Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 29

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 29

29 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அவளை சற்று நேரம் நிதானமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் அவள் மடியில் சாய்ந்துகொண்டான். அவளும் எதுவும் கூறாமல் அவனது தலையை வருடிக்கொடுக்க ஆதர்ஷ் அவனாகவே ” ஏன் சாரா எல்லாரும் இப்டி பண்ணாங்க? நானா கேட்டேன் என்கிட்ட பாசமா இருங்கன்னு. அவங்கள என்மேல அவளோ பாசத்தை பொழிஞ்சாங்க. உனக்கு தெரியுமா? நான் தான் வீட்டுல எல்லாருக்கும் செல்லம் இந்த வீட்டோட ராஜாவே நான்தான். எனக்கு முன்னாடி என் அண்ணன் ஆனந்த் இருந்தான் எனக்கு அப்புறம் விக்ரம் வந்தான் பெரியவன் சின்னவன்னு எத்தனை பேர் வந்தாலும் எல்லாருக்கும் எப்போவுமே ஆதர்ஷ் தான் பஸ்ட்னு சொல்லுவாங்க. அப்பா அம்மா பெரியம்மா பெரியப்பா அண்ணா தாத்தா பாட்டின்னு எல்லாருக்குமே நான்தான் உயிர். அவ்ளோ பாசம் அப்டித்தான் நானும் நினச்சேன். எல்லாமே அந்த பிரச்னை வரவரைக்கும் தான். அப்போதான் உண்மை புரிஞ்சது நான் யாருக்குமே முக்கியமில்லைனு. எல்லாருக்கும் அவங்கவங்க பிரச்சனை ஆசை சந்தோசம் தான் முக்கியம். பிரச்சனையே காட்டாம அப்டி எல்லாரும் பாத்து பாத்து வளத்திட்டு திடிர்னு ஒட்டுமொத்தமா இனி உன்வாழ்க்கைல யாருமில்லை நீயே உன்னை பாத்துக்கோ, உன் பிரச்னையை பாத்துகோன்னு விட்டுட்டு போனமாதிரி இருந்தது.

எனக்கு அம்மாவை விட கல்யாணி சித்தி தான் ரொம்ப பிடிக்கும். என்னோட பெஸ்ட் பிரண்ட்டா, இன்னொரு அம்மாவ எல்லம்மாவும் இருந்தாங்க. நான் பண்ற எல்லா சேட்டைலேயும் சித்தியோட பங்கு இருக்கும். வீட்டுல  தாத்தா பாட்டி கூட சித்திய எதாவது சொன்னா நான் போயி சரிக்கு சரியா நிப்பேன். அவ்ளோ பிடிக்கும் சித்திய.

அப்பா அவரு தான் என் ரோல் மாடல். அவரு வாழ்க்கையில முன்னுக்கு வரதுல இருந்த வேகம்  வாழ்க்கைல நமக்கு எது முக்கியம்னு தெளிவா தெரிஞ்சுக்கற முடிவெடுக்கற விதம்னு நிறைய விஷயம் அவர்கிட்ட பாத்திருக்கேன். ரொம்ப பாசமும் கூட. சின்ன பையன் சொல்றதுதானே அவனுக்கு என்ன தெரிஞ்சிட போகுதுனு நினைக்காம அண்ணாவை என்னை உக்கார வெச்சு எல்லாமே பேசுவாரு. எங்க ஒப்பீனியன் என்னனு கேப்பாரு. என் கருத்துக்கு மதிப்பு குடுக்க தெரிஞ்ச அவருக்கு என் மனசுக்கு மதிப்பு குடுக்க தெரியாம போயிடிச்சு.

