Tamil Madhura உன்னையே எண்ணியே வாழ்கிறேன்,தமிழ் மதுரா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4

நீலாங்கரையிலிருக்கும் அந்த ஃபார்ம்ஹவுசை  ஆர் ஆர் நிறுவனம் லீசுக்கு வாங்கியிருந்தது. பக்கத்தில் ப்ரைவேட் பீச் ஒன்றும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு பிக்னிக் வந்திருக்கிறார்கள். இனிமையான தருணங்கள் பலவற்றைத் தன்னுள் கொண்ட இந்த வீட்டின் லீசை எக்ஸ்டென்ட் பண்ணிக் கொண்டே இருந்தார்கள் நண்பர்கள். இன்று மூவர் மட்டும் பால்கனியில் அமர்ந்தபடி கடலை வெறித்தனர்.

“என் அம்மாவை எக்சமின் பண்ணும் சைக்யாட்ரிஸ்ட்டை நானும் கணியனும் போய் பார்த்தோம். அவரோட கருத்துப்படி ஈஸ்வர் மனசில் பல குழப்பங்கள் இருக்கு. அந்த குழப்பத்தை எல்லாம்  வாழ்க்கைக்கே அடிப்படை இதுதான்னு  அவன் நம்புற மூணு விஷயத்துகிட்ட கேட்க நினைச்சிருக்கான். தனது ஏமாற்றங்களை சொல்லி விடை கேட்டிருக்கான். அதுக்கான விடை அவனுக்குக் கிடைச்சா அவன் மீண்டுடுவான். இல்லைன்னா தன்னைத்தானே அழிச்சுக்குவான்”

நிலைமையின் தீவிரத்தை அனைவரும் உணர்ந்தனர்.

“ஈஸ்வர் நம்ம கிட்ட நின்னு கூட பேச மாட்டிங்கிறான். நானும் தினமும் கம்பனி , என் சொந்த, நொந்த வாழ்க்கைன்னு  அப்டேட்ஸ் தந்துட்டே இருக்கேன். வெறிக்க வெறிக்க பாக்குறானே தவிர ஒரு வார்த்தை கூட பதில் சொல்றதில்லை. நம்ம சொல்றது அவன் மனசில் பதியுதான்னே தெரியல இந்த நிலமைல கம்பனியை வித்துடலாம்னு எப்படிடா சொல்றது”

“அதுக்குத்தான் நானும் கணியனும் ஒரு ப்ளான் பண்ணிருக்கோம்”

“என்ன ப்ளான்”

“எங்கம்மாவைப்பத்தி தெரியும்ல.  சின்ன வயசில் படிச்ச கதை, படம் இதெல்லாம் வச்சு அவங்களே ஒரு அவங்களுக்குள்ள ஒரு கற்பனை உலகத்தில் வாழுறாங்க. முதலில் முட்டாள்தனமா உளறாதேம்மா  சித்திர குள்ளன், இரும்புக்கை மாயாவி இதெல்லாம் சினிமா கேரக்டர்ஸ்ன்னு நான் எடுத்து சொன்னேன். நிரூபிச்சு வேறக்  காமிச்சேன். ஆனால் முதல்நாள் தலையாட்டுறவங்க மறுநாளே முதலிலிருந்து ஆரம்பிச்சுடுவாங்க.

அடுத்து டாக்டர் ஆலோசனைப்படி அவங்க சொல்றதை காதுகொடுத்து கேட்க ஆரம்பிச்சேன். அதற்கு அடுத்ததா அவங்க உலகத்திலேயே நுழைஞ்சு எது அவங்களுக்கு பாதுகாப்பில்லையோ அதை தப்புன்னு சொன்னேன். உதாரணத்துக்கு அவங்களை சமைக்க விடவே பயம். அதனால சிலிண்டரை ஸ்னோவைட்டின் சித்தி திருடிட்டு போய்ட்டான்னு சொல்லிருக்கேன்”

சத்தமாக சிரித்தபடி

“இப்ப தினமும் எனக்காக காத்திருந்து கதை சொல்றாங்க. நானும் அவங்க சொல்ற கதைகளை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்.இந்த வாரக் கதைப்படி எங்கப்பா ஷ்ரெக், எங்கம்மா ஃபியோனா, நான் இந்த ராட்சஸ தம்பதிகளுக்குப் பிறந்த பிசாசுக் குட்டி.  என்ன ஒரு கற்பனை வளம். சொல்லப் போனா எனக்கு என் அம்மாவே மகளா தெரிய ஆரம்பிச்சுட்டாங்க” என்றான் ராபர்ட். அவன் கண்களில் ஓரம் ஈரம்.

“எல்லாம் சரியாயிடும்டா” ஆறுதல் சொன்னாள் ரஞ்சனி.

“இன்னும் மோசமாகாம இருந்தால் சரி” என்றான் விரக்தியுடன்.

“நீ சொன்ன உங்கம்மாவோட கதை சரி, இதில் எப்படி  ஈஸ்வரின் பிரச்சனை எப்படி சால்வ் ஆகும். தினமும் நம்ம மூணு பேரும் அவன் கூட சேர்ந்து பில்டிங் செட்ல விளையாடணும்னு சொன்ன கொன்னுடுவேன்”  என்றான் ஜெயேந்தர்.

“நம்ம ஈஸ்வரின் உலகத்தில் நுழையலாம். அவன் பதில் சொல்லும்னு நம்பிட்டு இருக்கும் மூணு விஷயமும் பதில் சொன்னா…  அவனுக்கு பதில் கிடைச்சா… பெரிய அதிசயம் நடக்க சான்ஸ் இருக்கு”

“அதெப்படிடா பதில் சொல்லும்? ” ஜெய் இருமலுடன் கேட்டான்.

“அதெப்படி பதில் சொல்லும். நம்மதான் அதுங்களை பதில் சொல்ல வைக்கணும். கணியன் மூலம் மூணு தொழில் முறை நடிகர்களை அரேஞ்ஜ்  பண்ணி அந்த கேரக்டரா நடிக்க வைக்கலாம்னு ஒரு ப்ளான்”

“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு”

“உனக்கும் எனக்கும் நம்ப முடியாது. ஓநாய் மனிதன் இன்னமும் வீட்டு வாசலில் நிக்கிறதா நம்பிட்டு இருக்கும் எங்கம்மா மாதிரியான ஆட்களால் முடியும்”

“அப்ப ஈஸ்வர் பைத்தியமாயிட்டானா”

“இப்படியே இருந்தால் ஆயிடுவான். இந்த முயற்சி பண்ணி பாக்கலாம். முடியைக் கட்டி மலையை இழுக்குறோம் வந்தால் மலை, போனா முடிதானே… ”

“சரிடா… அவனுக்காக செய்யலாம். பணம் எதுவும் வேணும்னா கேளு தர்றேன்” என்றாள் ரஞ்சனி.

“நடிகர்களை ஏற்பாடு பண்ணனுமே”

“பண்ணியாச்சு… ” என்றான் ராபர்ட்.

“கோடம்பாக்கம் போனியா… ”

“கணியன் மூலமா ஒரு ஏஜென்ட் கிட்ட பேசி நடிகர்களை இங்கயே  வர சொல்லிருக்கேன்”

“இங்க எதுக்குடா அவங்க வீட்டுக்கே போயி காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருக்கலாமே”

“அப்படியெல்லாம் வீட்டு அட்ரெஸ் தந்துடமாட்டாங்க. தெரிஞ்சவங்க மூலமா யாருக்கும் அதிகம் அறிமுகமில்லாத தியேட்டர் ஆர்டிஸ்ட்டை ஏற்பாடு பண்ண சொல்லிருக்கேன். மக்களுக்கு ஏற்கனவே நல்ல அறிமுகமானவங்களா இருந்தா நம்ம திட்டத்துக்கு சரிபட்டு வராது. ”

“சரி நம்ம திட்டம் என்ன?” புரியாமல் கேட்டாள் ரஞ்சனி.

