யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 12

கனவு – 12

 

விழிநீர் சொரிய சஞ்சயனின் கைகளைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டாள் வைஷாலி.

 

“என்னை மன்னிச்சிடு சஞ்சு… நீ இத்தனை வருசமாக இவ்வளவு வலியை உனக்குள்ள வைச்சிருக்கிறாய் என்று சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லைடா… நான் ஒரு முதலாம் நம்பர் சுயநலவாதி சஞ்சு. முரளி, முரளி என்று என்னைப் பற்றியே யோசிச்சுக் கொண்டிருந்ததில உனக்கு அவந்தியைப் பிடிச்சிருக்கு என்றதைக் கொஞ்சம் கூடக் கவனிக்கல. ரியலி ஸொரிடா…

 

ஆனால்  இப்ப அது முடிஞ்ச கதை சஞ்சு… உயிரோட இல்லாதவளுக்காக இன்னும் எவ்வளவு காலம் தான் உன்ர வாழ்க்கையை வீணாக்கப் போறாய்? அவந்திட இழப்பு நாங்க யாருமே எதிர்பாராத ஒன்று தான். இப்ப கூட தினமும் நான் அவளை ஏதாவது ஒரு காரணம் வைச்சு நினைச்சிட்டே தான் இருக்கிறன்.

 

அவந்தி என்னோட கூடப் பிறக்காட்டிலும் அவ எனக்குத் தங்கச்சி போல தான். அவ என்ர மச்சாள் என்றதை விட எனக்கு நல்ல ப்ரெண்ட் என்றது உனக்கே தெரியும் தானேடா. ஒரு வயசு தான் வித்தியாசம் என்ற படியாலயோ தெரியேல்ல ஊரில எல்லாருமே அவந்தி, என்ர தங்கச்சி விசாலி, என்னை மூன்று பேரையும் சகோதரம் போல இருக்கிறம் என்று தானே சொல்லுவினம். யார் கண் பட்டுச்சோ தெரியேல்ல. நாசமாப் போனவங்கள் குடிச்சுப் போட்டு வாகனத்தை ஓடி அவள் உயிரை எடுத்திட்டாங்கள்.

 

அவளுக்கு வாழணும் என்று குடுத்து வச்சது அவ்வளவுதான் போல. போய்ச் சேர்ந்திட்டா. நாம இனி அவளைப் பத்தியே நினைச்சுக் கவலைப்படுறதால மட்டும் அவள் திரும்ப வந்திடுவாளா என்ன? ப்ளீஸ் சஞ்சு… கொஞ்சமாவது ப்ரக்டிக்கலா யோசிச்சு வாழப் பழகு… அவளை மறக்கிறது கஷ்டம் தான்.

 

நான் ஏன் என்ர தலை முடியை இப்பிடிக் குட்டையாக வெட்டி வைச்சிருக்கிறன் என்று தெரியுமா? ஒவ்வொரு நாளும் தலை பின்னேக்க அவந்திட ஞாபகம் வரும். எங்கட ரெண்டு பேரிட பின்னலையும் சேர்த்து நீ கட்டி வைப்பியே. அதெல்லாம் ஞாபகம் வரும். நினைச்சு அழுது கொண்டே இருந்திட்டு வேலைக்குப் போக லேட் ஆகிடும்.

 

தலைமுடியை வெட்டின உடன மட்டும் அவந்தியை மறந்திட்டதாக அர்த்தம் இல்லை. வேற வகைல ஞாபகம் வருவாள் தான். அவளுக்குப் பிடிச்ச சாப்பாட்டைப் பார்த்தால், அவளுக்குப் பிடிச்ச எந்த ஒரு விசயமும் கண்ணில பட்டால் அவள் ஞாபகம் வரத்தான் செய்யுது. இல்லை என்று சொல்லேலடா. ஆனால் நம்மால இனி என்ன செய்ய முடியும் சொல்லு?

 

அவந்தியைப் பற்றின சுகமான நினைவுகளோட எங்கட வாழ்க்கையைக் கொண்டு போக வேண்டியது தான்.”

 

அவள் கரங்களில் இருந்து தனது கரங்களை விடுவித்தவன் விக்கியபடியே பேசிக் கொண்டிருந்தவளது கண்களைத் துடைத்து விட்டான்.

 

“ஸொரி வைஷூ… நீயே அவளை நினைச்சு தினம் தினம் கவலையில இருக்கேக்க நான் வேற உன்னை இன்னும் பழசை நினைச்சு அழ வைக்கிறன். ப்ளீஸ்… நீ அழாதை… நான் இனிமேல் அவந்தியை நினைச்சுக் கவலைப்பட மாட்டேன். நாங்க அவளிட சந்தோசமான நினைவுகளை மட்டும் நினைச்சுப் பார்ப்போம் என்ன?”

 

சொன்னபடியே இடைவிடாது வழிந்து கொண்டிருந்த அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான். வைஷாலிக்கோ இத்தனை வருடங்கள் கழித்து ஆத்ம நண்பனிடம் தன் உடன் பிறவாத் தங்கையைப் பற்றி பேசியதும், அவனே அவள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்ததும் நினைக்க, நினைக்க மனம் தாங்கொணா வேதனையைக் கொடுத்தது.

 

‘இப்போது அவந்தி உயிரோடிருந்திருந்தால் சஞ்சயனைத் திருமணம் முடித்து எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பாள்?’ நினைத்தவளுக்கு அடக்க முடியாமல் கேவல் வெளிப்பட்டது. அவளின் சோகம் புரிந்தவனோ அவளைத் தேற்றும் வகை தெரியாது அவளுக்கு அருகே நெருங்கி அவளைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

 

கண்ணீர் சுரப்பிகள் வற்றும் வரை அழுது முடித்தவள் அவன் தோளிலேயே தூங்கிப் போனாள். குளுகுளுவென வீசிய மலைத் தென்றலும், குடை பரப்பி விரிந்திருந்த மர நிழலும், அவள் மனதின் வேதனையும், தனது மனப் பாரத்தை இறக்கி வைக்க ஒரு சுமை தாங்கியும் கிடைத்ததில் வைஷாலி தன்னை அறியாது சஞ்சயன் தோளில் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தாள்.

 

தென்றல் கலைத்த அவள் முன் முடிக் கற்றைகளை ஒதுக்கி விட்டு, அவள் தூக்கம் கலையாதவாறு நன்றாய் தன் மீது சாய்த்துக் கொண்டு, அந்த மரத்தின் அடித் தண்டுப் பகுதியில் சாய்ந்து அமர்ந்தவனிடமிருந்து பெரிதாய் வெளிப்பட்டது ஒரு ஏக்கப் பெருமூச்சொன்று.

 

பல நேரங்களில் தூக்கம் என்பது ஒரு சிறந்த மருந்து. அதைப் போன்ற ஒரு வலி நிவாரணி வேறெதுவும் இல்லை எனலாம். எந்தப் பெரிய பிரச்சினையும் முதலில் பூதாகரமாகத் தெரியும். அதையே மனதில் வைத்து உளப்பிக் கொண்டிராமல் நன்கு தூங்கி எழுந்து சிந்திக்கும் போது அதே பிரச்சினை சிறிது இலகுவாகத் தெரியும். சில நேரங்களில் உடனடியாகக் கண்ணில்படாத தீர்வுகள் கூடத் தூங்கி எழுந்ததும் மனதில் தோன்றும்.

 

அதேபோல் தான் மனம் வேதனையின் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது தூக்கம் ஒரு சிறந்த வலி நீக்கி. ஆழ்ந்த தூக்கம் வேதனையின் அளவைக் குறைப்பதுண்டு.

 

நிமிடங்கள் மணியாக ஒரே கோணத்தில் அமர்ந்திருந்தது கழுத்தில் வலியை உண்டாக்கியிருக்கத் தூக்கம் கலைந்து எழுந்தாள் வைஷாலி. மரத்தின் மீது தலை சாய்த்து கண்களை மூடியிருந்த சஞ்சயன், வைஷாலி எழுந்த அரவத்திற்கு தானும் கண்களைத் திறந்தான்.

 

“ஸொரிடா… என்னையறியாமலே தூங்கிட்டன்… நீயாவது எழுப்பியிருக்கலாமே…”

 

“இப்போ எழுப்பி என்ன செய்ய போறம்… நீயும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக இருக்கட்டும் என்று தான் எழுப்பேல்ல… இனி திரும்ப நடக்கச் சரியாக இருக்கும்…”

 

கூறவும் வைஷாலியும் எழுந்தாள். சஞ்சயனும் எழுந்து கைகளை உயர்த்தி நெட்டி முறித்தவன், தோள்ப்பையை எடுத்துத் தோளில் கொழுவிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். வைஷாலியும் அவனருகே சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். இருவரிடமுமே வரும் போது இருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இப்போது இருக்கவில்லை. இருந்தாலும் இருவர் மனதிலும் ஏதோ ஒரு பாரம் குறைந்த, ஒரு அழுத்தம் குறைந்த உணர்வு.

 

நீண்ட நடையின் காரணமாக உடலும் களைத்திருக்க நுவரெலியா நகரிலேயே ஒரு உணவகத்தில் இரவுணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

 

வைஷாலியை அவளது வீட்டில் இறக்கி விட்டு விட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பிய சஞ்சயனிற்கு, இத்தனை வருடத் தனது மனக் கவலையை உயிர்த் தோழியிடம் பகிர்ந்து இருந்ததில் கொஞ்சம் மனம் ஆறுதல் அடைந்திருந்தாலும் அவளின் வாழ்வு சீரற்றுப் போனதன் காரணம் புரியாமல் இதயம் கனத்தது.

 

உடை மாற்றி விட்டு அடுத்த நாள் வேலைக்குரிய சில ஆயத்தங்களைச் செய்வதற்காக மடிக் கணணியை உயிர்ப்பித்தவன் புகைப்படங்கள் இருந்த போல்டரைத் திறந்து பார்த்தான். அதில் ரலன்ட் ட்ரிப் என்றிருந்த போல்டரைத் திறந்தவன் அவற்றில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தான்.

 

ரலன்ட் டியூசன் சென்டரால் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை ஸ்கான் செய்து கணணியில் ஏற்றி வைத்திருந்தான். நல்லூருக்கு முன்னால் அனைவரும் நின்று எடுத்த குழுப் புகைப்படங்கள், கசூரினா கடற்கரையில் விளையாடும் போது எடுத்த புகைப்படங்கள், முரளிதரன் பிறந்தநாள் கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் என்று அனைத்தையும் பார்த்த போது அவன் நினைவுகள் அன்றைய நாளை நோக்கிச் சென்றது.

 

ஆண்களும் பெண்களுமாக இவர்கள் வகுப்பைச் சேர்ந்த முப்பது மாணவ, மாணவிகள் அனைவரையும் ஒரு மினிபஸ்சில் ஏற்றி அழைத்துச் சென்றிருந்தனர். நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அந்தக் காலத்தில் சுற்றுலா செல்வது என்றாலே ஒரு அரிதான விசயம். அப்படியிருக்கும் போது மாணவர்களின் கொண்டாட்டததிற்குக் குறைவேது?

 

நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்குச் சென்று வழிபட்டு விட்டுப் பின்னர் காரைநகர் சிவன் கோவிலையும் வணங்கி கசூரினா கடற்கரையை அடைந்தனர். கடற்கரையைக் கண்டதுமே மாணவர்கள் தத்தமது நண்பர் குழுக்களோடு விளையாட ஆரம்பிக்க சஞ்சயன் பொறுப்பாய் கூட்டி வந்த ஒரு ஆசிரியரிடம் சென்று முரளிதரன் பிறந்தநாள் பற்றிய விபரம் சொல்லி கேக் வாங்கி வந்திருப்பதைக் கூறினான்.

 

அவரும் மாணவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடச் செய்து முரளிதரனை அழைத்து கேக்கை வெட்டச் சொன்னார். மாணவர்கள் வட்டமாகக் குழுமி நின்று பிறந்தநாள் வாழ்த்துப் பாட, சஞ்சயன் கேக்கைக் கைகளில் ஏந்தி வைத்திருக்க முரளி மெழுகுதிரியை ஊதி அணைத்து கேக்கை வெட்டி அருகில் நின்றிருந்த நண்பர்களுக்கு ஊட்டினான்.

 

உண்மையில் கேக்கை வாங்கிக் கொண்டு வந்து சஞ்சயனிடம் கொடுத்திருந்த வைஷாலியோ தனக்கும் இதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லாத தொனியில் சற்று எட்டவே நின்றாள் எனலாம். முரளி கேக்கைக் கொண்டு வந்து இவளிடம் நீட்டிய போதும் மற்றைய மாணவர்களைப் போலவே பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு சிறு துண்டொன்றை எடுத்துக் கொண்டாள். ஆனால் இத்தனைக்கும் முரளியின் கண்களை நோக்கவில்லை. அவனைக் கவனமாய் தவிர்த்தாள்.

 

கேக் வெட்டி முடிய மறுபடியும் மாணவர்கள் கடலில் கால் நனைப்பதும், பந்து விளையாடுவதும், ஓடிப் பிடித்து விளையாடுவதுமாக இருந்தார்கள். பத்துப் பத்து மாணவர்களாய் அரை மணி நேரம் கடலிற்குள் மோட்டார் படகொன்றில் வேறு கூட்டிச் செல்ல மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

 

ஒரு பகுதி மாணவர்கள் படகில் சென்றிருக்க வைஷாலி தனது நண்பிகளோடு சேர்ந்து கரையில் நின்று அலைகள் வரும் போது கரைக்கு ஓடுவதும் அலைகள் உள்ளே செல்ல கடலை நோக்கி ஓடுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் பட்டுப் போயிருந்த ஒரு சவுக்கு மர அடி மரத்தில் ஒற்றைக் காலை பின்புறமாக ஊன்றி அந்த அடிக் கட்டையில் சாய்ந்தவாறு நின்று வைஷாலியையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் முரளிதரன்.

 

இதனை அவதானித்தபடியே அவனிடத்தில் வந்த சஞ்சயன், வண்ணக் காகிதத்தில் அழகாய் பொதி செய்யப்பட்ட ஒரு பரிசுப் பொதியை முரளியிடம் கொடுத்தான்.

 

“ஹப்பி பேர்த்டே நண்பா…! சின்ன கிப்ட் ஒன்று…”

 

“தாங்ஸ் சஞ்சு…!”

 

கூறிக் கொண்டே மனதில் உதித்த ஆவல் முகத்தில் தெரிந்திடாது மிகக் கவனமாய் அந்தப் பரிசுப் பொதியைப் பிரித்துப் பார்த்தான் முரளிதரன்.  

 

சொந்தமாகத் தயாரித்த ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை ஒன்றில் முத்து முத்தான கையெழுத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று எழுதியிருந்ததே தவிர யார் என்ற விபரம் இல்லை. அத்தோடு இவர்கள் மூன்றாம் வகுப்பில் நடித்த அந்த ஆங்கிலப் பாடல் காட்சியொன்றின் புகைப்படம் ஒன்று அழகான போட்டோ பிரேமில் போடப் பட்டிருந்தது. வைஷாலியும் முரளிதரனும் நடுநாயகமாக நின்றிருக்க சஞ்சயனும் மற்றைய நண்பர்களும் இவர்கள் இருவரின் பின்னாலும் நின்றிருந்தார்கள்.

 

அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவன் பார்வை உடனடியாக ஒரு நொடி வைஷாலி மீது படிந்து மீண்டது.

 

“ரொம்ப தாங்ஸ்டா சஞ்சு… ரொம்ப அழகான கிப்ட் தந்திருக்கிறாய்… எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”

 

முரளிதரன் எங்கே முகத்தில் வீசி எறிந்து விடுவானோ என்று சிறு பயம் சஞ்சயன் மனதில் இருக்கத் தான் செய்தது. ஆனால் முரளிதரனின் இந்தப் பதிலில் வைஷாலி மீது அவனுக்கும் ஒரு ஈடுபாடு வந்து விட்டதை உணர்ந்து கொண்ட சஞ்சயன் மனது மகிழ்ச்சியில் பூரித்தது.

 

அன்றைய நாளின் பின்னர் முரளிதரன் வைஷாலியைப் பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றம் வந்தது. ஒரு நாள் சஞ்சயனிடம் வந்தவன்,

 

“சஞ்சு…! உன்ர வீட்டை செல்வராஜா சேர் இங்கிலிஷ் கிளாஸ் வைக்கிறவர் எல்லோ… நானும் வரட்டே…”

 

கேட்டவனை அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தான் சஞ்சயன். காரணம் முரளிதரனுக்கு ஆங்கிலத்தில் தொண்ணூற்றைந்துக்குக் குறைய புள்ளிகள் வந்ததாகச் சரித்திரம் இல்லை. அப்படியிருக்க இவனுக்கு எதற்கு தனிப்பட்ட வகுப்பு என்று எண்ணியவன் அதை வெளியே காட்டாமல்,

 

“அதுக்கென்ன முரளி… தாராளமாக வாடா…”

 

என்றான். ஆனால் முரளிதரன் ஆங்கில வகுப்பிற்கு வர ஆரம்பித்தது வைஷாலி, சஞ்சயனுக்கிடையேயான ஒரு இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக உண்டு பண்ண ஆரம்பித்தது. அவர்கள் அன்பில் மாற்றமில்லாது இருந்தாலும் அவர்கள் பேசிப் பழகும் நேரம் வெகுவாகக் குறைந்தது. முரளிதரன் முன்னால் முன்பு போல இலகுவாக இருவராலும் பேசிக் கொள்ள முடிவதில்லை.

 

வைஷாலி தான் எடுத்த தீர்மானத்தை மீறாதவளாய் முரளியோடு எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வதில்லை. அவன் ஏதாவது கேட்டால் கூட இவள் ஒற்றை சொல்லில் பதிலளித்து விட்டு அமைதியாக இருந்து கொள்வாள். எதிரே அமர்ந்திருக்கும் முரளிதரன் பார்வை தன்னை அடிக்கடி துளைத்தெடுப்பதை முகத்தை நிமிர்ந்து பார்க்காமலேயே உணர்ந்து கொண்டாலும் வைஷாலி இன்னொரு தடவை முரளிதரனிடம் திட்டு வாங்கி அவமானப் படத் தயாரயில்லை. அதனால் முரளிதரனோடு பழகும் விதத்தில் மிகக் கவனமாகத் தான் இருந்தாள். ஆனால் வைஷாலி முரளிதரன் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் கண்ணீர் விடும் நாளும் வந்தது.

 

பேதையவள் அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டாளா? இல்லை துவண்டு போனாளா?

 

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 12”

  1. Very nice suspense breaking. Last episode மீண்டும் ஒருமுறை படித்தேன். Impressed with your writting technic once again!

Leave a Reply to Priya saravanan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் – 9காதல் வரம் யாசித்தேன் – 9

வணக்கம் பிரெண்ட்ஸ். போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு [scribd id=300311046 key=key-cJPCsS2oX0stWv8Lj7UQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41

41 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுன் வர இருந்த நாட்களில் வேலை முடியாததால் இன்னும் அங்கேயே தங்கவேண்டியதாக போய்விட்டது. அர்ஜுனிடம் பேசிய எவரும் அவனிடம் இதை கூறவில்லை. அவன் நேரில் வந்த பின்பு கூறிக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். அம்முவிற்கும் அதுவே சரியென