 

அம்மாவும் நானும் கோவிலுக்கு போன போது ஆக்சிடென்ட் ஆகிருச்சு. எனக்கு அடிபட்டு ஹாஸ்பிடல்ல 3மாசம் அட்மிட் பண்ணிட்டாங்க. அம்மா ரொம்ப சாப்ட். எதுனாலும் ரொம்ப பொறுமை நிதானம் இருக்கும். எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கண்டிப்பா தாங்கமாட்டாங்க. சித்தி அம்மாக்கு கொஞ்சம் ஆப்போசிட் ஜாலி டைப் தைரியமா இருப்பாங்க.  இருந்தாலும் செண்டிமெண்ட் முக்கியமா என்மேலன்னா ரொம்பவே இருக்கும். அதனால தான் அப்போவும் அம்மாவும், சித்தியும் என்னை பாக்க ஹாஸ்பிடல் வராத போதும் அவங்கள மிஸ் பண்ணாலும் அவங்க என்னை இப்டி அடிபட்டு பாத்தா பயந்துடுவாங்க பீல் பண்ணுவாங்கனு சொல்லும்போதும் நம்புனேன். ஆனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த போதுதான் வீடே தலைகீழா இருந்தது தெரியவந்தது.

அம்மாவுக்கு அடிபட்டு ரொம்ப மோசமான நிலமைல இருந்து கொஞ்சம் ரிகவர் ஆகி வெளில வந்தாங்க. இருந்தாலும் இனி நடக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. அப்பாவும் சித்தியும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்து இனிமேல் பெரியப்பா வரவே மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டாருன்னு நிறைய பிரச்சனையா சொன்னாங்க. எனக்கு எதனால ஏன்னு எதுவும் புரியல. சுத்தி இருக்கறவங்க பேசுறவங்க எல்லாம் அப்பா சொத்துக்காக சித்தியை கல்யாணம் பண்ணிகிட்டாரு, சித்திக்கும் அப்பா மேல ஒரு விருப்பம் இருந்தது, அக்காவுக்கு அடிபட்டதும் இதுவே காரணம் காட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திட்டா, பைரவிக்கும் முன்னாடியே விஷயம் தெரிஞ்சிருக்கும் போல இல்லாட்டி இன்னொரு கல்யாணம் பண்ணதுக்கு எந்த பொண்டாட்டி ஒரு வார்த்தை கூட கேள்வி கேட்காம சண்டை போடாம சும்மா இருப்பா சொல்லுங்கன்னு வீட்ல வேலை செய்றவங்க வெளில இருக்கறவங்க எல்லாரும் என்னென்னவோ பேசிக்கிட்டாங்க.

என் அப்பா சித்தி அப்டி தப்பு பண்ணமாட்டாங்கனு மனசு சொல்லுது, ஆனா நடக்கிற எதுவுமே அப்டி இல்லை. எனக்கு அப்டி பேசுறவங்ககிட்ட கத்தி அவங்க அப்டி இல்லேனு சொல்ல தோணும். ஆனா அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணாங்கன்னு கேட்டா எனக்கு பதில் இருக்காது. இதுக்கு ஒரே வழின்னு சம்பந்தபட்ட அவங்ககிட்ட போயி கேட்டேன். ஆனா அப்பா சொல்லாம திட்டிட்டு போய்ட்டாரு. சித்தி எதுவும் பேசாம என்கிட்ட மௌனமா இருந்திட்டாங்க. அம்மாகிட்ட கேட்டா அவங்க அழ மட்டும் தான் செஞ்சாங்க. நீங்க ஏன் மா இப்டி அமைதியா இருக்கீங்க. அப்பாகிட்ட கேக்கலையான்னு கேட்டதுக்கு அம்மா அழுதுகிட்டே இனிமேல் அவர்கிட்ட எதுவுமே நான் கேக்கபோறதில்லை. அவரு என்கிட்ட முகம்குடுத்தே பேசாதபோது இனி இதுதான் வாழ்க்கைனு ஏத்துக்கவேண்டியதுதான் என புலம்பி அழுவாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம அமைதியா வந்துடுவேன்.

அண்ணாகிட்ட  கேட்டும் அவனிடமும் பதில் கிடைக்காம கடைசியா பெரியம்மா பெரியப்பாவிடம் போகணும்னு முதன் முதலா  அடம்பிடிச்சேன். கோபத்தில் இருந்த அப்பா  என்னை திட்ட அழுதுகிட்டே  ஓடி படியில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டிடிச்சு.

 

எனக்கு பழசு எல்லாமே மறந்திடிச்சு. சில நேரம் நடந்த விஷயங்களை ஞாபகப்படுத்துன கொஞ்சம் ஞாபகம் வரும் ஆனா ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணவேணாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. வீட்டுக்கு வந்ததுல இருந்து அப்புறம் முழுக்க முழுக்க என் அண்ணா தான் என்கூட இருந்தான். என்னை பாத்துக்கிட்டான். சுத்தி இருந்த மனுசங்க, பழகனவங்க பேசுறதுன்னு பாக்கிற எல்லாத்துலயும் பல கேள்விகள், ஒரு சாதாரண குடும்பத்துல இருக்கற ஏதோ ஒன்னு இங்க மிஸ் ஆகுது நம்ம வீட்ல ஏன் எல்லாரும் இப்டி இருக்காங்கனு  அவன்கிட்ட நிறையா கேப்பேன். ஆனா எல்லாத்துக்கும் மேலோட்டமான பதில் தான் வரும். பாட்டி தாத்தா கொஞ்சம் நல்லா பேசுவாங்க. ஆனா அவங்களும் ஏதோ கவலைல இருக்கறமாதிரி இருக்கும். ஏன்னு கேட்டா யார்கிட்டேயும் பதில் இருக்காது. எல்லாரும் என்கிட்ட நான் மறந்த ஆனா அதுல நான் அனுபவிச்ச சந்தோஷமான விஷயங்களை மட்டும் தான் பேசி எனக்கு ஞாபகப்படுத்திருக்காங்க. ஆனா என்ன பண்றது விதின்னு ஒன்னு இருக்கே. தாத்தா இறந்த போது வீட்டுக்கு வந்தவங்க பேசுனவங்க எல்லாத்தையும் கேட்டேன். முழுக்க முழுக்க அது அவங்கள தப்பானவங்கனு காட்டுற மாதிரி தான் இருந்தது. யோசிச்சு பாரு அனிஷ் வயசு அவனை விட கொஞ்சம் கம்மி தான். அந்த வயசு பையன்கிட்ட என்ன ஏதுன்னு எந்த பிரச்சனையும் சொல்லாம ஆனா நீ ஒரு காலத்துல சந்தோசமா தான் இருந்தேன்னு சொல்லுவாங்க.  அப்போ இனிமேல் அப்டி ஒரு விஷயம் நடக்காதன்னு ஏக்கமா இருக்கும். ஆனா அதப்பத்தி புரிஞ்சுக்கவோ கவனிக்கவோ யாருமில்லை. நான் கேட்டும் எந்த பதிலும் கிடைக்காம கடைசியா நானே அவங்ககிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுட்டேன்.

பாட்டி இறக்கறதுக்கு முன்னாடி அப்பாவுக்கும் பாட்டிக்கும் வந்த சண்டை பாட்டி என் பொண்ணுங்க வாழ்க்கையை இப்டி அழிஞ்சு போய்டிச்சுனே சொன்னது அப்டியே பீல் பண்ணிட்டே அடுத்த நாள் அவங்க இறந்து போய்ட்டாங்க. சொத்து பணம் இதுக்காகவா இவ்ளோவும்னு நினைக்கும் போது எனக்கு அதுமேல வெறுப்பு தான் வந்தது. நான் செய்யாத தப்புக்கு வீட்ல நடந்த பங்க்சன்ல அத்தனை பேர் முன்னாடியும் என்னை அப்பா அடிச்சாரு. என்னை அவரு புரிஞ்சுக்கலேன்னா கூட சரி அப்பாவுக்கு நம்மள பத்தி இன்னும் சரியா தெரிலன்னு விட்ருப்பேன். ஆனா அவருக்கு தெளிவா என் மேல தப்பில்லேனு தெரிஞ்சும் எதுக்காக அப்டி நடந்துக்கணும். பிஸ்னஸ், மானம் பிரச்னை இதெலாம் ஒரு விஷயமான்னு தோணிடிச்சு. எனக்கு சந்தோஷமில்லாம அவங்களுக்கு சந்தோஷமில்லாம யாருக்காக இப்டி ஒரு வாழ்க்கைனு நினச்சேன். அதனால தான் நானே ஹாஸ்டல் போறேன்னு அண்ணாகிட்ட சொல்லி கிளம்பிட்டேன். ஒன்னும் தெரியாத சின்ன வயசுலயே என்னை விட்டுட்டாங்க. ஹாஸ்டல் போறேன்னு கேக்கும்போது நான் நல்லா வளந்த பையன் தான். சோ அப்டியே விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் என் லைப்ல எல்லாமே ஒரு பிடிப்பே இல்லாம ஒதுக்கி வெச்சு வாழ ஆரம்பிச்சுட்டேன்.

அவ்ளோ வருசமும் வெயிட் பண்ணேன் சாரா. அவங்க செஞ்ச விஷயத்துக்கு காரணம் சொல்லுவாங்கன்னு …கடைசிவரைக்கும் சொல்லவேயில்லை. ஒரு கட்டத்துக்கு மேல நான் ரொம்ப இறுகிட்டேன். பதில் தெரியாத பல கேள்விகள், எனக்கு அடிபட்டத்துக்கு முன்னாடி நடந்த சில சந்தோஷமான விஷயங்களும் அண்ணா சொல்லி தான் தெரியும். அதுவும் ஏதோ போன ஜென்மத்துல நடந்த மாதிரி கனவாவே போன மாதிரி இருந்தது. அம்மாவோட அழுகை, அமைதி, அப்பாவோட இந்த பிடிவாதம் குணம், சித்தி அப்பாவை கல்யாணம் பண்ணத்துக்கான காரணம், பாட்டி தாத்தாவோட வருத்தம், கவலை, எல்லாத்துக்கும் முக்கியமா சொல்றது பணம், சொத்து, பிஸ்னஸ்ன்னு இதெலாம் தான் என்னோட இந்த வாழ்க்கைல நான் கண்கூட பாத்த விஷயம்.

அண்ணி வந்து சஞ்சீவ் பொறந்த அப்புறம், சிந்து அண்ணா  குழந்தை இவர்களுக்காக ஓரளவுக்கு என் கூட்டுக்குள்ள இருந்து வெளில வர பாத்தேன். முடிஞ்சத பத்தி நினைக்காம இனி இருக்கறவங்களுக்காக வாழலாம்னு தான் லண்டன் விட்டு கிளம்புனேன். ஆனா இங்க அண்ணா, அப்பா, சித்தி எல்லாரும் இறந்துட்டாங்க. பிஸ்னஸ் பார்ட்னர் பிரச்சனை அவங்க கொலைபண்ணிட்டாங்கனு சொல்ராங்க. எனக்காகனு இருந்த ஒரு ஜீவன் என் அண்ணாவும் இல்லேங்கிறத என்னால ஏத்துக்க முடியல.

 

நான் தொலைஞ்சு போன என் சந்தோசம் இதுலையாவது கிடைக்கும் சரி அவங்களாவது அதுல சந்தோசமா இருப்பாங்கன்னு எதிர்பார்த்து திரும்பி வர ஒரு ஒரு தடவையும் எனக்கு ஏமாற்றமும் பிரச்னையும் தான் அதுவும் இடியா வந்து இறங்குது.. அதுவும் அவங்களே இல்லாம போற அளவுக்கு. என்னால அத தாங்கிக்க முடில சாரா.