“மூணு பேரை அரேன்ஜ் பண்றோம் அவங்கதான் ஈஸ்வர் நம்புற காலம், காதல், மரணம்னு நம்ப வைக்கிறோம்”

“அதெப்படி நம்ப வைக்கிறது”

“அவன் போஸ்ட் பண்ண லெட்டரில் இருப்பதை சொன்னாலே பாதி நம்பிடுவான். ஏன்னா இந்த லெட்டர்ஸ் நம்ம கையில் கிடைச்சிருக்கும்னு அவன் கற்பனை கூடப் பண்ணிப் பாத்திருக்க மாட்டான். அதுக்கு அப்பறம் பேய் கதைகளில் வர்ற மாதிரி நடிகர்கள் அவன் கண்ணுக்கு மட்டும்தான் தெரிவாங்கன்னு நம்ப வைக்கணும்”

“அதெப்படி நம்ம கண்ணுக்கும் தெரிவாங்களே”

“மட சாம்பிராணிகளா… திமிங்கலம், மண்டகஷாயம் ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க. நம்ம தானே அந்த மூணு பேரையும்  நடிக்க அனுப்புறோம்.  அப்படியே அவங்க நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சாலும்… நம்ம அங்க யாருமே இல்லாத மாதிரியும், நம்ம எதையும் பாக்கவே பாக்காத மாதிரியும் ஆக்ட் கொடுக்கணும். ஈஸ்வர் குழம்பிடுவான்.

குழம்பிப் போயி கடைசியா அவங்க சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்ப ஆரம்பிச்சுடுவான். என்ன சொல்றிங்க”

“ப்ளான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சீக்கிரம் முடிஞ்சா எல்லாருக்கும் நல்லது” என்ற ஜெயேந்தரின் இருமல் தொடர ஆரம்பிக்க பாத்ரூமிருக்கு ஓடினான்.

“ஜெய் உடம்பை கவனிக்கிறதே இல்லை. இந்த ரெண்டு வருஷத்தில் பாதியா இளைச்சுட்டான் இல்ல…” என்றாள் ரஞ்சினி.

“அப்படியா… நான் நோட் பண்ணவேயில்லை. நீதான் எங்களுக்கு பெரியக்கா அந்த காலத்திலிருந்து எங்களை அப்படித்தானே கவனிச்சுக்குற…

சொல்லப்போனா நாங்க மூணு பேரும்  உன்னை மாதிரி ஒரு நல்ல ஆத்மா கிடையாது. எங்க குடும்பமே எங்களை தறுதலைன்னு சத்தியம் பண்ணும். என் பொண்டாட்டியே என்னை சகிக்க முடியாம விலகிட்டா. பொண்ணு என் மூஞ்சியைப் பாக்கக் கூட விருப்பமில்லைன்னு சொல்றா. நீ மட்டும் எப்படி  எங்க மேல பிரியம் குறையாம இருக்க ரஞ்சு.

என்னை எல்லாரும் காறி துப்பினப்ப கூட நீ என்கிட்டே ‘ஏண்டா இந்தப் பைத்தியக்காரத்தனம் பண்ண… ரெண்டு நாள் கிக்குக்காக வாழ்க்கையைத் தொலைச்சுட்ட’ன்னு ஒரு தடவை சொன்ன. மத்தபடி என்கிட்டே ஒரு விலகல் இல்லாம அதே நட்போட பழகுற… இப்ப கூட பாரு நாங்க தண்ணியடிக்கிறோம் நீ கோக் குடிச்சுட்டு உக்காந்திருக்க ”

“ஒருவேளை எனக்குத் தாய்மை உணர்ச்சி அதிகமா இருக்கோ ராபர்ட்”

“தாய்மை உணர்ச்சி…. இந்த மாதிரி ஏதாவது டெர்ம் கேட்கும்போதுதான் நீ பொண்ணுன்னே எங்களுக்கு நினைவுக்கு வருது ரஞ்சு” என்றபடி வந்தான் ஜெய்.

“என்ன ப்ளான் பண்ணிருக்கிங்க கம்பனியை விக்கிறதைப் பத்தி”

“வித்துக் கொடுத்தா நான் மலேசியாவிலேயே போய் செட்டிலாயிடலாம்னு பாக்குறேன்டா” ஜெய்யின் மாமனார் வீடு மலேசியாதான் மனைவியோடு அங்கு சென்று நிரந்தரமாகத் தங்கவிருப்பதாக சில மாதங்களாக சொல்லி வருகிறான்.

“எனக்கு கொஞ்சம் பணம் வந்தால் கடனை எல்லாம் அடைச்சுட்டு, என் பொண்ணு படிப்புக்கும் கல்யாணத்துக்கும் பேங்கில் போட்டுட்டு வேறே எங்கேயாவது கம்பனில வேலைல சேர்ந்துடுவேன். இப்போதைக்கு இதுதான் என் ஒரே ஆப்ஷன்”

“ஜாய்ஸ் கூட வாழவே வாய்ப்பில்லையா”

“எந்த மூஞ்ச வச்சுட்டு கேட்பேன். நான் என்னடா குறை வச்சேன். உன்னை மாதிரி நான் கிக்கு தேடி சின்ன பய்யன் கூட போனா நீயோ இந்த சொசைட்டியோ என் தப்பை ஒதுக்கிட்டு ஏத்துக்குவிங்களான்னு கேட்டா… என்ன பதில் சொல்ல… ”

“இதுக்குத்தான்டா ஆம்பளைங்க யாரும் வீட்டில் பாவமன்னிப்பு கேட்கிறதில்லை” என்றான் ஜெய்.

“இந்த அயோக்கியன் பெருசா பாவமன்னிப்பு கேட்டானாக்கும். பேஸ்புக்கில் விடியோ வரவும் வேற வழியில்லாம ஒத்துகிட்டான். உனக்கு இது தேவைதாண்டா” என்றாள் ரஞ்சு.

“சரி நாங்கல்லாம் பாவாத்மாக்கள் கஷ்டம் அனுபவிக்கிறோம். ஊருக்கெல்லாம் அன்பு செலுத்துற உனக்குன்னு ஒரு குழந்தை தராம இந்தக் காலம் பழி வாங்குதே அதை என்ன சொல்ல” ஜெய் சொல்ல

ரஞ்சனி முகம் இருள அமைதியானாள் “அறிவு கெட்டவனே அவளை ஏண்டா ஹர்ட் பண்ண. சாரி ரஞ்சு இவன் வழக்கம் போல பேசத் தெரியாம பேசிட்டான்” ராபர்ட் மன்னிப்பு கேட்டான்.

ரஞ்சனி பதில் சொல்லவில்லை. “சாரி ரஞ்சு. உன்னை வருத்தப்படுத்தனும்னு சொல்லல. ஆனால் இது ஏன்னு நான் பலநாளா எனக்குள்ள கேட்டிருக்கேன்”

“சில கேள்விகளுக்கு பதில் காலத்துகிட்டத்தான் இருக்கு” என்ற ரஞ்சனி தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“நான் கிளம்புறேன்டா. நாளைக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு”

“மறுபடியும் ஒரு ஐவிஃஎப்?”

பதில் சொல்லவில்லை அவள். “ரஞ்சு குழந்தை பொறக்கும்போது பொறக்கட்டும். இல்லைன்னா ஏதாவது ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கோ. திரும்பத் திரும்ப இந்த முயற்சியை செஞ்சு உடம்பை கெடுத்துக்காதே. ஆரோக்கியம் என்ன கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது” எச்சரித்தான் ஜெயேந்தர்.

“சரி… நாளைக்கு டாக்டர்கிட்ட பேசுறேன்”

“நில்லு தனியா போகவேண்டாம் நான் கொண்டு போய் டிராப் பண்ணுறேன். நீ வர்றியாடா” என்றான் ஜெய்.

“அக்கா வீட்டுக்கு வந்திருக்கா. அம்மாவை அவ பார்த்துப்பா… நான் கொஞ்ச நேரம் பீச்சில் உக்காந்துட்டுக் கிளம்புறேன்”

“நான் இல்லைன்னா கண்ட்ரோல் இல்லாம குடிப்ப. ஆக்டர்ஸ் வந்தா பேசி பிக்ஸ் பண்ணிட்டு பேசாம இங்கேயே தூங்கு. வீட்டுக்கு நாளைக்கு போய்க்கலாம். ஈஸ்வரோட நைட் ட்ரெஸ் ஒண்ணு ஷெல்ப்ல இருக்கு. எடுத்து போட்டுக்கோ” என்று அறிவுறுத்தி விட்டுக் கிளம்பினான் ஜெய்.

 

 

1 thought on “உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4”

  1. Che what a friendship .inthe mathiri nijamana nalla friends kidaikurathu purely God’s blessing and grace.ana nijathula niraya polllachi tharuthalainga mathiri than thiriyithunga.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41

41 நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?” “நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும்