யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11

கனவு – 11

 

லீயும் ஷானவியும் புறப்பட்டுச் சென்றதும் சஞ்சயனும் வைஷாலியும் சிறிது நேரம் அங்கேயே அந்த மலைத் தொடர்களை ரசித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

 

“வைஷூ…! ஸன் ஃபாத் எடுத்தது போதும்டி… உச்சி வெயில் மண்டை பிளக்குது. வா… இறங்குவம்… எனக்குப் பசி வேற பெருங் குடல் சிறு குடலைத் தின்னுது…”

 

“சரி… சரி… வா…”

 

கூறியவள் எழுந்து முன்னே நடந்தாள்.

 

“சஞ்சு…! வாற வழியில ஒரு சின்ன நீர் வீழ்ச்சி பார்த்தனாங்கள் எல்லே. அது இங்க எங்கேயோ கிட்டத் தானே… அங்க போய்ச் சாப்பிடுவமே…”

 

“சரி வைஷூ…”

 

இருவரும் அந்த சிறு நீர் வீழ்ச்சியைத் தேடிச் சென்றார்கள். ஒரு சிறு மலை உச்சியில் இருந்து செங்குத்தாய் விழுந்து சிறு அருவியாய் கீழே ஓடிக் கொண்டிருந்தது. இரு புறமும் மரங்களும் செடி கொடிகளும் சோலையாய் வளர்ந்திருக்க, விட்டால் வைஷாலி அந்த இடத்திலேயே குடியமர்ந்து விடுவாள் போலிருந்தது.

 

மரஞ்செடி அடர்த்தி குறைவாக இருந்த ஒரு இடத்தில் இருந்த பெரிய பாறையைச் சுத்தம் செய்து அதை மேசையாக்கினான் சஞ்சயன். அருகே இருந்த சிறு பாறைகள் இரண்டை அந்த மேசைக்கு எதிரும் புதிருமாகப் போட்டு இருக்கைகளாக்கினாள் வைஷாலி. இயற்கையான முறையில் ஒரு சாப்பாட்டு மேசை தயாராகி விட, வைஷாலி தோள் பையிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள், தண்ணீர், யூஸ் என்பவற்றை எடுத்து அந்தப் பாறையில் கடை பரப்பினாள்.

 

பின்னர் இருவரும் சலசலத்து ஓடிய அந்தச் சிற்றருவியில் அவ்வளவு தூரம் நடந்த அலுப்புப் போகக் கைகளையும் முகங்களையும் அலசிக் கழுவிக் கொண்டு சாப்பிடத் தயாராய் அமர்ந்தனர்.

 

வைஷாலி செய்து கொண்டு வந்திருந்த ப்ரைட் ரைஸ்ஸையும் சிப்சையும் சேர்த்துப் போட்டு ஒரு பிடிபிடித்தான் சஞ்சயன். அவன் ருசித்துச் சாப்பிடுவதை ரசித்தபடியே இவளும் உண்டு முடித்தாள். வைஷாலி சஞ்சயனுக்கு முதலே சாப்பிட்டு முடித்திருக்கவே கைகளைக் கழுவி விட்டு வந்து அமர்ந்திருந்தாள்.

 

சஞ்சயனும் சாப்பிட்டு முடித்ததும் குப்பையில் எறிய வேண்டிய சிப்ஸ் பைக்கட்டுகளையும் பிளாஸ்டிக் யூஸ் போத்தல்களையும் ஒரு பையினுள் சேகரித்து அந்த பையை வெளிப் புறமாகத் தோள் பை பிடியில் கட்டிக் கொண்டான்.

 

பாறையில் அமர்வதற்கு இலகுவாகத் தனது ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்த தனது பேர்ஸ்ஸை எடுத்து வெளியே அந்தப் பாறையில் வைத்திருந்தான் சஞ்சயன். இவன் இடத்தைத் துப்பரவு செய்து கொண்டிருக்கவும் வைஷாலி அவனுக்கு உதவும் முகமாக பேர்ஸை கையில் எடுத்தாள். இவள் கவனிக்காது தலைகீழாகத் தூக்கி விடவும் அதிலிருந்த பணமும் சிறு காகிதத் துண்டுகளும் கீழே விழுந்தன.