எல்லாமே கேட்டும் எனக்கு வருத்தப்பட கூட நேரம் குடுக்கல. அம்மாவும், அண்ணியும் என்னை அங்க இருந்து கிளம்ப சொன்னாங்க. அவங்கள கூப்பிட்டா இந்த வீடு தொழில் எல்லாமே உங்க அப்பாவும் அண்ணாவும் கஷ்டப்பட்டு  உருவாக்குனது. அத விட்டுட்டு வரமுடியாதுனு சொன்னாங்க. சரி அப்போ அதை நான் பாத்துக்கறேன்னு சொன்னாலும் வேண்டாம் இங்க இருந்தா ஆபத்து நீ கிளம்பி எங்கேயாவது போய்டு. உனக்கு குடும்பம்னு ஒன்னு இருக்குங்கிறதையே மறந்திடுன்னு சொல்ராங்க.

 

ஒரு பையனா என்னை பெத்து வளத்தி இவளோ பிரச்சனை நடந்து அத எதையுமே என்கிட்ட சொல்லவும் அவங்களுக்கு தோணல. அப்பா அண்ணான்னு எல்லாரையும் மொத்தமா பறிகொடுத்து கடைசி நிமிசத்துல அவங்க முகத்தை பாக்க கூட எனக்கு எழுதிவெக்கல. அவங்ககிட்ட எனக்கு புரியாத பல விஷயங்கள் கேட்டேன். அவங்க சொல்லல. என்கிட்ட இருந்து அவங்க ஒதுங்கி இருந்தாங்க. நானும் விலகி நின்னேன். ஆனா அதுக்காக எனக்கு அவங்க மேல பாசமே இல்லேனு முடிவு பண்ணிட்டாங்க. என் பையன் பிரச்சனைய சமாளிப்பான்னு அவங்க என்னை நம்பலை. என் பையன் விலகி இருந்தாலும் அவனுக்கு எங்க மேலும் பாசமிருக்கும்னு நம்பலை. உனக்கு தனியா இருக்கறது புதுசில்லையேங்கிற மாதிரி கேட்டாங்க. எனக்கு மனசே இல்லாத ஜடாம தானே அம்மாகூட நினைச்சிருக்காங்க. எப்போவுமே நம்மள நம்ம அம்மா தான் சரியா புரிஞ்சுப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனா அப்பேற்பட்ட அம்மாவே என்னை இப்டி நினைக்கும்போது புரிஞ்சுக்காத போது மத்தவங்ககிட்ட என்னால எப்படி அந்த புரிதலை அன்பை எதிர்பார்க்க முடியும்.

 

முதலும் கடைசியும் நான் ரிஸ்க் எடுத்தது ஆசைப்பட்டு நடந்தது எல்லாமே உன் விஷயத்துல மட்டும் தான். ஆனா உன்கூட இருக்கற ஒரு ஒரு நிமிஷமும் என் மனசுல நீயாவது என்கூட எப்போவுமே இருக்கனும், எனக்கு உனக்கு இடையில எந்த பிரிவும் வரக்கூடாது, நான் உன்னை கஷ்டப்படுத்த கூடாது, உன்கூட நான் நானா இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பேன். அவ்ளோ தயக்கம், வேற எந்த பிரச்னையும் இல்லாட்டி உனக்கு ஏதாவது ஆகிடுமோ, என்னை விட்டு போய்டுவியோன்னு ஒரு பயம் இருந்திட்டே இருக்கும். எதிரி யாருனு தெரிஞ்ச நான் போயி நேருக்கு நேரா சண்டை போடுவேன். ஆனா நான் பயப்படறதே என்னை பாத்து. எனக்கு இதை எப்படி மாத்திக்கணும், வெளில வரணும்னு கூட தெரியாம தவிச்சிருக்கேன். இதெல்லாம் எதனால நடந்தது. இப்டி பாசம் காட்டி அதை முழுசா அனுபவிக்காம பாதில பறிச்சிட்டு என்னை குறை சொன்னா நான் என்ன பண்ணுவேன்.

 

இப்போ கொஞ்ச நாள் உனக்காகன்னு கொஞ்சமா மனசார பேச சிரிக்கனு இருந்தேன். ஆனா இன்னைக்கு பெரியப்பா சொன்ன விஷயம். மத்தவங்க பேசுனது அதுக்கப்புறம் ரூம்ல இருந்த போட்டோஸ் எல்லாம் எனக்கு எல்லாத்தையும் ஞாபகப்படுத்திடிச்சு. நான் பல நாள் யோசிச்சிருக்கேன். நான் இவங்களோட சந்தோசமா இருந்தேன்னு சொல்ராங்களே எப்போ எப்படி ஞாபகம் வரமாட்டேங்கிது அப்டி நடந்தா எப்படி இருக்கும்னு ஏங்கிருக்கேன். ஆனா இன்னைக்கு அது ஏன் தேவையில்லாம ஞாபகம் வந்ததுனு கோபமா இருக்கு. இனிமேல் அப்டி ஒரு விஷயம் என் வாழ்க்கைல நடக்கபோறதே இல்லை. அப்பா, சித்தி, அண்ணான்னு யாரும் உயிரோடவே இல்லை. அம்மா, அண்ணி இருந்தும் இல்லேன்னு அவங்களே ஒதுக்கிட்டாங்க. இப்படிப்பட்ட ஒரு சமயத்துல ஏன் எனக்கு பழசு ஞாபகம் வந்தது. என்னை தாங்குன என் குடும்பமே என்னை தள்ளி வெக்கிற அளவுக்கு ஏன் சாரா நான் மாறினேன். நான் அவ்ளோ மோசமானவனா சாரா? காரணமே சொல்லாம எந்த தப்பும் பண்ணாத சின்ன பையன்கூட பாக்காம இவங்க தண்டிச்சதுக்கு நான் இப்போ வாங்குற பேரை பாரு, பாசமில்லாதவனாம், தனியா தான் இருக்கபோறேனாம்,

ஆமா அப்டித்தான் ஆசைப்பட்டேன், நான் அப்டியே இருந்திட்டு போறேன். யாருமே இனி லைப்ல வேண்டாம். தப்பை எல்லாருமே பண்ணிட்டு என்னை ஏன் தண்டிச்சாங்க?”   என கேட்டுக்கொண்டே அவன் மீண்டும் கோபமாக எழுந்துசெல்ல அவளிடம் புலம்பி, மனப்பாரத்தை இறக்கி வைத்தவன் இறுதியில் வினா எழுப்ப அவனிடம் பேசும்முன் மீண்டும் அவனது இயலாமை கோபம் ஊற்றெடுக்க அவனே அவனை அடக்கும் வழியின்றி தவித்துக்கொண்டிருந்தான்.

பின்னோடு சென்ற அக்ஸா “ஆதவ், ப்ளீஸ் கொஞ்சம் உக்காருங்க. நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. நாம நாளைக்கு பேசிக்கலாம்.”

ஆதர்ஷ் “ப்ளீஸ், சாரா நீ இங்கிருந்து போ. என்னால என்னை கண்ட்ரோல் பண்ணமுடியும்னு தோணல. அவ்ளோ கோபம் வருது. இங்க எல்லாருமே அப்டித்தான். தப்பு பண்றது ஒருத்தர், தண்டனை இன்னொருத்தருக்கு.. இவங்கள மாதிரி இருக்க என்னால முடியாது. அதுக்கு நான் தனியாவே இருக்கேன்.” என அவன் தலையில் கைவைத்து அமர

“ஆதவ், ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க. கொஞ்சம் இருங்க. என சென்று சற்று பொறுத்து திரும்பி வந்தவள் அவனது கையில் டம்ளரை திணித்தவள் ‘இந்த பால் மட்டும் குடிச்சுட்டு பேசாம படுத்து தூங்குங்க. எத பத்தியும் யோசிக்காதிங்க.  இப்போ என்ன யாரும் வேண்டாம் அவ்ளோதானே. நினைக்கும்னு அவங்க கூட இருக்கணும்னு உங்கள இனி யாரும் கட்டாயப்படுத்தமாட்டாங்க. ” அவன் ஏதோ சொல்ல வர

“இப்போ எதுவும் பேசாதீங்க. தலை வலிக்கிதுல. அமைதியா கொஞ்ச நேரம் தூங்குங்க” என அவனை வற்புறுத்தி படுக்க வைக்க அவன் கண்கள் சொருக சற்று நேரத்தில் தூக்கக்கலகத்தில் கூட    ” நான் ரொம்ப மோசமா? யார்மேலையும் பாசமா இருக்க மாட்டேனா? யாரும் வேண்டாம்னா நீயும் என்னை விட்டு போய்டுவியா சாரா? ” என அவன் வினவ அவனருகில் வந்தமர்ந்தவள் அவன் சுளித்த நெற்றி சுருக்கங்களை நீவிவிட்டவள் அவனது தலையை வருடிக்கொடுத்து ‘ஆதவ் நான் எங்கேயும் போகல.. கூடவே தான் இருக்கேன்.’ என அவனை தட்டிக்கொடுக்க அவனுக்கு அவளது மொழியும் பேச்சும் எட்டியதோ என்னவோ அவளது மென் வருடலில் அவனும் அமைதியாக நித்திரை கொண்டான். அக்சராவிற்கு அவனின் மனவேதனை குழப்பம் புரிந்தாலும் அதை போக்கும் வழியும் அதற்கான முடிவும் அவனிடமே தான் உள்ளது என தெளிவாக புரிந்துகொண்டாள்.

 

அவன் முழுமனதுடன் உறவுகள் வேண்டும் என எண்ணி நம்பி ஏற்கமுடியாமல் அவனது கடந்த கால நினைவுகள் அவனது அனுபவ பாடங்கள் அவன் கண் முன்னே தோன்ற, யாரும் வேண்டுமெனவும் என எண்ணி ஒதுக்க முடியாமல் அவனது ஏக்கம் பாசம் அவனை இழுக்க இருக்கின்றானே.

தனக்கு தானே வட்டத்தை போட்டு வாழ துவங்கி ஆனால் வட்டத்தின் வெளியே ஏக்கமாக  பார்த்துக்கொண்டிருக்க  தனக்கு உண்மையிலேயே எது வேண்டுமென தெளிவாக புரிந்துகொள்ள முடியாத  சிறுவனை போல அவனது குழப்பங்கள். இதிலிருந்து எப்படி அவன் வெளிவருவான் அதற்கான வழிகள் எங்கே இருக்கிறது என யோசித்துக்கொண்டே இருந்தவள் இறுதியில் ஆதவின் அசைந்து அவளின் கைகளை எடுத்து தலையணைக்கு தன் முகத்திற்கும் நடுவே வைத்து அதில் முகம் வைத்து தூங்கினான். அவனின் செயல் அக்சராவிற்கு சிரிப்பை வரவழைக்க இடது கையால் அவனை வருடிவிட்டு ‘இவ்ளோ தூக்கத்துலையும் எவ்ளோ தெளிவா கையெடுத்து வெச்சுகிட்டு அதுவும் இவளோ இறுக்கமா புடிச்சிருக்காரு.’ என்றவள் பெருமூச்சுடன் அவனது குழம்பம் தயக்கம் அனைத்தும் போக என்ன முடிவு எடுக்கவேண்டும் என்பதை முடிவெடுத்தவள் அதை எப்படி செய்வது என சிந்திக்கலானாள்.. சிறிது நேரத்தில் உறங்கிவிட அவர்களுக்கான பதிலை காலமும் விடியலும் தருமா. விதியின் இந்த விளையாட்டில் யாரது எண்ணம் ஈடேறுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 01

வணக்கம் தோழமைகளே! கவிதைகள் மூலம் இதுநாள் வரை உங்களை மகிழ்வித்த ஹஷாஸ்ரீ இப்போது “மனதை மாற்றிவிட்டாய்” என்ற தொடர் கதை மூலம் உங்களைச் சந்திக்க வந்துள்ளார்.  படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 1 – மனதை மாற்றிவிட்டாய்

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.  அவரும் அவள் உண்ணும் போது