யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16

கனவு – 16

 

சஞ்சயனும் வைஷாலியும் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். வைஷாலி வீட்டின் முன்னே சஞ்சயன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வைஷாலி எதுவுமே பேசாது இறங்கிக் கீழே சென்றாள். அவளை அந்த மனனிலையில் தனியாக விட மனமின்றி சஞ்சயனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அவனை வா என்று அழைக்கவும் இல்லை, போ என்று வழியனுப்பவும் இல்லை. அதுல்யா இன்னமும் வந்திருக்கவில்லை. பூட்டியிருந்த வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள் வரவேற்பறையில் கைப்பையை எறிந்து விட்டுத் தனது அறைக்குச் சென்று படுக்கையில் குப்புற வீழ்ந்து மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

 

பெண்களுக்குப் பொதுவான ஒரு பழக்கம் ஏதாவது மனப்பாரம் என்றால் உடனே அழுவது. அதுவும் குப்புறப் படுத்துத் தலையணையை நனைத்துத் தங்கள் ஆதங்கங்களையும் வேதனைகளையும் ஆற்றிக் கொள்வார்கள். கண்ணீர் வழியே தலையணை அந்த வேதனையைத் தாங்கிக் கொள்கிறதோ என்னவோ சில நேரங்களில் அழுகை கூட மனதுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்து தான்.

 

வீட்டிற்குள் வந்த சஞ்சயனோ என்ன செய்வது என்று யோசித்து விட்டு சமையலறைக்குச் சென்றவன், ஒருவாறு பொருட்களைத் தேடி எடுத்துத் தேநீர் தயாரித்தான். இரண்டு குவளைகளில் கொண்டு போய் வரவேற்பறையில் வைத்து விட்டு ஒரு கண்ணாடிக் குவளையில் குளிர் நீர் எடுத்துக் கொண்டு வைஷாலியின் அறையை அடைந்தான்.

 

அறை வாயிலை அடைந்தவன் உள்ளே செல்வதா? வேணாமா? என்று ஒரு கணம் தயங்கி விட்டுப் பின்னர் உள்ளே நுழைந்தான். அவன் அதுவரைக்கும் அந்த வீட்டில் வரவேற்பறையைத் தாண்டி எங்கும் சென்றதில்லை.

 

அவள் உடல் குலுங்குவதிலிருந்து இன்னமும் அழுது கரைந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், அவள் பெயரைக் கூறி ஒரு தடவை கதவைத் தட்டி விட்டு அறையினுள் சென்று கட்டிலில் அவள் அருகே அமர்ந்தான். தண்ணீர்க் குவளையை அருகிலிருந்த மேசையில் வைத்தவனுக்கு உண்மையில் அவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை.

 

“அழாதை வைஷூ… நடந்து முடிஞ்சதை யாராலயும் மாத்த முடியாது… நீ இப்பிடி அழுது என்னாகப் போகுதெண்டு சொல்லு பாப்பம். தயவுசெய்து எழும்பி இரு… அழுகையை நிப்பாட்டு வைஷூம்மா…”

 

அவன் கூறவும் அவள் அழுகை அதிகரித்ததே தவிரக் குறைகிற வழியைக் காணோம். மெதுவாய் அவள் முதுகை நீவி விட்டுத் தலையைத் தடவி அவளை அமைதிப்படுத்த முனைந்தான்.

 

“இங்க பாரு வைஷூ… ஒரு விசயம் எனக்கு நீ சொன்னது ரொம்பக் கவலையாக இருந்தது. நீ இவ்வளவு காலத்தில என்னைப் பற்றி சரியாகப் புரிஞ்சு கொள்ளேல்ல… நீ எனக்கு எப்பவுமே என்ர முயல்குட்டி தான். அதில எந்த மாற்றமும் வரப் போறதில்லை.

 

நீ ஒருத்தனைக் கத்தியால குத்திக் கொலை செய்திருந்தால் கூட நான் உன்னை வெறுக்க மாட்டன் வைஷூ… நீ ஏன் அப்பிடிச் செய்தாய்? உன்ர பக்கம் என்ன நியாயம் என்றுதான் யோசிப்பனே தவிர நீ கொலைகாரி ஆகிட்டியே என்றதுக்காக உன்னை ஒருநாளும் வெறுக்க மாட்டன்டி… ஆனால் கொலை செய்யிறது பஞ்சமா பாதகங்களில ஒன்று. நீ செய்தது பெரிய தப்புத்தான் என்று உனக்குப் புரிய வைப்பேன்…

 

என்னால எப்பிடி வைஷூ உன்னை வெறுக்க முடியும்? நீ இப்பிடி யோசிச்சதே எனக்குக் கோபம் வருது தெரியுமா? நீ வடிவாக யோசிச்சு முடிவெடுத்துத்தான் அபோர்ஷன் பண்ணியிருப்பாய் என்று தெரியும் எனக்கு… ஆனாலும் நீ செய்தது தப்புத்தான்மா…

 

குழந்தை வேணாம் என்றால் முதலே நீ அதுக்குரிய தடைகள் பாவிச்சிருக்க வேணும். கரு உருவாகின பிறகு அழிக்கிறது என்றது நல்லதில்லைத்தானே… சரி விடு… அது இப்ப முடிஞ்சு போன கதை… நீ அபோர்ஷன் செய்ததுக்காக நான் உன்னை வெறுக்கேல்ல வைஷூ…

 

ஆனால் இதுக்காக மட்டுமாக நீ என்னைத் தேடி வராமல் இருந்திருக்க மாட்டாய்? ஏன் நீ என்னட்ட வரேல்லடி? இப்பிடி எல்லாக் கவலையையும் உனக்குள்ளேயே வைச்சுக் கஷ்டப்பட்டிருக்கிறியே…”

 

சஞ்சயன் அவளின் முதுகை நீவியபடியே பேசப் பேச வைஷாலியும் அழுகை குறைந்து வெறும் விம்மல் மட்டும் என்ற அளவில் எழுந்து சஞ்சயன் பக்கத்தில் அமர்ந்தாள். தண்ணீரை எடுத்து அவளிடம் பருகக் கொடுக்க அவளும் மறுப்பின்றி வாங்கிப் பருகி விட்டு, அவன் தோளில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டாள்.

 

“நான் ஆரம்பத்தில உன்னைத் தேடினான் சஞ்சு… நீ ஷோசல் மீடியா எதிலேயும் இல்லை. நான் என்ர பேக் ஐடியால பேஸ்புக் முழுக்க உன்னைப் பற்றித் தேடிப் பார்த்தன். எந்தத் தகவலும் இல்லை. நானும் அம்மாவையோட கதைக்கிறேல்ல. ஸோ நீ எங்க எப்பிடி இருக்கிறாய் என்றதே எனக்குத் தெரியேல்லடா.

 

அதைவிட நீ கல்யாணம் கட்டி மனுசி, குழந்தை என்று இருந்தால் நான் உன்னட்ட வந்து உனக்குப் பாரமாக இருக்க விரும்பலடா. அது பிறகு உன்ர குடும்பத்துக்க பிரச்சினைகளை உண்டாக்கும் தானே.

 

முதலாம் வகுப்பில இருந்தே எங்கட ப்ரெண்ட்ஸிப் பற்றித் தெரிஞ்ச முரளியாலேயே எங்கட நட்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் போது உன்ர ஃவைப் என்னை எப்பிடி ஏற்றுக் கொள்ளுவாள்? அதை யோசிச்சுப் பார்த்திட்டு நான் பிறகு உன்னைத் தேடவே இல்லை.”

 

சிறு விம்மலினிடையே கூறியவளைப் பார்த்தவன் மனம் கசிந்தது. இருவருமே எங்கே தொடர்பு கொண்டால் மற்றவர் வாழ்வு பாதித்து விடுமோ என்ற பயத்திலேயே விலகி இருந்திருப்பது புரிந்தது. பேச்சற்றவனாய் அவள் தலையைக் கோதிக் கொண்டிருந்தவன் சில நிமிடங்களில் மௌனம் கலைத்தான்.

 

“ஹூம்…! புரியுதுடி… ஸொரி வைஷூ…”

 

ஏனோ அவன் குரலும் தழுதழுத்தது. அதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை முகத்துக்கு நேராய் பார்த்தாள். அவன் வருந்துவது பொறுக்க மாட்டாதவளாய்,

 

“இதில உன்ர பிழை எதுவுமே இல்லையே சஞ்சு… நீ எதுக்குடா ஸொரி சொல்லுறாய்? எல்லாமே நானாய் ஆசைப்பட்டு, நானாய் முடிவெடுத்துத் தேடிக் கொண்டதுதானே… ஸோ நான் அனுபவிக்கிறேன்… எல்லாம் என்ர தலையெழுத்து… இதுக்கு நீ என்ன செய்ய முடியும்?”

 

“இல்லைடி… நான் உன்னோட கதைக்காட்டிலும் உன்னைப் பற்றி விசாரிச்சு அறிஞ்சு கொண்டு தான் இருந்திருக்க வேணும். அது என்ர பிழை தான் வைஷூ… சரி பழசை விடு… அதைப் பற்றிக் கதைச்சு வேதனை மட்டும் தான் மிஞ்சும். ஒரு பிரியோசனமும் இல்லை.

 

ப்ளீஸ்டி… எனக்காக ஊருக்கு வா… நான் கூட வந்து உன்னோடேயே இருக்கிறன். எத்தினை நாளைக்கு நீ நடந்ததை எண்ணிக் கவலைப்பட்டுச் சின்னக் குழந்தைகளைப் பார்க்காமல் தவிர்க்கப் போகிறாய்? ஏதோ ஒருநாள் யதார்த்தத்துக்கு முகம் குடுத்துத்தானே ஆக வேணும்?”

 

அவள் முகத்தைத் தனது இரு கரங்களில் ஏந்தியவன் அவள் கண்களைப் பார்த்துப் பேசினான். எங்கே தான் ஊருக்கு வர முடியாது என்று மறுத்தால் அவன் மேலும் வேதனைப்படுவானோ என்று எண்ணியவள், அவனுக்குச் சம்மதமாய் தலையசைத்தாள்.

 

“இதுதான் என்ர முயல் குட்டி… குட் கேர்ள்… நீ ஃபாங்கில கதைச்சு எப்ப இருந்து லீவு என்று சொல்லு. நானும் அதுக்கேற்ற போல எடுக்கிறன் என்ன?”

 

“ம்… சரிடா…”

 

“சஞ்சு…”

 

“கொஞ்ச நேரம் உன்ர மடில படுக்கவா?”

 

தாயைத் தேடும் சேயாய் கேட்டவளை மடியில் சாய்த்துக் கொண்டான். மெதுவாய் அவள் முடியைக் கோதி விட கண்களை மூடிப் படுத்துக் கொண்டாள் அவள். மூடிய இமைகளைத் தாண்டி ஒரு பக்கமாகக் கண்ணீர் வழிய அதைக் கண்டவன் மிருதுவாகத் துடைத்து விட்டான்.

 

அவள்பட்ட மன வேதனைகளை அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது. வைஷாலி தனது திருமண வாழ்க்கையைப் பற்றி எத்தனை கற்பனைகள் வைத்திருந்தாள் என்பது அவன் அறியாததா என்ன?

 

உயர்தரம் படிக்கும் போது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர், உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன என்று கேட்டதற்கு, எல்லோரும் டொக்டர், இஞ்சினியர், ரீச்சர், லோயர் என்று கூறிய போது இவள் மட்டும் சிறிதும் கூச்சப்படாமல் ‘நல்ல குடும்பத் தலைவியாக எனது பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்குவது’ என்று சொன்ன ஆளாயிற்றே இவள்.  

 

சிறிது நேரத்தில் அவன் மடியிலேயே தூங்குபவளை வாஞ்சையுடன் பார்த்தவனின் பார்வையில் துளியும் பரிதாபமோ, அனுதாபமோ இல்லை. அவன் உணர்வுகளில் முற்று முழுதாக இருந்தது அவள் மீதான அதே பழைய அன்பு மட்டுமே. அவன் சிந்தனையெல்லாம் எவ்வாறு அவளது மனக் கவலைகளிலிருந்து அவளை மீட்டெடுப்பது என்பதாக மட்டுமே இருந்தது.

 

மெதுவாக அவள் தலையை நகர்த்திக் கட்டிலில் ஒழுங்காகப் படுக்க வைத்து விட்டு அறையை விட்டு வெளியேறியவன், வரவேற்பறையில் ஆறிப் போயிருந்த தேநீரைச் சூடாக்கி அருந்தியபடி விசாலிக்கு அழைத்து வைஷாலி ஊருக்கு வரச் சம்மதித்தசைச் சொன்னான். அவர்களோ மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

 

தூங்கிக் கொண்டிருந்தவளிடம் சொல்லாமல் போவதற்கு மனமின்றி அங்கேயே நீள ஸோபாவில் படுத்துக் கொண்டான் சஞ்சயன். தூக்கம் வராவிட்டாலும் கண்களை மூடிப் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

தூங்கிக் கொண்டிருந்த வைஷாலியோ கனவுகளின் ஆட்சியில் கட்டுண்டு போயிருந்தாள்.

 

“முரளி…! எனக்கு கூரைச் சாரி எல்லோரும் எடுக்கிறது போல இந்த நிறைய கல்லு வேலை செய்தது வேணாம். இந்தப் பூக்கள், கொடிகள் போட்டதும் வேணாம். மரூன் கலரும் வேணாம். நல்ல சிவப்பும் ஹோல்ட் கலரும் சேர்ந்ததாக இருக்க வேணும் சரியோ? அது எனக்கு நல்லா இருக்கும் தானே?”

 

“லூசா நீ…? கல்லு வேலை செய்யாத சாரியை எடுத்தால் நான் ஏதோ விலை குறைஞ்ச சாரியாக எடுத்ததாக எல்லோ எல்லாரும் நினைப்பாங்கள். அம்மாட்டச் சொல்லிட்டன். சாரி நிறையக் கல்லு வேலைப்பாடு செய்ததாகக் குறைஞ்சது ஒரு லட்சம் இருக்க வேணும் என்று.”

 

“நிறைய கல்லு வேலை என்றால் சரியான பாரமாக இருக்குமப்பா… சாரி எடுக்க நானும் வரட்டோ?”

 

“அதெல்லாம் நீயொன்றும் வரத் தேவையில்லை… அம்மா வடிவாப் பார்த்து எடுப்பா…”

 

“ஹூம்… ஓகே முரளி…”

 

“ஆ…! சொல்ல மறந்திட்டன். தாலிக்கொடி செய்யக் குடுத்தாச்சு. இருபத்தொரு பவுண் மொத்தமாக வாறது போல செய்யச் சொன்னான்.”

 

“அச்சோ…! இருபத்தொன்று ரொம்பப் பாரமாக இருக்கும்  முரளி… பதினொன்று போதும்… நான் அனுப்பின போட்டோல இருந்த போலவோ செய்யச் சொன்னனீங்க…? அந்தச் சங்கிலிப் பற்றன்…”

 

“சங்கிலி போல யாரும் தாலி கட்டுவாங்களே… நான் நல்ல வைரக் கொடியாகச் செய்யச் சொல்லி இருக்கிறன். நீ அனுப்பின போட்டோல இருந்த சங்கிலி போலச் செய்து கட்டினால் நாளைக்குச் சனம் என்னைப் பார்த்தெல்லோ சிரிக்கும்…”

 

“சரி… முரளி… தாலிப் புரோச் மயில் பற்றன் வேணாம் என்று சொன்னனே… எது செய்யக் குடுத்தனீங்கள்?”

 

“மயில் தான் பெருசாக, வடிவாக இருக்கு… அதையே தான் செய்யச் சொல்லி இருக்கிறேன்…”

 

“என்ன முரளி… என்ர ஆசைப்படி எதுவுமே இல்லையா…? ப்ளீஸ்… முரளி… தாலி காலம் பூராகப் போடப் போறது நான் தானே… அது என்ர ஆசைப்படி இருக்கிறது தப்பா?”

 

“அதைக் கட்டப் போறது நான் தானே…

அது என்ர ஆசைப்படி இருக்கிறது தப்பா?”

 

முரளிதரனின் பதில் கேள்விக்கு விடை சொல்ல முடியாதவளாய், அமைதியானாள் வைஷாலி.

 

“முரளி…! அம்மா கூப்பிடுறா… நான் பிறகு ஹோல் பண்ணுறன் என்ன? ஃபாய்…”

 

தொலைபேசியை வைத்தவள் மனது ஏனோ முரண்டு பண்ணியது. முரளிதரனை முழுவதுமாக அவளால் இது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. அவளும் அவன் ஆசையை மதித்து, விட்டுக் கொடுத்துத் தனது ஆசைகளைத் தியாகம் செய்து தான் இத்தனை நாட்களாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

 

ஆனால் இந்தத் திருமண வேலைகள் ஆரம்பித்த நாட்களிலிருந்தே மனதில் வெறுமையுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. கலை ரசனை மிக்கவளான வைஷாலி தனது திருமண உடைகளிலிருந்து, ஆபரணங்கள், தாலி, அலங்காரம் என்று அனைத்தையும் பற்றிப் பல ஆசைகளும் கனவுகளும் கண்டு வைத்திருந்தாள். ஆனால் அவை ஒவ்வொன்றும் இப்போது ஒவ்வொன்றாகக் கலைந்து தவிடு பொடியாகிக் கொண்டிருப்பதை அவள் பிஞ்சு மனது ஏற்க முடியாது அடம் பிடித்தது.

 

அடுத்த நாள் முரளிதரன் வீட்டிற்கே வந்திருந்தான். வீட்டினர் அனைவரும் ஏதேதோ காரணங்களுக்காக வெளியே சென்றிருக்க வைஷாலி மட்டும் தான் தனியாக இருந்தாள். வந்தவனை வரவேற்று உட்கார வைத்து விட்டு அவனுக்குக் குளிர்பானம் கொண்டு வர எழுந்து சமையலறைக்குச் சென்றாள். முரளிதரனும் அவள் பின்னே சென்றான்.

 

“மாமாவை வர லேட்டாகுமா வைஷூ?”

 

“ஓம். முரளி… யாழ்ப்பாணப் பக்கம் இருக்கிற எல்லாருக்கும் இன்றைக்கு வெடிங் இன்விட்டேசன் காட் குடுத்துட்டு வாறது என்று போயிருக்கினம். விஷாலி கம்பஸ்க்குப் போய்ட்டாள். இந்தாங்கோ… குடியுங்கோ…”

 

நாரத்தங்காயைப் பிழிந்து சாறெடுத்து குளிர்நீரில் அளவான சீனியும் மிதமாய் உப்பும் போட்டுக் கரைத்து அவனுக்கும் கொடுத்துத் தானும் ஒரு குவளையில் எடுத்துப் பருகியபடி வரவேற்பறைக்குச் செல்ல முரளியும் அவள் அருகே சென்று அமர்ந்தான்.

 

“முரளி…”

 

“ம்…”

 

“போட்டோ, வீடியோ, மேக்கப் கொழும்பில இருந்து கூப்பிடுவமா? எனக்கு மேக்கப் எல்லாம் ரொம்ப நல்லா இருக்க வேணும் என்று ஆசையாக இருக்கு… போட்டோ, வீடியோஸ் காலம் முழுவதும் வைச்சுப் பார்க்கிறது. வடிவாக இருந்தால் தானே நல்லம்…”

 

“இங்க இல்லாததா? கொழும்பில இருந்து வாறவை அப்பிடி என்ன ஸ்பெசலா செய்யப் போகினம்? நான் எனக்குத் தெரிஞ்ச ஸ்டூடியோவில சொல்லியிருக்கிறன். அவங்களே மேக்கப்புக்கும் ஆள் அனுப்புவாங்களாம்… நாலு மணித்தியாலமா பூசி, மெழுகிட்டுப் பிறகு ஃபாத் ரூமில கழுவி ஊத்தப் போற மேக்கப்புக்கு கொழும்பில இருந்து ஆளைக் கூப்பிட்டு லட்சக் கணக்கில காசைக் குடுக்க வேணுமே… அதெல்லாம் தேவையில்லை.”

 

மனதில் தோன்றிய ஏமாற்றத்தைக் கவனமாக முகத்தில் தவிர்த்து முகத்தின் மலர்ச்சி மாறாதவளாய்,

 

“நீங்க சொல்லுறதும் சரி தான் முரளி… நீங்கள் சொன்னவையையே வைச்சு எடுப்பம். கேட்க மறந்திட்டன்… நான் பின்னேரம் ரிசப்சனுக்கு வெஸ்டேர்ன் ஸ்டைல்ல லோங் ப்ரொக் போடவா…?”

 

“உனக்கு ஏன்தான் இப்பிடிப் புத்தி போகுதோ தெரியேல்ல வைஷாலி… நாங்கள் என்ன வெள்ளைக்காரரே… எங்கட முறைப்படி சாரி கட்டினால் போதும் சரியோ…?”

 

“சரியப்பா… நான் சும்மா கேட்டனான்… அப்ப அவுட்டோர் சூட்டிங் எடுக்கேக்க போட்டு எடுப்பமோ…?”

 

“என்னது…? அவுட்டோர் சூட்டிங்கோ… இங்க பார் வைஷூ… எனக்கு உந்த மரத்துக்குப் பின்னால இருந்து எட்டிப் பார்க்கிறது, உன்னைத் தூக்கிப் பிடிச்சுப் போஸ் குடுக்கிறது, உன்னைக் கலைச்சுக் கொண்டு கடற்கரையில ஓடுறது, சவுக்கங்காட்டில ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுறது எல்லாம் சரி வராது… அதால அவுட்டோர் எல்லாம் எடுக்கத் தேவையில்லை… சரியா…?”

 

“சரி முரளி…”

 

கண்டு வைத்த கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாகக் கலைய, கல்யாணத்தைப் பற்றி அவள் கட்டி வைத்த மணல் கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருந்தது.

 

முரளிதரனின் பேச்சில் அவன் பக்க நியாயம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் கூட அவன் வைஷாலியின் விருப்பங்களுக்குக் கொஞ்சம் கூட மதிப்புக் கொடுக்காது, எடுத்த எடுப்பிலேயே மறுப்புச் சொல்வது அவளில் ஒரு ஏமாற்றத்தை உருவாக்குவதைத் தடுக்க முடியாததாகவிருந்தது. இதனால் தான் எதையும் எதிர்பாராதீர்கள் என்று சொல்லி வைத்தார்கள் போலும்.

 

வைஷாலி தனது கனவுகள் தரைமட்டமானதில் மனதுக்குள் நொந்து போயிருக்க அதைப்பற்றி அறியாத முரளிதரன் அவளை நெருங்கி அமர்ந்தவன், அவள் பின்னங் கழுத்தில் முத்தமிட்டு காது மடலைக் கவ்வினான்.

 

வைஷாலி சரேலென அவனிடமிருந்து விலகியவள், அவன் எதிர்ப்புறமாய் இருந்த ஸோபாவில் அமர்ந்தாள்.

 

“ஏன் வைஷூ… மாமாவை வர லேட் ஆகும் தானே… ஃபெஸ்ட் நைட்டுக்கு ஒரு ரயல் பாப்பமா?”

 

மனதிற்குள் ஏமாற்றத்தால் குமைந்து கொண்டிருந்தவளுக்கு, அந்த நேரத்தில் முரளியின் செய்கையை ஏற்ற முடியவில்லை.

 

“ரயலும் வேணாம்… ஒரு மண்ணும் வேணாம். தயவுசெய்து நீங்க இப்ப போய்ட்டு அம்மாவை வீட்டுக்கு வந்து முடிய வாங்கோ…”

 

“காதலிச்சுக் கலியாணம் கட்டப் போறவன் நான் கிஸ் பண்ணினா… உனக்கு அது கோபம் வருதா…? ஆனா அந்த சஞ்சு ஒட்டி, உரசிக் கதைக்கிற நேரத்தில நீயும் சந்தோசமாக சிரிச்சுக் கதைப்பாய்… லவ் பண்ணுற என்று பேர்… ஆனா ஒரு கிஸ்க்குக் கூட இங்க இந்தப் பாடாக் கிடக்கு…”

 

“இப்ப எதுக்கு நீங்க சஞ்சுவை இழுக்கிறீங்கள்…? அவன் என்ர ஃபெஸ்ட் ப்ரெண்ட். அவ்வளவு தான். அதுதான் ஏதோ சொல்லி அவனை ஊரை விட்டே துரத்தியாச்சே… நாங்க ரெண்டு பேரும் கதைச்சே வருசக் கணக்காகுதே… என்ர கலியாணத்துக்குக் கூட அவன் வர மாட்டான். அது போதாதா உங்களுக்கு?”

 

“நான் போறன்… உன்னைப் பாத்தாலே எரிச்சல் வருது எனக்கு… ஊரில உலகத்தில பொம்பிளை கிடைக்காத போல உன்னைப் போய் பார்த்தன் பாரு… என்னைச் சொல்ல வேணும்… எல்லாம் என்ர தலைவிதி…”

 

“பிடிக்கலை என்றால் பிறகு எதுக்கு இந்தக் கலியாணம்? நிப்பாட்ட வேண்டியது தானே…”

 

“உனக்கென்ன நீ சொல்லுவாய்… இவ்வளவு தூரம் வந்த கலியாணத்தை நிப்பாட்டிட்டு நான் மானம், மரியாதையோட ஊரில வாழுறேல்லையோ… நீ என்னவோ செய்து துலை… நான் போறன்…”

 

கூறியவன் உடனடியாக வைஷாலி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றான். அன்றைய தினத்திலிருந்து திருமண நாள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் முன்பு எதுவும் நடவாதது போல் சாதாரண புதுமணத் தம்பதிகளாய் அன்னியோன்யமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் இருவர் மனசிலும் விழுந்த விரிசல் அகன்று கொண்டே சென்றது.

 

கனவுகளின் பிடியில் அதே வலிகளை மீளவும் உணர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. அதுல்யா வீடு திரும்பியிருக்க, அவளும் சஞ்சயனும் பேசிக் கொண்ட சத்தத்தில் வைஷாலி கனவுகளிலிருந்து மீண்டு, தூக்கம் கலைந்து எழுந்தாள்.

 

வரவேற்பறைக்கு வந்தவளைத் தேநீரோடு வரவேற்றனர் நண்பர்கள். சமந்தவும் அங்கிருந்தான்.

 

“எழும்பிட்டியா வைஷூ? இந்தா… முதல்ல ஸ்வீட் சாப்பிடு… கண்டிக்கு எங்கட வீட்டை போய்ட்டு வந்ததில தான் லேட்டாகிட்டுது… அப்பா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்…”

 

“வாவ்… வாழ்த்துகள் அதுல்…”

 

கூறியபடி நண்பியைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் வைஷாலி.

 

“ஏய் முயல்குட்டி…! சமந்த முறைக்கிறான் பார்… தன்ர வேலையை நீ செய்யிறியாம் என்று…”

 

“சஞ்சு சும்மா சொல்லுறார் வைஷூ… அப்பிடியெல்லாம் இல்லை… அடுத்த மாசமே கல்யாணத்தை வைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறம்… தமிழ், சிங்கள ரெண்டு முறைப்படியும் செய்வம் என்று.”

 

“வாவ்… சூப்பரோ சூப்பர்… நாங்கள் வெய்டிங்… என்ன உதவி வேணுமென்றாலும் யோசிக்காமல் கேளுங்கோ சரியா…?”

 

“நிச்சயமாக… உங்களைப் போல நல்ல ப்ரெண்ட்ஸ் கிடைக்க நானும் சமந்தவும் ரொம்ப லக்கி….”

 

“அதுல்யா சொல்லுற உண்மை தான். சரி… சரி… எல்லோரும் வெளிக்கிடுங்கோ… கல்யாணம் முடிவானதுக்கு என்ர ட்ரீட்… டினருக்கு வெளில போவம்…”

 

சமந்த கூறவும் வைஷாலியும் சஞ்சயனும் தங்களது மனக் கவலைகளை அப்போதைக்கு ஒத்தி வைத்து விட்டுத் தருவித்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

 

சமந்த, அதுல்யா முகங்களிலிருந்த மகிழ்ச்சி வைஷாலியை நிறையவே சிந்திக்க வைத்தது. காதல் கனிந்து திருமணத்தில் கை கூடும் நேரம் இத்தகைய சந்தோஷம் தன்னிடம் இருந்ததா என்று தீவிரமாக யோசித்தவளின் முன் அந்தக் கேள்வி பூதாகரமாக உருவெடுத்தது.

 

‘முரளிதரனை நான் காதலித்தேனா?’

 

வைஷாலி, முரளி மீது காட்டியது உண்மைக் காதல் தானா? முரளி, வைஷாலி மீது வைத்தது உண்மை நேசம் தானா?
Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 15ஒகே என் கள்வனின் மடியில் – 15

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம்  நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு ஓகே என் கள்வனின் மடியில் – 15 வம்சி

ஒகே என் கள்வனின் மடியில் – 6ஒகே என் கள்வனின் மடியில் – 6

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதியை பலர் ரசித்தீர்கள் என்பது வியூவில் தெரிந்தது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்றைய பகுதியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன். இனி பதிவு ஓகே என்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39

39 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் மகிழ்ச்சியோட விழிக்க ஆதியின் வீட்டிலே நிச்சயம் என்பதால் பரபரப்பாக அனைவரும் வேலை செய்துகொண்டு ஆதிக்காக காத்திருக்க ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அந்த சூழலை கண்டு முதலில் திகைக்க அவனின் கண் முன்னால்