 

“ஸொரிடா மச்சி… நான் கவனிக்கேல்ல. என்னடா இது…? இவ்வளவு சின்ன பேர்ஸ்க்க இப்பிடி எல்லாத்தையும் போட்டு அடைஞ்சு வைச்சிருக்கிறாய்…?”

 

கூறிக் கொண்டே கீழே விழுந்த பொருட்களை எடுத்து மறுபடியும் அவன் பேர்ஸ்ஸினுள் வைக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கண்ணில் பட்டது அந்த அடையாள அட்டைப் புகைப்படம். அதை எடுத்துப் பார்த்தவளால் அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. கண்கள் இருட்டித் தலை சுற்றுவது போலிருக்க அப்படியே அந்தப் பாறையில் சாய்ந்து அமர்ந்தாள்.

 

“இத்தனை வருசங்களாக என்னை ஏமாத்திப் பழகியிருக்கிறியே நாயே… ஃபெஸ்ட் ப்ரெண்ட் என்று உன்னை எவ்வளவு நம்பினேன்… என்னட்ட ஒரு வார்த்தை சொல்லியிருப்பியா? சரி இப்போ தான் கதைக்காமல் இருந்தோம். ஆனால் ஏஎல் எடுக்கிற வரை நல்லாத் தானே கதைச்சம். ஒரு தடவையாச்சும் என்னட்ட வாய் திறந்திருப்பியா? உன்னை ப்ரெண்ட் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கு… தயவு செய்து இனிமேல் என்ர முகத்தில முழிக்காதே…”

 

கூறியவள் விறுவிறுவென அவனைத் திரும்பியும் பார்க்காமல் நடந்தாள். தோள்பை, கமெரா என்று எல்லாப் பொருட்களையும் அந்த இடத்தில் எதையும் தவறவிடவில்லை என்று சரி பார்த்து எடுத்துக் கொண்டு அவள் பின்னே ஓடினான் சஞ்சயன்.

 

“வைஷூ…! ப்ளீஸ்டி… நான் செய்தது தப்புத்தான்… நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுடி… ப்ளீஸ் வைஷூ… நான் வேணும் என்று மறைக்கேல்ல… நான் உனக்குச் சொல்லுவம் என்று இருக்க, அதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சுதுடி. பிறகு சொல்லி என்ன ஆகிறது என்றுதான் சொல்லேல்லடி… சொல்லுறதுக்குச் சரியான சந்தர்ப்பமும் அமையல வைஷூ…”

 

அவன் குரலே கேட்காதவள் போல நடக்கிறாளா, ஓடுகிறாளா என்றே புரியாத வேகத்தில் சென்று கொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பார்த்துக் கொலைவெறியோடு சஞ்சயனை முறைத்தாள்.

 

“ப்ரெண்ட்ஸிப் என்றால் என்ன என்று தெரியுமாடா உனக்கு? நான் உன்னில எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைச்சிருந்தேன் தெரியுமா? அதெல்லாத்தையும் ஒரு நொடியில குழி தோண்டிப் புதைச்சிட்டியே… இவ்வளவு பெரிய விசயத்தைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரு முறை சொல்லக் கூடவா உனக்கு சந்தர்ப்பம் வாய்க்கேல்ல…? படுபாவி… இவ்வளவு நாளும் நீ கல்யாணம் வேணாம் என்று இருக்கிறது இதால தான் என்ன…? ரொம்ப நல்ல விஷயம். ரொம்ப சந்தோஷம் சஞ்சு… நல்லா இரு… ஆனா இனி உனக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றதை மட்டும் மறந்திடாதை…”

 

சொல்லி விட்டு மறுபடியும் தனது வேக நடையைத் தொடங்கினாள். சஞ்சயன்  எதுவும் சொல்லத் தோன்றாதவனாய் அவளைப் பின் தொடர்ந்தான். பாதி தூரம் கடந்ததும் அதற்கு மேல் நடக்க முடியாமல் மூச்சு வாங்க, அங்கிருந்த மர நிழலில் கீழே புற்தரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டாள் வைஷாலி.

 

தானும் அவள் அருகே சென்று எதுவும் பேசாது படுத்துக் கொண்டான் சஞ்சயன். சில பல நிமிடங்கள் கடந்திருக்க எழுந்து அமர்ந்தவள் அவனை உற்று நோக்கினாள். அவள் கோபம் தீர்ந்து விட்டதை உணர்ந்த சஞ்சயன் தானும் எழுந்து அவள் முகம் பார்த்து அமர்ந்தான்.

 

இது தான் வைஷாலி. கோபம் வந்தால் கத்துவதும் சில நிமிடங்களிலேயே அதை மறந்து சகஜமாகி விடுவதும் அவள் வாடிக்கை. அதை நன்கு உணர்ந்த அவள் உயிர்த் தோழனும் அவள் அமைதியடைவதற்காகக் காத்திருந்தான்.

 

“ஏன் சஞ்சு என்னட்ட இருந்து மறைச்சாய்? நீ காதலிச்சது தெரிஞ்சால் நான் உன்னைத் தப்பாக நினைச்சிடுவன் என்று யோசிச்சியா?”

 

“ஹூம்…! அப்பிடியும் சொல்லலாம் தான். ஆனால் உண்மையா உனக்குச் சொல்லாமல் விடுவம் என்று நினைக்கேல்லடி. சொல்லச் சந்தர்ப்பம் கிடைக்கல… நான் சொல்ல வாறதுக்க எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சுது…”

 

“ஹூம்… சரிடா… அது சரி… நீ எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சனீ? உன்னோடயே நான் எப்பவும் இருந்தும் எனக்கு எப்பிடித் தெரியாமல் போச்சுடா?”

 

“நீ எப்ப முரளியை லவ் பண்ணத் தொடங்கினனீ…?”

 

“அது வந்து… ஆ… மூன்றாம் வகுப்பில இருந்து…”

 

“லூசு… அது லவ் இல்லடி… அது நீ முரளியைத் தான் கல்யாணம் பண்ண வேணும் என்று எடுத்த முடிவு… நான் கேட்டது நீ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சனீ என்று…”

 

சில நிமிடங்கள் யோசித்தவளுக்கு அந்தக் கேள்விக்குரிய பதில் எதுவெனப் புரியவில்லை,  தெரியவில்லை. ‘முரளிதரனை அவள் காதலித்தாள் தானா?’ என்ற மிகப் பெரும் கேள்வியொன்று அவள் மனதில் சந்தேக உருக் கொள்ளத் தலையை உலுக்கி அந்தக் கேள்வியைப் புறம் தள்ளினாள்.

 

“நீ கதையை மாத்தாதை. நான் உன்னைக் கேள்வி கேட்க, நீ அதுக்குப் பதில் சொல்லாமல் என்னைக் கேள்வி கேட்கிறாய்… முதல்ல நீ சொல்லு. நீ எப்ப இருந்து லவ் பண்ணத் தொடங்கினனீ?”

 

சில நொடிகள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தவன், தூரத்தே தெரிந்த மலை முகடுகளை வெறித்தபடி சொல்ல ஆரம்பித்தான்.

 

“இந்தப் படங்களில எல்லாம் ஒரு சீன் காட்டுவாங்கள் பார்த்திருக்கிறியா? வழக்கமான கஸுவல் உடுப்பில பார்க்கிற பொண்ணை சாரியிலயோ, அல்லது ஹாப் சாரியிலயோ கலாசாரமா குடும்பப் பாங்கான பொண்ணாப் பார்க்கிற நேரம் இந்த ஹீரோக்கள் எல்லாம் மயங்கிடுவாங்க.

 

எனக்கு இப்படியான சீனைப் பார்த்தாலே சிரிப்பு வரும். என்னடா இது சாரி கட்டிக் கொஞ்சம் மேக்கப் போட்டால் வழக்கமான வடிவை விடக் கொஞ்சம் கூட இருக்கிறது சரி தான். அதுக்காக எல்லாம் இப்பிடி ரொமான்டிக் லுக் விடுறதெல்லாம் ஓவர் இல்லையோ? அது எப்பிடி சாரில பார்த்ததும் லவ் பொத்துக்கொண்டு வருது என்று.

 

ஆனா நானே அப்படியொரு சந்தர்ப்பத்தை  உணர்ந்தேன் வைஷூ. நாங்கள் அப்ப ஏஎல் ரெண்டாம் வருசம். அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில சோசல். (உயர்தர மாணவர்கள் ஒன்று கூடல்) நான் சைக்கிளைக் கொண்டு போய் ஸ்டான்ட்டில விட்டிட்டு நிமிர்ந்து பார்க்கிறன்…

 

ஸ்…அப்பப்பா…! நான் தேவதை எல்லாம் நேரில பார்த்ததில்லை. ஆனா அன்றைக்கு சாரில பார்த்த கோலம் தான் எனக்கு இன்றை வரைக்கும் தேவதை என்ற சொல்லுக்கு மனசில வாற வரி வடிவம். பொதுவா எல்லாப் பிள்ளையளும் பட்டுச் சாரியும், சில்க் சாரியுமாகக் கட்டியிருக்க வெள்ளை நிறத்தில பிங்க் கலர் கரை போட்ட கொட்டன் சாரி கட்டி, காதில ஒரு சின்ன முத்துச் சிமிக்கியும், கழுத்தில மெல்லிய முத்துச் சங்கிலியுமா இடுப்புக்குக் கீழ நீண்ட ஒற்றைப் பின்னலும் பின்னித் தலை நிறைய மல்லிகைப் பூவும் வைச்சு, நெத்தில சின்னதா ஒரு மரூன் நிற முக்கோணப் பொட்டும் வைச்சுக் கொண்டு…

 

அப்பிடியே சாகிற வரை பார்த்துக் கொண்டிருக்கலாம் போல ஒரு உணர்வு. அந்த செக்கன் தான் மனசில தோணிச்சு. நான் வாழும் காலம் பூராக இவளை என் கூடவே பத்திரமாக வைச்சிருக்க வேணும் என்று. அந்த எண்ணம் தோன்றின அந்த நிமிசம் என்ர மனசில தோன்றின உணர்வுகளை வெறும் வார்த்தைகளால சொல்ல முடியாது வைஷூ.

 

வயித்தில இருந்து தொண்டை வரை ஏதோ உருண்டு புரளுற உணர்வு. இதயம் திடீரென்று வேகமா துடிக்கத் தொடங்கிச்சு. இதயம் ஏதோ என்ர காதுக்குப் பக்கத்திலே வந்தது போல லப்டப் சத்தம் என்ர காதுக்கயே கேட்க தொடங்கிட்டுது.

 

அதுவும் அப்படியே அந்த நீளக் கண்ணை அகல விரிச்சுச் சிரிச்சுக் கொண்டே ‘அழகா இருக்கிறனா?’ என்று கேட்ட அந்த நிமிசம்,  இப்பவும் என்ர மனசில இருக்குடி. நான் சாகிற வரைக்கும் அதை என்னால மறக்கவும் முடியாது வைஷூ. நீ என்னைத் தப்பா நினைச்சாக் கூடப் பரவாயில்லை. ஆனா அதுதான் உண்மை.

 

அந்த ஒரு நொடியில தோன்றின உணர்வுக்குப் பேர் தான் காதல் என்றால்… நானும் காதலிச்சன் வைஷூ… இந்த நிமிசம் வரைக்கும் காதலிச்சுக் கொண்டு தான் இருக்கிறன். நான் சாகிற அந்தக் கடைசி செக்கனில கூட என் காதல் இருக்கும்.

 

சின்ன வயசில இருந்து சேர்ந்து விளையாடிக் கூடித் திரிஞ்சிட்டு நான் காதலிச்சது சரியா? தப்பா? என்றெல்லாம் எனக்குத் தெரியாது வைஷூ. ஆனால் உன்னட்ட இதைச் சொல்லாமல் விட்டது பெரிய தப்புத்தான். அதுக்காக என்னை மன்னிச்சிடுடி… ப்ளீஸ்… நான் வேணுமென்றே மறைக்கல வைஷூ. நீயே யோசிச்சுப் பார்… ஏஎல்க்குப் பிறகு நானும் நீயும் சரியாகக் கதைக்கவே சந்தர்ப்பம் அமையலயே… அப்புறம் எப்பிடி நான் இதையெல்லாம் உன்னட்டச் சொல்லுறது…?

 

என்னால இந்த நினைவுகளையெல்லாம் மறந்து வேறையொரு பெண்ணை பொண்டாட்டியாக ஏத்துக் கொள்ள முடியும் போலத் தோணேல்ல வைஷூ. கடைமைக்குக் கல்யாணம் செய்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்கவும் விரும்பலடி. அதுதான் காலம் பூரா இப்பிடியே தனியாக இருந்திடுற பெட்டர் போலப் பட்டுச்சு…

 

நானும் சாதாரண மனுசன் தானேடி. எனக்கும் உணர்வுகள் இருக்குத் தானே. ஏதோ ஒரு நொடில ஹோர்மோன் செய்த வேலையோ, அந்த பதினெட்டு வயசுக்குரிய வயசுக் கோளாறோ, எப்பவுமே கூட இருக்கும் நீ முரளி மேல லவ் லவ் என்று பைத்தியமாகத் திரிஞ்சதிலயோ எனக்கும் அந்த காதல் என்ற உணர்வை அனுபவிச்சுப் பார்க்கணும் என்று தோணிட்டுப் போல.

 

சத்தியமா எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியேல்லடி… இது காதல் தானா என்று கூட எனக்குத் தெரியேல்ல. ஆனா என்னால எதையுமே மறக்க முடியலையே… சின்ன வயசில இருந்து அந்தப் பழகின நாட்கள் எதுவுமே என் மனசை விட்டுப் போகுதில்லையே… ஒரு சின்ன பூச்சியைப் பார்ததால் கூட முதலாம் வகுப்புப் படிக்கேக்க பொன் வண்டு தேடிப் பிடிச்சு நெருப்புப்பெட்டிக்க போட்டுக் கொண்டு வந்து குடுத்த ஞாபகம் வரும்.

 

சின்னப் பிள்ளைகள் சைக்கிள்ல போறதைக் கண்டால் நான் சைக்கிள் ஓடப் பழக்கிவிட்டது ஞாபகம் வரும். இப்படி ஒவ்வொரு சின்ன விசயத்திலயும் பழைய ஞாபகங்கள் வந்து கொண்டே இருக்கும் போது நான் எப்பிடி வைஷூ கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறது?

 

என் வாழ்க்கை தான் இப்பிடிக் கானல் நீராப் போச்சு. நீயாவது சந்தோசமாக இருக்கிறாய் என்று பார்த்தால் கடைசியில நீயும் இப்பிடித் தனி மரமாக நிக்கிறியே வைஷூ. விதி ஏன் தான் இப்பிடி எங்கட வாழ்க்கையிலே விளையாடுதோ தெரியேல்லையே…”

 

கூறியவன், ஆண்கள் அழக் கூடாது என்று எங்கள் சமூகம் சொல்லிச் சொல்லி வளர்த்திருந்ததாலோ என்னவோ அழவில்லை என்றாலும் கண்கள் சிவந்து குரல் தளுதளுத்திருந்தது. மனப் பெட்டகத்தில் இத்தனை வருடங்களாய் பூட்டி வைத்திருந்தவற்றை அவன் கொட்டி விட்டிருக்க, அவன் கொட்டிய பாரம் அவள் மனதில் ஏறியமர, அவள் கண்களிலிருந்து அருவி ஊற்றெடுக்க ஆரம்பித்தது.  

 

வாழ்க்கையின் அர்த்தம் புரியாத இளம் வயதில் காதல் எனும் மாயையில் சிக்கிய இவர்கள் வாழ்வு சீராகுமா? இல்லை சிக்கலாகுமா?

 

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 44ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 44

44 – மனதை மாற்றிவிட்டாய் என்னதான் யோசித்தும் முயற்சித்தும் ஒன்றும் நடவாமல் போகவே கவலையில் அமர்ந்தே இருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். முழிப்பு வந்து பார்த்த போது மணி 4.15 என இருந்தது. என்ன செய்வது என எண்ணிக்கொண்டே இருக்க 6 மணியளவில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05

உனக்கென நான் 5 “அன்பு நான் ஏன் இங்க வந்திருக்கேனு தெரியுமா?” என சந்துருவின் வாயிலிருந்து வார்த்தை வரும் தருணம் அவனது ராணி பலகையை விட்டு வெளியேறியிருந்தது.   அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ஏன்” என்ற கேள்வியை கண்ணில் வைத்துகொண்டு.

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 14பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 14

மகனே! என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத்