர்ந்தாள். அவள் கோபம் குறைவதாய் இல்லை என்பதை உணர்ந்தவன் தனது இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான்.

 

“அடியே… உன்னைக் கேட்காமல் கலியாணத்துக்கு நாள் பார்க்கச் சொன்னது பிழை தான். அதுக்கு என்னை மன்னிச்சிடு…”

 

அவன் சிறு வயதில் செய்வது போலவே இப்போதும் இவள் முன்னே தோப்புக்கரணம் போடவும் வைஷாலிக்கு அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவள்,

 

“சரி… சரி… காணும் நிப்பாட்டு…”

 

“அப்பாடா… எங்க நூறு போடச் சொல்லிடுவியோ என்று பயந்து போனன்… ஞாபகம் இருக்கா? சின்ன வயசில ஒருக்கால் யாரையோ அடிச்சுப் போட்டன் என்று நூறு தோப்புக்கரணம் போட விட்டனி…”

 

“ஹூம்… அதெல்லாம் எங்களுக்கு ஞாபகம் இருக்கு… கடம்பனைத்தானே அடிச்சனீ… அவன் எனக்கு லவ் லெட்டர் தந்தவன் என்று…”

 

“அட ஓம் என்ன… பரவாயில்லை… இவ்வளவு வருசம் கழிச்சுப் பேரெல்லாம் ஞாபகம் வைச்சிருக்கிறாயே…”

 

“பாவம் அவன்… சரி… அதை விடு… நீ கதையை மாத்தாமல் முதலில அப்பாட்டச் சொல்லி இந்தக் கலியாணத்தை நிப்பாட்டச் சொல்லுடா…”

 

“வைஷூ…  ப்ளீஸ்டி… கொஞ்சமாவது என்ர பக்கமிருந்தும் யோசிச்சுப் பார்… உன்னை இப்பிடித் தனியாக இருக்க விட்டிட்டு என்னால நிம்மதியாக வாழ முடியாதுடி…”

 

“நீ எப்ப இருந்து சஞ்சு இவ்வளவு சுயநலவாதியாக மாறினனி? நீ நிம்மதியாக வாழுறதுக்காக நான் என்ர நிம்மதியைத் துலைக்க வேணுமா? என்ர பக்கம் இருந்தும் யோசிச்சுப் பாரன் சஞ்சு… என்னால எப்பிடி எல்லாத்தையும் மறந்து இயல்பாக குடும்பம் நடத்த முடியும் சொல்லு பாப்பம்… ஊர்ச்சனம் வேற வெக்கமில்லாமல் ரெண்டாம் கலியாணம் கட்டியிருக்கிறன் என்று கதைக்குங்கள். அதுக்குப் பிறகு எப்பிடி என்னால நிம்மதியாக சந்தோசமாக இருக்க முடியும் சொல்லு…”

 

“நீ முதல்ல இந்த ஊர்ப் புராணத்தை நிப்பாட்டுடி… எப்ப பாரு ஊர் என்ன சொல்லும்… சனம் என்ன கதைக்கும் என்றபடிதான்… ஊருக்காக வாழுறதை விட்டிட்டுக் கொஞ்சமாவது உனக்காக வாழு வைஷூ…”

 

“நீ என்ன சொன்னாலும் எனக்கு இந்தக் கலியாணத்தில இஷ்டம் இல்லை சஞ்சு… அந்தச் சொல்லைக் கேட்டாலே ஏதோ செய்யுது… தயவுசெய்து என்னை ஃபோர்ஸ் பண்ணாதை… ப்ளீஸ்டா புரிஞ்சு கொள்ளு…”

 

“உனக்கு என்னில நம்பிக்கை இல்லையா வைஷூ? உனக்கு ஒரு கெட்டது நடக்க நான் விடுவனாடி? நீ இவனைக் கலியாணம் செய்தால் நிச்சயமாக உன்ர வாழ்க்கை சுகப்படும் என்று எனக்கு முழுசாக நம்பிக்கை இருக்கிறபடியால் தானேடி நான் உன்னை இவ்வளவு கட்டாயப்படுத்திறன்… நீ ஏன் அதைப் புரிஞ்சு கொள்ளுறாய் இல்லை வைஷூ?”

 

“ஐயோ சஞ்சு… இது உன்னில நம்பிக்கை இருக்கோ இல்லையோ பிரச்சினை இல்லையடா… எனக்குக் கலியாணம் என்றாலே வெறுப்பாக இருக்கு… பிறகு எப்பிடிடா என்னால புதுசா ஒருத்தனோட சேர்ந்து வாழுறதைப் பற்றி யோசிக்க முடியும்? ப்ளீஸ் சஞ்சு… என்னைக் கட்டாயப்படுத்தாதை… ப்ளீஸ்டா…”

 

கோபத்திலிருந்து மாறி மிக நயமாக உரைத்தாள் வைஷாலி. ஆனால் சஞ்சயனோ இந்த விடயத்தில் மிக உறுதியாக நின்றான். வழக்கமாக வைஷாலி எது கேட்டாலும் செய்பவன், அவளறியாமலேயே விட்டுக் கொடுத்துச் செல்பவன் இந்த முறை தனது முடிவில் கொஞ்சமும் தளர்ந்தான் இல்லை. வைஷாலிக்கே இவன் பிடிவாதம் வியப்பாக இருந்தது.

 

அன்று மாலையில் வைஷாலிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை, சஞ்சயனின் நண்பன், வைஷாலியைச் சந்திக்கவென்று இவர்கள் வீட்டுக்கு வந்தான். மாப்பிள்ளையாக வந்தவனைப் பார்த்து மேலும் அதிர்ந்து போய் நின்றாள் வைஷாலி.

 

மாப்பிள்ளை யாரோ? வைஷாலியின் சம்மதம் பெறுவானா?

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 21”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 40ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 40

உனக்கென நான் 40 ” அப்போ நீங்க கூப்பிட மாட்டீங்களா? ” என்ற சந்துருவை மருட்சியாக பார்த்தாள் அன்பு. அதை புரிந்துகொண்ட சந்துரு. “இங்க ஃபோன்ல ” என்பது போல சைகைகாட்டி தப்பித்தான். ” நீங்க போங்க நான் பின்னாடியே வந்துடுரேன்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54

54- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த ஆதி எப்படியும் திவி வருவாள் என நடந்துகொண்டே இருக்க மனமோ அவளை கூப்டீயா? அவளும் இன்னும் சாப்பிடவே இல்ல. அதுவுமில்லாம இப்போ எதுக்கு வரப்போறா? என கேட்க இவனோ நீ சும்மா இரு. எனக்கு

கபாடபுரம் – 14கபாடபுரம் – 14

14. எளிமையும் அருமையும்   அந்த வைகறை வேளையில் புன்னைத் தோட்டத்தின் குளிர்ந்த சூழ்நிலையில் கண்ணுக்கினியாள் ஓர் அழகிய தேவதைபோற் காட்சியளித்தாள். அவளுக்கு இயற்கையாகவே நிரம்பியிருந்த பேரழகு போதாதென்றோ என்னவோ அவனைக் கண்டு நாணிய நாணம் அவள் அழகை இன்னும் சிறிது