வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7

குறுக்கு சிறுத்தவளே 

பாகம் ஏழு 

“இப்போ நான் என்ன கேட்டேன்! ஒரு ஆறு மாசம் ஜிம்முக்கு போனா வெயிட் குறைஞ்சிடுவேன். அதுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா என்னவாம்! அதுக்கு பெறுமானம் இல்லாதவளா ஆகிட்டேனா?”, காலை கண் விழித்ததில் இருந்து அந்த அரை மணி நேரத்தில் ஆறாவது முறையாக புலம்பி வராத கண்ணீரை துப்பட்டா நுனியால் துடைத்துக் கொண்டாள் லலிதா.

பெரிய பெரிய அரசியல்வாதிகளையெல்லாம் வீட்டுக்குள் சிறை வைப்பார்களே அது போல, ரமேஷும்  விழித்ததில் இருந்து அவர்கள் அறைக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டான். அங்கே இங்கே நகரமுடியாதபடி அவன் கிராப்பு (குடுமியெல்லாம் ஓல்ட் பேஷன்) பெண்டாட்டி கையில் சிக்கிக்கொண்டது.

வழக்கமாக சாத்வீகமாகவோ சரசமாகவோ(!) பெண்டாட்டியிடம் பேசும் ரமேஷ் அன்றைக்கு மிளகாய் பொடி, மிளகாய் வற்றல், குறு மிளகு பொடி எல்லாம் தூவி  சற்றே இல்லை நல்ல காரசாரமாகவே  பதில் சண்டைக்கு சிலுப்பிக்கொண்டு வந்தான்.

“அதுக்கு எத்தனை ஆகும் தெரியுமா? இருபத்தஞ்சாயிரம் அல்லது முப்பதாயிரத்துக்கு செக் கிழிக்கணும்! பணம் என்ன, கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுதுன்னு நினைக்கறியா? அறிவிருக்கா? புத்தியோடு பேசு”

அவ்வளவு தான் நம்ம லல்லு, கண்ணகியாய் பொங்கி கிளம்பி ஜான்ஸிராணியாய் வீறுகொண்டு எழுந்துவிட்டாள்.

“ஏன், கல்யாணம் ஆன இத்தனை வருஷத்துல இந்த குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் உழைச்சு உழைச்சு ஓடாய் தேய்ஞ்சிருக்கேன்…… தினம் தினம் சமையல் செய்து போடறேன்; வீட்டு வேலை எத்தனை செய்யறேன்? பாத்திரம் தேய்ச்சு, துணி தோய்ச்சு…. இதுக்கெல்லாம் சம்பளம் எவ்வளவு ஆகும் தெரியுமா? நாக்குல நரம்பில்லாம பேசறீங்களே”

நம்ம ரமேஷ் பற்றி தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே – எங்கே எப்படி எப்போது சொல்வது என்றே சூக்ஷுமம் இல்லாமல் அவன் பாட்டிற்கு காமா சோமா என்று சொதப்புவதில் டாக்டரேட் பட்டமே வாங்கி விடுவான். இப்போதும் அதே போலவே,

“அந்த வேலைக்கெல்லாம் தான் வேலைக்காரி போட்டிருக்கோமே! என்னவோ நீ துணி துவைக்கறது போல அலட்டிக்கறியே! துணி துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு. வீட்டு வேலைக்கு, பாத்திரம் தேய்க்க  வேலைக்காரி வருகிறாளே!”

இத்தனை நேரம் சாதாரணமாக ஆடிக்கொண்டிருந்த லல்லு, இந்த குத்தல் பேச்சுக்குப் பிறகு சாமி வந்து மந்திரிச்சு விடப்பட்ட மாரியம்மன் கோயில் பூசாரி கிடா வெட்டுவதற்கு முன்னால் ஆடுவது போல ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாள்.

“இன்னும் என்ன தான் சொல்லணும் உங்களுக்கு? நான் இந்த வீட்டுல ஒரு வேலையும் செய்யறதில்லை, அதானே? நாளையில இருந்து…. அதென்ன நாளையில, இன்னிக்கி இந்த வேளையில இருந்து நான் எந்த வேலையும் செய்யப்போறதில்லை. நீங்களே எல்லாத்தையும் சமாளிச்சுக்கோங்க. அப்போ தான் நான் எவ்வளவு வேலை செய்யறேன்னு உங்களுக்கு தெரியும்!”, ‘அடுத்தாத்து அம்புஜத்தை’ பாட்டுல சௌகார் ஜானகி வாயை குவித்து ஒரு வெட்டு வெட்டி தாடையை தோள் பட்டையில் முட்டிக்கொண்டு திரும்பிக் கொண்டாள்.

“எதுவும் செய்யமாட்டியா? ஐயோ! அத்தை இருக்காங்களே! அவங்க எப்படி சமாளிப்பாங்க! வயசானவங்க வேற…  பாவம்மா…..”, மெல்ல நைசாக ஜகா வாங்குவது எப்படி என்று கூகிள் கடவுளிடம் மானசீகமாக(!) விண்ணப்பித்துக்கொண்டு நைச்சியத்துக்கு இறங்கினான்.
லல்லு தான் முழு தீவிரமாக கண்ணகி அவதாரத்தில் இருந்து ஜான்சிராணி அவதாரத்துக்கு வந்து போய் கொண்டிருந்தாளே. கணவனின் நைச்சியத்தை கணநேரம் கூட கண்டு மனம் இறங்காமல் ஆக்ரோஷமாக சண்டைக்களத்தில் குதித்தாள்.

“சரி, வீட்டுல தங்கியிருக்கிற விருந்தாளிக்காக உங்களை விட்டு வைக்கறேன். ஆனா, அதே சமயம், நான் யாருன்னும் உங்களுக்கு காட்டறேன். என்னய்யா கேலி பண்ணறீங்க!”, சவால் விட்டபடி அவர்கள் இருவருக்குமான தனிப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

இனிமே தானா நீ யாருன்னு நான் தெரிஞ்சுக்கணும்? நீ ஒரு பெரிய தில்லாலங்கிடின்னு ஊருக்கே தெரியுமே  மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சொல்ல முடியாது. சொல்லும் அளவு தைரியமும் இல்லை, சொன்னால் கேட்டுக்கொள்ள அந்த அறையில் லலிதாவும் இல்லை

பெரியவர்கள் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாக சொல்லி இருப்பது “நாவடக்கம்”. இது இரண்டு பொருளில் வருவது. ஒன்று சொல்லக்கூடாத சொற்களை சொல்லக்கூடாத பொருளில் சொல்லக்கூடாத மனிதரிடம் சொல்லக்கூடாத சமயத்தில் சொல்லக்கூடாத தொனியில் சொல்லாமல் தம்மைக்காத்துக் கொள்வது. மற்றொன்று உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருப்பது. நம்ம ரமேஷுக்கு முதல் வகையான நாவடக்கம் கை வராத காரணத்தால் மனைவி லல்லு அடுத்த வகையான நாவடக்கம் மூலமாக அவனைப்  பழிவாங்கினாள்.

“ஆ….. லல்லு, இதென்ன கருப்பு கலர்ல ஏதோ சூடுதண்ணி கொண்டு வந்துகொடுக்கறே? இதென்னது, கழுநீர்த்தண்ணியா?”

“சும்மா இருங்க! அது காப்பி!”

“என்ன? காப்பியா? அடியே தெய்வ குத்தம் ஆகிடும்டி! அராஜகம் பண்ணாதே!”, வெட்கத்தை விட்டு கெஞ்சினான்.

“ஷ்…. நானும் அத்தையும் விளக்கேத்திட்டு சுலோகம் சொல்லிட்டு இருக்கோம். தொந்தரவு பண்ணாதீங்க”

மௌனமாய் வாய்க்குள் சுலோகத்தை முணுமுணுத்தபடி வெளியே நடக்கும் களேபரங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார் அத்தை.

அடுத்து சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அலறினான் ரமேஷ்.

“ஆஆ …இதென்ன வரட்டியா? தோசையை இப்படி காய்ஞ்சு போய் வறட்சியா தர்றது பஞ்ச மா பாதகம்டி! சரி, கொஞ்சம் தேங்காய் சட்டினி வை ப்ளீஸ் ”

பகட்டான சிரித்துவிட்டு, “என்ன செய்ய, எனக்கோ வெயிட் குறைச்சாகணும். என்னால் சாப்பிடமுடியாததை என்னை விட்டுட்டு சாப்பிட உங்களுக்கும் மனசு வருமா? அதான், எல்லாருக்குமே சேர்த்து ஒரே சமையல் சமைச்சிட்டேன். தோசையில் நெய் இல்லேனா என்ன? இப்படியே நல்லா இருக்கும்…. சாப்பிடுங்க”

“சரி, தோசைக்கு சைட் டிஷ் என்ன? தேங்காய் சட்டினி செய்ஞ்சிருக்கியா? இல்லை, நிலக்கடலை சட்டினி செஞ்சிருக்கியா?”

“………………………”, பதில் ஏதும் சொல்லாமல் அவன் முன்னால் தோ.மி.பொ (தோசை மிளகாய் பொடி)  நகர்த்திவைக்கப்பட்டது.

வாய்க்குள் இட்டிலியை இட்டு கூடவே கொஞ்சம் தோ.மி.பொவை  (தோசை மிளகாய் பொடியை) ராவாக திணித்து மனைவியை திட்டியபடி நறநறத்தான் ரமேஷ்.

போடி போ – பொடியை கொடுக்கற பொக்கைவாய் பெண்டாட்டி – மனுஷனுக்கு கோபமும் பசியும் அதிகரித்தாலும் எதுகை மோனையில் சொல்லவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒழுங்காக இருக்கும் பெண்டாட்டியை போக்கை வாய் என்று சொல்வது ரொம்ப ஓவர்.

காரம் தாங்கவில்லையோ மனைவி மேல் உள்ள கோபமோ ஜிவுஜிவு என்று சிவந்த முகத்தோடு விறைப்பாக கிளம்பி செல்லும் ரமேஷை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடி அடுத்த கட்டமாக எப்படி காய் நகர்த்துவது என்று யோசித்தார் அத்தை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 22உள்ளம் குழையுதடி கிளியே – 22

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? உள்ளம் குழையுதடி கிளியே – 22 அன்புடன், தமிழ்

கடவுள் அமைத்த மேடை 10கடவுள் அமைத்த மேடை 10

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த வைஷாலியின் ப்ளாஷ்பேக் இன்றைய பகுதியிலிருந்து ஆரம்பம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை 10 அன்புடன் தமிழ் மதுரா